
அணையும் நெருப்பு
“இங்க வா” சந்தோஷம் கூப்பிட்டாள்.
தெருவில் நின்றுகொண்டிருந்த இருபது வயதுக்குமேல் மதிக்கத் தக்க பையன் ஆச்சரியத்தோடு “என்னையா?” என்பது மாதிரி திரும்பிப் பார்த்தான்.
“ஒன்னத்தான் கூப்புடுறன். வா.”
பையன் வெலவெலத்துப்போய் மிரட்சியுடன் பார்த்தான்.
“எனக்கு எல்லாம் தெரியும். நடிக்க வாணாம். வா.”
மீண்டும் கூப்பிட்டாள்.
பையன் ஆடிப்போய்விட்டான். கையும்களவுமாக மாட்டிக்கொண்ட திருடன் மாதிரி பேந்தப்பேந்த விழித்தான். அவள் கதவை ஒட்டி நின்று கொண்டிருந்தாள். தப்பிப்பதற்கு வழியில்லை. தெருவின் இரண்டு பக்கமும் பார்த்தான். ஓடிவிட முயன்றான். கால்கள் அசையவில்லை. தரை அப்படியே கீழே இறங்குவது மாதிரி இருந்தது. கால்களை ஊன்றி நிற்க முயன்றான். முடியவில்லை. தவித்துப்போனான்.
“எத்தன முற கூப்புடுறது? சொன்னா புரியாதா?” சந்தோஷம் முறைத் ததும் பையன் தன்னை யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற கவலையோடு தயங்கித்தயங்கி ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து வீட்டுக்குள் வந்தான்.
ஒரு ஸ்டூலை எடுத்துப் போட்டு “ஒக்காரு” என்று சொன்னாள்.
பையன் உட்காரவில்லை. அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டால் போதும், அவளுக்கு முன் நின்றுகொண்டிருக்காமல் தப்பித்துவிட்டால் போதும் என்பது மாதிரி நின்றுகொண்டிருந்தான்.
“ஒரு வருசமா பின்னாலியே சுத்திவர்ற. நாய்க்குட்டி மாரி வீட்டு வாசலிலேயே ராவும்பகலும் நிக்குற. அப்பல்லாம் இல்லாத பயம் இப்ப என்ன? ஒக்காரு” என்று கட்டாயப்படுத்திய பிறகுதான் பையன் உட்கார்ந் தான். மூல நோய் உள்ளவன் மாதிரிதான் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு எதிரில் நான்கு ஐந்தடி தூரம் தரையில் சந்தோஷம் தள்ளி உட்கார்ந்தாள். ஓட்டப் பந்தயத்தில் ஓடி வந்தவனுக்கு மூச்சுவாங்குவது மாதிரி அவனுக்கு மூச்சுவாங்கியது. ஏகமாக வியர்த்து ஒழுகியது. கைகால்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. உதடு, வாய் எல்லாம் உலர்ந்துபோயிருந்தன. மூச்சுவிடவே சிரமப்பட்டான். அவனைப் பார்க்கப்பார்க்க அவளுக்குக் கோபம் தலைக்கு ஏறிற்று.
“என்னா செஞ்சிகிட்டிருக்கன்னு தெரியுமா?”
பையன் வாயைத் திறக்கவில்லை. அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
“ஒரு வேலயும் செய்யாததால இந்த வேலதான் ஒலகத்திலெ முக்கிய மின்னு எம் பின்னால சுத்திவர்ற.”
“-------”
“நெறத்தயும் முக வாட்டத்தையும் ஒடம்பு வாட்டத்தையும் பாத் துட்டுப் பின்னாலியே வர்ற, வீட்டு முன்னாலியே நிக்குற? என்னெப் பத்தி ஒனக்கு என்னா தெரியும்? நான் யாருன்னாவது தெரியுமா?”
“-------”
“என்னெ லவ் பண்றியா? சொல்லு”
“-------”
“லவ் பண்ணலியா?”
பையன் எதற்கும் வாயைத் திறக்கவில்லை. தலைகவிழ்ந்து உட் கார்ந்தபடியே இருந்தான். மூச்சைக்கூட வேகமாக விடவில்லை. முக்கல் முன கல் எதுவுமில்லை. லேசாக அசைந்துகூட உட்காரவில்லை.
“பேசாமியே குந்தியிருந்தா நீ நல்ல பையன்னு ஆயிடாது. சொல்லு”
எரிச்சலுடன் கேட்டாள். நேரமாகநேரமாக அவன்மீது அவளுக்கு வெறுப்புக் கூடிற்று.
“ஒனக்கு இப்ப வயசு என்ன? இருவது, இருவத்தஞ்சி இருக்குமா? இப்பத்தான் ஒனக்கு ஒரு பொட்டச்சி பின்னால சுத்தணுமின்னு தோணி யிருக்கு. அந்த விதத்திலெ நீ நல்ல ஆளுதான். எட்டாவது படிக்கும்போதே லவ் பண்ணுன ஆளு நானு, தெரியுமா?” சந்தோஷத்தின் கண்கள் கலங்கின. கண்களைத் துடைத்துக்கொண்டாள். சிறிது நேரம் பேசாமல் உட்கார்ந் திருந்தாள்.
“நான் எட்டாவது படிக்கறப்ப எங் கிளாசில படிச்சிக்கிட்டிருந்த ஒரு பையன விரும்புனன். அப்ப எனக்கு வயசு பதிமூணு. அவன் மேல எனக்கு ஒரு ஆச இருந்துச்சி. அப்பியும் சரி, இப்பியும் சரி அவன்மேல ஏன் ஆசப்பட் டன்னு கேட்டா சொல்லத் தெரியாது. இன்னம் சொல்லப்போனா அப்ப நான் வயசுக்குக்கூட வரல்ல.” இந்த முறை அவள் கண்ணீரைத் துடைக்க வில்லை. மனதிற்குள் என்ன நினைத்தாளோ:
“அறியாப் புள்ளெ குச்சி ஐஸ்க்கு ஏங்கி அழுத கதெதான். பத்தாவது படிக்கும்போது காலாண்டு பரிட்ச சமயத்திலதான் நான் வயசுக்கே வந்தன். தெரியுமா?”
