இமயம்
இலக்கியக் களஞ்சியம்

தேடல்எழுத்துலகைத் தேடுங்கள்.

நூல்கள் · சிறுகதைகள் · கட்டுரைகள் · நேர்காணல்கள்

பத்தினி இலை
இமயம் · சிறுகதைகள்

பத்தினி இலை

வாசிப்பு முறை
கதைக்குள் நுழைய
இமயம்

பத்தினி இலை

வாசிப்பு
19

“கண்ணாலத்துக்கு மின்னாடி நம்ப மேற்கால தெரு ஒத்தக் கண்ணன் மவ தனசெல்விய வச்சியிருந்தன்னு யாரோ ஊருல காயடிச்சிவுட்டிருக்காங்க. அதெக் கேள்விப்பட்டு, தாலி கட்டுன மூணாம் மாசத்திலிருந்து கோலம் கட்டி அடிக்கிறா. ஊர சிரிக்க வைக்கிறா. ஊருல என்னெப் பங்கப்பட வைக்கணும். அதான் அவ ஆச. அதுக்குத்தான் இந்தப் பேயி புடிச்சிக்கிச்சிங்கிற கூத்து.”

“எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சி. பூசாரியும் வந்துட்டாரு. இன்னம் செத்த நேரத்திலெ பேய ஓட்டிடுவாரு. அப்பறம் ஒனக்கு எந்தப் பிரச்சனயும் இருக் காது.”

“அடெ நீ ஒண்ணு. ராத்திரிதான் குறி சொல்றவன் ‘நல்ல காலம் வருது, நல்ல காலம் வருது’ன்னு சொல்லிட்டுப் போனான். மறுநாளே வந்திருக்கு பாரு. நல்ல காலம். பேயி ரூபத்திலெ. எப்பிடியும் பூசாரி ரெண்டு மூவாயிரம் உரு சேத்துக்கிட்டுத்தான் போவான்.”

“எதாயிருந்தாலும் உள்ளார வா. பூசாரி ஒனக்காக குந்தியிருக்காரு. அர மணி நேரத்தில முடிஞ்சிடும். என்னிக்காயிருந்தாலும் புடிச்ச பேய ஓட்டித்தான ஆவணும்?”

“என்னெப் பெத்தவளும் சரியில்ல. தாலி கட்டிக்கிட்டவளும் சரியில்லெ. ரெண்டு முண்டவுளும் சேந்துக்கிட்டு என்னெ படுத்துறப் பாடு இருக்கே. அது அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது. யாரு பெரியவங்கிற போட்டியில பேயக் கொண்டாந்து நடு வூட்டுல வுட்டுட்டாளுவ.”

“எதாயிருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம், வா.”

“எனக்கு வாயில நல்லா வந்துடும்” என்று சொல்லி சேகர் முறைத் தான். எதிர் வீட்டு ராமர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். எதையும் கேட்கிற மனநிலையில் சேகர் இல்லையென்பதால் வீட்டுக்குள் உட்கார்ந்திருந்த பூசாரியிடம் வந்தான் ராமர். அப்போது சேகரின் அம்மா, ரம்யாவைப் பிடித்திருக்கிற பேயின் அட்டகாசங்கள் பற்றிச் சொல்லிக்கொண் டிருந்தாள்.

“ராம்டியும் கூரய ஒராயுது சாமி. கூரமேல கருங்கல்லு விய்யிறாப்ல ‘பொத், பொத்’ன்னு சத்தம் கேக்குது. சாமான் சட்டு உருளுது. பூன, எலியா இருக்கும்னு போயி பாத்தா ஒண்ணும் இருக்காது. ராம்டியும் ‘சலுக் சலுக்’ன்னு கொலுசு சத்தம் கேக்கும். கன்னங்கரேல்ன்னு ஏதோ ஊட்டச் சுத்தி நடக்குது. ஆளுதான் யாரோ நடக்குறாங்கின்னு பாத்தா யாரும் இருக்க மாட்டாங்க. விடியவிடிய ஊட்டச் சுத்தி மல்லியப் பூ வாசம் அடிக் குது. பெரிய ஆளுவோ திடுதிடுன்னு ஓடுற மாரியும், ஒடியார மாரியும் இருக்கு. செத்த நேரம் கண்ண மூட முடியாது. பேயோட அட்டகாசம் அடங்கல. வௌக்கமாத்தயும், இரும்புப் பொருளயும் பக்கத்தில வச்சும் படுத்துப்பாத்துட்டன். ஒண்ணுத்துக்கும் அது கட்டுப்படல சாமி. எல்லாம் மேக்கால தெரு ஒத்தக் கண்ணன் மவ தனசெல்விங்கிற குட்டி பண்ற சேட்டதான் சாமி.”

“வெள்ளிக்கி வெள்ளி சூடம் ஏத்திக் கும்புட்டியா? செவ்வாயிக்கி செவ்வா எலுமிச்சங்காய நறுக்கி ஊட்டோட நாலு எல்லயிலயும் தலயச் சுத்திப் போட்டியா?”

“எல்லாம் செஞ்சன் சாமி. நான் ஒவ்வொண்ணா செய்யசெய்யத்தான் அந்தக் குட்டியோட அட்டகாசம் கூடுச்சி.”

“நீ சொல்ற பொண்ணு செத்து எம்மாம் நாளாச்சி?”

“ரெண்டு வருசம் தாண்டிப்போச்சி. ந்தா குந்தியிருக்காளே பேயிப் புடிச்சிப்போயி எம் மருமவ, இவ கண்ணாலத்துக்குப் பாஞ்சி நாளு இருக் கயிலதான் அவ செத்துப்போனா.”

“சாவும்போது அந்தப் புள்ளக்கி வயசி என்னா இருக்கும்?”

“இருவது இருக்கும்.”

“அப்பிடின்னா கொஞ்சம் ஆடத்தான் செய்யும். எப்பிடியாப்பட்ட பேயா இருந்தாலும் நான் பாத்துக்கிறன். நொண்டிக்கருப்பனக் கூப்புட்டுக் காரியத்த முடிக்கிறன். பூச பொருளு எல்லாம் தயாரா இருக்கா?”

“இருக்கு சாமி.”

“எல்லாத்தயும் எடுத்து வச்சி தயார்படுத்துங்க. பொண்ணக் கொண்டாந்து குந்த வையிங்க.”

“சரி சாமி.”

“பேயி கொஞ்சம் முறுக்கா இருக்குமாட்டம் இருக்கு. செய்ய வேண்டிய தெல்லாம் நெறயா இருக்கு. பணம் கொஞ்சம் கனமா புடிக்கும். பரவா யில்லியா?” பூசாரி அக்கறையாகக் கேட்டதும் சேகரின் அம்மாவின் கண் களில் கண்ணீர் வந்துவிட்டது.

