
வரம்
பெரியநாயகம் வாசலுக்கு வந்தாள். ரகசியமாகத் தெருவின் இரண்டு பக்கமும் பார்த்தாள். ஆள் நடமாட்டம் இல்லை. பக்கத்து வீட்டைப் பார்த்தாள். வீடு பூட்டியிருந்தது. முந்தானையை முக்காடாகப் போட்டுக்கொண்டு விடுவிடுவென்று நேராகக் கடைக்கு நடந்தாள்.
“எட்டணாவுக்குச் சூடம் கொடு செட்டியார.”
“அப்பறம்?”
“வெத்தலபாக்குக் கொடு. சுருட்டு வையி. தேங்கா ஒண்ணு. பொரி, பொட்டுக்கல்ல அஞ்சி ரூவாயிக்குக் கட்டு.”
“பேயி அடிச்ச மாரி இருக்கியே என்னா விசியம்?”
“பேயியும் அடிக்கல, பிசாசும் அடிக்கல. இந்தப் பேச்சிப் பேசாம சாமானக் கொடு செட்டியார” என்று முறைத்த மாதிரி பெரியநாயகம் சொன்னதும் செட்டியாரின் முகம் சுருங்கிப்போயிற்று. ஆனாலும் “அப்பறம்?” என்று கேட்டார்.
“ஊதுவத்தி. நெருப்புப் பொட்டியும் கொடு.”
“அப்பறம்?”
“அம்புட்டுத்தான். எம்மாம் ஆச்சி?”
“இருபது ரூவா.”
பணத்தைக் கொடுத்துவிட்டுப் பொருள்களை எடுத்துக்கொண்டு பேய்பிடித்த பெண் மாதிரி நடக்க ஆரம்பித்தாள். எட்டிஎட்டிக் கால்களைவைத்து நடந்தாள். அவள் நடந்த விதம் யாரும் தன்னைப் பார்த்துவிடக் கூடாது என்பது போலிருந்தது. பெரியநாயகத்திற்குச் செட்டியாரின் மீது கோபம் வந்தது. “எல்லாத்தயும் தெரிஞ்சிக்கிட்டே கேக்குறான் பாரு. மூணு நாளா அவன் கடக்கி எம்மாம் சனங்க வந்திருக்கும்? கேக்குறான் பாரு நோனி கேள்வி. அவன் மட்டுமா கேக்குறான். ஊரே கேக்குது. ஒலகமே கேக்குது” என்று சொன்னாள். உச்சி வெயில். தரை நெருப்பாகச் சுட்டது.
அனல் காற்று வீசியது. தலை கிறுகிறுத்தது. மயக்கம் வருகிற மாதிரி கண்கள் இருட்டின. எதையும் அவள் பொருட்படுத்தவில்லை. எதிரில் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்றுகூடப் பார்க்கவில்லை. பேய் மாதிரி நடந்தாள்.
ஊரைத் தாண்டிச் சுடுகாட்டுக்குப் போகும் பாதையிலிருந்து விலகி மேற்கில் நடக்க ஆரம்பித்தாள். செக்கான் மேட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த எதிர் வீட்டுத் தைலம்மா “இந்த உச்சி வெயிலுல மட்ட மத்தியானத்தில எங்கடி போற?” என்று கேட்டாள்.
“நான் எங்க போவ முடியும்? சுடுகாட்டுக்குத்தான் போவணும்” என்று பெரியநாயகம் சொன்னாள்.
“ஈனமானம் கெட்டுப்போயி ஒருத்தி ஓடிப்போயிட்டாங்கிறதுக்காக நீ எதுக்குடி சாவப்போற? போடி ஊட்டுக்கு. கோயிலு பக்கம் போவாத.
சாமிக்குத் தீட்டு ஆவாது. உச்சி வெயிலுலதான் காத்துகருப்பு நடமாட்டம் இருக்கும். பேயி புடிச்சிக்கும்டி” என்று தைலம்மா சொன்னாள்.
