
மணலூரின் கதை
கணவனின் நண்பன் என்பதைவிட ‘தமிழர்களின் உயிர்நாடி’ தொலைக் காட்சிக்காக வந்திருக்கிறார்கள் என்பதால் விழுந்துவிழுந்து உபசரித்தாள் கஸ்தூரி. அவளுடைய கால்கள் தரையில் நிற்கவில்லை. கல்யாணம் நடந்த அன்று எவ்வளவு மகிழ்ச்சியில் இருந்தாளோ அதைவிடப் பல மடங்கு மகிழ்ச்சியில் அவள் இருந்தாள். அவளைவிட அவளுடைய இரண்டு மகள்களும் கூடுதலான மகிழ்ச்சியில், கூடுதலாக உணவுப் பண்டங்களைப் பரிமாறினார்கள். கல்யாணத்திற்கு வந்தவர்களை உபசரிப்பது மாதிரி ராமு ஓடியாடி வேலை செய்தான். காரக்குழம்பை ஊற்றிய கஸ்தூரி ஸ்ரீஸ்ரீயிடம் “கல்யாணத்துக்கு வந்தீங்க. அதுக்குப் பின்னால இருவது வருசம் கழிச்சி அண்ணன் இன்னிக்குத்தான் வந்திருக்கீங்க” என்று வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டு சொன்னாள்.
“இருபது வருசமாயிடிச்சா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான் ஸ்ரீஸ்ரீ.
“ஆமாண்டா. ஒனக்கு எங்களயெல்லாம் எங்க ஞாபகம் இருக்கு?” என்று ராமு கேட்டான்.
“மீடியாவுல இருக்கிறதும், போலீசா இருக்கிறதும் ஒண்ணுடா. எப்ப எந்த வேல வரும், எங்க போவணுமின்னே தெரியாது”
“திடீர்னு எப்பிடி என் நெம்பரக் கண்டுபுடிச்ச?”
“அதான்டா மீடியாக்காரன்.”
“வெத்தலபாக்கு எடுத்துக்கங்கண்ணே” என்று வெற்றிலைபாக்குத் தட்டை நீட்டினாள் கஸ்தூரி.
“சாப்பாடு சூப்பர்மா” என்று சொல்லிக்கொண்டே வெற்றிலைபாக்கை எடுத்துக்கொண்டான் ஸ்ரீஸ்ரீ. “நல்ல சாப்பாடு சாப்புட்டு எவ்வளவோ நாளாச்சி” என்று சொன்னான்.
“ஏதோ எனக்குத் தெரிஞ்சத செஞ்சன். திடீர்னு வந்ததால சரியா செய்ய முடியல” என்று சொன்ன கஸ்தூரி, ஸ்ரீஸ்ரீயுடன் வந்திருந்த மற்ற நான்கு பேருக்கும் வெற்றிலைபாக்கு கொடுத்தாள்.
“நேத்து ராத்திரிதான் போன் பண்ணின. காலயில திடீர்னு வந்து நிக்குற. என்னடா மாப்ள விசயம்?” என்று ராமு கேட்டான்.
“ஒரு புரோகிராம் விசயமா வந்தன்” என்று ஸ்ரீஸ்ரீ சொன்னான்.
“அதான பாத்தன். காரியமில்லாம ஒரு எடத்துக்குப் போற ஆளில்லியே நீ” என்று சொல்லி ராமு சிரித்தான். ஸ்ரீஸ்ரீயும் சிரித்தான்.
“வா. வெளிய போயி ஒரு சிகரட் குடிச்சிட்டு வரலாம்” என்று ஸ்ரீஸ்ரீ சொன்னான்.
“இங்கியே குடி. நம்ப வீடுதான” என்று ராமு சொன்னான்.
“அது சரிவராது. வாடா” என்று சொல்லி ஸ்ரீஸ்ரீ எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தான். ராமுவும் வெளியே வந்தான். ஸ்ரீஸ்ரீயோடு வந்திருந்த நான்கு பேரும் வெளியே வந்தனர்.
“தெருவுல குடிச்சா நல்லாயிருக்காது. வா கோயிலுக்குப் போயிடலாம்” என்று சொல்லி ராமு அனைவரையும் பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு வந்தான். கோவிலுக்கு முன் நின்றுகொண்டிருந்த வேப்பமரத்தைச் சுற்றிப் போட்டிருந்த சிமெண்ட் மேடையில் அனைவரும் உட்கார்ந்தனர். சிகரெட்டைப் பற்றவைத்த ஸ்ரீஸ்ரீ “தமிழர்களின் உயிர்நாடி டி.வி.க்காக ‘இந்த வாரம் இந்த ஊர்’ங்கிற நிகழ்ச்சியைப் புதுசாப் பண்றம். ஒன்னோட ஊரு சுத்த கிராமமாச்சா. இந்த ஊருல விநோதமான கதெ ஏதாவது இருந்தாஷுட் பண்ணலாமுன்னு வந்தம்” என்று சொன்னான்.
“இது சின்ன ஊரு மாப்ள. இங்க என்ன கதெ இருக்கும்?” என்று சொல்லிவிட்டு ராமு யோசிக்க ஆரம்பித்தான்.
“இருக்கும்ண்டா, இல்லாம இருக்காது. சனங்க இருக்கறப்போ கதெ இல்லாம எப்பிடி இருக்கும்? கதெயும் இருக்கும். கட்டுக்கதெயும் இருக்கும். நிஜக் கதெ, நடந்த கதெயா இல்லன்னாகூடப் பரவாயில்லெ. கட்டுக்கதெயா இருந்தாலும் பரவாயில்லெ. நான் மேக்கப் பண்ணிக்குவன். மத்த ஊருல இல்லாத கதெயா இருக்கணும். புதுசா இருக்கணும்.”
“அப்பிடியெல்லாம் இந்த ஊருல ஒண்ணும் இல்ல, மாப்ள.”
“முட்டாள். கதெ இல்லாம ஒரு ஊரு எப்பிடிடா இருக்கும்? இந்தக் கோயிலு இருக்கில்லெ. இதெப் பத்தி ஒரு கதெ இருக்கும். இதெ யாரு கட்டுனாங்க, ஏன், எதுக்காகக் கட்டுனாங்க. எப்பிடிக் கட்டுனாங்கன்னு. கல்யாணம் ஆவலன்னு, புள்ள பொறக்கலன்னு அந்தக் காலத்திலெ கோயில் கட்டியிருக்காங்க, தெரியுமில்லெ? அந்த மாரி கதெ ஏதாச்சம் இருந்தா சொல்லு. யோசிடா. அவசரமில்லெ” என்று சொன்ன ஸ்ரீஸ்ரீ “இந்தா, இன் னொரு சிகரட்டப் பத்தவையி. பேய்க் கதெ, பிசாசு, முனி கதெ, சாமிக் கதெ, அண்ணனோட ஓடிப்போன தங்கச்சி, அத்தையக் கல்யாணம் கட்டிக்கிட்ட வன் கதென்னு சென்சேஷனலா ஊருக்குள்ளார ஆயிரம் இருக்கும். அதுல ஒண்ண எடுத்து வுடு” என்று சொன்னதோடு ராமுவுக்கு சிகரெட்டைப் பற்ற வைத்தான் ஸ்ரீஸ்ரீ.
“டவுனுல இல்லாத கதெயா கிராமத்திலெ இருக்கப்போவுது?”
“டவுனுக்காரனுக்குக் கிராமத்தப் பத்திச் சொல்லணும். கிராமத்துக்கார னுக்கு டவுனப் பத்திச் சொன்னாத்தான் புடிக்கும். ஒவ்வொருத்தனுக்கும் அடுத்தவனப் பத்தித் தெரிஞ்சிக்கிறதிலதான் ஆர்வம். மக்களோட ஆர்வத்த வளக்கறதும் நிறைவேத்தறதும்தான் மீடியாவோட வேல.”
“இது பட்டிக்காடுடா. டவுனுல இருக்கிறவங்கிட்டெ கேக்குறதுதான் நல்லது, மாப்ள.”
“நான் சொல்றது ஒனக்குப் புரியலன்னு நெனக்கிறன். டவுனுல இருக் கிறவனும் சரி, மீடியாவுல இருக்கிறவனும் சரி, கிராமத்த வுட்டுப் போயி முப்பது நாப்பது வருசமாயிடிச்சி. சினிமா போஸ்டரயும் தார் ரோட்டயும் கட்டடத்தயும் தவுத்து அவனுங்களுக்கு எதுவுமே தெரியாது. அவனுவளோட மண்டயெல்லாம் சிமெண்ட் ரோடு, தார் ரோடு மாரிதான் இருக்கும். மனசும் அப்பிடித்தான் இருக்கும். அதனாலதான் புதுசுபுதுசா வர்ற கிராமத் துப் பசங்களப் புடிச்சிக் கதெ கேட்டுப் படம் எடுக்கிறானுவ. புரியுதா?”
“எல்லாம் புரியுது, ஆனா கதெதான் ஒண்ணும் ஞாபகத்துக்கு வர மாட் டங்குது” என்று சொன்ன ராமு சிகரெட்டைத் தரையில் போட்டுத் தேய்த்து விட்டு “இந்த ஊருல பெரிய ஆறு ஒண்ணு ஓடுது. அதெப் பத்தி எடுக்கிறியா?” என்று கேட்டான்.
“ஆத்திலெ சாயப்பட்டற தண்ணீ கலக்குதா? இல்லெ கம்பனிகளோட கழிவு கலக்குதா?”
“அதெல்லாமில்லெ. வருசத்துக்கு ஒருமுற ஊரே கூடி ஆத்திலெ பொங்க வைப்பாங்க. அதெ வுட்டா வேற ஒண்ணுமில்லெ. இது ஒரு வீணாப்போன ஊரு, மாப்ள. பஸ் போக்குவரத்துகூடக் கெடயாது. இப்பிடிப்பட்ட ஊருல எவன் வந்து கம்பனி கட்டப்போறான்?” அலுப்புடன் சொன்னான் ராமு.
“சரி, ஆத்திலெ சாமியாரு மடம், ஆசிரமம் ஏதாச்சும் இருக்கா?”
“அப்பிடியெல்லாம் ஒரு சனியனும் இல்லெ.”
“மந்திரவாதி, மாந்தீரிகம் செய்றவன், தாயத்து கட்டுறவன், பில்லி சூனியம் வைக்கிறவங்க, ஏவல், வின செய்றவங்கன்னுகூட யாருமில்லியா?”
“இல்ல, மாப்ள”
“பேய் ஓட்டுறவன்கூட இல்லியா?”
“ஒரு நாயும் இல்லெ. நாந்தான் சொன்னனே, இது ஒரு வீணாப்போன ஊருன்னு.”
“பஸ் போக்குவரத்து இல்லாத ஊருக்குப் போனா நல்ல கதெ கெடைக்கும்ன்னு வந்தன். ஒண்ணுமே இல்லங்கிற. நேரம் வேற போய்க் கிட்டே இருக்கு” என்று சொன்ன ஸ்ரீஸ்ரீக்கு என்ன தோன்றியதோ “கிஷோர், இங்க வா” என்று கூப்பிட்டான்.
கிஷோர் வந்து பக்கத்தில் நின்றான்.
“நீ கேமராவோட ஆத்துக்குப் போயி பாரு. கூட ஒரு ஆள வச்சிக்க. மத்த ரெண்டு பேரயும் ஊரச் சுத்திப் பாக்கச் சொல்லு. புதுசா எது கண்ணுல பட்டாலும் ஷýட் பண்ணு. போங்க, நேரமில்லெ” என்று சொன்னதும் கிஷோரும் மற்ற பையன்களும் கிளம்பிப் போனார்கள். அவர்கள் போவ தையே பார்த்தான் ராமு. “என்ன மாப்ள, அந்தப் பசங்க இந்த மாரி ட்ரஸ் போட்டிருக்காங்க. ஒனக்கும் வயசாச்சி. நீயும்தான் அந்த மாரி போட்டிருக்க” என்று லேசாகச் சிரித்துக்கொண்டே கேட்டான்.
கடகடவென்று சிரித்த ஸ்ரீஸ்ரீ “நல்லாயில்லியா?” என்று கேட்டான்.
“நல்லாத்தான் இருக்கு. பாத்தா குடுகுடுப்பகாரன் மாரி இருக்கு.”
“போடா முட்டாள். இதான் இப்ப பேஷன். சிட்டியில ஆம்பள, பொம்பள எல்லாரும் போட்டுக்கிட்டு இருக்காங்க. கிராமம்வரைக்கும் இப்ப நைட்டி வரலியா? காமனா ஆயிடலியா? அந்த மாரி இந்த பெர்மு டாவும் மத்ததும் வந்துடும். மற்ற ட்ரஸ்ஸும் பொதுவாயிடும்” என்று சொல்லிவிட்டுச் சிரித்த ஸ்ரீஸ்ரீ நிதானமானக் குரலில் “இது ட்ரஸ் மட்டு மில்லெ. பணம்டா” என்று சொன்னான்.
“பணமா? என்ன சொல்ற?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் ராமு.
“இது ட்ரஸ் இல்லெ. விளம்பர போர்டு. நாங்க எங்க ஒடம்ப வாடகக்கி விட்டிருக்கம்.”
“என்ன மாப்ள புதுக் கதெ சொல்ற?”
“நான் போட்டிருக்கிற பேண்ட்ல ஒரு கம்பனியோட விளம்பரம் இருக்கா?”
“இருக்கு.”
“நான் போட்டிருக்கிற மேல்சட்டையில முன்னாடியும், பின்னாடியும் வேற கம்பனியோட விளம்பரம் இருக்கில்ல.”
“ஆமாம்.”