“-------”
“பொம்பள பசங்க கிண்டல் செஞ்சாங்க. வாத்தியாருங்க திட்டுனாங்க. எம் மேல ஆசப்பட்ட பசங்க பள்ளிக்கூடத்து சுவரு, கோயில் சுவரு, தண்ணீ டேங்க்ன்னு எல்லா எடத்திலயும் என்னெயும் அந்தப் பையனையும் சேத்து வச்சி அசிங்கஅசிங்கமா எழுதிவச்சிட்டாங்க. ஊருல, தெருவுல எல்லாம் ஒரே பேச்சாயிடிச்சி. எங்க ஊரு பள்ளிக்கூடத்தில நாலு அஞ்சி ஊரு பசங்க படிச் சாங்க. அதனால அத்தன ஊருக்கும் விசயம் பரவிடிச்சி. எங்கம்மா அடிச்சுது. திட்டுச்சி. பள்ளிக்கூடத்துக்குப் போவக் கூடாதுன்னு சொல்லுச்சு. எங்கம்மா பேச்சக் கேக்காம பன்னண்டாவது வரைக்குமாவது படிக்கட்டும். டீச்சர் ட்ரயினிங்கில சேத்துவுட்டு டீச்சராக்கிப்புடலாம், பொழச்சிக்கும்ன்னு பள்ளிக்கூடத்துக்கு அனுப்புனாரு எங்கப்பா.”
சந்தோஷம் தன்னைப் பார்ப்பது தெரிந்ததும் பையன் மேலும் தலை யைக் கவிழ்த்துக்கொண்டான்.
“எல்லா அசிங்கமும் நடந்துபோச்சி. நான் பள்ளிக்கூடத்துக்குப் போன தால பிரச்சன பெருசா ஆயிடிச்சி. நாந்தான் எங்கூட்டுல பெரியவ. மொத்தம் மூணு பொண்ணு. ‘அசிங்கமாயிடும் மாப்ள பாருங்க’ன்னு எங்கம்மா கட் டாயப்படுத்திச்சி. வேற வழியில்லாம எங்கப்பா நான் பத்தாவது பரிட்ச எழுதினதுமே மாப்ள பாக்க ஆரம்பிச்சாரு. பத்தாவது ரிசல்ட்டு வந்த அன்னிக்கித்தான் எனக்குக் கல்யாணம். நான் பெயிலு. நான் ஆசப்பட் டெனே, எங்க ஊரு பையன், அவன் பாஸ். இப்ப அவன் வாத்தியாரா இருக்கான். இதெல்லாம் எதுக்காக ஒங்கிட்டெ சொல்றன்னு தெரியுமா?”
பையனிடமிருந்து எந்த ஒரு சிறு சத்தமுமில்லை. சிறு அசைவுகூட இல்லை. உட்கார வைத்த பிணம் மாதிரி இருந்தான்.
“எனக்குக் கல்யாணம் நிச்சயமான ராத்திரி அந்தப் பையன்கிட்டெப் போயி, ‘வா எங்கியாச்சும் ஓடிப்போவலா’மின்னு கூப்புட்டன். ‘நான் சின்னப் பையன். எங்க ஓடுறது’ன்னு கேட்டான். அழுதுகிட்டே வீட்டுக்கு ஓடியாந்துட்டன். எனக்குப் பதனஞ்சி வயசு முடியும்போது கல்யாணம் நடந் துச்சி. பதினாறு வயசில புள்ளெ பொறந்துச்சி. பதினேழு வயசு முடியறப்ப ரெண்டாவது புள்ளெயும் பொறந்துடுச்சி. இப்ப என் மொத பொண்ணுக்குச் சரியா பதனஞ்சி வயசு நடக்குது. பத்தாவது படிக்கிறா. எங்க ஊரு பைய னுக்குப் போன மாசம்தான் கல்யாணம் நடந்துச்சி. என் வயசுதான் அவ னுக்கும், நான் ‘ஓடிப்போவலாம் வா’ன்னு கூப்புட்டப்ப அவன் கால்சட்ட தான் போட்டுக்கிட்டிருந்தான். நானும் அந்த பையனும் ஒரே தெரு, ஒரே சாதிதான். பதனஞ்சி வயசுப் பயலுக்கு யாரு பொண்ணு தருவாங்க? சொல்லு?”
பையன் பதில் சொல்லவில்லை. நெற்றியில் வழிந்த வியர்வையைக் கூடத் துடைக்கவில்லை. அவனுடைய கண்கள் குருடனுடைய கண்கள் மாதிரி தரையையே வெறித்துக்கொண்டிருந்தன.
“அன்னிக்கி அந்தப் பையன் சொன்னது சரிதான். நான் சொன்ன மாரியே ஓடிப்போயிருந்தா என்னாயிருக்கும்? தெரியல... அன்னிக்கி அவன் செஞ்சது துரோகமா நன்மையா? தெரியல... அவனுக்கு நான் என்னா செஞ் சன்? பேனா கொடுத்தன். பென்சில் கொடுத்தன். பேனாவுக்கு இங்க் கடனா ஊத்துனன். பரிட்ச எழுத வெள்ள பேப்பர் கொடுத்தன். கணக்குப் போட கிராப் பேப்பர் கொடுத்தன். வேற ஒண்ணுமில்லெ. எல்லாம் கடன்னு சொல் லித்தான் கொடுத்தன். இதான் அப்ப காதல். லவ். இதத்தான் பசங்க கட்டடம் கட்டடமா எழுதிவச்சாங்க. பென்சிலு, ரப்பரு, இங்க், பேப்பரு எல்லாம் எப் பிடி கொடுத்தன்னா - எங்கப்பா வாத்தியாரு. அதனாலத்தான். பொம்பளப் பிள்ளங்களுக்கு பிரண்டுன்னு ஒண்ணு வேணுமா? அதுவும் கல்யாணமான பொம்பளக்கி ஆம்பளயோ பொம்பளயோ பிரண்டு இருக்காங்களா? அப்பிடியிருந்தா புருசன் விடுவானா? ஒனக்கு எத்தன பிரண்டு இருக்காங்க?”
“.............”
வெளி ஆள் ஒருத்தன் உட்கார்ந்திருக்கும்போது அழுகிறோமே என்ற எண்ணம்கூட அவளிடம் இல்லை. அவள் பேசிய விதம் வாயிலிருந்த சளியை வெளியே துப்புவது மாதிரி இருந்தது. அவளுடைய குரலில் பதட் டமோ, தயக்கமோ இல்லை. தனியாக இருக்கும்போது பேசிக்கொள்வது மாதிரிதான் இருந்தது, அவள் பேசியது. அவள் அமைதியாகப் பேசாமல் இருந்தபோதுகூட அந்தப் பையன் அவளையும் அந்த வீட்டையும் பார்க்க வில்லை. அவளுடைய கோபத்தைக் குறைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யா மல் பொம்மை மாதிரி எந்த உணர்ச்சியையும் காட்டாமல் உட்கார்ந் திருந்தான்.
