
பேராசை
ரயில் ஏற்றிவிடுவதற்கு செல்வமணிக்கென்று யாரும் வரவில்லை. கோகிலாவுக்கு அவளுடைய அப்பா, அம்மா, பாட்டி என்று வந்திருந்தனர். வந்திருந்தாலும் அவர்களுடைய முகத்தில் சிரிப்பில்லை. ஆனால், கோகிலா கலகலப்பாகத்தான் இருந்தாள். புருசனோடு அதுவும் முதன்முதலாக ரயிலில் போகிறாள். அதுவே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பா அம்மா வைப் பிரிந்துபோகிறோம் என்ற கவலை துளியும் அவளுடைய முகத்தில் இல்லை. செல்வமணி மாதிரியே அவளும் அடிக்கடி ரயில் வரும் திசையில் பார்த்தவாறு இருந்தாள். அவளுடைய பாட்டி முத்தம்மா ஏதோ சொன் னாள். சரி என்பது மாதிரி தலையை மட்டும் வெறுமனே ஆட்டினாள். ரயில் வருகிறது என்பதற்கான அறிவிப்பு வந்ததும் “நான் முதல்ல ஏறிக்கிறன். நீ கடைசியில் ஏறு” என்று சொல்லிவிட்டு செல்வமணி சற்று முன்னோக்கி நடந்தான். பைகளை எடுத்துக்கொடுத்த கோகிலாவின் அம்மா பூமாரி “எங்க பேச்சயெல்லாம் மீறிக் கல்யாணம் கட்டிக்கிட்டுப் போற, ஆளு எப்பிடி என்னா, ஏதுன்னு தெரியல. மெட்ராசு என்ன பக்கத்திலியா இருக்கு? ஒண்ணுன்னா சட்டுன்னு ஓடியாறதுக்கு? எதுக்கும் வாயத் தொறக்காத, எதா யிருந்தாலும் ‘ம்’, ‘ம்’ங்கிறதோட நிறுத்திக்க. பொட்டச்சி வாயி இல்லாம இருந்தாத்தான் காலத்த ஓட்டலாம். செட்டா இருந்துக்க. நாக்கே இல்லன்னு இருந்திடு” என்று சொன்னாள். ‘நான் பாத்துக்கிறன்’ என்பது மாதிரி கோகிலா தலையை மட்டும் ஆட்டினாள்.
ரயில் வந்து நிற்பதற்குள்ளாகவே கூட்டதோடு கூட்டமாக முட்டிமோதி செல்வமணி ஏறி இடம் பிடித்து உட்காந்துகொண்டு ஜன்னல் வழியாக “சீக்கிரம் ஏறி வா. எடம் போயிடும்” என்று சொல்லிக் கத்தினான். கோகிலா ரயிலில் ஏறினாள். “எப்பியும் இப்ப மாரியே சிரிச்ச முகமா இரு” என்று முத்தம்மா சொன்னாள். பூமாரி அழுதாள். “பத்தரம்” என்று அவளுடைய அப்பா சொன்னார். ரயில் புறப்பட்டது. கோகிலா வந்து செல்வமணிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“பைய பத்தரமாக் காலுக்குக் கீழ தள்ளி வை. காணாமப்போயிடும்.”
“ரயில்லகூட திருடுவாங்களா?” என்று கோகிலா கேட்டாள்.
“திருடங்க எல்லா இடத்திலயும்தான் இருக்காங்க.”
“எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டு எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்தாள். உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் நடைபாதையில் நின்றுகொண்டிருந்தவர்களையும், பொருட்களை வைப்பதற் காகத் தலைக்கு மேலே இருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தவர்களையும் பார்த்தாள். கசகசவென்று ஒரே கூட்டமாக இருந்தது.
“மேல எதுக்கு குந்தியிருக்காங்க?”
“எடம் கெடைக்காமத்தான். நானே ஓடிப் போயி முதல்ல ஏறி எடம் புடிக்காட்டி நின்னுக்கிட்டுத்தான் வரணும்” என்று சொன்ன செல்வமணி “பை பத்தரம். மொத்தம் எத்தன பை?” என்று கேட்டான்.
“அஞ்சி.”
“எதுக்கு இத்தன பை?”
“ஊட்டுக்குண்டான சின்னச்சின்ன சாமானுவோதான் இருக்கு.”
“---”
அரைமணி நேரம்தான் கழிந்திருக்கும். செல்வமணி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டான். கோகிலா சன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் செல்வமணியின் தலை அவளுடைய தோளில் சாய்ந்தது. எதிரிலும், பக்கத்திலும் கூட்டமாக சனங்கள் இருக்கும்போது தோளில் சாய்ந்துகொண்டு இப்படித் தூங்குகிறானே என்று ஆச்சரியப்பட்டாள். அப்படியே விடவும் முடியவில்லை. எழுப்பி விடவும் பயமாக இருந்தது. லேசாக அசைந்து உட்கார்ந்தால் விழித்துக் கொள்வான் என்று நினைத்தாள். ஆனால், அவள் எதிர்பார்த்தது நடக்க வில்லை. நகர்ந்து உட்கார்ந்த பிறகுதான் அவன் முன்பைவிட சௌகரியமாகத் தலையைச் சாய்த்துகொண்டு தூங்கினான். தோளில் சாய்ந்திருந்த செல்வமணியினுடைய தலையைப் பார்த்தாள். ‘அநியாயத்துக்கு மோசம் தான்’ என்று நினைத்தாள். பெண் பார்க்க வந்த அன்று செல்வமணியினுடைய தலையைப் பார்த்து “பயிறு ஏறாத கட்டாந்தரையாட்டம் இப்பியே இருந்தா பிங் காலத்தில எப்பிடி இருக்கும்?” என்று முத்தம்மா கேட்டது நினைவுக்கு வந்ததும் லேசாகச் சிரித்தாள்.
“வாய் அதிகம்தான் கிழடிக்கு” என்று முணுமுணுத்தாள்.
பெண் பார்க்க வந்தபோது செல்வமணி தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் மட்டும்தான் கூப்பிட்டுக்கொண்டு வந்திருந்தான். சொந்த மில்லை. பக்கத்து ஊருமில்லை. மாரியம்மன் கோவிலுக்கு எதிர் வீட்டில் புதிதாக தங்கம்மா என்ற பெண் கல்யாணம் கட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவள் மூலமாகச் செய்தி அறிந்து வந்திருந்தார்கள். பெண் கேட்டு மாப்பிள்ளை வருகிறார் என்ற தகவல் தெரிந்தபோது எல்லாருக்குமே சந்தோசமாகத்தான் இருந்தது. ஆனால், மாப்பிள்ளையைப் பார்த்த பிறகு ‘சீ’ என்றாகிவிட்டது.
கோகிலாவோடு பிறந்தது மூன்றும் பெண்தான். ஒருத்திக்கும் கல்யாணம் நடக்கவில்லை. பெண் கேட்டு வருகிற மாப்பிள்ளைகளெல்லாம், கழுத்துக்கு செயின், கைக்கு மோதிரம், பீரோ, கட்டில், டி.வி. என்று கேட்டதால் ஒருத்திக்கும் கல்யாணமாகவில்லை. கூரை வீடு மட்டும்தான். வேறு சொத்தென்று ஒன்றும் இல்லை. நான்கு, ஐந்து பேர் பாடுபட்டாலும் வாய்க்கும் வயிற்றுக்குமே இழுபறி என்றுதான் காலம் ஓடியது. மீறி நூறு இருநூறு மிஞ்சினால் அது எப்படி மிச்சமாக இருக்கலாம் என்பது மாதிரியாருக்காவது உடம்புக்கு வந்துவிடும். ஆண் பிள்ளை வேண்டும் என்று தான் வரிசையாகப் பிள்ளை பெற்றார்கள். ஆனால், பிறந்தது நான்கும் பெண்ணாக இருக்கும் என்று கோகிலாவின் அப்பா அம்மா நினைக்கவில்லை. ‘சொத்துப்பத்து ஒண்ணுமில்ல. எதுக்கு இத்தன புள்ளெ பொறந் துச்சி’ என்று இப்போது கேட்கிறார்கள்.
