இமயம்
இலக்கியக் களஞ்சியம்

தேடல்எழுத்துலகைத் தேடுங்கள்.

நூல்கள் · சிறுகதைகள் · கட்டுரைகள் · நேர்காணல்கள்

துபாய்க்காரன் பொண்டாட்டி
இமயம் · சிறுகதைகள்

துபாய்க்காரன் பொண்டாட்டி

வாசிப்பு முறை
கதைக்குள் நுழைய
இமயம்

துபாய்க்காரன் பொண்டாட்டி

வாசிப்பு
19

“மணி ஆவறது தெரியலியா? காலயில ஸ்கூலுக்குப் போவ வாணாமா? காலயில ஏழு மணிக்கே கான்வன்ட் வேன் வந்து வாசல்ல நின்னுடும். நேரத்திலேயே தூங்குனாத்தான காலயில எழுந்திருக்க முடியும்? வெளியில மழ பெய்யுது. இடி வேற இடிக்குது. கரண்ட் போனாலும் போயிடும். படுங்க.” சொல்லிக்கொண்டே போய்த் தொலைக்காட்சியை நிறுத்தினாள் பத்மாவதி. பிள்ளைகள் இரண்டும் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தன. “பேசாம தூங்குங்க. காலயில நேரத்திலியே எழுந்திரிக்கணும்.” அப்போது செல்போன் மணி அடித்தது. “இந்த நேரத்தில எந்தச் சனியன் கூப்புடுது?” என்று கேட்டுக்கொண்டே ஃபோனை எடுத்து “ஹலோ, யாரு பேசுறது?” அவளுடைய புருசன் மதிதான் பேசினான். உடனே உற்சாகமாகி ஆசையோடு கேட்டாள் “நல்லா இருக்கியா?”

“ஊருக்கு வந்துகிட்டிருக்கன். மெட்ராசுக்கு வந்திட்டன்.”

“என்னா திடுதிப்புன்னு சொல்ற? போன வாரம் பேசுனப்பக்கூட

சொல்லலியே.”

“உங்கிட்ட சொல்லிட்டுத்தான் நான் ஊருக்கு வரணுமா?”

“என்னா சொல்ற? சரியாக் கேக்க மாட்டங்குது. இங்க ஒரே மழயா இருக்கு.”

“போன வை. ஊர்ல வந்து ஒன்னப் பேசிக்கிறன்.”

“துபாயில எதாச்சும் பிரச்சனயா? தப்பு ஏதாச்சும் செஞ்சிட்டியா? திருப்பி அனுப்பிட்டாங்களா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நானாத்தான் வர்றன். நீ போன வை.”

“எதுக்குக் கோவமாப் பேசுற? ஹலோ... ஹலோ...”

மதி போனை நிறுத்திவிட்டான். இனிமேல் அவனாகக் கூப்பிட்டால்தான் பேச முடியும். வெளிநாட்டுக்குப் பேசுகிற வசதி அவளுடைய போனில் இல்லை. “ஊர்ல வந்து ஒன்னப் பேசிக்கிறன்” என்று எதற்காகச் சொன்னான்?

மதி துபாய்க்குப் போக ஆரம்பித்து பன்னிரெண்டு வருடமாகிவிட்டது. இடையில் எத்தனையோ முறை ஊருக்கு வந்திருக்கிறான். எத்தனையோ முறை திரும்பி துபாய்க்குப் போயிருக்கிறான். எப்போது அவன் ஊருக்கு வருவதாக இருந்தாலும் ஒரு மாதத்துக்கு முன்பே தகவல் தெரிந்துவிடும். எந்தத் தேதியில் ஊருக்கு வருகிறான், எந்தத் தேதியில் திரும்பி துபாய்க்குப் போகிறான் என்பது தெரிந்துவிடும். அவன்தான் எல்லாவற்றையும் சொல் வான். பொதுவாக மதி துபாயிலிருந்து தீபாவளி, பொங்கல் திருவிழாவை ஒட்டித்தான் ஊருக்கு வருவான். இப்போது எதுவுமில்லை. திடீரென்று ஏன் ஊருக்கு வருகிறான்? துபாயிலிருந்து பேசினானா, மெட்ராசிலிருந்து பேசினானா என்று சந்தேகப்பட்டு போனை எடுத்துப் பார்த்தாள். மதி எப்போதும் பேசும் வெளிநாட்டு எண் இல்லை. புதிதாக இருந்தது. அவன் பேசிய விதத்தைப் பார்த்தால் மெட்ராசிலிருந்து பேசிய மாதிரிதான் தெரிந் தது. சொல்லாமல் கொள்ளாமல் மெட்ராசுக்கு வந்துவிட்டு எதற்காகப் பேசினான்? துபாயில் ஏதாவது தவறுசெய்து மாட்டிக்கொண்டிருப்பானோ, அதனால் உடனே பிளைட்டைப் பிடித்து ஏற்றிவிட்டிருப்பார்களோ என்று சந்தேகப்பட்டாள். பொதுவாக மதி எந்தப் பிரச்சினைக்கும் போகாத ஆள். துபாய்க்குப் போனதிலிருந்து டிரைவராகத்தான் வேலை செய்கிறான். இத்தனை வருடத்தில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. அப்படிப்பட்டவன் ஏன் திடீரென்று ஊருக்கு வருகிறான்?

பத்மாவதிக்கு நேரமாகநேரமாகக் குழப்பம் கூடியது. விளையாட்டுக்குச் சொல்லியிருப்பானா? குழம்பினாள். மதி போனில் விளையாடக்கூடிய ஆளில்லை. பேச வேண்டியதை மட்டும்தான் பேசுவான். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டான். பொழுது போகவில்லை என்று போன் பேசக்கூடியவனும் அல்ல. போன ஞாயிற்றுக்கிழமை பேசினான். அப்போதுகூட ஊருக்கு வருகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்ல வில்லை. செட்டியார் கடையின் முன் கண்ணனுடன் போட்ட சண்டையை யாரோ போன்போட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் மதி உடனே கிளம்பி ஊருக்கு வருகிறான். பத்மாவதிக்கு இப்போது எல்லாம் தெளிவாகிவிட்டது. மதி போனில் சொன்னதும் உண்மை. அவன் ஊருக்கு வந்துகொண்டிருக்கிறான் என்பதும் உண்மை. பத்மாவதிக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது. படுத்திருக்க முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தாள். விளக்கைப் போடலாமா? பயமாக இருந்தது. திகிலாக இருந்தது. “எங் கதெ முடியப்போவுது.” லேசாக முனகினாள். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் இறங்கியது. நெருப்புக் குண்டத்தில் உட்கார்ந்திருப்பது மாதிரி இருந்தது. அவளுடைய உடல் பதறியது. ஆவி பிடித்த மாதிரி வியர்க்க ஆரம்பித்தது. லேசாக நடுங்கத் தொடங்கியது. நாக்கு வறண்டுவிட்டது. ஜுரம் அடிப்பது மாதிரி உடல் சூடாகிவிட்டது.

போன வெள்ளிக்கிழமை ஆலமரத்தின் கீழ் இருக்கிற செட்டியார் கடைமுன் கண்ணனிடம் பத்மாவதி சண்டை போட்டாள். அந்தச் சண்டையை ஊர்ச் சனம் மட்டுமல்ல, அவளுடைய நாத்தனார், மாமியார், மாமனார் என்று அனைவரும் பார்த்தார்கள். அவர்கள்தான் துபாய்க்கு போன்போட்டுச் சண்டையைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும். சொந்த அப்பா, அம்மா, தங்கை சொல்லும்போது யாரால் நம்பாமல் இருக்க முடியும்? அப்பா, அம்மாவே சொன்ன பிறகு சந்தேகப்பட்டு மதி யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. ஊர்க்காரர்கள் சொன்னால்தானே சந்தேகப்பட்டுக் கேட்பதற்கு? யார் சொன்னால் என்ன? விஷயம் மதிக் குத் தெரிந்துவிட்டது. இனி செய்வதற்கு எதுவுமில்லை. தன்னுடைய நிலைமை கசாப்புக்காரனிடம் மாட்டிக்கொண்ட ஆடுதான் என்று நினைத் தாள். விளக்கைப் போடலாமா வேண்டாமா? குழப்பமாக இருந்தது. இருட்டில் இருப்பதற்கு பயமாக இருந்தது. அதே நேரத்தில் வெளிச்சத் தில் இருக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்தது. பயத்தைவிட நாக்கு வறட்சி அதிகமாக இருந்தது. ஏழு கடல் தண்ணீரைக் குடித்தால்கூட தாகம் அடங்காது போலிருந்தது. தண்ணீர் குடிப்பதற்காக விளக்கைப் போட்டாள். வெளிச்சம் கூடுதல் பயத்தைத் தந்தது. மூன்று சொம்பு தண்ணீர் குடித்தாள். ஒரு துளிகூட நாக்கு வறட்சி குறையவில்லை. அடுத்து என்ன செய்வது? தெரியவில்லை. சுவரில் சாய்ந்து நின்றுகொண்டு வீட்டைப் பார்த்தாள். கைகால் நடுக்கத்தில் கீழே சரிந்து விழுந்துவிடலாம். நிற்க முடியவில்லை. தரையில் உட்கார்ந்தாள். மதி எப்போது வீட்டுக்கு வரு வான். என்ன செய்வான் என்று நினைத்ததுமே வயிற்றில் நெருப்பால் சுட்ட மாதிரி இருந்தது. மனதிலிருந்த பயம் வியர்வையாக வழிந்தது. வியர்வையில் ஜாக்கெட் நனைந்துவிட்டது. கை, காலெல்லாம் வியர்வை வழிந்துகொண்டிருந்தது. கண்களைத் திறந்துகொண்டிருப்பதைவிட மூடிக் கொண்டிருப்பது அதிக பயமாக இருந்தது. போய்ப் பிள்ளைகளுக்குப் பக்கத்தில் படுக்கலாம் என்று நினைத்தாள். ஏழெட்டு அடி தூரம்தான் இருக்கும். அவ்வளவு தூரம் நடக்க முடியுமா? அவளுக்குச் சந்தேகம் எழுந்தது. “எங் கதெ முடிஞ்சிடும்.” அதை வேகமாகக்கூட அவளால் சொல்ல முடியவில்லை. உடல் நடுக்கத்தைக் குறைப்பதற்காக எழுந்து சென்று சின்னப் பெண்ணின் பக்கத்தில் படுத்தாள். பயத்தைப் போக்க மக ளைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். அப்போதும் பயம் குறையவில்லை. வெளிச்சம் பயமுறுத்தியது. இன்றுபோல் என்றுமே அவளை இருட்டும், வெளிச்சமும் பயமுறுத்தியதில்லை. மழை, இடி, மின்னல், இரவு எல்லாம் சேர்ந்துகொண்டு பயமுறுத்தியது. என்னென்னவோ பயம். எப்படி யெல்லாமோ பயம் வந்து சேர்ந்தது. எழுந்து சென்று விளக்கை அணைத் தாள். அப்போது கார் வந்து நின்ற மாதிரி இருந்தது. திருடப்போகும் வீட்டுக்குள் திருடன் எவ்வளவு மெதுவாகச் சென்று கதவைத் திறப்பானோ அதே பயத்துடன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துப் போய்க் கதவைத் திறந்து பார்த்தாள். வாசலில் கார் எதுவும் நின்றிருக்கவில்லை. மழைதான் பெய்துகொண்டிருந்தது. சிறிது நேரம் கதவை ஒட்டியே நின்றுகொண்டு, இருட்டில் பெய்துகொண்டிருந்த மழையைப் பார்த்தாள். நிற்க முடிய வில்லை. கால்கள் துவண்டுபோயின. கதவைச் சாத்திவிட்டு வந்து முன்பு போலவே மகளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு படுத்தாள்.

