
பொன்னம்மாவின் குடும்பக் கதை
அவன் அந்தக் கோவில் எல்லைக்குள் நுழைந்தபோது வெயில் நன் றாக ஏறியிருந்தது. கோவிலுக்கு முன்பாகச் சற்றுத் தள்ளி நின்றிருந்த வேப்பமரத்தின் கீழ் சைக்கிளை நிறுத்திவிட்டுத் துண்டால் வியர்வையைத் துடைத்துக்கொண்டே சுற்றும்முற்றும் பார்த்தான். ஒரு ஆள்கூடக் கண்ணில் படவில்லை. வீட்டை விட்டுக் கிளம்பும்போது இருந்த நம்பிக்கை யில் பாதி அந்த நிமிடத்திலேயே குறைந்துவிட்டதுபோல் இருந்தது. அவ நம்பிக்கையோடு வாயைச் சப்புக்கொட்டினான். வந்த காரியம் முடியுமோ முடியாதோ என்ற கவலை வந்துவிட்டது அவனுக்கு. “கைவிட்டுப் போன பொருள் வந்தால்தான் உண்டு. போனது போனதுதான்” என்று தனக்குள்ளாகச் சொல்லிக்கொண்டவன், மீண்டும் ஒரு முறை தன்னைச் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தான். ஆட்கள் யாரும் தென்படாததால் கோவிலைப் பற்றிப் பெரியபெரிய கதைகளையெல்லாம் சொல்லி அனுப் பிய தன்னுடைய மனைவிமீதும், மாமியார்மீதும் அவனுக்கு எரிச்சல் உண்டாயிற்று. தூக்கம் கலையாதபோதே எழுப்பித் துரத்திவிட்ட அவர் களைத் திட்டினான். அவர்கள் சொல்லியது மாதிரியெல்லாம் கோவிலில் ஒன்றுமே இல்லை என்பதே அவனைச் சோர்வடையச் செய்தது. கோவில் ஒன்றும் அவ்வளவு பெரியது இல்லை. ஆனால் கோவிலுக்கு எதிரில் அவன் எங்குமே பார்த்திராத அளவுக்கு ஆளுயரத்திற்கு மேல் சுடுமண் குதிரைகள் முப்பதுக்கும் மேல் நிறுத்திவைக்கப்படிருந்தன. சிமெண்டால் செய்த குதிரைகளும் ஏழெட்டு இருந்தன. சிமெண்ட் குதிரைகளை ஒட்டி ஆடு, கோழி, பன்றிகளைப் பலியிட மூன்று நான்கு மாவாட்டும் கற்கள் அளவில் பெரிய கருங்கல் இருந்தது. அதற்கடுத்து ஐம்பது அறுபது வல்லி யங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இவ்வளவு சிறிய கோவிலுக்கு இத் தனை குதிரைகளா என்று ஆச்சரியப்பட்டுப்போனான். தன்னுடைய ஊரிலுள்ள கோவிலில் இவ்வளவு உயரமான குதிரைகளே இல்லை என்ற நினைவு வந்தது. அதோடு, இருக்கிற நான்கு, ஐந்து குதிரைகளும் சிமெண்டால் செய்யப்பட்டவை என்பது நினைவுக்கு வந்ததும் உதட்டைப் பிதுக்கியவாறு கோவிலுக்குப் பின்புறமாகப் போனான். அவன் இதுவரை எங்குமே பார்த்திராத அளவுக்குப் பெரிய வில்வமரம் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. மரத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவன், கிழக்கில் பார்த்தான். இருநூறு முந்நூறு கஜ தூரத்திற்கு அப்பால் வடமூலை பாரிசமாகத் திட்டாக இருபது முப்பது குதிரைகள் இருப்பதும் ஏழெட்டு சிலைகளும், முப்பது நாற்பது வல்லியங்களும் நின்றுகொண்டிருப்பதும் தெரிந்தது. அது என்ன சாமியாக இருக்குமென்று கூர்ந்து பார்க்க ஆரம் பித்தான். அப்போது சிலைகளுக்கு முன் எழுபது எண்பது வயது மதிக்கத்தக்க கிழவி ஒருத்தி உட்கார்ந்திருப்பது தெரிந்தது. மறுநொடியே குதிரைகள், வில்வமரம் பற்றி எல்லாம் யோசிக்காமல் அந்தக் கிழவியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
காலடி ஓசையைக் கேட்டு திரும்பிப் பார்த்த கிழவி தன்னை நோக்கி வந்தவனைத் தன்னிடம் அண்டவிட விரும்பாதவள் மாதிரி ‘தூரமாகப் போ. இப்போது எதுவும் பேசக் கூடாது’ என்பதுபோல் கையால் சைகைகாட்டிவிட்டு மீண்டும் முன்பு போலவே தனக்கு முன்னால் இருந்த சாமி சிலைகளை நோக்கிக் கையெடுத்தாள்.
அவனுக்கு என்னவோபோல் இருந்தது. ஒரு வார்த்தைகூடப் பேசவிடாமல் செய்துவிட்டாளே என்று வெறுப்போடு வந்த வழியிலேயே திரும்பி சைக்கிள் நிறுத்தியிருந்த இடத்திற்குப் போனான். காரணமின்றி தன்னுடைய மனைவிமீதும் மாமியார்மீதும் அவனுக்கு எரிச்சல் உண்டா யிற்று. மற்ற மருமகன்கள் வரும்போது காணாமல்போகாமல் தான் வந்தபோது காணாமல்போன மாடுகளைக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டி னான். கோவிலை நோக்கி யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். பிறகு சைக்கிளின் கேரியரில் ஏறி உட்கார்ந்துகொண்டான். சுற்றும்முற்றும் பார்த்தான். பத்து காணி அளவுக்கு விஸ்தாரமாக அந்த இடம் இருந்தது. ஏழெட்டு பெரியபெரிய வேப்ப மரங்களும் இருந்தன. ஒவ்வொரு மரத்தின் கீழும் அடுப்பு வெட்டிய பள்ளங்களும் கரிபடிந்த கருங்கற்களும் செங் கற்களும், முட்டுமுட்டாக உரித்துப்போட்ட தேங்காய் நார் குவியல்களும் கிடப்பது தெரிந்தது. கிழவி உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்த கால் போன, வால் போன, காது, மூக்கு, வயிறு போன குதிரைகளை வேடிக்கைபார்க்க ஆரம்பித்தாலும் அவனுக்கு மாடுகள் பற்றிய கவலையாகவே இருந்தது. மாடுகள் எப்படிப் போயிருக்கும் என்று எவ்வளவோ யோசித் துப்பார்த்தான். அவனால் ஒரு தீர்மானத்திற்கும் வர முடியவில்லை.
கோவில், வேப்பமரம், குதிரைகள், வல்லியங்கள் என்று எதைப் பார்த் தாலும் மீண்டும்மீண்டும் மாடுகள் காணாமல்போன விஷயமே நினைவுக்கு வந்து அவனை வாட்டியது. போன சந்தையில் எட்டாயிரத்திற்குக் கேட்ட மாடுகள். மாடுகளுடைய நிறம், கொம்பு, வால், வயிறு என்று ஒவ்வொன் றாக அவனுக்கு நினைவுக்கு வர ஆரம்பித்தன. அதோடு அந்த மாடுகளைக் கொண்டு தான் நஞ்சை ஓட்டியதும் நினைவுக்கு வந்தது. மாடுகள் கட்டு தானாகத் தளர்ந்துபோய், திருட்டுத் தீனி தின்னப் போய், வழி தவறி எங்காவது அலைந்துகொண்டிருக்குமா, திருடர்கள் வந்து ஓட்டிக்கொண்டு போயிருப்பார்களா என்று யோசித்தான். மேய்ச்சலிலிருந்து வந்த மாடுகளைக் கொடலில் கட்டாமல் விட்டிருப்பார்களா, பாம்பு கடித்து, கரும்புக் கொல்லைக்குள் எங்காவது செத்துக்கிடக்குமா, பாம்பு கடித்தாலும் ஒரே நேரத்தில் இரண்டு மாடுகளையுமா கடிக்கும் என்று அவன் தன்னையே கேட்டுக்கொண்டான். கேரியரில் உட்கார்ந்திருப்பது பிடிக்காமல் கீழே இறங்கி ஆட்கள் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். வேப்ப மரத்தை ஒரு சுற்று சுற்றிவந்தான். பூசாரி இன்று ஏன் இன்னும் கோவிலுக்கு வரவில்லை? உடம்பு சரியில்லாமல் வீட்டில் படுத்திருக்கிறானா, வெளியூர் போயிருப்பானா என்று பூசாரியைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்த வன் நடப்பது நடக்கட்டுமென்று கிழவி உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
வேப்பிலைத் தழைகளைக் குலுக்கித் தரையில் போடுவதும் இரண்டு இரண்டாக ஜோடி சேர்ப்பதும், பிறகு தழைகளை அள்ளிக் குலுக்கிப் பூப்போட்டுப் பார்ப்பதுவுமாகக் கிழவி இருந்தாள். பாதி தூரம் வரை வந்துவிட்டவனுக்குக் கிழவி ஏதாவது சொல்லிவிடுவாளோ என்ற சந்தேகம் வந்தது. அந்த இடத்தை விட்டு அவளாக எழுந்து வரும்வரை ஒன்றும் பேசக் கூடாது என்ற எண்ணத்தில் பக்கத்திலிருந்த சிமெண்ட் குதிரையின் அடிபீடத்தில் போய் உட்கார்ந்துகொண்டான். வேப்பந்தழைகளைக் குலுக் கிப்போட்டு, ஜோடி சேர்த்து, பூப்போட்டுப் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கிழவியைப் பார்க்க ஆரம்பித்தான். சற்று நேரம்தான். பிறகு அவனுக்கு அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. பொருளைப் பறிகொடுத்ததோடு இப்படி வந்து உட்கார்ந்திருக்கிறோமே என்று தன்னையே நொந்துகொண்டான். பெண்களே பொறுப்பற்றவர்கள் என்று திட்டினான். காணாமல்போன பொருள் இருக்கும் இடத்தை ஒருவனால் எப்படிச் சொல்ல முடியும் என்று தன்னையே கேட்டுக்கொண்டான். கனிவைத்துக் கேட்க வாங்கிவந்திருந்த பொருள்களின் பை சைக்கிளின் ஹேண்டில்பாரில் தொங்கிக் கொண்டிருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டான். பூசாரி எப் போது வருவான், இன்று வருவானா, மாட்டானா, பார்ப்பதற்கு ஆள் எப்படி இருப்பான் என்று யோசிக்க ஆரம்பித்தான். ரொம்ப நேரமாகப் பூப்போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு என்னவாயிற்றோ வேப்பந்தழைகளை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு எழுந்து, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டாள். தரையில் விழுந்தவள் சிறிது நேரம் எந்த அசைவும் இன்றி அப்படியே தரையிலேயே கிடந்தாள். பிறகு எழுந்து நின்றுகொண்டு நான்கு திசையிலும் கும்பிட்டாள். சூரியனைப் பார்த்துக் கும்பிட்டாள். தாடையில் போட்டுக்கொண்டாள். குனிந்து தரையில் கிடந்த மண்ணில் ஒரு பொட்டளவு எடுத்து வாயில் போட்டுக்கொண்டு கோவில் பக்கம் பார்த்தாள். பிறகு கோவிலுக்குள் வரும் வழியை நோக்கிப் பார்த்தவள், சிமெண்ட் குதிரையின் அடிபீடத்தில் உட்கார்ந்திருந்தவனை நோக்கி வந்தாள். வந்தவள், உட்கார்ந்திருந்தவனிடம் என்ன ஊர், விசயம் என்ன என்று அதிகாரத்துடன் கேட்டாள். மிரட்டுவதுபோல் கேட்கிறாளே அவ ளிடம் பேசலாமா வேண்டாமா என்றுகூட யோசிக்காமல் அவளிடம் சொல்வதற்காகவே அவன் ஊரிலிருந்து வந்தது மாதிரியும், இதுவரை காத் திருந்தது மாதிரியும் கடகடவென்று, தன்னுடைய குடும்பம், கல்யாணம் கட்டிக்கொண்டது, மாமியார் வீட்டில் காணாமல்போன மாடுகள் என்று ஒவ்வொரு விஷயத்தையும் சொன்னான். கடைசியாக இந்தக் கோவில் பூசாரியிடம் கனிவைத்துக் கேட்டால் எல்லா விவரமும் தெரிந்துவிடும் என்று சொல்கிறார்களே நிஜமா என்று கேட்டவன், அதோடு “பூசாரி எப்ப வருவாரு?” என்றும் கேட்டான்.