“பணம் கனமா புடிச்சா போவுது சாமி. இதுலயிருந்து விடுதல பண்ணி வுடுங்க. ஒன்ற வருசமா படாத பாடில்ல. கண்ணாலமாயி ரெண்டு வருசமாச்சு. புள்ளெ கிள்ளெ ஒண்ணும் பொறக்கல. புருசன் பொஞ்சாதின்னு ரெண்டு பேரும் சிரிச்சிப் பேசி நானறியன். எப்பிடி சிரிப்பாங்க? கண் ணாலம் கட்டுன மூணாம் மாசம்தான் ஒத்தக் கண்ணன் மவ வந்து இவமேல ஏறிக்கிட்டாளே” சேகரின் அம்மாவின் கன்னத்தில் கண்ணீர் இறங்கிற்று.

“நீ எதெப் பத்தியும் கவலப்படாத. இன்னம் செத்த நாழிக்குள்ளார விடுதல பண்ணிவுட்டுடுவன். இரு, பூசப் பொருளு சரியா இருக்கான்னு பாக்கு றன்” என்று சொன்ன பூசாரி பேய் ஓட்டுவதற்காக வாங்கிவந்திருந்த பொரி, தேங்காய், கற்பூரம், சாம்பிராணி, வாழைப்பழம், வெற்றிலைபாக்கு, பிராந்தி பாட்டில் இரண்டு என்று எல்லாவற்றையும் நோட்டம்விட்டான். “குவார்ட்டரு பாட்டிலு மட்ட சரக்கா இருக்குமாட்டம் இருக்கு?” என்று கேட்டான்.

“வெல கொண்ட பொருளுதான் சாமி.”

“பூசப் பொருளுல கொற வைக்கக்கூடாது. நொண்டிக்கருப்பன் குவார்ட்டருன்னா விரும்பிச் சாப்பிடுவான். அவனுக்கு எந்தக் கொறயும் வைக்கக் கூடாது. தட்சணய வையி.”

“எம்மாம் சாமி?”

“ரெண்டாயிரம்.”

“ரெண்டாயிரமா?”

“நாட்டுலுல வெலவாசியெல்லாம் கூடிப்போச்சில்லெ. அப்பறம் நொண்டிக்கருப்பனுக்கான சார்ச்சும் கூடத்தான செய்யும்?”

சேகரின் அம்மா பூசாரி சொன்ன பணத்தை வைத்தாள். பூஜைப் பொருளை அவன் தயார்செய்தான். உடுக்கையைக் கையிலெடுத்தான். “பொண்ணக் கொண்டாங்க” என்று சொன்ன வேகத்தில் கற்பூரத்தைக் கொளுத்தினான். தேங்காய் உடைத்தான். ஊதுவத்தியை ஏற்றினான். ஒரு கரண்டியில் இருந்த நெருப்பில் சாம்பிராணியை அள்ளிப் போட்டான். “பேயிக்கு எடம் வுட்டுத்தள்ளிக் குந்துங்க” என்று சொன்னான்.

சேகரின் அம்மா வெளியே போனாள். திண்ணையில் உட்கார்ந்திருந்த சேகரிடம் “பேயி ஓட்டப்போவுது. உள்ளார வா” என்று சொன்னாள்.

“நீயும் அவகூட சேந்துகிட்டு ஆடுற. ஆடு. நாட்டுல இப்ப பொட்டச்சி ராஜ்ஜியம்தான்” என்று சொல்லி முறைத்ததும், ஒன்றும் சொல்லாமல் அவள் வீட்டுக்குள் வந்தாள்.

ரம்யாவுக்குப் பேய் ஓட்டப்போகிற செய்தி எப்பிடித்தான் ஊருக்குள் பரவியதோ. சேகரின் வீட்டிற்குள் ஊர்ச் சனமே நிறைந்துவிட்டது. ஆண் களைவிடப் பெண்கள்தான் அதிகம்.

பூசாரிக்கு மூன்றடி தள்ளி எதிரில் உட்கார்ந்திருந்த ரம்யாவைச் சுற்றிப் பெண்களும் இளம் பிள்ளைகளுமாக இருந்தனர்.

“பேயோட சேட்டகளப் பத்தி சொல்லு. அதுக்கேத்த மாரியான சாமிய வரவழச்சிடலாம்.” உடுக்கையைத் தட்டினான் பூசாரி.

“ஊட்டு வேல, காட்டு வேல செய்யுறதில்லெ சாமி. நறநறன்னு பல்லக் கடிச்சிக்கிறா. குந்துன எடத்த வுட்டு எயிந்திரிக்க மாட்டங்கிறா. ராத்திரியில எயிந்திரிச்சிப் போயி புளியாமரம்புளியாமரமா நின்னுக்கிறா சாமி.”

“மேல போ.” பூசாரியின் குரலில் வேகம் கூடியிருந்தது. உடுக்கை சத்தத் தின் வேகமும் கூடியிருந்தது.

“நாளுக்கு நாளு மெலிஞ்சிக்கிட்டேபோறா. கழிப்பு கழிச்சி வுட்டவ மாரி போனா போன எடம், வந்தா வந்த எடம்தான் சாமி. தானா பேசிக்கிறா. தானா சிரிச்சுக்கிறா. நடுராத்திரியில சாமி வேட்டயாடி வர்ற நேரத்தில வாசல்ல போயி நின்னுக்கிறா. பத்து ஆளு புடிச்சி இயித்தாலும் தூக்கிக் கெடாசுறா. புத்தி பேதமா இருக்கும்ன்னு ஆஸ்பத்திரிக்கிப் போனன் சாமி. அங்கியும் சரியாவுல. பணம்தான் கரஞ்சிபோச்சி.”

“ஆகாதவங்க செய்யுற பில்லி, சூனியம், வைப்பு, எடுக்கிறதுக்கு, காத்து சேட்ட புடிச்சியிருக்கிறதப் போக்கறதுக்கு ஒலகத்தில எவனும் மருந்து, மாத்திர, ஊசி இன்னும் கண்டுபுடிக்கல. இதையெல்லாம் போக்க எஞ்சாமி நொண்டிக்கருப்பனாலதான் முடியும். ஆஸ்பத்திரிக்குப் போறதெல்லாம் வேஸ்ட்டு. புரியுதா?” பூசாரியின் குரலும் உயர்ந்தது. உடுக்கையின் வேகமும் அதிகரித்திருந்தது.

“ஒங்களதான் நம்பியிருக்கன் சாமி.” சேகரின் அம்மா விழுந்து கும்பிட் டாள்.