மதி வீட்டுக்கு வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பானா, எடுத்ததுமே அடிப்பானா? கோபத்தில் நெருப்பை வைத்துக்கூடக் கொளுத்தலாம். எது செய்தாலும் தடுக்க முடியாது. அவனைக் குற்றம்சொல்ல முடியாது. தன் னுடைய மனைவி அடுத்தவனுடன் படுத்தாள் என்பதை எந்த ஆண்தான் பொறுத்துக்கொள்வான்? “நகெய ஏன் கொடுத்த? ஒன்ன வேல செஞ்சதுக்குச் சரியாப்போச்சின்னு அவன் எப்பிடிச் சொன்னான்?” மதி கேட்டால் எந்தப் பதிலும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லலாமா, இப்படிச் சொல்லலாமா? எதைச் சொன்னால் நம்புவான்? மதியைச் சமாதானம் செய்வதற்கான ஒரு சொல்கூட அவளுடைய மனதில் உருவாகவில்லை. நகை இல்லை என்று சொல்வதற்கும், தர மாட்டேன் என்று சொல்வதற்கும் கண்ணனுக்கு எத்தனையோ வார்த்தைகள் இருந்தன. எப்போதும்போல, பிறகு தருகிறேன் என்றுகூடச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். எதையும் அவன் மறைக்கவில்லை. மறைக்க வேண்டும் என்றுகூட நினைக்கவில்லை. எல்லாவற்றையும் ஊருக்குச் சொல்லிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டது மாதிரி, பத்மாவதிக்குப் பெரிய உபகாரம் செய்வது மாதிரி, ஒரே வார்த்தையில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். வயிற்றிலிருந்து பிறந்த பிள்ளையையும், வாயிலிருந்து வந்த வார்த்தையையும் மாற்ற முடியுமா? எதைச் சொன்னால் மதியின் கோபம் குறையும்? யோசித்துயோசித்து அலுத்துப்போய் “எனக்குப் பைத்தியம்புடிச்சா என்ன?” என்று கேட்டாள். பிறகு நிதானமான குரலில் சொன்னாள் “அவன் நல்லா இருக்கட்டும். அவன் பொண்டாட்டி புள்ள நல்லா இருக்கட்டும்.” தலையைத் தலையணையில் ‘பட்-பட்’ என்று மோதினாள். அழுதாள். அழுது ஓய்ந்த பிறகு எதிரில் யாரோ உட்கார்ந்திருப்பது மாதிரியும், அவர்களிடம் கேள்வி கேட்பது மாதிரியும் தானாகவே கேட்டுக்கொண்டாள். “அவன்கூட எப்பிடிப் போனன்?” எதிரில் இருக்கும் ஆளிடம் பதில் சொல்வது மாதிரி அவளே பதிலையும் கூறினாள் “பைத்தியம்புடிச்சிப் போனன். சோறு போடுறவன வுட்டுட்டு சும்மாயிருந்தவன்கூடப் போய் நெருப்புல விழுந்து சாவுறதுக் காகப் போனன். தகர டப்பாவுக்கும் தங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமப் போனன். விஷம் என்னிக்கும் பாயாசமா ஆவாதுன்னு தெரியாம போனன். என் நெஞ்சுக்கூடு வேவுறது அவனுக்குத் தெரியுமா?” தன்னால் எப்படிக் கண்ணன் கூடப் போக முடிந்தது என்பதையே திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டாள். “நான் கிறுக்கு” என்று சொன்னாள்.

திடீரென்று பத்மாவதிக்கு நெஞ்சு குளிர்ந்துபோகிற மாதிரி ஒரு யோசனை வந்தது. மாடியில் அறையில் படுத்திருக்கும் மாமியாரை எழுப்பி மதி வருவது உண்மையா என்று கேட்கலாமா என்று யோசித்தாள். மறுநொடியே, அந்த ஆசை தீய்ந்துபோனது. அவளிடம் கேட்டால் என்ன நடக்கும் என்று யோசித்தாள்.

“ஒம் புள்ளை ஊருக்கு வருதாமே நெசமா?”

“அவன் என்னிக்கி எங்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கான்? சொல் லிட்டு வந்திருக்கான்? எல்லா ரகசியமும் ஒனக்குத்தான தெரியும்” என்று சொல்வாள். எவ்வளவு கெஞ்சினாலும் உண்மையைச் சொல்ல மாட்டாள். மீறிக் கேட்டால் “ஒங்கிட்ட சொல்லாம எப்பிடி வருவான்?” என்று கேட்டு மடக்குவாள். பிறகு கல்யாணம் கட்டிக்கொண்டு வந்ததிலிருந்து தன்னுடைய மகனை மடக்கிக் கைக்குள் போட்டுக்கொண்டாள் என்று பேச ஆரம்பிப்பாள். பேச்சு ஓயாது. “திருட்டுப் பய குடும்பத்தில ஒரு நாய்க்கிட்டருந்தும் நெசத்த வாங்க முடியாது” என்று பத்மாவதி சொல் லிக்கொண்டாள். பத்மாவதியினுடைய மாமியார் துளசிமணி ஒரு பேச்சு என்றால் அதோடு விட மாட்டாள். ஒரு விஷயத்தை ஆரம்பித்தால், அந்தக் கதையிலிருந்து கிளைகிளையாக நூறு கதைகள் பேசுவாள். புதிதாக நூறு கதைகள் ஆரம்பிப்பாள். ஆனாலும், அவளுக்கு ஊரில் நல்ல பெயர் இருந்தது. ஊரில் யாரைக் கேட்டாலும் ‘நல்ல பொம்பளயாச்சே’ என்று சொல்வார்கள். அவளை எழுப்பி மதி வருகிற விஷயத்தைச் சொல்லி விடலாமா என்று யோசித்தாள். கண்ணனுக்கும் பத்மாவதிக்கும் நடந்த சண்டையை மதிக்கு போன்போட்டுச் சொன்னதே துளசிமணியாக இருந் தால் என்ன செய்வது? பிரச்சினையை உண்டாக்கியவளிடமே பிரச்சினையைச் சொல்வதா? மறுநொடியே பத்மாவதியினுடைய மனம் பொசுங்கிப்போயிற்று.

ஊரின் முனையில் ஆலமரத்தின் கீழிருந்த செட்டியார் கடைக்கு முன் கண்ணனுடன் பத்மாவதி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறாள் என்ற செய்தி கேட்டுத் துளசிமணி ஓடிவந்தாள். அவளுக்குப் பின்னால் அவளுடைய புருசன் அருணாசலமும் ஓடிவந்தான். வந்த வேகத்தில் பத்மாவதியிடம் இருவரும் விஷயத்தைக் கேட்டனர். பத்மாவதி மழுப்பினாள். திட்டாமல், கோபப்படாமல் “நகெதான? போனாப் போவுது. தெருவுல வாயடிக்காம வீட்டுக்குப் போ.” ஒரே வார்த்தையாகச் சொன்னார்கள். அப்போது அங்கு ஓடி வந்த பத்மாவதியின் நாத்தனார் பிருந்தாவும் “நகெய வாங்கிக்கிறபடி வாங்கிக்கலாம். முதல்ல நீ வீட்டுக்குப் போ” என்று சொன்னாள். நகையை ஏன் கொடுத்தாய் என்று ஒரு வார்த்தை கேட்க வில்லை. ஆறேழு மாதமாகக் கண்ணனுடன் பத்மாவதி பழக்கமாக இருக்கிறாள் என்று தெரிந்த பிறகு அம்மா வீடு என்று பிருந்தா அடிக்கடி வருவதில்லை. வீட்டுக்கு வந்தாலும், வழியில் கண்டாலும் முகத்தை ‘உர்’ரென்று வைத்துக்கொள்வாள். அப்படிப்பட்டவள் ஏன் நகையைக் கொடுத்தாய் என்று ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. கண்ணனிடம் போய் “நகெய வாங்கிக்கிட்டுப் பொட்டச்சிய ஏமாத்துறியே நீ ஆம்பள யாடா? பொட்டப் பயல. தெருப் பொறுக்கி நாய” என்று திட்டிச் சண் டைப்பிடித்தாள்.

சண்டை நடந்து ஐந்து நாட்களாகிவிட்டது. துளசிமணி, அருணாசலம், பிருந்தா என்று மூன்று பேரில் ஒரு ஆள்கூட இதுவரை “அவங்கிட்ட நகெய எதுக்குக் கொடுத்த? எத்தன பவுனக் கொடுத்த? எம்மா நாளாச்சி? மதிக்குத் தெரியுமா?” என்று ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. பத்மா வதிக்குத்தான் வெட்கமாகிவிட்டது. அதனால் மறுநாள் தானாகவே போய் மாமனார், மாமியாரிடம் பேசினாள். பிருந்தா வீட்டுக்குப் போனாள்.

பேசினாள். அவளுடைய பிள்ளைகளை அழைத்துவந்து சாப்பிட வைத்தாள். நான்கு நாட்களாகத் தினமும் இரண்டு முறை பிருந்தா வீட்டுக்குப் போனாள். தன்னுடைய மாமனார், மாமியார், நாத்தனார் என்று மூன்று பேரில் ஒரு ஆள்கூட போன்போட்டு மதியிடம் சொல்லி யிருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மறுநொடியே அழுகை வந்தது. “நல்ல சனங்கள ஏமாத்திப்புட்டனே. நாந்தான் நாதேறி” என்று சொன்னதோடு முகத்திலேயே அடித்துக்கொண்டாள். அடித்துக்கொள்ளும்போதும், அழும்போதும்தான் பத்மாவதிக்கு லேசாகப் பயம் குறைந்திருந்தது. உடல் நடுக்கம் குறைந்தது.