“புடிச்சா புடிக்கட்டும். அப்பிடிப் புடிச்சா நல்லதுதான்” என்று சொல்லிக்கொண்டே நிற்காமல் நடந்தாள்.
“தாயிக்கும் மவளுக்கும் ஏண்டி புத்தி கோணலாவே வேலசெய்யுது? பழிகார முண்டயிவுள” என்று தைலம்மா சொன்னது காதில் விழுந்தாலும் விழாத மாதிரி நடந்தாள். “தெருவுல எப்பிடிப் பேசுனா. இப்ப எப்பிடிப் பேசுறா பாரு. நான் சாவப்போறன்னு கவலப்படுறாளாம். இதான் பழிக்கி அஞ்சாத ஊராச்சே” என்று தைலம்மாவைத் திட்டினாள். அந்தக் கோபத்திலேயே “நான் பெத்தது ஒயிங்கா இருந்தா ஊராங்க எதுக்குப் பேசப் போறாங்க?” என்று சொல்லிவிட்டுப் பல்லை நறநறவென்று கடித்தாள். “துணிய அவுத்துக்கிட்டுத் தெருவுல வுட்டாப்ல வுட்டுட்டுப் போயிட்டா. மானம்போச்சி.”
செட்டியார்மீது, தைலம்மாமீது, ஊரார் மீதெல்லாம் கோபம் உண்டாயிற்று. எல்லாவற்றுக்கும் மேலாக, கோபால்மீதும், செங்கேணியம்மா மீதும்தான் அதிகக் கோபம் உண்டாயிற்று. மூன்று நாட்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்புக் கடைசிப் பரீட்சை எழுதப் போன செங்கேணியம்மா திரும்பி வீட்டுக்கு வரவில்லை. இரவு ஒன்பது மணிக்குத்தான் கோபாலோடு ஓடிப்போய்விட்டாள் என்பது தெரிந்தது. அவள் ஓடிவிட்டாள் என்பதைவிட, கோபாலோடு ஓடியதுதான் நெருப்பாகப் பெரிய நாயகத்தைப் பொசுக்கியது. கோபால் வேறு யாருமல்ல. செங்கேணியம்மாவுக்குச் சொந்தப் பெரியப்பா மகன். காலேஜில் படித்துக்கொண்டிருந்தான். “சின்னம்மா சின்னம்மா” என்று அவளைக் கூப்பிட்டதும், “பாப்பா, பாப்பா” என்று செங்கேணியம்மாவைக் கூப்பிட்டதும் நினைவுக்கு வந்தது.
காறித் துப்பினாள். “சின்னம்மா சின்னம்மான்னு சொல்லியே எனக்குச் சுடுகாட்டுல குழி வெட்டிபுட்டான். சண்டாளன்” என்று சொன்னாள். முன்பைவிட வேகமாக நடக்க முயன்றாள். “அக்கா தங்கச்சின்னு வரமுற இல்லாமப் போவத்தான் காலேஜில படிச்சான் போலருக்கு. இந்த ஊருல ‘சீ’ன்னு ஒருத்தரு சொல்லாத மாரி இத்தினி வருசம் நான் இருக்கல. நான் எந்தப் பள்ளிக்கூடத்தில படிச்சன்? பள்ளிக்கூடத்தில என்னா படிச்சித்தரானுவ? ஊட்டுக்கு ஊடு டி.வி.யக் கொடுத்தா அண்ணன் தம்பிகூட மட்டுமில்ல; பெத்த அப்பன் கூடவே போவாளுவோ. எங்கண்ண நொள்ள யாக்கிப்புட்டாங்களே” என்று சொல்லி முனகினாள். பெரியநாயகத்திற்குச் செங்கேணியம்மாதான் உலகமாக இருந்தாள். அந்த உலகம் இப்போது கருகிப்போய்விட்டது.