நான்கு பெண்களில் ஒருத்திக்கும் கல்யாணம் நடக்கவில்லை. அதனால் போய் கேட்டால் உடனே கொடுத்துவிடுவார்கள் என்றுதான் செல்வமணியின் அப்பா அம்மா நினைத்துக்கொண்டு வந்தார்கள். ஆனால், நடந்தது வேறு. பெண் தர முடியாது என்று சொல்லாமல் ‘ஜாதகம் சரியில்ல’, ‘தோசம் இருக்கு’, ‘தோசமுள்ள மாப்பளக்கித்தான் கொடுக்க முடியும்’, என்று என்னென்னவோ சாக்கு சொல்லியும் செல்வமணியின் அப்பா அம்மா கேட்காததால், கடைசியில் ‘எங்கக்கிட்டெ பொண்ணு மட்டும்தான் இருக்கு. மத்தது ஒண்ணுமில்லெ. துணிமணி எடுக்கக்கூட வழியில்லெ’ என்று சொன்னார்கள். அதற்கு மாப்பிள்ளையின் அம்மா “நீங்க ஒண்ணும் செய்ய வாணாம். பொண்ண மட்டும் எங்ககூட கட்டுன சேலயோட அனுப்புங்க. கல்யாணத்த நாங்க நடத்திக்கிறம். நீங்க ஒண்ணும் போடலன்னு சொல்லி யெல்லாம் காட்ட மாட்டம். அது தெரிஞ்சித்தான பொண்ணு கேட்டு வந்திருக்கம்” என்று சொன்னதும், கோகிலா வீட்டிலுள்ளவர்களுக்கு அதற்கு மேல் பேசுவதற்கு வழியில்லாமல் போய்விட்டது.
“நீங்களே எல்லாத்தயும் செஞ்சிக்கிட்டாலும் எங்கப் பங்குக்கு நாங்க ஏதாச்சும் செஞ்சாத்தான எங்களுக்கு மரியாத. ஒரு வருசமாவும் பணம் வர்றதுக்கு. அதுக்குப் பின்னாலதான் கண்ணாலம்” என்று முத்தம்மா அடித்துச் சொன்னாள்.
“நீங்க ஒரு பைசாகூடப் போட வாணாம். பொண்ண அனுப்புங்க. நீங்க வந்து பந்தியில குந்தி சாப்புட்டுட்டுப் போங்க. அதெ மட்டும் நீங்க செஞ்சா போதும்” என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னதும், முத்தம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
“இப்பியே கழுவி வச்ச வெங்கலப் பானயாட்டம் மாப்ள தல இருக்கு. அப்பறம் என்னாத்தச் சொல்றது” என்று நேரிடையாகவே விசயத்தைப் போட்டு உடைத்தாள். முத்தம்மா சொன்னதைப் பெரிய கௌரவம் மாதிரி எடுத்துக்கொண்ட மாப்பிள்ளையின் அம்மா “இது எங்கக் குடும்ப வழுக்க. எங்க ஊட்டுக்காரரப் பாத்தீங்கில்லெ. என்னெப் பொண்ணு பாக்க வந்தப்பவும் இப்பிடித்தான் இருந்தாரு. நான் கல்யாணம்தான் கட்டிக்கலியா? புள்ளெதான் பெத்துக்கலியா? குடும்பம்தான் நடத்தலியா? எங்க மாமனாரு தலயப் பாத்தீங்கன்னா சிரிப்பீங்க. தொடச்சி வச்ச கண்ணாடியாட்டம்தான் இருக்கும். மொட்ட போட்டாக்கூட அம்மாம் சுத்தமா இருக்காது” என்று சொல்லிச் சிரித்தாள். கோகிலா வீட்டு சனங்கள் சிரிக்காததால் அவளுடைய முகம் வாடிப்போயிற்று. அதை மறைப்பதற்காக “எந் தலயில பாத்தீங்கில்லெ. இந்த வயசிலயும் எப்பிடி எம்மாம் நீட்டுக்குச் சாட்ட சாட்டயாட்டம் மசுரு இருக்கு” என்று சொல்லித் தன்னுடைய தலையைத் திருப்பிக் காட்டினாள். அதற்கும் யாருமே பேசாததால் அலுப்பான குரலில் “தலயில இருக்கிற மசுரயா ஆக்கித் திங்கப்போறம். பையனுக்குப் படிப்பு இருக்கு. கவர்மண்டு உத்தியோகம் இருக்கு” என்று சொன்னாள்.
யாருமே பேசவில்லை.
“வர்ற வழியில பொண்ணப் பாத்தான் எம்மவன். அதுலயிருந்து கட்டுனா இந்தப் பொண்ணத்தான் கட்டுவன்னு ஒரே புடியா நிக்குறான். தங்கம்மாவும் பொண்ணெப் பத்தி நல்லத்தனமாத்தான் சொன்னா” என்று மாப்பிள்ளையின் அம்மா யாரும் கேட்காமலே தானாகவே சொன்னாள்.
“வேல எப்ப கெடச்சிச்சி?”
“ரெண்டாயிரத்து பத்திலெ.”
“எந்த வயசில வேல கெடச்சிச்சி?”
முத்தம்மா எதற்காகக் கேட்கிறாள் என்பது தெரிந்ததும் மாப்பிள்ளையின் அம்மா முப்பத்தி மூன்று என்று சொல்வதற்குப் பதிலாக “இருவத்தி யெட்டுலதான்” என்று சொன்னாள். முத்தம்மா உதட்டைப் பிதுக்கினாள். ஆனால், வாயைத் திறக்கவில்லை. அதனால் மாப்பிள்ளையின் அம்மா தானாகவே சொன்னாள் “எத்தன வயசனாலும் கவர்மண்டு உத்தியோகம் கெடச்சாத்தான் கண்ணாலமின்னு ஒரேபுடியா நின்னுட்டான். அதனாலதான் ரெண்டு வயசி கூடிப்போச்சி. இந்தக் காலத்திலெ வயச யாரு பாக்குறா? கவர்மண்டு உத்தியோகம் இருக்கான்னுதான் பாக்குறாங்க. தனியாரு வேலன்னாகூட வாணாங்குதுவோ. ஜாதகத்தில எல்லாம் ஒரு குத்தமு மில்லெ. வேணுமின்னா ஜாதகத்த வாங்கிப் பாத்துக்குங்க” என்று சொன்னாள்.
“வேணுமின்னாத்தான அதெல்லாம் பாக்கணும்” என்று ஒரு தினுசாக முத்தம்மா சொன்னாள்.
“பையன் தடியா, கொஞ்சம் கருப்பா இருக்கான்னு நெனக்காதீங்க. அது நான் பொறந்த குடும்பத்தோட வாட்டம்.”
“எத்தன புள்ளீங்க? கூடப் பொறந்தவங்கின்னு உண்டா?”
“ஒரே பையன்தான்.”
“குடும்ப வாட்டம் தெரிஞ்சி ஒண்ணே போதுமின்னு வுட்டுட்டீங்க ளாட்டம் இருக்கு” என்று முத்தம்மா சொன்னதும் மாப்பிள்ளையின் அம்மாவினுடைய முகம் தொங்கிப்போயிற்று. அப்போது ‘சும்மா இரு’ என்பது மாதிரி மாமியாரை இடித்தாள் பூமாரி.