“அப்பறம் நான் போட்டிருக்கிற பனியன்ல ஒரு விளம்பரம் இருக் கில்ல? இது ஒரு கம்பனியோட விளம்பரம். அந்தந்த கம்பனிக்காரங்க கொடுத்தது. பனியனோட விளம்பரம் தெரியுறதுக்காகத்தான் மேல் சட்டை யில பட்டன் போடாம இருக்கிறது. நான் போட்டிருக்கிற ஷூ, தலயில போட்டிருக்கிற குல்லா, கையில கட்டியிருக்கிற ஸ்கார்ப், எல்லாத்துக்கும் காசு. ஆறு மாசம், ஒரு வருசமின்னு போட்டிருக்கணும். ஒடம்போட ஒவ் வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு ரேட். அக்ரிமண்ட போட்டிருக்கன். காசு வாங்கியிருக்கன். எங்கூட வந்திருக்கிற நாலு பசங்களுமே ஒடம்ப வாடகக்கி விட்டவங்கதான். சினிமா நடிக, நடிகருங்க ஜட்டி, பனியன், பிரா விளம் பரத்தில வர்றாங்கல்லெ, அந்த மாரி. எங்கள மாரியே அவுங்களும் விளம்பர போர்டுங்கதான். இந்தத் தொழிலுக்கு வராதீங்கன்னு இந்தப் பசங்ககிட்ட சொன்னன். கேக்கல. சாதிக்கணும்ங்கிறாங்க. இப்ப நான் பேசுறது, செய்யுறது, எல்லாமே விளம்பரம்தான். காசுதான்.”
ஸ்ரீஸ்ரீயின் பேச்சைக் கேட்டதும் ரொம்பவும் அன்பான குரலில் “மெட் ராஸ் புடிக்கலன்னா ஊருக்குப் போயிடன்” என்று ராமு சொன்னான். அதற்கு மிகுந்த சலிப்புடன் ஸ்ரீஸ்ரீ சொன்னான்.
“அது இனிமே முடியாது. ஒரு கட்டத்தில நானும் அப்பிடித்தான் முயற்சி செஞ்சன். முடியல. மெட்ராசில முடியலன்னு ஊருக்குப் போனா அங்க ஒரு மணி நேரம்கூட இருக்க முடியல. செல்போன் டவர் கெடைக்க மாட்டங்குது. சுடுகாட்டுல இருக்கிற மாரி இருக்கு. மெட்ராஸோட கூட் டம், நெரிசல், சத்தம், காரு, ஆட்டோ, இடிச்சிப்புடிச்சி ஓடிக்கிட்டேயிருக் கிறது, இதெல்லாம் இல்லாம ஒரு மணி நேரம்கூட இருக்க முடியல. அப்பிடி யிருந்தா செத்திட்ட மாரி இருக்கு” என்று சொன்ன ஸ்ரீஸ்ரீ இன்னொரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான். சிறிது நேரம் தரையைப் பார்த்தவாறு இருந்தான். தரையில் கிடந்த இரண்டு வேப்பம் பழங்களை எடுத்துக் கன் னத்தில் வைத்து உரசினான். முகர்ந்துபார்த்தான். பிறகு அமைதியான குரலில் “என்னிக்கி மீடியாவுக்குன்னு போனனோ அன்னிக்கே கணேசன்ங்கிற பேர ஸ்ரீஸ்ரீன்னு மாத்திக்கிட்டன். மீச, கிருதா, கிராப்பு, ட்ரஸ்ன்னு எல்லாத்தயும் மாத்திக்கிட்டன். அப்பிடியிருந்தாத்தான் இந்தத் துறையில நிக்க முடியும். இப்பப் போனானில்ல, கேமராமேன். கண்ணுசாமின்னு பேரு. சினிமாவுக் காக கிஷோர்னு பேரு வச்சிக்கிட்டான். குலதெய்வத்தோட பேரு, குடிசாமி யோட பேருன்னு ஆண்டிச்சாமி, கருப்புசாமி, மொக்கச்சாமின்னு பேரு வச்சிக்கிட்டா வேலக்கி ஆவாது. மீடியாவுக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்கு. அந்த கல்ச்சராவே நாம மாறிடணும். அப்பத்தான் சர்வைவல் சாத்தியம். புரி யுதா?” என்று ஸ்ரீஸ்ரீ கேட்டான். ராமு எதுவும் பேசவில்லை. இருவரும் சிறிது நேரம் பேசாமல் இருந்தனர். திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி “இன் னிக்கே அவசரமா, மாப்ள? சாயந்தரமானா ஊருல ஆளுங்க நெறய பேரு இருப்பாங்க. யார்கிட்டயாவது கேட்டுப்பாக்கலாம்” என்று ராமு சொன்ன தும் லேசாகக் கோபப்பட்டான் ஸ்ரீஸ்ரீ.
“மீடியான்னாலே அவசரம்தான். நாளக்கி ஒரு மணி நேரத்துக்கு புரோ கிராம் இல்லாம இருக்கு. வழக்கமா சாயங்காலம் ஆறு மணிக்கு வர புரோ கிராம்ல ஏதோ பிரச்சன. அந்த ஒரு மணி நேரத்த இட்டு நிரப்பணும். ஒரு நிமிசம்கூட புரோகிராம் இல்லாம டி.வி. இருக்க முடியாது. அதுக்காகத்தான் எங்கிட்ட கேட்டாங்க. ஓ.கே.ன்னு சொல்லிட்டன். வர வழியிலதான் ‘இந்த வாரம் இந்த ஊர்’ நிகழ்ச்சிங்கிறத முடிவு பண்ணி சொன்னன். ஓ.கே. நிகழ்ச்சி சூப்பரா இருக்கணும்ன்னு சொல்லிட்டாங்க. அந்த ஒரு மணி நேரத்துக்காக ஸ்பான்சர்சும் புடிக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க. ரெண்டு காலேஜில காசு வாங்கப் போயிட்டாங்க. இந்த ஒரு மணி நேரம் நல்லாப் போனா அடுத் தடுத்து சான்ஸ் வரும். ஆறு மாசம், ஒரு வருசமின்னு அக்ரிமண்ட் போட்டு டலாம். தவறிட்டா, அவ்வளவுதான். எப்ப சான்ஸ் வருமின்னே சொல்ல முடியாது. காவக் காத்துக்கிட்டே இருக்கணும்” என்று சொன்ன ஸ்ரீஸ்ரீ, ரொம் பவும் விரக்தியுடன் “நாளக்கி வழக்கமா வர்ற நிகழ்ச்சியோட பிரச்சன முடியாம இருந்தாத்தான் நாம எடுக்கப்போற புரோகிராமே வரும். இல் லன்னா வாய்ப்பு இருக்கிறப்பத்தான் ஒளிபரப்புவானுங்க” என்று சொன் னான்.
ராமு சட்டென்று உற்சாகமாகி “ஒரு கதெ ஞாபகத்துக்கு வந்துடுச்சி, மாப்ள” என்று சொன்னான்.
“சொல்லு, சொல்லு. நல்ல கதெயா சொல்லு.”
“இந்த ஊருல ஆடு திருடன் ஒருத்தன் இருந்தான். காத்தவராயன்னு பேரு. பதினோரு வயசிலிருந்தே ஆடு திருட ஆரம்பிச்சிட்டான். அவன் வீட்டுல ஆட்டுக் கறி வேகாத நாளே இருக்காது. ஊருல இருக்கிற எல்லாரும் அவன் வீட்டுலதான் கறி வாங்குவாங்க. பாதி விலைக்கு கிடைக்கும். அத னால அவனத் தேடிக்கிட்டு போலீசு வந்தாலும் காட்டிக்கொடுக்க மாட் டாங்க. ஆட்டெத் தவித்து வேற ஒரு பொருளயும் திருட மாட்டான். பணம் காசு, நகநட்டு இருந்தாக்கூட திருட மாட்டான். அவனுக்கு என்னாச் சின்னா...” என்று ராமு சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீஸ்ரீ “சொத்த கதயா இருக்குடா” என்று சொன்னான்.
“முழுசா கேட்டீனா நல்லா இருக்கும் மாப்ள”
“இல்லடா. பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி, ஒரு லட்சம் கோடின்னு அவனவன் திருடிக்கிட்டு இருக்கிற காலத்திலெ போயி ஆடு திருடனப் பத்தியும், கோழித் திருடனப் பத்தியும் காட்டுனா ஒரு பயலும் பாக்க மாட்டான். ஸ்பான்சரே தர மாட்டான். கையச் சுட்டுக்க வேண்டியது தான். ஒரு விசயத்த சொன்னா ஒலகமே திரும்பிப் பாக்கணும். அதான் புது விசயமிங்கிறது. புரியுதா?” “அப்பிடின்னா போன வாரம் நடந்த கதெயச் சொல்றன். சரிப்படுமான்னு பாரு. குமார், குமாருன்னு ஊருல ஒருத்தன் இருக்கான். அவனுக்கு என்ன வேலன்னா ஒவ்வொரு மோட்டாரு கொட்டா யாப் போயி மோட்டாரத் திருட மாட்டான், ஒயர மட்டும்தான் திருடுவான். அவன் ஒயர் திருடாத மோட்டார் கொட்டாயே இந்த வட்டாரத்தில கெட யாது. கரண்டு இருக்கும்போதே ஒயரக் கட் பண்ணிடுவான். அப்பிடிப்பட்ட வனுக்கு என்னாச்சின்னா...” என்று சொன்னதும் ஸ்ரீஸ்ரீயின் முகம் தொங்கிப் போயிற்று. கதையைக் கேட்பதற்குப் பதிலாக வேப்பமரத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து லேசாகக் கோபப்பட்ட மாதிரி அழுத்தமாகவும் தெளிவாகவும் சொன்னான்.
“டி.வி. புரோகிராம்ன்னா என்னான்னு நீ நெனச்சிக்கிட்டிருக்க? இருக் கிறத அப்பிடியே காட்டுறது டி.வி. இல்லெ. இருக்கிறதயும், இல்லாததயும் இணைச்சிக் காட்டுறது. புரியுதா? கொல, கொள்ள, கற்பழிப்பு, விபச்சா ரம்ன்னு சனங்ககிட்டெ பாப்புலரான விசயமா சொல்லணும். அதே நேரத் திலெ செண்டிமெண்டா இருக்கணும். ஒரே பொண்ணு மூணு பேரக் காதலிச்ச கதெ, தந்தை மகளை சீரழிச்சது, அண்ணன்கூட ஓடிப்போன தங்கச்சி கதென்னு சொல்லு. இல்லாட்டி சாமியோரட ஆசிரமத்திலெ கற்பிழந்த பொண்ணுங்கன்னு சொல்லு.”
ஸ்ரீஸ்ரீயின் பேச்சைக் கேட்டு ராமுவின் முகம் வாடிப்போயிற்று. பேச்சும் நின்றுபோயிற்று. ஆனாலும் சுதாரித்துக்கொண்டு உடைந்துபோன குரலில் “இப்பத்தான் மாப்ள, நீ சொல்றது புரியுது. நேத்து ஊருல நடந்த கதெய சொல்றன். புடிக்குதான்னு பாரு” என்று சொல்லிவிட்டு வாயைத் துடைத்துக்கொண்டு கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
“கீதான்னு ஒரு பொண்ணு. அவ காலேஜில படிக்கறப்போ ரெண்டா வது வருசத்திலேயே அதே காலேஜில படிச்ச அவ சாதிப் பையனயே காத லிச்சா. விசயம் தெரிஞ்சதும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் கட்டிவச்சாங்க. மூணு புள்ளெ பொறந்துச்சி. அந்தப் பையனுக்கு மணியார் வேல கெடச்சது. காசு சேர ஆரம்பிச்சது. வீடு கட்ட ஆரம்பிச்சான். ஊருலியே பெரிய வீடு அவன் வீடுதான். ஆனா வீடு கட்ட ஆரம்பிச்ச மூணாவது மாசமே கீதா மூணு புள்ளகளயும் விட்டுட்டு வீடு கட்ட வந்த கொத்தனார்கூட ஓடிப் போயிட்டா. ஒரு மாசம் எங்க இருக்கான்னே கண்டுபுடிக்க முடியல. அப் புறமா கடலூர்ல இருந்தவள இழுத்தாந்து வந்து அடிச்சித் தொவச்சிப் பஞ்சா யத்து வச்சா, நான் அவங்கூடத்தான் போவன்னு சொன்னா. ஊரே அசந்துபோச்சி. மூணு புள்ளய என்னடி பண்றதுன்னு கேட்டு ஊரே அடிச்சது. சரி இருக்கிறன்னு சொன்னா, கொத்தனார அடிச்சித் துரத்திட்டாங்க. ஒரு பாஞ்சி நாளு ஒழுங்கா இருந்தா. அப்புறம் ஒருநாளு வவுத்த வலிக்குது, ஆசுபத்திரிக்குப் போயிட்டுவரன்னு போனவ போனவதான். ஆளு திரும்ப வரல. புருசன்காரன் ஊரு ஊரா ஆள் விட்டுத் தேடுறான். எட்டு நாளு கழிச்சி முந்தாநாளுதான் உளுந்தூர்பேட்டயில இருந்தவளக் கொண்டாந்தாங்க. மாட்டு அடி அடிச்சாங்க. கொத்தனாரயும் கட்டிவச்சிட்டாங்க. ரெண்டு நாளு பஞ்சாயத்து. ரெண்டு பேரயும் அடிச்சி, மிதிச்சித் தொவச்சாங்க. கீதா வாழ்ந்தா கொத்தனாரு கூடதான் வாழ்வன்ங்கிறா புருசன்காரன் மூணு புள்ள இருக்கு, பொண்டாட்டிதான் வேணுங்கிறான். கொத்தனாரக் கேட்டா எம் பொண்டாட்டி புள்ளயப் பாத்து ரொம்ப நாளாவுதுங்க. ஊர்ஊரா ஓட முடியல. இந்த அடியயும் ஒதயயும் வாங்க முடியாதுன்னு சொல்லிப் பஞ்சா யத்தில் விழுந்து கும்புடுறான். வேற வழியில்லாம கீதாவ அவ புருசங்கூடவே சேத்து வச்சாச்சி. அடிச்ச அடியில செத்திடப்போறான்னு மோட்டார் பைக் கில வச்சிக் கொத்தனாரக் கொண்டுபோயி அவனோட ஊருல வுட்டுட்டு வந்தாங்க.”
“கதெ ஓ.கே.தான். என்னா பிரச்சனைன்னா, பையனும் பொண்ணும் ஒரே சாதியா?”
“ஆமாம்.”
“சண்டகிண்ட வல்லியா?”
“கொத்தனார்கூட ஓடுறதுக்கு முன்னாடி எந்தப் பிரச்சினையும் இல்லெ.”
“இதே சாதி மாறி காதலிச்சி, சண்டை சச்சரவு, கலவரம், ரெண்டு ஊரு சண்ட, சாதி மோதல்ன்னு வந்திருந்தா சூப்பரா இருக்கும்” என்று சொன்ன ஸ்ரீஸ்ரீ திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி “அந்த கொத்தனாரு என்னா சாதி?” என்று கேட்டான்.
