
பசிக்குப் பின்
“யேய் யேய்” என்று கத்திக்கொண்டே விருத்தாசலம் ஓடி வரு வதைப் பார்த்ததும் குத்துவதை நிறுத்திவிட்டு உலக்கையைப் பிடித்த நிலை யிலேயே சிதம்பரம் “என்னடா?” என்று பதட்டத்துடன் கேட்டான். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்தவன், வந்த வேகத்திலேயே அவசரமாக “சோளம், வரவு எதுயிருந்தாலும் புட்டியில அள்ளிக்கிட்டு ஓடியா” என்று சொன்னான். அதற்குச் சிதம்பரம் நிதானமாக “எதுக்கு?” என்று கேட்டது விருத்தாசலத்துக்கு ஆத்திரத்தை உண்டாக்கிற்று.
“எதுக்கா? நம்ப தெருப் பசங்கல்லாம் எதெஎதெயோ போட்டு ஐஸ் வாங்குறாங்க. நாம்பளும் வாங்கலாம். சீக்கிரமா அள்ளிக்கிட்டு வா.”
“கொஞ்ச சோளம்தான் இருந்துச்சு. அதெயும் தண்ணியில கொட்டி ஊறவச்சித் தொவச்சிக்கிட்டு இருக்கறது தெரியலியா?”
“வேற ஒண்ணுமே இல்லியா?”
“இல்லெ.”
“போடா மசுரான்” என்று சொல்லிவிட்டு வேகவேகமாக வீட்டுக்குள் ஓடிய விருத்தாசலம், அதையும் இதையும் புரட்டி அலசிப் பார்த்துவிட்டு ஒன்றும் கிடைக்காத வெறுப்பில் அவசரமாக வெளியே வந்தான். அவனிடம் காரணம் கேட்காமல் சிதம்பரம் சோளத்தைத் துவைத்துக்கொண் டிருப்பது அவனுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கிற்று. வெறுப்புடன் ஓரக்கண்ணால் சிதம்பரத்தையே பார்த்தவன், மீண்டும் வீட்டுக்குள் ஓடி னான். பன்றிக் குடிசை மாதிரி இருந்த அந்த வீட்டை மீண்டும் ஒரு அலசு அலசினான். சல்லடையாகச் சலித்துப் பார்த்தான். கைக்கு ஒன்றும் சிக்கவில்லை. ஒன்றும் கிடைக்காத வேகத்தில் சுவரில் ஒரு உதை விட்டான். கொடிக் கயிற்றில் கிடந்த துணிகளை எல்லாம் உருவிப் போட்டான். பிறகு, எரிச்சலுடன் வெளியே வந்தான்.
“எதுக்குடா அயிவுற?” என்று கேட்ட சிதம்பரத்துக்குப் பதில் சொல் லாமல் கிராளி கொண்ட மாடு மாதிரி ஓட்டம் பிடித்தான்.
பெட்டியிலிருக்கும் மொத்த ஐசையுமே வாங்குகிற பையன் மாதிரி, ஐஸ்காரன் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வேகமாக விருத்தாசலம் ஓடி வந்தான். “பூம்பூம்” என்று சைக்கிளின் ஹாண்டில்பாரிலிருந்த ஹாரனை ஐஸ்காரன் இடது கையால் ஓயாமல் அழுத்திக்கொண்டேயிருந்தான். நிறைய பிள்ளைகள் அவனைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். ஒரு சிலர் அலுமினியத் தம்ளரில் ஐஸ் வாங்கினார்கள். சிலர் கையிலேயே வாங்கிச் சப்பினார்கள். உள்ளங்கையில் வாங்கிய ஒருவன் கையில் நெருப்பை வைத்திருப்பது மாதிரி துள்ளிக் குதித்தான். வாங்குபவர்களைவிட ஐஸ் வாங்காதவர்கள்தான் ஐஸ் பெட்டியை அதிகம் சூழ்ந்திருந்தனர். சில பிள் ளைகள் புட்டிகளில் வரகு, சோளம், கம்பு என்று எடுத்துக்கொண்டுவந்து போட்டு ஐஸ் வாங்கினார்கள். ஒரு ஐஸை மட்டுமே வாங்க முடிந்த அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள் வாங்கிய ஒரு ஐஸையே மாற்றி மாற்றி வாயில் வைத்துச் சப்பினார்கள். சொந்தக்கார, பக்கத்து, எதிர் வீட்டுப் பிள்ளைகள் ஐஸ் வாங்காமலிருந்தால் அவர்களுடைய வாயிலும் ஒரு முறை ஐஸை வைத்துச் சப்பக் கொடுத்தார்கள்.
“இந்தக் கலர்ல வாங்குடா.”
“ஏன் அந்தக் கலர் இல்லியா?”
“ரெண்டு கொடுய்யா.”