தெருவிலிருந்து வந்த பூனை ஒன்று வாசலை ஒட்டி நின்றுகொண்டு உள்ளே போகலாமா வேண்டாமா என்று யோசிப்பது மாதிரி பார்த்தது. பிறகு அவனையும் அவளையும் மாறிமாறி நிதானமாகப் பார்த்தது. என்ன நினைத்ததோ, வீட்டுக்குள் செல்லாமல் வெளியே சென்றுவிட்டது. சந் தோஷமும் சரி, அந்தப் பையனும் சரி பூனையைப் பார்க்கவில்லை.
திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி சந்தோஷம் சொன்னாள்.
“என்னெக் கல்யாணம் கட்டிக்கிட்டவரு போலீஸ்காரரு. சாவுறவரைக் கும் எம் மேல ஆசயா, பிரியமாத்தான் இருந்தாரு. என் நெறமும், முகம், ஒடம்பு வாட்டமும் செவப்புத் தோலும் அதுக்குக் காரணமா இருக்கலாம். பதிமூணு வருசம்தான் எங்கூட இருந்தாரு. ஒரு ஆக்சிடண்டுல எறந்திட் டாரு. புள்ளங்கின்னா அவுருக்கு உசுரு. நல்லவங்கதான் சட்டுசட்டுன்னு செத்துப்போறாங்க” என்று சொல்லும்போதே அவளுடைய குரல் உடைந்து போயிற்று. சட்டென்று என்னவாயிற்றோ, வெறிபிடித்தவள் மாதிரி “நான் யாரு, என்னான்னு தெரியாம எதுக்கு எம் பின்னால சுத்துற? ஒலகத்திலியே நீ ஒருத்தன்தான் ஆம்பளயா? நீ வந்தவுடனயே நான் சீலயத் தூக்கிக் காட்டிப்புடணுமா?” முகத்தில் அறைவதுபோல் கேட்டாள்.
அரண்டுபோன பையன் நடுக்கத்தை மறைப்பதற்காக விரல்களின் நகத்தைக் கிள்ள ஆரம்பித்தான்.
“சீ. எல்லா பொட்டச்சிவுளும் இப்பிடித்தான் ஏமாந்துபோறாளுவ. சொல்லு, என்னா நெனப்புல எம் பின்னாலியே சுத்தி வர்ற?”
“-------”
“முழுசா என்னெப் பத்தி தெரிஞ்சா வர மாட்டெ. பதனஞ்சி வயசில, பதனாலு வயசில எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்குன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அதனாலதான் நீயும் பின்னால வர்ற. தெரியுதா?”
“-------”
“எங்க சார் செத்ததும் பென்சன் வாங்குறதுக்கும், கருண அடிப்படை யில வேல வாங்குறதுக்கும் ஒரு வருசம் அலஞ்சன். நான் போன ஒவ்வொரு ஆபிசலயும் லஞ்சமா பணம் கேட்டிருந்தா எங்கப்பா கொடுத்திருப்பாரு. அவுங்க கேட்டதத்தான் நீயும் கேட்டு அலயுற? இது ஒண்ணும் ஒலகத்திலெ இல்லாத பொருளு இல்லெ. சரின்னு போனா, எனக்கு யாரும் புருசனா இருக்க ஆசப்படல. எங்க சார் வேல செஞ்ச ஸ்டேசனிலிருந்த இன்ஸ்பெக் டரு கொஞ்சம் ஒதவியா இருந்தாரு. எங்க போனாலும் அந்த ஸ்டேசனி லிருந்து தபால் வாங்கிகிட்டுப் போவணும். இன்ஸ்பெக்டருதான் எல்லா விண்ணப்பமும் எழுதினாரு. கூடவே அலஞ்சாரு. யாரு சும்மா ஒதவுவாங்க? சொல்லு? நீ செய்வியா?”
“-------”
“ஒரு ஆறு மாசம்தான் ஓடியிருக்கும். விசயம் தெரிஞ்சி இன்ஸ்பெக்டரு பொண்டாட்டி பக்கம்பக்கமா எழுதிவச்சிட்டு போலீஸ் குவர்ட்டர்சிலியே தூக்குமாட்டி செத்துட்டா. ‘அவ சரியில்லெ. குணபேதகம் கொண்டவ’ன்னு இன்ஸ்பெக்டரு சொல்றான். அவ எதனால செத்தாளோ தெரியாது. பழி எம் மேல வந்து விழுந்துடுச்சி. பெத்தவங்க பொணத்த வாங்காம சால மறியல் செஞ்சதால விசியம் பேப்பர்காரன், டி.விக்காரன்னு போயிடிச்சி. காசி வாங் காம விசியத்த ஒலகம் முழுக்க பரப்பிட்டானுவ. இன்ஸ்பெக்டரு பொண் டாட்டிமேல பரிதாபப்பட்டா செஞ்சானுவோ? எதெயோ காட்டி, எதெயோ சொல்லி, எதெயோ எழுதி வித்துக் காசு சம்பாரிக்கணும்” என்று சொன்ன மறு நொடியே அவளுடைய முகம் கடுமையாயிற்று. உடம்பு லேசாக நடுங்கியது.
“பத்திரிக்கக்காரனும், டி.வி.க்காரனும் எவ எவங்கூட போனாங்கிறதப் படம்புடிக்கத்தான அலயுறானுவ. ஒரு வாரம் பத்து நாளு நான் ஒண்ணுக்கு வுடப் போன எடம், கக்கூஸ் போன எடமெல்லாம் வந்து வளச்சிவளச்சிப் படம் புடிச்சானுவ. எல்லா டி.வி.யிலயும், எல்லா பத்தரிக்கையிலயும் நாந் தான். என் படம்தான். என்னெப் பத்திதான் செய்தி. அவனுவோ பொண் டாட்டிக்கித் தங்கம் வாங்கிப் போட, எல்லாத்தயும் காட்டி காசாக்கிப் புட்டானுவ. பதனஞ்சி இருவது நாளு கழிச்சி திருவண்ணாமலக்கிட்டெ ஒரு சாமியாரு ஒரு சினிமா நடிகயோட படுத்திருந்த சேதிகேட்டு எல்லாப் பயலு வுளும் என்னெ வுட்டுட்டுத் திருவண்ணாமலக்கு சாமியாரு படுத்திருந்ததப் படம் புடிக்க போயிட்டானுவ. எவனும் பொட்டச்சிக்கூடப் படுக்கல பாரு?” என்று சொல்லிக் காறித் துப்பிவிட்டுத் தலையைக் கவிழ்த்துகொண் டாள். பையன் லேசாகத் தலையைத் தூக்கி பார்த்தான். சுவரில் நான்கு ஐந்து வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகள் பள்ளிச் சீருடையில் சிரித்துகொண் டிருந்த போட்டோ தொங்கிக்கொண்டிருந்தது. அவன் உட்கார்ந்திருந்த சிறிய ஹால் மட்டும்தான் மொத்த வீடாக இருந்தது. ஒரு ஸ்டவ் சில பாத்திரங்கள், சில துணிகளைத் தவிர அந்த வீட்டில் வேறு எதுவுமே இல்லை. வேறு ஏதா வது இருக்கிறதா என்று பார்த்தான். அப்போது சந்தோஷம் தலையைத் தூக்கி யதும், பையன் சட்டென்று தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டான்.