“ஒரே சாதிதான்”
“பிரயோசனமில்லெ. அவனாவது வேற சாதியா இருந்தா, காதலால் ஏற்படும் கலவரங்கள்னும் சாதி மோதல்களும்னு கதெய ரெடி பண்ணிட லாம். இதெ அப்பிடிப் பண்ண முடியாது. பட்... நல்ல கதெ. நேரம் வரும் போது டெவலப் பண்ணிக்கிறன். தற்சமயத்துக்கு மைண்டுல வச்சிக்கிறன். குட் ஸ்டோரி. இன்னம் புதுசா இருக்கணும் மாப்ள. ஊரோட சம்பந்தப்பட் டிருக்கணும். சின்ன வயசுக்குப் போ. ஞாபகப்படுத்திப்பாரு. யாரும் சொல்லாத கதெயா சொல்லு.”
ஸ்ரீஸ்ரீயின் மனநிலை ராமுவுக்கு இப்போதுதான் புரிந்தது. நடந்த, நிஜக் கதைகளை விட்டுவிட்டு அவனே கற்பனைபண்ணி ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
“-------”
“வேற... வேற சொல்லு.”
“-------”
“ரொம்ப ட்ரையா இருக்குடா. சினிமாத்தனமா இருக்கக் கூடாது.”
“-------”
“சரி வுடு. ஒனக்குக் கதெயும் தெரியல. கதெயச் சொல்லவும் தெரியல. விட்டுடு. ஊருல நூறு வயசு தாண்டுனவங்க யாராச்சும் இருக்காங்களா?”
“அப்பிடி யாருமில்லெ. அறுவது எழுவது வயசிலதான் இருக்காங்க.”
“ஒண்ணுமே இல்லாத ஊருல எப்பிடிடா இருக்க?”
“தலயெழுத்துத்தான்”
“சரி, ஒம் பொண்டாட்டிக்கிட்ட கேட்டுப் பாப்பமா?” ஸ்ரீஸ்ரீ கேட் டான்.
“அட நீ வேற. அவ எல்லாத்தயும்விட மண்ணு, மாப்ள.”
“ஒனக்குத் தெரியாது. வா. போயி கேட்டுப்பாக்கலாம். அவுங்க ஊருல நடந்த கதெ ஏதாச்சும் இருக்கான்னு கேப்பம்”
“அவளும் இந்த ஊருதான்” என்று வெறுப்புடன் சொன்னான் ராமு. சிறிது நேரம் கழித்து “இந்த ஊருக்கு எந்த நாயி மணலூருன்னு பேரு வச்ச தின்னு தெரியல. மணலூரு... மயிரு ஊரு” என்று கோபமாகச் சொன்னான்.
“ஊரு பேரு மணலூரா? ஓ.கே. டென்சன் ஆவாத. மணலூருன்னு பேரு வந்ததுக்குக் காரணம் ஏதாச்சும் இருக்கா?”
“தெரியல.”
“சரி வா. வயசானவங்ககிட்டெ கேட்டுப்பாக்கலாம்” என்று சொன்ன தோடு மேடையை விட்டு உடனே கீழே இறங்கி ரொம்பப் பழகின தெருவுக்குள் நடப்பது மாதிரி நடக்க ஆரம்பித்தான் ஸ்ரீஸ்ரீ. அவனுக்குப் பின்னால் நடந்தான் ராமு. ஆறு ஏழு பேரை விசாரித்தார்கள். மணலூர் என்று பெயர் வந்ததற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. தெருத்தெருவாக நடந்தபோது ஸ்ரீஸ்ரீயைவிட அதிகச் சோர்வாக உணர்ந்தது ராமுதான். சொந்த ஊரின் மேல் முதன்முதலாக அவனுக்கு வெறுப்பும் கசப்பும் உண்டாயிற்று. ஒன்றிரண்டு பேரிடம் செல்போனில் விசாரித்தான். “தெரியல” என்ற பதில் தான் கிடைத்தது. முன்பைவிட இப்போதுதான் அவனுக்கு ஊரின் மேல் வெறுப்பு உண்டாயிற்று. காறித் துப்பினான். அப்போது ஸ்ரீஸ்ரீக்கு போன் வந்தது. “பேசாதே” என்பதுபோல் ராமுவிடம் கையைக் காட்டிவிட்டு ஸ்ரீஸ்ரீ போனில் பேச ஆரம்பித்தான்.
“லொகேசன்லதான் சார் இருக்கன். ரொம்ப டிபிரண்டான சப்ஜக்ட் சார். சூப்பரா வந்துடும் சார். பேரு கெடச்சிடும் சார். இன்னும் ஒன் அவர்ல ஷýட் பண்ணிடுவன் சார். காலயில ஏழுஎட்டு மணிக்கெல்லாம் ஒங்க ளுக்குப் போட்டுக்காட்டிடுவன் சார். கையில காரு இருக்கு சார். வந்துடுவன் சார். ஷýட் பண்ணி முடிச்சதும் கால் பண்றன் சார்” என்று பேசிக்கொண் டிருக்கும் போதே எதிர்முனையில் இணைப்பைத் துண்டித்துவிட்டது ஸ்ரீஸ்ரீயின் முகத்திலிருந்தே தெரிந்தது. அலுப்புடன் செல்போனை முழங் காலுக்கு அருகில் தொங்கிக்கொண்டிருந்த பாக்கெட்டில் வைத்தான். சிக ரெட் ஒன்றை எடுத்துச் சோர்வுடன் பற்றவைத்தான்.
ஸ்ரீஸ்ரீயின் சோர்வான முகத்தைப் பார்த்து வருத்தப்பட்ட ராமு “இப்ப என்ன மாப்ள பண்றது? வேற யாருகிட்டயாவது கேட்டுப்பாக்கலாமா?” என்று நெகிழ்வான குரலில் கேட்டான்.
“எல்லாத்துக்கிட்டயும் எல்லாக் கதயயும் கேக்க முடியாது. வயசான வங்க கெடச்சா பாக்கலாம். சாயங்காலத்துக்குள்ளார கெடக்கலன்னா மெட் ராசுக்குப் போயி மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டல், மல்டி ஸ்பெஷா லிட்டி ஹோட்டல், மல்டி ஸ்பெஷாலிட்டி காலேஜ்னு எடுத்திட வேண்டியது தான்” என்று ஸ்ரீஸ்ரீ சொல்லிக்கொண்டிருக்கும்போது ஆற்றுக்குப் போன கேமராமேனும், அவனுடன் போயிருந்த பையன்களும் வந்தார்கள்.
“என்னாச்சு?” என்று ஸ்ரீஸ்ரீ கேட்டான்.
“ஆறு ஒண்ணுதான் சார் இருக்கு. மத்தபடி ஒண்ணும் இல்லெ சார்” என்று கேமராமேன் சொன்னான்.
“ஆறோட லொகேசன் எப்பிடி?”
“சூப்பர் சார்.”
“ஷýட் பண்ணினா எப்பிடி இருக்கும்?”
“சூப்பரா இருக்கும் சார்.”
“அப்பிடின்னா வந்ததுக்கு ஆத்தயாவது எடுங்க. பின்னாடி எதுக்காவது பயன்படுத்திக்கலாம். கிளம்புங்க. டயமில்லெ” என்று சொன்னதும் கேமரா மேனும் மற்ற மூன்று பையன்களும் ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
ஸ்ரீஸ்ரீ சிறிது நேரம் தெருவையே பார்த்துக்கொண்டிருந்தான். என்ன நினைத்தானோ “வா. நாம்பளும் போவலாம்” என்று சொல்லிவிட்டு ஸ்ரீஸ்ரீ நடக்க ஆரம்பித்தான். அவனோடு ராமுவும் சேர்ந்து நடந்தான். சிறிது தூரம் வந்த பிறகு தயக்கத்துடன் ராமு “நான் சொன்ன கதெய எடுக்க முடியாதா?” என்று சிறுபிள்ளை மாதிரி கேட்டான்.
“உண்மய அப்பிடியே காட்டுனா யாரும் பாக்க மாட்டாங்க. இல்லா தத இருக்கிற மாரி மட்டுமில்லெ, நம்புற மாரியும் காட்டணும். அதெயும் சாதாரணமாக் காட்டக் கூடாது. நிலநடுக்கம் ஏற்பட்ட மாரி, சுனாமி வந்த மாரி, ஊரே தீப்பத்தி எரிஞ்சிட்ட மாரி, அசாதாரணமாக் காட்டணும். ரோட் டுல நிக்குற புளியமரத்தக் காட்டுனாகூட மர்மப் பிரதேசத்துக்குள்ளார இருக்கிற மரம் மாரி காட்டணும். அப்பத்தான் சனங்க பாப்பாங்க. புரியுதா?” என்று ஸ்ரீஸ்ரீ கேட்டான்.
“புரியுது, மாப்ள.”
“மழக் காலத்திலெ மழ மோசமின்னும், வெயில் காலத்திலெ வெயில் மோசமின்னும் சனங்கள நம்ப வைக்கணும். அதெ அவுங்க வாயாலியே சொல்ல வைக்கணும். எப்பவுமே பத்தல, மோசமா இருக்குன்னுதான் சொல்ல ணும்-, காட்டணும். எதெக் காட்டுனாலும், எதெச் சொன்னாலும் பதட்ட மான சூழல் நிலவுற மாரி, பரபரப்பான சூழல் நிலவுற மாரிதான் காட்ட ணும். என்னாச்சோ, ஏதோச்சோன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்த பாக்கறவங்க கிட்டெ தூண்டிக்கிட்டே இருக்கணும். பாக்கறவங்களோட கவனம் ஒம் மேல, புராகிராம் மேல, டி.வி. மேல இருக்கிறவரைக்கும்தான் பணம், புகழ். மாறிடிச்சின்னா எல்லாம் குளோஸ். இதான் மீடியாவோட எத்திக்ஸ். வ்யூவர்ஸோட கவனம் தன் டி.வி. மேல இருக்கணும்ங்கிறதுதான் எல்லா டி.வி.க்காரங்க நோக்கமும். அதுக்குத்தான் இந்தப் போராட்டம், அவசரம்” என்று சொன்ன ஸ்ரீஸ்ரீ லேசாகச் சிரித்தான். வலதுபுறம் இருந்த ஆவாரம் செடியிலிருந்த பூவைப் பறித்து முகர்ந்துபார்த்துவிட்டு “என்ன, எங்க பாத்தாலும் ஆவாரம் செடியா இருக்கு?” என்று கேட்டான்.
“ஊர்ப் பூராவும் ஆவாரம் செடிதான். அதெ வுட்டா நுணா மரம்தான் நிக்கும். இந்த ஊருல ஆறு இருக்குன்னுதான் பேரு. தண்ணீயே வராது. மலட் டாறு. சுத்தமான வறப்பட்டிக்காடு” என்று சோர்வாகச் சொன்னான் ராமு. பிறகு திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி “டி.வி.யப் பத்தி ஏதோ சொன் னியே?” என்று கேட்டான்.
“ஓட்டப் பந்தயத்துலெ யாருக்குப் பரிசு தராங்க?” என்று ராமுவின் பக்கம் திரும்பிக் கேட்டான்.
“முதல்ல ஓடுறவனுக்குத்தான்.”
“அந்த மாரிதான் மீடியாவும். எந்த டி.வி.யில, எந்த புரோகிராம சனங்க அதிகமாப் பாக்குறாங்களோ அந்த டி.வி.க்குத்தான் ஸ்பான்சர்ஸ் அதிகம். சனங்க எவ்வளவு பாக்குறாங்களோ அவ்வளவு பணம் வரும். அதனாலதான் ஒவ்வொரு டி.வி.க்காரனும் புதுப்புது விசயமாத் தேடி ஓடிக்கிட்டே இருக் காங்க. முன்னால ஓடஓட, பணம் வந்துகிட்டே இருக்கும். முன்னால ஓடுற குதிரமேல பந்தயம் கட்டுறதில்லியா, அந்த மாரிதான் ஸ்பான்சர்ஸ்.”
“புதுசா இருக்கு மாப்ள.”
“நீ வேற. ஒவ்வொரு டி.வி. சேனலுமே ஓட்டப் பந்தயக் குதிர மாரிதான். முன்னாடி ஓடுற குதிரமேல ஸ்பான்சர்ஸ் மட்டுமில்லெ, இப்ப சனங்களும் பணம் கட்டுறாங்க. பல டி.விங்க இப்ப ஷேர் மார்க்கெட்டுல வந்துடுச்சி. அதிக வ்யூவர்ஸ் இருக்கற டி.வி. சேனல் ஷேர் மார்க்கட்டுல அதிக வெல விக்கும். டி.வி. ஷேர்ஸ் வாங்கத்தான் சனங்க இப்ப அலமோதுறாங்க, தெரியுமா? ‘தமிழர்களின் உயிர்நாடி’ டி.வி.யில நான் எடுத்த ‘முதல் காதலும் முதல் உடலுறவும்’ங்கிற ஷோ ஒளிபரப்பு ஆன பிறகுதான் அந்த டி.வி.யோட டி.ஆர்.பி. ரேட்டிங் வானத்தத் தொட்டுச்சி. ஒடனே ஷேர் மார்க்கெட்டுல விட்டாங்க. மொத்த ஷேர்சும் ஒரு மணி நேரத்திலெ காலி. புரியுதா? அந்த மாரி புது ஐடியாவா கொடு. ஆடு திருடன் கதெ, கோழித் திருடன், கோழி முட்டத் திருடன் கதென்னு சொல்லிக்கிட்டு திரியாத” என்று சொல்லிவிட்டு ஸ்ரீஸ்ரீ சிரித்தான். “கிளைமேட் நல்லாயிருக்கு. வெயிலே இல்லெ.”
“நீ வந்திருக்கிறல்ல. அதான்” என்று சொல்லிச் சிரித்தான் ராமு.
ஆற்றைப் பார்த்ததுமே “சூப்பர், சூப்பர்” என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தான் ஸ்ரீஸ்ரீ. மணலை அள்ளிஅள்ளிப் பார்த்தான். மணலை அள்ளி வானத்தை நோக்கி விட்டெறிந்தான். காலால் மணலை எற்றினான். சிறுபிள்ளை மாதிரி முன்னோக்கிச் சிறிது தூரம் ஓடினான். அப்படியே முன் னோக்கி நடக்க ஆரம்பித்தான். வெகு நேரத்திற்குப் பிறகு இப்போதுதான் உற்சாகமாக ஸ்ரீஸ்ரீ இருப்பதாக ராமுவுக்குத் தோன்றியது. ஸ்ரீஸ்ரீயைப் பின் தொடர்ந்து செல்லாமல், ஆற்றைப் பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருந்த கேமராமேனை நோக்கி ராமு நடக்க ஆரம்பித்தான்.