“வர்ற நேரந்தான்” என்று சொன்ன கிழவி, கிழக்கில் பார்த்துவிட்டு “மாடு எப்ப களவுபோச்சி?” என்று கேட்டாள்.
“முந்தா நாளு ராத்திரி. எல்லாரும் ஊட்டுலதான் இருந்தோம். ராத்திரி கொடல்ல கட்டியிருந்த மாடுதான். எந்த மாயமாப் போச்சின்னு தெரியல. விடிஞ்சிப் பாத்தா மாடுவுள காணும். தேடாத எடமில்லெ. துப்பு ஒண்ணும் கெடக்கல. பதினாயிர ரூவா மாடு.”
“பூசாரி வந்ததும் மாடு எந்த எடத்தில இருக்குன்னு சொல்லிடுவான். அதுமுட்டும் மாடுவோ அறுப்புக்குப் போவாம இருக்கணுமே” என்று சொல்லியவள், கிழக்குப் பக்கமாகப் பார்த்தாள். பிறகு வாயைச் சப்புக் கொட்டியவள், “கோவிலு படக்கிற பயலயும் காணும். இந்த பூசாரிப் பயலயும் காணுமே. எந்த கடெயில பொறுக்கித் தின்னுக்கிட்டிக்கிறானுவளோ” என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவனிடம் “கண்ணாலமாயி எத்தின வருச மாச்சி? புள்ள எத்தன?” என்று கேட்டுக்கொண்டே அவனுக்கு எதிரில் இருந்த குதிரையை ஒட்டித் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தாள். மாடுகளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தவன் அவள் கேட்டதற்கு ஏனோதானோவென்று பதில் சொல்லிவிட்டு “மாடு அறுப்புக்குப் போகாம இருக்கணுமே” என்று அவள் சொன்னதையே யோசித்துக்கொண்டிருந்தான். பசிக்காக மாடுகளை திருடிக்கொண்டுபோய் அறுத்தோ, சந்தை யில் விற்றோ வந்த காலமெல்லாம் மலையேறி, திருட்டு மாட்டை இப்போது அறுப்புக்காகக் கேரளாவுக்கு லாரியில் ஏற்றிவிடுகிறார்கள் என்று இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் தன்னுடைய ஊரில் மாடு காணாமல் போயிருந்தபோது ஊரில் அடிபட்ட பேச்சு திடீரென்று அவனுக்கு நினை வுக்கு வந்ததும் மாடு கேரளாவுக்குப் போயிருந்தால் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டான். பூசாரியை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. தொடர்ந்து பூசாரியைப் பற்றி, அவனுடைய கனி சொல்லும் விதம் பற்றியெல்லாம் வரிசையாக கேட்டுக்கொண்டே வந்தவன், கடைசியில் “அம்மாவுக்கு இந்த ஊர்தானா?” என்று கேட்டான். ஆமாம் என்பதுபோல் தலையை மட்டும் ஆட்டிய கிழவி பெரிதாகப் பெருமூச்சு விட்டாள். அவளுடைய வாயைக் கிண்டும் விதமாக அவளைப் பற்றி, அவளுடைய குடும்பம், சொத்துபத்து என்று வரிசையாகக் கேட்க ஆரம் பித்தான். பூசாரி வரும்வரை நேரத்தைப் போக்க வேண்டுமே என்ற நோக்கிலேயே பேச்சும் கொடுத்துக்கொண்டிருந்தான். தலையைக் கவிழ்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவள், ரொம்ப நேரம் கழித்துத்தான் வாயைத் திறந்தாள்.
“எம் பேரு பொன்னம்மாங்க. நான் பட்டத அந்த பாஞ்சாலிகூடப் பட்டிருக்க மாட்டாங்க. அரியோம்ன்னு நாங்க கூடிப் பொறந்தோம் நல்ல தங்காளுக்குப் பொறந்த மாரி ஒம்போது உருப்படிங்க. எங்கப்பன் ஒரு வாயில்லாப் பூச்சிங்க. அந்தக் காலத்து சனங்களே அப்படித்தான். இந்தக் காலம் மாரியா? அடேயப்பா! இப்பத்தான் எதுக்கெடுத்தாலும் ஓத்தா ஒம்மான்னு கைய ஓங்கற காலமாச்சே! எங்கம்மா ஒருத்தித்தாங்க ஒம் போது உருப்படியயும் உருசேத்து கரயேத்துனா. எங்க பெரியண்ணன் சண் டாதி சண்டனா வளந்து இருவத்தியொரு வயசி ஆவுற நேரத்தில கொண பேதகம் மாரி வந்து கொஞ்ச நாளு இருந்தாரு. அப்புறம் ஒரு நாளு உச்சி பொயிதிக்குக் குளிக்கப் போறன்னு போனவர்தான். அதுக்குப் பிற்பாடு அவர எங் கண்ணால கண்டதில்ல. எந்த எடமோ எந்த தேசமோ மகராசன் போயி சேந்துட்டாரு. உசுரோட இருக்காரா செத்துட்டாரான்னுகூட எங்களுக்கு நாளது தேதிமுட்டும் தெரியாது. இப்பியே இப்பிடி மனசு சொரசொரங்குதே, அப்ப எப்படி இருந்திருக்கும்? எங்க பெரியண்ணன்தான் எங்கம்மாவுக்குத் தலச்சன். அதுலயிருந்து படுத்தபடுக்கையா படுத்தவருதான் எங்கப்பா. கை வேலயப் புடுங்கிச் செய்யுறாப்ல இருந்த புள்ளெய கண் ணுக்கு நேராவே பறிகொடுத்திட்டமேன்னு படுத்தவருதான். எட்டு வரு சம் நடஒட இல்லாம ஒரே கெடயாக் கெடந்தாரு. பொட்டச்சிவோ நாங்கதான் பீய மூத்தரத்த அவரு கட்டெ காடுபோயி சேருறமுட்டும் வாரிக் கொட்டுனோம். எங்க பெரியண்ணன் ஊட்ட வுட்டுப் போன வருசமோ அதுக்கு மறாவது வருசமோ எங்க நடண்ணனுக்கு கண்ணாலமாச்சுங்க. அந்தக் காலத்துல அது ஊரு மெச்சும்படியான கண்ணாலமாத்தான் இருந் துச்சு. இந்தக் காலம்மாரியா அந்தக் காலம்? இப்ப ஒண்ணுமத்த பயலுவோ குடிக்கிற சிகரெட்டு காசி இருந்தாலே அந்தக் காலத்துல ஒரு கண்ணாலத்த முடிக்கலாமே. அப்ப ஒரு மூட்ட அரிசி அஞ்சி ரூவாத்தான.”
“ஊகமா கேக்குறீங்களா. அடுத்தது அடுத்த அண்ணங்காரனுக்கும் கண் ணாலமாச்சுங்க. எந்த நேரத்தில அந்த மகராசி எங்கூட்டுல அடிவச்சாளோ. தெனம் ஒரு பொணக்குப் போட்டுக்குவாங்க. ஒரு மோடி வச்சிக்குவா. இப் பிடிக் கெடக்குற துரும்ப எடுத்து அப்பிடிப் போட மாட்டா, கொலகாரி.
அவ அப்பன் ஊட்டுல அவ ஒரே பொண்ணு. செல்வமா, மேன்மயா நவத்துளி மண்ணு படாம வளத்துப்புட்டாங்க. அதுக்காக காலத்துக்கும் அப்படியே இருக்க முடியுமா? அப்பன் ஊட்டுலயிருந்து தாலிகட்டிக்கிட்டு புருசன் ஊட்டுக்கு வர்றதே அறுப்புக்குச் சக்கிலிகிட்டெ மாட்டெ ஓட்டிவுட்ட கதெதான. அந்தா இந்தான்னு ஓட்டுனா ஒரு ஆறு மாசத்த.
புள்ளெ பெக்கப் போறன்னு போனவதான். மறுபடி இந்த லெக்காத் திரும்பல. பொண்டாட்டியப் பாக்கப் போறன்னு போன எங்கண்ணன்காரனுக்கும் திரும்பி வரக் காலு இல்லாமப் போச்சி. எங்கம்மாக்காரி நேராவும் போனா. புடியாளும் வச்சிப் பாத்தா. போனவங்க போனவங்கத்தான். அப்பறம் திரும்பல. என்னா ஏதுன்னு எட்டிப் பாக்கல.
சரி, அம்புட்டுத்தான்னு எல்லாருக்கும் சப்புட்டுப்போச்சு. தொடந்தடியா அஞ்சாறு புள்ளெ மக்களாயி நாலு கிராமத்தாங்களுக்கும் பேரு சொல்றமாரி இருந்து, அப்பிடி இப்பிடின்னு ஏயி எட்டு வருசத்துக்கு முன் னாடிதான் ரத்தரத்தமா வாயால எடுத்து ஒரு வெள்ளிக்கிழம அன்னிக்கி காடுபோயி சேந்துட்டாரு. அந்த மேனா மினிக்கியும், அதாங்க எங்க அண்ணியாக்காரியும் எங்கண்ணன்காரன் செத்த ஒண்ணுரெண்டு வருசத்திலியே வவுத்துல கட்டிப் பொறப்பட்டு ஒரே கெடயா கெடந்து போயி சேந்தா.”
“மூணாவது ஆளுதான் எனக்கு நேர் மூத்தவரு. அவரு ஒருத்தருதான் எங்கப்பன் பேர வச்சிக் கடேசிமுட்டும் காப்பாத்துனவரு. தன்னோட காலமுட்டும் சூளையில நெருப்ப வச்சிக்கிட்டே இருந்தாரு. அவருக்குப் பொறந்த புள்ளீவோயெல்லாம் தொயிலு முறமன்னு ஆளுக்கொரு தேசம் போயிடிச்சிவோ. அப்பன் தொயில வுட்டுட்டு வவுத்த வளக்க ஓடி நாடி ஒயச்சிப் பொயிக்குதுவோ. நாலாவது ஆம்பளதான் எந் தம்பி. எனக்கு நேர் எளயவன். பெருமாளுன்னு பேரு. ஆட்டுக்குத் தவ ஒடிக்கப் போறன்னு போயி மரத்திலயிருந்து கீய வியிந்து காலு ஊனமாப் போயிடிச்சி. ரொம்ப நாளு படுத்த எடத்த வுட்டு நவுராமத்தான் கெடந்தான். ஊனமானவனுக்கு யாரு பொண்ணு கொடுப்பாங்கன்னு சொல்லி சாவுற முட்டும் ஒரு பெண்ண நேரிட்டுப் பாக்காமியே, எங்க நடண்ணன் கூடவே, ஊட்டோடவே இருந்து தங்காலத்தயும் முடிச்சிப்புட்டு போயிட்டான். அப்பறம் நாங்க பொட்டச்சிவோதான். பொட்டச்சி என்னிக்கும் பொட்டச்சிதாங்க. காலால மூத்தரம் வுடுறவளுவோதான். உங்கக்கிட்டெ சொல்றதுக்கு என்ன சாமி இருக்கு? கூடப் பொறந்த பொறப்பு மாரி இருக்கீங்க. மொத பஸ்ட்டு எங்க பெரியக்காக்காரிக்கி எதைஎதையோ போட்டுத் தோதுமாது பண்ணி கண்ணாலத்த முடிச்சாங்க. ஆளு எப்பிடி இருப்பா தெரியுங்களா. சொன்னா வாயுருவிப்போவுங்க. அவ தெருவுல நடந்துபோனா கொசவன் ஊட்டுலியா இப்பிடி ஒரு பொண்ணுன்னு கேப்பாங்க. பொண்ணுக்கு பொண்ணே ஆசப்படறாப்பலத்தான் இருப்பா எங்கக்கா. பாக்கறதுக்குக் கயிவி வச்ச வெங்கலப் பானெ மாரி நகநகன்னு இருப்பா. எல்லாம் இருந்து என்னாத்துக்கு ஆச்சிங்க. சுயிநாதம் சரியில்லியே. தாலிகட்டிப் போனவ, இருந்து வாழல. தாலிகட்டுன முப்பதாம் நாளே எனக்குப் புருசன் புடிக்கலன்னு கட்டுன துணியோட வந்துட்டா. ஊரு சனமே எம்மானோ ஏப்புமாப்பு சொல்லிப்பாத்துச்சு. எதெயும் அவ காதுல போட்டுக்கல. எப்பப் பார்த்தாலும் அவ கண்ணுலயிருந்து சரஞ்சரமா கண்ணு தண்ணீ எறங்கிக்கிட்டே இருக்கும். நெறமான பொண்ணா இருந்தவ எப்பிடி நெறங்கொலஞ்சிப் போனா தெரியுங்களா. எங்கூட்டுக்கு வந்து எண்ணி பதனாறு நாளுதாங்க இருந்தா. நேரங்கெட்ட நேரத்துல வேளகெட்ட வேளயில கொலகாரி எந்த எல்லயில பொயிதுபட்டுப்போன நேரத்தில போயி மாட்டுனாளோ, ஒரே முட்டா அவள ஆறு ஏயி பேயி புடிச்சிக்கிச்சி. பல ஊர்லயிருந்தும் பேய் ஓட்டுற, முடிக்கவுறு போடுற பூசாலிவுளக் கொண்டாந்து வந்து வச்சி எங்கம்மாக்காரியும் ஆனமுட்டும் பாத்தா. ஒண்ணுக்கும் அந்தப் பேயிவோ கட்டடயலிங்க. கடேசியா ரத்தம்ரத்தமாக் கக்கி, கோணகோணப் புடிச்சி இயித்து நடு ராத்திரியில செத்தா. பேயி புடிச்சதாலதான் செத்தான்னும், இல்லெ, பேயி ஓட்டுறன்னு சொல்லி பூசாலிவோ சாட்டயால, புளிய மிளாறால அடிச்ச அடியாலதான் செத்தான்னும் தெரியல. அப்பிடி அவ கதெ முடிஞ்சதுங்க.