“இன்ஸ்பெக்டரு பொண்டாட்டி எழுதி வச்சிட்டு செத்ததால கேசு வலு வாயிடிச்சி. டிபார்ட்மண்டுல பெரிய பிரச்சனயாயிடிச்சி. இன்ஸ்பெக்டர வேலய வுட்டு எடுத்ததோட ஜெயில்லயும் போட்டுட்டாங்க. பாக்கப் போனப்ப ‘ஒன்னாலதான் எம் பொண்டாட்டி செத்தா. என் வேல போச்சி. எல்லாத்துக்கும் மேல ஜெயிலுக்கும் வந்துட்டன். எம் முன்னாடி நின்னா கொலபண்ணிடுவன். ஓடிப்போ’ன்னு சொல்லிட்டான். டி.வி.க்காரன், பத்திரிக்கக்காரன் என்னெப் படம் எடுத்தப்பக்கூட நான் கலங்கல. ‘ஒன்னால தான் எம் பொண்டாட்டி செத்தா’ன்னு சொன்னான் பாரு அப்பத்தான் என் உசுரு போச்சி. அன்னிக்கி ராத்திரிதான் நான் விடியவிடிய அழுதன். எங்க சார் செத்தப்ப, எங்கம்மா செத்தப்பக்கூட நான் அவ்வளவு அழுவுல”.
“-------”
“இன்ஸ்பெக்டரு பொண்டாட்டி செத்ததோட என்னோட பென்சன் பேப்பரு, கருண அடிப்படையில வேல எல்லாம் அப்பிடியே நின்னுபோச்சி.”
சந்தோஷம் ஊமை அழுகையாக அழுதாள். அப்போது பையன் தன்னு டைய கைகளைப் பிசைந்துகொண்டிருந்தான். அவனுடைய கால்களின் வழியே வியர்வை வழிந்துகொண்டிருந்தது.
தலையைத் தூக்கிப் பார்த்த சந்தோஷம் பையனிடம் வேகத்துடன் கேட்டாள். “நான் எதனால கொத்தனாருங்க, சித்தாளுங்க, பெயிண்டு அடிக் கிறவங்க, பஞ்சு மிட்டாயி, பலூன் விக்கிறவங்க இருக்கிற ஏரியாவுல வந்து இருக்கன் தெரியுமா ஒனக்கு? அதுவும் முப்பது மைல் தாண்டி வந்து?”
சந்தோஷம் கத்திய கத்தில் திடுக்கிட்டுப்போனாலும் பையன் அவளை நிமிர்ந்துப் பார்க்கவில்லை. அசைந்தும் உட்காரவில்லை. ஸ்டூலை விட்டு எழுந்தால் இல்லை, அசைந்தால்கூடத் தன்னுடைய உயிர் போய்விடும் என்பது மாதிரி அச்சத்தில் உட்கார்ந்திருந்தான். அவனை அவள் பொருட் படுத்தியது மாதிரி தெரியவில்லை.
“இன்ஸ்பெக்டரு பொண்டாட்டி செத்து, சால மறியலாயி, எல்லா டி.வி.யும், பத்திரிக்கையும் என்னயே சுத்திசுத்தி வந்ததால ஊருல குடியிருக்க முடியல. சொந்தக்காரங்க, ஊருக்காரங்க எல்லாம் ‘அவ எட்டாவது படிக்கும் போதே ஊரு நாறிச்சி. இப்ப ஒலகம் பூரா நாறிப்போச்சி’ன்னு பேசுன பேச்சக் கேக்க முடியல. ‘மத்த ரெண்டு பொண்ணுங்களயும் நான் கரயேத்தணும், செத்துப்போ இல்லன்னா நான் செத்துப்போறன்’னு பயமுறுத்தறதுக்கு சீமஎண்ணெய ஊத்திக்கிச்சி எங்கம்மா. அது வெனயாயிடிச்சி. காப்பாத்த முடியல. செத்துப்போச்சி. அப்ப எந்த சாமியும் ஒதவல. எங்க குலசாமி மூக் குத்தி அம்மன் யாரயும் கேக்கல. எங்கப்பா வருசாவருசம் கெடா வெட்டிப் பொங்க பூசன்னு முப்பூச வச்சதெல்லாம் தண்டம்தான். எங்க சாரோட குல சாமி ஆகாய வீரன். அவனும் எதுவும் செய்யல. என்னாலதான் எங்கம்மா செத்துப்போச்சி. பொண்ணாப் பொறந்து அதுவும் மொத புள்ளெயாப் பொறந்து எங்கம்மாவுக்கு நான் எதுவும் செய்யல... என்னாலதான் என் ரெண்டு தங்கச்சி வாழ்க்கயும் வீணாப்போயிடிச்சி. அவளுங்க முகத்திலெ நான் எப்பிடி முழிப்பன்? நான் ஏற்கெனவே செத்துப்போன பொணம். பொணத்துக்கூட படுக்க நெனக்கிற நீ மனுசனாடா?” அடித்துவிடுவது மாதிரி கேட்டாள். அவளுடைய உதடுகள் துடித்தன. அவளை அவன் பார்க்க வில்லை. அவனுடைய கண்கள் பேயின் கண்கள் மாதிரி தரையை வெறித்தன.
“ஒலகமே என்னெப் பாத்துச்சு. காறித் துப்புச்சி. ஒலகத்திலெ நான் மட் டும்தான் தேவிடியா பாரு. செத்துப்போனவ பத்தினி. உசுரோட இருக் கிறதால நான் தேவிடியா.”
“-------”
“இன்ஸ்பெக்டரு பொண்டாட்டி செத்து பேப்பர்க்காரன், டிவிக்காரன் என்னெப் படம் புடிச்சதப் பாக்காத கண்ணு இந்த மண்ணுல இல்லெ.