வெகு நேரம் கழித்துதான் ஸ்ரீஸ்ரீ திரும்பிவந்தான். வந்த வேகத்திலேயே “இந்த ஆத்தப் பத்தியே ஒரு ஸ்டோரி உருவாக்கிட்டா என்ன?” என்று கேட் டான். கேமராமேனும் மற்ற மூன்று பையன்களும் “செய்யலாம்” என்று சொன்னார்கள். ஒன்றும் புரியாமல் விழித்த ராமு “எப்பிடி, மாப்ள?” என்று கேட்டான்.
“கதெ கெடைக்கல. அதனாலே நாம்பளே ஒரு கதெய உருவாக்கிட வேண்டியதுதான்.” என்று உற்சாகமாகச் சொன்னான் ஸ்ரீஸ்ரீ.
“என்னா கதெ?”
“இந்த ஊருக்கு எப்பிடி மணலூருன்னு பேரு வந்துச்சிங்கிற கதெ.”
“எனக்குப் புரியல” என்று ராமு சொன்னான்.
“இப்ப நான் ஒரு கதெ சொல்லப்போறன். நல்லா இருக்கா இல்லி யான்னு சொல்லு” என்று சொல்லிவிட்டு கேமராமேனிடம் “கேமராவ ரெடி பண்ணு. பேக்கிரவுண்ட நல்லா வச்சிக்க. நான் எந்த எடத்திலெ நின்னு பேசணுமின்னு சொல்லு. ஒவ்வொரு ஷாட்டும் டிஃபரண்டா இருக்கணும். காத்து அடிக்கும்போது மணல் பறக்குதில்லியா. நான் பேசுறதுக்கு பின்னாடி மணல் பறக்கிற மாரி இருக்கணும். அதுதான் முக்கியம்.”
“ஓ.கே. சார்.”
“யே, இங்க வா” என்று சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த குள்ளமான பையனைக் கூப்பிட்டு “பப்ளிக் என்ன சொல்றாங்கன்னு இப்ப கேக்க லாம்ன்னு நான் சொன்னதும் நீ கேமராவுக்கு முன்னால வந்து பேசணும். எதெப் பேசணுமின்னாலும் பேசு. வாய் அசச்சிக்கிட்டே இருக்கணும். இதெயே ஊருக்குள்ள ஷýட் பண்ணும்போது பப்ளிக்க நீ நிறுத்தணும் புரியுதா?” என்று அதிகாரத் தோரணையோடு கேட்டான். பையன் பணிவாக “ஓ.கே. டன் சார்” என்று சொன்னான்.
ட்ரைபாடில் கேமராவைப் பொருத்திவிட்டு எந்தக் கோணம் சரியாக இருக்கும் என்று சரிபார்த்துவிட்டு “ஓ.கே.சார்” என்று கேமராமேன் சொன்ன தும், கேமராவுக்கு முன் வந்து “எங்க நிக்கணும்?” என்று ஸ்ரீஸ்ரீ கேட்டான். கேமராமேன் சொன்ன இடத்தில் நின்றான் ஸ்ரீஸ்ரீ. அப்போது உயரமாகவும், சிகப்பாகவும் இருந்த பையன் “ஓ.கே.ரெடியா? ரெடியா?” என்று சொல்லி வைத்தது மாதிரி கேட்டான். உடனே கேமராமேன் “ரெடி” என்று சொன் னான். ஸ்ரீஸ்ரீயும் “ரெடி” என்று சொன்னான்.
ஸ்ரீஸ்ரீ பேச ஆரம்பித்தான்.
“ ‘இந்த வாரம் இந்த ஊர் நிகழ்ச்சி’யில் நாம் இப்போது பார்ப்பது மணலூர் என்கிற கிராமம். இந்த ஊருக்கு மணலூர் என்கிற பெயர் வருவதற் குக் காரணம் ஒரு சித்தரின் சாபம்தான் என்று உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர். போன நூற்றாண்டில் அதிபயங்கரமான ஒரு சித்தர் பசியோடும், தாகத் தோடும் வந்திருக்கிறார். அவருடைய தோற்றம் படுகோரமாக இருந்திருக் கிறது. பல ஆண்டுகள் குகைக்குள்ளேயே வசித்ததால் அவருக்குப் பேசவே முடியாமல் இருந்திருக்கிறது. சடை, முடி, தாடி என்று அவருடைய தோற்றம் அதிபயங்கரமானதாக இருந்திருக்கிறது. அவருடைய தோற்றத்தைப் பார்த் துப் பிள்ளை பிடிக்கத்தான் வந்திருப்பதாக எண்ணிய உள்ளுர் மக்கள் சித் தரை அடித்து விரட்டிக்கொண்டே போய் ஊருக்குத் தெற்கில் இருக்கும் ஆற் றில் வைத்து அடித்திருக்கிறார்கள். அதோடு மணலை அள்ளிஅள்ளி சித்தரின் மேல் வீசியிருக்கிறார்கள். மணலால் அடித்த அடியைத் தாங்க முடியாத சித்தர் கோபமடைந்து, தன் பக்கம் வீசிய மணலை மக்கள் பக்கம் திருப்பி அடிக்க வைத்திருக்கிறார், அதோடு மணலை மழையாகப் பொழிய வைத்திருக் கிறார். மணல் பொழிய ஆரம்பித்ததும் மக்கள் பயந்துபோய் ஊருக்குள் ஓடிவந்திருக்கிறார்கள். மணல் மழையைப் பார்த்த சிலருக்கு அப்போதே கண் பார்வை போய்விட்டதாகக் கூறுகிறார்கள். அதோடு மணல் மழையைப் பார்த்தவர்களில் ஒருவர்கூட இப்போது உயிருடன் இல்லை. ஆனால் அவர் களுடைய வாரிசுகள் இருக்கிறார்கள். எப்படி மணல் மழை பொழிந்தது, பார்வையை இழந்த பிறகு என்ன நடந்தது என்பது பற்றியும் இப்போது கேட்கலாம்” என்று ஸ்ரீஸ்ரீ சொன்னதும் கறுத்த, குள்ளமான பையன் வந்து கேமராவுக்கு முன் பேசுவது மாதிரி வாயை அசைக்க ஆரம்பித்தான். அவன் வாய் அசைப்பதை நிறுத்தியதும் கேமரா ஸ்ரீஸ்ரீ பக்கம் திரும்பியது.
“ஆத்துக்குறிச்சி என்றிருந்த இந்த ஊரின் பெயர் மணல் பொழிவுக்குப் பிறகு மணலூர் என்றாகிவிட்டது. இப்போது நாம் நின்றுகொண்டிருப்பது மணல் மழையாகப் பெய்ந்த ஆற்றில்தான். இரவும் பகலும் இந்த ஆற்றிலுள்ள மணல் பறந்துகொண்டே இருக்கிறது. இது புது அதிசயமாக இருக்கிறது. மணல் பறந்துகொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும். மாலை ஆறு மணி யிலிருந்து காலை ஆறு மணிவரை உள்ளுர்வாசிகள் யாரும் ஆற்றுப் பக்கம் போவதில்லை. மீறிப் போனால் மணல் மழையில் சிக்கிச் செத்துவிடுவோம் என்று நம்புகிறார்கள். மணல் மழை பொழிவது பொய் என்று சொல்லிப் பந் தயம் கட்டிக்கொண்டு ஆற்றுக்குப் போன நான்கு இளைஞர்கள் ஆற்றிலேயே செத்துக் கிடந்ததாகவும் சொல்கிறார்கள். அது குறித்து ஆற்றில் இறந்துபோன இளைஞர்களின் உறவினர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது கேட்கலாம்.”
கறுத்த, குள்ளமான பையனின் பக்கம் கேமரா திரும்பியது. அவன் போதுமான அளவுக்கு வாயை அசைத்தான். பிறகு மீண்டும் பேச ஆரம்பித் தான் ஸ்ரீஸ்ரீ.
“மணல் மழை பொழிய ஆரம்பித்த பிறகு மழை குறைந்திருக்கிறது. ஆற்றில் வெள்ளம் வருவது நின்றுபோயிருக்கிறது. சித்தரை அடித்தவர்கள் வரி சையாக இறந்திருக்கிறார்கள். ஊருக்குள் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட் டத்தில் இது சித்தரின் சாபம் என்று புரிந்துகொண்ட மக்கள் சித்தரை ஆற்றில் வைத்து மணலால் எந்த இடத்தில் அடித்தார்களோ அந்த இடத்தில் சித்தரை அடித்த அதே நாளில் ஒவ்வொரு ஆண்டும் பன்றியைக் காவுகொடுத்துப் பூஜை செய்து வணங்குகிறார்கள். மற்ற சாமிகளுக்கு ஆடு, கோழி என்று காவு கொடுத்துப் படையல் இடுவார்கள். ஆனால் இங்கு பன்றி மட்டுமே காவு கொடுக்கிறார்கள். மணலாலேயே சித்தரைப் போன்று உருவம் செய்து வணங்குகிறார்கள். சித்தரின் பெயர் தெரியாததால் மணல்சாமி என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆற்றில் நடக்கும் திருவிழாவை மணல் சாமித் திருவிழா என்றுதான் சொல்கிறார்கள். எட்டு நாள் தூய்மையாக இருந்து சித்தரின் மணல் உருவத்தை உருவாக்குகிறார்கள். மணல்சாமிக்குக் காவுகொடுப்பதற்காகச் சாதிமத வேறுபாடின்றி ஒவ்வொரு வீட்டிலும் மணல்சாமிப் பன்றி என்று ஒன்றை வளர்க்கிறார்கள். திருவிழாவின்போது அந்தப் பன்றியை மட்டுமே காவுகொடுக்கிறார்கள். உள்ளூர் சாராயத்தை வைத்துப் படைக்காமல் வெளிநாட்டுச் சரக்குகளை மட்டுமே வைத்துப் படைக்கிறார்கள். மணல்சாமியின் பன்றி என்பதற்கு அடையாளமாகப் பன்றியின் ஒரு பக்கக் காது அறுக்கப்பட்டிருக்கும். அந்தப் பன்றிக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. வயலில்கூட அது மேயலாம். அதை யாரும் அடிக்க மாட்டார்கள். மணல்சாமியின் திருவிழாவில் பிள்ளைகளுக்கு மொட்டை போடுதல், பெயர் சூட்டுதல் என்று பல வேண்டுதல்கள் நடக்கும். அதோடு கல்யாணமாகாத பெண்களும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களும் தனியாக ஒரு பன்றியை வளர்த்து மணல்சாமிக்குப் படையலிட்டால் கல்யாணம் நடக்கும், குழந்தை பிறக்கும் என்று இந்தச் சுற்றுவட்டாரத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது பொய் இல்லை, உண்மை என்று கற்பூரத்தை அணைத்துப் பலர் சத்தியம் செய்துகாட்டுகிறார்கள். கல்யாணமாகி ஏழு வரு டம் கழித்து மணல்சாமியிடம் வேண்டிக்கொண்டு, பன்றியைக் காவு கொடுத்த பிறகே தனக்குக் குழந்தை பிறந்தது என்று ஒரு பெண் கூறுகிறார். இதை அவரிடமே கேட்கலாம்.”
கறுத்த, குள்ளமான பையனுக்குப் பதில் கேமரா உயரமாக இருந்த செவத்த பையன் பக்கம் திரும்பியது. அவன் வேகமாகவும், அவசரமாகவும் வாயை அசைத்தான். அவன் வாயை மூடியதும் ஸ்ரீஸ்ரீ வாயைத் திறந்தான். அப்போது கேமராமேன் “நடந்துகிட்டே பேசுங்க” என்று சொன்னான். அவன் சொன்ன மாதிரியே நடந்துகொண்டே பேசினான் ஸ்ரீஸ்ரீ.
“மணல்சாமித் திருவிழாவின்போது உள்ளுர்வாசிகள் யாரும் வெளியூர் செல்ல மாட்டார்கள். மீறிப் போனாலும் இரவுக்குள் ஊருக்கு வந்துவிடுவார் கள். அதே மாதிரி பஞ்சம்பிழைக்க பம்பாய், பெங்களுர், கேரளா என்று போயிருந்தவர்களும் தவறாமல் திருவிழாவுக்கு வந்துவிடுவார்கள். அவ்வாறு வரத் தவறினால் தங்களுடைய குடும்பத்தில் கெட்ட காரியங்கள் நடந்து விடும் என்று நம்புகிறார்கள். திருவிழாவுக்கு வரத் தவறியவர்களின் குடும்பத் தில் என்னென்ன கெட்ட காரியங்கள் நடந்தன என்பதைப் பற்றி பாதிக்கப் பட்டவர் சொல்வதைக் கேட்கலாம்.”
“-------”
“சித்தரோட சாபம் காலம்காலமாகத் தொடர்வதாகவும், சித்தரை அடித்ததிலிருந்து வெள்ளம் வராமல் ஆறு, மலட்டாறாக மாறிவிட்டதாகவும் கூறுகிறார்கள். சித்தரின் சாபத்திலிருந்து விடுபட ஆற்றில் மணல்சாமித் திரு விழாவை நடத்துவதாகவும், மணலை உருவம் செய்து வணங்குவதாகவும் கூறுகிறார்கள். அப்படி வணங்கும்போது சித்தரின் சாபத்திலிருந்து விடுபட முடியும் என்றும், சரியான மழை பொழிந்து ஊர் செழிப்படையும் என்றும் நம்புகிறார்கள். இந்த ஊரைப் பொருத்தவரை ஆறும் மணலும்தான் சாமி, தெய்வம். ஊரிலும், ஊரைச் சுற்றிய பல பகுதிகளிலும் மழை பெய்தாலும் ஆற்றுக்குள் மட்டும் மழை பெய்வதில்லை என்பதுதான் அதிசயம். இவ் வளவு நீண்ட காலமாகப் பன்றி காவுகொடுத்தும், மதுவகைகளை வைத்துப் படைத்து வணங்கிய பிறகும் சித்தரின் சாபம் நீங்கியது மாதிரி தெரிய வில்லை. சித்தரின் சாபம் நீங்குமா, மழை பொழியுமா என்பது போகபோகத் தான் தெரியும். மணல்சாமித் திருவிழாவைப் பார்ப்பதற்காகச் சுற்றுவட் டாரத்திலுள்ள பல கிராமங்களிலிருந்து பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடு வார்கள். அப்போது மணலூரில் பரபரப்பான, பதட்டமான, அசாதாரணச் சூழல் நிலவும் என்றும் ஊரார் கூறுகிறார்கள். திருவிழாவின்போது போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்வதில்லை என்று குற்றம் சுமத்துகிறார்கள். பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடுகிற நேரத்தில் தீவிரவாத அமைப்புகளும், பன்னாட்டுத் தீவிரவாத அமைப்புகளும் ஊடுருவி நாசகாரச் செயல்களைச் செய்யக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. இந்தப் பகுதியில் மணல்சாமியின் திருவிழாதான் பெரிய அளவில் நடக்கக்கூடியது. பரபரப் பான, பதட்டமான, அசாதாரணமான சூழல் நிலவும்போது மக்களின் அச்சத் தைப் போக்க வேண்டியது அரசின் கடமை. திருவிழாவில் எப்படிப்பட்ட அசாதாரணமான சூழல் நிலவும் என்பதை உள்ளுர்வாசியிடம் இப்போது கேட்கலாம்.”