கார் ஹாரன் சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. பத்மாவதியினுடைய நெஞ்சுத் துடிப்பு பல மடங்கு அதிகரித்தது. உடல் நடுக்கம் கூடியது. வியர்வை வழிவது அதிகரித்தது. நாக்கில் கொஞ்சம்கூட ஈரமில்லை. உதடு கள் உலர்ந்துவிட்டன. கைகால்கள் தடதடவென்று ஆடின. கார் வந்து நின்று மதி இறங்கிய பிறகு கதவைத் திறக்கத் தாமதமானால் “கதவத் தொறக்க இவ்வளவு நேரமா? எவங்கூடப் போன?” என்று கேட்டால் என்ன செய்வது என்ற கவலையில் எழுந்தாள். கதவைத் திறப்பதா? ஜன் னலைத் திறந்து பார்ப்பதா என்று குழப்பம் ஏற்பட்டது. காலை எடுத்து வைத்து நடக்க முடியவில்லை. கால்கள் துவண்டுவிட்டன. பல நாட்களாகக் காய்ச்சலில் படுக்கையிலேயே கிடந்த ஆள் மாதிரி ஒவ்வொரு அடியாக நடந்து வந்து ஜன்னலைத் திறந்து பார்த்தாள். வாசலில் கார் எதுவும் இல்லை. மதி இல்லை. எவரும் இல்லை. மழை பெய்துகொண்டிருந்தது. காற்றடித்த வேகம்தான் கார் வந்தது மாதிரி கேட்டிருக்கிறது. மதி இன்னும் வரவில்லை என்பதே பெரும் திகிலாக இருந்தது. பயத்தை உண்டாக்கியது. அதனால் நெஞ்சுப் பதைப்புக் கூடியது. நிற்க முடியாமல் ஜன்னலைப் பிடித்துக்கொண்டு நின்றாள். இருட்டில் பெய்துகொண்டிருந்த மழையைப் பார்த்தாள். வெயிலில் வெகு தூரம் நடந்து வந்த மாதிரி களைப்பாகவும், தாகமாகவும் இருந்தது. சண்டை நடந்து ஐந்து நாட்களாகிவிட்டது. தன் னுடைய மாமனார், மாமியார், நாத்தனார் என்று யாருமே முகத்தைக் கோணிக்கொண்டு போகவில்லை. ஒரு வார்த்தை திட்டவில்லை. மதியும் அப்படித்தான் இருப்பானோ என்று யோசித்தாள். இருப்பான் என்று நினைத்ததுமே ஆங்காரம் உண்டாயிற்று. “நாந்தான் நாதேறி. கெட்டப் புத்தி உள்ளவ. சோறுன்னு பீயத் தின்னவ.” ஆவேசம் வந்த மாதிரி ஜன்னலில் தலையை மோதிக்கொண்டாள். நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது, வீங்கிவிட்டது. வீங்கியதுகூட அவளுக்குத் தெரியவில்லை. “திருட்டுப் பயகூட எப்பிடிப் போனன்?” தன்னையே கேட்டுக்கொண்டாள். கோபம், எரிச்சல், ஆத்திரம், கவலை, நெஞ்சு படபடப்பு, பயம் என்று அனைத்தும் ஒரே நேரத்தில் சேர்ந்துகொண்டு அவளைக் களைப்பபடையச் செய்தன.

பத்மாவதியினுடைய வீடு மாரியம்மன் கோவிலுக்கு எதிரில் கிழக்குத் தெருவில் இருக்கிறது. கண்ணனுடைய வீடு வடக்குத் தெருவில் இருக்கிறது. ஒரு வாரம், பத்து நாள் என்று இரண்டு வருடத்துக்கு முன்பு கண்ணன் கிழக்குத் தெருவிலேயே சுற்றிச்சுற்றி வந்தான். மாரியம்மன் கோவி லிலேயே உட்கார்ந்திருந்தான். பத்மாவதி எங்கெல்லாம் போகிறாளோ அங்கெல்லாம் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்தான். இரண்டு மூன்று மாதம் கழித்துதான் தனக்காகத்தான் கிழக்குத் தெருவில் நடக்கிறான், மாரியம்மன் கோவிலில் உட்கார்ந்திருக்கிறான் என்பது பத்மாவதிக்குத் தெரிந்தது. சாடையில் பேச ஆரம்பித்தான். கைகாட்டவும் செய்தான். ஒன்றிரண்டு மாதம் எதையும் பத்மாவதி கண்டுகொள்ளவில்லை. ஒருநாள் ஆற்றுக்குக் குளிக்கப் போனபோது பின்னாலேயே வந்து ஏதோ சொன்னான். “நான் என்ன கல்யாணம் கட்டாத பொண்ணா? ஒன்னோட வேலயெல்லாம் எங்கிட்ட வச்சிக்காத” என்று சொல்லித் திட்டினாள். அடுத்தடுத்த நாளும் பின்னாலேயே போகிற இடமெல்லாம் வந்தான். ஒரு மாதம் கழித்து ஒருநாள் விஷ பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து “நீ எங்கிட்ட பேசலன்னா செத்துடுவன்” என்று சொல்லி மிரட்டினான். “ஒங்கிட்ட பேசுனா நான் சாவணும். ஒன்னோட வேலயப் பாத்துக்கிட்டுப் போ” என்று சொல்லிவிட்டாள். ஆனால் கண்ணன் விடவில்லை. பின்னாலேயே சுற்றி வந்தபோது “எனக்கு மூணு புள்ளை இருக்கு. குடும்பம் இருக்கு. ஒனக்கும் பொண்டாட்டி, புள்ளைன்னு இருக்கு. ஒம் பொண்டாட்டிக்கிட்ட இருக் கிறதுதான் எங்கிட்டயும் இருக்கு. புதுசா, அதிசயமா ஒண்ணுமில்ல. ஊர்ல எம் பேரக் கெடுத்துப்புடாத” என்று சொன்னாள். எதற்கும் கண்ணன் அசைந்துகொடுக்கவில்லை. ஒருநாள் “ஒம் பொண்டாட்டிக்கிட்ட சொல் லிடுவன்” என்று சொல்லி மிரட்டியும் பார்த்தாள். “என்னால முடியாது. என்னால முடியாது” என்று ஆயிரம் முறையாவது சொல்லியிருப்பாள். எதையும் அவன் கேட்கவில்லை. “இன்னிக்கி எங்கிட்ட நீ பேசலன்னா எம் பொணம் நாளைக்கி இந்த ஆத்துல வேவும் பார். அப்ப தெரியும் நான் யாருன்னு?” என்று ஒருநாள் சாயங்காலம் வேகமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். அந்த ஒரு வார்த்தையில்தான் பத்மாவதியின் புத்தி மாறியது. ‘ஐயோ பாவமே’ என்று நினைத்த ஒரு குற்றம்தான் அவள் செய்தது. ஆசைப்பட்டு அவனிடம் போகவில்லை. நம்மால் ஒரு உயிர் போக வேண்டாம் என்று நினைத்தாள். கண்ணன்மீது இரக்கப்பட்டது நெருப்பை மடியில் கட்டிக்கொண்டது மாதிரிதான். தினம்தினம் அந்த நெருப்பு அவளைச் சுட்டெரிக்க ஆரம்பித்தது. அந்த நெருப்பைத் தனக் குள்ளேயே மறைத்துவைத்தாள். அதன் பிறகுதான் அவளுடைய மனம் ரகசியம் நிறைந்த குகைபோலானது.

பத்மாவதி கண்ணனிடம் பேச ஆரம்பித்து ஏழெட்டு மாதம்தான் ஆகி யிருக்கும். ஒருநாள் காலையிலேயே மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட வந்த மாதிரி வந்தான். பத்மாவதியும் சாமி கும்பிடப் போவது மாதிரி கோவிலுக்குப் போனாள்.

“மச்சான் வீட்டுல பொண்ணு வயசுக்கு வந்திருக்கு. மஞ்சள் நீராட்டு வக்கிறாங்க. ரெண்டு பவுனு செய்யணும். கையில பணமில்ல. துணி வேற எடுக்கணும். மொற செய்யலன்னா மரியாத போயிடும். பணம் இருந்தா குடு. எள்ளு போட்டதும் கொடுத்திடுறன்.”

“அம்மாம் பணத்துக்கு நான் எங்கப் போவன்? மெத்த வீடு கட்டி ரெண்டு வருசந்தான ஆவுது?”

“நக இருந்தாக் குடு. ஒரு மாசத்துல மூட்டுக் கொடுத்திடுறன்.”

“ஐயோ சாமி. எம் மாமியாருக்கும், மாமனாருக்கும் தெரிஞ்சா அவ் வளவுதான். நகயெல்லாம் இல்ல.”

“நீ மனசு வச்சா செய்யலாம். எள்ளு புடுங்க இன்னம் இருவது நாள்தான் இருக்கு. எள்ளு போட்டதுமே கொடுத்திடுறன். சாமி மேல சத்தியம்.” மாரியம்மன் சாமிமீது ஆயிரம் முறை சத்தியம் செய்தான். “தெரிஞ்சா உசுரு போயிடும்.” சொன்னதையே சொன்னாள் பத்மாவதி. சொன்ன வேகத்திலேயே வீட்டுக்கு வந்துவிட்டாள். ஆனால் கண்ணன் விடவில்லை. மாரியம்மன் கோவிலிலேயே உட்கார்ந்திருந்தான். சாயங்காலம் வந்தான். மறுநாளும் வந்தான். அதற்கடுத்த நாளும் வந்தான். மஞ்சள் நீராட்டு விழா தேதி நெருங்கநெருங்க கண்ணன் மாரியம்மன் கோவிலில் உட் கார்ந்திருக்கும் நேரம் கூடியது. வீட்டுக்குள் வந்துவிடுவானோ என்ற பயம் பத்மாவதிக்கு இருந்தது. ஆனாலும் மாரியம்மன் கோவிலிலேயே அவன் உட்கார்ந்திருப்பது கவலையாக இருந்தது. ஊரில் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடுவானோ என்ற பயம் இருந்தது. அதே நேரத்தில் ‘புது தொந் தரவாப் போச்சே’ என்று நினைத்தாள். “தொல்ல பண்ணாத” என்று ஆயிரம் முறையாவது சொல்லியிருப்பாள். ‘நகெ இல்ல, நகெ இல்ல’ என்று எத்தனை முறை சொன்னாலும் அதைக் கேட்பவனாக அவன் இல்லை. “எள்ளப் புடுங்கிப் போட்ட மறுநாளே ஒன்னோட நகெய மூட்டுத் தர்றனா இல்லயான்னு பாரு” என்று சத்தியம் செய்தான். எள் பிடுங்க இருபது நாள்தான் இருக்கிறது என்பது தெரிந்ததாலும், மாரியம்மன் கோவிலில் உட்கார்ந்து கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காகவும்தான் ஐந்து பவுன் சங்கிலியைக் கொடுத்தாள்.

ஒரு மாதம் கழித்து ஒருநாள் “நகெய ஏன் மூட்டுத் தரல?” என்று கேட்டாள்.

“வெல கொறவாப் போவுது. வெல ஏறுதான்னு ஒரு வாரம் பாப்போம். எள்ளப் போட்டுட்டு ஒன் நகெய மூட்டுத் தர்றன்” என்று சொன்னான்.

அடுத்து ஒரு மாதம் ஓடிவிட்டது. கண்ணன் எள் போட்டுவிட்டான் என்ற செய்தி பத்மாவதிக்குத் தெரிந்தது. பத்து இருபது நாள் தேடி, அலைந்து கஷ்டப்பட்டுத்தான் கண்ணனைப் பார்க்க முடிந்தது.

“எள்ளுதான் போட்டுட்டியே. நகெய ஏன் மூட்டுத் தரல?”

“பணம் கொஞ்சம் கொறயுது. ரெடி பண்ணிக்கிட்டிருக்கன். பத்து நாளுல வந்துடும்” என்று சொல்லிவிட்டுப் போனவனை அடுத்து மூன்று மாதம் கழித்துத்தான் பார்க்க முடிந்தது. போன் போட்டாலும் எடுப்பதில்லை. பத்மாவதிக்குச் சந்தேகம் வந்துவிட்டது. கண்ணனைத் தேட ஆரம் பித்தாள். அவன் பத்மாவதியின் கண்ணில் படாமல் ஓட ஆரம்பித்தான். ஒருநாள் வடக்குத் தெருவில் சுற்றிச்சுற்றி வந்து ஆளைப் பிடித்துக் கேட்டாள்.