“நீ நவுரு. நீ நவுரு. நொண்டிக்கருப்பன அழக்கிறன். காரியத்த முடிக்கிறன்” என்று சொன்ன பூசாரி உடுக்கையை வேகமாக அடிக்க ஆரம்பித்தான். ரம்யாவை வெறிக்கவெறிக்கப் பார்த்தான். “ஏய், ஏய்” என்று உட் கார்ந்த வாட்டத்திலேயே எம்பி எம்பி ஆடினான். ரம்யாவின் முகத்தில்

திருநீற்றை அள்ளிப் போட்டான். பக்கத்திலிருந்த நெருப்பில் சாம்பிராணியை அள்ளிப் போட்டான். வீடு முழுக்கப் புகையாயிற்று. பாவாடை ராயன், காத்தவராயன் என்று துஷ்ட தெய்வங்களையெல்லாம் வணங்கிப் பாடினான்.

பேயிடம் கேட்டான் பூசாரி.

“நீ யாரு? எந்த ஊரு? எதுக்காக இந்தப் புள்ளயப் படிச்சியிருக்கிற?” பேய் சிரிக்க மட்டுமே செய்தது.

“நீ உண்மயச் சொல்லணும். இல்லன்னா நொண்டிக்கருப்பன அழச்சிடுவன்.” பேய் ஒரு மாதிரியாகப் பூசாரியைப் பார்த்ததே ஒழிய, வாயைத் திறக்கவில்லை.

“நீ வாயத் தொறக்கணும். இல்லன்னா சாணிப் பாலக் கரச்சி ஊத்திடு வன்.”

பேய் எதற்கும் பயப்படுகிற மாதிரி தெரியவில்லை.

“பத்தினி எலய வச்சி அடிச்சாத்தான் வாயத் தொறப்பியா?”

பூசாரி பேயின் வாயைத் திறக்க எவ்வளவோ முயன்றான்.

எதற்கும் பேய் அசைந்துகொடுக்கவில்லை.

“யே, சாணிப் பாலக் கொண்டாங்கப்பா” என்று பூசாரி சொன்னதும் ஒரு ஆள் ஓடிப் போய் ஒரு குண்டானில் கரைத்து வைத்திருந்த சாணிப் பாலை எடுத்துவந்து பூசாரியிடம் கொடுத்தான். பூசாரி பேயின் வாயில் சாணிப் பாலை ஊற்ற முயன்றான். சாணிப் பாலை பேய் குடிக்க மறுத்ததால் பக்கத்தில் வைத்திருந்த எருக்கங்குச்சியை எடுத்து மூச்சுவிடாமல் ஏழெட்டு அடி பேயை அடித்தான். பிறகு “சாணிப் பாலக் குடிக்கிறியா? இல்லெ உண் மயச் சொல்லுறியா?”

எருக்கங்குச்சியால் அடி வாங்கியக் களைப்பில் பேய் சொன்னது, “சொல்லிடுறன்.”

“அப்பிடி வா வழிக்கு. ஒதச்சாதான் புத்தி வருதா? ஒன்னெ மாரி ஒரு லட்சம் பேயப் பாத்தவன் நானு தெரியுமா? பத்து இருபது கிராமத்துக்குப் பேயி ஓட்டுறதில நாந்தான் பேமஸ்சு தெரியுமா? வேப்பிலக்காரியோட அருளப் பெத்தவன் நாந்தான் தெரிஞ்சிக்க. எங்கிட்டெ நீ வாலாட்ட முடி யாது. புரியுதா? சரி உண்மயச் சொல்லிடு. என்னா ஊரு நீ?”

“நா எசனூரு.”

“இந்த ஊருக்கு எதுக்கு வந்த? இந்தப் புள்ளய எதுக்குப் புடிச்ச?”

“சும்மாதான்.”

“நீ பொய் சொல்ற. எசனூரிலிருந்து இங்க வர முடியாது. எங்கிட்டியே வித்தக் காட்டுறியா, நாய. ஈமத்தீயால ஒன்னெப் பொசுக்கிடுவன். உண்மயச் சொல்லுறியா? இல்லெ சாணிப் பாலக் குடிக்கிறியா?” எடுத்த வேகத்தில் எருக்கங்குச்சியால் விசிறினான். அடியைத் தாங்க முடியாத பேய் சொன்னது “நான் கருக்கை. எம் பேரு சங்கரி.”

“நீ பொய் சொல்ற. ரெண்டு வருசத்துக்கு மின்னாடி அவதான் எங்கிட்டெ ஒத வாங்க முடியாம சத்தியஞ் செஞ்சிட்டுப் போயிட்டாளே.”

“என் ஊரு கருக்கைதான். எம் பேரு சங்கரிதான்.”

“பேயி சத்தியஞ் செஞ்சா மீறாது. சனங்க மாரி இல்லெ. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது பேயி தெரியுமா? நீ மாத்திமாத்திச் சொல்ற. நொண்டிக் கருப்பங்கிட்டெ சொல்லி நீ ஏயி ஊரு எல்லயிலயும் நடமாட முடியாமக் கட்டிப்போட்டுடுவன்.”

“கட்டிப்போடு பாக்கலாம்.”

“அப்பிடியா?” என்று கேட்டு எருக்கங்குச்சியால் ஒன்று போட்டான். பேய் ஓங்காரமாகச் சிரித்தது. பார்ப்பதற்கு சேகர் பெண்டாட்டி ரம்யா மாதிரி தெரியவில்லை. அவள் கண்களை உருட்டிப் பார்ப்பதும், நாக்கைக் கடிப்பதும் சூழ்ந்திருந்த பெண்களை மிரண்டுபோக வைத்தது.

“கருப்பன். குள்ளக்கருப்பன். நொண்டிக்கருப்பன். முத்துக்கருப்பன். ஆகாச வீரன், வீரனார், ஐயனார், பாவாடைராயன், காத்தவராயன்னு பல பேரயும் கூப்புடுவன். இதுல எவன் ஓய்வா இருக்கானோ அவன வரவழச்சி ஒங்காரியத்த முடிப்பன். நீ யாரு? உண்மயச் சொல்லு. நான் இன்னமுட்டும் ஆயிரம் ரெண்டாயிரம் பேய ஓட்டியிருப்பன். நீ எனக்குக் கால் தூசி.”

பேயி ஓங்காரமாகச் சிரித்தது. “நீ சாமியத்தான் கூப்புடு. சனங்களத்தான் கூப்புடு. எனக்கென்ன?”

“பேயிக்கு ஒகந்த பொருளெல்லாம் வச்சி ஒனக்குப் படக்கிறன். உண் மயச் சொல்லிடு. தவறுனா நொண்டிக்கருப்பன ஒம் மேல ஏவி வுட்டுடு வன். அப்பறம் நீ சாம்பதான்.”

பேய் திமிர் வாட்டமாகச் சிரித்தது. பூசாரி ஒரு பெண்ணை அடிக்கிறோம் என்றில்லாமல் மாட்டை அடிப்பது மாதிரி அடித்தான். எருக்கங்குச்சி தூள் தூளானாது. பேய்க்குக் கண்கள் செருகிக்கொண்டன. வியர்த்து ஒழு கியது. மயக்கம் போட்டு விழுந்துவிடுவது மாதிரி உட்கார்ந்திருந்தாள்.