செங்கேணியம்மா கோபாலோடு ஓடிப்போய்விட்ட செய்தி தெரிந்ததும் ஓடிவந்து “ஒம் மவளுக்கு ஒலகத்திலெ வேற ஆம்பளையே கெடக்கலியா? என்னாடி புள்ள பெத்த மானங்கெட்டவள” என்று கோபாலின் அம்மா பூங்கோதை திட்ட ஆரம்பித்ததும் வீட்டுக்குள் போய்ப் படுத்ததுதான். மூன்று நாட்களாக ஒண்ணுக்கு விடக்கூட வெளியே வரவில்லை. பூங்கோதையும் அவளுடைய புருசனும் கோபாலைத் தேடிக்கொண்டு போனார்கள். ஆள் கிடைக்கவில்லை. “அந்தத் தேவிடியா எங்க இருந்தாலும் போயி மசுர அறுத்து மானப்பங்கப்படுத்தி இயித்தா” என்று இவளிடம் நேராகவும் ஆள் வைத்தும் சொல்ல வைத்தாள் பூங்கோதை. யார்யாரோ வந்து என்னென்னமோ சொன்னார்கள். எதையுமே காதுகொடுத்துக் கேட்கவில்லை. ஒருத்தரிடம்கூட அவள் வாயைத் திறந்து பேசவில்லை. அடித்துப் புரண்டு அழவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை. பாறை மாதிரி இறுகிப்போய் உட்கார்ந்திருந்தாள். மூன்று நாட்களாக அவள் வெளியே வரவில்லை என்றாலும் ஊருக்குள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது பூங்கோதையும், அவளுடைய புருசனும் பேசிக்கொள் வதிலிருந்து தெரிந்தது. அதோடு அவர்கள் இவளைப் பற்றியும், செங்கேணி யம்மாவைப் பற்றியும், திட்டிய திட்டுகளையும், பேசிய பேச்சுகளையும் மூன்று நாட்களாகக் கேட்டுக்கொண்டுதான் படுத்திருந்தாள். பக்கத்து வீடு. இவளுடைய வீட்டுக்கும், அவர்களுடைய வீட்டுக்கும் இடையில் சுவர் மட்டும்தான். இவள் பேசினால் அவர்களுக்குக் கேட்கும். அவர்கள் பேசுவது இவளுக்குக் கேட்கும்.
வேடப்பர் கோவிலை நோக்கி நடந்துகொண்டிருந்த பெரியநாயகத்திற்கு என்ன தோன்றியதோ, நின்று சூரியனைப் பார்த்து “கடவுளே. நான் ஒரு பாவத்தயும் அறிஞ்சவ இல்ல. நாந்தான் அனுப்பிவுட்டன்னு சொல்றாங்க. ஊராங்க மின்னால நான் அழுவலியாம். நல்லது கெட்டது ஒனக்குத் தெரியும். நீ பாத்துக் கேளு. நீ பாத்துக் கூலி கொடு. பழிய உண்டாக்கிப்புட்ட. மானங்கெட்ட மூதி” என்று சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டாள். சூரியனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.