“நீ செய்யுறது நல்லதா? சாமிமேல சத்தியம் செஞ்ச. கோவில்ல வச்சி நகெய வாங்குன. வீட்டுக்குத் தெரிஞ்சா என்னா ஆவுறது? நான் சாவணுமின்னு நெனைக்கிறியா? ஏன் நான் போன் போட்டா எடுக்க மாட்டங்கிற? நம்பர மாத்திப்புட்டியா? நான் ஒனக்குத் தொந்தரவா இருக்கனா?” என்று கேட்டு அழுதாள். “நகெய மூட்டுக் கொடுத்திட்டுத்தான் பேசணும்ன்னு இருக்கன். வேற ஒண்ணுமில்ல. கல்ல செடிய நாளைக்கிப் புடுங்கப்போறன். எட்டு நாளு பொறுத்துக்க. இன்னம் எட்டு நாளுல நகெயோட வர்றனா இல்லயான்னு பாரு.” தலையில் அடித்துச் சத் தியம் செய்துவிட்டுப் போனான். அப்போதும் பத்மாவதி நம்பினாள்.

கண்ணன் கடலை பிடுங்கினான். காயவைத்தான். விற்றும் விட்டான். பத்மாவதியின் நகை மட்டும் வரவில்லை. ஓயாமல் போன் போட்டாள். அவன் செல்போன் எண்களை மாற்றிவிட்டான். தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் கண்ணனுடைய வீட்டுப் பக்கம் போனாள். அப்போதும் ஆள் கண்ணில் படவில்லை. அலுத்துப்போனாள். வீட்டில் நேராக போய்க் கேட்கவும் பயம். அவனுடைய பொண்டாடியிடம் சொல்லவும் பயம்.

“எம் புருசனுக்கு நீ ஏன் ஒன்னோட நகெயக் கொடுத்த? அதுவும் அஞ்சி பவுன?” என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? வேறு யாரிடமாவது சொல்லிக் கேட்கலாம் என்றால் அவர்கள் என்ன கதை கட்டிவிடுவார்களோ என்ற பயம். ஐந்து பவுனை ஐம்பது பவுன் கொடுத்து ஏமாந்துவிட்டாள் என்று சொல்லலாம். பயத்தில் யாரிடமும் வாயைத் திறக்காமல் இருந்தாள். அதுவே இரவும் பகலும், நெஞ்சுக்குழிக்குள் அணையாத நெருப்பாக ஆகிவிட்டது. இடையில் மதி ஊருக்கு வந்துவிடக் கூடாது என்ற பயம் வேறு.

ஒருநாள் காலையிலேயே மாரியம்மன் கோவிலுக்கு வந்தான். இன்று ஒரேயடியாகப் பேசித் தீர்த்துவிடுவது என்று பத்மாவதி கோவிலுக்குப் போனாள். “நீ செய்யுறது ஒனக்கே நல்லா இருக்கா? நான் செத்தாதான் நகெயத் தருவியா?” ஆத்திரத்தோடு கேட்டாள். கண்ணன் ஆத்திரப்பட வில்லை. கோபப்படவில்லை. பத்மாவதி திட்டியதையெல்லாம் பொறுமை யாகக் கேட்டுக்கொண்டான். பிறகு நிதானமாகச் சொன்னான் “நகெய மூக்கத்தான் போறன். நாலாயிரம் கொறயுது. நாலாயிரம் இருந்தா கொடு. இன்னம் ரெண்டு மணி நேரத்தில ஒன்னோட நகெ ஒன் கைக்கு வந்துடும்” என்று சொன்னான். நகை வந்தால் போதும் என்ற எண்ணத்தில் “எங்கிட்ட எட்நூறுதான் இருக்கு.” உண்மையைச் சொன்னாள்.

“நாலாயிரம் இருந்தாதான் நகெய மூக்க முடியும். ஒவ்வொரு முறையும் நகெய மூக்கப் போவும்போது ஆயிரம், ஐநூறுன்னு செலவு ஆயிடுது. செலவான ஐநூறு, ஆயிரத்த ரெடிபண்றதுக்குள்ளார மேல ஐநூறு, ஆயிரம் செலவாயிடுது. அதனாலதான் நகெய மூக்க முடியாமத் தள்ளித்தள்ளிப் போவுது. நகெயக் கொடுக்காம ஒன்னப் பாக்க கூடாதுன்னுதான் நானும் ஒன்னப் பாக்க வல்ல.” அவன் சொன்னதைப் பத்மாவதி நம்பினாள். விர லில் போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து “ஒரு பவுனு. இத வச்சி நாலாயிரம் வாங்கு. செயின மூட்டுட்டு, மோதிரத்த அடமானம் வச்ச சீட்ட எங்கிட்ட கொண்டாந்து கொடுத்திடு. நீ வந்த பிறகுதான் நான் ஆஸ்பத்திரிக்குப் போவணும். பையனுக்கு ஜுரம்.” மோதிரத்தை வாங்கிக்கொண்டு “வீட்டுலியே இரு. ரெண்டு மணி நேரத்தில வந்திடுறன்” என்று சொல்லிவிட்டுப் போனான்.

“புள்ளைய அழச்சிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கிப் போவலியா?” என்று கேட்ட துளசிமணிக்கு “சாயங்காலம் போறன்” என்று சொன்னாள். “சாயங்காலம் போனாத்தான் கூட்டம் கொறவா இருக்கும்” என்று அடுத்த பொய்யையும் சொன்னாள். அன்று முழுவதும் உட்கார்ந்திருந்தாள். மறு நாளும் உட்கார்ந்திருந்தாள். அதற்கடுத்த நாளும் உட்கார்ந்திருந்தாள். கண்ணன் வரவில்லை. அப்போதுதான் கண்ணன் திட்டமிட்டு மோதிரத்தை வாங்கிக்கொண்டு போயிருக்கிறான் என்று தெரிந்தது. போன்மேல் போன்போட்டுப் பார்த்தாள். ஒருமுறைகூட அவன் போனை எடுக்க வில்லை. பெரிய வம்பில் மாட்டிக்கொண்டோம் என்று அப்போதுதான் தெரிந்தது. கோபத்தில் அவன் வீட்டுக்குப் போய் சண்டை போடலாமா என்றுகூட யோசித்தாள். எல்லாரும் ஏன் நகையை அவனிடம் கொடுத் தாய் என்றுதான் கேட்பார்கள். விஷயம் ஊர் முழுவதும் தெரிந்துவிடுமே என்ற கவலையில், கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கிக்கொண்டாள். ஆனால், வடக்குத் தெரு பக்கம் காலையிலும் மாலையிலும் தினமும் ஒரு நடை போய் வந்தாள். கண்ணன் கண்ணில் படவில்லை. விசாரித்தபோது பெரும்பாலும் அவன் வேப்பூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் அண்ணாமலை டீக்கடையில்தான் உட்கார்ந்திருப்பான் என்று சொன்னார்கள். ஒரு நாள் போல அடுத்து ஒரு மாதம் ஓடிவிட்டது.

ஐந்து நாட்களுக்கு முன்பு கான்வென்டில் பெற்றோர் மீட்டிங்குக்குப் போய்விட்டு வந்தபோது செட்டியார் கடையில் கண்ணன் நின்றுகொண் டிருப்பது தெரிந்தது. கடையில் பொருள் வாங்குவது மாதிரி போனாள்.

ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கினாள். “செத்த எட்ட வா. ஒங்கிட்ட பேசணும்.” கண்ணனிடம் சொன்னாள்.

“வீட்டுக்குப் போ. வர்றன்.”

“நீ வந்தாதான் போவன்.” பத்மாவதி பிடிவாதமாகச் சொன்னாள். இரண்டாவது முறையும் நகையை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டானே என்ற ஆத்திரம். பையனுக்கு ஜுரம். ஆஸ்பத்திரி போகாமல் உட்கார்ந் திருக்கிறேன் என்று சொல்லியும் ஏமாற்றிவிட்டானே என்ற கோபம். கடையை விட்டுப் பத்தடி தள்ளி வந்து நின்றுகொண்டு தன்னை யாராவது பார்க்கிறார்களா, கடைக்கு யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள். பத்மாவதியிடம் வந்த கண்ணன் வேகமாக “தெருவுல நின்னுதான் பேசுவியா?” என்று கேட்டான்.

“நீ செய்யுறது நல்லதா? ஒன்ன நம்பித்தான ரெண்டாவது முறயும் நகெயக் கொடுத்தன். தெரிஞ்சா என் மாமியாரும், மாமனாரும் எம்மாம் சண்ட புடிப்பாங்க தெரியுமா?”

“சரிசரி. நீ வீட்டுக்குப் போ. ராத்திரிக்கு நகெயோட வர்றன். நம்ப எப்பவும் பாக்குற எடத்துக்கு வந்துடு.”

“நீ வர மாட்ட. நீ சொன்னத நம்பி மூணு நாளு நடு ராத்திரில முள்ளுக்காட்டுல நான் தனியா எம்மாம் நேரம் நின்னுட்டு வந்தன்னு எனக்குத்தான் தெரியும்.”

“சத்தியமா வர்றன்.”

“நீ சாமி மேல சத்தியம் பண்ணிட்டுத்தான் எட்டு மாசத்துக்கு முன்னால நகெய வாங்கிக்கிட்டுப் போன. போன மாசம் ஒரு பவுன வாங்கிக் கிட்டுப் போன, சொன்னபடி செஞ்சியிருக்கியா?”

“நான் ஒண்ணும் ஏமாத்துற ஆளில்ல. ராத்திரிக்கு நகெயோட வர்றன்.”

“இந்தப் பொய்யெல்லாம் எங்கிட்ட வேண்டாம். ஒன்னோட யோக்கித எனக்குத் தெரிஞ்சிப்போச்சி. இனிமே ஒன்னெப் புடிக்கிறது லேசுப் பட்ட காரியமில்ல. என் நகெக்கி ஒரு வழியச் சொல்லிட்டுப் போ” பத்மாவதி கறாராகப் பேசினாள்.

“பொது எடத்தில எதுவும் பேச வாணாம். ஒன் நகெய மூக்கறதுக்குதான் செட்டியார்கிட்ட கடன் கேட்டுக்கிட்டு இருந்தன். சந்தேகம்னா நீயே கேட்டுப்பாரு.”

“ஒம் பேச்சக் கேட்டு நான் பட்டது போதும். நீ நல்லவன்னு நம்பிட்டன். விஷப் பாட்டிலத் தூக்கிக்கிட்டு அலஞ்சத மறந்துட்டியா? முன்ன நீ அலஞ்ச. இப்ப என்னெ அலய வுடுற. எம் புருசனுக்குத் தெரிஞ்சா நான் உசுரோட இருக்க முடியுமா?” பத்மாவதிக்கு அழுகை வந்துவிட்டது.

“பொது எடத்தில நின்னுகிட்டு என்னா பேசுற? ராத்திரிக்கு நகெயோட வர்றன். வீட்டுக்குப் போ.”

