
அம்மா
திண்ணையில் உட்கார்ந்திருந்த கருப்புசாமி, பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டதுபோல முகம் வாடிப்போய்த் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு தரையையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். அவனுக்கு மூன்றடி தூரம் தள்ளி அருகாலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த செல்லம்மாள் கருப்புசாமியையே பார்த்தவாறு இருந்தாள். அவன் வாயைத் திறப்பது மாதிரியோ இவளைப் பார்ப்பது மாதிரியோ தெரியவில்லை. கடைசியில் செல்லம்மாள்தான் பேசினாள்.
‘பெரிய பயலெ செத்தெக் கொண்டாந்து காட்டிட்டுப் போயன்; புள்ளேக் கண்ணுலியே நிக்குறாப்லெ இருக்கு. ஒம் பொண்டாட்டி புள்ளிவுளெ அயிச்சிக்கிட்டு வந்து இங்க ரெண்டு நாள் இருக்கச் சொல்லேன்.
புள்ளிவுளுக்குக் கூப்புடுற மாரியாப் பேரு வச்சியிருக்கிற, சுரேசு, மகே சுன்னுகிட்டு.'
‘அனுப்புறன்.'
‘என்னாத்தெ அனுப்புன? புள்ளிவோ இங்க வந்து வல்லிசா ஒரு வருசம் ஆவப்போவுது. இந்த வருசப் பொங்கத் தீவாளிக்குக்கூட வல்லெ.'
‘லீவ் இருந்தாத்தான அனுப்புறதுக்கு?'
‘ஒனக்குத்தான் வருசம் முன்னூத்தி அறுவது நாளும் மூச்சு வுட முடியாத அளவுக்கு வேலே. புள்ளிவுளுக்குமா லீவு இல்லெ?' என்று கேட்ட செல்லம் மாளுக்கு லேசாகக் கண்கள் கலங்கின. திடீரென்று அவளுடைய முகம் சிவந்தது. ‘நீ இந்த ஊட்டுலெதான் பொறந்தங்கிறத மறந்துப்புடாத. ஒம் புள்ளிவுளுக்கு இந்த ஊருத் தண்ணீய குடிச்சா சளி புடிச்சிக்கும். இந்த ஊட்டுலெ படுத்தாக் கொசி கடிச்சி ஒம் புள்ளிவோ செத்துப்போயிடும், இல்லியா? எனக்கு என்னா ஆனாலும் ஒனக்கு சம்மதம். அப்படித்தான? நானும் ரெண்டு புள்ளெயப் பெத்து வளத்தவதாண்டா.'
கருப்புசாமி, செல்லம்மாளை முறைத்துப் பார்த்தான். லேசாகப் பல்லைக் கடித்தான். பிறகு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டான். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் செல்லம்மாள். அப்போது வாசலில் கூட்டமாக நான்கைந்து பன்றிகள் வந்து தரையை முகர்ந்து பார்க்க ஆரம்பித்தன. ‘சு,சூ' என்று சொல்லிச் சத்தம் போட்டுப் பன்றிகளை விரட்டினாள். பன்றிகள் செல்லம்மாள் போட்ட சத்தத்திற்கு அசைந்து கொடுக்காததால், ‘இந்தச் சாண்டெ குடிச்சவன் ஊருலெ இதுவோ தொல் லெதான் பெரும் தொல்லெ. கொள்ளெ நோவு வந்து ஒண்ணும் சாவ மாட்டேங்குது பாரன்' என்று சொல்லித் திட்டிக்கொண்டே எழுந்து வந்து பன்றிகளை விரட்டிவிட்டாள். கொஞ்சம் நேரம் வாசலில் நின்று தெருவில் ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்த்தாள். ‘என்னா வெயிலு அடிக்குது' என்று சொல்லிக்கொண்டே வந்து, முன்பு உட்கார்ந்திருந்த இடத்திலேயே உட்கார்ந்துகொண்டாள். ‘நம்ப எதிர் ஊட்டுக்காரனோட புள்ளெ செத்தப்ப எயவு வச்சப்பவும் நீ வந்து தலெயக் காட்டுலன்னு மனக் கொறப் பட்டுக்கிட்டான். எதிரு ஊட்டுலெ நடக்குற நல்லது கெட்டதுக்கே போவ லன்னா, அப்பறம் எப்படி ஒருத்தர் மூஞ்சியிலெ ஒருத்தர் மூச்சிக்கிறது? காசி பணம் ‘வா'ன்னா வரும், ‘போ'ன்னா போவும். மக்க மனுச அப்பிடியா? இந்தூர்ல நம்பளுக்குன்னு நாலு பேரு வாணாமா?' என்று சொன்னவள், கடுப்புடன் ‘ஒம் மாமியா ஊட்டுச் சனங்களே போதுமின்னு இருக்கியா? ஆனவங்களோ, ஆவாதவங்களோ சொன்ன மொறமக்கிப் போயித் தலெய காட்டுறதுதானெ மருவாத. கோடிகோடியா பணமிருந்தாலும் கூட வராது தம்பி' என்று அவள் சொன்னதைக் காதில் வாங்காதவன் மாதிரி கைக்குட் டையால் புறங்கழுத்தைத் துடைக்க ஆரம்பித்தான்.