ஐஸ்காரன் நகர ஆரம்பித்துவிட்டான். பிள்ளைகளும் அவனை மொய்த்தவாறே நகர ஆரம்பித்தனர். ஐஸ்காரன் அடிக்கடி திரும்பிப் பார்த்து ஐஸ் வாங்காத பிள்ளைகளை “டே, இப்பப் போறீங்களா இல்லியா?” என்று கேட்டு விரட்டிக்கொண்டேயிருந்ததால், அவனைப் பிள்ளைகள் கேலி பண்ண ஆரம்பித்தார்கள். அவன் கிழவன். கன்னங்கள் டொக்கு விழுந்த எலும்பன். கருப்பன். ஏர் நெற்றிக்காரன். ஊத்தை வாயன். காட்டுக் கோழி மாதிரி முகம். கமக்கட்டை சோளக்கதிர் மாதிரி தலைமயிர். இன்னும் என்னென்னவோ சொன்னார்கள். ஐஸ்காரன் கத்துவதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் சைக்கிளைத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள். விருத்தாசலமும் கூடவே போனான். ஐஸ் விற்று முடிந்தால் ஐஸ்காரன் பெட்டியைக் கவிழ்த்துக் கொட்டும்போது உடைந்து கிடக்கும் ஐஸ் கட்டிகளை அள்ளி, சுற்றி நிற்கும் பிள்ளைகளுக்குக் கொடுப்பான். அதற்கு இந்த ஊரிலேயே ஐஸ் விற்றுப்போக வேண்டும் என்றும், ஐஸ் காரன் பெட்டியை இங்கேயே கவிழ்த்துக் கொட்ட வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டே விருத்தாசலம் நடந்துகொண்டிருந்தான். வெறும் ஐஸ் குச்சி கிடைத்தால்கூட போதும். ஐஸைச் சுவைத்த பிள்ளைகளின் நாக்கு பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, ரோஸ் என்று பல நிறங்களாக மாறியிருப்பதைப் பார்க்கப்பார்க்க அவனுக்குப் பொறுக்கவில்லை. சைக்கிளைத் தொடர்ந்து தெருத்தெருவாகப் போய்க்கொண்டேயிருந்தான்.
வள்ளி வரகு கொண்டுவந்து போட்டு ஐஸ் வாங்கினாள். அவள் ஆசைஆசையாக ஐஸைச் சப்பி உறிஞ்சுவதை விருத்தாசலம் கண்கொட்டாமல் பார்த்தான். அவளுடைய முகம் இதுவரை அவன் கண்டிராத முகமாக இருந்தது. அழுது அடம்பிடித்து உதை வாங்கித்தான் அவள் வரகை வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும். தேம்பல் இன்னும் நின்றிருக்கவில்லை. கண்ணீர் காய்ந்துபோயிருந்தது கன்னத்தில் கோடாகத் தெரிந்தது. ஆனாலும், அவளுடைய முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது. வெறுமனே அவ ளையே பார்த்துக்கொண்டிருந்தவன் “அய்யய்ய, கையில எல்லாமா ஒழுவ வுடுவாங்க” என்றான். வள்ளி எதுவும் பேசவில்லை. ஐஸைச் சுவைப்பதில்தான் அவளுடைய கவனமிருந்தது. அவளுடையது ரோஸ் நிறம். “செவப்பு கலர்ல ஏன் வாங்கல. அதான் நல்லாயிருக்கும்” என்றான் அவன். அவள் அதிகம் வாயில் வைத்துச் சப்பவில்லை. குச்சியை இரண்டு கைகளாலும் சேர்த்து ஐஸை முகத்திற்கு நேராகத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தாள். ஐஸைச் சப்பிச் சுவைப்பதைவிட அதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதில்தான் அவளுக்கு மனம் நிறைந்திருக்க வேண்டும். அதைவிட, தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்த ஐஸ் சொட்டுச்சொட்டாக உருகி வழிவதை நாக்கை நீட்டிச் சப்புக்கொட்டிச் சுவைப்பதில்தான் அவளுக்கு ஆசை அதிகம் போலும். அப்படிச் சுவைப்பதில்தான் எவ்வளவு ருசி. அவளை மாதிரிதான் நிறைய பிள்ளைகள் செய்துகொண்டிருந்தனர். விருத்தாசலத்துக்குத் தன்னுடைய நாக்கிலும் ஒரு சொட்டு விழுந்தால் தேவலை என்றிருந்தது. அவனுக்கு எச்சில் வாயை விட்டு வெளியே கொட் டும் அளவுக்கு ஊறிவிட்டது.