“அடுத்தது ரெண்டாவது பொண்ணுங்க. எனக்கு நேர் மூத்தவ. எங் கப்பா கண்ண மூடுறதுக்குள்ளார எல்லாப் பொட்டச்சிவுளயும் ஊட்ட வுட்டு வெளியேத்தணும்னு எங்கம்மா மனசுல கோரிக்கப் பண்ணிக்கிட்டு அவளக் கொண்டுபோயி ஒரு ஒண்ணுமத்த பயகிட்டெ கொடுத்தா. விதி யேன்னு சொல்லி அவ நெலச்சி தரிச்சி நின்னு வாயிந்தாலும் ஒண்ணும் சொகமில்லிங்க. வாங்கி வந்த வரமாச்சே, சும்மா வுடுமா. எப்பிடியோ அவளும் மக்க புள்ளயப் பெத்து வளத்து, அதுவுளுக்கும் கண்ணாலம் காச்சின்னு பண்ணி, இயித்துக்க புடிச்சிக்கின்னு அதுவுளுக்கும் புள்ள மக்களாயி, பேரப் புள்ளென்னு எம்மானோ ஆனதயும் ஆவாததயும் பார்த்துப்புட்டு அந்த மகராசியும் போயி சேந்துட்டாங்க. அவ ஒருத்திதாங்க எங்கிட்டெ கடேசிமுட்டும் போக்குவரத்தா இருந்தா. நாங்க அஞ்சி பொட்டச்சிவோதான எங்கம்மா வவுத்துல பொறந்தது. கடேசிமுட்டும் நீ நாய, நான் நாயன்னு பேசிக் கண்டவங்க இல்லெ. உங்க மவளுவள அங்கக் கண்டன் இங்கக் கண்டன், அவன்கிட்டெ பேசுனாளுவோ இவன்கிட்டெ பேசினாளுவோ, வாரியில பாத்தன், வரப்புல பாத்தன்ங்கிற பேரு எடுக் காமியே நல்லதனமாவே எங்க ஊட்ட வுட்டு அஞ்சி பொட்டச்சிவுளும் வெளிய வந்தோங்க. இன்னது நாள் வரக்கும் பேரு கெட்டவ, ஊரு கெட்டவ, சாதி கெட்டவன்னு ஒருத்தியும் பேரு வாங்கல, எந்த சாமி புண்ணியமோ. அடுத்த பொண்ணுதாங்க நானு. மூணாவதாப் பொறந்து முட்டச்சாவியா போனங்க. எனக்குக் கண்ணாலம்ன்னு நாள் குறிப்பிட்டப்ப எனக்கு விகரம்கூட நல்லா தெரியாதுங்க. தெருவுல குச்சி வௌயாட்டு வௌயாடிக்கிட்டிருந்தவள இயித்தாந்து வச்சி இவுருதான் மாப்ளன்னு எனக்குக் காட்டுனாங்க. அப்ப எனக்கு ஒண்ணும் புரியல. எங்க ஊட்டுக்காரரும், மூணு பொட்டச்சிவுளும் மூணு ஆம்பள ஆளுவுளும் என்னெ பொண்ணு கேட்டு வந்திருக்காங்க. அப்பறம் ரெண்டு தவா தொடந்தடியா வந்ததுதாங்க. எங்கம்மாக்காரி பெருசா ஒண்ணும் சிலுப்பல. மொதப் பொண்ணுதான் ஒண்ணுமில்லாதப் போயிட்டா. ரெண்டாவது குட்டியும் தான் வென்னால பயகிட்டெ கொடுத்திட்டமே, இந்த வெடயயாவது ஒரு நல்ல எடத்தில கொடுப்பமேன்னு மனசுல கோரிக்கப் பண்ணிக்கிட்டு, சரின்னுட்டா. வந்தவங்க பவுனு போட வாணாம், பண்டம்பாடி கொடுக்க வாணாம். தட்டுமுட்டு சாமான்னு ஒண்ணும் கொடுக்க வாணாம் காதுல மூக்குல ஒண்ணுமில்லன்னாலும் குத்தமில்ல. எங்கூட்டுப் பொண்ணா ஆன பிற்பாடு நாங்க போட்டுக்கிறம். பொண்ண மட்டும் அனுப்பிவையிங்க, தாலியக் கட்டி ஊட்டுக்கு அழச்சிக்கிறம்னு சொல்லி ஒரே போடாப் போட்டாங்க. அதுக்கேத்தாப்ல எங்க ஊட்டுக்காரரு கட்டுனா இந்தப் பொண்ணத்தான் கட்டுவன் இல்லன்னா கண்ணாலமே வாணாமின்னு புடிசாதன புடிச்சிக்கிட்டு நிக்குறாரு. பொண்ணக் கட்டிக்கிறது நானு, குடும்பம் பண்றது நானு, வரவு செலவு பண்றது நானு, பொண்ண கொடுக்க முடியுமா முடியாதான்னு கேட்டு செங்கொலயா நிக்கிறாரு. எச்செலவும் போட்டு நாங்க கட்டிக்கிறம்னு சொல்றாரு. இதுதாங்க விதிங்கிறது. அதெ நாம்ப வுட்டாலும் அது நம்பள வுடாது. கொட்டிகொட்டி அளந்தாலும் குறுணி பதக்காவுமா? நாம்ப மின் செம்மாந்தரத்தில என்னா பாவம் செஞ்சமோ. மண்டயில மசுரு மொளச்ச நாளிலிருந்து படாத பாடுல்லிங்க.”
“அப்பத்தான் திரண்டிருந்த உடங்காலு. பாக்கிறதுக்கு அப்ப நானு ஒரு இதாத்தான் இருப்பன். செவப்புத் தோலு வேற. வயசிக்கு வந்த உடன்கால் லியே சோத்துக்கு இல்லாதவன் ஊட்டுப் புள்ளீவோகூட ஆம்பள கண்ணுக்குப் பகராத்தான் தெரியும். இதான் சாக்குன்னு என்னெ அடிக்கா தடா பெத்தப்பா அந்த குதுருக்குள்ளார இருக்கிறான் சித்தப்பங்கிற கதெயா எங்கம்மாகாரி வாய வுட்டுட்டா. கம்மனாட்டி வளத்தது கழு வாப் போயிடும்னு நெனெச்சாளோ என்னமோ, எடுத்த எடுப்பிலியே பொண்ணெ கொடுக்கிறன்னு சொன்ன எங்கம்மாக்காரி வாரம் பத்து நாள் கழிச்சி வாங்கன்னு இயித்துப்போடாம நாளக் குறிப்புடுங்கன்னு அன்னிக்கே சொல்லிப்புட்டா. மாப்ள எப்பிடி, குடும்பம் எப்பிடி ஒறவுக் காரங்க எப்படின்னு கேக்கல. எனக்கு இப்ப கண்ணாலம் வாணாம். எனக்கு இந்த மாப்ளய புடிக்கலன்னு சொல்லி, புடிச்ச அயிவய நான் வுட லிங்க. ஒரு வாரம் பத்து நாளுனு ஊருப்பட்ட அயிவ அயிதங்க. எதுக்கு அயிவறன்னு எங்கம்மா ஒரு வாத்த என்னெக் கேக்கல. எப்படியாச்சும் ஒவ்வொரு பொட்டச்சியா வெளியேத்திட்டாப் போதுங்கிறது எங்கம்மாக் காரியோட திட்டம். கடேசியில அவ திட்டம்தான் பலிச்சிது. எனக்கு கண்ணாலமாச்சுங்க. ஊர் வயக்கம் ஒலக வயக்கமின்னு ஒன்னுஞ் செய் யல. பொருத்தம், நிமித்தம், சவனம் சரியா இருக்கான்னுகூடப் பாக்கல. எங்கம்மா ஊட்டுலயிருந்து ஒண்ணும் போடல. போடறதுக்கு அங்க என்னா இருந்துச்சு. கொசவன் ஊட்டு ஓட்டாஞ் சில்லுதான கெடக்கும். பொதயலா இருக்கும்? மண்ணெடுத்துக் கட்டின மதிகெட்ட எங்கொசவான்னு சும்மாவாச் சொன்னாங்க. கஷ்டம் தீந்தாப் போதும்னு எங்கம் மாக்காரி சதி செஞ்சிப்புட்டா. காலயில குடிக்கிறதுக்குக் கஞ்சி இருந்தா, அந்தியில குடிக்கிறதுக்கு இருக்காது. அந்தக் காலத்துல ஒரு கலம் புடிக்கிற சாலு செஞ்சி கொடுத்தா நாலு அஞ்சி வல்லம் வரவுதான் கொடுப்பாங்க. அப்ப எதுக்கெடுத்தாலும் தானியம்தான. இப்ப மாரி அந்தக் காலத்துல காசிய ஆரு கண்டா, பணத்த ஆரு கண்டா. அந்தக் காலத்துல ஒரு பணத்தக் கண்ணால பாக்கணுமின்னா கடவுளப் பாக்குறாப்லத்தான். இப்பத்தான தொட்ட தொண்ணூறுக்கும் காசியாயிப்போச்சி. அப்ப அப்படியா. நான் கண்ணால காசியக் கண்டதே எம்மவ பொறந்த வருசத்திலதான். அதுகூட பங்கு பாகம்னு பிரிச்சதால. எப்பிடியே பாலாத்துல பொறந்து வெள்ளாத் துல வந்து வாக்கப்பட்டு, இந்த பொல்லாத சீமயில நான் பட்டது இம் மாம் அம்மாம் இல்லீங்க. எனக்கு நித்தம் கவலங்கதான், நெடுநாளும் தும்பங்கதான் சாமி.”
“எங்கூட்டுலதான் காதுல மூக்குல போட சோளத் தக்கக்கிக்கூட ஐவேசி இல்லாம கெடந்தனே, புருசன் ஊட்டுலியாவது போட்டாங்கங்கிறிங்களா. அதுதான் இல்லெ. எனக்கு என்னிக்கி காது மூக்கு குத்துனாங்களோ அன்னியலிருந்து இன்னிய முட்டும் ஓட்டயாதான் கெடக்குது. தானாவே துந்துபோச்சு. நீங்கதான் பாக்குறீங்களே? தெரியல, எல்லாம் நான் வாங்கி வந்த வரங்க. பொண்ண அனுப்பு மத்தத நாங்க பாத்துகிறம்ன்னு சொன்னது சொன்னதோட போச்சிங்க. கொலகாரக் கூட்டம் தாலிகூடக் கட்டலிங்க. எட்டணாவுக்கோ பத்தணாவுக்கோ ஒரு சாயச் சீலய எடுத்தாந்து கொடுத்துக் கட்டச் சொல்லி கோவுலுக்கு இயித்துக்கிட்டுப் போயி மாலய மாத்திக் கண்ணாலம் முடிஞ்சிப்போச்சின்னு ஊட்டுல கொண்டாந்து வுட்டுட் டானுவோ மகராசனுவோ. எனக்கு சதிமோசஞ் செஞ்ச அந்தக் கொலகாரக் கூட்டமும் செத்து மண்ணாயிப்போச்சுங்க. நான் யாரங்க கொற சொல்றது? பெத்தவங்கள சொல்றதா, உத்தவங்கள, மத்தவங்கள சொல்றதா. மாமனார சொல்வனா, மாமியார சொல்வனா? இல்லெ எதுக்கும் வாய் பேசாத எதுக் கெடுத்தாலும் அம்மாக்காரிகிட்டெ போயிப் படுத்துகிற புருசனத்தான் சொல்வனா. எல்லாத்துக்கும் அமப்பு வேணும். அதுக்குத் தல எயித்து நல்லா இருக்கணும். அது சரியில்லங்கிறப்ப நாம்ப கோவப்பட்டு வருத்தப்பட்டு என்னா ஆவப்போவுது? என்னோட கெரகவாட்டம் எப்பிடியோ அப்பிடித் தான எல்லாமும் வந்து சேரும். சந்தனத்த மூந்தா சந்தன வாசன வரும், சாணிய மூந்தா? அப்பிடிதாங்க எல்லாமும்.”
