
மண் பாரம்
“மாட்டெத் தட்டி ஓட்டுங்க, தட்டி ஓட்டுங்க” என்று ஏர்களைப் பூட்டி ஓட்ட ஆரம்பித்ததிலிருந்தே கிருஷ்ணன் ஓயாமல் குரல் கொடுத்துக் கொண்டிருந்தான். நேற்று சாயங்காலம் மழை பெய்த பிறகு அவனுடைய மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. இரவு சரி யாகக்கூடத் தூங்கவில்லை. தூங்க முயன்றாலும் அடிக்கடி விழிப்பு வந்து கொண்டேயிருந்தது. விழிப்பு வரும்போதெல்லாம் அஞ்சலையிடம் “கோயி கூப்புட்டுடுச்சா?” என்று கேட்டுக்கொண்டேயிருந்தான். அவளும் தூங்காமல் புரண்டுகொண்டுதான் கிடந்தாள் என்பதைக் கவனிக்காமல், தூங்கிவிட்டதாக அவளைக் குறைசொன்னான். புருசன், பெண்டாட்டி இரு வருமே தூங்குவதாகப் பாசாங்கு செய்துகொண்டு தூங்காமல் கிடந்தனர்.
கோழி கூவிய மறுநொடியே கிருஷ்ணன் அவசரஅவசரமாக எழுந்து ஏர்க்காரர்களின் வீடுகளுக்கு ஓடினான். ஓசியில் கேட்டிருந்த வண்டியை ஓட்டிவந்தான். அதில் கூலி ஏர்க்காரர்களின் கலப்பைகளைத் தூக்கிப் போட்டான். பிறகு விரைப் பயறு மூட்டை, விரைப் புட்டிகள், தண்ணீர்க் குடம் என்று ஒன்றையும் மறந்துவிடாமல் எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக்கொண்டு, வண்டியைப் பூட்டிக் காட்டுக்கு ஓட்டினான். ஊருக்கு முன்னே தான் மட்டும் போக வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால், அவனுடைய வண்டியைத் தொடர்ந்து பல வண்டிகள் வருவது தெரிந்ததும் எரிச்சல் அடைந்தான். அந்த வேகத்தை மாடுகளிடம் காட்டினான். தூங்கிவிட்டதற்காகத் தன்னையே திட்டிக்கொண்டான். அவனுடைய வண்டி விதைப்பு நிலத்திற்கு வந்து சேர்ந்துவிட்ட பிறகும் அவனுடைய மனம் காரணம் இன்றித் தவித்துக்கொண்டிருந்தது. நிலத்தை ஒரு முறை சுற்றிவந்தான். மண்ணின் பதத்தைக் காலால் அழுத்திப்பார்த்தான். விரலால் நோண்டி, குச்சியால் பள்ளம்போட்டு எந்த அளவுக்கு ஈரம் இறங்கி யிருக்கிறது, பதம் சரியாக இருக்கிறதா, ஒதம்பலாக இருக்கிறதா, மண் சரியாக ஊறியிருக்கிறதா என்றெல்லாம் ஒரு இடத்திற்குப் பத்து இடமாகச் சோதனை செய்தான். எல்லா இடத்திலும் பார்த்த பிறகுதான் அவனுடைய முகத்தில் மலர்ச்சி தோன்றியது. கண்ணில் பட்ட சிறுசிறு குச்சிகள், பெருவட்டான கற்கள் என்று பொறுக்கி வெளியே விட்டெறிந்தான். முளைத் திருந்த ஒன்றிரண்டு புல் பூண்டுகளையும் பிடுங்கினான். சரியாக முள் மிளாறு பொறுக்கவில்லை என்று அஞ்சலையைத் திட்டினான். விதைப்பு நிலமென்றால் தங்கத் தாம்பாளமாக இருக்க வேண்டாமா என்று தன்னையே கேட்டுக்கொண்டான். பக்கத்து நிலங்களில் ஏர்கள் உழ ஆரம்பித்தது தெரிந்ததும், தனக்கு வர வேண்டிய ஏர்கள் ஏன் இன்னும் வரவில்லை என்று ஏர்க்காரர்களைத் திட்டினான். அவர்கள் வரும் வழியை அடிக்கடி பார்த்துக்கொண்டேயிருந்தான். வராமல் போய்விடுவார்களோ என்ற சந்தேகம் வந்தது. அதே நேரத்தில் முன்பணம் வாங்கிக்கொண்டதோடு கலப் பையையும் வண்டியில் ஏற்றிவிட்டுவிட்டு எப்படி வராமலிருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே, தூரத்தில் மாடுகளுடன் ஆட்கள் வருவது தெரிந்தது. அவசரமாக நிலத்தின் முனைக்கு ஓடினான்.