வலது காலின் பெருவிரல் நகத்திலிருந்து அழுக்கை எடுத்தவாறே விசும் பலான குரலில், ‘ஒங்கப்பனாலயும் சரி, ஒங்கப்பன் ஊட்டுச் சனங்களாலயும் சரி, எந்தக் காலத்திலியும் வா வாத்த ஆதரவுகூட எனக்கு இருந்தது இல்லெ. இப்பப் பெத்த புள்ளெயாலயும் இல்லன்னு ஆயிப்போச்சி. நடக்க முடியாத காலத்திலியும் நானே ஒயச்சி நானே திங்குறன்' என்று சொன்ன செல்லம்மாளுக்குக் கண்கள் கலங்கின. முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். இரண்டு மூன்று முறை மூக்கை உறிஞ்சினாள். ‘பேசாம அங்க வந்து இரு' என்றான் கருப்புசாமி. ‘என்னாத்தெ வந்து இருக்கிறது? எந்த ஒறவுலெ இருக்கிறது? விடிஞ்சதும் பல்லெ விளக்கிக்கிட்டுப் போனா வௌக்கு வச்ச பெறவுதான் நீ வருவ. நேரா நேரத்துக்கு ஒம் பொண்டாட்டி சோத்தக் கொண்டாந்து எங்கிட்டெ நாயிக்கி வைக்கிறாப்ல வச்சிட்டுப் போயி மொடங்கிக்குவா. எங்கிட்டெ பேசுனா அவளோட அந்துசி கொறஞ்சிடும் பாரு. நாள் முயிக்க தனியாக் காட்டுல குந்திக் கெடக்குறாப்ல கெடக்கணும். இங்க இருந்தா லும், நாலு எடத்துக்குப் போனமா, நாலு பேரப் பாத்தமா, நாலு வாத்தெ வடிச்சமான்னு பொயிது போவும்.'
‘நான் அவளெக் கேக்குறன்.'
‘என்னாத்தெக் கேட்டெ? உள்பாவாடெ ஒண்ணு வாங்கியான்னு ஒங்கிட்டெ சொல்லி வருசம் ஒண்ணாச்சு. உடுத்துன துணிக்கி மாத்துத் துணி இல்லாமக் கெடக்குறன். பள்ளிக்கூடத்திலெ பொட்டே புள்ளிவுளுக்குக் கொடுத்த பாவாடெயில ஒண்ணு வாங்கித்தான் கட்டிக்கிட்டு கெடக்குறன்.'
‘நேரமாச்சு. நான் கௌம்பட்டுமா?'
‘நீ ஏயாவது படிக்கிறப்ப மரத்திலுருந்து கீய வியிந்து பீச்சக் கையி ஒடஞ்சிப்போச்சி. ஒன்னெத் தூக்கிக்கிட்டு நான் ஊர்ஊரா அலஞ்ச அலச்ச இருக்கே, அது அந்த ஆண்டவனுக்குக்கூட பொறுக்காதுடா. கை கூடிவரணுமேன்னு ராத் தூக்கமில்லாம, பவ தூக்கமில்லாம ஆறு மாசம் கெடந்தன் தம்பி' என்று சொல்லும்போதே செல்லம்மாளுக்கு அழுகை வந்துவிட்டது. அவள் அழ ஆரம்பித்ததும் கருப்புசாமிக்கு அந்த இடத்தில் உட்கார முடியாமல் போய்விட்டது. சங்கடமாக உணர்ந்தவன், கிளம்பிவிடலாம் என்று நினைத்தான். ஏதோ சொல்ல வாயெடுத்தவன், ஒன்றும் சொல்லாமல் தலையைக் கவிழ்த்துக்கொண்டு உள்ளங்கைகளில் இருந்த ரேகைகளைப் பார்த்தான். அழுகையினூடே, ‘இந்த வருசத் திருநாவுக்குக் கூட நீ வல்ல. இன்னிக்குகூட ஒம் பொண்டாட்டி ஊட்டுச் சொந்தக்காரங்க சாவுங்கிறதாலெ வந்த' என்று சொன்னாள்.