“ஒரு புள்ளெ பெக்குற முட்டும்தான பொண்ணு, மாப்ள. அப்பறம் கிழவன் கிழவிதான”
“யோசிச்சி சொல்றம்” என்று கோகிலாவின் அப்பா சொன்னார்.
“ஒலகம் தெரியாமப் பேசுறீங்க. வேலயில இருக்கிற மாப்ள கெடக்கிறது லேசில்லெ. இப்பியே பத்தாயிரம் வாங்குறான். போவப்போவச் சம்பளம் எகிறிக்கிட்டுத்தான் போவும்.”
“காசு பணத்தத் திங்க முடியுமா? காசு பணம் கூட நடந்து வருமா? கூட ஒக்காந்து சிரிக்குமா?” வெடுக்கென்று கேட்டாள் முத்தம்மா.
“எங்க பையனக் கட்டிக்கிட்டா ஒங்கப் பொண்ணு காடு கரைக்குப் போவ வாணாம். கூலி வேலக்கிப் போவ வாணாம். ஊட்டுலக் குந்திக்கிட்டு மூணு வேளக்கும் சுடுசோறு சாப்புடலாம். காலத்துக்கும் வெயில் படாம இருக்கலாம். ஊட்டெ வுட்டு வெளிய வர வேண்டியதில்லெ. மொகத்தில இருக்கிற பவுடரு கலையாம இருக்கலாம். வேலக்காரன் பொண்டாட் டின்னு ஊருல மரியாதி இருக்கும். எத்தன காலத்துக்குக் கழுத்தக் கழுவி வச்சிக்கிட்டுக் கல்யாணத்துக்காக ஒங்க பொண்ணுவோ குந்தியிருக்கிறது?” என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னாள்.
மாப்பிள்ளையின் அம்மா சொல்வதெல்லாம் சரிதான் என்று கோகிலா வின் வீட்டுச் சனங்களுக்குத் தெரிந்தது. நான்கு பேரில் ஒருத்திக்கும் இதுவரை நல்ல காரியம் நடக்கவில்லை. கட்டிக்கொடுக்க வழியில்லை. வேலையில் இருக்கிற மாப்பிள்ளை பெண் கேட்கிறான். அதுவும் கல்யாணச் செலவைத் தானே பார்த்துக்கொள்வதாகச் சொல்லியும் கோகிலாவைச் செல்வமணிக்குத் தர யாருக்குமே விருப்பமில்லை. சாணியில் பிடித்த கொழுக்கட்டை மாதிரி இருந்தான். அவனுக்கு எப்படி கோகிலாவைத்தருவது? ஊரில் என்ன சொல்வார்கள்? கல்யாணம் நடக்கவில்லையென் றாலும் பரவாயில்லை, கண்ணுக்குப் பிடித்தவனை இழுத்துக்கொண்டு ஓடினாலும் சரி, செல்வமணிக்கு மட்டும் பெண் கொடுப்பதில்லை என்று தீர்மானமாக இருந்தாள் முத்தம்மா. தன்னுடைய மகனும் மருமகளும் மனம்மாறி சரி என்று சொல்விடப்போகிறார்களோ என்ற கவலையில்தான் அவள் மாப்பிள்ளையின் அம்மாவை ஒரேடியாக மட்டம்தட்டிப் பேசிக் கொண்டிருந்தாள். அங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது மாதிரி உட்கார்ந்திருந்தான் செல்வமணி.
“நீங்க போங்க. பொண்ணக் கேட்டுத் தகவலு சொல்றம்” என்று கோகி லாவின் அப்பா சொன்னார்.
“வேலயில சேந்து ஒரு வருசம்தான் ஆவுது. அடிக்கடி லீவ் போட முடியாது. அப்பறம் மெட்ராசிலயிருந்து இம்மாம் தொலவட்டு வந்துவந்து போவ முடியாது. உண்டு இல்லன்னு இப்பியே சொன்னீங்ன்னா நல்லது. பொண்ணயும் ஒரு வாத்த கேட்டுக்குங்க. மொறயெல்லாம் சரியாத்தான் இருக்கு.”
“சரிம்மா. அவுங்க கேட்டுட்டே சொல்லட்டும். கிளம்பு போவலாம்” என்று செல்வமணி நச்சரிக்க ஆரம்பித்தான் தன் அம்மாவிடம். அவனை ஒரு பொருட்டாகக் கருதாமல் “ஒங்க குடும்பத்தப் பத்தியும் ஊருல விசா ரிச்சம். ஒவ்வொரு டிக்கட்டா வெளியேத்த வாணாமா? காலத்துக்கும் ஊட்டுலியே வச்சிக்கிட்டு சீராட்டவா முடியும்?” என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னதும் முத்தம்மாவுக்குக் கோபம் வந்து “எம் பேத்திவோ ஒண்ணும் செல்லாத சரக்கு இல்லெ. கால நேரம் கூடிவந்தா எந்த நாடோ எந்தப் பட்டணமோ போவத்தான் போறாளுவோ. எம் பேத்திவுளுக்கு இனிமேலா மாப்ளவோ பொறக்கபோறானுவோ. எம் பேத்திவோ நெறத் துக்கும் வாட்டத்துக்கும் அடுக்கடுக்கா வரத்தான் செய்யுறானுவோ” என்று சற்று சத்தமாகவே சொன்னாள்.
“நீங்க பொண்ணக் கேட்டுச் சொல்லுங்க. நாங்க கிளம்பறம்” என்று சொன்ன செல்வமணி எழுந்து நின்றான்.
“அப்பறம் என்ன சொல்றது? இரு, இப்பியே கேட்டுச் சொல்றன். தண்ணி இல்லாத கிணத்தில யாரு குதிப்பாங்க?” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் பின்புறமாக நின்றுகொண்டிருந்த கோகிலாவிடம் வந்து எல்லா விசயத் தையும் சொன்னாள் முத்தம்மா. கடைசியில் “நீயே வந்து மூஞ்சியில கரிய பூசு” என்று கூப்பிட்டாள்.
“நான் இந்த மாப்ளய கட்டிக்கிறன் ஆயா.”
முத்தம்மாவின் முகத்தில் கரியைப் பூசுவது மாதிரி கோகிலா சொன்னாள்:
“என்னடி சொல்ற?”
“நாளக் குறிக்கச் சொல்லு. போ.”
“சோத்துக்கு இல்லாதவனா இருந்தாலும் கண்ணுக்குப் பகரா இருக்க வாணாமாடி?”
“வாணாம்.”
“ஒனக்குக் கண்ணு கருகிப்போச்சா? புத்தி குழம்பிப்போச்சா? நாலு புள்ளெ பெத்த அரக் கிழவனாட்டம் இருக்காண்டி. அதோடவும் சுட்டெடுத்த பன்னி மாரி இருக்கான்.”
“இருந்துட்டுப் போவட்டும். ஒனக்கென்ன? எனக்குப் புடிச்சிருக்கு.”
“இதத்தான் பொட்டச்சி மனசு பீ திங்கும்ன்னு சொன்னாங்களாட்டம் இருக்கு.”
“நாந்தான வாக்கப்படப்போறென்.”
“சீ வாய மூடுடி. வாயப் பட்டயாட்டம் இருக்க ஒன்னெ அந்தக் கருஞ்சட்டிக்கிக் கட்டிவைக்கச் சொல்லுறியாடி? இரு. ஒன்னெப் பெத்தவன வரச் சொல்றன். அவன் வந்து ஒம் மூஞ்சியில காறித் துப்பட்டும்” என்று சொன்னாள் முத்தம்மா.