நிலத்திற்குள் மாடுகள் வந்த வேகத்திலேயே ஏர்களைப் பூட்டி ஓட்ட ஆரம்பித்தனர். விரைப் பயறு போட வந்த பெண்கள் விரைப் புட்டிகளில் பயிரை நிறைத்துக் கக்கத்தில் வைத்துப் பிடித்துக்கொண்டு பயறுபோட ஆரம்பித்தனர். வந்த வேகத்திலேயே வேலையை ஆரம்பித்துவிட்டாலும் “இம்மாம் நேரம் கயிச்சி வர்றீங்களே, பக்கத்துல ஓட்டுற ஏர்க்காரனெல்லாம் காகாணிய ஓட்டித் தேச்சிப்புட்டாங்க பாத்தீங்களா?” என்று கேட்டு முறைத்த கிருஷ்ணன், ஏர்களுடன் இணைந்தாற்போல நடக்க ஆரம் பித்தான். கிருஷ்ணன் தன்னுடைய நிலத்தை ஒட்டியும், சுற்றிலும் உள்ள நிலங்களிலும் விதைத்துக்கொண்டிருப்பவர்களையெல்லாம் பார்த்தான். எங்கு பார்த்தாலும் சனங்களாகவே தெரிந்தார்கள். கடலை போடும் நிலங் களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆள் ஒன்று, ஏர் ஒன்று என்று இருந்ததோடு, பயறு கொடுக்க, படல் இழுக்க, ஏர் ஓட்டுபவர்களை, பயறுபோடுகிறவர்களைத் தண்ணீர் குடிக்க, ஒண்ணுக்குப்போக மாற்றி விட என்று ஒன்றிரண்டு ஆட்கள் விடுதியாக இருந்தனர். சோளம், எள் என்று விதைக்கும் நிலங்களில் மட்டும் குறைந்த ஆட்களே இருந்தனர். பக்கத்திலும் தொலைவிலும் கண்ணோட்டிப் பார்த்துக்கொண்டிருந்தவன், இரண்டாவதாகப் போய்க்கொண்டிருந்த ஏருக்குப் பயறுபோட்டுக்கொண்டிருந்த காளியம்மாவிடம் “பயற ஏரு நாவுலியே போடு. கரமேல விய் யிது பாரு” என்று சொல்லி முறைத்தான். அதோடு விரைப் பயறை மடியில் கட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற சந்தேகத்தில் மற்ற பெண்களையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டான். பயறை யாராவது வாயில் போட்டுக்கொள்கிறார்களா என்பதைப் பார்க்கவும் அவன் மறக்க வில்லை. முதல் ஏர் ஓட்டியவன் தண்ணீர் என்று குரல் கொடுத்ததும் நிலத்தின் கடைசியில் நின்றிருந்த நுணா மரத்தின் நிழலில் வைத்திருந்த தண்ணீர்க் குடத்தை நோக்கி ஓடினான்.
மூன்றாவது ஏருக்குப் பயறுபோட்டுக்கொண்டிருந்த அன்னப்பூவுக்கு அஞ்சலை பயறைக் கொட்டினாள். குள்ளப் புட்டியில் பயறை வாங்கிக் கொண்டவள் அக்கறையுடன் கேட்டாள்:
“இந்தா அஞ்சல, வெரப் பயறு ஊட்டுல வச்சியிருந்தியா இல்லெ, கைப் பணம் போட்டு வெலக்கி வாங்கினியா?”
“வெலக்கித்தான் வாங்குனன் அண்ணியா?”
“எம்மான்னு வாங்குன?”
“பெரிய படி பன்னென்டு ரூவா.”
“யாருகிட்டெ இம்மாம் காசியக் கொட்டி வாங்குனவ?”
“அந்த மண்ணாப்போன ஒண்டங்கை ஒடயாரு ஊட்டுலதான்.”
“அவந்தான் கொலகாரனாச்சே, அவன் ஊட்டுலப் போயி எதுக்கு வாங்குனவ?”
“என்னா பண்றது, நம்ப வந்த வய்யி அவன் ஊட்டுத் தலக்கடயில போயிதான நிக்கும்படியா இருக்கு.”
“அதுக்குன்னு இம்மாம் வெலயா, அவன் நாசமத்துப்போவ.”
“இதுக்கே பாதிப் பயறத் தாலிய அடவு வச்சித்தான் வாங்குனன்.”
“அடி கொலகாரி.”
“கயித்துல கெடந்து என்னா செய்யப்போவுது, காட்டுலப் போட்டாலும் நாலு படி வௌஞ்சா வவுராரக் கஞ்சியாவது குடிக்கலாமேன்னுதான் கயிட்டிக் கொடுத்திட்டன்” என்று சொன்ன அஞ்சலைக்குக் கண்கள் கலங் கின. அன்னப்பூ ஏரு நாவில் பயறைப் போட்டுக்கொண்டே அஞ்சலையிடம் பேச்சுக்கொடுக்க, இவளும் பேச்சை விடாமல், பயறு கேட்டவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே ஏர்களுடனே நடந்தவாறு இருந்தாள்.
தண்ணீர்க் குடத்தைத் தூக்கிக் கொண்டுவந்த கிருஷ்ணன் ஏர்களை நிறுத்தச் சொல்லி, தண்ணீர் கேட்டவர்களுக்கெல்லாம் சொம்புசொம் பாகக் கொடுத்தான். பிறகு “நேரத்தப் போக்காதீங்க, ஓட்டுங்க வெசயா” என்று சொல்லி ஏர்க்காரர்களை முடுக்கிவிட்டான். ஏர்கள் இரண்டு சுற்றுகள் வந்ததும் கடைசி ஏருக்குப் பயறைப் போட்டுக்கொண்டிருந்தவள் “பயறு” என்று கேட்டதும் அஞ்சலை “இந்தா வர்றன்” என்று சொல்லி விட்டுப் பயறு மூட்டை இருந்த இடத்திற்குப் பெரிய புட்டியுடன் ஓடினாள். புட்டியில் பயறை நிறைத்துக்கொண்டு வந்து, பயறு கேட்டவளின் புட்டி யில் கொட்டுவதற்குள் கடைசி ஏர் ஒரு நிமிடம் நின்றுவிட்டதைப் பார்த்த கிருஷ்ணன், “ரெண்டு எட்டா நடக்க வாணாம்? ஏரு நிக்குதில்ல?” என்று சொல்லி அஞ்சலையை விரட்டினான். அவன் முகத்தில் அறைவது மாதிரி வெடுக்கென்று அஞ்சலை சொன்னாள்: “இத்தலக்கும் அத்தலக்கும் நடக்க வாணாமா? நான் என்ன எளம் குட்டியா?”