“அட எஞ் சிவன. துரியோதனன் கூட்டத்துல வந்து பாஞ்சாலி மாட்டிக்கிட்டாப்ல மாட்டிக்கிட்டங்க. எங்கப் போனாலும் விதி வுடுமா. பொறந்த எடத்துலதான் கஞ்சிக்கு கதம்பாடுனன்னா பூந்த ஊட்டுல அதெவிடப் பெரிய பாட்டா இருக்குடா ஆண்டவனேன்னு விதிய நெனச்சிக்கிட்டு எடுபுடி ஆளாட்டம் ஆளாளுக்கு வேல செஞ்சிக்கிட்டுக் கெடக்குறன். அப்ப எனக்கு வயிசி வல்லிசா பாஞ்சி முடிஞ்சி பதனாறோ என்னமோதான் நடந்துகிட்டுருந்துச்சு. எங்க ஊட்டுக்காரருதான் அந்த பிக்கேறிக் கூட்டத்தில தலச்சன் புள்ளெ. எங்கம்மா பெத்தது ஒம்போதுன்னா எங்க மாமியா பெத்தது பதினொண்ணு. அம்மாம் பெரிய கிங்கிலியக் கூட்டத்தில வந்து மொத மருமவளா நான் பட்டது இந்த அய்யனாருக்குக்கூட பொறுக்காதுங்க. மாமனாரு மாமியாள சேத்தா மொத்தம் பதிமூணு உருப்படி. இந்த மொத்த டிக்கட்டுக்கும் நான் ஒருத்திதான் சிப்பந்தியாளு. ராவும் பவலும் அதெ எடுத்தா, இதெ எடுத்தான்னு ஆளு மாத்தி ஆளு எனக்கு வேலவச்சிக்கிட்டே இருப்பாங்க. சூனு செத்த நேரம் குந்த முடியாது. ஒரு நிமிட்டுகூடக் கண்ண மூட முடியாது. நாள் முயிக்க ஏத்தக்காரன் நடக்குறாப்ல அந்த நவ ஊட்டுல எனக்கு நடந்துகிட்டே இருக்கிற வேலதான். அதோட ஊடு கூட்டி, தண்ணி தூக்கி, ஊட்டு வேல சகலத்தயும் செஞ்சி சாமாண்டு போவும். எங்க மாமனாரு கொணத்துல அப்பிடியொன்னும் மோசமில்லன்னாலும் அனம் பரந்த மனுசன்.
அந்தாளுக்கு நாள் மூச்சூடும் வேலயப் பத்தியேதான் மனசு ஓடும். நல்ல நாளு பெருநாளுன்னுகூட பாக்காம ஒரு கச்சட துணியோட மண்ணப் பெசஞ்சிக்கிட்டுக் கெடப்பாரு. அப்பிடியில்லன்னா இத்தன உருப்படியும் நாடேத்த முடியுமா? இந்தக் காலம் மாரி அப்ப நரம்ப கட்டாப் பண் ணிக்கிறதுதான் இல்லியே. அவுரு போக்கே தனி போக்குதான். ஊருல யாருகிட்டயும் வாவாத்த வச்சிக்க மாட்டாரு. என்னாடா கொசப் பய லன்னு வண்டி மொளக்குச்சியத் தூக்கிக்கிட்டு வந்தா என்னா பண்றது, ஊருக்கு ஒரு குடியாச்சேன்னு ரெண்டாம் பேருக்குத் தெரியாமத்தான் தங் காலத்தக் கடத்திட்டாரு மனுசன். எங்க வளவுல அப்ப இம்மாம் கூட்டமில்ல. ஒண்ணு ரெண்டு ஊடுவோதான் இருந்துச்சி. அவுரு எம்மாம் சத்தம் போட்டாலும் எம்பி எம்பிக் குதிச்சாலும் ஒரு புள்ளிவுளும் எதுத்து நின்னு பேசாதுவோ. அவுரு பேச்ச எம் மாமியாரு என்னா ஏதுன்னு காதுல போட்டுக்க மாட்டா. தண்ணீல எருமய அடயப் போட்ட கதெதான். அந்தாளு பொண்டாட்டிக்காரியப் பேசறதுக்குப் பதிலா என்னத்தான் திட்டுவாரு. நாத்தனாருல ரெண்டாவது குட்டிதான் கொஞ்சம் கொணம் கெட்டவ. எதுக்கெடுத்தாலும் சள்ளுபுள்ளுன்னு சண்டக்கிப் பாய்வா. மத் தது எல்லாம் தாயப் போலத்தான். அதெது பாட்டுக்கு ஓடிக்கிட்டு ஓடியாந்துக்கிட்டு கெடக்குங்க. கொயிந்தனார்வுள ஒண்ணும் குத்தம் கொற சொல்ல முடியாது. நானும் மாமனா மாமியாருக்கு எப்பிடி நடக்கணுமோ அப்பிடித்தான் நடந்தன். ஒருத்தங்க கொணம் தெரிஞ்சி நடக்க வாணாமா? எங்க மாமியா செஞ்சத்துக்கு ஈட்டுக்கு நான் ஒண்ணுமே செய்யலிங்க. பவல்ல ஊட்டுல ஒருத்தரயும் கண்ணால பாக்க முடியாது. விடியறதுக்குள்ளார பானவுள, மொடாவுள, சட்டிவுள கட்டித் தூக்கிக்கிட்டு ஆளுக்கு ஒரு ஊருன்னு போய் சேந்துடுங்க. அதுல கடேசியாளு கொஞ்சம் கூறு இல் லாதவன். ஒரு நாளு தப்புனாப்ல பத்துப் பான எடுத்துக்கிட்டுப் போனா ரெண்டு பானையைத் திருட்டுக் கொடுத்திட்டுத்தான் வருவான். அதுக் காக அப்பன்காரன்கிட்டெ ஒரு நாளப்போல பாட்டு வாங்குவான். எம் மாம் பாட்டு வாங்குனாலும் ஒரு வாத்த எதுத்துப் பேசி நானறியன். கடேசி காலமுட்டும் அப்பன்காரன்கிட்டெ பாட்டு வாங்குறத அந்தாளு நிறுத்தல. அந்த ஊட்டு புள்ளிவோ அப்பன்காரன்கிட்டே மட்டும் ஒரு கட்டு மானமாத்தான் இருந்துச்சுவோ. அதுவோதான் அப்பிடின்னு இல்லெ, ஊரு புள்ளிவுளும் அப்ப அப்பிடித்தான் இருந்துச்சிவோ. இப்ப அப்படியா. யே அப்பா. நேத்து பொறந்ததுகிட்டகூட வாயக் கொடுக்க முடியாது. ஏயி ஊரு ராபேண்டும் கலிக்காணமும் பேசும். அதெல்லாம் ஒரு காலங்க. இந்தக் காலத்து புள்ளிவோ காது, மூக்கு, கண்ணோட பொறக்குதோ இல்லியோ, ஒரு முய வாயோடத்தான் பொறக்குதுவோ.”
“கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்து ஒரு நாளப் போல ஐஞ்சாறு வருசம் ஓடிப்போச்சுங்க. இந்த ஐஞ்சாறு வருசத்துல நானும் எங்க ஊட்டுக்காரரும் புரிசன் பொஞ்சாதின்னு ஒரு நாளும் சிரிச்சி பேசி நானறியன். ஒரு நாளாச்சும் சந்தோசமாக் கூடியிருந்தம்னு இல்லிங்க. எங்க அய்யனாரு சாக் கியா சொல்றங்க. ஒரு நாளும் தனி பா படுக்கயில ஒதுங்கிப் படுத்தவங்க கெடயாது. ஊடு ஒண்ணும் அம்புட்டு பெரிய ஊடு இல்லெ. ஆட்டு கொடாப்பாட்டம் இருக்கும். அதுல சிறுசும் பெரிசுமா நாலஞ்சி குதிருங்க இருக்கும். அந்த ரவ எடத்துலதான் ஒண்ணுமேல ஒண்ணுன்னு மொத்த உருப்பிடியும் கெடக்கும். நான் குளிருக்கு அண்டயா குதிரு சந்துல போயி மொடக்கிக்குவன். எங்க மாமியாரு அடுப்புக்கட்டி மேல கால நீட்டிக்கிட்டு படுத்துக்குவாங்க. எங்கூட்டுக்காரரு வேசட காலமாயிருந்தா பெருமாக் கோவுல்லப் போயி சுருட்டிக்குவாரு. குளுரு நாளயில திண்ணயில மொடக்கிக்குவாரு. கை வேலய செய்யத்தான மருமவ கொண்டாந்தம்னு ஊட்டு வேல அல்லாத்தயும் என் ஒருத்தித் தலமேலியே போட்டுட்டா மாமியாக்காரி. இப்பிடி ஓடுச்சிங்க ரெண்டு மூணு வருசம். அப்பறந்தான் மாட்டெப் புடிச்சிக் கொடுக்கிறாப்ல ஒவ்வொரு பொண்ணா ஆறு உருப்படியயும் வெளியேத்துனாங்க. சரி, எல்லாப் பொட்டச்சிவுளும் கண் ணாலமாயிப் போயிட்டாளுவோ. சரி, செத்த சூன்னு குந்தலாம், புருசன் பொஞ்சாதின்னு பேசி சிரிச்சி அப்பிடி இப்பிடி இருக்கலாமின்னு நெனச் சப்ப, அட எஞ் சிவன, அதுக்குக் கொடுப்பன இல்லாமப்போச்சிங்க எனக்கு. எந்தக் கதெய நான் என்னான்னு சொல்வன். சொல்லி வச்சாப்ல புள்ளெ பெக்க ஒவ்வொருத்தியா வரிச கட்டிக்கிட்டு வராளுவுங்க. ஒவ்வொருத்தியும் அஞ்சி ஆறுன்னு பிதுக்கித் தள்ளுனாளுவோ. என்னா பண்றது? எல்லாக் கருமாந்தரத்தயும் நாந்தான் அள்ளி ஊத்துனன். ஒரே நேரத்துல ரெண்டு மூணு பேரு வவுத்தப் புளுத்திக்கிட்டு வந்து நிப்பாளுவோ. காய மருந்து அரச்சி அரச்சியே கைரேக வுட்டுப்போச்சிங்க. டமாசுக்கு சொல்லலீங்க. நிசத்தத்தான் சொல்றன். இதுதான் இப்பிடின்னா, அட கடவுளே, பொங்க, தீவாளி, திருநான்னு வந்தாப் போதுங்க, அத்தனக் கூட்டமும் வந்து குமிஞ்சிப்போவும். மொத்தக் கூட்டமும் கோயி முட்டய அடுக்குனாப்ல அந்த ரவ எடத்துல அடஞ்சிக்கும். மூச்சு வுடக்கூட எடமிருக்காது. எம் மாமியா ஒண்ணுக்கு வெளிக்கிப் போவாளே, அதான். மத்த நேரமெல்லாம் அடுப்புல எதெயாவது போட்டு கொதிக்க வச்சிக்கிட்டே இருப்பா. அந்த மாரி மணக்கமணக்க யாரலயும் சோறு குயம்பு ஆக்க முடியாது. கைப்பக்குவமுள்ள பொம்பள. நான் நாள் முயிக்க கம்பு சோளமின்னு குத்திக்கிட்டோ அரச்சிக்கிட்டோ கிடப்பன். சாதாரணமா ஒரு நாளக்கிப் பத்து பக்கா சோளம் செலவு ஆவுமின்னா பாத்துக்குங்க. அப்பிடி சாப் புடலன்னா நாளு முயிக்க மண்ணோட மல்லுக்கட்ட முடியுமா? அப்ப என்னோட மொத கொயிந்தனாருக்கு கண்ணாலமாயி இருந்துச்சு. அவ ஒண்ணுத்துக்கும் புண்ணியமில்லாதவ. சோத்தாளுதான். செத்த நேரம் வேல செஞ்சா செத்த நேரம் அவளுக்குப் படுத்துக்கணும். மூச்சிரப்பு நோவு அவளுக்கு. அதோடவும் நோக்கம் சாக்கம் தெரியாதவ.”