பூசாரி பேயின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான். பேயைப் பார்த்து பயந்ததைவிட பூசாரியின் தோற்றத்தைப் பார்த்துத்தான் குழந்தைகள் பயந்தன. பூசாரி சாமிப் பாடல்கள் இரண்டு மூன்றைப் பாடினான்.

கூட்டத்திலிருந்த ஒரு பெண் “இதென்ன அடங்காத பேயா இருக்கு. மேற்காலத் தெருவு ஒத்தக் கண்ணன் மவ தனசெல்விதான நீ?” என்று கேட்டதுதான் பேயிக்குக் கோபம் வந்துவிட்டது.

“அதெப் பூசாரி கண்டுபுடிக்கிறான். ஒனக்கென்ன வந்துச்சி? காலேஜ் படிக்கிற ஒங்கொழுந்தனார நீ வச்சியிருக்கிற. அத ஊருக்குச் சொல்லட்டுமா?” என்று கேட்டதும், அந்தப் பெண்ணின் முகம் பேய் அறைந்தது மாதிரி ஆகிவிட்டது. கூட்டத்திலிருந்து நழுவி “உள்ளார நிக்க எடமில்லெ. ரவ ஊடுதான? எம்மாம் பேரு நிக்க முடியும்? வேர்த்து ஒழுவிப்போச்சி” என்று சொல்லிக்கொண்டே வீடு போய்ச் சேர்ந்தாள்.

பூசாரி பேயிடம் கேட்டான். “நீயா போறியா? நானா அனுப்பட்டுமா?”

“முடிஞ்சா அனுப்பிப்பாரு.”

“நீயா போனா ஒனக்கு நல்லது. நொண்டிக்கருப்பன வரவழச்சி அனுப்புனா ஏயி ஊரு எல்லயிலயும் நீ நடமாட முடியாம எல்லக் கட்டுப்போட்டு டுவன்.”

“போடு பாக்கலாம்.”

“நீ திமுறு கொண்ட பேயா இருக்கலாம். ஆனா என் உடுக்கச் சத்தத்துக்குக் கட்டுப்படாம இருக்க முடியாது” என்று சொன்ன பூசாரி “ஏய், ஏய்” என்று கத்தினான். உடுக்கையை வேகமாக அடிக்க ஆரம்பித்தான். தனக்கு அருள் தர வேண்டி சாமிகளிடம் வேண்டினான். கடைசியில் கேட்டான்.

“ஏன் போவ மாட்டன்னு அடம் புடிக்கிற?”

“தனியா இருக்க பயமா இருந்துச்சி. அதனாலதான் இந்தப் புள்ளயப் புடிச்சன்.”

“பேயிக்கே தொண வேணுமா? எருக்கங்குச்சிய தாரன், எடுத்துக்கிட்டு போ” பூசாரி பயங்கரமாகச் சிரித்தான். “என்னியவே ஏமாத்தப்பாக்குறியா?” எருக்கங்குச்சியால் அடித்தான். ரம்யாவின் தலைமுடி அவிழ்ந்து விழுந்தது. முன்னும்பின்னுமாகத் தலையை ஆட்ட ஆரம்பித்தாள். தொடையைத் தட்டித் தானாகச் சிரித்தாள்.

“எங்கிட்ட மாத்திமாத்திச் சொல்ற. பூப்பந்துல சூடத்த ஏத்தி வச்சி ஒங்கிட்ட சத்தியம் வாங்கிடுப்புடுவன். உச்சி மசுரப் புடிச்சி அறுத்துப்புடுவன்.”

“என் உச்சி மசுரப் புடிச்சா மட்டும் எனக்குக் கோவம் வந்துடும்.” பேய் ஆட ஆரம்பித்தது. பேய் ஆடுவதற்கேற்ற வகையில் பூசாரியும் ஆடினான். இரண்டு பேரும் ஆடுவதை வேடிக்கை பார்த்த ஒரு பிள்ளைக்கு மயக் கம் வந்து அது கீழே விழுந்துவிட்டது. அழுது புரண்ட பிள்ளைக்காரி, பிள்ளையைத் தூக்கிக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு ஓடினாள். அதைப் பார்த்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் குணசேகர் “அறியாப் புள்ளங்க எல் லாம் இங்க நிக்கக் கூடாது. அவுங்கஅவுங்க ஊட்டுக்குப் போங்க. ராத்திரி பத்து மணிக்கு மேல ஆயிடிச்சி” என்று சொல்லி, சிறு பிள்ளைகளையெல்லாம் துரத்திவிட்டான்.

“சரி உண்மயச் சொல்லிடு.” எருக்கங்குச்சியைக் கையிலெடுத்தான் பூசாரி.

“அதான் எல்லாரும் சொல்லிட்டாங்களே. மேற்காலத் தெருவு தனசெல்வின்னு. அப்பறம் என்ன?”

“இந்தப் புள்ளெய எதுக்குப் புடிச்ச?”

“அவ புருசன்கூடக் குடும்பம் நடத்தத்தான்.”

“இனிமே நீ அதச் செய்ய முடியாது. போயிடு.”

“போவ மாட்டன்.”

“எதுக்கு அடம் புடிக்கிற?”

“நான் அவங்கூட குடும்பம் நடத்திக்கிட்டிருக்கன்.”

“ஒன்னெப் பிரிச்சி வுட்டுடுவன்.”

“பிரிச்சிப்பாரு.”

“எங்கிட்டியே சவாலா?” எருக்கங்குச்சியால் அடித்தான்.

பேய் அழுதுகொண்டே சொன்னது “அவன எங்கூட அனுப்பி வை. உயிருக்கு உயிரா அவங்கூட வாழ்ந்துகிட்டிருக்கன்.”

“நீ அடுத்த ஆளப் பாரு. இவன வுட்டுடு.”

“நான் ஆளு மாத்தி போவப் போவ நீ பணம் சம்பாரிக்கலாமின்னு பாக் குறியா?” என்று பேய் கேட்டதும் கூட்டம் சிரித்தது. பூசாரியும் சிரித்தான். தான் சிரித்தது கூட்டத்திற்குத் தெரியாமலிருக்க சட்டென்று நெருப்பில் சாம்பிராணியை அதிகமாக அள்ளிப் போட்டுப் புகையை உண்டாக்கினான். கூட்டம் கண்ணைக் கசக்க ஆரம்பித்ததும் பேயிடம் பேசினான் பூசாரி.

“இந்தப் புள்ளய வுட்டுடு. இது நொண்டிக்கருப்பனோட கட்டள.”

“யாரு கட்டள போட்டாலும் முடியாது.”