நான்கு ஏர்களும் தொடர்ந்து உழுதுகொண்டிருந்தன. பயறு கேட்ட வர்களுக்குப் பயறையும், தண்ணீர் கேட்டவர்களுக்குத் தண்ணீரையும் அஞ் சலை கொடுத்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது ஒண்ணுக்குப்போக ஒதுங்கும் பெண்களுக்காக அவள் பயறுபோடவும் செய்தாள். அதே மாதிரி ஒண்ணுக்குப்போக ஒதுங்கும் ஆண்களின் ஏரைக் கிருஷ்ணன் மாற்றி ஓட்டினான். வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. பொழுதும் மேலே ஏறிக்கொண்டிருந்தது. கிருஷ்ணனின் நிலத்தை ஒட்டிக் கிழக்கில் விதைத்துக்கொண்டிருந்த சின்னசாமியின் பெண்டாட்டி கோமதி அங் கிருந்தவாறே “யே அக்காவ், தண்ணீ, தண்ணீ இருக்கா?” என்று இரண்டு மூன்று குரல்கொடுத்துக் கேட்டவள், பதிலுக்காகக்கூடக் காத்திருக்காமல் நேரே அஞ்சலையிடம் வந்தாள், “தண்ணீ வெடா தாங்க முடியல, தண்ணீ இருந்தாக் கொடு” என்று சொல்லி ஒன்றுக்கு இரண்டு சொம்பாக வாங்கிக் குடித்தாள், “விடுதியா ஒரு கொடமிருந்தா கொடு. குட்டயிலப் போயி தண்ணீ மொண்டாரணும். அவசரத்துல கொடத்த எடுத்தார மறந்துபோச்சி. தண்ணீ இல்லன்னா பொயிதினிக்கும் வேலத்தலப்புல என்னா பண்ண முடியும்? நாவ வறண்டு மனுசாளு சாவறதா?” என்று கேட்டவளுக்கு இல்லை என்று சொல்ல அஞ்சலைக்கு மனம் வரவில்லை. விளைகிற நிலத்தில் இருந்துகொண்டு, அதுவும் விதைக்கிற அன்றைக்கே ஒன்றுமில்லை என்று வாய்ச்சொல்லாக எப்படிச் சொல்ல முடியும்? குடம் இல்லை, அலுமினியக் குண்டான்தான் இருக்கிறது என்று சொல்லிக் கொடுத் தாள். குண்டானைக் கொடுத்ததே பெரிது என்று எண்ணிக்கொண்டு குண் டானுடன் கோமதி குட்டையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“நேரத்தப் போக்காதீங்க. நேரத்த ஆவாட்டிக்கிட்டு இருக்கலாமின்னு இருக்காதீங்க” என்று கிருஷ்ணன் அடிக்கடி கத்திக்கொண்டேயிருந்தான். ஏர்க்காரர்கள் சாலாக்குக் காட்டி நேரத்தைப் போக்கிவிட்டுக் கடைசியில் ஏழு எட்டு வெலா தூரம் ஓட்டாமல் கிடக்கும்போது, நேரமாகிவிட்டது என்று சொல்லி, பக்கத்துக் காடுகளில் ஏரை அவிழ்த்துவிட்டுவிட்டார்கள் என்று சொல்லித் தகராறு செய்தால், கூடுதலாக ஒரு ஏர்க் கிரயம் கேட்டால் அதிகமாகச் செலவாகுமே என்று கவலைப்பட்டான். அதனால் நேரத் திலேயே அதட்டிஉருட்டி வேலையை முடித்துவிட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தான்.
நுணா மரத்தடியின் நிழலில் வைத்திருந்த சோற்றுக் குண்டான்களைச் சுற்றி மூன்று நான்கு காக்கைகள் உட்காருவதும் பறப்பதுமாக இருந்ததைப் பார்த்த அஞ்சலைக்கு பகீரென்றது. சோற்றுக் குண்டானை, குழம்புக் குண் டானை உருட்டிவிடுமோ என்ற பயத்தில், நின்றிருந்த இடத்திலிருந்தே குரல்கொடுத்து விரட்டிப்பார்த்தாள். மண்ணை அள்ளி விசிறியடித்துப் பார்த்தாள். ஒன்றுக்கும் காக்கைகள் அசையாததால் மரத்தடிக்கு ஓடினாள். ஓடிவந்த வேகத்திலேயே சோற்றுப் பாத்திரம் ஏதாவது கீழே உருண்டு கிடக்கிறதா என்று பார்த்தாள். அப்படி ஒன்றும் நடந்திருக்கவில்லை என்றாலும் இவளைக் கண்டு தூரத்தில் போய் இவளையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்த காக்கைகளை நோக்கி ஆவேசமாய் மண்ணை வாரி அடித்தாள். காக்கைகளை அடிக்கக் கற்கள் கிடைக்காததற்காக எரிச்சல் அடைந்தாள். கிருஷ்ணனும் நுணா மரத்தடிக்கு வந்தான். சோற்றுப் பாத்திரங்களைப் பார்த்தான். பிறகு வேகம் வந்தவனாகக் காக்கைகளைத் துரத்திக்கொண்டே போனான். இடையிடையே குனிந்து மண்ணை வாரி அடித்தான். “காக்காவ விரட்டிவுட்டுகிட்டே இரு. இல்லன்னா மண்ணுல மறயாம ஒழவுமேல கெடக்குற ஒண்ணுரெண்டு பயறப் பொறுக்கிப்புடும். கல்லக் கட்டியத் தூக்கி அடிச்சிகிட்டே இரு” என்று காக்கைகளைத் துரத்திக்கொண்டு போன கிருஷ்ணனிடம் சொல்லிவிட்டு, அஞ்சலை ஏர் களிடம் வந்தாள். வந்தவளுக்கு, மூன்றாவதாகப் போய்க்கொண்டிருந்த ஏர் ரொம்பவும் மேலேயே கீறிக்கொண்டு போவது போலவும், போதிய அளவுக்கு மண் புரண்டு விழவில்லை என்பது போலவும் இருக்கவே சந்தேகப்பட்டுக் கேட்டாள்:
“என்னா மாமா, மாட்டுக்குக் கஷ்டமா போயிடும்ன்னு ஏர மேலியே கட்டி ஓட்டுறியா?”
“இதென்ன காச்ச ஒயவா, இயித்துக்கட்டி ஓட்ட. தரதான் ஈரம் காத்துப் போயி ஒதம்பலா இருக்கு. அதோடவும் இது பள்ளக்கட்டான எடம் வேற. இதுல மேல கட்டி ஓட்டாம வேற எப்பிடி ஓட்டுறதாம்? ஆயத்துல பயறப் போட்டா எப்பிடி மொளக்கண்டு வரும்? நவத்தால கீறிவுட்டாப்ல இருந்தாத்தான பயிறு டக்குன்னு எண்ணுன எட்டாம் நாளே மொளச்சி வெளிய வரும்? அதோடவும் மயமாரின்னு வந்தாக்கூட மம்பாரம் கொள்ளாம இருக்கும். அதுக்கு இப்பிடி ஏர மேலக் கட்டித்தான் ஓட்டணும்.”