“இப்பிடி எம்மானோ சொல்லிக்கிட்டே போவலாங்க. என்னிக்கிமே தேரு திருநாளா இருந்த ஊடுதாங்க. இன்னிக்கி இடிஞ்சி வியிந்து மந்தமோடா மசானக்கரயா கெடக்கு சாமி. எனக்கோ எங்கூட்டுக்காரருக்கோ கூடப் போறந்தவங்கின்னு இப்ப யாருமில்லிங்க. பங்காளி ஊட்டுப் புள்ளீங்கின்னு நெறயா பேர் இருக்குதுவோ. இப்ப எல்லாம் ரெண்டாங் கால் மூணாங்கால் ஒறவாப் போச்சுங்க. நல்லது கெட்டதுன்னா போவன். ஆனா தண்ணி வென்னி குடிக்க மாட்டன். நம்பளுக்கு கொடுக்க வாணாம், வாங்க வாணாம். அதெது குடும்பத்தோட இருந்தாப் போதும். நான் எனக்கு ஏன் அத செய்யல, இதெ செய்யலன்னு கேக்க மாட்டன். தாய் மொகம் பாக்காத புள்ளெயும் மழ மொகம் பாக்காத பயிறும் உருப் படுங்களா? அப்படித்தான் எல்லாமும். இப்ப கொஞ்ச காலமாத்தான் யாரு மத்த மகுடியா இருக்கன். ஒவ்வொண்ணா எல்லாத்தயும் மறந்துட்டங்க. மறக்காம இருந்தா மக்கா நாளு பொயப்பு எப்பிடி ஓடும்? பொண ஓட்டுனாத்தான நெல்லு கொறிக்க முடியும். ஆண்டவனோட கட்டள எப்பிடியோ அப்பிடித்தான எல்லாம் நடக்கும். இடிஞ்சி வியிந்து கெடக்குற ஊட்ட எடுத்துவச்சிக் கட்டலாந்தாங்க. எந்த ஆம்பள புள்ளெ இருக்கு, ஆளப்போவுதுன்னு அப்பிடியே வுட்டுட்டங்க. வவுத்த பாக்குறதா, வசதியப் பாக்குறதா சாமி. வவுத்துப் புள்ளெ கீய எறங்குற மாரிதாங்க எனக்கு இப்ப ஒவ்வொரு நாளும் ஓடுது. எம்மானோ நாளு நானு பல்லு வௌக்காமியே இருந்திருக்கரனுங்க. புஞ்ச வௌஞ்சா பறக்குடிக்கிப் பஞ்சமில்லன்னு சொன்னது எனக்குத்தாங்க.”
“அப்பறம் தொடந்தடியா ரெண்டு கொயிந்தானாருக்குக் கண்ணால மாச்சுங்க. அக்கா தங்கச்சியத்தான் கட்டுனாங்க. அதுல மூத்தவ கொஞ்சம் வாய் செத்தவ. தங்கச்சிக்காரி எம்மாம் ஏசுனாலும் பேசுனாலும் வாயத் தொறந்து ஏன்னு ஒரு வாத்த கேட்டவ கெடயாது. அம்மாம் பொறும பொறுத்தவ. மத்தவங்களுக்கும் கண்ணாலம் கூடிவந்துச்சிங்க. நாலாவது கொயிந்தனாரு பொண்டாட்டி ஒரு மாதிரி. அவ கொடுத்த சாவியிலதான் எங் கொழுந்தனாரு பங்கு பாகம் பிரிக்கணுமின்னு பேச்ச ஆரம்பிச்சாரு.
பங்கு பாகமின்னு பிரிச்சாங்க. ஒரு அடுப்பு இருந்த ஊட்டுல பல அடுப் பாயிப்போச்சு. பங்கு பிரிச்ச ரெண்டு மூணு மாசத்திலியே வவுத்தால ஓடி, படுத்தப் படுக்கயா கெடந்து எங்க மாமனாரு செத்தாருங்க. ஊட்டுக்குத் தலகருத்தனா இருந்தவரு போயிட்டாரேன்னு அடிச்சி பெரண்டு அயிது தெளிஞ்சப்ப, எங்க மாமனாரோட கருமகாரியத்தன்னிக்கி–விடிஞ்சா கருமகாரியம்–படுக்க போறன்னு போனவங்கதான் எங்க மாமியாரு. நடுச்சாமம் இருக்கும் ‘யே பொன்னம்மா நெஞ்ச அடெக்குதடி, நவ தண்ணீ எடுத்தாடி’ன்னு சொன்னதுதான். அதுதாங்க கடைசி வா வாக்கியம். அடிச்சிப்புடிச்சி எயிந்திருச்சீ தண்ணிய எடுத்துக்கிட்டுப் போறதுக்குள்ளார உசுரு அடங்கிப்போச்சிங்க. நோவு நொடி இல்லாம, பத்து நாள் இருவது நாள்ன்னு படுக்கயில இயித்துப் புடிச்சிக்கிட்டுக் கெடக்காம இரு சிமிட்டு நேரத்திலயே எல்லாம் முடிஞ்சிப்போச்சுங்க. அப்ப எனக்கு எப்பிடி இருந் திருக்கும்றீங்க. “யே என்னெ பெத்த தாயாரே”ன்னு சொல்லி நெஞ்சியில அடிச்சிக்கிட்டு, தரயில வியிந்து புரண்டு அயித சத்தத்தக் கேட்டுட்டுத்தான் மத்தவங்க ஓடியாந்தாங்க. தலயத் தூக்கிப்பாக்குறாங்க. தண்ணீயக் கொடுத் துப்பாக்குறாங்க. கண்ணு முழிய பிதுக்கிப்பாக்குறாங்க. என்னாத்தங்க நான் சொல்வன். அடிச்சிப் பெரண்டுக்கிட்டு ஏயி ஊரு அயிவய அயிதுக்கிட்டுப் போயி மசானக்கரயில சேத்தங்க. ஊரே அயிதுச்சுங்க. சும்மா சொல்லல. ஊர்ச்சனமே வாயுருவிப்போச்சு. அப்பிடியான ஒரு பொம்பளய எந்த செம் மாந்தரத்திலியும் பாக்க முடியாது. அந்தக் காலத்து மனுஷியாச்சே. பாக்குறதுக்கு நெறமா கடஞ்சியெடுத்த பம்பரம் மாரி இருப்பாங்க. ஒடம்பும் திட்டமான ஒடம்புதான். அத்தன புள்ளெயுளயாச்சும் வாய்த்துடிக்க ஒரு வாத்த சொல்லுவாங்க. என்னெ ‘பொன்னம்மா’ங்கிற வாத்தய தவுத்து மறுவாத்த சொல்லிக் கூப்புட்டவங்க கெடயாது. பொய் சொன்னா வாயி அயிவிப்போவாதுங்களா. பூமியில இருட்டு வியிந்த பெறவு என்னெத் தெருவுல ஒரு அடி வைக்க வுட மாட்டாங்க. சோறு குழம்பு ஆக்குறதில ஒரு உப்புக்கல்லு கொறஞ்சாலும் கூடுனாலும் மூச்சு வுட மாட்டாங்க.”
“நான் வாக்கப்பட்டது பெரிய குடும்பங்க. நாத்திநங்க, கொயிந்தனுங்க, அவுங்க புள்ளெ மக்கன்னு எம்மாம் கூட்டம்! அட ஆண்டவன, அம்மாம் கூட்டமும் எப்பிடித்தான் லெக்காவுக்கு ஒண்ணாப் பிரிஞ்சிபோச்சோ. அதுல முக்காலே மூணுவீசம் பேரு வாயில மண்ணள்ளிப் போட்டுக்கிட்டுப் போயிட்டாங்க. கோவுலு மாரி எப்பியும் கூட்டமும் கூக்குரலுமா இருந்த எடந்தான் இப்ப மந்தமோடா கெடக்கு. மனக்கவலய சொல்லி ஆத்தக்கூட இப்ப எனக்கு ஆளில்லிங்க. சொத்து போன வழி பொடி போன வழின்னு அங்க இங்கின்னு ஒண்ணுக்கொண்ணு ஆதரவில்லாம கெடக்குதுங்க. இருக்குற ஒண்ணு ரெண்டு குடும்பமும் அவ்வளவு செண் டுப்பா இல்லெ. தொழிலயும் வுட்டுட்டாங்க. ராத்திரிக்கிக் குடிக்கக் கஞ்சி இல்லங்கிற நெலமயிலதான் அவுங்க வண்டி ஓடுது. திருநாவுல கல்லய சூரி விட்டாப்ல எல்லாத்தயும் வாரிக்கொடுத்திட்டு செல்லரிச்ச மரமா குந்தியிருக்கன். சங்கு சூத்தாச்சு தாதன் வாயாச்சுங்கிற கதெயா நானும் காலத்தக் கடத்திக்கிட்டு உசுர வச்சிக்கிட்டிருக்கன். நான் இனுமே இருந்து என்னாத்த செய்யப்போறன். என்னாத்தப் பாக்கப்போறன். என்னெயும் கொண்டுக்கிட்டுபோவாமப் போயிட்டாங்களேன்னுதான் ராவும் பவலும் அயிவுறன். வேற எதுக்கு நான் அயிவுறன். நான் மட்டும் எத்தன நாளக்கி சுய ராஜ்ஜியமா வாயிந்திடப் போறன்.”
“எனக்கு எங்க மாமியார நெனச்சாத்தான் மனசு அடங்க மாட்டங்குது. எனக்கு மாமியா இல்லிங்க. என்னெப் பெத்த தாய்தாங்க. என்னெப் பெத்தவ கூட அம்மாம் குணமா மணமா வளக்கலிங்க. நித்தம் ஒரு வளத்தியா நேர் வளத்தியா வளத்தாங்க. அவுங்களுக்குத் தல மசுரு ஒரு பாகம் இருக்குங்க. அப்பிடிப்பட்ட மகராசி பெத்த புள்ளெதாங்க எங்கூட்டுக்காரரு. எப்பிடி மொளக்குதோ அப்பிடித்தாங்க வளரும். அம்மா மாரியே எது வந்தாலும் எது நடந்தாலும் அதுந்து ஒரு வாத்த பேசச் சொல்லுங்க பாப்பம். அதுதான இல்லெ. பொன்னம்மாங்கிற வாத்தயத் தவுத்து வேற வாத்த சொல்லி என்னெக் கூப்புட்டவங்க கெடயாது. அடியேன்னு ஒருநாளும் கூப்புட்டவங்க கெடயாது. அவுங்க புண்ணியம் செஞ்சவங்க, மகராசியாப் போயிசேந்துட்டாங்க. எங்கறி சங்கக்கெட்ட கறி. அதான் இப்பிடி நாறி கிட்டுக் கெடக்குது.”
“எங்க ஊட்டுக்காரரு செத்த அன்னிக்கி மயன்னா மயங்க. மய கொட்டுகொட்டுன்னு கொட்டுது. அவுங்க சாவும்போது அவுங்களுக்கு சாவுற வயசில்லிங்க. கொற வயசிலியே போயிட்டாங்க. சீக்கு, புணி வந்து செத்திருந்தாக்கூட தேவலியே. நின்னது நிக்க எனக்குத் தீம்பு வந்து நேந்துபோச்சி. செத்தப்பக்கூட அழவா சொல்ல முடியா அழவா ஈச்சம் பயமாட்டம் இருந்தாங்க. பாடயத் தூக்கும்போது அயிவுறன், அயிவுறன் அப்பிடி அயிவுறன். கண்ணுல சரஞ்சரமாத் தண்ணீ எறங்குது. நம்ப காலம் முடியப்போவுதேன்னு அவுங்களுக்குத் தெரியாது. புள்ளெயும் போச்சி, புருசனும் போனான்னு அன்னிக்கிப் புடிச்ச அயிவய நான் இன்னும் நிறுத்தல்லிங்க.”
“கூடியிருந்த முட்டும் உயிர் சிநேகிதமாத்தம் இருந்தோம். நீ நாய, நான் நாயன்னு பேசிக்காம போனதுமுட்டும் நல்லதாப் போச்சுங்க. கடேசி முட்டும் கொங்கல கொலச்சிக்கல. நொள்ளச் சொல்லு சொல்லல. ஈனத் தொழிலு செய்யல. ஓரகார கடவுளு அந்த முட்டாவது நல்லது செஞ்சானே. நானாச்சும் வாய் துடுக்கா அப்பிடி இப்பிடி ஒண்ணு ரெண்டு வாத்தயப் பேசுவங்க. எங்க ஒடயாரு ‘ம்’ங்கிறதுக்கு மேல வாயத் தொறக்க மாட்டாரு. எம்பேர்ல உசுரா இருந்தாரு. நல்லவங்கதான் முன்ன முன்ன போறாங்க. யாரு ஆடுனாலும் பாடுனாலும் கொஞ்ச காலம்தான்.”