‘எங்க முடியுது?'
‘இப்ப எப்பிடி முடியும்? நான் சாவுற அன்னிக்காச்சும் வர முடியுமான்னு பாரு.' கருப்புசாமி வெடுக்கென்று தலையைத் துக்கிக் கோபமாகச் செல் லம்மாளைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்காமல் சளியைச் சிந்தித் தரையில் தேய்த்தாள். அப்போது தெருவில் போய்க்கொண்டிருந்த மூக்கன், கருப்புசாமியைப் பார்த்ததும் விசாரிக்க ஆரம்பித்தான்.
‘எப்ப கருப்புசாமி வந்த? சாவுக்கு வந்தியா? ஒம் பொண்டாட்டி புள்ளெ யெல்லாம் எப்பிடி இருக்கு? வயசான காலத்திலெ ஒங்கம்மாவத் தனியா வுட்டுவச்சிருக்கியே. அது இன்னம் எம்மாம் காலத்துக்குத்தான் பாடுபட்டு சாப்புடும்?' என்று மூக்கன் தொணதொணவென்று பேச ஆரம்பித்ததும், செல்லம்மாள் இடைமறித்து, ‘அவன் பாக்காம வேற யாரு பாக்கப் போறா? வெயிலுல நிக்குறியே மாமா? வெயில் தார வாயன், பேசிக்கிட்டிருக்கலாம். தம்பி இன்னிக்கி ஊர்லதான் இருக்கப்போறான்' என்று சொல்லி மூக்கனைத் தொடர்ந்து பேசவிடாமல் அனுப்பிவைத்தாள். ‘உள்ளார வந்து குந்துடா தம்பி. தெருவுலெ போறவங்கவர்றவங்களுக்கெல்லாம் வதிலு சொல்லி மாளாது. ஒருத்தங்க கண்ணு மாரி இருக்காது. அப்பறம் காச்ச தலவலின்னு வந்துடும். அந்தக் காலத்திலிருந்தே ஒனக்கு நோவு தாங்காத ஒடம்பு' என்று சொல்லி அவள் எவ்வளவோ கட்டாயப்படுத்தியும், கருப்புசாமி உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவில்லை.
‘நான் போறன்' என்று சொன்னான் கருப்புசாமி.
‘புளி ரெண்டு உருண்ட தர்றன், எடுத்துக்கிட்டு போ' என்று சொன்ன செல்லம்மாள், எழுந்து வீட்டுக்குள் போய் அடுக்குப்பானைகளை இறக்கி உருண்டைஉருண்டையாக உருட்டி வைத்திருந்த புளியை எடுத்து வந்து ஒரு பைக்குள் போட்டு அவனிடம் கொடுத்தாள். உட்காரப்போனவள், ‘மொச்சப் பயிறு ஒரு படி ஆவும். இங்க யாரு இருக்கா திங்க. எடுத்துக்கிட்டுப் போயி புள்ளிவோகிட்டெ கொடுக்குறியா?' என்று கேட்டுவிட்டு, அவன் என்ன சொல்கிறான் என்பதைக்கூடக் கேட்காமல் மீண்டும் வீட்டுக்குள் போய் அடுக்குப் பானைகளை இறக்கி, மொச்சைப் பயிரைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். முன்பு போலவே உட்கார்ந்து அவனிடம் பேச ஆரம்பித்தாள். சட்டென்று நினைவுக்கு வந்தது மாதிரி, ‘நம்ப ஊரு ஏரியிலெ மீனு புடிக்கப் போனப்ப ரெண்டு கொயம்புக்கு ஆவுறாப்லெ மீனு ஆப்புட்டுது. ஒருத்திக்குப் போயி மீனு கொயம்பு வைக்கிறதான்னு காயப்போட்டுட்டன். கருவாடுன்னா புளிச்சிப்போன சோத்துலெ உப்பு போடாமக்கூட திங்கறவனாச்சே நீ! ஒனக்குன்னு வத்த போட்டு வச்சியிருக் கன், எடுத்தாரட்டுமா?' என்றாள்.
‘சரி.'
சின்னப் பிள்ளை மாதிரி வேகமாக எழுந்து வீட்டுக்குள் போய், அடுக்குப் பானைகளை இறக்கி சவ்வுத்தாள் காகிதத்தில் முட்டணமாகக் கட்டிவைத் திருந்த கருவாட்டை எடுத்துவந்து கருப்புசாமி வைத்திருந்த பைக்குள் செருகிவைத்தாள்.