முத்தம்மாவிடம் சொன்ன அதே பதிலைத்தான் கோகிலா தன்னுடைய அப்பா அம்மாவுக்கும் சொன்னாள். அவர்கள் இருவரும் பதில் பேச முடியாமல் நின்றார்கள்.
“நம்பள மாரி சோத்துக்கு இல்லாதவன் இல்லாமியா போயிடுவான்? அவன் வாயும் வவுறும். பாத்தாலே ஒட்டிக்கிம்மாட்டம் இருக்கு. அப்பிடியொரு கருப்பு. சாவப்போற கிழவி நானு. எனக்கே அவனப் புடிக்கலெ. தங்கப் பதுமயாட்டம் இருக்கிற ஒனக்குப் புடிச்சி இருக்கா?”
“ம்.”
“வேல இருக்குங்கிறதத் தவுத்து வேற ஒண்ணுமில்லெ அவங்கிட்டெ. அவசரப்படாத. வயசி கூடிப்போனா என்ன? ஒடம்பு தடிச்ச பின்னால கண்ணாலம் கட்டுறதுதான் நல்லது. ஒனக்கின்னு ஒருத்தன் பூமியில இனிமேலா பொறக்கப்போறான்? மத்த குட்டிவுளுக்குக் கண்ணாலம் ஆவணுமின்னு முடுவு பண்ணாத” என்று முத்தம்மாவோடு அவளுடைய அப்பா அம்மாவும் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சொன்னார்கள்.
“முடிச்சி வுட்டுடுங்க.”
“புள்ளெ பெத்திருக்கா பாரு, அழுவிப்போன பூசணி பயமாட்டம். எம் புள்ளெயும்தான் புள்ளெ பெத்திருக்கான் தென்னங்குருத்தாட்டம். புள்ளெ பெத்தா மட்டும் ஆச்சா? நான் சொல்றதக் கேளு” என்று சொல்லி முத்தம்மா கொஞ்சினாள்.
“நீ ஒரு மண்ணும் சொல்ல வாணாம். போ எட்டெ. நாந்தான வாழப் போறன்?”
“ஓகோ அப்பிடியா? இவனக் கட்டிக்கிறதுக்குப் பதிலா எவனயாவது இயித்துக்கிட்டு ஓடிப் போடி. நானே வழியனுப்பி வைக்கிறன். மொகப் பொருத்தம்கூட இல்லியே.”
“வாய வச்சிக்கிட்டு சும்மா இரு. ஒருத்தியாச்சும் ஊட்டெ வுட்டு வெளிய போவ வாணாமா? சட்டம் சரா பேசுறதுக்குச் சம்பாரிச்சி வச்சியிருக்கணும். வாய மட்டும் வளத்து வச்சியிருக்கிற. வாயால கூடி வர்றதக் கெடுத்துப்புடாத” என்று பூமாரி மாமியாரை முறைத்தாள். “எம்மாம் நாளக்கிப்பொட்டச்சிவுள ஊட்டுல வச்சியிருக்கிறது. ஊருல சனங்க எம்மாம் பேசுதுவோ” என்று சொல்லிப் பூமாரி கண்கலங்கினாள்.
“நீ பேசாம இரும்மா. இப்ப அவுங்கள அனுப்பி வைப்பம். மத்தத அப்பறமா பேசிக்கலாம்” என்று சொன்னதோடு வீட்டுக்குள் போய் “ரெண்டு நாளு கழிச்சி வாங்க சொல்றம்” என்று சொல்லி, பெண் பார்க்க வந்தவர்களை அனுப்பிவைத்தார் கோகிலாவின் அப்பா.
கோகிலாவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஆனால், முத்தம்மா இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று ஒரேடி யாகப் பாடம் போட்டாள். “வௌக்காட்டம் தகதகன்னு இருக்கிற ஒம் மொகத்துக்கு அவன் பொருத்தமா? கண்ணுல வெளிச்சம் போன கிழடிகூட அவனக் கட்டிக்க மாட்டா.” அவள் பாடம் பலிக்கவில்லை. கடைசியில் “ஒருத்தியாவது கன்னி கழியட்டும்” என்று கோகிலாவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எண்ணம் உண்டாயிற்று. எல்லாவற்றுக்கும் மேலாக, வேலையில் இருக்கிறான். அடுத்தடுத்த பிள்ளைகளின் கல்யாணத்திற்கு உதவுவான் என்று நம்பினார்கள். அதற்கும் மேலாக, ஒரு டிக்கட்டாவது வீட்டை விட்டு வெளியேறட்டும் என்று நினைத்தார்கள். திரும்பி வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தார்கள். சொல்லிவைத்த மாதிரி மூன்றாம் நாள் காலையில் செல்வமணியின் அப்பாவும் அம்மாவும் வந்தார்கள். “பொண்ணுக்குச் சம்மதம்தான். நீங்கதான் ஒரு கோவுல்ல வச்சி தாலியக் கட்டிக்கணும். நாங்க வெறும் ஆளாத்தான் வருவம்” என்று கோகிலாவின் அப்பா சொன்னதுதான் “பொண்ண மட்டும் அனுப்புங்க. நாங்க பாத்துக்கிறம். பணம் காசு என்னாங்க? எங்க ஊருலியே இப்பிடிப்பட்ட மருமவ யாருக்கும் இல்லங்கிற பேருதான் எனக்கு வேணும்” என்று சொன்னதோடு அடுத்த எட்டாம் நாள் வந்து தேதி வைத்தார்கள். அடுத்த பத்தாம் நாள் கல்யாணம். தாலிக் கட்டிக்கொண்ட ஆறாம் நாளே ரயிலேறிவிட்டாள் கோகிலா.
ஒவ்வொன்றாக நினைத்த கோகிலாவுக்கு வியப்பாக இருந்தது. ரயில் ஏற்றிவிட வரும்போதும்கூட வழியில் முத்தம்மா கேட்டாள்: “சண்டாதி சண்டனா ராசாதி ராசனெல்லாம் வாணாமின்னுட்டு எதுக்குடி எரிஞ்சிப் போன புளியாமரம் மாரி இருக்கிற இத்துப்போன இந்தப் பயலெ கட்டிக் கிட்டெ?” கோகிலா வாயைத் திறக்கவில்லை. தன்னுடைய அப்பா அம்மா கேட்டபோதும், தங்கைகள், ஊர்ப் பெண்கள் கேட்டபோதும்கூட அவள் வாயைத் திறக்கவில்லை. அந்த ரகசியத்தை இனிமேலும் சொல்ல முடியாது என்றுதான் கோகிலாவுக்குத் தோன்றியது. வெளியே சொன்னால் சிரிப் பார்கள். மலம்ஜலம் கழிப்பது பெரிய விசயமா என்று கேட்பார்கள்.