“அதெல்லாம் சரிதான். கொயிவு ஏன் மொந்தக்கட்டி சுரப்புக் கட்டிப் போயி இருக்கு? ராமர் பாணமாட்டம் கொயிவு மண்ணுக்குள்ளாரப் போவ வாணாமா? ஏரத் தட்டி ஓட்டு. கொயிவுல மண்ணு புடிக்க வுடாத. ஏற்கனவே அது செட்டிச்சி சூத்தாட்டம் பெருத்துப்போயி இருக்கு. நாலு
வெரகடகூட இல்லெ. என்னா கொயிவோ, போ வேகமா, ஏரப் பொறத் தால தங்க வுடாத. ஏரோட ஏரா செறுத்தாப்ல போ. கரபோட்டு ஓட்டாத. சேரப் புடி.”
அஞ்சலையின் பேச்சுகள் தாமோதரனுக்கு எரிச்சலூட்டினாலும் அதிகம் வாயைக் கொடுக்காமல் இருந்ததற்குக் காரணம், அவனுடைய மாடுகள் இரண்டும் பஞ்சை. கிழட்டு மாடுகள். அவை தானாக ஒருபோதும் அடியெடுத்து வைத்து நடக்காது. விரட்டிவிரட்டித்தான் நடக்கவைக்க வேண் டும். அதனால் அவன் எங்கு ஏர் ஓட்டப் போனாலும் நடு ஏராகத்தான் ஓட்டுவான், மாட்டோடு மாடாகப் போய்விடும் என்று. பேச்சை மாற்ற அவன் கிருஷ்ணனிடம் பேச்சுக் கொடுத்தான்.
“என்னா கிருஷ்ணா கல்லயில ஒட்டப் பயிருன்னு, சாலத்துவர, எள்ளு, சோளம்ன்னு ஒண்ணும் தூவலியா? தனிக் கல்லயாவே வுட்டுடப் போறியா?”
“கடேசியில ஒரு புடி சோளத்தத்தான் ஒட்டடயா தூவி வுடணும். வெவிச்சித் திங்கவாவது ஆவுமில்ல.”
“தனிக் கல்லயாப் போட்டுட்டு சோத்துக்கு என்னாப் பண்ணுவ?”
“ஒரு வருசம் வரவு வெரச்சக் கொல்லயில மறுவருசம் கல்லப் போட்டா நல்லா வௌயும்ன்னு சொன்னாங்க. அதான் ஆவறது ஆவட்டுமின்னு என்னா வெலயா இருந்தாலும் இருக்கட்டுமின்னு பணம்போட்டுப் பயற வாங்கிப்புட்டன்.”
“நீ சொல்றதும் நெசம்தான். கட்டயான பயிரு வுட்ட கொல்லயில மறு வருசம் எந்தப் பயிர வுட்டாலும் நல்லாத்தான் வௌயும். ஆனா வவுத்துக்கு வைக்கலியா திங்க முடியும்?”
“அதான் ஒண்ணும் புரியல. இவதான் ஒரேயடியா கல்லயப் போட்டாலே போட்டபிடின்னு சொல்லிப் பயற வாங்கிப்புட்டா. பத்தாததுக்குத் தாலியயும் அடவு வச்சிட்டா.”
“ஊட்டுல பொட்டச்சின்னு இருக்கிறவங்க பேச்ச கேக்கறது நல்லது தான்.”
“அவ என்னமோ சொன்னா. நானும் சரின்னு தலய ஆட்டிப்புட்டன். காலத்த எப்பிடி ஓட்டுறதுன்னுதான் தெரியல. வருசா வருசம் சோளம்வரவுன்னே வெரச்சமே, இந்த வருசமாச்சும் பயிர மாத்தித்தான் பாப்ப மேன்னு எல்லாருக்குமே மனசுல ஒரு எண்ணம். எல்லாத்துக்கும் மேல கடவுள் மனசுல என்னா இருக்கோ.”
“நீ சொல்றதும் சரிதான். ஒரே பயிரா வுட்டா நெறஞ்ச மவசூலு கெடக்கும்ன்னு சொல்ல முடியாதுதான். அண்ணியாலும் மனசுல ஒரு திட்டம் போடாமயா பணப்பயிறு வுடச் சொல்லியிருக்கும்?”
“என்னமோ போ.”
“ஆம்பள சொல்றதவிடப் பொட்டச்சி சொல்றதில ஒரு இது இருக்கும்.”
நடப்பின் களைப்பை மறந்து அந்த நினைவே இல்லாதவர்கள் மாதிரி, மண்ணின் பதம், மழை பெய்திருக்கும் விதம், விதைக்கும் பயிர், எந்தெந்த மண்ணுக்கு என்னென்ன பயிர் நன்றாக விளையும், பக்கத்து ஊர்களில் மழை பெய்திருக்கும் விதம், விரை விழுவது, நாளைக்குப் பதினெட்டு என்பதால் பணியாரத்திற்கு ஊற வைத்துவிட்டு வந்திருக்கும் சோளம், அரிசி, கறி எடுப்பது என்று எல்லாருக்குமே ஓயாத பேச்சாக இருந்தது. ஏர்க்காரர்கள் மாடுகளை விரட்டினர். மூன்று சால் காய்ச்சல் உழவு ஓட்டிப்போட்டிருந்ததால், கொழுக்கம்பி மாவுக்குள் போவது மாதிரி போய்க்கொண்டிருந்தது. மாடுகள் சிரமம் இல்லாமல் நடந்தன. பதமான மழை பெய்திருந்ததால் மண்ணும் கலப்பையின் இருபுறமும் நன்றாகப் புரண்டு விழுந்தது. தரை நல்ல ஜில்லிப்பாக, நடக்கநடக்க ஆசையாக இருந்தது. வெயிலும் இல்லை. வேலை நடந்துகொண்டிருந்தது.