ஐஸ்காரன் சைக்கிளில் ஏறிவிட்டான். “பூம்பூம்” என்ற சத்தம் அவன் ஊரைத் தாண்டிப் போன பிறகும் சிறிது நேரம் கேட்டுக்கொண்டேயிருந்தது, ஐஸ்காரன் ஊரை விட்டுப் போவதால் சைக்கிளைத் துரத்திக்கொண்டு யாரும் ஓடவில்லை. வீட்டுப் பக்கமாகத் திரும்பி நடக்க ஆரம்பித்தனர். வள்ளியும் நடக்க ஆரம்பித்தாள். எதிர் வீட்டுக்காரி என்ற முறையில் ஐஸைச் சுவைக்க ஒரு முறை இவனுக்குத் தரவில்லையென்றாலும் திரும்பிக்கூடவா பார்க்கக் கூடாது? எல்லாரும் போய்விட்டார்கள். வள்ளியும் போய்விட்டாள். ஊரின் கடைசியில் தனியாக நிற்க அவனுக்கு வெட்கமாக இருந்தது. ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு, ஒருமுறை தரையைப் பலமாக உதைத்தான். என்ன செய்வதென்று தெரி யாமல் குழம்பிப்போனான். வெறுப்பில் மேல்சட்டையைக் கழற்றிப் பந்தத்தைச் கழற்றுவது மாதிரி சுழற்றிக்கொண்டே நடந்தவனுக்குச் சட்டையை விட்டெறிந்துவிடலாமா என்ற எண்ணம் உண்டாயிற்று. அது பார்ப்பதற்குக் கிழவர்களுடைய சட்டை மாதிரி இருந்தது. ஒரு பொத் தான்கூட இல்லை. போன வாரம் தீபாவளிக்கு, ஏற்றிவந்த கூலி என்று ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு பள்ளிக்கூடத்தில் கொடுத்தது. கால் சட்டையைச் சிதம்பரத்திடம் கொடுக்கும்படி அவனுடைய அம்மா அரும்பு சொல்லிவிட்டாள். புதுச் சட்டையைப் போட்ட இரண்டாவது நாளே தையல் விட்டுப்போய்விட்டது. ஆனால், சட்டையைக் கிழித்துவிட்டதாகச் சொல்லி அரும்பு அவனை அடித்து நொறுக்கினாள். அன்றிலிருந்து அவனைக் காட்டில் கிணறு வெட்டிக்கொண்டிருக்கும் அப்பாவுக்குச் சோறு எடுத்துக்கொண்டுபோகச் சொல்லிவிட்டாள். வரகுச் சோறு என்றால் அவனுக்கு அப்பா கொடுப்பார். கூழ் என்றால் அவனுக்குத் தர மாட்டார். ஊரில் அவரைப் பார்க்கவே முடியாது. பெரும்பாலும் கோவணத்துடன் காட்டிலேயே சுற்றிக்கொண்டிருப்பார். அவரிடமிருந்த ஒரு வேட்டியையும் “மாத்துக்கு வேணும்” என்று சொல்லி பூவரும்பு வாங்கிக்கொண்டு விட்டாள். அவரிடம் ஒரு போர்வை இருக்கிறது. வேட்டி, துண்டு, படுக்க, போர்த்திக்கொள்ள என்று எல்லாவற்றுக்கும் அந்தப் போர்வைதான். காட்டுக்குப் போய் அவரிடம் காசு வாங்கிக்கொண்டு வரலாமா என்று யோசித்த விருத்தாசலம் காசு கிடைத்தாலும் ஐஸ்காரனை எங்கே என்று தேடுவது என்று யோசித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தான்.
சிதம்பரத்தைக் கண்டதும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விருத்தாசலத்துக்குக் கோபமும் அழுகையும் கூடிற்று. தொடர்ந்து அழுது கொண்டிருந்தாலும் அவனுடைய கண்களிலிருந்து பொட்டுத் தண்ணீர் வரவில்லை. ஊமை அழுகையாக அழுதுகொண்டிருந்தான். அவனுடைய ஒவுத்திரியத்தைத் தாங்க முடியாமல் “எதுக்குடா அயிவுற?” என்று சிதம்பரம் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டான். “திங்கறதுக்கு நொறுவ வேணுமாடா? சரி, இதெப் புடி” என்று உரலிருந்த உலக்கையைக் கட்டாயப்படுத்திப் பிடிக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனான். வீட்டின் மேற்கு மூலையில் குதி ரின் மேல் வைத்திருந்த மாகாணியிலிருந்து தீட்டாத கப்பி வரகு அரிசியை இரண்டு கைகளிலும் அள்ளிக்கொண்டு வந்தவன், ஒரு பிடியை விருத்தாசலத்தின் வாயில் போட்டுவிட்டு, மற்றொரு பிடி அரிசியை தன்னுடைய வாயில் கொட்டிக்கொண்டான். பிறகு உலக்கையைப் பிடித்துக் குத்த ஆரம்பித்தவன் கெஞ்சுவதுபோல “இந்தக் களவோட்டப் புடிக்கிறி யாடா?” என்றான். “மசுரப் புடிக்கிறன்” என்று சொன்னாலும், சிதம்பரம் அடித்துவிடுவானோ என்று பயத்தில் முட்டிக்கால் போட்டு உட் கார்ந்துகொண்டு களவோட்டை ஆடாமல் பிடித்தான்.