“எட்டு மாசமா வராத நகெ இன்னிக்கி வந்துடுமா? ஒன்ன நம்பிக் கொடுத்தனே.” பத்மாவதியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“யாருக்கும் தெரியாம வாங்குன மாதிரியே ஒன்னோட நகெயக் கொண்டாந்து கொடுத்திடுவன். வீட்டுக்குப் போ. தெருவுல யாராச்சும் பாத்திடுவாங்க” என்று சொல்லிவிட்டுப் பக்கத்தில் நிறுத்தியிருந்த தன் னுடைய மோட்டார் பைக்கை எடுப்பதற்காகப் போனான். என்ன தோன்றியதோ, கண்ணனுக்கு முன்னால் போய் வண்டியிலிருந்த சாவியை எடுத்துக்கொண்டாள் பத்மாவதி.

“வௌயாடாத. வௌயாடுற எடமா இது? சாவியக் கொடு.” கண்ணன் கெஞ்சினான்.

“ஆறு பவுனு இன்னிக்கு என்னா வெல தெரியுமா? ஒண்ணர லட்சம். நகெய வாங்கி எம்மாம் நாள் ஆவுதுன்னு தெரியுமா?” கண்ணனை மிரட்டிவைக்க வேண்டும் என்று நினைத்தாள். அதே நேரத்தில் சத்தம் போட்டுப் பேசக் கூடாது, பேசுவது யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என் பதில் கவனமாக இருந்தாள். ஆனால் கண்ணன் சத்தமாகப் பேசினான். கோபமாகப் பேசினான்.

“சாவியக் கொடுக்கிறியா இல்லியா?”

“நகெக்கி ஒரு வழியச் சொல்லு.”

“சாவியக் கொடு, இல்லன்னா மரியாத கெட்டுடும்.” கண்ணன்

சொன்னதும் பத்மாவதிக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னா மரியாத கெட்டுடும்?” லேசான கோபத்துடன் கேட்டாள்.

“சாவியக் கொடு.”

“நகெயக் கொடுத்திட்டு வண்டிய எடு.”

“நகெயுமில்ல. மசுருமில்ல” சொன்ன வேகத்திலேயே பத்மாவதியின் கையிலிருந்து சாவியைப் பிடுங்க முயன்றான். அவனால் சாவியைப் பிடுங்க முடியவில்லை. ஒரே நெட்டாகப் பத்மாவதியை நெட்டித் தள்ளினான். பத்மாவதி கீழே விழுந்துவிட்டாள். அதைப் பார்த்த செட்டியார் ஓடி வந்து கண்ணனிடம் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு பக்கத்திலிருந்த வீட்டுக்காரர்கள் வெளியே வந்துவிட்டனர். பத்மாவதிக்குத் தலைகால் புரியாத அளவுக்குக் கோபம் வந்தது. அதனால் என்ன நடந்தாலும் சாவி யைத் தரக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தாள். ஆனால் கண்ணன் திரும்பவும் சாவியைக் கேட்டான். பத்மாவதியின் கையிலிருந்த சாவியைப் பிடுங்க முயன்றான். அப்போது நான்கைந்து பேர் வேடிக்கை பார்ப்பதைப் பார்த்ததும் சனியன் தொலைந்து போகட்டும் என்று சாவியைக் கீழே போட்டாள். சாவியை எடுத்துக்கொண்ட கண்ணன் “ஒழுங்கா இரு. இல்லன்னா மானம் மரியாத போயிடும்” என்று சொல்லிவிட்டுப் போய் வண்டியை எடுக்க முயன்றான். கண்ணன் சொன்ன வார்த்தையை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கண்ணனுடைய வண்டியை மறித்துக்கொண்டு “என்னா மரியாத கெட்டுடும்?” என்று கேட்டாள்.

“வழிய விடு. இல்லன்னா வண்டிய மேல ஏத்திடுவன்” கோபத்தில் கண்ணன் கத்தினான். பதிலுக்கு “ஏத்து, பாக்கலாம்.” பத்மாவதியும் கத்தி னாள்.

“வழிய விடு.”

“நகெயக் கொடு.”

“கொடுக்கிறன். வழிய விடு.”

“நகெயக் கொடுக்கலன்னா ஒம் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிடு வன்.”

“அப்பிடியா? நீயும் நானும் படுத்ததையும் சேத்துச் சொல்லு. கேக்கறதுக்கு நல்லா இருக்கும்.”

பத்மாவதிக்கு யாரோ வாயில் நெருப்பைக் கொட்டியது மாதிரி இருந் தது. துடித்துப்போனாள். இந்த வார்த்தையைச் சொன்ன பிறகு அவனை விடக் கூடாது என்கிற வெறி உண்டாயிற்று. ஒரே தீர்மானமாகச் சொன் னாள். “நகெய வச்சிட்டு எட்டப் போ.”

“தர முடியாது.”

“ஏன்?”

“ஒன்னெ ஒரு வருசம்கிட்ட வேல செஞ்சன்ல்ல? அதுக்குச் சரியாப் போச்சி” என்று கண்ணன் சொன்னதுதான், பத்மாவதிக்குத் தெருவில் பேசுகிறோம், கூட்டம் கூடியிருக்கிறது என்பதெல்லாம் மறந்துபோயிற்று. கூட்டத்தில் தன்னுடைய மாமனார், மாமியார், நாத்தனார் நிற்பதெல்லாம் அவளுக்குக் கண்ணில் படவில்லை. கோபம், ஆத்திரம், எரிச்சல் எல்லாம் சேர்ந்து அவளைப் பைத்தியமாக்கிவிட்டது. பேய் பிடித்த பெண் மாதிரி வேகமாகச் சென்று கண்ணனுடைய சட்டைப் பையைப் பிடித்திழுத்து “என்னடா சொன்ன, என்னடா சொன்ன?” கேட்ட வேகத்திலேயே அவனுடைய முகத்தில் அறைந்தாள். வண்டியை எட்டி உதைத்தாள். வண்டியோடு கீழே விழுந்தான் கண்ணன். எழுந்து வந்து பத்மாவதியைக் கன்னத்தில் அறைந்தான். அதைப் பார்த்த பிருந்தா கண்ணனை அடித்தாள். செருப்பைக் கழற்றி பத்மாவதியும் வெறிகொண்ட மாதிரி கண்ணனை அடித்தாள். கூடியிருந்த கூட்டம்தான் பத்மாவதியின், பிருந்தாவின் பிடியிலிருந்து கண்ணனை விலக்கிவிட்டது.

துளசிமணியும், அருணாசலமும் ‘நகெ போனாப் போவுது, வீட்டுக் குப் போ” என்று சொல்லிப் பத்மாவதியை வீட்டுக்கு இழுத்தார்கள். “அவங்கிட்ட நகெய வாங்குறப்படி வாங்கிக்கலாம். நீ வீட்டுக்குப் போ. நான் அவனப் பாத்துக்கிறன்” என்று சொல்லிவிட்டு பிருந்தா போய் கண்ணன் முன் நின்றுகொண்டு கெட்ட வார்த்தையில் அவனைத் திட்ட ஆரம்பித்தாள். பத்மாவதி வீட்டுக்குப் போகாமல், மாமியார், மாமனார் பேச்சைக் கேட்காமல், செட்டியார் கடையின் முன் ஒதுங்கி நின்றிருந்த கண்ணனிடம் வேகமாகப் போய் “நீ வெறும் பீ. ஆறு பவுனுதான, போவட்டும். ஒன்னெத் தெரிஞ்சிக்கிட்டன்ல்ல-, அது போதும். நாய வாசலோட நிறுத்திருக்கணும். வீட்டுக்குள்ளார வுட்டனில்ல. அது என் தப்புதான். அதுக்குத்தான் இப்ப சிறுமப்பட்டு நிக்குறன். பன்னிக்கூட சேந்துப் போயி சாக்கடயில விழுந்திட்டன். ஊரே கூடி நின்னு வேடிக்கபாக்க செருப்பால அடிச்சனில்ல, அது போதும்” என்று சொன்னதோடு அவனுடைய முகத்தில் காறித் துப்பினாள். பிறகு அவன் என்ன சொல்கிறான் என்பதைக்கூடக் கேட்காமல் விடுவிடுவென்று வேகமாக வீட்டுக்கு வந்துவிட்டாள். எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்துவிட்டது.

ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்த பத்மாவதி, உடைந்துபோன குர லில் அழுதுகொண்டே சொன்னாள் “என் மூத்திரத்தக் குடிக்கிறதுக்கு விஷ பாட்டிலத் தூக்கிக்கிட்டு அலஞ்சான் நாயி.” ஜன்னலைச் சாத்திவிட்டு வந்து பிள்ளைகளுக்குப் பக்கத்தில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். “ஒன்ன வேல செஞ்சதுக்குச் சரியாப் போச்சி.” கண்ணன் சொன்னது நினைவுக்கு வந்ததும் ஓங்கித் தரையில் அடித்தாள். தரைதான் அந்த வார்த்தையைச் சொன்னது மாதிரி மீண்டும் தரையில் அடித்தாள். “ஆசப்பட்டா போனன்? ஆசப்பட்டா போனன்?” கேட்டுக்கேட்டுத் தரையில் அடித்தாள். “காட்டாம இருந்திருந்தா தங்கமா இருந்திருக்கும். ஒலக அதிசயமா இருந் திருக்கும்.” தரையில் அடித்தாள்.

“எம் முகத்தயும், எம் முலயயும் பாத்து ஆசப்பட்டுத்தான வந்தான்? இதப் போயா அவனுக்குக் காட்டுனன்? இதெ அறுத்தெரிஞ்சா என்ன? நெருப்ப வச்சி எரிச்சா என்ன?” என்ன தோன்றியதோ, வெறிபிடித்த மாதிரி தன்னுடைய இரண்டு முலைகளிலும் மாறிமாறி அடித்துக்கொண்டாள். குத்திக்கொண்டாள். முலைகளில் மாறிமாறி அடிக்கஅடிக்கக் கோபம் குறைவதற்குப் பதிலாக, கூடியது. பல்லைக் கடித்துக்கொண்டே இரண்டு காம்புகளையும் பிடித்துக் கிள்ளினாள். எரிந்தது. அப்போதும் கிள்ளுவதை நிறுத்தவில்லை. இரண்டு முலைகளிலும் எரிச்சல் இருந்தது. எரிச்சலை விடக் கோபம் அதிகமாக இருந்தது. கோபம் குறையவில்லை. வளர்ந்தது. “இதெப் போயி அவங்கிட்டக் காட்டிப்புட்டனே.” அழுதாள். பட் டென்று எழுந்து எதையோ தேடினாள். சோறு சமைக்கிற இடத்தில் குழம்புக் கரண்டி கிடந்தது. அதை எடுத்தாள். ஆக்ரோஷமாக இரண்டு முலைகளிலும் மாறிமாறி அடித்துக்கொண்டாள். பைத்தியம் மாதிரி இரண்டு தொடையிலும் அடித்துக்கொண்டாள். திரும்பவும் முலைகளில் அடித்துக்கொண்டாள். திரும்பவும் தொடைகளில் அடித்துக்கொண்டாள். மூச்சுவாங்கியது.

“சோறுன்னு நெனச்சிப் பீயத் தின்னுட்டன். சோறுன்னா மணக்கும். பீன்னா நாறும். அவன் மனுசப் பீகூட இல்ல. பன்னிப் பீ. ஊத்தப் பயல நம்பிட்டன்.” காறித் துப்பினாள். “எந்தத் தைரியத்தில இம்மாம் பெரிய தப்பு செஞ்சன்?” மீண்டும் முலைகளிலும், தொடைகளிலும் கரண்டியால் அடித்துக்கொண்டாள்.