கிருஷ்ணன் நிலத்தை ஒட்டித் தெற்கில் விதைத்துக்கொண்டிருந்த வீரன் வந்து எள் விதைத்து முடித்த நிலத்திற்கு முள்வெட்டிப் படல் செய்து இழுக்கக் கொடுவாள் கேட்டான். வரும்போதே ஏன் எடுத்து வரவில்லை என்று கேட்டு முறைத்தாலும் “சீக்கிரமா கொடுவாளத் திருப்பிக் கொண்டாந்து கொடு. நானும் பட இயிக்கணுமில்ல” என்று சொல்லிக் கொடுவாளைக் கொடுத்து அவனை அனுப்பியவன், முதல் ஏர் ஓட்டிக்கொண்டிருந்தவ
னைப் பார்த்து “தம்பி, செத்த பொறுமயா போ. பொறத்தாலியே பொம் பளயாளு பயறப் போட்டுக்கிட்டு வர வேணாம்? இம்மாம் வேகமா மாட் டெப் துரத்திக்கிட்டுப்போனா நடந்துகிட்டே போடுற பயறு எப்பிடி ஒயவு கால்ல விய்யும்? சொட்ட சொட்டயா கெடந்துப்புடாதா? எண்ணிப் போட்டாப்ல போட்டாத்தான, ஒப்புட்டாப்ல பயிறு மொளச்சி வரும்? அம்மா தாயிவுள, நீங்களும் செத்த பெரிய மனுசுபண்ணி பருப்பத் தாரா ளமாப் போடுங்க. கையக் கைய நல்லாத் தொங்கவுட்டுப் போடுங்க. கரயில விய்யிது பாரு பயறு. குமுக்குகுமுக்காப் போட்டா செடி முட்டு முட்டாத்தான் மொளெக்கும். ஒரே சீரா, திட்டமாப் போடுங்க. வெரல உருட்டிகிட்டே இருங்க.”
“அண்ணே உருமச்சோறு திங்க ஏர நிறுத்தலாமா, மாடுவுளும் செத்த மூச்சாறட்டுமே.”
“மூணாவது வெலாவ தேச்சிப்புட்டீங்களா, இல்லன்னா ரெண்டு ஏரு போயி மடிச்சிக் கட்டி ஓட்டித் தேச்சிப்புட்டு வாங்க.”
“அதெல்லாம் மின்னாடியே தேச்சியாச்சி.”
“சரிதான், ஏர வுடுங்க.” மதியச் சோற்றுக்காக ஏரை நிறுத்திய மறு நொடியே அவசரஅவசரமாக கிருஷ்ணன் பாம்பன் குட்டையை நோக்கிப் போனான். குட்டையில் நின்றிருந்த கட்டாஞ்சி முள்ளைப் போத்துப் போத்தாக ஏழெட்டுக் கிளைகளை வெட்டி எடுத்து, ஒரு தோட்டப்பாய் அளவுக்கு வரிசையாகப் போட்டு ஒன்றன்மேல் ஒன்றாகக் கனத்திற்காக முள்ளை அடுக்கி, இணைப்புக்காக அதனுடைய நாரையே கிழித்துக் கட்டிப் படல் தயார்செய்தான். பிடித்திழுக்க ஒரு கைப்பிடிக்காக மார் அளவுள்ள கயிற்றைச் சேர்த்துக் கட்டி, படலை இழுத்து வந்து, உழுதுகிடந்த நிலத்தில் இழுக்க ஆரம்பித்தான். ஏர் ஓட்டியிருந்த வாட்டத்திற்கு நேர் எதிராகப் படலை இழுத்ததால் மேடிட்டிருந்த மண்ணெல்லாம் சரிந்து உழவுக் காலில் விழுந்து பள்ளம் நிரம்பி சமதரையாகிக்கொண்டிருந்தது. மூச்சைப் பிடித்துக்கொண்டு உழுத தரையில் படலை இழுக்க முடியாமல் இழுத்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து உரத்த குரலில் “சோத்தத் தின்னுப்புட்டுப் போயி இயிரன்” என்று சொல்லிக் கத்திய அஞ்சலையை நோக்கிக் கத்தினான்: “பயறப் போட்ட பின்னாலியே படல இயித்தாத்தான ஈர நப்பு காயம இருக்கும். அப்பத்தான பயிறு ஒப்புட்டாப்ல மொளெக்கும். ஈரத்தோட ஈரமாப் படல இயித்துவிட்டாத்தான மண்ணும் சரிசமமாவும்? சோத்தப் பாத்தா வேலயாவுமா? கத்தாத போடி.” ஏர் உழுத சிறிது நேரத்திற்கெல்லாம் படல் இழுத்துவிடாவிட்டால் மேல் மண்ணில் ஈரம் உலர்ந்துபோய்விடும். அதோடு, உழவுக்கரையில் கிடக்கும் ஒன்றிரண்டு பயறை எறும்புகள் ஓட்டைபோட்டு அரித்துவிடும். அதனால் கிருஷ்ணன் சொல்வதும் சரிதான் என்று எண்ணியவள், அவனைக் கட் டாயப்படுத்தாமல் கூலியாட்களுக்குச் சோறுபோட ஆரம்பித்தாள்.