“அப்பிடின்னா இரு. நொண்டிக்கருப்பனக் கூப்புடுறன். அவன் ஒலகத்த ஒரு நொடியில பாயா சுருட்டிடுடுவான் தெரியுமா?”

“அவன் பாயா சுருட்டட்டும். படுக்கயா சுருட்டட்டும். எனக்கென்னா?” பேய் சிரித்தது. கூட்டமும் சிரித்தது.

“தனியா வந்தியா? கூட்டமா வந்தீங்களா?”

“புருசன் சேக்கப்போறவ கூட்டம் சேத்துக்கிட்டா போவா?” கூட்டம் சிரித்தது. பூசாரியின் முகம் தொங்கிப்போயிற்று. உடுக்கையைத் தட்டிக் கொண்டே, “கேள்வியெல்லாம் நல்லாத்தான் இருக்கு. பேச்சும் இலக்கண மாத்தான் இருக்கு” என்று சொன்ன பூசாரி கூட்டத்திடம் “இது படிச்ச பேயிடா” என்று கத்தினான். பிறகு நெருப்பில் சாம்பிராணியை அள்ளிப் போட்டான். உடுக்கையை அடித்தான்.

“எறங்கி வா. எறங்கி வா. வந்து உண்மயச் சொல்லிடு.”

“இதென்ன புதுசா கேக்குற? ஆளத் தெரியாத மாரி” என்று பேய் அசட் டையாகச் சொல்லிற்று.

“எனக்குத் தெரியாமியா? ஊருல எத்தன பேயப் பாத்திருப்பன். மத்த வங்க ஒன்னெப் பத்தித் தெரிஞ்சிக்க வாணாமா? சொல்லு. நீ மேக்காலத் தெருவு ஒத்தக் கண்ணன் மவ தனசெல்விதான?”

“நீ பலே கில்லாடிதான்.” பேய் சிரித்தது.

“எதுக்கு அப்பிடிச் சொல்ற?”

“என்னெக் கண்டுபுடிச்சிட்டில்ல.”

“அதெல்லாம் அப்பறம். நீ இந்தப் புள்ளய எதுக்குப் புடிச்ச? ஏன் வுட மாட்டங்கிற? அதெச் சொல்லு.”

“சேகரு பயல நான் காதலிச்சன். ராவும் பகலும் எங்கூடயே திரிஞ்சான். எங்கூடப் படுத்து சோலிய முடிச்சான். புள்ள உண்டாயிப்போச்சி. கட்டுறா தாலியன்னன். நீ கருப்பா இருக்கிற. ஒங்கப்பன் நகநட்டுன்னு ஒண்ணும் போட மாட்டான். மோட்டார் பைக் வாங்கித் தர மாட்டான். டவுனுல இருக்கிற மண்டபத்தில கல்யாணம் நடத்த மாட்டான். இதெல்லாம் அவ அம்மாக்காரிதான் சொல்லிக்கொடுத்தா. அதெ வச்சிக்கிட்டு அவன் ஆடு னான். குறிச்சியில ஒத்த பொண்ணு, அதுவும் செவத்தப் பொண்ணு. ஓட்டு ஊடு இருக்கு. ஏரிப் பாசனத்தில மூணு காணி இருக்குன்னு கல்யாணம் கட்டுனான். அவன் நிச்சயம் பண்ணுன அன்னிக்கித்தான் நான் மூணு மாச வவுத்துப் புள்ளயோட புளியா மரத்தில நாண்டுகிட்டன்.”

“ஐயோ சாமி. நான் ஒரு பாவத்தயும் கண்டதில்ல” சேகரின் அம்மா பூசாரியின் முன் விழுந்து கும்பிட்டாள். அவளை ஒரே உதையாக எட்டி உதைத்தது பேய். உதைப்பதற்காகவே பேய் காத்திருந்தது மாதிரி இருந்தது.

“ஓகோ வரலாறு இப்பிடிப் போவுதா?” என்று சொன்ன பூசாரி “சரி, என்ன செய்யலாம்?” என்று கேட்டான்.

“வவுத்துப் புள்ளயோட என்னெ சாவடிச்ச அவனயும், அவனம்மாவயும் வுட மாட்டன்.”

“நீ வுட்டுத்தான் ஆவணும்.”

“முடியாது.” பிடிவாதம் பிடித்தது பேய்.

“சாணிப் பாலு கரச்சது இருக்கு. எடுத்து வாயில ஊத்து. பேயி தானாப் போயிடும்” என்று பஞ்சாயத்துத் தலைவர் சொன்னான். பேய் அவனை விழுங்கிவிடுவது மாதிரி பார்த்தது. நறநறவென்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னது “பஞ்சாயத்து கிளார்க்கு பொண்டாட்டிய நீ வச்சி யிருக்கிறது யாருக்கும் தெரியாதின்னு நெனக்கிறியா? நூறு நாளு வேலக்கி வர பொம்பளயெல்லாம் நீ என்னா செய்யுறன்னு ஊருக்குச் சொல்லவா?” என்று பேய் கேட்டதும் “இது வாய் பெருத்த பேய்டா” என்று சொல்லி விட்டுப் பஞ்சாயத்துத் தலைவர் வெளியே போக முயன்றான்.

“ஊருல நடக்கிறதெல்லாம் அத்துப்படியா பேயிக்குத் தெரியுதே” என்று கூட்டத்திலிருந்த ஒரு பெண் சொன்னாள்.

“வேற மனக்கொற என்னா? சபயில முறயிடு.”

“எனக்கு வவுத்து வலி வந்தப்ப முந்நூறுதான் செலவு செஞ்சான். ஆனா ஊருல எட்டாயிரம் ஆச்சின்னு தாயும் மவனும் கத கட்டிவுட்டாங்க. எனக்குச் செய்ய வேண்டியதச் செய்யல. அதனாலதான் இந்தப் புள்ளயப் புடிச்சன்.”

“இப்ப ஒனக்கு என்னா வேணும் சொல்லு. ஒடனே நிறவேத்துறன்.”

“ஒரு குவார்ட்டரு கொடு.”

“இருக்கா?” என்று பூசாரி பொதுவாகக் கூட்டத்திடம் கேட்டான்.

“அவ புருசன் கோயில்ல குந்தியிருக்கான்” என்று ஒரு பையன் சொன் னான்.

“செல்போன் போடு” என்று பேய் சொன்னது.

“செல்போன் எல்லாம் ஒனக்குத் தெரியுமா?”

“சித்தாளு வேலக்கிப் போறவ வச்சியிருக்கிறா. பள்ளிக்கூடம் படிக்கிற புள்ளிங்க வச்சியிருக்கு. ‘ஹலோ’ன்னு சொல்லாத ஒரு ஆள ஒலகத்தில காட்ட முடியுமா? இதுகூடத் தெரியல. நீ என்ன பூசாரி?”