இரண்டு தொடைகளிலும், இரண்டு முலைகளிலும் நல்ல எரிச்சல். வீங்கிப்போய்விட்டிருந்தது. வலி உயிர்போவது மாதிரி இருந்தது. காயம் ஏற்பட்டிருந்தது. குளித்துவிட்டு வந்த மாதிரி உடம்பெங்கும் வியர்வை வழிந்துகொண்டிருந்தது. சீலை, ஜாக்கெட் என்று எல்லாம் ஈரமாக இருந் தது. களைப்பாக இருந்தது. அப்படியே சுருண்டு படுத்தாள். அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு நினைவு இல்லாத நிலையில் படுத்திருக்கும் ஆள் மாதிரி கிடந்தாள். கல்யாணத்துக்கு முன்பு கண்ணாடியில், தன் னுடைய முகத்தையும், மார்பகங்களையும் பார்த்து எத்தனையோ முறை பத்மாவதியே சொக்கிப்போயிருக்கிறாள். கண்ணாடியில் பார்த்துச் சொக்கிப்போனதை நினைத்தாள். “அதனாலதான் எல்லாச் சனியனும்.” ஓங்கித் தரையில் அடித்தாள்.

எதிரில் உட்கார்ந்திருக்கும் ஆளிடம் கேட்பது மாதிரி கேட்டாள் “என்னா நடக்கும்?” எதிரில் ஆளில்லாததால் அவளே பதிலையும் சொன்னாள். “தெரியலியே.” ஒருக்களித்துப் படுத்திருந்தாள். அவளுடைய கண்களிலிருந்த கண்ணீர் நேரடியாகத் தரையில் இறங்கியது. அவளால் சத்தமாக அழ முடியவில்லை. பேசக்கூட முடியவில்லை. முனகலாகச் சொல் லிக்கொண்டாள். “தப்புதான்.”

மதி ஊருக்கு வருகிறான் என்று சொன்னது பொய்யாக இருக்குமோ? லேசாகச் சந்தேகம் வந்தது. ஆனால் அவன் போனில் பேசிய விதம், அவன் சொன்னது பொய் இல்லை என்று தோன்றியது. மதி சொன்னது பொய்யாக இருக்க வேண்டும் என்பது அவளுடைய ஆசையாகவும், பிரார்த்தனையாகவும் இருந்தது. இரண்டாவது பிள்ளை வயிற்றில் எட்டு மாதமாக இருக்கும்போதுதான் மதி துபாய்க்குப் போனான். பன்னிரெண்டு வருடங்களில் துபாயிலிருந்து பேசும்போது ஒருமுறைகூடக் கோபமாகப் பேசியது கிடையாது. சட்டென்று போனை வைத்ததும் கிடையாது. இத்தனை வருடத்தில் இன்றுதான் திடீரென்று வருகிறான். கோபமாகப் பேசுகிறான். ‘ஊர்ல வந்து ஒன்னப் பேசிக்கிறன்’ என்று சொல்கிறான். போனை கட் செய்கிறான். எப்போது போன் பேசினாலும் ‘பெரிய புள்ளைக்கிட்டக் கொடு, சின்னப் புள்ளைக்கிட்டக் கொடு. பையன்கிட்டக் கொடு” என்று சொல்லி ஒவ்வொரு பிள்ளையிடமும் பேசுவான். இந்த முறை பேசவில்லை. ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்த பத்மாவதிக்கு கார் வந்து நின்ற மாதிரி இருந்தது. கரண்ட் ஷாக் அடித்த மாதிரி சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். எழுந்து போய்க் கதவைத் திறக்க நினைத்தாள். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாள். கால்கள் நடுங்கின. பத்தடி தூரம்கூட இருக்காது. அதையே அவ்வளவு சிரமப்பட்டு நடந்து வந்தாள். கதவைத் திறந்தாள். வாசலில் கார் இல்லை. காற்றும் மழையும் முகத்தில் அடித்தது. அப்போதுதான் பத்மாவதிக்கு மூச்சுவிட முடிந்தது. பல மாதமாகப் படுக்கையிலேயே கிடந்த நோயாளி மாதிரி, நிற்க முடியாமல் கதவில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.

மழை பெய்துகொண்டிருந்தது. மழையைவிட இடிதான் தொடர்ந்து இடித்துக்கொண்டிருந்தது. மின்னல் அதிகமாக இருந்தது. “இப்பிடிக் கதவுல சாஞ்சிக்கிட்டு இருக்கும்போதே என் உசுரு அடங்கிட்டா என்னா?” கைக்குழந்தையைப் பறிகொடுத்த மாதிரி தேம்பித்தேம்பி அழுதாள்.

சிறிது நேரம் கதவைச் சாத்தி, விளக்கை நிறுத்திவிட்டு வந்து, சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். கால்களை நீட்டிப் போட்டாள். பத்மாவதி உட்கார்ந்திருந்த விதம் பிணத்தை உட்கார வைத்திருந்த மாதிரி இருந்தது.

வீட்டுக்கு வந்த வேகத்தில் மதி என்ன செய்வான்? கையில் எது கிடைக் கிறதோ அதைக் கொண்டு அடிக்கலாம். எட்டி உதைக்கலாம். முகத்தில் குத்தலாம். கோபத்தில் சீமை எண்ணையை ஊற்றிக் கொளுத்தலாம். எதிர்த்துப் பேசினால் கூடுதலாக அடிக்கலாம். உதைக்கலாம். அடி தாங்க முடியாமல் “என்ன அடிக்காத. கொல வாங்காத. புடிக்கலன்னா எம் புள் ளைங்களோட என்ன தொரத்தி வுட்டுடு” என்று சொன்னால் என்ன செய்வான்? “புதுப் புருசன்கூட ஓடிப்போவப் பாக்குறியாடி?” என்று கேட்டு அடிக்கலாம். உதைக்கலாம். “நகெய மட்டும்தான் கொடுத்தன். உசுரு போவுதின்னு கால்ல விழுந்து கும்புட்டான். மத்தது ஒண்ணுமில்ல” என்று சொல்லிக் காலில் விழுந்து கும்பிட்டால் மதியினுடைய கோபம் குறையுமா? யோசித்தாள். அந்த யோசனை பரவாயில்லை என்று தோன்றி யது. காலில் விழுந்தால் எழுந்திருக்கவே கூடாது என்று நினைத்தாள். இரண்டு தொடையிலும், முலையிலும் கரண்டியால் அடித்துக்கொண்டது நெருப்பாக எரிந்தது. காற்றுக்காகச் சீலையை விலக்கிவிட்டுக்கொண்டாள். ஜாக்கெட் பட்டன்களை அவிழ்த்துவிட்டுக்கொண்டாள். “இதெப் போயி காட்டிப்புட்டனே.” பத்மாவதி அழவில்லை. ஆனால் அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சிறிது நேரம் கழித்துச் சொன்னாள் “தப்பு செஞ்சிட்டன். பாம்புகூடப் படுத்துட்டன். ஐயோ பாவம்ன்னு எரக்கப்பட்டது எங் குத்தம்தான். நான் படுறதில ஒரு நூலு அவனுக்குத் தெரியுமா? எந் தலயில இடி வந்து விழுந்துபோச்சே.” அவ ளுடைய மனம் சூறைக்காற்றாக அலைந்தது.

மணி என்ன இருக்கும்? எழுந்து விளக்கைப் போட்டுக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்க அவளுக்கு உடலில் தெம்பு இல்லாமல் இருந்தது. எழுந்தால் என்ன நடக்குமோ என்ற பயம் மனதில் இருந்தது. அதனால் பக்கத்தில் கிடந்த செல்போனை எடுத்து நேரத்தைப் பார்த்தாள். மணி ஒன்று. மதி பேசும்போது மணி ஒன்பது. நான்கு மணிநேரம்தான் கழிந்திருந்தது. வழக்கமாக மெட்ராசிலிருந்து மதி காரில் வந்தால் நான்கு, ஐந்து மணி நேரம் ஆகும். மதி இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் வீட்டுக்கு வந்துவிடுவான் என்று நினைத்ததுமே வயிறு முழுவதும் எரிவது மாதிரி இருந்தது. உடல் பதறியது. கைகால் நடுக்கத்தைத் தடுக்க முடியவில்லை. தரையில் படுத்தாலாவது நடுக்கம் குறையும் என்று அப்படியே சரிந்து படுத்தாள். கண்ணனுடன் சண்டை போட்டதிலிருந்து பத்மாவதி சரியாகச் சாப்பிடவே இல்லை. அந்தக் களைப்பும் இப்போது சேர்ந்துகொண்டது. போலியோ நோயால் சூம்பிப்போன கை கால்கள் மாதிரி அவளுடைய கை கால்கள் எல்லாம் துவண்டுபோய்க் கிடந்தன.