“எனக்கு வாய்ச்சவன் உசுரோட இருந்தா எனக்கு எதுக்கு இந்த விதி வந்து நேரப்போவுது” என்று சொன்ன பெரியநாயகம் ஏழுமலையைத் திட்டினாள். அவன் இறந்து பன்னிரெண்டு வருசமாகிறது. பாம்பு கடித்து ஏழுமலை சாகும்போது செங்கேணியம்மாவுக்கு ஆறு வயது நடந்துகொண் டிருந்தது. அவள் ஒரு குழந்தைதான். செங்கேணியம்மா பிறந்த நாற்பதாம் நாள்தான் பெரியநாயகத்தின் அப்பா இறந்தார். அவர் இறந்த இரண்டாவது வருசம் அவளுடைய அம்மா செத்தாள். பெரியநாயகம் மட்டும்தான். அவள் பெற்றதும் ஒரே பிள்ளைதான். ஏழுமலை இறந்து கருமகாரியம் முடிந்த மூன்றாம் நாளே பங்கு பாகத்தைப் பிரித்து விட்டுவிட்டார்கள். செங்கேணியம்மாவைப் பெரியநாயகம் வளர்த்த மாதிரி வேறு யாருமே ஊரில் பிள்ளைகளை வளர்த்திருக்க மாட்டார்கள். தெருவைக் கூட்ட விட மாட்டாள். தண்ணீர் எடுத்துவர விட மாட்டாள். ஓடையில், கிணற்றில் குளிக்க அனுப்ப மாட்டாள். நோட்டுப் பேனா வாங்கக்கூடக் கடைக்கு அனுப்ப மாட்டாள். எல்லா வேலைகளையும் தானே செய்வாள். இதுவரை இவள் அவளைத் திட்டியதோ அடித்ததோகூட கிடையாது. அவளும் ஊர்ப் பிள்ளைகள் மாதிரி வம்பு வழக்கு செய்கிற, தெருவில் சிரித்துப் பேசுகிற ஆளில்லை. சொந்தப் பெரியப்பன் மகன்தானே என்று பெரிய நாயகமும் பழக விட்டாள். அவளும் அண்ணன்தானே என்று பழகினாள். ஊரில் யாருக்குமே சந்தேகம் வரவில்லை. அவர்கள் ஓடிப்போகும்வரை ஊருக்குள் யாருக்குமே விசயம் தெரியாது. “அழுத்தக்காரிதான். அதான் கழுத்த அறுத்துப்புட்டா ஒரு தரும ஞாயம் இல்லியா? பழிபாவத்துக்கு அஞ்சாத முண்டயப் பெத்தனே!” என்று சொன்ன பெரியநாயகம் வேடப்பர் கோவிலுக்கு வந்தாள். சுற்றுவட்டாரத்தில் பேர்போன சாமி. துஷ்ட தெய்வம். பெண்கள் தனியாக வர மாட்டார்கள். உச்சி வெயில் நேரத்திற்கு ஆண்கள்கூட வர மாட்டார்கள். ஆனால் பெரியநாயகம் எதைப் பற்றியும் யோசிக்காமல் வந்திருந்தாள்.
கோயில் கிழக்குப் பார்த்து இருந்தது. கோயிலுக்கு இரண்டு பக்கமும் இரண்டு குதிரைகள் இருந்தன. தெற்குப் பக்கமாக இருந்த குதிரைக்குப் பக்கத்தில் ஒரு வன்னி மரம் இருந்தது. மரத்துக்குக் கீழே முப்பது நாற்பது சூலங்கள் இருந்தன. ஒரு சில சூலங்களில் எலுமிச்சம்பழங்கள் செருகப்பட்டிருந்தன. ஒன்றிரண்டு சூலங்களில் மல் வேட்டி கட்டப்பட்டிருந்தது. வேடப் பர் கோயிலுக்குத் தெற்கில் எழுபது எண்பது அடி தூரத்தில் தெற்கில் முனீஸ்வரர் கோயிலும், அதிலிருந்து பத்து இருபதடி தூரம் தள்ளிக் கிழக்கில் வடக்குப் பார்த்தவாறு மலையாளக் கருப்பன்சாமி கோயிலும் இருந்தன. சுவரை ஒட்டிப் பெரிய வில்வ மரம் நின்றுகொண்டிருந்தது. அதனடியில் ஏழெட்டு சூலங்கள் இருந்தன. ஒவ்வொன்றாகப் பார்த்த பெரியநாயகம் முனீஸ்வரர் கோயிலின் வாசலில் ஒரு கற்பூரத்தை