பேப்பர்க்காரன், டிவி.க்காரன் மட்டுமில்லெ சனங்களும் கூட்டம்கூட்டமா வந்து என்னெ வேடிக்க பாத்தாங்க. பொம்பளங்க கூட்டம்தான் அதிகம். கால்பந்து மாரி மூலாமூலக்கி என்னெ எல்லாரும் ஒதச்சாங்க. இந்த ஊருலயும் என்னெ எல்லாரும் கேவலமா பேசணுமின்னுதான அலயுற நீ?”
யாரோ அடித்தது மாதிரி தேம்பித்தேம்பி அழுதாள். அழுகையினூடே வார்த்தைகளைக் கொட்டினாள்.
“அதுக்குப் பின்னால என்னால எங்க வீட்டுல இருக்க முடியல. நான் செத்துப்போறன்னு எங்கப்பாகிட்டெ சொன்னன். அவுருக்குத் தெரிஞ்ச வாத்தியார்கிட்டெ சொல்லி ஏற்பாடு செஞ்சி இங்க கொண்டாந்து வச்சியிருக்காரு. எதுக்காகன்னு தெரியல. நான் சாவறதுக்காகக்கூட இங்க வுட்டு இருக்கலாம். நான் தூங்கி எத்தன வருசமாச்சி தெரியுமா?... எங்க சார் வீட்டுக்கும் போவ முடியாது. நான் இனிமே எங்க வீட்டுக்கும் போவனா மாட்டனான்னும் தெரியாது. எங்க வீட்டுல படுத்தா ஒடனே தூங்குவன். இந்த வீட்டுல தூக்கம் வரல. தூங்கவும் முடியல... பேய் மாரி தூங்கணும். நான் இந்த வீட்டுக்கு வந்து ஒரு தீவாளியும் ஓடிப்போச்சி. ஒரு பொங்கலும் ஓடிப்போச்சி. ஆளில்லாத வீட்டுல எப்பிடித் தூக்கம் வரும்? முப்பது வயசி லியே ராத்திரி பூராவும் சூனியக்காரி மாரி தன்னந்தனியா உட்கார்ந் திருக்கன்.”
சந்தோஷம் தரையை வெறித்தவாறு உட்கார்ந்திருந்தாள். பையன் அவளை ஏறிட்டுப் பார்க்க முயன்றான். சட்டென்று அவள் தலையைத் தூக்கி யதால் அவனுடைய பார்வை முன்புபோல தரையை வெறிக்க ஆரம்பித்தது.
“எங்கூட இருந்தா புள்ளெங்க கெட்டுப்போகுமின்னு ரெண்டயும் ஆஸ்டல்ல எங்க சாரோட அப்பா அம்மா கொண்டுபோயி வுட்டுட்டாங்க. எங்கப்பாவும் அவுங்க செஞ்சதுதான் சரின்னு சொல்றாரு. பெத்த தாயிகூட இருந்தா புள்ளெங்க கெட்டுப்போயிடுமா?” அவன் வாயைத் திறக்காததால் ரொம்ப அலுப்புடன் சொன்னாள். “பெத்ததுக்காக மாசாமாசம் போயி திருட்டுத்தனமாப் பாத்திட்டு வர்றன்” முந்தானையால் கண்களைத் துடைத்து கொண்டு ஆத்திரத்தோடு கேட்டாள்.
“நீ எனக்கு என்ன செஞ்சியிருக்க, என் பின்னால சுத்துறதுக்கு? ஒருவேள சோறு போட்டிருப்பியா? ஒரு முழத் துணி எடுத்துக் கொடுத்திருப்பியா? நாள் தவறாம, வேள தவறாம கடன்காரன் மாதிரி எம் பின்னாலியே சுத்துற. எதுக்கு?... பெத்துத் தொலச்ச பாவத்துக்கு எங்கப்பாதான் மாசாமாசம் வந்து பணம் தராரு. நீயா தர்ற? பதிமூணு வயசிலிருந்து இன்னிக்கிவரைக்கும் என்னால அவுரு அசிங்கப்பட்டுத்தான் நிக்குறாரு. டி.வி.யில என்னெப் பாத்து, பேப்பர்ல எழுதியதைப் படிச்சிட்டு அந்த மனுசன் அழுதாரே... எப்பிடி அழுதாருன்னு தெரியுமாடா ஒனக்கு? அவுரு சோறு போடுவாரு. நீ வந்து ராசா மாரி நொட்டிட்டுப் போவ. அதுக்குத்தான அலயுற?” காட்டுக் கத்தலாக கத்தினாள். அதே வேகத்தில் அழுதாள். “ஒண்ணுமே செய்யாத பயலுவுளுக்காக இந்த பொட்ட நாயிங்க ஏந்தான் ஓடுதுவோன்னும் தெரியல. சாவுதுவோன்னும் தெரியல.” கையைக் கசக்கிக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் புதுப்பெண் மாதிரி உட்கார்ந்திருந்த பையனையே பார்த்தாள். முன்பைவிட இப்போது அவளுடைய முகம் இறுகிப்போயிற்று. தீர்மான மான குரலில் கேட்டாள்.
“என்னெக் கட்டிக்கப்போறியா? வச்சிக்கப்போறியா? சொல்லு. பேசாம ஒக்காந்திருந்தா என்னா அர்த்தம்? நானா வந்து ஒங்கூட படுத்துக்கு வன்னு நெனச்சிக்கிட்டியா?”
“-------”
“ஒன்னெ மாதிரிதான் ஒருத்தன் நான் இங்க குடிவந்த புதுசல காலை யிலயும் சாயங்காலமும் பால்காரன் மாரி வந்து வாசல்ல நிப்பான். வயசு அம்பதுக்கு மேல இருக்கும். விசயம் தெரிஞ்சதும் கதவ சாத்தியே வச்சியிருந் தன். எம்மாம் நேரத்துக்கு, எம்மாம் நாளக்கிக் கதவ சாத்தியே வச்சியிருக்க முடியும்? அப்பிடியும் ஒரு மாசம் இருந்து பாத்தன். ஒரு நாளு கடக்கிப் போவயில செல்போன் நெம்பரு கேட்டான். வந்துச்சி பாரு கோவம். ‘எனக்கு கல்யாணமாயி ரெண்டு புள்ளெ இருக்கு. ஒண்ணு பத்தாவது படிக்குது. அடுத்தது ஒம்பதாவது படிக்குது. இனிமே வாசல்ல வந்து நின்னா பொம்பள போலீசுக்கு போயிடுவன்’னு சொன்ன பின்னாலதான் அவன் தொல்ல வுட்டுது. அடுத்தது ஒன் தொல்ல ஆரம்பிச்சது.”