கோகிலா வயதுக்குவந்த நான்காவது வருசத்திலிருந்து பெண் கேட்டு மாப்பிள்ளைகள் வந்தார்கள். உள்ளூரில் நான்கு பேரும் வெளியூரிலிருந்து ஏழு பேரும் வந்தார்கள். எல்லாருமே எட்டாவது, பத்தாவது என்று படித்தவர்கள். செல்வமணியைவிடப் பத்து வயது குறைந்தவர்கள்தான். வாட்ட சாட்டமான பையன்கள்தான். அதிலும் ஆத்தூரிலிருந்து வந்த பையன் நன்றாகவே இருந்தான். நல்ல வளர்த்தி, நல்ல உயரம். கோகிலாவுக்குப் பொருத்தமாக இருந்தான். கோகிலாவைக் கட்டியே தீருவேன் என்று பிடி வாதமாக இருந்தான். நகை, பணம் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று அடிக்கடி வந்தான். கோகிலாவைத் தவிர வீட்டில் எல்லோருக்கும் விருப்பம்தான். கட்டாயப்படுத்தியும் பார்த்தார்கள். ஆனால், கோகிலா பிடிவாதமாக மறுத்துவிட்டாள். அதற்குக் காரணம், ஆத்தூர் பையன் மட்டு மல்ல மற்ற எல்லோருமே கிராமத்தில் இருப்பவர்கள். அவர்களில் யாரைக் கல்யாணம் கட்டிக்கொண்டாலும் உள்ளூரில் மலம்ஜலம் கழிப்பது போல தான் அங்கு போயும் இருக்க வேண்டும். அது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் ஆள் மோசமாக இருந்தாலும் படித்திருக்கிறான், வேலையில் இருக்கிறான். மெட்ராசில் தனி வீடு இருக்கும். யாருக்கும் தெரியாமல் மல ஜலம் கழிக்கலாம் என்ற காரணத்திற்காகத்தான் செல்வமணியைப் பிடிவாதம் பிடித்துக் கட்டிக்கொண்டாள். அவளுடைய சொந்தக்காரர்கள் மாப்பிள்ளை பற்றி ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டார்கள். ஆனால், கோகிலா ஒரு கேள்விக்கூட கேட்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே சரி என்று சொல்லி விட்டாள். அதற்குக் காரணம் அவளுடைய அம்மாதான். வயதுக்குவந்த பிறகு மலஜலம் கழிக்க இருட்டிய பிறகு போகும் ஒவ்வொரு முறையும் காவல்காரன் மாதிரி கூடவே வருவதோடு சற்றுத் தள்ளிக்கூட நிற்காமல் எதிரிலேயே நின்றுகொண்டிருந்ததுதான்.
வயதுக்குவருவதற்கு முன் ஊர்ப் பிள்ளைகளோடும், தன் தங்கைகளோடும் சேர்ந்து வட்டமாகவோ, வரிசையாகவோ உட்கார்ந்து மலஜலம் கழித்திருக்கிறாள். எந்த இடம் விருப்பமோ அந்த இடத்தில். எப்போது வருகிறதோ அப்போது. பிள்ளைகளோடு மட்டுமல்ல ஊர்ப் பெண்களோடும் தன் அம்மா கூடவும் உட்கார்ந்து காரியத்தை முடித்திருக்கிறாள். பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுப் பெண்கள் இவளைத் துணைக்கு அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஊர்ப் பிள்ளைகள் போலத்தான் இருந்தாள். வயதுக்குவந்து தலைக்குத் தண்ணீர் ஊற்றி வீட்டுக்கு வந்த மறுநாள் விடியற்காலையில் இவளை மலஜலம் கழிக்க அழைத் துக்கொண்டு போனாள் பூமாரி. இரண்டடி தூரத்திலேயே எதிரிலேயே நின்றுகொண்டிருந்தாள். கோகிலா தொடையில் உட்கார்ந்த கொசுக்களை அடித்துக்கொண்டிருந்தாள். சுற்றி வந்துகொண்டிருந்த பன்றிகளைப் பூமாரி விரட்டிக்கொண்டிருந்தாள்.
“நீ ஊட்டுக்குப் போ” என்று சொன்னாள். கோகிலா சொன்னதைக் காதில் வாங்காத பூமாரி “இருட்டுல பூச்சிப்பொட்டு கடிச்சிடும், சீக்கிரம் எயிந்திரு” என்று சொன்னாள்.
“பக்கத்திலதான் சனங்க இருக்குதில்லெ. நான் வந்துடுறன். நீ மொதல்ல ஊட்டுக்குப் போ” என்று பல முறை சொல்லிப்பார்த்தாள்.
“காத்து கருப்பு புடிச்சிக்கும். நான் நின்னா ஒனக்கு என்னா? சீக்கிரம் எழுந்திரு. வல்லன்னா முக்கு” என்று சொன்னாள். கோகிலாவுக்குக் கோபம் உண்டாயிற்று. கோபத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு கிழக்குப் பக்கமாகப் பார்த்தாள். மூன்று பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். உட்கார்ந்திருந்ததோடு பேசிக்கொண்டிருந்தனர். அதே மாதிரி கோகிலாவுக் குப் பத்தடி தூரம் தள்ளி இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்களும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். தூக்கத்தில் எழுப்பி அழைத்து வந்தது, எதிரிலேயே நின்றுகொண்டிருப்பது, புது வழக்கமாக விடியற்காலை யிலேயே எழுப்பியது என்று கோகிலாவுக்குப் பூமாரிமீது கோபம் உண்டா யிற்று. வந்த காரியம் நடக்கவில்லை. “எம்மா நேரமாடி குந்தியிருப்ப?” என்று கேட்ட பூமாரி கோகிலாவைச் சுற்றி வந்த பன்றிகளை “த்தூ-த்தூ” என்று விரட்டியடித்துப் பன்றி வளர்ப்பவர்களைக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினாள். அப்போதுதான் ஏன் ஊருக்குள் யாருடைய வீட்டிலும் மலஜலம் கழிப்பதற்கான வசதி இல்லை என்ற கேள்வி அவளுக்குள் முதன் முதலாக எழுந்தது.
ஊருக்குள் குறைந்தது ஐநூறு ஆறு நூறு வீடுகளாவது இருக்கும். அதில் செட்டியார் வீட்டில் மட்டும்தான் பாத்ரூம் இருந்தது. செட்டியாரும் இரண்டு வருசத்திற்கு முன்புதான் கட்டினார். ஊரில் ஆயிரத்துக்கும் மேல் பெண்கள், பிள்ளைகள் என்று இருப்பார்கள். அதில் வசதி படைத்த வீட்டுப்பெண்கள் என்று முந்நூறு நானூறு பேராவது இருப்பார்கள். சோற் றுக்கு அல்லாடுகிற வீட்டுப் பெண்கள் என்று நூறு இருநூறு பெண்கள் இருப்பார்கள். ஏன் இப்படித் தெருவில் வந்து உட்கார்ந்திருக்கிறோம் என்று யாருக்குமே தோன்றவில்லை என்று யோசித்துக்கொண்டு, வந்த காரி யத்தை மறந்துவிட்டு உட்கார்ந்திருந்தாள் கோகிலா. “எம்மாம் நேரம்மா குந்தியிருப்ப?” என்று பூமாரி கேட்டதும் வந்த காரியம் முடியாமலேயே எழுந்துவிட்டாள். வரும் வழியில் கேட்டாள்:
“செட்டியார் ஊட்டுல கட்டுன மாரி நம்ப ஊட்டுக்குப் பின்னாடி பாத் ரூம் கட்டுனா என்னம்மா?” என்று கேட்டாள்.
“ஒங்கப்பனக் கட்டச் சொல்லு நானா வாணாங்கிறன். சோத்துக்கே வழியக் காணும்.”
“கூட்டத்திலெ குந்துறதுக்குக் கூச்சமா இருக்கு.”
“வயசுக்குவந்த புதுசில அப்பிடித்தான் இருக்கும். போவப்போவ சரியாப் போயிடும். வரிசியா எத்தினி பொட்டச்சி குந்தியிருக்கிறாங்க, பாக்கல? ஊரு ஒலகத்து பொட்டச்சியெல்லாம் வெளிய வாசல இப்பிடித்தான போறாங்க. ஒனக்கு மட்டும் என்னா? நீ மட்டும் அதிசயமா?” என்று கேட்ட பூமாரி பத்து இருவதடி தூரம் வந்ததும் மகளோடு சேர்ந்து உட்கார்ந்திருந்த பூங்காவனத்திடம் “விடிஞ்சதும் என்னா வேல, எங்க போறது? யாரு ஊட்டுக்கு” என்று விசாரிக்க ஆரம்பித்தாள். பூங்காவனம் கையிலிருந்த குச்சியால் பன்றிகளை விரட்டிக்கொண்டே பூமாரியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். கோகிலா சற்றுத் தள்ளி வந்து நின்றாள்.