“-------”
ஸ்ரீஸ்ரீ மீண்டும் நடந்துகொண்டே பேசினான்.
“இதே போன்று அடுத்த வாரம் ‘இந்த வாரம் - இந்த ஊர்’ நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே அதுவும் நிர்வாணமாக நின்றுகொண்டு தேர் இழுக்கும் அதிசய கிராமம் ஒன்றைப் பார்க்கலாம்” என்று ஸ்ரீஸ்ரீ பேசி முடித்ததும், அவ னுடைய உதவியாளர்களும் கேமராமேனும் ஓடிவந்து அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். “சூப்பர் சார்” என்று ஓயாமல் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.
“ஓ.கே.வா?” என்று ஸ்ரீஸ்ரீ கேட்டான்.
“ஓ.கே. சார். சூப்பர் சூப்பர் சார். இதெ அப்பிடியே டெலிகாஸ்ட் செஞ்சா பிச்சிக்கிட்டு போவும் சார். பிரமாதமான பேரு கெடச்சிடும் சார். புது தாட்டு சார். இந்த ஒரு நிகழ்ச்சிய வச்சே ஒரு வருசம் அக்ரிமண்ட் போட்டுடலாம் சார். ஓகோன்னு போவும் சார்” என்று கேமராமேன் சொன் னான். அவன் சொன்னது பொய்யில்லை என்று ராமு நம்பினான். ஸ்ரீஸ்ரீயின் பேச்சைக் கேட்டு அசந்துபோனான். அவன் பெரிய அறிவாளிதான் என்ற எண்ணம் தோன்றியது.
“ஓ.கே. நேரமாகிட்டே இருக்கு. இரண்டு ஆம்பள, மூணு நாலு பொம் பளய ரெடி பண்ணுங்க. ஊருக்குள்ளாரப் போய் ஆட்கள ரெடி பண்ணுங்க” என்று சொன்னதும் மூன்று பையன்களும் “ஓ.கே. சார்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். கேமராமேன் ட்ரைபாடிலிருந்து கேமராவைக் கழற்றினான்.
“இப்பவே ஷýட்டிங்க பண்ணப்போறியா மாப்ள?” என்று ராமு கேட்டான்.
“ஆமாம். ஸ்டோரி ரெடியாயிடிச்சில்லெ.”
“நீ சொன்ன கதெ நல்லாத்தான் இருக்கு. எடுத்தா சூப்பராத்தான் இருக் கும். ஆனா பயமா இருக்கு. ஆத்திலெ பொங்க வைக்கிறது மட்டும்தான் நெசம்.”
“நான் இன்னிக்கே எடுத்தாவணும். என்னெ மாரி கொறஞ்சது ஐநூறு பேராவது இந்த மாரி புது விசயம் கெடக்காதான்னு அலஞ்சிக்கிட்டிருப்பான். அவன்ல ஒருத்தன் புது மேட்டரக் கொடுக்கிறதுக்கு முன்னாடி நான் கொடுக் கணும். அப்பத்தான் பீல்டுல நிக்க முடியும்.”
“ஊருல வம்புதும்பாயிடும், மாப்ள”
“ஒண்ணுமே நடக்காது. கேமராவுக்கு முன்னால சனங்கள நிறுத்திட்டா போதும். நாம்ப நெனக்கிறத, விரும்புறத, சனங்க நெனக்கறதா, சனங்க விரும்பு றதா, அவுங்க வாயாலியே சொல்ல வச்சிடலாம். டி.வி.யில தங்களோட முகத்தப் பாக்குறதுக்காக சனங்க என்ன வேணுமின்னாலும் செய்வாங்க. டி.வி. நிகழ்ச்சி ஒவ்வொண்ணுக்கும் சனங்க போன் பண்றத பார்த்ததில்லியா? ‘ஆறு மாசமா, ஒரு வருசமா ட்ரை பண்றன். இன்னிக்கிதான் லைன் கெடச்சது. ஒங்ககிட்ட பேசறதுதான் என் வாழ்க்கையோட கனவு சார்’னு பொண்ணுங்க பேசுறதக் கேட்டதில்லியா?”
“அதெல்லாம் உண்மைதான். ‘உங்களில் யார் அழகி’ன்னு நீ நடத்துன டாக் ஷோவுல கலந்துக்க ஏழு மாசம் எம் பொண்டாட்டி ட்ரை பண்ணுனா. கடசிவர வாய்ப்புக் கெடைக்கல. அப்ப ஒன் நெம்பர் எங்கிட்ட இல்ல, மாப்ள.”
“இன்னிக்கி எடுத்திடலாம், வுடு. ஒன்னயும், கஸ்தூரியயும், ஒம் மவளு வளயுமே பப்ளிக்கா மாத்திடலாம். கவலப்படாதடா”
“அதுக்கு நான் கவலப்படல. ஊர நெனச்சாத்தான் கவலயா இருக்கு.”
“இப்ப நான் பேசுனது. ஒரு மாதிரிக்காகப் பேசுனது. ஐடியா வந்துடுச்சி. விஷûவல்ஸ் எடுத்தாச்சு. இனிமேதான் கதெய டெவலப் செய்யணும். கதெ வேற விதமாவும் மாறலாம். ஒனக்குப் பயமா இருந்தா சொல்லு. ஒரு புத்தகத் திலெ படிச்சன்னு ஊருல சொல்லிடலாம்.” என்று சொல்லி ஸ்ரீஸ்ரீ சிரித்தான்.
“பியுட்டிபுல் சார். ஒரு வெள்ளக்காரன் ஒரு புத்தகத்தில எழுதியிருக் கான்னு சொல்லிடலாம் சார்” என்று கேமராமேன் சொன்னான்.
“சூப்பர். அப்பிடியே சொல்லிடலாம்” என்று சொன்ன ஸ்ரீஸ்ரீ ராமு வின் பக்கம் திரும்பிப் பார்த்து “கேமராமேன் சொன்னபடியே சொல்லிட லாம்” என்று சொன்னான்.
“இது பரவாயில்லெ” என்று அரைகுறை மனதுடன் சொன்னான் ராமு.
“நான் பேசுனது எல்லாம் கரெக்ட்டா பதிவாயிருக்கா? விஷûவல்ஸ் நல்லா இருக்கா? பேக்கிரவுண்டு எல்லாம் எப்பிடி இருக்கு?” என்று கேட்டு விட்டு “கிளம்பு, போவலாம்” என்று சொன்னான் ஸ்ரீஸ்ரீ.
“ஒரு முறை பாத்திருங்க சார்”
“வாணாம். நேரமில்லெ. இதெத் தனியா வச்சிக்க. நான் சனங்ககிட்ட பேசுறதத் தனியா எடு. ரெண்டயும் கம்பேர் பண்ணு. எது நல்லாயிருக்கோ அதெ வச்சிக்க. எந்தெந்த எடத்திலெ வீக்கா இருக்குன்னு பாரு. ரீடேக் எடுத் திடலாம். கதெய மைண்டுல வச்சிக்க. மனசுக்குள்ளியே டெவலப் பண்ணு. நான் மிஸ் பண்ணீட்டா. ஞாபகப்படுத்து. பப்ளிக்க எந்தெந்த எடத்தில சேக் கணும்னு பாரு. எந்தெந்த எடத்திலெ பிரேக் வரணும்னு மைண்டுல வச்சிக்க” என்று கறாராகப் பேசினான் ஸ்ரீஸ்ரீ.
“ஓ.கே.சார்”
மூவரும் நடக்க ஆரம்பித்தனர்.
“ஷýட்டிங் பண்றதுக்கு முன்னாடி பஞ்சாயத்துத் தலவர்கிட்டெ ஒரு வார்த்த சொல்லிடலாமா?” என்று தயக்கத்துடன் கேட்டான் ராமு.
“ஒன் ஐடியா சூப்பரா இருக்குடா. பஞ்சாயத்துத் தலவரயே கதெயச் சொல்லவச்சிடலாம். கதெக்கி வலு சேந்துடும்” என்று உற்சாகமாகச் சொன் னான் ஸ்ரீஸ்ரீ
“நீ நெனக்கிற மாரியான ஆளில்லெ. கொஞ்சம் கிறுக்கு.”
கடகடவென்று வாய்விட்டுச் சிரித்தான் ஸ்ரீஸ்ரீ. பிறகு “எப்பிடிப்பட்ட கிறுக்கா இருந்தாலும், முறுக்கா இருந்தாலும் நான் பாத்துக்கிறன். சிங்கம், புலி, கரடி, பாம்பு எல்லாம் கேமரா முன்னால வந்தா படுத்துக்கும்ண்டா. டி.வி.யில மூஞ்சக் காட்ட ஆசப்படாத ஆளு இன்னம் பூமியில பொறக்க லடா” என்று திமிராக ஸ்ரீஸ்ரீ சொன்னது ராமுவுக்குப் பிடிக்கவில்லை. ஆறு வருசம் காலேஜில் ஒன்றாகப் படித்தவன். ரூம் மேட். எப்படி முகத்தை முறித் துப் பேசுவது என்று யோசித்த ராமு “எங்க ஊரு சனங்கள அப்பிடி எட போடாத” என்று வீம்பாகச் சொன்னான். ஸ்ரீஸ்ரீ சிரித்தான்.
“எதுக்குச் சிரிக்கிற?” என்று ராமு கேட்டான்.
“ஒனக்கு மீடியாவோட பவர் தெரியல. கேமராவ நடுத்தெருவுல நிறுத் தினதும் ஈசல் மாதிரி சனங்க கேமராவச் சுத்திவந்து விழறாங்களா இல்லி யான்னு பாரு. இது சத்தியம். பந்தயமும் கட்டுறன். போட்டிபோட்டுக்கிட்டு சனங்க ஓடி வருவாங்க. நான் மீடியால இருவது வருசம் இருந்திருக்கிறன். என் கணக்குத்தான் ஜெயிக்கும் பாரு.”
“ஒன் எண்ணம் தப்பு, மாப்ள”
“போடா மயிரு. நான் சொல்றது நிஜமா பொய்யான்னு அப்பறம் சொல்லு” என்று சொன்ன ஸ்ரீஸ்ரீக்குக் கோபம் வந்துவிட்டது. ராமுவின் கையைப் பிடித்து நிறுத்தி “ஒவ்வொருத்தனும் கழுத்துலெ கேமராவத் தூக்கிக் கிட்டு அலயுறானே, எதுக்குடா? இன்னம் சொல்லப்போனா ஒவ்வொருத்த னும் கேமரா உள்ள செல்போனா வாங்குறானே, எதுக்குடா?” என்று வேக மாக கேட்டான். ராமு எதுவும் பேசவில்லை. மீண்டும் நடக்க ஆரம்பித்த ஸ்ரீஸ்ரீ, “மீடியாவோட பவர, கேமராவோட பவரப் பத்தி சொல்றன் கேளு. போன மாசம் திடீர்னு ஒரு நாளு ‘உண்மையின் உரைகல்’ டி.வி.க்காரன் ஒரு மணி நேரத்துக்கு ஒரு புரோகிராம் வேணுமின்னு கேட்டான். அலஞ்சி அலஞ்சிப் பாத்தன் ஒண்ணும் சிக்கல. அப்ப கிளி ஜோசியக்காரன் ஒருத்தன் ரோட்டுல போனான். ஒண்ணுத்துக்கும் ஒதவாத அந்தப் பயலப் புடிச்சி ‘சாம் பிராணி சாமியாரின் அற்புதங்களும் அதிசயங்களும்’ன்னு சொல்லி ஒரு மணி நேரத்துக்கான புரோகிராம எடுத்துக்கொடுத்தன். பீடி, சிகரட்டுக்கே அல்லா டிக்கிட்டிருந்த அந்தப் பய நான் எடுத்த நிகழ்ச்சி ஒளிபரப்பான ஒரு மாசத் திலேயே ‘ஆன்மீகப் பேரொளி’ன்னு பேரு வச்சிக்கிட்டு ஒவ்வொரு பத்திரி கையா, ஒவ்வொரு டி.வி.யா பேட்டி கொடுத்துக்கிட்டிருக்கான். ஒரு நாளு அவனப் பாக்கப் போனா எங்கிட்டியே அப்பாய்ண்ட்மண்ட் இருந்தாத்தான் பாக்க முடியும்ன்னு சொல்றான். என்ன செய்யுறது, இதான் மீடியாவோட பவர். மீடியா நெனச்சா யார வேணுமின்னாலும் மேல கொண்டுபோவும். அதே மாதிரி எப்படிப்பட்டவனயும் கீழ எறக்கிடும்.”
“எல்லாம் சரிதான், மாப்ள. நான் இந்த ஊருல குடியிருக்கணுமா வாணாமா?”