முதல் உரல் சோளத்தைத் துவைத்து எடுத்துவிட்டு இரண்டாவது உரலுக்குக் குண்டானில் ஊறவைத்திருந்த சோளத்தை அரிசி அரிப்பதுபோல் அரித்து உரலுக்குள் போட்டுச் சிதம்பரம் குத்த ஆரம்பித்தான். பத்து உலக்கைகூடப் போட்டிருக்க மாட்டான். ஒன்றும் சொல்லாமல் திடீரென்று எழுந்த விருத்தாசலத்திடம் “எங்கடா போற?” என்று கேட்டு ஒரு நொடி திரும்பியதுதான் “சலுக்”கென்று ஒரு சேரைக்கு மேல் சோளம் எகிறி மண்ணில் சிதறிவிட்டது. சிதம்பரத்துக்கு உடம்பு நடுங்க ஆரம் பித்தது. பயத்தில் உயிர் நின்றுவிடும்போல் இருந்தது. மண்ணில் சிந்திய தைப் பொறுக்கவும் முடியாது. முறத்தில் அள்ளிப் புடைத்தாலும் சரியாக மண் போக இவனுக்குப் புடைக்கவும் தெரியாது. அப்படியே விட்டுவிட்
டாலும் அரும்புக்குத் தெரிந்துவிடுமே என்று கவலை அவனைப் பற்றிக் கொண்டது. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவனுக்கு முகம் சொடுங்கிப்போயிற்று. எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. வஞ்சத்துடன் விருத்தாசலத்தை ஓரக்கண்ணால் பார்த்தான். தலையில் இரண்டு கொட்டுக் கொட்டலாமா என்று எண்ணினான். அரும்பிடம் சொல்லிவிட்டால் சோளம் கொட்டியதோடு, அவனை அடித்ததற்காகவும் சேர்த்து உதை விழுமே என்ற எண்ணம் வந்ததும், ஒன்றும் பேசாமல் அப்படியே உட் கார்ந்துவிட்டான். விருத்தாசலத்துக்கும் முகம் களை இழந்துவிட்டது. களவோட்டைப் பிடிப்பதை விட்டுவிட்டு உலக்கையைத் தடவிப்பார்க்க ஆரம்பித்தான். “ஒன்னாலதாண்டா இம்புட்டும்” என்று சொன்ன சிதம் பரம், கீழே சிதறிக்கிடந்த சோளத்தை மண்ணோடு மண்ணாக அள்ளித் தூரமாகப் போட ஆரம்பித்தான்.
உலக்கையின் தலைப் பகுதியில் பூண் கிடையாது. கூராகி வழுவழுப்பாக இருந்தது. கைபிடிக்கும் இடத்தில் பாதியாகத் தேய்ந்துப்போயிருந்தது. உரல் கிடுகிடு பள்ளமாக இருந்தது. விருத்தாசலம் கைப்பிள்ளையாக இருந்தபோது உரலின் பள்ளத்திற்குள் கால்களை விட்டு ஆட்டிஆட்டி வெளியூர்களுக்குப் பயணம் போவதாகச் சொல்லி விளையாடியிருக்கிறான். இவனை மாதிரியே சிதம்பரமும் அதில் விளையாடியவன்தான். அரும்பு இந்த வீட்டுக்குக் கல்யாணம் கட்டிக்கொண்டு வருவதற்கு முன்னமேயே இந்த உரலும் உலக்கையும் இப்படித்தான் இருந்தன என்றும், அதை மாற்றக்கூட வக்கில்லை என்றும் குத்தப்போகும்போதெல்லாம் அவள் பேசுவதை சிதம்பரம் கேட்டிருக்கிறான். அவளாலும் உலக்கை யையும் உரலையும் மாற்ற முடியவில்லை. அவள் செய்வதெல்லாம் அவ் வப்போது உரலுக்குக் களவோடு போடுவதுதான். அதுகூட, பூனை, நாய் என்று ஏதாவது மொடாவைச் சாய்த்துவிடும்போதுதான். மொடாவின் தலைப்பகுதியைக் களவோடாகப் போட்டுவிட்டாலும் குத்தும்போது, தானியம் சிந்தாது என்று சொல்ல முடியாது. குத்தும்போது அதைப் பார்க்க வேண்டும். ‘டகடக’ என்று களவோடு ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கும். தவறிப்போய் உலக்கை களவோட்டில் பட்டுவிட்டால் அவ்வளவுதான், சுக்குநூறாகிவிடும். அரும்பு குத்தினாலும் சிதம்பரம் குத்தினாலும் கள வோடு பிடிக்க விருத்தாசலத்தைத்தான் கூப்பிடுவார்கள். இவன் என்ன களவோடு பிடிக்கிற ஆளா? இரண்டாவது உரல் சோளத்தைத் துவைக்க ஆரம்பித்தபோது இருந்த உற்சாகம் சிதம்பரத்திடம் இப்போது சிறிதுமில்லை. பேய் அறைந்தது மாதிரி முகம் வெளிறிப்போய்க் கிடந்தது. சோளம் கீழே சிந்தியதை விருத்தாசலம் அரும்பிடம் சொல்லிவிடுவானோ! அவன் களவோட்டைப் பொறுப்பாகப் பிடித்திருக்கிற விதத்தைப் பார்த்தால் சொல்ல மாட்டான் என்றுதான் தோன்றுகிறது. அவனைவிட இவன் மூன்று நான்கு வயது பெரியவன் என்றாலும் ஒருநாளும் வாய் தவறிப்போய்கூட ‘அண்ணா’ என்று கூப்பிட்டதில்லை. எதற்கெடுத்தாலும் “வாடா, போடா”தான். அப்படிப்பட்டவனை எப்படி நம்ப முடியும்? அவன் சொல்வதைத்தான் அரும்பும் கேட்பாள். அறியாப் பிள்ளை பொய் சொல்லுமா என்று எதிர்க் கேள்வி கேட்பாள். களவோட்டை ரொம்ப அக்கறையாகப் பிடித்துக்கொண்டிருந்த விருத்தாசலம் நல்ல பையன் மாதிரி இணங்கிய குரலில் “தவுடு கிண்டித் தர்றியா?” என்று கேட்டான். சிதம்பரத்திற்கு எடுத்த எடுப்பிலேயே முடியாது என்று சொல்லத்தான் வாய் வந்தது. ஆனால், அதை அடக்கிக்கொண்டான். சோளம் சிதறிய விஷயத்தை அரும்பிடம் சொல்லாமலிருக்க அவனைத் தாஜா செய்தால்தான் உண்டு என்று நினைத் தவன், அரைமனத்துடன் “சரி” என்றான்.