அன்றிலிருந்து நேற்றிரவுவரை அதே கூத்துதான். ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் பூமாரியோ, தவறினால் தங்கைகளில் ஒருத்தியோ கூட வருவார்கள். நான்கு பேரும் வயசுக்குவந்த பிறகு “சேந்து போங்கடி” என்று பூமாரி சொல்லி நான்கு பேரையும் ஒரே நேரத்தில் கையில் குச்சியைக் கொடுத்து அனுப்ப ஆரம்பித்தாள். நேரம் கெட்ட நேரத்தில் அவ ளுக்கு வந்தால் “கூட ஒருத்தி போ” என்று ஒருத்தியை அனுப்புவாள். ஒவ்வொரு நாளும் விடிவதற்குள்ளாகவே அம்மாவுடனோ தங்கைக ளுடனோ கையில் குச்சியுடன் எழுந்து போய் வரிசையாகவோ, வட்டமாகவோ உட்கார்ந்திருக்கும் பெண்களுக்கு மத்தியில் இடம் பிடித்து உட்கார்ந்து, இடையில் ஆண்கள் வந்தால் எழுந்து முகத்தை திருப்பிக்கொண்டு நின்றிருந்துவிட்டு திரும்பவும் உட்கார்ந்து மலஜலம் கழிக்கும் ஒவ்வொரு முறையும் கல்யாணம் கட்டினால், வேலையில் அதுவும் நகரத்திலிருக்கும் மாப்பிள்ளையைத்தான் கட்ட வேண்டும் என்று நினைப்பாள். அந்த ஒரு காரணத்திற்காகத்தான் வந்த மாப்பிள்ளைகளையெல்லாம் வேண்டாம் என்று உதறித்தள்ளினாள். வீட்டிலுள்ளவர்களின் பேச்சையும் ஊரிலுள்ள வர்களின் பேச்சையும் மீறி செல்வமணியைக் கட்டிக்கொள்கிறேன் என்று பிடிவாதம்பிடித்துக் கட்டிக்கொண்டாள். இப்போது நினைத்தாலும் வேடிக்கையாகத்தான் இருந்தது. வரிசையாகவும் வட்டமாகவும் சிறுபிள்ளைகள், கிழவிகள் என்று வயது வித்தியாசமில்லாமல் ஒன்றாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கும்போது எப்படிப் பேசிக்கொள்ள முடியும்? ஆனால், ஒவ்வொருத்தியும் அந்த நேரத்தை விட்டால் அடுத்த நேரம் கிடைக்காது என்பது மாதிரிதான் நேற்று ஆக்கின சோறு, குழம்பு முதல் வீட்டில் நடந்த சண்டைகள், மனக்கசப்புகள், மாமியார், மருமகள் சண்டைகள்வரை பேசுவார்கள். மெல்லமாகக்கூடப் பேச மாட்டார்கள். இடையிடையே பன்றிகளை விரட்டிக்கொண்டும், பன்றி வளர்ப்பவர்களைத் திட்டிக்கொண்டும் பேசுவார்கள். காரியம் முடிந்துவிட்டாலும் அதே இடத்தில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருப்பார்கள். அதோடு மலஜலம் கழிக்க வருபவர்களையும், மலஜலம் கழித்துவிட்டுப் போகிறவர்களையும் மறித்துவைத்துக்கொண்டு அப்படியொரு பேச்சுப் பேசுவார்கள். பேச்சுக்கிடையில் நடைபாதையிலே மலஜலம் கழித்துவிட்டுப் போனவர்களைத் திட்டித் தீர்க்கவும் மறக்க மாட்டார்கள்.
“கழிசடங்க. ஒரு ஓரமா ஒதுங்கி இருந்தா என்ன? தடத்திலெ கழிஞ்சி வச்சியிருக்கிறதப் பாரு. அவுங்க கொடல அறுக்க” என்று விடியற்காலையில் மட்டுமில்லை, விடிந்த பிறகும் அந்த வழியே போகிறவர்கள் திட்டிக்கொண்டும் காறித் துப்பிக்கொண்டும்தான் போவார்கள். அந்தநேரத்தில் யாராவது ஆண்கள் வந்து அவசரத்திலோ, பார்க்காமலோ எழுந்திருக்காமல் உட்கார்ந்திருந்துவிட்டால் காறித் துப்பி “மானங்கெட்ட கழுத, ஆம்பள வரான்னுகூட இல்லாம குந்தியிருக்கிறதப் பாரு” என்று திட்டிக்கொண்டே போவார்கள். அந்தப் பேச்சையும் கேட்க வேண்டும்.
வெயில் காலத்தைவிட மழைக் காலம்தான் ரொம்ப மோசமாக இருக்கும். வழியெங்கும் சேறும் சகதியுமாக இருக்கும். லேசாகத் தூறலும் இருக்கும். அதில்தான் போய் வரவேண்டும். சேறு சகதி ஈரத்திற்குப் பூச்சி, பொட்டு, பாம்பு பல்லி வரும் என்று ஒதுங்கி உட்காராமல் நடைபாதையிலேயே உட்கார்ந்துவிடுவார்கள். வழிநெடுக பார்த்துகொண்டேதான் போக வேண்டும்.இடம் பார்த்து உட்கார்ந்தாலும் தவளைகள், வண்டுகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். மழைக் காலமாக இருந்தாலும் வழியில் பேசுவதை, எதிரில் நின்றுகொண்டு பேசுவதை, வழியில் வருகிற போகிறவர்களிடம் பேசுவதை விட மாட்டார்கள். இதனால் சில வீடுகளில் பெரிய சண்டையே நடக்கும். “பீக்காட்டுக்குப் போனமா வந்த மான்னு இல்லாம இம்மாம் நேரம் என்னாடி பண்ணிக்கிட்டிருந்த? கள பீ பேண்டுக்கிட்டு இருந்தியா? இல்லெ வழியே போன, வந்த நாயிவோ கிட்டெ கதெ போட்டுக்கிட்டிருந்தியா?” என்று கேட்டு மாமியார்கள் மரு மகள்களிடமும், அம்மாக்கள் மகள்களிடமும் சண்டைபிடிப்பார்கள். அவ்வாறு சண்டைபிடிப்பதற்குக் காரணமும் இருக்கும். தோட்டத்துக்குப் போகி றேன் என்று போகிற நேரத்தில்தான் தங்களுக்குப் பிடித்த பையன்களைச் சந்திப்பார்கள். இளம்பெண்களும் இளம்பையன்களும் சந்திக்கிற இடமும் நேரமும் அதுதான். பீக்காடு. அதனால் வயதுக்குவந்த பெண்களுக்கு அந்த நேரத்தில்தான் காவல் அதிகம் இருக்கும். யார்யார் எங்கெங்கு நின்று பேசிக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்த கோகிலாவுக்குச் சிரிப்பு வந்தது. செல்வமணியைக் கல்யாணம் கட்டிக்கொண்டது பரவாயில்லை என்று நினைத்தாள். கல்யாணம் நடந்த அன்று “ஒன் யாகத்த முடிச்சிட்டடி” என்று சொல்லி முத்தம்மா சிரித்தது நினைவுக்கு வந்தது.