ஏற்றி விழுந்து கும் பிட்டாள். அடுத்தது மலையாளக் கருப்பன்சாமி கோயிலின் வாசலில் ஒரு கற்பூரத்தை ஏற்றினாள். கடைசியாக வேடப்பர் கோயிலின் வாசல் முன் வந்து பொரி, பொட்டுக்கடலை, வெற்றிலைப் பாக்கு, சுருட்டு என்று வைத்தாள். ஊதுபத்தியைக் குத்தாகத் தரையில் செருகிவைத்துக் கொளுத்தி னாள். கற்பூரத்தை ஏற்றினாள். தேங்காயை உடைத்து வைத்துவிட்டு வடக்குமுகமாக விழுந்து கும்பிட்டாள். சிறிது நேரம் கும்பிட்டவாறே தரையில் கிடந்தாள். எழுந்து நின்றுகொண்டு இரண்டு கைகளையும் ஏந்திய படி வேடப்ப சாமியைப் பார்த்துச் சொன்னாள்:
“வேடப்பா! மூணு நாளா நான் அன்னம் தண்ணி இல்லாம பித்தா பேயா அலயுறன். என்னெ இந்த நெலக்கி ஆளாக்குனவங்களுக்கு நீ பாத்துக் கூலி கொடு. என்னெ மொக்கப் பண்ணிப்புட்டு ஒருத்தி போயிட்டா. நெஞ்சுக்கு நீதியாத்தான் சொந்தப் பெரியப்பன் மவன்கூட ஓடிப்போயிட்டா. எனக்குக் கட்டுனவன் இல்ல. பெத்தவங்க, உத்தவங்க, மத்தவங்கன்னு ஒருத்தருமில்ல. நான் பெத்ததும் ஓடிப்போச்சி. ஊர நம்பல. ஒலகத்த நம்பல. தாலி கட்டிக்கிட்டு இந்த ஊருக்கு வந்த நாளா ஒன்னத்தான் நான் குலகுருவா எண்ணிக்கிட்டிருக்கன். அதனாலதான் ஒன்னெ ஒருத்தன நம்பிக் கிட்டு ஒம் மின்னால கையேந்தி நிக்குறன். நீ எனக்கு ஒரு முடுவச் சொல்லு.
ஓடிப்போனவ துள்ளத் துடிக்க சாவணும். இதத்தான் நான் ஒங்கிட்ட வேண்டுறன். ஆடு வேணும், மாடு வேணும், காடு வேணுமின்னு கேக்கல. நகநட்டு வேணும், மெத்த ஊடு வேணுமின்னு கேக்கல. “நெருப்பு எரி யுறாப்ல என் நெஞ்சு வேவுதே அதுகூடமா ஒனக்குத் தெரியல? சொந்த பெரியப்பன் மவன்கூட ஓடிப்போயிட்டாளே. அம்மாம் மதாச்சாரமா? ‘அவ பொச்சியில நெருப்ப வாரிக் கொட்ட. மத்துக் கழியால குத்த’ன்னு சனங்க சொல்ற சொல்ல என்னால கேக்க முடியல. ஊசியால குத்துறாப்ல இருக்கு. உசுரு போறாப்ல இருக்கு. எனக்கு வாய்ப்பூட்டுப் போட்டு ஊம யாக்கிப்புட்டியே. மூணு நாளா நான் செத்துப்போயிருப்பன். நான் சாவக் கூடாது. நான் சாவ மாட்டன். அவ சாவணும். அவ சாவறத, அவ செத்துப் பொணமாக் கெடக்கறத நான் என் ரெண்டு கண்ணாலயும் பாக்கணும். பாத்திட்ட பின்னால அடுத்த நிமிசமே என் பொணம் சுடுகாட்டுல வேவும். நான் வாழறதுக்கு வரம் கேக்கல. அவ சாவணும். நானும் சாவணும்.
சாவறதுக்குச் சாவம் கொடுறா சாமி. இந்த வவுத்திலதான அவள வச்சியிருந்தன். என்னோட வவுத்த மண்ணு திங்கட்டும். மக்கிப்போவட்டும். பேரு வச்சன் பாரு. சாமி பேரு. செங்கேணியம்மான்னு. நோனி பேரு. அதான் தொறந்து காட்டிப்புட்டுப் போயிட்டா. குடிசாமின்னு ஒம் மின்னாலதான அவளுக்கு மொட்ட அடிச்சிப் பேரு வச்சன். புள்ள இல்ல, புள்ள இல்லன்னு அஞ்சாறு வருசம் விருதமிருந்து தவமிருந்து பெத்தண்டா, கொள்ளயிலப் போன வேடப்பா!