அதிகபட்சம் இன்னும் இரண்டு மணிநேரம்தான். மதி வந்து என்ன செய்வான், என்ன கேட்பான்? எது செய்தாலும், எதைச் சொன்னாலும் அவனைக் குறைசொல்ல முடியாது. “கட்டுனா இந்தப் பொண்ணத்தான் கட்டுவன். வேற பொண்ணக் கட்ட மாட்டன். பொண்ணு ‘மினுமினு’ன்னு இருக்கு” என்று பிடிவாதம் பிடித்துப் பத்மாவதியைக் கட்டிக்கொண்டான். அதற்குக் காரணம் பத்மாவதியின் முகம் நல்ல வடிவானது. முலைகள் இரண்டும் சற்று எடுப்பாக இருக்கும். துபாய்க்குப் போன நான்காவது மாதமே காட்டு வேலைக்குப் போகக் கூடாது என்று சொல்லிவிட்டான். அதிலிருந்து பத்மாவதி காட்டு வேலைக்குப் போவதில்லை. அவசரம் என்று யாராவது கூப்பிட்டால் பயிர் நட, களை பறிக்க, கடலை பிடுங்க, குச்சிவள்ளிக் கிழங்கு பிடுங்கப் போவாள். வேலைக்குப் போன தையும் மதியிடம் சொல்லிவிடுவாள். வேலைக்குப் போனதற்காகத்தான் மதி திட்டியிருக்கிறான். பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இரு; சொந்த நிலத்தில் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும். இதுதான் அவனுடைய கட்டளை. பணக் கணக்கே கேட்க மாட்டான். நூறு, ஐம்பது கூடுதலாகச் செலவு செய்தால் ஏன் என்று கேட்க மாட்டான். தினமும் பூ வாங்க மட்டுமே பத்து, இருபது ரூபாய் செலவுசெய்வாள். அதைக்கூட இதுவரை ஏன் என்று கேட்டவனில்லை. அவளும் ஒருமுறை கூடப் பொய் சொன்னதில்லை. கண்ணனுடன் பேச ஆர ஆரம்பித்த பிறகுதான் அவளுடைய மனதில் திருட்டு வந்தது. வாயில் பொய் வந்தது. நெஞ்சை எரிக்கும் ரகசியம் வந்தது. கண்ணனுடன் பேச ஆரம்பித்தப் பிறகு அவள் வெளிப்படையாகச் சிரித்ததே இல்லை. பேச்சைக் குறைத்துக் கொண்டாள். வாசலில் நிற்பதை, தெருவில், மற்றவர்களுடன் பேசுவதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டாள். துபாயிலிருந்து மதி வரும்போதெல்லாம் சாக்லேட், பிஸ்கட், வாட்ச், செல்போன், சென்ட் பாட்டில், தலைவலித் தைலம், மேக்கப் செட் என்று எடுத்துவருவான். ஊருக்கு வராதபோது உள்ளுர் ஆட்கள் துபாயிலிருந்து யாராவது வந்தால் அவர்களுடைய கையிலும் பொருட்களைக் கொடுத்தனுப்புவான். என்ன வேலையாக இருந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராத்திரி ஒன்பது மணிக்குப் பேசிவிடுவான். பிறந்த வீட்டிலிருந்து அதை வாங்கிக்கொண்டு வா, இதை வாங்கிக்கொண்டு வா என்று ஒருநாளும் சொன்னதில்லை. பொங்கல் சீர், தீபாவளிச் சீர் ஏன் வரவில்லை என்று கேட்டதில்லை. சீர் சரியில்லை என்று சொன்னவனில்லை. கல்யாணம் கட்டிய நாளிலிருந்து ஒவ்வொரு பொங்கலுக்கும் தீபாவளிக்கும் மாமனார், மாமியாருக்கு அவன்தான் வேட்டி, சீலை என்று எடுத்துக் கொடுத் திருக்கிறான். குணத்தில் மட்டுமல்ல-, உடலிலும் மதியிடம் எந்தக் குறை யையும் பார்க்க முடியாது. பல் எடுப்பு, கை கால் ஊனம், குட்டை, நெட்டை, கருப்பு, கோணக்கால் என்று எதையும் சொல்ல முடியாது. “கட்டுனா இந்தப் புள்ளையத்தான் கட்டுவன்” என்று சொன்னவனுக்கா துரோகம் செய்தேன்? பத்மாவதி தன்னையே கேட்டுக்கொண்டாள். மறுநொடியே தலையை மூன்றுநான்கு முறை தரையில் மோதினாள். அது போதாது என்று இரண்டு கன்னத்திலும் மாறிமாறி அடித்துக்கொண்டாள். அடித்துக்கொள்ளும்போது மட்டும்தான் அவளுக்கு லேசாகக் கோபம் சிறிது குறைந்த மாதிரி இருந்தது. மறுநொடியே கோபம் அதிகரித்தது. பயம் கூடியது. லேசாகக் கைகால்களையெல்லாம் தடவிப்பார்த்தாள். அப்போது மேற்குத் தெருவில் இருக்கிற மாலதியினுடைய நினைவு வந்தது.

மாலதியினுடைய புருசன் சந்திரன் துபாயில்தான் இருக்கிறான். அவனுக்குப் பணம் கட்டியது, விசா எடுத்தது எல்லாம் கிழக்குத் தெரு குமார் தான். மாலதிக்கும் குமாருக்கும் உறவென்று ஊருக்கு மட்டுமல்ல, சந்திரனுக்கேகூடத் தெரியும். மாலதியின் குடும்பத்தை இப்போது குமார்தான் பார்த்துக்கொள்கிறான். பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது, பிள்ளைகளுக்கு கான்வென்ட்டுக்குப் பணம் கட்டுவதுவரை எல்லாம் குமார்தான் செய்கிறான். இதற்கே குமாருக்கு மாலதி தங்கை முறை. சந்திரனுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பிகள் யாரும் மாலதியைக் குறை கூறியதோ, திட்டி யதோ கிடையாது. தனியாகக் குளிக்கப்போகும்போது, வேலைக்குப் போகும்போது, உடம்பு சரியில்லை என்று மருத்துவமனைக்குப் போகும் போதெல்லாம் யாரும் கண்காணிப்பதில்லை. துணைக்கு என்று கூடவே யாரும் வருவதில்லை. எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இரு என்று சந்திரனோ, மற்றவர்களோ சொன்னதில்லை. வேலைக்குப் போகக் கூடாது, வீட்டை விட்டுத் தேவையில்லாமல் வெளியே போகக் கூடாது என்ற கட்டுப்பாடெல்லாம் மதியின் வீட்டில் மட்டும்தான்.

மாலதி கெட்ட பெயர் எடுத்தாலும் கெட்டிக்காரி. புருசனை துபாய்க்கு அனுப்பிவிட்டாள். புருசன் அனுப்பிய பணத்தை வைத்து வீடும் கட்டிவிட்டாள். நகையும் இருபது, முப்பது பவுனுக்கு மேல்

சேர்த்துவிட்டாள். குமாரால் அவளுக்கு ஒரு பைசா நட்டம் இல்லை. வீட்டு வேலை, காட்டு வேலை எதுவாக இருந்தாலும் குமாரிடம் சொல்லி முடித்துவிடுவாள். கண்ணன் பத்மாவதிக்கு ஒரு தலைவலி மாத்திரைகூட வாங்கிக் கொடுத்தவனில்லை. அவளும் கேட்டதில்லை. வீட்டில் இருக்கிற சோப், சென்ட், தைலம் பாட்டில் என்று இவள்தான் கொடுத்திருக்கிறாள். அதோடு, வண்டிக்கு எண்ணெய் போடுவதற்குப் பணம் கொடு, செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யப் பணம் கொடு என்று அவ்வப்போது இரு நூறு, முந்நூறு என்று வாங்கியிருக்கிறான். மொத்தமே ஏழெட்டு மாதப் பழக்கம்தான் இருக்கும். அதற்குள் குறைந்தது ஏழு, எட்டாயிரம் ரூபாய் சில்லரையாக வாங்கியிருப்பான். நூறு, இருநூறு என்று கொடுத்த எந்தப் பணத்தையும் அவள் திரும்பிக் கேட்டதுமில்லை. அவனாகத் திருப் பிக் கொடுத்ததுமில்லை. ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்த பத்மாவதி கசந்துபோய் சொன்னாள், “மாலதி அதிர்ஷ்டம் செஞ்சவ.”

மாலதியைப் பற்றி நினைத்ததும் கார்கூடல் சந்திரா நினைவுக்கு வந் தாள். கார்கூடலில் பிறந்து நல்லூரில் கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த சந்திராவுக்கு அப்போது வயது இருபதுகூட இருக்காது. மூன்று வருடத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். சிங்கப்பூரிலிருந்த அவளுடைய அண்ணன்தான் தங்கையின் புருசன் என்ற முறையில் செல்வத்துக்கு விசா எடுத்து அனுப்பினான். தன்னுடைய வீட்டிலிருந்தால் மாமியார் மருமகள் சண்டை வரும், அம்மா வீட்டில் இருப்பதுதான் நல்லது என்று கார்கூடலில் அழைத்துக்கொண்டு போய் விட்டுவிட்டு சிங்கப்பூர் போனான் செல் வம். மாதாமாதம் கார்கூடலுக்குப் பணம் அனுப்பினான். ஆட்களின் கையில் பொருள், நகை என்று அனுப்பினான். இரண்டு வருடங்கள் ஓடியது.

ஒருநாள் கடலூர் மருத்துவமனைக்குப் போன செல்வத்தின் அக்கா ராணி, கருச்சிதைவு செய்துகொள்ள வந்திருந்த சந்திராவைப் பார்த்து ‘என்னா வந்தது?” என்று கேட்டாள். ‘வயித்து வலிக்குப் பாக்க வந்தன்’ என்று சொன்ன வார்த்தையை அவள் நம்பவில்லை. அதற்குக் காரணம், அவளோடு வேறு ஒரு பையனும் வந்திருந்தான். அவன் யார் என்று கேட்டதற்கு ‘சித்தப்பா மகன்’ என்று சொன்னாள். “எனக்குத் தெரியாம ஒனக்கு எந்தச் சித்தப்பன் மவன் இருக்கான்?” என்று கேட்டு ராணி சண்டை போட்டாள். மருத்துவமனை நர்சிடம் சந்திரா எதற்காக வந்திருக்கிறாள் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். உடனே சிங்கப்பூருக்கு போன் போட்டுத் தன்னுடைய தம்பியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டாள். மறுநாளே, “கார்கூடலில் இருக்க வேண்டாம், நல்லூருக்குப் போ” என்று செல்வம் போனில் சொன்னதற்கு “நீ வந்த பிறகு போறன். எனக்கும் ஒங் கம்மாவுக்கும் ஆவாது. விசா இன்னும் ஒரு வருசம்தான இருக்கு” என்று பதில் சொன்னதோடு, நல்லூருக்கு வராமல் கார்கூடலிலேயே இருந்தாள். அடுத்தடுத்து போன் போட்டு “நல்லூருக்குப் போ” என்று சொல்லியும் சந்திரா கேட்காததால் “அப்பா செத்துவிட்டார். உடனே ஊருக்குப் போக வேண்டும்” என்று சொல்லி, கம்பெனியில் விடுப்பு எடுத்துக்கொண்டு சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வந்த அன்றே செல்வம், கார்கூடலிலிருந்த சந்திராவை நல்லூருக்கு அழைத்துக்கொண்டு வந்தான். வீட்டுக்கு வந்ததுமே “உண்மையச் சொல்லு” என்று அடித்து உதைத்துக் கேட்டிருக்கிறான். சீமை எண்ணெயை அவள்மேல் ஊற்றி “உண்மையச் சொன்னா வுட்டுடுறன்” என்று சொல்லிக் கேட்டிருக்கிறான். கொளுத்திவிடுவான் என்ற பயத்தில் “ஒருதடவதான் போனன். அப்பறம் போவல” என்று சந்திரா சொன்னதும் “ஒருதடவ போனதுக்கே ஒனக்குப் புள்ளை உண் டாயிடிச்சா? இது இருகிறதாலதான ஊர் மேயப் போயிருக்க?” என்று கேட்டு, சந்திராவைக் கட்டிப்போட்டு அவளுடைய உறுப்பில் இரண்டு கைகளையும் நுழைத்துக் கிழிக்க முயன்றிருக்கிறான். சந்திரா கத்திய சத்தம் கேட்டுத் தெருச் சனம்தான் கதவை உடைத்துத் திறந்து, கட்டிப் போட்டிருந்தவளை விடுவித்தனர்.

மறுநாள் இரவும் குடித்துவிட்டு வந்து முதல் நாள் இரவு செய்த மாதிரியே செய்திருக்கிறான். அன்றும் தெருச் சனம்தான் சந்திராவைக் காப்பாற்றினார்கள். அதற்கடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் செல்வம் கைகளை விட்டு சந்திராவின் உறுப்பைக் கிழிக்க முயல, ஊர் முழுவதும் விஷயம் தெரிந்துவிட்டது. பகல் முழுவதும் யாரிடமும் பேசாமல் பெருமாள் கோவில் வாசலிலேயே உட்கார்ந்திருப்பான். இரவானதும் நினை வில்லாத அளவுக்குக் குடிப்பான். ஊர் அடங்கிய பிறகு வீட்டுக்கு வருவான். வீட்டுக் கதவைப் பூட்டுவான். சந்திராவைக் கட்டிப்போடுவான். இரண்டு கைகளையும் அவளுடைய உறுப்பில் நுழைத்து அதைக் கிழிப்பதற்கு முயல்வான். சந்திராவின் கத்தல், அழுகை, கூப்பாடு, பிள்ளைகளின் கதறல் எதுவும் செல்வத்தினுடைய மனதை மாற்றவில்லை. பதினெட்டு நாள் சித்திரவதைக்குப் பிறகு யாருக்கும் தெரியாமல் ஓடிப்போய் விருத்தா சலம் மகளிர் காவல் நிலையத்தில் சந்திரா புகார் மனு கொடுக்க, பெண் போலீஸ் வந்து செல்வத்தை அழைத்துக்கொண்டு போனது. செல்வத்துக்காக நல்லூர் ஆண்கள் பத்திருபது பேர் போனார்கள். சந்திராவுக்காகக் கார்கூடல் ஆண்களெல்லாம் காவல் நிலையத்துக்கு வந்தார்கள். மூன்று நாள் பஞ்சாயத்து நடந்தது.