“முருங்க தவப் போட்டு கிண்டுறியா?”
“முருங்கமரம்தான் நம்மகிட்டெ இல்லியே.”
“அப்டின்னா நான் ஓடிப்போயி சிவஞானத்தோட அம்மாகிட்டெ கேக்கட்டுமா?”
“மரத்துல ஏறி வியிந்துடுவன்னு சொன்னா?”
“அதெல்லாம் நான் பாத்துக்கிறன். முருங்கத் தவயோட வெல்லமும் போட்டுக் கிண்டுனா திங்கறதுக்கு நல்லாயிருக்கும்னு நேத்து சிவஞானம் எங்கிட்ட சொன்னான்.”
“நம்ப ஊட்டுல வெல்லம் இல்லியே.”
“அது இல்லாட்டிப் போவுது. தவயாவது போட்டுக் கிண்டு. சோளத்தத் தொவச்சதும் தவுட்ட சட்டுன்னு பொடச்சி எடு. நான் போயி முருங்கத் தவ வாங்கியறன். அம்மா அடிக்கும்னு பின்னால ஏமாத்துவியா?”
“இல்லெ.”
“அம்மாமேல சத்தியமா?”
“அம்மாமேல சத்தியமா.”
விருத்தாசலம் காற்றாய்ப் பறந்தோடினான். அவன் கேட்டதற்கெல்லாம் சிதம்பரம் “சரி சரி” என்று சொன்னது அவனைத் தாஜாசெய்யத்தான். முருங்கைத் தழை எங்கே கிடைக்கப்போகிறது என்ற எண்ணத்தில் தான். மீறிக் கொண்டுவந்துவிட்டால்? நிச்சயம் கிடையாது என்று திடமாக நம்பியவன் பொறுமையாக இரண்டாவது உரல் சோளத்தைத் துவைத்து, அள்ளி எடுத்து, உலர வேண்டும் என்பதற்காக நடு வீட்டில் கொண்டுபோய்க் கொட்டிவைத்தான். பரசலாகக் கிண்டிவிட்டான். நன்றாகத் துவைத்திருக்கிறோமா என்று கையில் அள்ளித் தவிட்டை ஊதிப் பார்த்தான். தவிடுபோக நன்றாகத் துவைத்திருப்பதாகப் பட்டது. ஆனால், அரும்பு இன்னும் பத்து உலக்கை போட்டிருக்க வேண்டும் என்றுதான் சொல்வாள். இவன் எதை செய்தாலும் அதில் குறைசொல்லாமல் அவளால் இருக்க முடியாது. வெளியே வந்து களவோட்டையும் உரலையும் எடுத்துக்கொண்டுபோய் வீட்டுக்குள் வைத்தான். ஒரு ஆள் தடிமனில் உரலுக்குப் பக்கத்தில் நிழல் பரப்பிக்கொண்டிருந்த பூவரசு மரத்தில் சாய்ந்து நின்றுகொண்டு தண்ணீர் எடுக்கப் போகலாமா, நேரமாகிவிட்டதா என்று மேற்கில் பார்த்தான். சூரியன் வீடுகளின் பின்புறமாக மறைய ஆரம்பித்திருந்தது.
விருத்தாசலம் முருங்கைத் தழையுடன் வேகவேகமாக ஓடி வந்தான். தவிட்டைப் புடைக்காமல் பூவரசு மரத்தில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த சிதம்பரத்தைப் பார்த்ததும் அவனுக்கு முகம் சொடிங்கிவிட்டது. வெறுப் புடன் நின்ற நிலையிலேயே அடிப்பது மாதிரி தழையை வீட்டுக்குள் விட்டெறிந்தவன், நேரே வந்து சிதம்பரத்தின் நெஞ்சில் ஒரு குத்துவிட்டான். பிறகு நெட்டித் தள்ளினான். கடைசியில் அழ ஆரம்பித்தான்.
சிதம்பரத்துக்கு விருத்தாசலத்தை விளாறால் நான்கு இழுப்பு இழுக்கலாம் போல் இருந்தது. சோளம் துவைத்த கை எப்படி எரிகிறது என்று இவ னுக்குத்தானே தெரியும். எட்டி ஒரு உதை விடலாமா என்று யோசித்தவன், இரண்டு கைகளையும் விரித்துப் பார்த்தான். பூவரசம்பூவின் அடிப்பகுதி மாதிரி உறைந்து ரத்தச் சிவப்பாக இருந்ததைப் பார்த்தவன், ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்குள் போனான். தவிடு கொட்டியிருந்த இடத்தில் நாய்க் குந்தலில் உட்கார்ந்து தவிட்டை விரலால் கிண்டிவிட்டான். விருத்தாசலம் கொண்டுவந்த முருங்கைத் தழை பக்கத்தில் கிடந்ததைப் பார்த்தான். ஆச்சரியமாக இருந்தது. எப்படிக் கொண்டுவந்திருப்பான்? சிதம்பரம் கேட்டதாகச் சொல்லியிருக்க மாட்டான். அரும்பு கட்டாயம் வாங்கிவரச் சொன்னதாகச் சொல்லித்தான் வாங்கிவந்திருப்பான். அவனுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு தவிட்டைக் கிண்டினால் என்னவாகும்? நெருப் புப் பொறி பட்டு வீடு பற்றிக்கொண்டால்? ஆளில்லாத நேரத்தில் அடுப்பை மூட்டலாமா? விஷயம் தெரிந்து அரும்பு அடித்தால்? சோளம் சிதறிவிட்டதை இவன் அவளிடம் சொல்லிவிட்டால்? இரண்டு மாகாணி சோளத்திற்கு இரண்டு பெரிய படி நொய் வர வேண்டுமே என்று அரும்பு கேட்காமலிருக்க மாட்டாள். என்ன செய்வது?