மலஜலம் பற்றியே யோசித்துக்கொண்டிருந்ததால் கோகிலாவுக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும்போல் இருந்தது. எப்படி செல்வமணியிடம் சொல்வ தென்று தயங்கினாள். சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்தாள். தாங்க முடியாது என்ற நிலையில் ரொம்பவும் கூச்சத்துடன் செல்வமணியை எழுப்பி ‘தோட்டத்துக்குப் போவணும்’ என்று சொன்னாள். அவன் சட் டென்று தூங்கியது மாதிரியே சட்டென்று எழுந்தது ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.
“போயிட்டு வா” என்று சொன்னாள்.
“இம்மாம் கூட்டத்திலெ பொட்டச்சி நான் எப்பிடித் தனியாப் போறது?”
“சரி. வா” என்று சொல்லி எழுந்தான் செல்வமணி.
கல்யாணப் பெண்ணுக்கு மாலை மாற்றி போடுவதற்காகப் போவது மாதிரி “கொஞ்சம் வழிவிடுங்க”, “கொஞ்சம் நவுருங்க”, “வழி, வழி” என்று சொல்லி நடைபாதையில் நின்றுகொண்டிருந்தவர்களையும், உட் கார்ந்திருந்தவர்களையும் நகர்த்திவிட்டு, இடித்துக்கொண்டு செல்வமணி முன்னால் நடக்க, கோகிலா அவன் பின்னாலேயே போனாள். புதுச்சீலை, சட்டை, கைநிறையக் கண்ணாடி வளையல்கள், தலை நிறைய பூ, மஞ்சள் பூசிய முகம், கழுத்தில் புது தாலிக்கயிறு, புதுத் தோடு, புது மூக்குத்தி, கால் கொலுசு என்று அனைத்தும் அவளை புதுப்பெண் என்பதை அடையாளம் காட்டின. அதனால் அந்தப் பெட்டியிலிருந்த ஆண், பெண் என்று வித்தியாசமில்லாமல் எல்லாக் கண்களும் அவளையே மொய்த்தன. இரண்டு கழிப் பறைகளிலும் உள்ளே தாழிடப்பட்டிருந்தது. பக்கத்திலிருந்த இரண்டு அறைகளின் கதவையும் தள்ளிப் பார்த்தான். உள்ளே ஆட்கள் இருந்தார்கள். ஒரு அடி தூரம்தான் இருக்கும். இருந்தாலும் “பக்கத்தில் வா” என்று சொன்னான். கழிப்பறைக் கதவை ஒட்டி கோகிலாவை நிற்கச் சொன்னான். இரண்டு கழிப்பறைகளை ஒட்டியும், ரயிலில் ஏறுவதற்கான இரண்டு வழி யிலும் பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் நின்றுகொண்டிருந்தனர். இவ்வளவு ஆண்களுக்கு மத்தியில் ஒரு அங்குலம், இரண்டு அங்குலமாக இடைவெளியில் இதற்குமுன் அவள் நின்றதே இல்லை. அவ்வாறு நிற்பதே அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதோடு கழிப்பறைக் கதவு எப்போது திறக்கும் என்று நின்றுகொண்டிருப்பது கூடுதலான வெட்கத்தையும் கூச்சத்தையும் உண்டாக்கிற்று. அந்த நேரம் பார்த்துத்தான் செல்வமணி இவளிடம் தன்னுடைய அலுவலகத்திற்கு நாளைக் காலையிலேயே போக வேண்டும் என்று சொன்னான். “நேரத்திலியே எழுந்திருப்பியா?” என்று கேட்டான். அவனுக்குப் பதில் சொல்லாமல் வெறுமனே ‘ம்’ என்பது மாதிரி தலையை மட்டும் ஆட்டினாள். அப்போது ஒரு ஆள் வேகமாக வந்து இரண்டு கழிப்பறைக் கதவுகளையும் தள்ளிப் பார்த்துவிட்டு செல்வமணியை ஒட்டி நின்றுகொண்டு கதவு எப்போது திறக்கும் என்று காத்திருந்தான். நடைபாதையில் உட்கார்ந்திருந்த, நின்றுகொண்டிருந்த ஆட் களைப் பார்த்தாள். மெட்ராஸ்வரை இப்படியேதான் போக வேண்டுமோ என்று யோசித்தாள். அப்போது கிழக்குப் பக்கமாக இருந்த கழிப்பறைக் கதவை திறந்துகொண்டு குண்டான பெண் ஒருத்தி வெளியே வந்தாள். உடனே ‘போ’ என்று கோகிலாவிடம் சொன்னான். அவள் உள்ளே போவதற்குள்ளாக செல்வமணிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஆள் உள்ளே போக முயன்றான். “இருங்க. லேடீஸ் போவட்டும்” என்று சொல்லி கோகிலாவைக் கழிப்பறைக்குள் அனுப்பினான்.
கதவைச் சாத்தித் தாழ்போட்டதுதான். அப்படியொரு நாற்றம் அடித்தது. காய்ந்துபோயும், ஈரமாகவும் மலம் கிடந்தது. மூத்திர வாடை குடலைப் பிடுங்கிற்று. பத்து இருபது பீடி சிகரட் துண்டுகள் கிடந்தன. எல்லா இடத் திலும் எச்சில் கறையாகவும், சளிக் கறையாகவும் அப்பிக் கிடந்தது. வாந்தி வருவது மாதிரி குமட்டிக்கொண்டு வந்தது. காறித் துப்பலாம் என்று பேசினைப் பார்த்தாள். சளியும், பீடி, சிகரெட் துண்டும், எச்சில் கறையுமாக இருந்தது. அதற்குள் வாய், உதடு, மூக்கு என்று அரிக்க ஆரம்பித்துவிட்டது. நான்கு ஐந்து இடத்தில் ஆண், பெண் குறிகளின் படம் வரைந்து பாகங் களைக் கோடுப்போட்டுக் குறித்து வைத்திருந்தனர். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு கீழே உட்காரலாம் என்றால் ஒரே ஈரமாக இருந்தது. அது தண்ணீரா, மூத்திரமா? மீறி உட்கார்ந்தாலும் கால்களில் சீலையில் மலஜலம் ஒட்டாது என்று சொல்ல முடியாது. “ஊரவிட மோசமா இருக்கே” என்று முணுமுணுத்தாள். எல்லாவற்றையும் மீறி உட்காரலாம் என்றால் கதவுக்கு முன்னால் செல்வமணி நின்றுகொண்டிருக்கிறான். அவனுக்குப் பக்கத்தில் இவள் எப்போது கதவைத் திறப்பாள் என்று வேறு ஒரு ஆள் நின்றுகொண் டிருக்கிறான். அதற்கடுத்து ஒரு அடி இரண்டு அடி தூரத்தில் பத்துக்கும் அதிகமான ஆண்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். அதோடு ஒவ்வொரு ஆளாக அவள் தாண்டி, தாண்டி வந்தபோது கோச்சில் இருந்த பாதி பேருக்கு மேல் அவளைப் பார்த்திருப்பார்கள். எல்லாருக்கும் இவள் எங்கே போகிறாள் என்பது தெரிந்திருக்கும். இவள் திரும்பிப் போகும்போதும் எல்லாரும் பார்ப்பார்கள். என்ன நினைப்பார்கள்,நினைத்திருப்பார்கள் என்று யோசித்ததுமே அருவருப்பு உண்டாயிற்று. என்ன செய்வது என்று யோசிக் கும்போது யாரோ கதவை தள்ளிப்பார்ப்பது தெரிந்தது. சிறுநீர் கழிக்காமல் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். கோகிலாவை இடித்துக் கொண்டு அவசரமாக ஒரு ஆள் உள்ளே ஓடினான்.