கூட்டம் சிரித்தது. பூசாரியும் சிரித்தான். “பேய் எங்கூட வௌயாடுது. பேயும், சாமியும் எங்கண்ணுக்கு மட்டும்தான் தெரியும்” என்று சொல்லிச் சிரித்த பூசாரி, நெருப்பில் சாம்பிராணியைக் குத்தாக அள்ளிப் போட்டான். காரணமேயின்றிக் கூட்டத்திடம் சொன்னான்.

“நாந்தான் மின்னாடியே சொன்னனில்லே. இது படிச்ச பேயின்னு. பேயோட போக்குலதான் போவணும். அப்பத்தான் தெரியும், எந்த ஊரு பேயி, எதுக்காக வந்திருக்கு, இந்தப் புள்ளய ஏன் புடிச்சிதுங்கிறது. விபரம் தெரிஞ்சாந்தான் பேய ஓட்ட முடியும்?”

“குவார்ட்டரு எங்க?” பேய் கேட்டது.

“குவார்ட்டரு பாட்டிலக் கொண்டாங்க. நேரமாவுதில்லெ. விடியுறதுக் குள்ளார பேய ஓட்டியாவணும். விடிஞ்சிட்டா அவ்வளவுதான். எத்தன நொண்டிக்கருப்பன் வந்தாலும் பேய ஓட்ட முடியாது.”

“எங்க? எங்க? குவார்ட்டரு எங்க?” கூட்டம் கேட்டது. சேகரின் அம்மா பிராந்தி பாட்டிலைத் தேடிக்கொண்டிருந்தாள்.

“அவனுக்கு போன் போடு” என்றது பேய்.

கூட்டத்திலிருந்த ஒரு பையன் சேகருக்கு போன் போட்டான். “எடுக் கல” என்றான்.

“திலுப்பியும் போடு. ‘அவ மதம் கொண்டு போயி பேயி புடிச்சிதின்னு ஆடுறா. ஒத்தக் கண்ணன் மவ என்னாலதான் செத்தான்னு ஊருல சனங்க கதெ கட்டிவுட்டத நம்பிக்கிட்டு ரெண்டு வருசமா ராவும் பகலும் என்னெக் கொல வாங்குறா’ன்னு சொல்வான் பாரு” என்று பேய் சொன்னது. மீண்டும் போன் போட்ட பையன் ஸ்பீக்கரை ஆன் செய்து பேசினான். பேய் என்ன சொன்னதோ அதையேதான் சேகரும் சொன்னான். அவன்

சொன்னதைக் கேட்டு கூட்டம் மட்டுமல்ல, பூசாரியும் சிரித்தான். அப்போது “துணி மூட்டக்குள்ளார கிடந்துச்சி” என்று சொல்லிக்கொண்டே வந்து ஒரு பிராந்தி பாட்டிலை சேகரின் அம்மா கொடுத்தாள். பாட்டிலை வாங்கிய பேய் பச்சைத் தண்ணீரைக் குடிப்பது மாதிரி ஒரே மூச்சில் பிராந்தியைக் குடித்தது கூடியிருந்த சனங்களுக்கு அதிசயமாக இருந்தது.

“அப்பறம் என்னா வேணும்?”

“ரொம்ப பசிக்குது, சோறு கொண்டாங்க.”

பேய் என்னவெல்லாம் கேட்கும் என்றும், அது கேட்கும்போது உடனே கொடுத்துவிட வேண்டும் என்றும் முன்பே பூசாரி சொல்லியிருந்தான்.

அவன் சொன்ன எல்லா ஏற்பாடுகளையும் சேகரின் அம்மா செய்திருந்தாள்.

பேய் சோறு என்றதுதான், உலையில் கொதித்துகொண்டிருந்த சோற்றை வடித்து எடுத்து வந்து அப்படியே வைத்தாள். சோற்றில் ஆவி பறந்தது.

“குழம்பு ஒங் கொப்பன் ஊத்துவானா?” என்று பேய் கேட்டது. சேகரின் அம்மா பேச்சற்றுப் போனாள். மறுநொடியே ஒரு சேவலைக் கொண்டுவந்து

பூசாரியிடம் கொடுத்தாள். அவன் பிளேடால் கோழியின் கழுத்தை அறுத்து ரத்தத்தைச் சுடுசோற்றில் வடிய விட்டான். பேய் ரத்தத்தையும் சோற்றையும் பிசறிச் சாப்பிட்டது. ஒரு நிமிடம்கூட இருக்காது. ஒரு குண்டான் சுடுசோறு காலி. கூட்டம் வாய் அடைத்து நின்றது.

“அப்பறம் என்னா வேணும்?” பூசாரி கேட்டான்.

“புதுத் துணி கொடு. பூ, பொட்டு கொடு, வளயலு வாங்கிப் போடு.” பேயின் வார்த்தைகள் குளற ஆரம்பித்திருந்தன. கண்கள் செருக ஆரம் பித்தன.

“எல்லாம் தரன். போறியா?”

பேய் பேசவில்லை. சிரித்தது.

“போறியா, போறியா?” என்று பூசாரி கேட்க ஆரம்பித்ததும் பேய்

ஓடப் பார்த்தது. கூட்டம் ஓடாமல் அமுக்கிப் பிடித்தது.

“தப்பிக்கப்பாக்குறியா? நீ அடங்க மாட்ட. இரு நொண்டிக்கருப்பனக் கூப்புடுறன்” என்று சொல்லிவிட்டுச் சாம்பிராணியை அள்ளிப் போட்டுப் புகையை உண்டாக்கினான். எப்போதும் இல்லாத அளவுக்கு உடுக்கையை அடிக்க ஆரம்பித்தான். ‘ஓகோ, ஓகோ’ என்று கத்த ஆரம்பித்தான். “சாமியக் கூப்புடப்போறன். அறியாப் புள்ளங்க, பயப்படுறவங்க இருந்தா தூரப்

போயிடுங்க” என்று கத்தினான். அவனுடய உடலின் ஆட்டமும், உடுக் கையின் வேகமும் கூடிற்று.

“வாடா. வா. எறங்கி வா. மலய வுட்டு எறங்குடா, நொண்டிக்கருப்பா. தாமதிக்காத. எறங்குடா. ஒன்னெ நம்பி நான் குந்தியிருக்கன். என்னெ நம்பி இந்தக் குடும்பம் குந்தியிருக்கு. வா. வா. வாடா. எறங்கு. எறங்கு. ஹா ஹா” என்று கத்தியவன் சாமி வந்த மாதிரி ஆட ஆரம்பித்தான். ஆனால் உடுக்கையை அடிப்பதை அவனுடைய கைகள் மறக்கவில்லை. பல்லைக் கடித்தான். உடலை முறுக்கினான். கண்களை உருட்டினான். அகோரமாகச் சிரித்தான். தலையைச் சிலுப்பினான். படிப்படியாக அவனுடைய ஆட்டம் குறைந்தது. கர்ணகடூரமான குரலில் பேயிடம் கேட்டான்.