“-------”
“ஒன்னோட பங்குக்கு நீயும் என்னெ விபச்சாரி ஆக்கப்பாக்குற. என்னெ விபச்சாரி ஆக்கத்தான் ஒரு வருசமா அலயுற. புரியுதா? ஏன் எதுக்குமே பேசாம குந்தியிருக்கிற?”
“-------”
மணி அடித்துக்கொண்டே யாரோ சைக்கிளில் போகிற சத்தம் கேட்டது. சந்தோஷம் வாசல் பக்கம் பார்த்தாள்.
“இனிமே நான் யார்கூட படுத்தாலும், யார்கூட இருந்தாலும், தாலியே கட்டிக்கிட்டு இருந்தாலும், புள்ளெ பெத்துக்கிட்டாலும் நான் இன்னொருத்தன் பொண்டாட்டிதான். அதுவும் செத்துப்போனவனோட பொண்டாட்டி. அது மாறாது. அந்த எண்ணத்த மாத்திக்கிட்டு வாழற மனசு உள்ள ஆம்பள இன்னம் பூமியில் பொறக்கல. பொறக்கவும் மாட்டான். பொட்டப் பயலா இருந்தாலும் சரி.”
“-------”
“ஒன்னெ பாவமின்னு நெனச்சா என் வவுத்திலெதான் புள்ளெ வளரும். ஒன்னோட வவுத்திலெ புள்ளெ வளருற மாரி இருந்தா நீ ஒரு வருசமா எம் பின்னால சுத்த மாட்டெ. நீ மட்டுமில்ல எந்த ஆம்பளயும் சுத்த மாட்டான். தெரியுமா?”
“-------”
“எங்கூட ஒரு தடவ நீ படுத்திட்டா ஒன் நெஞ்சிக்குள்ளெ இருக்கிற நெருப்பு அணஞ்சிடும். ஒரு வருசமா பொக்கிசமா நீ வளத்துவச்சிருக்கிற ஒன்னோட அந்த நெருப்பு அஞ்சு நிமிசத்திலெ அணஞ்சிபோயிடும். அது தெரியாம அலயுற? ஒன் காதல் அஞ்சி நிமிச ஆட்டத்திலெ தீந்துபோயிடும்.”
“-------”
“ஏன் எதுக்கும் பேசாம குந்தியிருக்கிற? நல்லவன்னு காட்டுறதுக்கா?”
“-------”
“பேசாம குந்தியிருக்கிறதால நீ நல்லவன்னு ஆயிடாது. செல்போன் நெம்பரு கேட்டவனவிட நீ மோசமான ஆளு. ஏன்னா ஒரு மாசத்திலியே தன்னோட கணக்க முடிச்சிக்கிட்டு அவன் ஓடிப்போயிட்டான். நீ ஒரு வருசமா என்னெக் கொல்ற. அவன் நேரா கேட்டான். அவன் நல்லவன். ஆனா நீ ஒரு வருசமா ஒரு வார்த்தயும் பேசல. இப்பயும் பேசல. மோச மானவன் நீதான். தெரிஞ்சிக்க. ஒன்னோட தொல்ல அதிகமானப்பவே ஒங்க வீட்டுல போயி சொல்லியிருப்பன். பக்கத்துத் தெருவுலதான வீடு இருக்கு. அப்பிடிப் போயி சொல்லியிருந்தா ‘எங்க பையன் நல்லவன். நீதான் மோச மானவன்’னு சொல்லி எனக்குத் தேவிடியாப் பட்டம் கட்டித் தெருவயே நாற அடிச்சிருப்பாங்க. அந்தப் பட்டத்த நானா போயி வாங்கணுமா?”
“-------”
“ஒங்கூட படுத்தாலும் படுக்கலன்னாலும் தேவிடியான்னுதான் சொல் லப்போற. சொல்லிட்டுப் போ. அப்பிடி சொல்லுவதான?” என்று விரட்டு வது மாதிரி கேட்டாள்.
“-------”
“என்னடா சொல்லப்போற? நான் அப்பிடி இல்லன்னுத்தான? இன்னம் பத்துப் பாஞ்சி வருசம் போனா எனக்குத் தல நரச்சிடும். தோலு சுருங்கிடும். அப்ப நான் கூப்புட்டா நீ வருவியா? காசு கொடுத்துக் கூப்புட்டாலும் வர மாட்டெ. நீ மட்டுமில்லெ. எவனும் வர மாட்டான். கிழவனா இருந்தாலும் பாஞ்சி இருவது வயசு குட்டிவுளா தேடிக்கிட்டுப் போயிடுவீங்க. அப்பிடித் தான செய்வ?”
“-------”
“இப்ப நானு. என்னெவிட லட்சணமா ஒருத்தி வந்தா அவ. அவளவிட எளம் குட்டியா, செவப்புத் தோலா வேற ஒருத்தி வந்தா அவ. மனசும் கண் ணும் தண்ணீ மாரி ஓடிக்கிட்டே இருக்கும். அதே மாரி மாறிகிட்டே இருக் கும். பொம்பள விசயத்தில சுத்த மோசமா மாறும். கண்ணும் மனசும் கருங் கல்லா அப்பிடியே இருக்கிறதுக்கு? புதுசாப் பாக்கிறதுக்கு எல்லாம் ஈர்ப்பாத் தான் இருக்கும். கரண்டு மாரி இழுக்கும். எல்லாம் ஒண்ணுக்குப் போற வழின்னு தெரியுறவரைக்கும். என்னா செய்யுறது? ஒலகம் அதுலதான் சுத்துது. ஒனக்கும் அதுலதான் சுத்துது”
“-------”
“பின்னால சுத்திசுத்தி வந்து எதுக்கு என்னெ பாவியாக்குற?”
“-------”
“இன்ஸ்பெக்டர் பொண்டாட்டி செத்ததும் அவளோட சொந்தக்கா ரங்க எல்லாம் பெரிய கூட்டமா சேந்துகிட்டு வந்து என்னெ எவ்வளவு பேசு னாங்க தெரியுமா? எங்க வீட்டுக் கதவ, சன்னல ஒடச்சாங்க. வீட்டு ஓட்டுல கல்லெ விட்டெறிஞ்சாங்க. மூணு நாலு பொம்பளங்க ‘செத்துப்போடி தேவி டியா’ன்னு என் மூஞ்சியிலியே காறித் துப்புனாங்க. எங்கப்பா எல்லாத்தயும் பாத்துக்கிட்டு மரம் மாரி நின்னாரு. எங்கிட்டெயும் சரி, என்னெத் திட்டு னவங்ககிட்டயும் சரி, அவுரு ஒரு வாத்த பேசல. மனசுலியே அவுரு செத்துப் போயிருப்பாரு.” சந்தோஷம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.