சிதம்பரத்திற்கும் விருத்தாசலத்திற்கும் ஓரியாட்டம் நடந்தது. கடைசி யில் சிதம்பரம்தான் பணிந்துபோக வேண்டியிருந்தது. பிடிவாதமாக இருக்கிறவனிடம் என்ன பேச முடியும்? இவன் சொல்லி அவன் எப்போது கட்டடைந்து இருக்கிறான்? அவன் தவியாய்த் தவிப்பது கண்டு “கொஞ்ச நேரம் காயட்டும்” என்று சொன்னவன் முட்டிக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு கிண்டிவிட ஆரம்பித்தவன், தவிட்டை மிலண்டி எடுக்க முயன்றான். நன்றாகக் காய்ந்திருந்தால்தான் எளிதில் புடைக்க முடியும். அப்போதுதான் தவிடு பிரிந்து வரும். ஈரத்தோடு புடைத்தால் தவிடும் சேர்ந்துதான் வரும். சாதாரணமாக இரண்டு முறை புடைத் தாலே தவிட்டையும் சோள அரிசியையும் பிரித்து எடுத்துவிடலாம். ஆனால், சிதம்பரம் நான்கு முறை புடைத்தான். தவிட்டை உலருவதற்கு விருத்தாசலம் விட்டால்தானே. நின்றுகொண்டே சோளம் துவைத்ததால், இப்போது முட்டிபோட்டுக்கொண்டு தவிடு புடைத்தெடுப்பதால் கை, இடுப்பு, தொடை என்று எல்லா இடத்திலும் வலி பிடுங்கிற்று. ஆனாலும், தவிட்டைப் புடைப்பதை நிறுத்தவில்லை. குழைத்துக்குழைத்து பெருந்த விடு, நொய்த் தவிடு என்று தவிட்டை இரண்டாகப் பிரித்தெடுத்தான். நொய்த் தவிட்டைத்தான் வறுக்க முடியும். பெருந்தவிட்டை வறுத்துத் தின்றால் வயிறு வீங்கி வலி எடுக்கும். வறுத்த நொய்த் தவிட்டை தின்றாலே போதும், பசியைக் கட்டிவிடும்.
“எதுக்கு நேரத்த வளத்துற? தவுட்ட பொடச்சதும் அடுப்ப மூட்ட வேண்டியதுதான” என்று சொன்ன விருத்தாசலத்திற்குப் பதிலேதும் சொல்லாமல் வீட்டின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்தான். எதைஎதையோ ஆராய்ந்தான். மண் மொடாவில் அடிப்பகுதி மட்டும் வானல் மாதிரி இருக்கும் ஓடு எங்கே போயிருக்கும்? வீட்டையே இரண்டாக்கிவிட்டான். அப்படியும் ஓடு கிடைத்த பாடில்லை. சலிப்புடன் வந்து “தவுடு வறுக்கிற ஓட்ட காணும்ண்டா” என்று சொன்னதுதான், விருத்தாசலத்தின் முகம் செத்துவிட்டது. முறத்திலிருந்த தவிட்டையும், அதனருகில் கிடந்த முருங்கை தழையையும் மாறிமாறிப் பார்த்தான். அவனுக்கு அழுகைப் பீறிட்டுக் கொண்டு வந்தது. அழுதுகொண்டே “எனக்குத் தெரியும். எப்பியும் நீ இந்த மாதிரிதான் செய்வ” என்று சொன்னவன் தவிடிருந்த முறத்தை ஒரு எத்துவிட்டான். சிதம்பரத்துக்கும் இப்போது தவிடு கிண்டித் தின்ன வேண்டும் என்ற ஆசை உண்டாகியிருந்தது. அதற்காகத்தான் அவனும் ஈரத் தவிட்டை அவசரமாகப் புடைத்து குழைத்தெடுத்தான். ஓட்டை அவன் தேடாத இடமில்லை. ஆனால், எல்லாமும் இவன் வேண்டும் என்றே செய்வது மாதிரி விருத்தாசலம் அழுதுகாட்டுகிறான். சிதம்பரத்திற்குக் கோபம் உண்டாயிற்று. விருத்தாசலத்தை அடிக்க வேண்டும் என்ற வெறி யும் உண்டாயிற்று. வெறியை அடக்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை வீட்டை அலசிப் பார்த்தான். ஓடு போன மாயம் தெரியவில்லை. போன சனிக்கிழமைக்கூட அரும்பு புளியங்கொட்டை வறுத்தாளே. எங்கு போயி ருக்கும்? யாராவது கடனாக வாங்கிக்கொண்டு போயிருப்பார்களா? கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவனாய் சாம்பிப்போன முகத்துடன் உயி ரற்ற குரலில் “நீ ஓடிப்போயி சிவஞானம் அம்மாகிட்டெ கேளு. ஓட்ட ஒடச்சிடாம திருப்பிக் கொண்டாந்து தரம்னு சொல்லி வாங்கியா” என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி விருத்தாசலத்தைத் துரத்திவிட்டான். அவன் அரைமனத்துடன் தருவித்தருவி வெளியே போனான்.