“அடெ லூசுப் பயல. எந்த ஒலகத்திலெடா இருக்க நீ? ‘தமிழர்களின் உயிர்நாடி’ டி.வி.யில் வந்துச்சே ‘முதல் காதலும் முதல் உடலுறவும் - சுய அனுபவங்கள்’ நிகழ்ச்சி. அதெ நாந்தான் ஷýட் பண்ணிக்கொடுத்தன். அந்த ஒரு ஷோதான் மொத்த மீடியாக்காரனையும் எம் பக்கம் திரும்பிப்பாக்க வச்சிச்சி. தொடர்ந்து எடுக்கச் சொல்லி எவ்வளவு ஸ்பான்சர்ஸ் வந்துச்சி தெரி யுமா? அந்த ஷோ ஒரு வருசம் போச்சி. இதெப் பாத்திட்டுத்தான் ‘தமிழ் மக்கள்’ டி.வி.க்காரன் ‘திருமணத்திற்கு முன் உடலுறவு நல்லதா கெட்டதா’ங்
கிற ஷோவ ஆரம்பிச்சான் தெரியுமா?”
“தெரியாது. ஆனா நீ எடுக்கிற நிகழ்ச்சின்னாலே நானும் எம் பொண் டாட்டியும் உசுர வுட்டுப் பாப்பம். அப்பிடியே நிஜம் மாரி இருக்கும்.”
“நான் எடுத்த புரோகிராமிலேயே ‘அடிச்சா ஒரு கோடி அடிக்கா விட்டால் தெருக்கோடி’ங்கிற நிகழ்ச்சிதான் பிச்சிக்கிட்டுப் போச்சி. அதெப் பாத்திட்டு ‘ஆதித் தமிழன்’ங்கிற டி.வி.க்காரன் ‘வந்தால் பணம் - வராவிட் டால் பிணம்’ங்கிற ஷோவப் பெரிய சினிமா ஸ்டார வச்சி நடத்த ஆரம் பிச்சான்.”
“நீ சொல்றதெல்லாம் சரிதான் மாப்ள. எங்க ஊரோட கதெய மட்டும் கொஞ்சம் மாத்தி எடுக்க முடியாதா?” என்று ராமு கெஞ்சுவது மாதிரி கேட்ட தைக் காதில் வாங்காத ஸ்ரீஸ்ரீ “‘உங்களில் யார் அழகி’ங்கிற நிகழ்ச்சிய பாத் திருக்கியா? அது ஏற்படுத்தின தாக்கத்த இத்தன வருச சினிமாக்கூட ஏற் படுத்தல.”
“நீ காலேஜில படிக்கும்போதே சினிமா சினிமான்னுதான மாப்ள அலஞ்ச. அப்ப புரட்சிகரக் கவிதயெல்லாம் எழுதுவ. காலேஜிலியே நீ மேதாவி மாரிதான இருந்த” என்று ராமு சொன்னதும் ஸ்ரீஸ்ரீயின் முகம் மாறி விட்டது. குரலும் இறங்கிவிட்டது.
“புரட்சி பேசி, புரட்சிக் கவிதெ எழுதிதான்டா வீணாப்போனன். காலேஜில எழுதின எழுத்தோட நம்பிக்கயிலதான் ‘தாய் மண்ணே வணக்கம்’, ‘வரலாறு மறந்த வரலாறு’, ‘உலகம் எல்லாம் ஒரே மொழி’, ‘நிறம் மாறு கிறதா தமிழர்களின் வாழ்க்கை’, ‘தடம் புரளும் வரலாறு’ன்னு எடுத்தன். அத்தனயும் ஊத்திக்கிச்சி. அந்த அடியிலிருந்து எழுந்துவர ஏழு வருசமாச்சி. சோத்துக்கே லாட்ரி. படாத பாடு. டீ, சிகரெட்டுக்கே வழியில்லெ, ‘விதவை களின் காதல் பிரச்சினைகள்’னு ஒரு ஷோ எடுத்தன். மொத்தத் தமிழ்நாடே எம் பக்கம் திரும்பிப் பாத்துச்சி. மூணு நாலு சேனல்லிருந்து கூப்பிட்டாங்க. அக்ரிமண்ட் போட்டாங்க. அப்ப எடுத்ததுதான் ‘கல்லூரி பெண்களின் காதல் பிரச்சினைகள்’ங்கிற ஷோ. நல்லாப் போச்சி. பேரும் கெடச்சது. அப்புறம் தான் நான் கண்டிசன் போட்டன். என்னோட நிகழ்ச்சிய பிரைம் டயம்லதான் ஒளிபரப்பணுமின்னு. இல்லன்னா வணக்கம் தமிழகம், இன்று ஒரு செய்தி, காலை மலர் மாதிரியோ, கல்வி மலர், கல்விச் சோலை மாதிரியோ, இல் லன்னா இலக்கியவாதி, நவீனக் கூத்துக்காரன், அறிவாளி, பொருளாதார மேதை, ஷேர் மார்க்கெட் நிபுணர்கள்ன்னு போட்டு நேரத்த ஒப்பேத்துற டயத்தில போட்டுடுவாங்க. எல்லாத்துக்கும் மேல, ‘முதல் காதலும் முதல் உடலுறவும்’ங்கிற ஷோவுக்குப் பிறகுதான் காசு, காரு, பேரு, வீடு, பொண் டாட்டின்னு வந்துச்சி.”
“ஒன்னோட புரோகிராம்களப் பத்தித்தான் நான் வேல செய்யுற ஸ்கூல்ல இருக்கிற எல்லா டீச்சர்சும் பேசுவாங்க. லஞ்ச் டயம்ல ஒன்னெப் பத்தித்தான் பேச்சு ஓடும். கஸ்தூரி வேல செய்யுற ஸ்கூல்லயும் ஒன்னெப் பத் தித்தான் பேசுவாங்களாம். சொல்லுவா” என்று ராமு உற்சாகமாகச் சொன் னான்.
“எல்லாம் இப்பத்தான்டா. ஐஞ்சாறு வருசமா. நான் மொதமொதலா எடுத்து ‘ஆதித் தமிழன்’ங்கிற டி.வி.யிலெ ஒளிபரப்பான நிகழ்ச்சி கவர்மண் டோட இலவச ‘நிரோத்’ விளம்பரம்தான். அதுக்குப் பேரு ‘பார்க்க மறக்கா தீங்க’ங்கறது. அதெப் பாத்துட்டு ஒரு ஜட்டி பனியன் கம்பனிக்காரன் ‘ஜட்டி’ விளம்பரப் படம் எடுத்துதரச் சொன்னான். அப்பறம் அவனே பிரா, நைட்டி விளம்பரம் எடுத்துத்தரச் சொன்னான். அதுக்கடுத்து சோப்பு விளம்பரப் படம் எடுத்தன். இதெல்லாம் சோத்துக்குத்தான் வழிபண்ணுச்சி. இதுலயெல்லாம் பேரு வராது. அப்பறம் சேலத்து மலப் பக்கமா இருக்கிற ‘படிக்கட்டு சித்தர்’னு ஒருத்தன். அவனப் பத்தியும், அவனுடைய சித்து வேலைகள் எல்லாத்தயும் எடுத்துத்தரணுமின்னு கேட்டான். ஒரு மாசம் அந்த மலக் காட்டுக் குள்ளேயே தங்கி எடுத்துக்கொடுத்தன். சி.டி.ய வாங்கி ஒரு டி.வி.யில ரேட்டுப் பேசி அந்த சித்தரே காசக் கொடுத்து ஒளிப்பரப்ப வச்சிட்டான். ஆனா எனக்குப் பத்து காசு தரல. கேட்டதுக்கு ‘ஒனக்குப் போதுமான அளவுக்குச் சித்தர் அருளாசி வழங்கிட்டாரு. அந்த ஆசியால ரொம்ப மேல வருவ’ன்னு சொல்லி அவனோட சிஷ்யனுங்க துரத்திவுட்டுட்டானுங்க. சித்தர் இந்த மாரி பண்ணிட்டாருன்னு சொன்னப்ப சனங்களும் முக்கியப் பிரமுகர்களும் எங்களதான் அடிக்க வந்தாங்க” என்று சொல்லிச் சிரித்தான் ஸ்ரீஸ்ரீ. சிறிது நேரம் கழித்துத் தானாகவே “சித்தரோட அருளாசி எங்களுக்குக் கெடச்சதுங்கிறது உண்மதான். போதுமான அளவுக்குக் கெடச்சது” என்று சொல்லி மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான்.
“என்னடா சிரிக்கிற? என்னடா அருளாசி? நீதான் சாமி கும்பிடாத ஆளாச்சே.”
“அருளாசிங்கிறது சரக்கும், ஐயிட்டமும்” என்று சொல்லி மீண்டும் சிரித்தான் ஸ்ரீஸ்ரீ. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமு “அதெல்லாம் அங்க கெடைக்குமாடா?” என்று கேட்டான்.
“எந்த நாட்டுச் சரக்கு வேணும்? எந்த மாநிலத்துப் பொண்ணு வேணும்? எல்லாம் கெடைக்கும். அந்த ரெண்டும்தான் சித்தர் கொடுத்த அருளாசி. தாராளமாவே கொடுத்தாரு அருளாசிய” என்று சொல்லிச் சிரித்தான்.
“அப்படிலாம் சொல்லாத மாப்ள. அந்த சித்தர்னா என் பொண்டாட் டிக்கி உசுரு”
“எல்லா சாமியார்ப் பசங்களும் அப்பிடித்தான் இருக்கானுவ, நிறைய பேருக்கு உசுரா.”
“அத விட்றா, மாப்ள. உன் புரோகிராம் பத்தி சொல்லு.”
“ ‘ஹலோ எப்பிடி இருக்கீங்க’ ‘மக்கள் விருப்பம்’ங்கிற ரெண்டு நிகழ்ச் சியும் ஒரு வருசம் போச்சி. அதெப் பாத்திட்டுத்தான் ‘உண்மையின் உரைகல்’ டி.வி.க்காரன் ஒரு நிகழ்ச்சி பண்ணித்தாங்கன்னு கேட்டான். அந்த டி.வி.க்காக எடுத்ததுதான் ‘ஓடிப்போனவர்களின் கதை’. சூரியன் சந்திரன் டி.வி.க்காரன் கேட்டதுக்காக எடுத்ததுதான் ‘குடும்பச் சண்டைக்கி காரணம் ஆணா, பெண்ணா’ங்கிற ஷோ. ஆறு மாசம்தான் அக்ரிமண்ட். அப்படித்தான் ‘விசித் திர மரணங்கள்’, ‘சாலையோர விபச்சாரம்’, ‘குழந்தை கடத்தலும், மாஃபியா கும்பலும்’ங்கிற நிகழ்ச்சியெல்லாம்.”
“புரோகிராம் எடுக்கிறதுக்குப் பணத்துக்கு என்ன செய்வ?”
“டி.வி.க்காரங்க புரோகிராம எடுக்கிறதில்லெ. நாம்பதான் செலவு பண்ணி எடுக்கணும். நல்லா இருந்தா பணத்தக் கொடுத்திட்டு வாங்கி ஒளி பரப்புவாங்க. புரோகிராம் நல்லாப் போச்சின்னா தொடர்ந்து எடுத்துக் கொடுங்கன்னு கேப்பாங்க.”
“ஒன்னோட எல்லா புரோகிராம்களையும் பாத்திருக்கன். அதுல சூப் பரோ சூப்பர் ‘சாலையோர விபச்சாரம்’தான். அது சரி மாப்ள, நீ ஏன் சீரியல் எடுக்கிறதில்ல?”
“போன வாரம்தான் ஒரு அக்ரிமண்ட் போட்டிருக்கன். ‘குடும்ப விளக் கும் கை விளக்கும்’ங்கிற பேருல ஒரு மெகா தொடர் வரப்போவுது. அடுத்த வாரம் ஷýட்டிங். ரொம்ப டிபரண்டான சப்ஜெக்ட். அதோட இன்னொண் ணும் வரப்போவுது. ‘லேடிஸ் ஹாஸ்டல்கள்’ங்கிற தொடர். இது ஒர்க்கிங் கேள்ஸ் பத்தி. இந்த சீரியலுக்கு அட்வான்ஸ்கூட வாங்கிட்டன். ஒவ்வொரு டி.வி.க்காரனும் புது பார்முலாவப் பயன்படுத்துங்கிறான். எதெ மக்கள் பாப் பாங்களோ அதெ எடுங்கிறான். காசு கொடுக்கிறவன் சொல்றதச் செய்யுறது தான் நம்ப வேல. அதனாலதான் ‘குடும்பத்தின் அந்தரங்கம்’, ‘காதல் கொலை களும் கண்ணீரும்’, ‘சகோதரனும் சகோதரியும்’, ‘தந்தையே மகளைச் சீரழித்த கதைகள்’னு எடுக்கிறன். இதெல்லாம் எடுக்கலாமான்னா... எடுக்கலாம்தான். ஏன்னா இதெத்தான் சனங்க விரும்பிப் பாக்குறாங்க. இந்த மாரி ஷோவுல எல்லாத்தயும் எல்லாரும் பேசுறாங்க. வாழ்க்கய ஒளிவுமறைவு இல்லாம ஆக்கிடிச்சி டி.வி. ‘தந்தையே மகளைச் சீரழித்த கதைகள்’ ஷோ எடுக்கும் போது எனக்கே கஷ்டமாத்தான் இருக்கும். மனக் கஷ்டத்தப் பாத்தா, பணக் கஷ்டம் வந்துடும். பணக் கஷ்டம் வந்தா ஆயிரம் பிரச்சனை வந்துடும். புரியுதா? பத்து வருசம் சினிமாக்காரங்ககூட சுத்துனன். எரநூறு முந்நூறு கதெ சொல்லியிருப்பன். எதுவுமே எடுபடல. அப்பப் பட்ட கஷ்டத்த இப்ப நெனச்சாகூட உசுருபோயிடும். ‘சகோதரனும் சகோதரியு’ங்கிற நிகழ்ச்சிய நான் எடுக்கலன்னா வேற ஒருத்தன் எடுப்பான். அவன் இல்லன்னா வேற ஒருத்தன் எடுப்பான். ஆளு மாறலாம். ஆனா இந்த வேல நிக்காது. டி.வி.க்குத் தீனி போடணுமில்லெ?” என்று சொன்ன ஸ்ரீஸ்ரீ சிறிது நேரம் பேசாமல் நடந் தான். சிகரெட்டைப் பற்றவைத்தான். ராமு பக்கம் பார்த்து “சினிமாக்காரன விட மோசம் அரசியல்வாதின்னு சொல்ல முடியாது. சினிமாக்காரனும் அரசியல்வாதியும் வேறவேற இல்லெ. தமிழ்நாட்டுல சினிமாக்காரன்தான் அரசியல்வாதியா இருக்கான். அரசியல்வாதிதான் சினிமா எடுக்கிறான். டி.வி. சேனலும் அவன்தான் வச்சியிருக்கான். தமிழ்நாட்டுல இருக்கிற டி.வி. சேனல் லாம் யாரோடது?” என்று கேட்ட ஸ்ரீஸ்ரீ வலது பக்கமாகத் தெரிந்த சிறு கோவிலைக் காட்டி “அது என்ன?” என்று கேட்டான்.