சந்தோஷம் அழுதாள். அவளுடைய அழுகைகூட மரக்கட்டைத் தன்மையிலிருந்து அவனை மாற்றிவிடவில்லை. கல் மாதிரி உட்கார்ந்திருந் தான். அழுகையினூடே சொன்னாள், “தெரிஞ்சவங்க கண்ணுல படக் கூடாதுன்னுதான் எங்கப்பா இங்க கொண்டாந்து விட்டிருக்காரு. தான் பெத்த புள்ளெங்க அழுவறதயும் சாவறதயும் எந்தத் தாய் தவப்பனாலதான் பாக்க முடியும்? சொல்லு. இப்ப ஆசப்படுறதுக்கு எம் மனசுல எதுவுமில்லெ. எல்லாம் கருகிப்போச்சி. பட்டுப்போச்சி. மனசுங்கிறது மண்ணுதான். அதுக்கு எதுவும் புரியறதில்லெ. மனசுங்கிறது வெறும் சும்மாதான். ஆச, வெறுப்பு, கசப்புதான் அதுல இருக்கு. அதுக்கு ஆசப்படத்தான் தெரியும். எப்ப முடி யுமோ இந்த நரகம்? நான் டீச்சராயிடுவன்னுதான் எங்கப்பா நம்புனாரு...” அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. “நான் சொல்ற தெல்லாம் சினிமா மாரி இருக்கா? சினிமாவுல நடக்கிற மாரிதான் எல்லாம் நடந்துபோச்சி. எல்லாத்தயும் மறக்க நெனக்கிறன். முடியல. ஆனா அந்த நெனப்புத்தான் இப்ப ஒங்கிட்டெ பேச வச்சிக்கிட்டிருக்கு. உசுரோட வச்சி யிருக்கு. இதெல்லாத்தயும் நான் யாருகிட்டெப் போயி சொல்ல முடியும்? உண்மைய சொன்னா ஒலகத்தில ஒரு பொட்டச்சியும் பத்தினிங்கிற பேரோட மட்டுமில்லெ, பொண்டாட்டியாவும் இருக்க முடியாது. உசுரோ டவும் இருக்க முடியாது.”
“-------”
“எங்கப்பாவ எங்கம்மாவ, எங்க சார, புள்ளெங்கள எல்லாரயும் நான் ஏமாத்தியிருக்கன். அதனாலதான் இப்படி வந்து தனிப் பொணமா குந்தி யிருக்கன். இந்த வூட்டுல இருக்கிறது கிணத்துக்குள்ளார குந்தியிருக்கிற மாரி இருக்கு. எங்க வூடு எப்பிடி இருக்கும் தெரியுமா?” பையனைப் பார்த்தாள். பிறகு மூக்கை உறிஞ்சினாள்.
“-------”
“நீ செய்யுறது ரைட்டா தப்பான்னு யோசிச்சியிருக்கியா?”
“-------”
“ஆம்பளங்க மனசு அறியாப் புள்ளெ மனசு மாரி. ஆசப்பட்டுக்கிட்டே இருக்கும். பொட்டச்சி விசயத்தில் ரொம்பத்தான் ஆடும்....”
“-------”
“ஆச, வெறி அடங்குனதும் அசிங்கமாத் தெரியும்... இருந்தாலும் ஒலகம் அதுலதான் ஓடுது.”
“-------”
“வேல முடிஞ்சதும் மனசு திருப்பியும் காலியாயிடும். அப்ப என்ன செய்வ? நெறயிற மாரி தெரியும். ஆனா நெறயாது. இதான் மனசு. என் ஒடம்பு இப்ப வெறும் சாம்பதான். அது எப்பியோ எரிஞ்சிபோயிடுச்சி. வாளியும் ஓட்டெ, வாளிக் கயிறும் பிஞ்ச கயிறு; கிணறும் துந்துபோனது; தண்ணீ வேணுமின்னா எப்பிடி?”
“-------”
“ஒன்னெ மாரி ரெண்டு பேரு பச்சகுத்தியிருக்கன் பாரு, சிகரட்டால சுட்டு புண்ணாக்கியிருக்கன் பாருன்னு காட்டி ஒரு மாசம் பின்னாலியே சுத்தி வந்தா அவந்தான் ஒலகமின்னு எம் மவளுவளும் ஓடிப்போயிடுவாளுங்க. எனக்கு எங்கம்மாகூட இல்லெ. எங்கப்பாவுக்கும் வயசாயிடிச்சி. ஒன்னெ மாரி பயலுவோ இருக்கிற இந்த ஒலகத்திலெ நான் எப்பிடி உசுரோட இருப்பன்?”
அவன் பேச்சற்றுப்போய் உட்கார்ந்திருந்தான்.
“தாடி வச்சிக்கிட்டு செல்போன் பேசிக்கிட்டு எங்கியோ சுத்து. எதுக்கு என் வீட்டு மின்னாலெ வந்து நிக்குற? ஒனக்கேத்த ஆளா பாரு.”
“-------”
“விசயம் பத்திரிக, டி.வி.ன்னு போகாம இருந்திருந்தா என் நெலம இவ் வளவு மோசமாயி இருக்காது. ஒலகத்திலியே நான் ஒருத்திதான் அவுசாரித் தனம் செஞ்ச மாரி என்னெ ஒலகம் பூராவும் படம் போட்டுக் காட்டிப் புட்டானுவ.”
“-------”
“சில நாளு நான் யாருகிட்டயும் ஒரு வாத்தக்கூடப் பேசாம இருந் திருக்கிறன். பல நாளு கதவக்கூடத் தொறக்காம இருந்திருக்கிறன். நான் பைத்தியமா ஆவலியேன்னு எனக்குக் கவலயா இருக்கு. அடுப்புல வச்ச கொள்ளி எரிஞ்சித்தான ஆவணும்.” அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் இறங்கிற்று. எதையும் பார்க்காமல் பையன் எந்தக் கணத்திலும் தப்பித்து வெளியே ஓடிவிட வேண்டும் என்பது மாதிரி வாசல் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் இந்த வீட்டுல ஒரு கடிகாரம்கூட வச்சிக்கல. நேரத்தத் தெரிஞ்சிக்கிட்டு நான் என்னா செய்யப்போறன்? பொணத்துக்கு ராவும் பகலும் உண்டா? எனக்கு மட்டும் எதனால இப்பிடி நடந்துச்சி?” பையன் வாயைத் திறக்க மாட்டான் என்று தெரிந்தவள் மாதிரி சுவரில் தொங்க விடப் பட்டிருந்த போட்டோவைப் பார்த்தாள். மிகவும் களைப்படைந்துபோய் சொன்னாள்.