விருத்தாசலம் மின்னல் வேகத்தில் ஓட்டுடன் திரும்பி வந்தான். அவனுடைய முகம் சந்தோஷத்தில் பூரித்திருந்தது. சிதம்பரத்திற்கும் உற்சாகம் உண்டாயிற்று. பரபரப்பு கூடிற்று. பெரிய காரியத்தைச் செய்யப்போகி றோம் என்ற உணர்வில் லேசாகச் சிரிக்கவும் செய்தான். மடமடவென்று வேலைகளை ஆரம்பித்தான். தவிட்டில் உப்புத் தண்ணீரைத் தெளித்து பிசைந்தான். முருங்கைத் தழையை உருவிப் போட்டான். “இன்னும் தவப் போடுடா” என்று விருத்தாசலம் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் போக்கில் வேலைகளைச் செய்துக்கொண்டிருந்தவனை மீண்டும் விருத்தாசலம் சீண்டினான்: “சரி சரி, அடுப்ப மூட்டு.”
சிதம்பரம் சுள்ளிகளைக் கொண்டுவந்து அடுப்பை மூட்டுவதற்குள் விருத்தாசலம் பாடாய்ப் படுத்திவிட்டான். அளவுக்கு அதிகமாகச் சுள்ளிகளை அடுப்பில் செருகச் சொன்னான். அடுப்பில் ஓட்டை வைத்தவுடனேயே காய்ந்திருக்கும் என்று தவிட்டைக் கொட்டச் சொன்னான். தவிட்டு முறத்தைக் கையில் எடுத்தவன், கீழே வைக்கவே இல்லை. அவனுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சிதம்பரம் தவித்துப்போனான். ஆனா லும், தன் இஷ்டம் போலவே வேலைகளைச் செய்துகொண்டிருந்தான். ஓட்டை அடுப்பில் வைத்து, அது நன்றாகக் காய்ந்தது தெரிந்ததும் முறத்திலிருந்த தவிட்டைக் கொட்டி அகப்பையின் அடிக்கட்டையால் அடி பிடித்துத் தீய்ந்துபோய்விடாமலிருக்கத் தொடர்ந்து மேலும்கீழுமாகக் கிண்டிவிட்டுக்கொண்டிருந்தவனை, விருத்தாசலம் “தீஞ்சுடப் போவுது” என்றான். மீண்டும் “வெந்துடுச்சா பார்” என்றான். சிதம்பரம் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அடுப்பில் சுள்ளிகளைச் செருகுவதும், தவிட்டைக் கிண்டிவிடுவதும், நெருப்புப் பொறிகள் அடுப்பை விட்டு வெளியே பறக்கிறதா என்று பார்ப்பதிலுமே குறியாக இருந்தான். அவனுக்கு உடம்பெங்கும் வேர்வை கசகசத்தது. அதைக்கூட அவனால் துடைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், விருத்தாசலம் பிடுங்கிக் கொண்டேயிருந்தான். “வெந்திருக்கும் பாருடா” என்று பல முறை சொன்ன பிறகு, அவனுடைய நச்சரிப்பைத் தாங்க முடியாமல் “ கொஞ்ச நேரம் அடுப்புல இருக்கணும். முருங்க தவ நெறம் மாறல” என்று சொன்ன இவனுடைய வார்த்தைகள் அவனுடைய காதில் ஏறவே இல்லை. முன்பைவிட வேகமாக குரலை உயர்த்தி, கிட்டத்தட்ட கத்துவது மாதிரி, மிரட்டுவது மாதிரி “வெந்திருக்கும்னு சொல்றனில்ல” என்று சொன்னவன், பக்கத்திலிருந்த அலுமினியத் தட்டை எடுத்து வந்து அதில் அள்ளிப் போடச் சொல்லி நீட்டிக்கொண்டேயிருந்தான். அவனுடைய அரிப்பைப் பொறுக்க முடியாமல் “வெந்துடுச்சா, உப்பு இருக்கான்னு பாரு” என்று சொல்லி அகப்பையின் அடிக்கட்டையால் ஒரு கோலி குண்டு அளவுக்குத் தவிட்டை எடுத்துத் தட்டில் சிதம்பரம் போட்டவுடனேயே ‘லபக்’கென்று எடுத்து வாயில் போட்டுக்கொண்டவன் “ஆ ஊ” என்றும் “ச்சூச்சூ” என்றும் வாயைத் திறந்தும், ஊதியும் சப்புக்கொட்டினான். தவிடு ‘சுரீர்’ என்று நன்றாக நாக்கைச் சுட்டிருக்க வேண்டும். அவனுக்குக் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. “எதுக்குடா பறக்குற? வெந்துடுச்சா, உப்பு இருக்கா?” என்று இவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் பழைய வீறாப்பிலேயே அவன் சொன்னான்: “போதும் எறக்கு. வெந்தது போதுங்கிறனில்ல.”
“இன்னம் செத்த நேரம் அடுப்பிலியே இருக்கட்டும். வேவாமத் தின்னா சூலான் வவுறு மாரி வீங்கி உப்பிக்கும்.”