“சாவ நெறயப் பாத்துட்டங்க. சாவ நாம்பளா எதுக்குத் தேடிப் போவ ணும், அதா வரட்டுமேன்னுதான் குந்தியிருக்கிறன். இந்த ரூவத்துக்கு ஆளா வன்னு நெனக்கிலீங்க. என்னாத்தங்க சொல்றது. கருங்கல்லா, எல்லாக் காலத்துக்கும் அப்பிடியே இருக்க. போவுங்காலம் வந்தா ஒரு நாளக்கிப் போறவங்கதான எல்லாரும். மனசுல எம்மானோ கதெ கெடக்குதுங்க. கொஞ்ச காலம்தான்னாலும் நடக்கக் கூடாததெல்லாம் நடந்துபோச்சிங்க.”
“எங்க ஊட்டுக்காரரு பேரூ வடமலங்க. பாக்குறதுக்கு ஆளு எப்பிடி இருப்பாரு தெரியுங்களா. அவுங்க குடும்பம் சாதாரண குடும்பம் இல்லிங்க. பெரிய பெரிய வரலாறெல்லாம் உண்டுங்க. இந்தக் கோவுல உண்டமிச்சதே அவுங்க மூதாதிங்கதான். எங்க ஊட்டுக்காரரோட கொள்ளுப்பாட்டனுக்கு முப்பாட்டன்தாங்க இந்த சாமிவுளக் கொண்டாந்து இந்த எடத்தில நெல நிறுத்துனது. அவுரு ஒத்தக்கி ஒத்த ஆளுதாங்க. கூடப் பொறந்த பொறப் புன்னு, அண்ணன் தம்பின்னு ஒருத்தரும் கெடயாது. தாய் ஒருத்திதான். அவளும் கண்ணு தெரியாத குருடி. தக்க வாலிப பருவத்துல சூளயில நெருப்ப வச்சிட்டு வந்து தலய சாய்ச்சிருக்காரு. இந்தா அங்க நிக்குறாங்களே, அவுங்கயெல்லாம் குதிரயப் போட்டுக்கிட்டு அவரோட கெனவுல வந்து கெயக்க சனிமூல பாரிசமா வளயமாதேவிகிட்டெ நாங்க கெடக்குறோம். எங்களக் கொண்டாந்து வச்சி, எங்களப் போல ரூபம் செஞ்சிவைய்யி. எங்களுக்கு ஆலயம் கட்டிவச்சி மொற வச்சிக் கும்புட்டுக்கிட்டு வா. இந்த மாசத்தில, இந்த நாளயில, இந்தக் கிழமயில போன்னு சொல்லிப்புட்டு மாகயா மறஞ்சிட்டாங்க. என்னாடா நம்ப குடி தெய்வம் இப்பிடி வந்துசொல்லுதே, நிசமா இருக்குமான்னு எண்ணிக்கிட்டே இருக்கயில, குறுப் புட்ட நாள் வந்ததும் கட்டிச்சோத்தக் கட்டி எடுத்துக்கிட்டு சொப்பனத்தில் சொன்னபடியே தடத்தப் புடிச்சி ரெண்டு ஆளயும் கூப்பிட்டுக்கிட்டுப் போயிப் பாத்தா சொப்பனத்தில் சொன்ன மாரியே எல்லா சாமிவுளும் ஒரு ஈச்சம் புத்துக்கு கீய மண்ணு அண்டிப்போயி கெடந்திருக்கு.
பொறந்த புள்ளெயத் தூக்குற மாரி ஒவ்வொண்ணா தூக்கித் துணியில வச்சி மூட்டயாக் கட்டி, தூக்கிக்கிட்டு வந்தாராம். தூக்கும்போது எள்ளு மூட்டய தூக்குறாப்பல இருந்துச்சாம். இதெ எப்பிடித்தான் கொண்டுக்கிட்டுப் போயி சேப்பனோ கடவுளேன்னு சொன்னதுதானாம். சோளத் தக்கயத் தலயில வச்சியிருக்கிற மாரி ஆயிடிச்சாம். சும்மா நடந்துபோற மாரி சாமி வுள தூக்கிக்கிட்டு வந்தாராம். தலபாரம் காத்தாட்டம் இருக்காம். ஒரு கைப்பை கனம்கூட இல்லியாம். எறக்கி வச்சா எறக்குன எடத்திலியே சாமி குடிகொண்டுடும்னு சொல்லி நேர் துருவா இங்கக் கொண்டாந்து, இப்ப இருக்கிற எடத்துல வச்சிப் பூச பண்ணுனாங்களாம். சூடத்த ஏத்திக் கும்புட்டாங்களாம். சத்தியமான தெய்வங்க.”
“இந்த எடத்தில அய்யனார், சின்ன கருப்பு, பெரிய கருப்பு, சங்கிலிக் கருப்பு, கருப்பையான்னு இருக்காங்க. எனக்கு சொந்தபந்தமெல்லாம் இவுங்கதாங்க. பெரியவரு சுத்தம்னா சுத்தம் அப்பிடியொரு சுத்தங்க. ஆனாதா அங்க குந்தியிருக்கானே, நான் பூப்போட்டு கேட்டனே அந்த குள் ளக் கருப்புக்குத்தாங்க ஆடு, கோயி, பன்னின்னு வேணும். கருவாடு, சுருட்டு, சாராயமெல்லாம் அவனுக்குதாங்க. பெரியவராட்டமே நானும் இருந்திட்டங்க. கவுச்சி ஆக்குன ஊட்டுல நான் பச்சத் தண்ணீகூடக் குடிக்க மாட்டங்க. அந்தக் குடிகாரப் பய ராத்திரி வேட்டக்கிப் போயிட்டு வரயில எங்கிட்டெ வந்தான். அதுக்குத்தான், அவங்கிட்டெ பூப்போட்டு என்னா விசியமின்னு கேட்டுக்கிட்டு இருந்தன். மனுவாள் எம்மானோ வராங்க. வந்த காலடி மறயுறதுக்குள்ளார மண்ணோட மண்ணா மறஞ்சிப்போயிடுறாங்க. இவுங்கதாங்க நெலச்சி தரிச்சி இருக்குறவங்க. அதனால தான் ராவும் பவலும் எம் பிரிசன் செத்த நாளா, தொயில வுட்ட நாளா இந்த சந்நிதானத்தக் கூட்டிப் பெருக்கிக்கிட்டுக் கெடக்குறன். வேற எங்கி யும் நான் போவ மாட்டங்க. ஊருல ஒலகத்துல என்னா நடக்குதுன்னு நானறியன். நாம்ப என்னா கடெ பொறுக்கியா ஊர்க்காட்டுல சுத்துறதுக்கு? கோவுல்லயும் ஒண்ணும் பெரிசா கெடெக்காதுங்க. ஆடு வெட்டுனா அஞ்சி பத்தின்னு தருவாங்க. கனி கேக்க வர்ற சில்லர அயிட்டமெல்லாம் ஒண்ணோ ரெண்டோ, நானா கேட்டு வாங்கிக்குவன். மத்தது ஒண்ணுமில்லிங்க.
பொங்க வைக்கிறவங்க காக்காயிக்கு வக்கிறாப்ல கையளவு எலயில சோறு கொடுப்பாங்க. இல்லன்னா ஒரு எல சாப்பாடு கெடக்கும். இப்ப எங்க கொயிந்தனார் மவன் ஒருத்தன்தான் கோவுலு படக்கிறான். இங்க அவன் வச்சதுதான் சட்டம். குந்துனாப்ல எல்லாத்தயும் நெங்கிக்கிட்டு போயிடுவான். மீறி ஏதாச்சும் கேட்டம்னா உனக்கு அவ்வளவு, வாயிசி வந்துருச்சா, அந்தளவுக்கு உனக்கு கொடிகட்டிப் பறக்குதா, ஆட்டிப்புடு வியா, புடிங்கிப்புடுவியா இல்லெ மானியத்தை நிறுத்திப்புடுவியான்னு கேட்டு மல்லுக்கு வந்துடுவான். அதனால நான் அவங்கிட்டெ வாயக் கொடுக்கிறதே இல்ல. இப்ப வருவான், உருமப் பூசக்கி. அவன் ஊட்டுக்குப் போயி வேண்டிய நேரமாயிடிச்சி. ஆளு இன்னும் திரும்பல.”
“எத்தினியோ நாளு பல்லு வௌக்காமியே கெடந்திருக்கங்க. வாயிக்கு வெத்தல சருவு மட்டும் இருந்திட்டா எத்தன நாளான்னாலும் பல்லுல பச்சத்தண்ணீ படாமியே கெடப்பங்க. அப்பப்ப கோவுலு படக்கும்போது கெடக்கிறத வாயில போட்டுக்குவங்க. அல்லு பகல் அறுவது நாழி நேர மும் இவங்கக்கிட்டியேதான் கெடக்குறன், கடேசி கந்தாயத்தில என்னா பண்றாங்கன்னு பாப்பமே. இதுங்க குறிகெட்ட தெய்வமில்லிங்க. இப்ப நான் சொன்னதெல்லாம் உங்கக்கிட்டே சொல்லலிங்க. இவுங்கக்கிட் டெதான் சொன்னன். நான் சொல்றத எல்லாத்தயும் அவுங்க கேட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. சத்தியமான தெய்வங்க. இல்லன்னா இந்த ஊரு ரெட்டியாருங்க மூஞ்சியில எப்பிடி கரியப் பூசுனாங்க தெரியுங்களா?”
“ஒரு வருச திருநாவுல சாமி தேருமேல ஊர்கோலமா வந்துகிட்டிருக்கிறப்ப எங்காளுவோ ரெண்டு மூணு பேரு தேருல ஏறியிருக்காங்க. அதெப்பாத்ததும் ரெட்டியார்வுளுக்கு என்னமா இருந்துச்சோ. பூசாரிங்கிற மொறமயில ஒரு கொசவன்தான் தேருமேல இருக்கணும் கூட்டமா ஏறிகிறதுக்கு இதென்ன கொசவன் ஊட்டுத் தேரா, ரெட்டியாரோட தேராடான்னு கேட்டு, தேர இயிக்காம நடுத்தெருவுலியே நிறுத்திப்புட்டாங்க. சமாதானம் செஞ்சதுக்கு அதுல ஒரு பிரிவுக்காரங்க என்னா இருந்தாலும் து கொசவன் சாமிதான்னு சொல்லி கிண்டுமானம் பண்ணி, தேர இயிக்க மேக்கொண்டு வுடல. எம்மானோ கெஞ்சிக் கூத்தாடிப்பாத்திருக்காங்க.
எதுக்கும் ஊர்ச்சனம் கட்டு அடயல. கொசவன் சாமின்னா அப்பிடியே போவட்டம், ரெட்டி சாமின்னா இப்பிடியே வரட்டும்னு தர்க்கம் நடத்திக்கிட்டிருக்காங்க. எங்காளுவோ எம்மானோ அடங்கித்தான் போனாங் களாம். நூறு ஊட்டுக்காரன்கிட்டெ ஒரு ஊட்டுக்காரன் கச்சிபண்ண முடியுங்களா. காலயில புடிச்ச வடம்தான் அப்படியே முச்சந்தியில கெடக்கு. தேரு ரெண்டு தெருவகூட சுத்துபிரமாணம் வரல. பகலும் ஓடிப்போச்சி. இருட்டு எறங்கவும் ஆரம்பிச்சிடிச்சி. அப்புறமும் ரெட்டியாருவோ சமா தானத்துக்கு வரல. அப்ப இந்த சாமிவோ என்னா பண்ணியிருக்கு ‘டே என்னெ கோவுலுக்குத் தூக்கிக்கிட்டு போடா. நான் வேட்டக்கிப் போவ நேரமாச்சி’னு சொல்லிச்சாம். அந்த வாத்தய கேட்ட மறுநிமிசமே இடுப்புல சுத்தியிருந்த துண்ட எடுத்து நோவாம பொதயல தூக்குறாப்பல தூக் கிக்கிட்டு எறங்குனதுதானாம். நாலு தப்பிடிகூட நடக்கலியாம். டகார்னு தேரு அதுபாட்டுக்கும் தானா தீ புடிச்சிக்கிட்டு எரியுதாம். அப்பத்தான் கொசவன் சாமின்னாலும் ரோசமுள்ள சாமிடான்னு சொல்லி ஊர்ல இருந்த ரெட்டியாரெல்லாம் வாய்மூடிப் போனாங்களாம். அப்பத்தாங்க ஊரே சேந்து கல்லுக்கட்டடமா இந்தக் கோவுல கட்டுனது. அதுலயிருந்துதாங்க இது பல ஊருக்கும் பேரு பெத்து விளங்க ஆரம்பிச்சது.”