“என்னெப் பெத்தவங்களுக்கு நான் என்னாத்த செஞ்சன்? அது மாரி தான் நான் பெத்ததும் எனக்குச் செய்யுங்க. ஒன்னெப் பெத்தவங்களுக்கு நீயும் அதத்தான் செய்யப்போற?”
“-------”
“எங்க சார்கிட்டெ ‘நான் எட்டாவது படிக்கும்போது இந்த மாரி ஆயிப் போச்சி’ன்னு சொன்னன். ‘அறியாப் பசங்க செய்யுறதெல்லாம் பெரிய விசயமா?’ன்னு கேட்டு சிரிச்சாரு. சாவுறவரைக்கும் அதெப் பத்தி எங் கிட்டெ ஒரு வாத்த பேசுனவரு கெடயாது. யாரு மனுசன்? சுவத்திலெ எழுதின பசங் களா? எம் படத்த ஊரு ஒலகமே காட்டுனாங்களே அவுங்களா? நான் மட்டும் ஓக்கியமில்லெ. நானும் பெரிய கழிசடதான். ஏன் பொறந்த மின்னு இருக்கு. சினிமாவுல காதலிச்சா சனங்க ரசிக்குதுக்குவோ. பொட்டச் சின்னா அறுந்து போன செருப்பு மாரிதான். செருப்ப பிஞ்ச எடத்திலியே கழட்டி வுட்டுட்டுப் போற மாரி புடிக்கலன்னா அப்பிடியே வுட்டுட்டுப் போயிடுவாங்க.”
“-------”
“பெரும் தீனி மாடா நானு? ஊருல ஒலகத்திலெ என்னெ எல்லாரும் அப்பிடித்தான் சொன்னாங்க. அப்பிடி சொல்லித்தான் ஊரு ஒலகமே எனக்குக் கொள்ளி வச்சாங்க. நீயும் அதுக்குத்தான் அலயுற?”
“-------”
“எம் மனசுல இருக்கிற நெருப்பு என்னிக்கி அணயும்? என்னோட ஒல கம்ங்கிறது நாந்தான். அது போலீஸ்காரன் பொண்டாட்டி செத்த அன்னிக்கே கருகிப்போயிடிச்சி.” இரண்டு கைகளையும் போட்டுப் பிசைந்தாள். அவ னைக் கொன்றுவிடுவது மாதிரி பார்த்தாள். எப்போதும் இல்லாத அளவுக்குக் குரலை உயர்த்திக் கேட்டாள்: “அடுத்து என்னா செய்யணும், என்னா நடக்குமின்னே தெரியாம ராத்திரி முழுக்க இருட்டுல சுடுகாட்டு பேய் மாரி ஒக்காந் திருக்கியா? சொல்லுடா?”
“-------”
“கூட இருந்தவங்களே காறித்துப்பி, கழுத்த அறுத்துப் பாத்திருக்கியா நீ?”
“-------”
“சனங்கன்னா என்னான்னு நான் பாத்தவ. ஒனக்கு ஒலகம், வாழ்க்க, சனங்கன்னா என்னான்னு தெரியாது. ஒம் மூஞ்சியில யாராச்சும் காறித் துப்பியிருக்காங்களா?”
“-------”
“நானும் பொட்டச்சித்தான். எனக்கு மட்டும் மனசு கல்லா?” முந்தா னையால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். பிறகு அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் கேட்டாள்: “இப்ப நான் ஒன்னோட பொண்ணுன்னு வச்சிக்க. ஒம் பொண்ணு பின்னால ஒருத்தன் சுத்திவந்தா நீ என்னா செய்வ? எங்கப்பா என்னெ எப்பவுமே ‘அம்மா அம்மா’ன்னுதான் கூப்புடுவாரு. எந்த நேரத்திலெ எங்கப்பா எனக்கு சந்தோஷமின்னு பேரு வச்சாரோ தெரியல. எங்க குடும்பத்திலெ யாருக்குமே சந்தோஷம் இல்லாமப் போயிடிச்சி.”
“-------”
“பேரு என்னா?”
“-------”
“பழமலயா?”
“-------”
“நல்லாத்தான் இருக்கு. பழமலநாதர்பேரு. சாமி பேரு. போ. போயி வேலயப் பாரு. நரகல கண்டா ஒதுங்கிப்போவல்ல? என் வயித்திலயும் இப்ப மட்டுமில்லெ எப்பியும் நரகல் இருந்துகிட்டுத்தான் இருக்கும். தெரியுமா? உலகத்தில வயத்தில நரகல் இல்லாத பொம்பள உண்டா? அப்பிடி ஒருத்தி இருந்தா அவகிட்டெ போ.”
“-------”
“இன்னம் இப்பிடியே ஒரு வருசம் சுத்துறியான்னு பாக்க எனக்கும் ஆசதான். பாப்பம் போ.”
“-------”
“நான் சொல்றத சொல்லிட்டன். கிளம்பு. நேரமாச்சு. எதுக்குக் குந்தி யிருக்கிற? போ. போயி ஒன்னோட சோத்துக்காவது சம்பாரி. அப்புறமா பொண்டாட்டி சேக்கலாம்.”
“-------”
“நீ ஒண்ணும் சொல்ல வாணாம். ஒன்னோட கதெ வசனத்த கேட்டா நாந்தான் அவுசாரிப் பட்டத்த வாங்கணும். கிளம்பு” என்று சொல்லி சந்தோஷம் பலமுறை கட்டாயப்படுத்திய பிறகுதான் பழமலை எழுந்து வெளியே சென்றான்.
வாசலுக்கு வந்து பழமலை சினை ஆடு மாதிரி களைத்துப்போய் மெல்ல நடந்து போவதைப் பார்த்தாள். அவளை அல்ல; அவளுடைய வீட்டை ஒரு முறையாவது திரும்பிப் பார்ப்பான் என்று எதிர்ப்பார்த்தாள். அவளுடைய கண்களிலிருந்து அவனுடைய உருவம் மறையும்வரை காத்திருந்தாள். அவ ளுடைய எண்ணம் பொய்யாயிற்று. “நெருப்பு அணஞ்சிபோச்சிபோல இருக்கு. நெருப்புன்னா அணஞ்சித்தான ஆவணும்” என்று கசப்புடன் சொல்லிவிட்டு வீட்டுக்குள் வந்தாள் சந்தோஷம்.
*****
இமயம்