சாப்பிடுவதற்காக வட்டமாகத் தையல் இலையின் முன் உட்கார்ந்தவர் கள், உட்கார்ந்த மறுநொடியே சளசளவென்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஞ்சலையோடு சேர்ந்து அந்த இடத்தில் ஒன்பது பேர்கள்தான் இருந்தார்கள் என்றாலும், பெரிய கூட்டமே குழுமியிருப்பதுபோல் பேச்சுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. யார்யார் என்னென்ன பயிர் விதைக்கிறார்கள், யார்யார் யாருடைய நிலத்திற்கு ஏர் ஓட்ட, கடலைப் பயறுபோட, படல் இழுக்க, எரு கலைக்கப் போயிருக்கிறார்கள் என்று ஊர்க் கதைகளைப் பேசிக்கொண்டேயிருந்தார்கள். அவர்களின் பேச்சில் அஞ்சலையும் ஒன்றிரண்டு வார்த்தைகளை விட்டாள். அவளுடைய கவன மெல்லாம் சோறு போடுவதிலேயே இருந்தது. இன்று என்ன சாதாரண சாப்பாடா? விதை விதைக்கிற நாளில் எல்லாரும்தான் சோறுபோடுவார்கள் என்றாலும், இவள் மட்டும் இன்று தனி அக்கறையுடன் நிறைய காய்களைப் போட்டு, பருப்பைக் கொட்டிக் குழம்பு வைத்ததோடு, நல்ல அரிசியாகப் போட்டுச் சோறும் வடித்துக்கொண்டுவந்திருந்தாள். சோறு, குழம்பு என்று கொண்டுவந்ததோடு அல்லாமல் கேட்ககேட்கப் போட்டுக் கொண்டும் இருந்தாள். அதற்குக் காரணம் கால்காணி, அரைகாணி என்று எப்போதாவது அரிதாகத்தான் கடலை போடுவாள். ஆனால் இந்த வருசம் இருந்த இரண்டு காணியிலுமே கடலைபோடுகிறாள். கடலை நன்றாக விளைந்தால்தானே, வயதுக்குவந்து வீட்டில் உட்கார்ந்திருக்கும் மகளைக் கட்டிக்கொடுக்க முடியும்? அதற்குப் பல பேருடைய மனம் குளிர்ந்தால்தானே காட்டில் விளைச்சல் நன்றாக விளையும்?
சாப்பிட்டு முடித்த சற்றைக்கெல்லாம் மாடுகளை விரட்டி ஓட்ட ஆரம் பித்தனர். பெண்கள் விரலிடுக்கின் வழியே சரம்சரமாகப் பயறைக் கீழே சரித்துவிட்டவாறு நடந்துகொண்டிருந்தனர். பயறு கேட்பவர்களுக்குப் பயறையும் தண்ணீர் கேட்டவர்களுக்குத் தண்ணீரையும் அஞ்சலை கொடுத்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஓயாத அலைச்சல். சாப்பிடு வதற்கு முன்பு கடலை போட்டிருந்த துவரைப் படலை இழுத்து முடித்துவிட்டு வந்த கிருஷ்ணன் இரண்டாவதாகப் போய்க்கொண்டிருந்த ஏர்க்காரனைப் பார்த்துக் கடுமையாகவே சொன்னான்: “வலது மாட்டெ கொஞ்சம் தட்டி ஓட்டு. ஒயவுலியே வருது பாரு. மோயிய அயித்திப் புடி ஒரு வெரகட அயிந்திவர்றாப்ல. கீறிகிட்டே வருது பாரு. ஒயவோட ஒயவா சேரப் புடி. பொளக்காத ஓட்டு. கரபோடாத ஓட்டு. இந்தா காளியம்மா, பயறப் படசாலயிலியே போடு. ஒடம்பக் காப்பாத்தப் பாக்காத. நல்லாக் கையத் தளரத் தொங்கவுட்டுப் போடு.”
பொழுது மேற்கில் சாய ஆரம்பித்துவிட்டது. கிருஷ்ணனின் நிலத்தைச் சுற்றியும், தூரத் தொலைவிலும் கால்காணி அரைகாணி என்று விதைத்தவர்கள், விதைத்து முடித்துவிட்டு ஏர்களை அவிழ்த்துவிட்டிருந்தனர். ஒன்றிரண்டு இடங்களில் ஏர் ஓட்டியவர்களில் ஒரு சிலர் மட்டுமே மாடு களை விதைக்காத நிலமாகப் பார்த்து மேயவிட்டனர். மற்றவர்கள் வீட்டுக்குத் துரத்திக்கொண்டிருந்தனர். காடுகளில் இருந்த சனங்களின் கூட்டம் படிப்படியாகக் குறைந்துகொண்டேவந்தது. ஈர வாடைக்காகத் தலைக்கு மேலாகத் தட்டான்கள் கொசகொசவென்று பறந்தவாறு இருந் தன. பத்து இருபது விலா தூரம்தான் ஓட்டுவதற்கு பாக்கியிருக்கிறது என்ற நிலையில் கிருஷ்ணன் மீண்டும் படல் இழுப்பதற்காகப் போனான். மாடுகளை மேயவிட வேண்டும் என்பதற்காக ஏர்க்காரர்கள் மாடுகளை விரட்டியடித்துக்கொண்டிருந்தனர்.
“மொத ஏருகார தம்பி, செத்த பொறுமயாப் போ. வெள்ளமா வருது? எதுக்கு பெரியபெரிய வெலாவா கோளுற? துண்டு வியிந்தா மடிச்சிக் கட்டி ஓட்டிட்டுப் போ. அதுக்காக பொளந்து கட்டி ஓட்டாத” என்று சொன்ன அஞ்சலையிடம் ஏர்க்காரன் “மேக்கப் பாரு” என்று ஏர் போன வாட்டத்திலேயே மேற்குத் திசையில் கையைக் காட்டினான். திரும்பிப் பார்த்த அஞ்சலைக்குப் பச்சை மண்ணைச் செங்கல் சூளையில் வைத்தது மாதிரி உடம்பு இறுகிப்போயிற்று. இருட்டிக்கொண்டுவரும் வானத்தைப் பார்க்கப்பார்க்கப் பதட்டம் கூடியது. உழ வேண்டிய நிலத்தைப் பார்த் தாள். இன்னும் நான்கைந்து விலா தூரம்தான் பாக்கியிருந்தது. முதல் ஏர்க்காரன் கையைக் காட்டிச் சொன்னதும் மற்ற ஏர்க்காரர்களும் பெண் களும் மேற்கில் பார்த்தனர். கருப்புச்சட்டி நிறத்தில் மேகங்கள் நகர்ந்து வந்துகொண்டிருந்தன.
எல்லாருமே அரண்டுபோய்விட்டனர். “ஓட்டுங்க” என்று கடைசி ஏர்க்காரன் குரல் கொடுத்து அதட்டியதும்தான் முதல் ஏர்க்காரன் “இந்திரி, போ போ” என்று சொல்லி மாடுகளின் சூத்தில் குத்தி விரட்டினான். எஞ்சி இருக்கிற நான்கைந்து விலா தூரத்தையும் மழை வருவதற்குள் ஓட்டித் தேய்த்துவிட வேண்டும் என்று எல்லாருமே அக்கறைப்பட்டனர்.
குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. வெயில் சுத்தமாக மறைந்து விட்டது. பெரும்காற்றடித்து மேகத்தை எல்லாம் தெற்குப் பக்கமாக தள்ளிக்கொண்டுபோய்விட வேண்டும் என்று அஞ்சலை பல தெய்வங் களின் பெயர்களைச் சொல்லி வேண்டிக்கொண்டாள். குளிர்ந்த காற்று, அதுவும் மழை வாசனையுடன் ஈரம் கலந்து வந்ததே தவிர, பெரும்காற்று அடிக்கவில்லை. கருத்த வானம் நகர்ந்து வரவர, அஞ்சலைக்கு கால்கள் நடுக்கமெடுத்தன. இன்னும் சற்றைக்கெல்லாம் மழை பெய்ய ஆரம் பித்துவிடும்போல் இருந்தது. முன்பு கிழக்கிலாவது வெளிச்சமிருந்தது. இப்போது அதுவுமில்லை. வானம் முழுவதும் இருட்டிவிட்டது. ஒரே கருப்பு. அஞ்சலைக்கு எதுவுமே புரியவில்லை. அவளுடைய உதடுகள் தன்னிச்சையாக முணுமுணுத்தன: “மாரியாயி இன்னிய ஒரு பொயிதுக்கு வுட்டுப்புடிச்சாப் போதும், நாளக்கி எம்மாம் மய சாறுசாறுன்னு சாறி னாலும் ஒண்ணும் ஆவாது. கல்ல புடுங்குனதும் மொதக் காணம் ஆடி, உனக்கு மொத எண்ணெ விளக்குப்போடுறன். உன்னோட திருநாவுல ஒரு மூட்ட கல்லய சூரிவுடுறன்” என்று வேண்டிக்கொண்டாள். அஞ்சலை மேற்கில் பார்த்தவாறு அப்படியே நிலைகால் கொண்டு நின்றிருந்தாள். மூன்று மாதத்திற்கு முன்பாகவே திட்டம்போட்டுக் கடலைப்பயறு சேர்த்தது, ஒரு வாரம் பத்து நாள் என்று விடியற்காலமே வந்து காட்டில் முள்மிளாறு பொறுக்கி நிலத்தைச் சுத்தப்படுத்தியது, கடலைச் செடியின் வேர் பூமியில் எளிதாக இறங்க வேண்டும் என்பதற்காகக் கிருஷ்ணனைக் கட்டாயப்படுத்திப் பண ஏர் பிடித்து மூன்று சால் உழ வைத்தது, கடலையைப் போட்டு நகைநட்டு, சாமான் சட்டு என்று எடுத்து மகளுக்குக் கல்யாணம் முடிக்கத் திட்டம்போட்டது என்று ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. படல் இழுப்பதை நிறுத்திவிட்டு மேற்கு முகமாகத் திரும்பி நின்று, கருத்துப்போயிருந்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணனைப் பார்த்தவளுக்கு வெந்நீர் மாதிரி கன்னத்தில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. நாடி ஒடுங்கிப்போயிற்று.
கடலை போட்டு முடிந்ததுமே அவசரஅவசரமாக மாடுகளை அவிழ்த்து விட்டு கொழுவிலிருந்த மண்ணைத் தார்க்குச்சியால் குத்தியெடுக்க ஆரம் பித்தனர். பெண்கள் துணியை உதறிக் கட்டிக்கொண்டனர். கிருஷ்ணன் நுணா மரத்தடியில் நின்றுகொண்டிருந்த அஞ்சலையிடம் வந்தான். அவளைப் பார்த்தான். அவளுடைய முகம் செத்துப்போயிருந்தது. அவ ளைப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவளும் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டாள். எப்படிப் பார்ப்பது? பார்த்தாலும் தெரிவதற்குக் கண்களில் உயிர் இருந்தால்தானே!
அஞ்சலைக்கு ஆயிரமாயிரம் எண்ணங்கள் மனதில் ஓடின. எல்லா வற்றையும் சரியாகத்தானே செய்திருந்தாள். முதல் விதையை ஏர்க்காலில் போடுவதற்கு முன்பாக விரைப் புட்டியை நிலத்தின் சனி மூலையில் வைத்து விழுந்து கும்பிட்டுவிட்டுக் கையால் குழிபோட்டு அதற்குள் மகனை விட்டு ஒரு பயறை போடச்சொல்லி மண்ணைத் தள்ளி மூடிய பிறகுதான் விலா கோலி ஏர்க்காரர்களை ஓட்டச் சொன்னாள். நேற்றிரவு விரைப்பயறைக் கொஞ்சமாக ஓரு புட்டியில் எடுத்துக்கொண்டுபோய் மாரியம்மன் கோவி லில் வைத்துப் படைத்துவிட்டு வந்தாள். கோவிலிலிருந்த ஜோசியக்கார வள்ளுவனிடம் ஆருடம் கேட்டாள். எண்ணெய்ப் பொருள்கள் இந்த வருசம் அமோகமாக விளையும் என்ற வார்த்தையைக் கேட்டபோது மனம் பூரித்துப்போனாள். அதோடு இந்த வருசம் தன்னுடைய குடும்பத்தில் யார் விரைப்புட்டியை எடுத்தால் நன்றாக விளையும் என்று கேட்டாள். எல்லாருடைய கிரகத்தையும்விட, அவளுடைய மகனுடைய கிரகம்தான் நன்றாக இருந்தது. மற்றவர்களுக்கெல்லாம் இந்த வருச ராசிபலன்படி கிரக பலாபலன்கள் இரண்டு பங்கு லாபம் என்றால் இரண்டு பங்கு நஷ் டம் என்று சரிக்குச் சரியாக இருந்தது. பையனுக்கு மட்டும்தான் ஆறு பங்கு லாபம் என்றால் இரண்டு