“நான் யாரு வந்திருக்கன்னு தெரியுதா?”

“நொண்டிக்கருப்பன் வந்திருக்கிற.”

பூசாரியின் மீது நொண்டிக்கருப்பன் சாமி வந்து விட்டதாகப் பேய் சொன்னதும் கூடியிருந்த எல்லாரும் நொண்டிக்கருப்பனைக் கும்பிட்டார்கள்.

“இப்ப சொல்லு. நொண்டிக்கருப்பன்கிட்டெ சொல்லு. நீ இந்தப் பொண்ணெ வுட்டுப் போறியா, இல்லியா?”

“என்னெ அடிக்கக் கூடாது. அலங்கோலம் பண்ணக் கூடாது. பலரும் பாக்கும்படியா என்னெப் பறக்கோலம் ஆக்கக் கூடாது. நல்ல விதமா அனுப்பி வைக்கணும்.”

“பேச்சில மாத்தமில்லியே? திலுப்பி வருவியா?”

“நான் சந்தோசமாப் போவல. சங்கடத்தோடதான் போறன். வெள்ளிக்கிவெள்ளி, செவ்வாயிக்கி செவ்வா தாயும் மவனும் எனக்குச் சூடம் ஏத்திக் கும்புடணும்.”

“கும்புடுறன் சாமி. விரதமும் இருக்கிறன் சாமி” என்று சொல்லி சேகரின் அம்மா கையெடுத்துக் கும்பிட்டாள். அவள் அருகில் வருவதற்காகவே காத்திருந்த மாதிரி பேய் அவளை எட்டி உதைத்தது. சேகரின் அம்மா கூட்டத்தில் சரிந்து விழுந்தாள்.

“ஒம் மவன வந்து கும்புட்டு சத்தியஞ் செய்ய சொல்லு.” பேய் கோபத் தோடு கத்தியது.

கோயிலில் உட்கார்ந்திருந்த சேகரை ஏழெட்டு பேர் ஓடிப்போய் இழுத்து வந்து கும்பிட வைத்தார்கள்.

கண்களை உருட்டி, உடுக்கையைத் தட்டி நொண்டிக்கருப்பன் கேட் டான் “அப்பறம்?”

“எருக்கங்குச்சியால சாத்துறது. சாணிப் பாலக் குடிக்க வைக்கிறது இந்த மாரி வேலயெல்லாம் எங்கிட்டெ வச்சிக்கக் கூடாது. நல்ல முறயில என்னெ அனுப்பி வைக்ககணும்.”

“கல்யாணப் பெண்ணு மாரியா?”

“ஆமாம்.”

“பேயோட ஆசயப் பாரன்” கூட்டத்திலிருந்த ஒரு கிழவி சொன்னாள்.

“நொண்டிக்கருப்பனுக்கே உத்தரவு போடுறியா? நான் கோபப்பட்டா என்னாவும் தெரியுமா? ஒன்னெ சாம்பலாப் பொசுக்கிடுவன். புரியுதா?”

“நீயென்ன இந்திலியா சொல்ற, புரியாமப்போறதுக்கு? எல்லாம் புரிஞ்சிதான் கெடக்கு.”

கூட்டம் சிரித்தது. நொண்டிக்கருப்பனும் சிரித்தான். “நான் மின் னாடியே சொன்னன்ல. இது வக்கீலுக்குப் படிச்ச பேயின்னு,” முகத்தைத் திருப்பிக்கொண்டு சாம்பிராணியை அள்ளிப் போட்டுப் புகையை உண்டாக்கினான். உடுக்கையை அடித்துச் சத்தத்தை எழுப்பினான். ‘ஹோ ஹோ’

என்று கத்தியபடி பேயின் உச்சி முடியைப் பிடிக்க முயன்றான். பேய் நொண்டிக்கருப்பனை ஒரே நெட்டாக நெட்டித் தள்ளியது. “கிட்ட வராத. கிட்ட வராத.” பேய் ஒரேடியாகக் கத்தியது.

“அப்பிடின்னா சூடத்த ஏத்துறன். சத்தியம் பண்ணு.” கற்பூரத்தை ஏற்றிப் பேயின் கையில் வைத்தான். அது கையை உதற முயன்றது. பேயின்

கையை எழெட்டு பேர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர். பேய் சூடு தாங்காமல் கத்தியது. அதனுடைய கத்தலை யாரும் பொருட்படுத்தவில்லை. திமிறியதில் கற்பூரம் பேயின் கையிலிருந்து தரையில் விழுந்து விட்டது. “என்னியே ஏமாத்தப்பாக்குறியா?” என்று கேட்டுப் புதிதாக கொண்டு வந்திருந்த எருக்கங்குச்சியை எடுத்துப் பேய் துவண்டு போகு மளவுக்கு அடித்தான். ‘நல்லா அடிங்க சாமி” என்று சொல்லி உற்சாக மூட்டியது கூட்டம்.

பேய் சுயநினைவுக்கு வர பத்து இருபது நிமிடத்திற்கு மேலானது.

பேயிடம் பேச ஆரம்பித்தது நொண்டிக்கருப்பன் சாமி.

“போவாம அடம் புடிச்சா பிஞ்ச மொறத்தாலியும், பிஞ்ச செருப்பாலயும்தான் அடிப்பன்.”

“இப்பத்தான் காலம் மாறிப்போச்சே. புது செருப்பால, புது மொறத்தால அடிச்சா என்னா?”

கூட்டம் வாய்விட்டுச் சிரித்தது.

“வக்கண பேச்சுக்கெல்லாம் கொறச்ச இல்லெ. இன்னொருத்தி புருசனப் புடிச்சியிருக்க. அதுல ஒனக்கு வெக்கமில்லெ.”

“அவன் என் புருசன்தான். மொதல்ல அவன் எங்கூடத்தான் படுத்தான்.”

“வாய மூடு நாய.”

“ஏன் நீ ரெண்டு மூணு பொண்டாட்டி வச்சியிருக்கியா? பேயி ஓட்டப் போன எடத்தில புடிச்சியிருப்ப.” பேய் சிரித்தது.

“சீ. கேட்டதுக்கு மட்டும் பதிலு சொல்லு” என்று பூசாரி சொன்னான்.

பேய் சத்தம் போட்டுச் சிரித்தது.

கூட்டத்தைப் பார்த்து “பேயி அப்பப்ப எங்கூட வௌயாடும்” என்று சொன்னான். அதற்குப் பேய் சொன்னது, “ஆமாம். இவுரு என் தாய்மாமன். வௌயாடுறன்.”

சாட்டையால் ஒன்று போட்டான் பூசாரி.