“அது காத்தவராயன் சாமிக் கோவுலு. அதத் தாண்டிப் போனா எல்லைச் சாமிக் கோவுலு.”
“கிஷோர், அந்த ரெண்டு சாமிக் கோவுலயும் ஷýட் பண்ணுங்க. மணல் சாமியோட சேத்துக் காட்ட முடியுமான்னு பாப்பம். இல்லன்னா இதுகளக் காட்டி, இதுகளவிட மணல்சாமிக்குத்தான் கூட்டம் அதிகமாக் கூடுதுன்னு சொல்லிடலாம். விசுவல்ஸ் நல்லா வரணும். லைட்டு எப்பிடிருக்குன்னு பாத்து எடுங்க. சீக்கிரம் வரணும். டயமில்லெ. கேமராவ வச்சித்தான் ஊருக் குள்ளார கூட்டத்தக் கூட்டணும். சீக்கிரம் வரணும்” என்று அதிகாரத்தோடு சொன்னான். கேமராமேன் எல்லாவற்றுக்கும் ஒரே வார்த்தையாக “ஓ.கே. டன் சார்” என்று சொல்லிவிட்டுக் காத்தவராயன் சாமிக் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
ஸ்ரீஸ்ரீயும் ராமுவும் வேகமாக நடக்க ஆரம்பித்தனர். அப்போது திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி “நான் எடுத்த ‘முதல் காதலும் முதல் உடலுறவும் - சுய அனுபவங்கள்’ ஷோவுக்கு கோர்ட்டு, கேசுன்னு வரும்ன்னு பாத்தன். டி.வி.க்காரங்களும் ஒளிபரப்பத் தயங்குனாங்க. ஒரே ஒருநாள் மட் டும் ஒளிப்பரப்புங்க. எதிர்ப்பு வந்தா நிறுத்திடலாமின்னு சொல்லி, கெஞ்சிக் கேட்டன். கொறஞ்சது நூறு பேரு காலிலியாவது விழுந்திருப்பன். அப்பறமா ஒரு நாளு மட்டும்ன்னு ஒளிபரப்புனாங்க. கோர்ட், கேசு வரல. பாராட்டு மழதான் வந்துச்சி. உடனே தொடர்ந்து ஷோவ எடுத்துக்கொடுங்கன்னு கேட் டாங்க. இன்னம் ரெண்டு டி.வி.க்காரனும் கேட்டான். அந்த புரோகிராம்ல கலந்துக்கிறதுக்காக எத்தன ஆயிரம் பேரு எங்கிட்டெ கெஞ்சியிருப்பாங்க தெரியுமா? எத்தனாயிரம் பேரு எங்கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட் டிருப்பாங்க தெரியுமா?” என்று சொல்லும்போதே ஸ்ரீஸ்ரீயின் கண்கள் கலங் கின. மறுநொடியில் அசட்டையாகச் சிரித்தான். பிறகு “ஓடுற குதிரயா மட்டு மல்ல, முன்னாடி ஓடுற குதிரயாவும் இருக்கணும்” என்று சொன்னான்.
“எங்கூட படிச்சவன் நீ, இவ்வளவு பேர் புகழோட இருக்கிறது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கு தெரியுமா? நீ என்னோட பிரண்டுன்னு டீச் சர்ங்ககிட்ட சொன்னா எல்லாரும் என்னெப் பொறாமயாப் பாக்குறாங்க. எம் பொண்டாட்டியும் எப்பப் பாத்தாலும் ஒன்னெப் பத்தித்தான் பேசிக்கிட் டிருப்பா தெரியுமா? எங்க ஊருக்கு வந்ததுக்கு, என் வீட்டுல சாப்பிட்டதுக்கு தேங்ஸ் மாப்ள” என்று சொன்ன ராமு, “நீ சினிமா எடுக்கணும். அது ஓகோன்னு ஓடணும். இதான் மாப்ள என் ஆச” என்று உணர்ச்சி மேலிடச் சொன்னான் ராமு.
“நிச்சயமா எடுப்பன்டா. ரொம்ப லேட்டாதான் நம்ப நாட்டோட சயின்ஸ் எனக்குப் புரிஞ்சது. நம்ப சனங்களுக்கு சினிமா ஒரு கண்ணு, டி.வி. ஒரு கண்ணு. எத்தன வார, மாதப் பத்திரிக வந்தாலும், எல்லாத்திலியும் அட் டப் படமா சினிமா நடிக, நடிகர்தான் இருப்பாங்க. அப்பிடிப் போடலன்னா ஒரு பத்திரிககூட விக்காது. பொங்கல், தீபாவளி, சுதந்திர தினம், குடியரசு தினம், கிருஸ்துமஸ், ரம்ஜான் எல்லாத்தயுமே செலிப்ரிடிங்கிற சினிமா நடிகர் நடிகதான் கொண்டாடுவாங்க. அவுங்க கொண்டாடுறதப் பாத்தாத்தான், அவுங்க நடிச்ச படத்த அன்னிக்கிப் பாத்தாத்தான் பொங்கல், தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான் எல்லாம் நமக்குக் கொண்டாடின மாரியும், போன மாரியும் இருக்கும். நமக்கு டி.வி.யும், சினிமாவும் சோறும் தண்ணீயும் மாரி. வீடு, நக, பணம், காரு இல்லாமகூட மனுசன் இருந்திடுவான். ஏன், துணி இல்லாமகூட இருந்திட முடியும். உயிர்வாழ முடியும். ஆனா சோறும் தண்ணீயும் இல்லாம எப்பிடி உயிர்வாழ முடியும்?” என்று சொன்ன ஸ்ரீஸ்ரீ சட்டென்று கோபமடைந்தான். குரலை உயர்த்தி வேகமாகச் சொன்னான்.
“எந்த முட்டாள் சொன்னான்னு தெரியல, டி.வி.யும் சினிமாவும் பொழுதுபோக்கு சாதனமின்னு. மனுசனுக்கு டி.வி.யும் சினிமாவும்தான் சோறும் தண்ணீயும். அது மட்டுமில்லடா. அது ரெண்டும்தான்டா நம் மோட ரெண்டு கண்ணும். ஒருத்தன் கண்ணு இல்லாம எப்பிடி ஒலகத்தப் பாப்பான்? ஒரே ஒரு நாளக்கி தமிழ்நாட்டுல இருக்கிற சினிமா தியேட்டர் களயும், டி.வி. சேனல்களயும் நிறுத்திப்பாரு. எல்லாப் பயலுக்கும் பைத்தியம் புடிச்ச மாரி இருக்கும். செத்திட்ட மாரி இருக்குன்னு சொல்றானா இல்லி யான்னு பாரு.”
“நிஜம்தான் மாப்ள. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் டி.வி. முன்னாடி ஒக்காந்தாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்” என்று சொன்ன ராமு, “இதெல்லாத்தயும் வுட்டுட்டு சினிமா எடு மாப்ள. நீ சினிமா எடுத்தா நல்லா ஓடும்” என்று சொன்னான். அதைக் கேட்ட ஸ்ரீஸ்ரீயின் முகம் மாறியது. எரிச்ச லடைந்த மாதிரி சொன்னான்.
“இப்ப சாதாரண ஆளு எல்லாம் சினிமா எடுக்க முடியாது. சினிமா இண்டஸ்ட்ரியே மாறிப்போயிடுச்சி. ஐம்பது கோடி, நூறு கோடி பட்ஜெட் டுங்கறான். நடிகரோட சம்பளமே இருபது கோடி, முப்பது கோடிங்கறான். ஒரு படத்துல மூஞ்சியக் காட்டுனதுமே ‘நான்தான் மூணு ஸ்டாரு, நாலு ஸ்டாரு’ங்கறான். சாதாரண பட்ஜெட் படத்துக்கு இரண்டு கோடி, மூணு கோடி சம்பளம் கேக்குறான். எல்லாத்துக்கு மேல அரசியல்வாதியும், டி.வி. சேனல்காரனுமே நேரடியாப் படம் எடுக்கிறானுவோ. அதோட அவனுங்க பசங்களையே நடிக்க வைக்கிறானுவோ. அந்தப் போட்டியில போயி ஜெயிக் கிறது கஷ்டம். நல்ல படத்த மோசம்பானுவோ. பணத்த வாங்கிக்கிட்டு மோச மான படத்த நல்ல படம்பான். எல்லாரோட தலயெழுத்தயும் டி.வி.க்காரன் மாத்துறான். நீ எதச் சாப்புடணும், எந்தத் துணி போடணும்னு எல்லாத்தயும் அவன்தான் முடிவு பண்றான்” என்று சொன்னான் ஸ்ரீஸ்ரீ. இன்னும் கோபத் துடன் “சினிமா மோசம், சினிமாக்காரன் மோசம், அரசியல்வாதி மோசம்னு புரட்சி பேசின அத்தன அறிவாளிகளும் இலக்கியவாதிகளும் இன்னெக்கி சினிமாக்காரன் வீட்டுலயும் ஷýட்டிங் ஸ்பாட்டுலயும்தான் நிக்கிறாங்க. இதுக்கு அரசியல்வாதிகளே பரவாயில்லெ” என்று சொல்லி விட்டு மௌன மாக நடந்தான்.
“எப்பிடி இருந்தாலும் சினிமா எடுக்கப்பாரு. ஆனா சண்டப் படமா எடுக்காத. குடும்பப் படமா எடு. ஒரே வயலன்சா இருக்கு இப்ப வர படத் தில எல்லாம்”
“சினிமாவுலதான் வயலன்ஸ் இருக்கா? நம்ம நாட்டுல இருக்கிற ஒவ்வொரு நியூஸ் சேனலும் இருபத்தி நாலு மணிநேரமும் சென்சேஷனலா வயலன்ச உருவாக்கிக்கிட்டே இருக்கு. அதவிடப் பெரிய வயலன்ச சினிமா உருவாக்க முடியாது.”
“வீட்டுக்குப் போயி ஒரு டீ குடிச்சிட்டுப் போவலாமா தலவர் வீட் டுக்கு?” என்று கேட்டான்.
“நேரமில்லெ. நேரா பிரசிடண்ட் வீட்டுக்குப் போ” என்று ஸ்ரீஸ்ரீ சொன்னான்.
ஸ்ரீஸ்ரீ பஞ்சாயத்துத் தலைவரிடம் விசயத்தை நேரடியாகவே பேசி னான். அதோடு மணலூர் குறித்த கதையையும் தேர்ந்த வார்த்தைகளில் விரிவாகச் சொன்னான். ஸ்ரீஸ்ரீ சொன்ன கதையைக் கேட்டு தலைவர் மட்டு மல்ல, அவரோடு இருந்த முருகனும் அசந்துபோனான். ‘தமிழர்களின் உயிர் நாடி’ தொலைக்காட்சியிலிருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னபோது கொடுத்த மரியாதையைவிட கதையைக் கேட்ட பிறகு ஸ்ரீஸ்ரீக்குத் தலைவர் கொடுத்த மரியாதை கூடுதலாக இருந்ததுமாதிரி தெரிந்தது ராமுவுக்கு.
“எங்க ஊரப் பத்தி இப்பிடியெல்லாம் கதெ இருக்கா? ஆச்சரியம்தான். எங்க ஊர்லயும்தான் காலேஜில படிச்சன்னு சொல்லிக்கிட்டு திரியுறானுவ. இதெப் பத்தி யாரும் சொன்னதில்லெ. டி.வி.க்காரங்க நீங்க தெரிஞ்சிவச்சிருக் கீங்க” என்று ஸ்ரீஸ்ரீயைத் தலைவர் புகழ ஆரம்பித்தார்.
“புக்குல படிச்சியிருக்கன். ஒரு வெள்ளக்காரன் எழுதிவச்சிருக்கான்” என்று சொன்னான். சொல்லிவிட்டுக் கால்மேல் கால் போட்டுக்கொண்டான். அப்போது “நானும் படிச்சிருக்கன்” என்று ராமு சொன்னான்.
“எல்லாம் சரி. நான் என்னா செய்யணுமின்னு சொல்லலியே”
“ஒங்க ஊரப் பத்தி நான் சொன்ன கதெயிலிருந்து ரெண்டு மூணு வார்த்த பேசணும். அதெ நாங்க டி.வி.யில் போடுவம்.”
“கொஞ்சமென்ன நெறயவே பேசலாம்” என்று சொல்லிச் சிரித்த தலைவர் குரலை மாற்றிக்கொண்டு “ஒரு கண்டிசன்” என்று சொன்னார்.
பயந்துபோன ஸ்ரீஸ்ரீ “சொல்லுங்க சார்” என்றான்.
“நான் பஞ்சாயத்து ஆபிசில ஒக்காந்து இருக்கும்போதுதான் என்னெப் படம் எடுக்கணும். மத்தவங்க மாரி நான் நின்னுக்கிட்டுப் பேச முடியா தில்லெ. அப்பறம் தலவருங்கிறதுக்கு என்னா அர்த்தம் இருக்கு? அதோட ஊர் எல்லயில மணலூர்னு போர்டு வச்சியிருக்கன். அதுல எம் பேரு எங்க கட்சி கலரோட இருக்கும். அதயும் காட்டணும்.”
“முதல்ல எடுத்தவுடனே அந்த போர்டத்தான் காட்டுவம் சார்” என்று சொல்லிவிட்டு கேமராமேனுக்கு ஸ்ரீஸ்ரீ போன் போட்டு உடனே வரச் சொன் னான். ஊரின் போர்டை எடுக்க வேண்டும் என்ற ஞாபகமே அப்போதுதான் அவனுக்குத் தோன்றியது. “எங்க இந்தக் கழுதகளக் காணும்?” என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டான். உடனே தன்னுடைய உதவியாளர்கள் மூன்று பேருக்கும் போன் போட்டான். “ஒடனே தலைவர் வீட்டுக்கு வாங்க” என்று சொல்லிக் கத்தினான். பிறகு தலைவர் பக்கம் திரும்பி “கட்டாயம் காட்டுவம் சார். ஒளிபரப்புற அன்னிக்கி ஒங்களுக்கு போன்பண்ணி சொல்லுவம் சார்” என்று ஸ்ரீஸ்ரீ சத்தியம் செய்தான்.