“இந்த குடிகாரனுவோ செஞ்சது கொஞ்சம்நஞ்சங்கிறிங்களா. ராத் திரியிலே வேட்டக்கிப் போயிட்டுத் திரும்பயிலே நெனப்பு எடுத்துக்கிட்டா மாசத்துல நாலு ஐஞ்சி நாளு வந்து எங்கூட்டுக்காரர நவுத்திவுட்டுட்டு என் பக்கத்திலே படுத்துக்குவான். பேச்சுச் சத்தம் கேட்டு எங் கூட்டுக்காரரு என்னான்னு கேப்பாரு. அந்தத் திருட்டு பய குள்ளக்கருப்பு வந்திருக்கான்னு சொல்வன். கோயி கூப்புடமுட்டும் எங்கிட்ட பேசிக்கிட்டிருந்துட்டுத்தான் போவான். அடேயப்பா. பாக்குறதுக்குத்தான் அப் பிடி இப்பிடி தெரியுமே தவுத்து ஒவ்வொன்னெயும் அப்பிடி அப்பிடியே காட்டிக்கொடுத்துடுவானுங்க. அப்பிடித்தான் பாருங்க, ஆரம்ப நாளயில ‘உன்னெ கொண்டாந்து இந்த எடத்தில வையின்னு சொன்ன, வச்சிட்டன். எனக்கு வயிசி ஆயிகிட்டே போவுது. எனக்கு பிங்காலத்தில உன்னெ யாரு பாப்பாங்க’ன்னு கேட்டு முப்பாட்டன் அயிதிருக்காரு. அதுக்கு டக்குங்கிறதும் ஒரு பொண்ணப் பாத்துக் கண்ணாலத்த முடிடான்னு சொல்லியிருக்கானுவ. அதுக்கு தக்கன தாய்க்காரியும் ஒரு பொண்ணப் பாத்துக் கண்ணாலத்த முடின்னிருக்கா. சரிதான்னு தெக்குத் தெசயிலப் போயிப் பாத்திருக்காங்க. ஒண்ணும் தோதுப்பட்டு வரல. அக்கம்பக்கத்து ஊர்லயும் விசாரிச்சிருக்காங்க. கடேசில திரும்பியும் போயிக் கேட்டதுக்கு, ‘இன்ன ஊர்ல போயி, இன்ன ஊட்டுல இருக்கிற பொண்ணக் கேளுடா’னு சொல்லியிருக்கு. அந்த மாரியே இவுங்களும் போயி கேட்டிருக்காங்க. அதுக்கு உனக்கு என்னா இருக்கு? நிலம்நீச்சு, ஒரு கோமணத் துணிகூட இல்லியேனு ஈங்கிசமாப் பேசித் திருப்பிவுட்டுட்டாங்க. பொண்ணு ஊட்டுக்காரங்க. அந்தப் பொண்ணுக்கு அண்ணன் தம்பி ஆறு பேரு. இவங்க வந்து கோவுல்ல முறயிட்டுருக்காங்க. எண்ணி நாலு மாசங்கூட ஆவுலிங்க. இவுங்கள தண்டுமுண்டா பேசுன அந்த பொண்ணோட அண்ணன் தம்பிவோ ஆறு பேருல அஞ்சி பேரு வவுத்துவலி வாய்வலின்னு அவுட்டாயிட்டாங்க. எங்காளுங்க திருப்பியும் போயிப் பொண்ணு கேட்டிருக்காங்க. அண்ணன் தம்பியப் பறிகொடுத்த அந்தாளு பொண்ணுமில்ல, ஒண்ணுமில்ல போடான்னு சொல்லியிருக்கான். ஓகோரி அப்படியா சங்கதினு கேட்டுக்கிட்டு இருக்கும்போது, அந்த நேரத்தில அந்தப் பொண்ணு எதுக்கோ தோட்டத்துக்குப் போயி குச்சி ஒடிச்சிருக்கா. அவ குச்சியத் தொட்ட குத்தந்தானாம். கரண்டு கம்பி புடிச்சிக்கிறாப்ல கையப் புடிச்சிக்கிச்சாம். குய்யோ முறயோன்னு அந்தப் பொண்ணு கத்தவும் ஊட்டுல இருந்தவங்க எல்லாரும் ஓடிப் போயி என்னா ஏதுன்னு பாக்கயில பொண்ணு கையோட குச்சி ஒட்டிக்கிட்டிருக்காம். என்ன என்னமோ செஞ்சிப்பாத்திருக்காங்க ஒண்ணும் கதெக்கி ஆவல. கடேசியா எங்காளு போயி கைய தொட்டதுதானாம். பொண்ணு வேறயா குச்சி வேறயா ஆயிப்போச்சாம். அப்பத்தான் உசுரோட இருந்த அந்தப் பொண்ணோட அண்ணங்காரனுக்கு இதெல்லாம் ஒங்கக் குடி தெய்வத்தோட சோதனயாட்டம் இருக்கு. மின்னாலியே பொண்ண கொடுக்காததாலதான் என் அண்ணன் தம்பிய தோத்தன். வெத்தலபாக்க மாத்தி, புடிங்க பொண்ணுன்னு சொல்லி பொண்ண அனுப்பிவுட்டாங்க. அந்த அம்மா வவுத்துல உண்டானதுதாங்க இம்மாம் கூட்டமும். அந்த அம்மா வந்த பெறவுதான் ஆடு வந்துச்சு, மாடு வந்துச்சு. சொத்துசொகம் வந்துச்சு. காணி, பூமின்னு உண்டாச்சிங்க. எல்லாம் பொம் பள வர்ற நேரமுங்க, அவ பான புடிக்கிற நேரம்தான் எல்லாம். அந்தம்மா அந்த ஊட்டுக்கு வந்தப் பெறவுதான் கூட்டம் பெருவுச்சு. ஆனா இப்ப, காத்தடிச்சு கூடு கலஞ்சாமாரி ஆயிப்போச்சி.”
“அந்தம்மா வய்யில நானும் வாழக் குருத்தாட்டம் நாலு புள்ளெயப் பெத்தங்க. அதுல மூண வாரிக்கொடுத்திட்டங்க மண்ணுக்கு. கடேசியாப் பொறந்த பொண்ணு ஒண்ணுதான் இப்ப மண்ணுல ஊசலாடிக்கிட்டிருக்கு. ஆயாளும் புள்ளெயும் பட்டங்க வேண கதெ. எங்கூட்டுக்காரர்தான் அம்போக்கா வுட்டுட்டுப் போயிட்டாரே. களவெட்டிதாங்க கஞ்சி குடிச் சம். வெள்ளரிப் பிஞ்சாட்டம் பொண்ணப் பெத்து அதெ ஒரு குடிகாரப் பயகிட்டெ கொடுத்திட்டன் சாமி. ஆம்பள புள்ளென்னாலும் எங்கனாச்சும் மாடு மேய்ச்சிக் கஞ்சி குடிச்சிக்குமே. இதுதான் பொட்டயாச்சே. என்னாப் பண்றது. பேச்சுக்கு எடமிருக்கக் கூடாது பாருங்க. ஒன்னாட்டம் நானும் கெட்டன், என்னாட்டம் நீயும் கெட்டன்னு ஆயிடுமேன்னுதான் பொண்ணக் கொடுத்தன் சாமி. ஒரு குத்தம் கொறன்னா பத்து ஊரு சனம் நம்பளப் பாத்துச் சிரிக்காதா? மானத்துக்கு ரோசத்துக்குத்தாங்க துணி கட்டுறது. வாயோட இருக்கும்போதே வுட்டுடு, வவுத்தோட வந்துடப் போவுதுங்கிறதுக்குள்ளார புடிச்சிக் கொடுத்திட்டங்க. அவன் குடிகாரப் பயலா இருந்தாலும் பொட்டச்சிக்கி ஒருத்தன் அடங்கியிருந்து குடும்பம் பண்றமாரி ஆவுங்களா?”
“நெறமாசமா இருக்கிறதவிட வயசிக்கு வந்த குட்டிய ஊட்டுல வச்சி யிருக்கிறதுதாங்க பெரியக் கஸ்டம். பொம்பள காலால போடுற முடிச்சிய ஆம்பள கையால அவுக்க முடியாதுங்க. இது காலாந்தர பயிராச்சே. வச்சிக்கிட்டு அயிவுறதவிடக் கொடுத்திட்டு அயிவலாமேன்னுதான் கொடுத்தன். மவ படாத சிறும படறா. மேம்பட்ட எடமா பாக்கலாமின்னா நம்பகிட்டெ என்னாங்க இருக்கு போடுறதுக்கு. இப்ப எரும மாடு மேய்க்கிறவன்கூடக் கேக்குறான் அதெ போடு, இதெ போடுன்னு. அதெல்லாம் நம்பளால முடியுமா? ஈரமிருக்கிற, பச நப்பு உள்ள எடத்தத்தான எல்லாரும் நாடிப் போவாங்க. இப்பத்தான் நாணயம் பயுத்துப்போன காலமா இருக்கே. அவுளும் ரெண்டு மூணு மக்க புள்ளெக்கிப் பேராயிப்போயிட்டா. அதெல் லாம் எங்கிட்ட ஒட்டாதுங்க. எரும கோமியம் எக்கியத்துக்கு உதவுங்களா. மவ வவுத்துப் புள்ள உரும இல்லாததுங்க. அதெதுக்கு அதெது பாட்டன் பாட்டிதான். நம்பளுக்கு உரும ஆவுமா?”
“எங்க வகயிறாவே பூண்டத்துப்போச்சுங்க. எல்லாத்தயும் வாரிக் கொடுத்திட்டு நான் மட்டும் குந்தியிருக்கன். கல்லுல எயிதின எயித்தாங்க நம்ப கதெ? இப்பக்கோ பொறக்கோன்னுதான இருக்கு?”
“நான் இந்த ஊருக்கு கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்து அறுவத்தியஞ்சி வருசமாச்சிங்க. அன்னுஞ் சரி இன்னுஞ் சரி எந்த ஆம்பள மொவத்தயும் கண்ணுக்கு கண்ணா மொவத்துக்கு மொவமா பாத்தவ கெடயாது. முகடியாவே இருந்திட்டங்க. எம் பொண்ணு அப்பிடியேதான் இருந்தா. ஒரு பொய்யச் சொல்லிவாங்கல. இந்தா, எம் பிரிசன் செத்து, வர்ற தையோட இருவத்தாறு வரிசமாவப்போவுது. அவுரு இருந்தப்ப எப்பிடி இருந்தனோ அதே நேருக்குத்தான் இன்னிய முட்டும் ஓட்டிக்கிட்டு வர்றன். இன்னுங் கொற காலமும் எப்பிடிப் போவுமோ. எல்லாம் அந்தா, அங்க குந்தியிருக் கானுவுளே அவனுங்களுக்குத்தான் தெரியும். அவனுங்க மனம் எப்பிடியோ அப்பிடித்தான் எங்காலம் முடியும். இத்தன காலத்துக்கும் கையக் கொடயுது, காலக் கொடயுதுன்னு தலசாச்சிப் படுத்தவ கெடயாது. ஒரு மருந்து, மாத்தரய வாயில போட்டவ கெடயாது. இன்னிய தேதி முட்டும் என்னெக் காப்பாதுன இவங்க இனிமேலுமா என்னெக் கைவுட்டுடப்போறாங்க. அப்பிடி வுட்டாத்தான் வுடட்டுமே, நானென்ன கொமரியா?”
“உத்தார் ஒண்ணு சொல்லுவாங்க, ஊரார் ஒண்ணு சொல்லுவாங்கன்னு இருக்கிற எடம் தெரியாமத்தான் இருக்கிறன். ஆ, அவளாங்கிற பேர இன்னமுட்டும் வாங்கல. கொற காலத்தயும் அந்த ஈசன் எப்பிடி வுடுவானோ. யாரு இட்ட வாக்குசமோ இப்பிடி பட்ட மரமா குந்தியிருக்கங்க.”