“நீ மட்டும் என்னெத் தொடாத. நெருப்பு சுடுற மாரி இருக்கு.”

“நான் பூசாரியில்லெ. நொண்டிக்கருப்பன். புரியுதா? போறியா? இன் னம் அடி வேணுமா?”

“போறன்.”

“ஒன்னெ எங்க கொண்டுபோயி வுடணும்.”

“புளியா மரம், நாவ மரமா பாத்து வுடு நொண்டிக்கருப்பா.”

“குறிப்பா சொல்லு.”

“ஊருக்கு முனயில் இருக்கிற புளியா மரத்தில வுட்டுடு.”

“அந்த மரத்துக்கு எதுக்குப் போறங்கிற? இன்னம் ஆளுவுளப் புடிக்கிற

துக்கா?”

“அதுலயிருந்தா வழியில தடத்திலெ போற எங்கப்பாம்மாவப் பாப்பன். அதுக்குத்தான்.”

“சரி. அந்தப் புளியா மரத்திலியே ஒன்னெ வுடுறன். கங்காதேவி மேல

சத்தியம் பண்ணு. இனிமே இந்தப் பக்கம் வரக் கூடாது. இந்தப் பொண்ண யும் புடிக்கக் கூடாது. வாக்கு மீறக் கூடாது. மீறினா பத்தினி எலயால ஒன்னெ அடிப்பன். அங்க இங்க நவுர முடியாம எல்லக்கட்டுப் போட்டுடுவன்.”

ஒரு சொம்பில் தண்ணீர் வந்தது. தண்ணீரில் பேய் சத்தியம் செய்தது.

“போவலாமா?”

“போவலாம்.”

“ரைட் கிளம்பு. எழுந்திரு” என்று சொன்ன நொண்டிக்கருப்பன் “அக் கினியத் தாண்டணும். வாசல்ல தீயக் கொளுத்து” என்று சொன்னது. உடனே மூன்று நான்கு பேர் வெளியே ஓடித் தயாராக வைத்திருந்த வைக்கோலில் தீ வைத்தனர். நெருப்பு ஆள் உயரத்திற்கு எரிந்தது.

“தீமேல நட” என்று சொல்லிப் பேயை நெருப்புக்குள் நொண்டிக்கருப்பனும், கூட்டமும் தள்ளிவிட்டது. ஒரே தாண்டாகத் தாண்டிக் குதித்துவிட்டது பேய். கூட்டம் அதிசயத்தது. சிறு தீக்காயமில்லை. சீலை, சட்டை பொசுங்கவில்லை. அதிசயம்தான். கூட்டம் வாயில் விரலை வைத்து வேடிக்கை பார்த்தது.

“பேய்க்கிட்ட நெருப்பெல்லாம் கிட்டெ அண்ட முடியாது” கூட்டத்தி லிருந்து ஒரு பையன் சொன்னான்.

“உச்சி மசுர எடுத்துக் கொடு” நொண்டிக்கருப்பன் உத்தரவு போட்டது. பேய் தலையைக் குனிந்து காட்டியது. உச்சி மண்டையில் கொத்தாகக் கொஞ்சம் முடியைப் பிடித்த நொண்டிக்கருப்பன் “இதெப் புடிங்க. நான் வந்த வேல முடிஞ்சிப்போச்சி. நான் மலயேறப் போறன்” என்று சொல்லி, நடுத்தெருவில் லேசாக ஆடியது. பிறகு தொப்பென்று கீழே விழுந்து உருண்டது.

நொண்டிக்கருப்பன் சாமி மலையேறுவதாகக் கூட்டம் கையெடுத்துக் கும்பிட்டது.

தரையில் விழுந்த சாமி மலையேறியதும் ஒன்றுமே தெரியாத மாதிரி தரையிலிருந்து எழுந்து நின்றான் பூசாரி.

“எஞ்சாமி நொண்டிக்கருப்பன் போயிட்டான். ஒரு சொம்பு நெறைய

தண்ணி கொண்டாங்க. ஒரு சூடம், தேங்கா, வெத்திலபாக்கு கொண்டா. வத்தி கொண்டா. நொண்டிக்கருப்பன வழியனுப்பணும். சாமிய வழி யனுப்பும்போது பேய் எதிர்ல நிக்கக் கூடாது. ஆள அடிச்சிடும். கொஞ்சம் தள்ளி நிறுத்து” பூசாரி கத்தினான். எழு எட்டு பேர் கூடிப் பேயைப் பத்தடி தள்ளி இழுத்துக்கொண்டு போனார்கள்.

பூசாரி தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி, ஊதுவத்தி ஏற்றிப் பூஜை செய்தான். தண்ணியோடிருந்த சொம்பைத் தூக்கி “நொண்டிக்கருப்பா சொம்புக்குள்ளார போ. ஒனக்கு வேண்டியதச் செய்யுறன். ஒனக்குச் சேர வேண்டியதப் படையல் பொருளு, குவார்ட்டரு பாட்டிலு எல்லாத்தயும் கொண்டாந்து விடியறதுக்குள்ளார ஒங் காலடியில வைக்கிறன்” என்று சொல்லிவிட்டு மூன்று முறை சொம்பைத் தொட்டுக் கும்பிட்டான்.

“போ. போ. உள்ளார போ. அடம் புடிக்காம போடா” என்று சொல்லி

விட்டு டப்பென்று சொம்பை மூடினான். “தெரு முக்கூட்டுல வுட்டுட்டு வரன்” என்று சொல்லிவிட்டுத் தெரு முக்குட்டுக்கு ஓடினான். தெரு முக் குட்டில் சொம்பிலிருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு விழுந்து கும்பிட்டான். எழுந்து ஆகாயத்தைப் பார்த்துக் கும்பிட்டான். திரும்பிப் பேயிடம் ஓட்ட மாக ஓடி வந்தான். அவனோடு தெரு முக்குட்டுக்குப் போன கூட்டமும் ஓடி வந்தது.

“புது முறத்தில வெத்தலபாக்கு, சூடம், ஊதுவத்தி, பொரி எல்லாம் இருக்கா?”

“இருக்கு சாமி.” கூட்டம் கத்தியது.

“வழியில பொரிய எறச்சிக்கிட்டே வரணும். நாம்ப ஓட்டுற பேயி திருப்பி வந்தாலும், பொரிய பொறுக்கித் தின்னுக்கிட்டே வர்றதுக்குள்ளார பொழுது விடிஞ்சிடும். பேயி ஊருக்குள்ளார வராது.”

பூசாரி பேயின் உச்சி மயிரைப் பிடித்தான். அவ்வளவுதான். பேய் ஓட ஆரம்பித்தது. பேயோடு பூசாரியும், கூட்டமும் புளிய மரத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது.

ஊரின் சனிமூலையில் கோழி ஒன்று கூவியது.

* * * * *

இமயம்