‘விசயமிருந்தா ஆள் வுடு, வர்றன்' என்று சொல்லிவிட்டு எழுந்த கருப்புசாமியிடம், ‘அக்காவ ஒரு எட்டு போயி பாத்துட்டு வாடா தம்பி' என்று சொன்ன செல்லம்மாளுக்கு லேசாகக் கண்கள் கலங்கின.
‘பாக்குறன்.'
‘படிச்சன் படிச்சன்'னு சொல்லிக்கிட்டு ஊர்க்காடு திரியிற பொறுக்கிப் பயலுக்கு எம் பொண்ணெக் கொடுக்க மாட்டன்னு சொன்ன ஒங்க மாமனாரு ஊட்டுச் சனங்க இப்ப ஒனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க ளாயிட்டாங்க! ‘யாரப் பாத்துப் பொறுக்கிப் பயன்னு சொன்ன? என்னிக் கிருந்தாலும் எந் தம்பி கவுருமண்டு வேலெக்கிப் போவத்தான் போறான். ராசா மாரி கால ஆட்டிக்கிட்டு சாப்புடத்தான் போறான். அதெப் பாத்துட்டு இந்த ஊருப் பயலுவோ மூக்குமேல வெரல வக்கிறத நான் பாக்கத்தான் போறன்'னு சொல்லி ஊடேறிப் போயி சண்டெபோட்ட ஒத்தெ அக்காக்காரியப் பாக்க ஒனக்கு மனமில்லெ. கோயிக் குஞ்சியத் தூக்கிப் பறாந்துக்கு எற கொடுக்கிறாப்ல புருசன சாவக்கொடுத்துட்டு நாலு புள்ளிவுளெ வச்சிக்கிட்டு அவ படுற தவுசியப் பாத்து ஊரு சனங்களே வாயுருவிப் போவுது. எங்கிட்டெ என்னா இருக்கு கொடுக்கிறதுக்கு?' என்று சொன்ன வளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. அழ ஆரம்பித்துவிட்டாள். இடையில் ‘காலக் கள, அந்திக் களன்னு வெட்டி அவதான் ஒன்னெப் படிக்கவச்சது' என்று சொன்னாள்.
‘போயிப் பாக்குறன்.'
‘செடிய வச்சித் தண்ணி ஊத்துனவங்களெ மறந்துப்புட்டு, பூத்ததப் பறிக்க வந்தவங்களெ நல்லவங்கன்னு நெனக்கிறது, செய்யுறதுதான ஒலக நடெமொற.'
‘போறன், போறன்.'
‘என்னாத்தெ போனெ? மூணு வருசமாத்தான் போற? கண்ணாலம் கட்டிப்போனாலும் புருசங்காரன் கண்ண மறச்சி, வருவாந்தோறும் ஒனக்கு அவ கையிலெ உள்ளத, ‘இந்தாடா தம்பீன்னு' ஒனக்குக் கொடுக்கலெ? இன்னிக்கு அவ பீத்த மொறமாப் போயிட்டா, இல்லெ? நம்ப ஊட்டுக்கு அவ ஒரு பொண்ணு. அவ கண்ணுத் தண்ணீ வுட்டா ஒன்னெ அப்பிடியே கேட்டுடும்' என்று சொன்னவளுக்கு அழுகை வந்துவிட்டது. அழுகையினூடே, ‘ஒனக்கு ஒங்க மாமனாரு ஊட்டுச் சனங்களெ பாக்கு றதுக்கேதான் நேரம் பத்தாது' என்று சொன்னாள்.
‘செத்தே பேசாம இருக்கியா? இந்தச் சனியனுக்குத்தான் இங்க வர்ற தில்லெ' என்று சொல்லிக் கருப்புசாமி, செல்லம்மாளை முறைத்தான். அதே அளவுக்கு அவளும் திரும்பி முறைத்தாள். ‘நீ வேலெக்கிப் போறதுக்கு மின்னாடி, இன்ட்ரிக்கிப் போவணுமின்னு சொன்னப்ப, இந்த ஊருல நம்பள நம்பி நூறு ரூவா கொடுக்க ஆளு இருந்துச்சா? கடங்கேட்டு நான் யாரு யாரு காலுல எல்லாம் வியிந்தன்னு ஒனக்குத் தெரியுமில்லெ? நைய்யா பைசா பேரலை. வேற வய்யி இல்லாத, ‘புள்ளெயோட வேலெயவிட செத்துப் போனவன் கட்டுன தாலி பெருசா'ன்னு சொல்லித் தாலிய அடவு வச்சித்தான் அன்னிக்கி ஒன்னெ அனுப்புனன். ஒங்கப்பன் ஊட்டுப் பொருளுன்னு அது ஒண்ணுதான் எங்கிட்டெ இருந்துச்சி.'