“வருசா வருசம் திருநாவுல ஒனக்குத் தேங்கா ஒடச்சது, சூடம் ஏத்து னது, கோயி காவு கொடுத்ததெல்லாம் நீ எல்லாத்தயும் பாத்துக்கிட்டுக் கல்லாட்டம், மண்ணாட்டம் குந்தியிருக்கவா? அடப் பாவி தெய்வமே. ஓடுனவ ஒரு சக்கிலிப் பய, வண்ணாரப் பயகூட ஓடியிருந்தாக்கூடத் தேவலியே. அப்பிடியிருந்தாக்கூட என் நெஞ்சு ஆறிப்போயிருக்குமே. ஆல அடுப்பு வேவுற மாரி என் நெஞ்சு வேவுதுடா வேடப்பா. ஊருல ஒல கத்தில ஒரு ஆம்பளயும் இல்லியா? ஒலகத்தில ஒருத்தன்கிட்டயும் இல் லாத சாமான் அவன்கிட்டதான் இருக்குன்னு ஓடிப்போயிட்டாளா, நொள்ளக்கண்ணு தெய்வமே. இனி நான் எப்பிடி இந்த சரிகலத்த வச்சிக்கிட்டு உசுரோட இருப்பன்? நான் பங்கப்பட்டு நிக்குற மாரி, கொல பதறிப்போயி நிக்குற மாரி, நான் கையேந்தி நிக்குற மாரி அவளும் நிக்கணும். இதான் நான் ஒங்கிட்டெ வேண்டுறது. வேற ஒண்ணுமில்லெ. நான் ஒருத்தனுக்கே முந்தாணி விரிச்சியிருந்தா என்னோட வாக்கு கேக்கணும். என் வவுறு எரியுற மாரி அவ வவுறு எரியணும். எங் கண்ண மறச்சிட்டுப் போயிட்டா. போவட்டும். ஊரு சிரிக்குது. ஒலகம் சிரிக்குது. இதுக்கா நான் புள்ள பெத்தன்? இதுக்காடா நீ எனக்குப் புள்ள வரம் கொடுத்த? ஊரு புள்ளிவோ மாரியா அவள வளத்தன்? இத்தன வயசுக்கும் அவ மேல வெயிலு பட்டிருக்குமா? இல்லெ தரயிலதான் காலு பட்டுயிருக்குமா? அவ மேனியில தூசு தும்பு பட்டிருக்குமா? போயிட்டா பழிகாரி, என்னெ நெருப்புலத் தள்ளி வுட்டுட்டு. அவ ருதுவானப்ப ஜாதகத்தப் போட்டுப் பாத்தப்பக்கூட அப்பிடி இப்பிடின்னுகூட ஜோசியக்காரன் சொல்லலியே. ‘மேம்படுப்புப் படிப்பா’ன்னுதான சொன்னான் சதிகாரப் பய.