“எறக்குங்கிறனில்ல.”
“இருடா”
“அப்பிடின்னா என் தட்டுல கொஞ்சம் போடு.”
சிதம்பரத்திற்கு விருத்தாசலத்தை அடித்து நொறுக்க வேண்டும் போல் இருந்தது. அவனுக்கு மட்டும்தான் பசியா? இவன் மட்டும் உருமச்சோறு சாப்பிட்டுவிட்டா உட்கார்ந்திருக்கிறான். காலையில் ஒரு உருண்டை கூழ் குடித்தது. அதோடுதானே சோளம் குத்தினான். வேகாத தவிட்டைப் பசிக்காகத் தின்று வயிறு வீங்கிக்கொண்டால் அடியும் உதையும் இவ னுக்குத்தானே கிடைக்கும். அதோடு ஆளில்லாத நேரத்தில் தவிடு வறுத் ததற்காகவும் அடிவிழும். தவிடு இன்னும் சற்று நேரத்திற்கு அடுப்பிலேயே இருக்க வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. தவிடு இப்போதுதான் ‘பொலபொல’வென்று சிறுசிறு கட்டிகளாக வெந்ததற்கு அடையாளமாக மாறிக்கொண்டிருந்தது. ஒரு சின்னக் கட்டியை எடுத்து வாயில் போட்டுப் பார்த்தான். “எந் தட்டுல அள்ளிப் போடுறா.”
விருத்தாசலம் அடுப்புக்கு முன் நீட்டிக்கொண்டிருந்த தட்டில் கொஞ்சம் மாவை சிதம்பரம் வேண்டாவெறுப்பாக அள்ளிப் போட்டான். அதை ஆறவைப்பதற்காக வாயால் ஊதி, மாவைச் சலிப்பது மாதிரி தட்டை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டிருந்த விருத்தாசலம். இடை யிடையே கட்டிகட்டியாக வாயில் எடுத்துப் போட்டுக்கொள்ளவும் மறக்கவில்லை. ஓட்டைக் கீழே இறக்கிவிட்டு தண்ணீர் தெளித்து அடுப்பை நன்றாக அணைத்துவிட்டு மீண்டும் விருத்தாசலத்தின் தட்டில் கொஞ்சம் தவிட்டை அள்ளிப் போட்ட சிதம்பரம், தனக்கும் ஒரு தட்டில் அள்ளிவைத்துக்கொண்டான். சூடு ஆற முறத்தை எடுத்து ஐந்தாறு முறைதான் விசிறினான். பிறகு, அவசரமாக முறத்தைப் போட்டுவிட்டு ஆவிப் பறந்துக் கொண்டிருந்த தவிட்டைத் தின்ன ஆரம்பித்தான். போட்டியில் தின்பது மாதிரி இருவரும் நாய்க்குந்தலில் உட்கார்ந்து தின்றனர்.
“உப்பு கொஞ்சம் அதிகம். கரிக்கிது” என்றான் விருத்தாசலம். இப்போது அவனிடமிருந்து ‘பச் பச்’ என்று சத்தம்வர ஆரம்பித்திருந்தது. மென்று தின்னத் தொடங்கியிருந்தான். “வெல்லம் போட்டிருந்தா இன்னம் நல்லாயிருந்திருக்கும்” என்றான். மீண்டும் அவனே “முருங்க தவய கொறச்சி யிருக்கனும். ஒனக்கு தவுட்ட கொயிக்கத் தெரியில” என்று பேசிக்கொண்டிருந்த விருத்தாசலத்திடம் எதிர்ப் பேச்சு கொடுக்கவில்லை சிதம்பரம். தவிட்டை அள்ளி வாயில் கொட்டிக்கொள்வதிலேயே குறியாக இருந்தான்.
“தண்ணீ கொடுடா குடிக்கிறதுக்கு.”
“ஓட்ட எடுத்துக்கிட்டுப் போயி கொடுத்திட்டு வா. நேரமாயிப் போச்சி. சாமானெல்லாம் எடுத்து ஓரமா வைய்யி. அம்மா வந்தா திட்டும். நான் போயி தண்ணீ எடுத்தாரன்” என்று சொல்லிவிட்டு தண்ணீர்க் குடத்துடன் சிதம்பரம் வெளியே போகும்போது, விருத்தாசலம் சவடாலாகச் சொன்னான்: “எல்லாம் நான் பாத்துக்கிறன். நீ போ.”
தண்ணீர்க் குடத்துடன் வீட்டுக்குள் வந்த சிதம்பரம் திடுக்கிட்டான். தண்ணீர்க் குடத்தை இறக்கிவைத்துவிட்டு தவிடு கிண்டிய விங்கணத்தை அழிக்கப் பரபரத்தான். இருட்டாகிவிட்டதால் விளக்கேற்றிவைத்தான். தவிடு கிண்டிய ஓட்டைக் கையிலெடுத்துக்கொண்டான். தின்றதைக்கூட முடிக்காமல் தட்டில் கைவைத்தபடியே தூங்கிவிட்டிருந்த விருத்தாசலத் தைப் புரட்டி நேராக நிமிர்த்திப் படுக்கப் போட்டான். பிறகு, அவன் சாப்பிட்ட தட்டை எடுத்து ஒரு ஓரமாக வைத்தான்.
இமயம்