‘இதயே எத்தினி தடவ சொல்லுவ? இந்தச் சனியனுக்குத்தான் ஊருக்கு வர்றதே இல்ல.'
‘எல்லாம் நடந்த கதெதானே! பொய்யாச் சொல்லுறன்? பெத்தவ ஒண்ணு நெனச்சா புள்ளெ ஒண்ணு நெனக்கிதுன்னு சும்மா சொல்லல தம்பி. எனக்கு எயிவது வயசாச்சி. இன்னம் களவெட்டித்தான் சோறு திங்கிறன்.'
‘என்னா மசுருல நடந்த கதெ' என்று சொல்லி கருப்புசாமி கத்த ஆரம்பிக்கும்போது ராஜி வந்தான். ‘நீ வந்தன்னு சொன்னாங்க, அதான் பாத்துட்டுப் போவலாமின்னுதான் வந்தன்' என்று சொன்னவனை முகத் திலடிப்பது மாதிரி ‘நீ போயி ரோட்டுல நில்லு ராஜி. நான் வர்றன், அங்க பேசிக்கலாம்' என்று சொல்லி ராஜியைப் போகச் சொன்னான். ராஜி மறுபேச்சுப் பேசாமல் திரும்பிப்போனான்.
‘அவனும்தான் புள்ளென்னு இருக்கான். ஒத்தயா மூணு அக்கா, தங்கச்சிவுள ஒரு கொற இல்லாம சீர் செனத்தின்னு செஞ்சிக் கட்டிக்கொடுத்தான். மூணு பேரும் வந்தா இன்னிக்கும் நல்லதகெட்டதப் பாக்குறான். பெத்த தாயி தவப்பனக் குந்தவச்சி சோறு போடுறான்' என்று ராஜியைப் பற்றிச் செல்லம்மாள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, விர்ரென்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் கருப்புசாமி. ‘காரு வர நேரம் இருக்கும்போதே யாண்டா தம்பி பறக்குறவன்?' என்று கேட்டுவிட்டு, ‘இரு வர்றன்' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள். பழைய பெட்டியில் எதையோ தேடி எடுத்துக்கொண்டு வந்து, நூறு ரூபாய் நோட்டு இரண்டை அவனிடம் கொடுத்தாள். கருப்புசாமி பணத்தை வாங்கிக்கொள்ளாமல் வீறாப்பாக அவளிடமே திருப்பித்தர முயன்றான். கட்டாயப்படுத்தி அவனுடைய கையில் பணத்தைத் திணித்துவிட்டு, சாதாரணமாக, ‘ஒரு கோண மூஞ்சிக் குட்டிய வித்தன். ‘இந்தா தர்றன், அந்தா தர்றன்'ன்னு சொல்லி ஒரு மாசம் இயிக்கப்போட்டு நேத்துதான் பணத்தெக் கொண்டாந்து கொடுத்தானுவோ. பணத்தெ வச்சிக்கிட்டு நான் என்னாப் பண்ணப் போறன்? இதெ வச்சி ஒம் மவளுக்கு என் நெனவா ஒரு காலு கொலுசி எடுத்துப்போடு' என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து கைப்பையைக் கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டு வீட்டைச் சாத்திவிட்டு ‘வாடா தம்பி, காரு ஓடிப்போயிடும்' என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க ஆரம் பித்தாள்.
ஏதோ சொல்ல வாயெடுத்த செல்லம்மாளிடம், ‘பேசாம வாம்மா' என்று கருப்புசாமி சொன்னதைக் காதில் வாங்காதவள் மாதிரி சொன்னாள்: ‘பொண்டாட்டின்னு ஒங்கப்பங்காரன்கிட்டே தாலி கட்டிக்க வந்த நாளுல இருந்து ஒங்கக் கூட்டத்திலெ இந்த வாத்தயத்தான் நான் கண்டன். என்னோட ஆவி போனாத்தான் ஒனக்கு நல்லதுகெட்டது தெரியும் தம்பி. எனக்கு நீ முந்தியா, ஒனக்கு நான் முந்தியா? ஒன்னெ நம்பியாடா நான் பொறந்தன், போடா.'
-------------------------------------------------------------------------------------------------------
இமயம்