“யே முருகா, சாருக்கு இளநீ வெட்டிக்கிட்டு வா. தண்ணீயா இருக் கணும். முத்துனதா இருக்கக் கூடாது. ஓடு. சீக்கிரம் வா” என்று சொல்லித் தலைவர் அவனை அனுப்பினார்.
கேமராமேன் வந்தான். அவன் கையிலிருந்த கேமராவைப் பார்த்து விட்டு அவனுக்குப் பின்னாலேயே ஐந்தாறு சிறுவர்கள் வந்தார்கள்.
“அவனுங்க எங்க?” என்று ஸ்ரீஸ்ரீ கேட்டான்.
“ஊருக்குள்ளார லொகேசன் பார்க்கப் போயிருக்காங்க சார்” என்று பணிவாக கேமராமேன் சொன்னான்.
“அந்த ரெண்டு கோயிலயும் எடுத்திட்டியா?”
“எடுத்திட்டன் சார்.”
“எப்பிடி வந்திருக்கு?”
“சூப்பர் சார்.”
“ஓ.கே. நீ ராமுகூடப் போயி ஊர் எல்லயில இருக்கிற மணலூருங்கிற போர்ட ஷுட் பண்ணிக்கிட்டு வா” என்று சொன்னான்.
“வாங்க சார் போவலாம்” என்று சொன்னதோடு ராமுவை அழைத்துக் கொண்டு கேமராமேன் நடக்க ஆரம்பித்தான். அவனுக்குப் பின்னால் ஏழெட்டு சிறுவர்கள் ஓடினார்கள். அப்போது ஸ்ரீஸ்ரீயின் உதவியாளர்கள் மூவ ரும் வந்தனர்.
“எங்கய்யா போயிருந்தீங்க?” என்று கோபமாகக் கேட்டான் ஸ்ரீஸ்ரீ.
“மொத்தம் ஆறு தெருவு சார். எல்லா எடத்தயும் பாத்திட்டம் சார். ரொம்பப் பழைய காலத்து வீடு ஒண்ணு இருக்கு சார். பாழடஞ்ச கோயில் இருக்கு”
“நம்ப புரோகிராமுக்கு சூட் ஆவுமா?”
“நீங்கதான் சார் சொல்லணும்.”
“நான் சொல்றதுக்கு அசிஸ்டண்ட்டுன்னு நீங்க எதுக்கு இருக்கீங்க?” என்று சொல்லிக் கத்தினான்.
இளநீர் வந்தது. குடித்தான். பஞ்சாயத்துத் தலைவர் கேட்ட டி.வி. தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொன்னான். சிறிது நேரத்தில் ராமுவும், கேமராமேனும் வந்தார்கள்.
“கிஷோர், எப்பிடி வந்திருக்கு?” என்று ஸ்ரீஸ்ரீ கேட்டான்.
“சூப்பர் சார்.”
“சரி, நீ ஒவ்வொரு தெருவாப் போயி, எந்தெந்த எடத்திலெ பப்ளிக்க வச்சி ஷýட் பண்ணலாம்ங்கிறதப் பாத்து முடிவு பண்ணு. ஊர் பூரா திரண்டு வர மாரி பண்ணு. ஷýட் பண்ணிக்கிட்டே போ. கூட்டம் வந்துடும்.”
“ஓ.கே. சார்” என்று சொல்லிவிட்டு கேமராமேன் நடக்க ஆரம்பித்தான். அவனோடு மற்ற மூன்று பையன்களும் சேர்ந்து நடந்தார்கள்.
கேமராமேன் தெருவைப் படமெடுக்க ஆரம்பித்ததும் அவனைச் சுற்றிப் பிள்ளைகளின் கூட்டம் கூடுதலாகச் சேர ஆரம்பித்தது. அவன் அடுத்த தெருவுக்குள் நுழையும்போது பெண்கள் கூட்டமும் சேர்ந்துகொண்டது. “கூட்டம் சேர்ந்தா நல்லதுதான்” என்று முனகிய ஸ்ரீஸ்ரீ, திரும்பி, தலைவரி டம் “சார், நீங்க முகம் கழுவுறதின்னா கழுவிக்குங்க” என்று சொன்னான். உடனே ஓடாத குறையாகத் தலைவர் வீட்டுக்கு ஓடி முகம் கழுவி, பவுடர் போட்டு, சலவை சட்டை போட்டுக்கொண்டு வேட்டி கட்டிக்கொண்டு வந்தார். “வாங்க ஆபிசுக்குப் போவலாம்” என்று தலைவர் கூப்பிட்டார். “இன்னம் மூணு நாலு பேரு வேணும் சார்” என்று சொன்னான்.
“நாந்தான் தலவரு. நான் சொன்னா பத்தாதா? ” என்று தலைவர் கேட் டார்.
“இடயில இடயில ஆள மாத்திக் காட்டணும் சார். ஒங்களத்தான் மூணு நாலு முற காட்டுவம்” என்று ஸ்ரீஸ்ரீ சொன்னான். தலைவரின் முகம் தொங்கிப் போயிற்று. ஆனாலும் “நம்ம ஆளுவுள ரெண்டு மூணு பேர வரச் சொல்றா” என்று முருகனிடம் சொன்னார். முருகன் ஆட்களைக் கூப்பிடப் போனான்.
ஸ்ரீஸ்ரீயை நோக்கி கேமராமேன் வந்துகொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் ஊரே திரண்டு வந்துகொண்டிருந்தது. “பஞ்சாயத்து ஆபிசுக்கு போகலாம்” என்ற தலைவரின் பேச்சு எடுபடவில்லை. “இங்கியே எடுக்க லாம்” என்று கூட்டம் கத்தியது. உடனே “ரெடி பண்ணிக்க” என்று ஸ்ரீஸ்ரீ கேமராமேனிடம் சொன்னான். அவன் ட்ரைபாடில் கேமராவைப் பொருத்தி, கூட்டத்தின் பக்கம் கேமராவைத் திருப்பியதுதான். மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்தது. ஸ்ரீஸ்ரீ எதற்காக வந்திருக்கிறான், என்ன செய்யப் போகிறான் என்று கூட்டத்தில் ஒருவர்கூடக் கேட்கவில்லை. எல்லாருடைய ஆர்வமும் போட்டியும், கேமராவுக்குள் தங்களுடைய முகத்தை எப்படிப் பதிய வைப்பது என்பதிலேயே இருந்தது.
கூட்டத்தில் இருந்த கிழவர் ஒருவர் “மூணு ஆம்பள புள்ள பெத்தன். ஒண்ணும் என்ன கவனிக்கிறதில்லெ. அனாத பணம் கிடைக்க உதவி பண் ணுங்க சாமி” என்று கையெடுத்து ஸ்ரீஸ்ரீயைக் கும்பிட்டார். கிழவரைப் பார்த்துவிட்டு இன்னொரு பெண் “சாமி, எனக்கு நாளு புள்ளெங்க. புருசன் இல்லிங்க. உங்களால முடிஞ்ச உதவிய பண்ணுங்க” என்று சொல்லி அழுதாள். அந்தப் பெண்ணை அடுத்து நடுத்தர வயது இளைஞன் ஒருவன் “எங்க ஊருக்கு பஸ் வசதி கிடையாது. குடிக்கத் தண்ணி இல்லெ. தெனம் ஆத்துக்கு ரெண்டு கிலோ மீட்டரு நடக்க வேண்டியிருக்கு. எல்லாத்துக்கும் மேல செல் போன் டவரே கெடக்க மாட்டேங்குது” என்று சொல்லிக் கத்தினான். எல்லா ருடைய குறைகளையும் கேட்ட ஸ்ரீஸ்ரீ கோபமடையாமல் அனைவரையும் சமாதானப்படுத்துவது மாதிரி “எல்லாம் செஞ்சிடலாம். செய்ய முடியாத துன்னு உலகத்துல ஒண்ணுமில்லெ. நான் வழிபண்றன்” என்று மிகவும் அன்பான குரலில் சொன்னான்.
“டி.வி.க்காரங்க நீங்க நெனச்சா செய்யலாம்” என்று கூட்டம் கத்தியது.
“செய்யறன், செய்யறன். ஷýட்டிங் முடிச்சு மெட்ராஸ் போனதும் உங்க ஊருக்கு ஏதாச்சும் செய்யறன். இப்ப ஷýட்டிங் ஆரம்பிக்கணும். கத் தாம இருங்க” என்று கூட்டத்தைப் பார்த்துக் கத்திய ஸ்ரீஸ்ரீ, கேமராமேன் பக்கம் திரும்பி “ரெடியா?” என்று கேட்டான்.
“ரெடி சார்” என்று கேமராமேன் சொன்னான். ஸ்ரீஸ்ரீயின் உதவி யாளர்கள் மூன்று பையன்களும் கேமராமேனைச் சுற்றிப் பாதுகாப்பு வளைய மாக நின்றுகொண்டார்கள்.
ஸ்ரீஸ்ரீ கூட்டத்தைப் பார்த்து “‘இந்த வாரம் - இந்த ஊர்’ங்கிற நிகழ்ச் சிக்காக ‘தமிழர்களின் உயிர்நாடி’ங்கிற டி.வி.யிலிருந்து வந்திருக்கிறோம். இந்த ஊருக்கு மணலூருன்னு எப்படிப் பேர் வந்ததுங்கிறதப் பத்தி ஒங்க ஊரப் பத்தி சொல்ல விரும்புறவங்க சொல்லலாம்” என்று ஸ்ரீஸ்ரீ சொன்னதுதான்.
“நான் சொல்றன்.”
“நான் சொல்றன்.”
“நான் நல்லா சொல்வன்.”
“-------”
கூட்டம் கத்தியது. “மொத்தமா எல்லாரும் கத்தினா எப்பிடி? விருப்பம் உள்ளவங்க மட்டும் கையத் தூக்குங்க” என்று ஸ்ரீஸ்ரீ கூட்டத்தைப் பார்த்துக் கத்தினான். கூட்டத்திலிருந்த சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள், இளம் பெண்கள் என்று ஒருவர் தவறாமல் கையைத் தூக்கினார்கள். அதைப் பார்த்து அசந்துபோன ஸ்ரீஸ்ரீ கேமராமேனிடம் “டிபரண்டா இருக்கு. குயிக். கைய மட்டும் எடு” என்று சொன்னான். பிறகு கூட்டத்தைப் பார்த்து “இந்த ஊருக்கு மணலூருன்னு எப்பிடிப் பேரு வந்ததுங்கிறதப் பத்தி நான் ஒரு கதெ சொல்வன். அதெக் கேட்டுட்டு, நான் சொல்றபடியே சொல்வீங்களா?” என்று கேட்டான்.
“அப்பிடியே சொல்றம்” என்று கூட்டம் கத்தியது. ஸ்ரீஸ்ரீ மணலூரின் கதையையும் மணல்சாமியின் கதையையும் சொன்னான். ஸ்ரீஸ்ரீயின் வார்த் தைகள் உயிர்பெற்று மக்களின் மனதில் விதைகளாக விழுந்தன. கதையைக் கேட்டுக் கூட்டம் ஆரவாரித்தது. மணலூரின் மொத்த மக்களும் கேமராவுக்கு முழுமையாகத் தங்களை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருந்தனர்.
“ஒவ்வொருத்தரா வந்து சொல்லுங்க” என்று ஸ்ரீஸ்ரீ சொன்னதும் “நான், நான்” கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிய ஸ்ரீஸ்ரீ கேமராமேனிடம் ரகசியமாக ஏதோ சொன் னான். பிறகு கூட்டத்தைப் பார்த்து “வரிசையாக வந்து ஒவ்வொருத்தரா சொல்லுங்க. வரிசையா நில்லுங்க” என்று ஸ்ரீஸ்ரீ சொன்னதும் ஆசிரியருக்குக் கட்டுப்பட்ட மாணவர்கள் மாதிரி சிறுவர்கள், சிறுமிகள், ஆண்கள், பெண் கள், இளம்பெண்கள் என்று ஒவ்வொருவரும் வரிசையாக நின்றனர். கூட்டத் திலிருந்த ஒரு சிலர் முகம் கழுவ, பவுடர் போட்டு, துணியை மாற்றிக் கொண்டு வர வீட்டுக்கு ஓடினார்கள். “எல்லாருக்கும் வாய்ப்பு கொடுப்பன். இங்கியே முட்டிமோத வாணாம். பாதிய ஆத்திலெ எடுப்பன். அதனால கொஞ்ச பேரு ஆத்துக்குப் போயிடுங்க. ப்ளீஸ்” என்று இரண்டு மூன்று முறை சொன்னதும் கூட்டத்தில் முட்டிமோத முடியாதவர்கள் ஆற்றுப் பக்கம் ஓட ஆரம்பித்தார்கள்.
“ரெடியா?” என்று ஸ்ரீஸ்ரீ கேட்டான்.
“ரெடி சார்” என்று கேமராமேன் சொன்னான்.
“ஓ.கே. ரெடி ரெடி - ரெடி - சைலன்ஸ். ரோலீங்” என்று சொல்லிவிட்டு கேமராவைப் பார்த்து “மணலூர் என்கிற இந்த ஊருக்கு மணலூர் என்று எப்படிப் பெயர் வந்தது என்பதைப் பற்றி, மணலூரின் ஊராட்சி மன்றத் தலைவர் இப்போது கூறுவார்” என்று கூறினான். கேமரா தலைவரின் பக்கம் திரும்பியது. “எங்க ஊருக்கு ஆத்துக்குறிச்சின்னு இருந்த பேரு எப்பிடி மண லூருன்னு மாறிச்சின்னா, அது ஒரு சித்தரோட சாபத்தாலதான். அந்த சாபம் என்னன்னா?...” அடுத்து ஒரு பெண்ணின் பக்கம் கேமரா திரும்பியது. “எனக்குக் கல்யாணமாகி எட்டு வருசம் கழிச்சிக் குழந்த பிறந்துச்சி. அதுக்குக் காரணம் மணல்சாமிதான்...”
“-------”
கேமரா சுழன்றுசுழன்று மணலூரின் கதையை, வாழ்க்கையாக, வரலா றாக, சித்திரமாக, காவியமாக மக்களின் வாயாலேயே அவர்கள் மொழியி லேயே வரைய ஆரம்பித்தது.
இமயம்