“வழி விடுங்க”, “கொஞ்சம் நவுருங்க”, “வழி, வழி” என்று சொல்லி ஒவ்வொரு ஆளாக இடித்துக்கொண்டு தாண்டி செல்வமணி முன்னே செல்ல கோகிலா பின்னால் யாரையும் பார்க்காமல் நடக்க முயன்றாள்.
இடத்திற்கு வந்து உட்கார்ந்த சிறிது நேரம் கழித்துத்தான் கோகிலாவுக்கு மூச்சுவிடவே முடிந்தது. வாயில் உதட்டில் ஏற்பட்டிருந்த அரிப்புக் குறையவே இல்லை. சீலை, சட்டையெல்லாம் வியர்வையில் உடம்போடு ஒட்டிக் கொண்டு கிடந்தது. சிறிது நேரத்திற்குள்ளாகவே இவ்வளவு வியர்வை வியர்த்துவிட்டதே என்று ஆச்சரியமாக இருந்தது. சன்னல் பக்கமாக முகத்தை வைத்துக் காற்று வாங்கினாள். அப்படியும் மூத்திர வாடை போனது மாதிரி தெரியவில்லை. சீலை, சட்டை என்று உடம்பில் எல்லா இடத்திலும் அந்த வாடை படை மாதிரி ஒட்டிக்கொண்டுவிட்டதுபோல் இருந்தது. பெரிய ஆபத்திலிருந்து தப்பி வந்தது மாதிரி உணர்ந்தாள்.
ரயில் நின்றது. டீ, காபி, வெள்ளரிக்காய் விற்பவர்கள் பிளாட்பாரத்தில் கூவிக்கொண்டே போனார்கள். அதைப் பார்த்ததும் “டீ சாப்புடுறியா?” என்று செல்வமணி கேட்டான்.
“வாணாம்.”
“ஏன்?”
“கூட்டத்திலெ அதுவும் இம்மாம் ஆம்பளங்க இருக்கிற எடத்திலெ எப் பிடிக் குடிக்கிறது?”
“அதெல்லாம் பாக்க முடியுமா?”
“எனக்கு வாணாம்.”
“வெள்ளரிக்கா வாங்கட்டுமா?”
“வாங்குங்க.”
செல்வமணி வெள்ளரிக்காய் வாங்கினான். ஒன்றை கோகிலாவிடம் கொடுத்தான். காயை வாங்கி தின்னாமல் கையிலேயே வைத்திருந்தாள். நான்கு ஐந்து காய்களைப் பையில் வைத்துவிட்டு செல்வமணி அடுத்தடுத்து மூன்று காய்களை மாடு சோளத்தட்டையை ‘மரக், மரக்’கென்று கடித்து தின்பது மாதிரி தின்றான். யானையின் வாய் அசைவது மாதிரி அவனுடைய வாய் அசைவதைப் பார்த்த கோகிலாவுக்குச் சிரிப்பு வந்தது.
“வீட்டுக்கு எப்பப் போவம்?”
“இன்னம் முக்கால் அவர் ஆவும். இன்னிக்கி வண்டி லேட்டு வேற. எதுக்குக் கேக்குற?”
“வீட்டுக்குப் போனதும் தோட்டத்துக்குப் போவணும்.”
“இப்பத்தான போயிட்டு வந்த?”
“போவல.”
“ஏன், என்னாச்சி?”
“வாசல்ல அம்மாம் ஆளுங்க நிக்குறாங்க. எப்பிடிப் போறது? எல்லாத்துக்கும் மேல அந்த எடம் இருக்கே. எங்க ஊரு பீக்காட்டவிட மோசமா நாறிகெடக்கு. யே அப்பா, இன்னம் சித்த நேரம் இருந்திருந்தா செத்தே போயிருப்பன். நாத்தம் தாங்க முடியல. கொடலப் புடுங்குது. வேர்த்துக் கொட்டிடிச்சி. விகாரமா இருந்துச்சி. ரயிலு வேற ஓடுது” லேசாகச் சிரித்தாள் கோகிலா.
“ரயிலுல வர்ற எல்லாரும் அதுலதான போறாங்க?”
“எனக்குக் கூச்சமா இருந்துச்சி. வந்துட்டன். ஒரு மணி நேரம் அதுக் குள்ளார ஒரு ஆளு இருந்தா செத்தேபோயிடுவான்.”
“அதுல போறவங்க, வர்றவங்க எல்லாம் மனுசங்க இல்லியா?” செல்வமணியின் குரலும் முகமும் மாறிவிட்டது. “இதென்ன நம்ப ஊடா? இல்லெ ஊரா? இஷ்டப்பட்டெ எடத்தில போயிட்டு வர்றதுக்கு?” என்று கேட்ட செல்வமணி மெட்ராஸ்பற்றி சொல்ல ஆரம்பித்தான். ஆண்களே ஒண் ணுக்குவிட மூன்று நான்கு கிலோமீட்டர்கூட நடக்க வேண்டும் என்று சொன்னான். என்ன நினைத்தானோ “கூவத்த ஒட்டி இருக்கிற சனங்களப் பாத்தா நீ என்னா சொல்லுவ?” என்று கேட்டுச் சிரித்தான்.
“கூவம்னா என்னா?”
கூவம்பற்றியும் அங்கு குடிசை போட்டுக்கொண்டு இருக்கும் லட்சக் கணக்கான மக்கள்பற்றியும் சொல்ல ஆரம்பித்த செல்வமணியின் பேச்சு ரயிலை விட்டு இறங்கி, ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து பைகளை வைத்த பிறகுதான் நின்றது. மொத்த வீடே மூன்று பாய் அளவுக்குத்தான் இருந்தது. வீட்டைப் பார்த்ததும் கோகிலாவுக்குத் திக்கென்றிருந்தது.
“தோட்டத்துக்குப் போவணும்.”
“வா” என்று சொல்லிக்கொண்டே வெளியே போனான்.
“அங்க எதுக்கு?”
“வா சொல்றன்.”
கோகிலாவை அழைத்துக்கொண்டு ஆறு குடித்தனங்களைத் தாண்டி வந்து ஒரு அறையைக் காட்டி “போ” என்று சொன்னான்.
“இதுக்குள்ளாரயா?”
“ம். லைன் வீடுன்னாலே ஒண்ணுதான் இருக்கும். இங்க இருக்கிற ஒம் போது வீட்டுக்கும் இதுதான். மெட்ராசில ரெண்டாயிரம் ரூவா வாடகக்கி இதுவே பெருசு. போ” என்று சொன்னதோடு கக்கூஸ் அறைக்குள் தள்ளி வெளியே கதவை இழுத்து சாத்தினான். “தாழ்ப்பாள் போட்டுக்க.”
“ஒலகத்தில ஒரு பொட்டச்சி எல மறவா காய் மறவா ஒதுங்கிறதுக்கு ரவ எடமில்லியே” என்று முணுமுணுத்தாள். கோகிலாவுக்குக் கண்களில் கண்ணீர் திரை கட்டியது. அடிவயிற்றிலிருந்து அழுகையும் ஆத்திரமும் பொங்கி வந்தது.
கதவைத் தட்டி “எம்மாம் நேரமா இருக்கிற? வா. வெளியே. அடுத்த ஆளு நிக்குது பாரு. லேட்டு பண்ணுனா சண்ட வந்துடும். சீக்கிரம் வா” என்று செல்வமணி கத்திய வேகத்தில் பயந்துபோன கோகிலாவின் தொடைகளின் வழியே சிறுநீர் இறங்கிற்று.
* * * * *
இமயம்