“ஒருத்தங்க ஊட்டுக்கும் நான் போவ மாட்டங்க. நம்ப கெதிதான் இப்பிடியாச்சேன்னு அண்ட ஊடு, அடுத்த ஊடுன்னு போவ மாட்டன். தன் ஊட்டுக் கஞ்சியக் குடிச்சித் தந்தரயில கெடந்தாலும் வீண் சொல்லு கேக்க விதியான்னு கொஞ்ச காலம் கைப் பொங்கலாவே பொங்கித் தின்னுப்பாத்தன். ஒண்ணும் தோதுப்பட்டு வரல. அப்பறம் அடுப்பு மூட்டு றதயே வுட்டுட்டன். இன்னிக்கி மண்ணுல போட்டா நாளக்கி மண்ணு தின்னுடுங்க இந்த ஒடம்ப. அதுக்காக நாம்ப ஏன் படாத செறுமயெல்லாம் படணும்?”
“ஆடு இருக்கா, மாடு இருக்கா, இல்லெ கொல்லக்குடி இருக்கா, அது வேணும், இது வேணும்னு இன்னொருத்தங்க ஊட்டு வாசக் கடக்கிப் போறதுக்கு? என்னிக்கிம் நான் என் வவுறப் பெருசா நெனச்சதில்ல. இப்பிடி ஏகனா குந்தி இந்தப் பச்ச மரத்துவுளப் பாத்துக்கிட்டே இருந்திடுவன். பொயிது போயிடும். எங்க மூதாதெங்க சொத்துபத்த சேத்துவச்சிட்டுப் போனாங்களே, அதுதாங்க பெரிசு.”
“நானும் எங்காலத்துக்கு எம்மானோ பாத்தாச்சு. பட்டாச்சு. ஒண்ணும் ஒட்டல. உரு கூடி வரல. கவுடு சூது உள்ளவங்களுக்குத்தான் இப்ப காலமா இருக்கு. வெள்ள மனம் படச்சி நாம்பதான் வென்னாலயா போனவங்களாச்சே, நம்பளுக்கு எங்கிருந்து வரும் பொய் பெரட்டலு? எல்லாத்தயும் பாத்துட்டுத்தான், கடெசியில சீ போன்னு எல்லாத்தயும் வுட்டு ஒதறிப்புட்டு வந்து இவங்க காலடியில குந்திக்கிட்டன். எங்க ஊட்டுக்காரரு போனதுலேருந்து ஆன சோறில்ல, ஆன தூக்கமில்லெ. புருசங்கிற மொறமயில என்னெ ஒரு நாளும் கைதொட்டு அடிச்சவங்க கெடயாது. சீ நாயன்னு ஒரு வாத்த சொன்னவங்க கெடயாது. பொன் னம்மாங்கிற வாத்த மாறாமெத்தான் என்னெ வச்சியிருந்தாங்க. வச்சி யிருந்து என்னாத்துக்கு ஆச்சி, கொற நாளிலியே போயிட்டாங்களே. என் பொண்டாட்டி காலு பட்டா சிவன் காலு பட்டாப்ல, என் தாய் காலு பட்டா நாய்க் காலு பட்டாப்லனு சொல்ற மனுசனில்ல. எங்கூடப் பொறந்தவங்களும் அவுருகூடப் பொறந்தவங்க எல்லாரும் ஒன்னப் புடி என்னெப் புடின்னு போயிட்டாங்க. இப்ப நான் ஒருத்திதான் அரகரா சிவவானு குந்தியிருக்கன். எனக்கும் இன்னும் எம்மாம் நாளோ! அதெல்லாம் நம்ப கையிலியா இருக்கு? நேரம் காலம் வந்தா கண்ண மூடிக்கிட்டுப் போவ வேண்டியதுதான். நாள்கிழம வர வேணாமா. நாம்ப ஆசப்பட்டா மட்டும் ஆச்சா.”
“பகல் வேசம் பாம்பு கடிக்கும்னு அந்தக் காலத்திலே சொல்வாங்க. அது இப்ப மேவுங்களா? எங்கூட்டுக்காரரு செத்தது எனக்கு இன்னும் அப்பிடியே கல்லுல எயிதினாப்ல நெனப்புல இருக்குங்க. எங்கூட்டுக்காரரு செத்ததும் எங்கம்மா ஊட்டுக்கு என்னெக் கூப்புட்டுக்கிட்டுப் போனாங்க. எண்ணி நாலே நாளுதான் இருந்தன். அதுக்குள்ளாரவே இவங்க குதிரயப் போட்டுக்கிட்டு அங்க வந்து ‘என் சந்நிதானத்த வுட்டு ஏன் வந்த, ஒடனே பொறப்பட்டு வா’னு சொல்லிப்புட்டுப் போயிட்டாங்க. ஊருக்குப் போறன்னு நான் கிளம்புனதும் என்னெ எல்லாரும் மறிச்சிக்கிட்டாங்க. சரின்னு இருந்தங்க. ரெண்டு நாளுகூட ஆவல. காச்ச புடிச்சி அடிக்குதுங்க. வா தொறக்க முடியல. கண் மூச்சிப் பாக்க முடியல. ஓகோரி, இது அந்தக் குடிகாரப் பயலுவோ வௌயாட்டுத்தான். இனியும் இங்க ஒரு நாழி நேரம்கூட இருக்கக் கூடாதுன்னு கௌம்பறனுங்க. இந்தக் காச்சலோட எப்பிடிப் போவன்னு எங்கூட்டுல தர்க்கம் பண்றாங்க. வந்து எத்தன நாளாச்சி, தாலியறுத்தவ ஒடன்காலியே போவலாமின்னு கேட்டு என்னெ உலுப்பிஎடுக்கிறாங்க. நான் எதெயும் காதுல வாங்கல. எல்லாரயும் மீறிக்கிட்டு காரு ஏறி வர்றங்க. அதுதாங்க நான் தனிப் பயணம் வந்தது. அப்பிடி வந்தாக்கா வர வய்யிலியே, மூங்கில்துரப்பட்டு வந்ததுமே, அதுமுட்டும் நெருப்பா கொளுத்திக்கிட்டிருந்த காச்ச போன எடந் தெரி யல. ஒடம்பு எப்பியும்போல இருக்கு. அட ஆண்டவன, இதுவும் ஒஞ் சோதனயான்னு ஊருக்கு வந்தவ நேரா ஊட்டுக்குக்கூட போவாம ஒரு படி கற்பூரத்த வாங்கிக்கிட்டு வந்து, இவங்க ஒவ்வொருத்தங்க மின்னாடியும் வச்சிக் கொளுத்திக் கும்புட்டங்க. இவங்களுக்கு அதுதாங்க ஒகந்தது. தேங்காய ஒடக்கிறோம், அதெ நாம்ப திங்கிறோம். பொட்டுக்கடலயப் படக்கிறோம், அதெ நாம்பதான் திங்கிறோம். ஆடு, கோயி, பன்னி எல்லாத்தயும் மனு வாள்தான் திங்குது. கற்பூரத்தோட ஜோதிதாங்க, அந்த நெருப்புல வர்ற வாசனதாங்க அவங்களுக்கு ஒகந்தது.”
“ஆட்ட மாட்டக் காணோங்கிறவங்க, பண்டம்பாடியத் தொலச்சவங்க, பொண்ணு அமயுமான்னு கேக்குறவங்க எல்லாம் இங்க வந்து நின்னு, குந்தி சவனம், குறிகேட்டாப் போதும், எதெது எந்தெந்த எடத்தில இருக் குன்னு அச்சடிச்சாப்ல சொல்லிப்புடுவாங்க. அதனாலதான் கூட்டம் இங்க சாயுது. இப்பிடி எம்மானோ வரலாற சொல்லிக்கிட்டே போவலாங்க.”
“எங்கூட்டுக்காரரு கோவுலு படக்கிம்போது ரெண்டாள் ஒசரத்துக்கு அம்பது அறுவது குதிர இருந்துச்சு. இப்பப் பாதி மண்ணுக் குதிர போன எடந் தெரியல. நிக்குற குதிரயும் முயிசா நிக்குதா பாத்தீங்களா. அதெ என்னா ஏதுன்னு கேக்க ஒரு பய இருக்கானா? கோவுலு வரவு செலவு என்ன, வரும்பிடி என்னன்னுதான் பாக்குறானுவோ. இப்ப வர்ற குதிர எல்லாம் சரியில்லிங்க. அந்தக் காலத்துக் குதிரயில இருந்த வேலப்பாட்டுல பாதிகூட இல்லிங்க. எல்லாம் மாறிப்போச்சிங்க. கம்மனாட்டி மேல சாமி வந்தா ஆரு கட்டிப்புடிக்கிறதுங்கிற காலம்போயி யாரு வேணுமின்னாலும் கட்டிப்புடிக்கலாம்ங்கிற காலங்க இது. இப்பத்தான் கரும்ப கரம்புன்னு காட்டுறான், கரம்ப கரும்புன்னு காட்டுறான். வாரி எது-, வரப்பு எதுன்னு தெரியாத காலமா இருக்கு. இப்பத்தான் மீச மொளக்காத பயலுவோ எல்லாம் அடுத்தவன் பொண்டாட்டி சாண்ட குடிக்க அலயுறானுவளே, மானம் எப்பிடி மய பெய்யும்? இதுல நம்ப யாரக் குத்தம் சொல்றது? ஒலகம் அவ்வளவுதான்னு போவ வேண்டியதுதான். எல்லாத்தயும் பகவான் கணக் குப் பண்ணுவாங்க. ஒரு காலத்தில நேருல நின்னு பேசுனவங்கதான். காலத் துக்கு தக்கன அவங்களும் மறபொருளாயிட்டாங்க. ஒலகத்தில நீதின்னு ஒண்ணு இருக்குங்களா, இருந்தா ஏன் இம்மாம் அட்டூழியம் நடக்குது?”
“நேத்தக்கி இருந்தவங்க இன்னிக்கி இல்லெ. இன்னிக்கி இருக்கிறவங்க நாளக்கி இல்லெ. இதாங்க ஒலகம். இதுல எங்க ஆனய கட்டுறது, சேனய கட்டுறது? நீங்க போறீங்க, மத்தவங்களும் போறாங்க. நானும் போயிடுவன். எல்லாத்தயும் அங்கக் குந்தியிருக்கிறவனுவங்க பாத்துக்கிட்டுத்தாங்க இருக் காங்க. இதுலதான் ஒன்னெத் திங்கலாமா, என்னெத் திங்கலாமான்னு அலயுது ஒலகம். எல்லாத்துக்கும் நீதி ஒண்ணு இருக்குங்க. சாமி இல்லாத பொயிது போவலிங்க.”
“ஏன் எயிந்திரிச்சிட்டீங்க? என்னடா இவ ஔறிக்கிட்டே இருக்கா ளேன்னா. மணி என்னாங்க இருக்கும்? கோவுலு படக்க வர்ற பயலயும் காணுமே. பூசாரி வந்துட்டானான்னு அந்தப் பக்கம் போயி பாருங்க.”
அவனுக்கு அதற்கு மேல் உட்கார்ந்திருக்க முடியவில்லை. ரொம்ப நேரமாக ஒண்ணுக்குப் போக வேண்டும்போல் இருந்தது. அடிவயிறு கட்டிக் கொண்டதுபோல் இருக்கவே எழுந்துகொண்டான். அவன் எழுந்ததும் பொன்னம்மாளும் எழுந்து நின்றுகொண்டு கிழக்கில் கோவிலுக்கு வரும் வழியில் ஆட்கள் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள். அவன் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் மறைவிடம் நோக்கிப் போய் ஒண் ணுக்கு விட்டுவிட்டு வந்தவன், முன்பு உட்கார்ந்திருந்த இடத்திலேயே உட்கார்ந்துகொண்டு வெற்றிலை போட்டுக்கொள்ள ஆரம்பித்தான். கலங் கிய கண்களுடன் அவளைப் பார்த்தான். பேச முடியாமல் வெற்றிலைப் பாக்கை எடுத்து அவளிடம் நீட்டினான். பார்க்கக் கூடாதப் பொருளைப் பார்த்துவிட்டதுபோல் முகத்தைக் கோணிக்கொண்ட பொன்னம்மா “நீங்க என்னா சாதியோ, என்னா கொலமோ. ஒங்கக்கிட்டயிருந்து நான் எப்பிடி போடுறது? வேணுமின்னா காசியிருந்தா ஒண்ண ரெண்ட கொடுத்துட்டு போங்க. வர்றவங்கக்கிட்ட மனக்கொறயச் சொல்லி ஆத்துவன தவுத்து மத்தத ஒண்ணும் பண்ணிக்க மாட்டன்” என்று சொன்னவள், கோவில் பக்கம் பார்க்க ஆரம்பித்தாள். அவளையே வைத்த கண்வாங்காமல் வெறிக் கப் பார்த்த அவன் ஒன்றும் பேசாமல் சட்டைப் பையில் சில்லறைக் காசு கிடக்கிறதா என்று தேட ஆரம்பித்தான்.
இமயம்