பங்கு நஷ்டம் என்றிருந்தது. அதனால் இந்த வருசம் அவனை விரைப்புட்டியைக் கோவிலில் வைத்துப் படைக் கவும், காட்டுக்கு விரைப்புட்டியை எடுத்துவரவும் சொல்லி, முதல் பயிர் ஊன்றியதும் பையனைப் பள்ளிக்கூடத்திற்குத் துரத்திவிட்டாள். எல்லா மும் அவள் திட்டம்போட்டிருந்தது மாதிரிதான் நடந்தது. ஆனால் இந்த மழை? குளிர்ந்த காற்றில் ஈரம் கலந்திருந்தது. ஒன்றிரண்டு துளிகள் விழத் தொடங்கின. சிறிது நேரத்திற்கெல்லாம் சடசடவென்று மழை பெய்ய ஆரம்பித்தது. எல்லாருமே நுணா மரத்தடியில் நின்றுகொண்டு கொட்டிக் கொண்டிருந்த மழையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். மழை சுற்றுப் புறத்தையெல்லாம் திரைகட்டி மறைக்கும் அளவுக்கு வலுத்தது. சிறிது நேரத்திலேயே தரையில் தண்ணீர் புரள ஆரம்பித்துவிட்டது. பெரும் சுழற் காற்று வந்து மேகத்தை எல்லாம் வேறு இடத்திற்கு நகர்த்திக்கொண்டு போகக்கூடாதா என்று அஞ்சலையின் மனம் ஏங்கிற்று. ஆனால் முன் பிருந்த காற்றுகூட இப்போது இல்லை. நேரமாகநேரமாக மழையோடு இடியும் மின்னலும் சேர்ந்துகொண்டன. தலையில் எந்தத் துணியைப் போட்டாலும் மறுநொடியே நனைந்துபோயிற்று. சாக்கு, புட்டி, குண் டான் என்று மறைப்புக்காகத் தலையில் கவிழ்த்திருந்தவர்கள்கூட நனைந்து விட்டார்கள். கிருஷ்ணனும் அஞ்சலையும் நனைகிறோம் என்ற நினைவே இல்லாமல் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த தாமோதரன் அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொன்னான்:
“இப்பிடி ஓரமா வந்து நில்லுங்க.”
“எங்க நின்னா என்ன, நனயாமியா இருக்கப்போறம்.”
“அதுவும் சரிதான். அடிக்கிற மயயப் பாத்தா லேசுல வுடாதுன்னு நினக்கிறன். ஏற்கனவே தர ஒதம்பலா இருக்கு. இதுல கன மய பேஞ்சா மம்பாரம்கொண்டு பயிரெல்லாம் அய்விப்போனாலும் போவும்.”
“என்னா பண்ணா முடியும்?” என்று செத்துப்போன குரலில் கிருஷ்ணன் கேட்டான்.
“இன்னம் எட்டாம் நாளு வந்து பாரு, ஒப்புட்டாப்ல பயறு மொளச் சியிருக்கா, முட்டு முட்டா மண்ணு மோடுட்டிருக்கான்னு பாரு, இல் லன்னா ஒரு சாலு ஓட்டி சோளத்தையோ வரவயோ தூவிக் கெடாசிட்டுப் போ.”
“ரெண்டு காணியிலயும் போட்ட ஒரு மூட்ட பயறும் போனதுதானா? இதென்ன எள்ளா, சோளமா, ஒரு படிதானன்னு போறதுக்கு, ஒரு மூட்டப் பயறாச்சே. அதுவும் தாலிய அடவு வச்சி வாங்குனதாச்சே.”
“அதுக்கு என்னா பண்ண முடியும்? நம்ப மனசுல ஆயிரம் கணக்கு இருந்தாலும் பூமாதேவி மனசுல என்னா இருக்கோ. ஏயி ஊரு மயயும் பூந்து அடிக்குது. மானத்து மவராசனுக்கு மனம் பொறுக்கலியே?”
“இவதான் எஞ் சொல்லக் கேக்காம பயற வாங்கிப்புட்டா. கையில இருந்த பயறோட வுட்டிருந்தாலும் மனசு ஆறிப்போவும்.”
“அதான் ஆம்பள சொன்னா கேக்கணுங்கிறது. பொட்டச்சி ராச்சியம் பண்ணப் பாத்தா இப்பிடித்தான் ஆவும். வெரப் பயற வித்திருந்தாக்கூட ஐநூறு ஆயிரம்ன்னு வித்துக் காசாக்கி ராசாவாட்டம் சோத்துக்கு வாங்கிக் காலாட்டிக்கிட்டுத் தின்னுகிட்டிருக்கலாம். எல்லாம் மண்ணோட போயி டும்போல இருக்கு.”
“ஆம்பள சொல்றபடி பொட்டச்சி செஞ்சிப்புட்டுப் போவ வேண்டியது தான. எதுக்குத் தனி விலா கோலணும்.”
“மய நிக்காதுபோல இருக்கு. நான் மாட்டெப் புடிச்சிக்கிட்டுப் போறன்” என்று சொல்லிவிட்டு நல்லதம்பி மாடுகளை நோக்கி நகர்ந்ததும், மற்ற வர்களும் வீட்டுக்குப் போகக் கொட்டுகிற மழையிலேயே கிளம்பி ஓடி னார்கள். கிருஷ்ணனும் சாமான்கள் கிடக்கும் இடத்திற்கு ஓடினான்.
அஞ்சலை பேய் பிடித்தவள் மாதிரி நின்றுகொண்டிருந்தாள். மற்றவர்கள் பேசியது, வீட்டுக்குக் கிளம்பி ஓடியது என்று எதுவுமே அவளுடைய கவனத்தில் இல்லை. மழையிலேயே நனைந்து கரைந்துபோக விரும்பிய வள், காட்டையே தண்ணீர்க்காடாக மாற்றியதோடு அல்லாமல் வானமே பிளந்துவிட்டது மாதிரி பெய்த மழையையே வெறித்துப் பார்த்துக்கொண் டிருந்தவள், “பகவானே” என்று சொல்லிவிட்டுக் கொட்டும் மழையில் வானத்தை நோக்கிக் கையெடுத்தாள்.
இமயம்