“எனக்குப் புருசன் இருக்கானா? புள்ள இருக்கானா? உத்தா உறமற இருக்கானா? அங்கும் பங்காளி இருக்கானா? ஊருல இருக்கிற பயலுவோ எல்லாம் எஞ்சீலயத் தூக்கிப் பாக்கத்தான் அலயுறானுவ. அறுத்த முண்டச்சி சூத்தில தங்கப் பாளமா இருக்கும்? ஒலகத்தில நீ ஒருத்தன்தான் எனக்குன்னு இருக்க, நீயும் கல்லா குந்தியிருக்கிற. என்னெக் கொல வாங்கவா நீ சாமின்னு இருக்கிற? ஒன்னெ ஒருத்தன நம்பித்தான இந்தக் கொலகாரப் பய ஊருல இருக்கன். நீயே எனக்குத் தொண இல்லாமப்போயிட்டியே. அவ புத்திய பீ திங்க வச்சிட்டியே. இதெல்லாம் ஒன்னோட சூச்சித்தாண்டா. நாடகம்தாண்டா. நீ மண்ணாப் போவ. மரிச்சிப்போவ. வானம் சாட்சியா, பூமி சாட்சியா, சூரியன் சந்திரன் சாட்சியா சொல்றன், ஒம்மேல சத்தியமாச் சொல்றன். அவ பாடயில போவணும். அவளுக்கு நாந்தான் கருமகாரியம் பண்ணணும். எள்ளுத்தண்ணி எறைக்கணும். அவளுக்கு நாந்தான் கோடித்துணி வாங்கணும். கண்ணு தண்ணீ குளம் கட்டுதுடா வேடப்பா! அடுப்புல ஒல கொதிக்கிறாப்ல கொதிக்குதுடா, கடவுளே. அப்பன போனவ ஆரு கிட்டெ சொல்லியழுவாங்கிற மாரி ஆயிப்போச்சி. ஊருல எல்லாரும்தான் புள்ளெ பெத்தாங்க. நானும்தான் பெத்தன். என்னெப் படுகுழியில தள்ளிவுட.
“நான் நெனக்கிறது நடக்கணும். நான் நெனக்கிறது நடந்தா இந்த வருசத் திருநாவுல ஒனக்கு ஆடு வெட்டி காவு கொடுக்கிறன். மல்லு வேட்டி எடுத்துப் போடுறன். ஒரு சூலம் வாங்கி வைக்கிறன். சோத்துக்கே இல்லன்னாலும் காட்ட வித்து நீ வேட்டக்கிப் போறதுக்கு ஒனக்கு ஒரு குதிர கட்டி வைக்கிறன். அடுத்த எட்டாம் நாளு திருப்பி ஒன் சன்னதிக்கு வருவன். அதுக்குள்ளார அவ சாவணும். பொணமா ஆவணும். கைகாலு ஊனமா ஆவணும். கோணகோண புடிச்சி இயிக்கணும். வாயில நொங்கும் நொறயுமா தள்ளணும். போற எடத்தில, வர எடத்தில காருல அடிபட்டு சாவணும். வழியில தடத்தில பாம்பு பல்லி கடிக்கணும். குட்டம் புடிச்சிக் கைகாலு கொறயணும். ஊரே பாத்துச் சிரிக்கணும். அவ வவுத்தில ஒரு புழுபூச்சி உண்டாவாமப் போவணும். வறட்டு மாடா சாவணும். அவளுக்கு நீ சோதன வைக்கணும். நீ நல்ல சாமியா இருந்தா அடுத்த எட்டாம் நாளுக்குள்ளார அவ செத்தாங்கிற நல்ல சேதி எனக்கு வரணும். அவ பொணம் வேவுறதுக்குள்ளார என்னோட பொணமும் சுடுகாட்டுல வேவ ணும். நான் நெனச்சது நடக்கணும். நான் கேட்ட நல்ல சேதி வரணும். அப்பிடி வரலன்னா சாமின்னுகூட பாக்காம ஒம் மூஞ்சியில சாணியக் கரச்சி ஊத்தியடிச்சிப்புடுவன். அப்படிச் செய்யலன்னா என்னெ பல பேருக்கு முந்தாணி போட்டவன்னு நெனச்சிக்க” என்று சொல்லிவிட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டாள்.
மூன்று நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக நெருப்பில் விழுந்து துடிப்பது மாதிரி, காடே அதிர்கிற மாதிரி, உயிரேபோகிற மாதிரி வாய் விட்டுக் கதறி அழுதாள். வெகுநேரம்வரை அழுதாள். ஓங்கிஓங்கித் தரையில் அடித்து அழுதாள். சினம் தீரும் மட்டும் அழுதாள்.
கோயிலின் படிக்கட்டில் கிடந்த திருநீற்றை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் பெரியநாயகம்.
அவளுடைய நடையில் புதுத் தெம்பு கூடியிருந்தது மாதிரி தெரிந்தது.
* * * * *
இமயம்