சமாதானம் செய்து செல்வத்துடன் வாழ்வதற்கு வா என்று அழைத்த வர்களிடம் “என்னா பண்ணியிருக்கான் பாருங்க” என்று சொல்லி, சீலையைத் தூக்கிக் காட்டியதோடு “பதினெட்டு ராத்திரியா நான் பட் டது போதும். இதுக்கு மேல இவங்கூட இருக்க மாட்டன். என்ன அத்து வுட்டுடுங்க. சித்தாள் வேல செஞ்சாவது நான் பொழச்சிக்கிறன். பதினெட்டு நாளா ராவும் பகலும் என்னெப் பூட்டியே வச்சிருந்தான் தெரியுமா? இனி அவங்கூட ஒரு நிமிஷ நேரங்கூட இருக்க மாட்டன்” என்று ஒரே பிடிவாதமாகச் சந்திரா சொல்லிவிட்டாள்.

“புள்ளைங்கள யார் வச்சிக்கிறது?” என்று கேட்டதற்கு “எனக்கு வாணாம் புள்ளைங்க. இனிமே செத்தா வாழ்ந்தா இல்லெ. என்னெ அத்து வுடலன்னா இன்னிக்கி ராத்திரிக்கே மருந்தக் குடிச்சி செத்துடுவன்” என்று ஒரே தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். பிள்ளைகளை வைத்துக் கொள் என்று போலீஸ் சொன்னதற்கு “அவனயே வேணாமின்னுட்டன். அப்பறம் என்னா புள்ளைங்க?” என்று கேட்டுக் காவல் நிலையத்திலேயே பிரிந்துபோகிறேன் என்று சொல்லி எழுதிக்கொடுத்துவிட்டுப் போய் விட்டாள். “ஒரே ஒரு முற போய் இருந்து பாரு. திரும்பவும் அதே மாதிரி செஞ்சா, வந்து சொல்லு உள்ளாரப் புடிச்சிப் போட்டுடலாம்” என்று போலீஸ் சொன்னதையும் அவள் கேட்கவில்லை. காவல் நிலையத்துக்குப் பஞ்சாயத்துக்குப் போனவர்கள் வந்து சொல்லித்தான் சந்திராவினுடைய முழுக் கதையும் ஊருக்குத் தெரிந்தது. சந்திரா பிரிந்துபோய் மூன்று வருட மாகிவிட்டது. இரண்டு பிள்ளைகளையும் செல்வத்தினுடைய அம்மாதான் வளர்த்துக்கொண்டிருக்கிறாள். ஆறு, ஏழு வயதுப் பிள்ளைகள். காவல் நிலையத்துக்குப் போய்விட்டு வந்த நாளிலிருந்து செல்வம் குடிக் காத நாளில்லை. குடித்துவிட்டு வந்து பெருமாள் கோவில் வாசலிலேயே கிடப்பான். வேலைக்கு என்று ஒருநாளும் போனதில்லை. திரும்பவும் சிங்கப்பூருக்கும் போகவில்லை. நாள் முழுவதும் பைத்தியக்காரன் மாதிரி பெருமாள் கோவில் வாசலில் உட்கார்ந்திருக்கிற செல்வத்தைப் பத்மாவதி பல முறை பார்த்திருக்கிறாள்.

செல்வத்தைப் பற்றி நினைத்ததும் பத்மாவதிக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு நெஞ்சுத் துடிப்பு கூடியது. வியர்த்து ஒழுகியது. உடல் நடுங்கியது. பதற்றம் அதிகரித்தது. வந்த வேகத்தில் மதி என்ன செய்வான்? செல் வம் செய்த மாதிரி செய்வானா? செய்யலாம். செய்ய மாட்டான் என்று சொல்ல முடியாது. கோபம் வந்துவிட்டால் யாருமே நல்லவர்களாக இருப் பதில்லை. ஊரில் நடந்த கதையெல்லாம் தெரிந்த பிறகும் தன்னால் எப்படிக் கண்ணனுடன் பேச முடிந்தது, நகையைக் கொடுக்க முடிந்தது என்று யோசித்தாள். ஆங்காரம் வந்த மாதிரி முகத்திலேயே அடித்துக்கொண்டாள். வெறுப்பில் “செல்வம் செஞ்ச மாதிரியே மதியும் செய்யட்டும்.

கைய வுட்டுக் கிழிக்கட்டும். இனிமே எனக்கு அது எதுக்கு?” என்று சொன் னாள். ‘பட்பட்’ என்று தரையில் அடித்தாள்.

பத்மாவதிக்கு வாய்விட்டுக் கத்தி அழவேண்டும் போலிருந்தது. மாடி யில் படுத்திருக்கும் மாமனார், மாமியாருக்குத் தெரிந்துவிடுமே என்ற கவலையில் வாய்விட்டுச் சத்தமாக அழ முடியாமல் படுத்திருந்தாள். “வாய்வுட்டு அழுதா மனப் பாரம் கொறயும். அதுக்குக்கூட வழியில்லியே. கடவுளே.” தரையில் ஓங்கி அடித்தாள். யாராவது வந்து அவளைத் திட்டினால், அடித்தால், சண்டைப்போட்டால் அவளுடைய மனப் பாரம் குறைந்துவிடும். தெருவில், அங்கே இங்கே என்று நடந்துவிட்டு வந்தாலாவது பயம் கொஞ்சம் குறையும். எதற்கும் வழியில்லை. வெளியில் இருட்டு. மழை. இடி. மின்னல்.

விடிந்து எழுந்ததும் பிறந்த வீட்டுக்குப் போய்விடலாமா? நிதானமாக யோசித்தாள். அதற்குச் சுத்தமாக வழியில்லை. அவளுடைய அப்பா இறந்து மூன்று வருஷமாகிவிட்டது. அம்மா இறந்து ஒரு வருஷத்துக்கு மேலாகிவிட்டது. ஒரே ஒரு அண்ணன். அவனும் ஊரில் இல்லை. பெண்டாட்டிப் பிள்ளையோடு பம்பாயில் இருக்கிறான். பொங்கல், தீபாவளிக்குத்தான் ஊருக்கு வருவான். அவனை நம்பிக்கொண்டு பம்பாய்க்கும் போக முடி யாது. மீறி ஊருக்குப் போனாலும் ஒரே ஒரு கூரை வீடு மட்டும்தான் இருக்கிறது. ஒரு வேட்டி அளவுக்குக்கூட நிலம் இல்லை. பெரியப்பா மகன் இரண்டு பேர், சித்தப்பா மகன் ஒருவனும் இருக்கிறார்கள். அவர்களுடைய வீட்டுக்குப் போகலாமா? போனாலும் ஒரு நாள், இரண்டு நாள்தான் இருக்க முடியும். விசயம் தெரிந்தாலே மறுநொடியே துரத்திவிடுவார்கள். ‘நல்ல பையனாச்சே. அவனுக்கா துரோகம் செஞ்ச?’ என்று கேட்டுச் சண்டை போடுவார்கள். உடனே வீட்டை விட்டுத் துரத்துவார்கள்.

பத்மாவதி கல்யாணம் கட்டிக்கொண்டு நல்லூருக்கு வந்து பதினைந்து ஆண்டாகிவிட்டது. இத்தனை வருடத்தில் எந்தக் கெட்ட பெயரும் இல்லை. புருசனிடம் சண்டை என்று கோபித்துக்கொண்டு ஒருமுறை கூடப் பிறந்த வீட்டுக்குப் போனதில்லை. வாயாடி, பல்லை இளிப்பாள் என்று எந்தக் கெட்ட பெயரும் இல்லை. மாமனார், மாமியாரிடம் நல்ல பெயர் இல்லை என்றாலும், கெட்ட பெயர் இல்லை. நாத்தனார் பிருந்தாவிடம்கூட அவளுக்குக் கெட்ட பெயர் இல்லை.

பிறந்த வீட்டிலிருந்ததைவிடப் புருசன் வீட்டில்தான் பத்மாவதி அதிக சௌகரியமாக இருந்திருக்கிறாள். பிறந்த வீட்டில் காதில், மூக்கில், கழுத்தில் என்று கிடந்த மொத்த நகை அரை பவுன்தான். கல்யாணத்துக்கே தோடு, சிமிக்கி, மூக்குத்தி, கால் கொலுசு, நூல் மாதிரி ஒரு பவுன் செயின், மதிக்குக் கால் பவுன் மோதிரம் என்று மூன்று பவுன்தான் போட்டார்கள். மதி எதையும் கேட்கவில்லை. “பொண்ணு நல்லா இருக்கு. அத மட்டும் கொடுங்க. மத்தது ஒண்ணும் வாணாம்” என்று சொல்லிப் பத்மாவதியினுடைய வீட்டுச் சனங்களை மயக்கிவிட்டான். தன்னுடைய வீட்டுச் சனங்களில் ஒரு ஆள்கூட மதியைக் குற்றம் சொன்னதில்லை என் பதை யோசித்ததும் உடனே அழுகை வந்தது. “நான் செஞ்சது தப்புத்தான? ஊர்ல எவன் மருந்து குடிச்சா நமக்கு என்னான்னு போயிருக்கணும். ரவ எரக்கப்பட்டன். நெருப்புல தள்ளிவுட்டுட்டான். அவன் நெஞ்சு கல்லா, மண்ணா? என்னா வாத்த சொல்லிப்புட்டான்?” கண்ணன் சொன்ன வார்த்தையை நினைத்ததுமே அவளுடைய நெஞ்சும் வயிறும் எரிவது மாதிரி இருந்தது.

பத்மாவதி பிறந்த சிறுவரப்பூர் முழுவதும் “பத்மாவதி அதிர்ஷ்டம் செஞ்சவ. அதனாலதான் அவளுக்கு நல்ல புருசன் கெடச்சிருக்கான்” என்று சொல்வார்கள். இப்போது ஊருக்குப் போனாலும் அதே வார்த் தையைத்தான் சொல்வார்கள். “நான் இப்படி சாவறதுதான் அதிர்ஷ்டமா?” என்று கேட்ட பத்மாவதி-, “நான்தான் பெரிய தப்பு செஞ்சிட்டன். அதான் படுறன். எம்மாம் தெரிய தப்பு. பசி அறியாம வச்சிருந்தான். வாச நிழலுகூட மேலுல படாம வச்சிருந்தானே. மண்ணு தீண்டா பாதமா வச்சிருந் தானே.” ஓங்கித் தரையில் அடித்தாள்.

பையன் எழுந்தான். ஒண்ணுக்குப் போக வேண்டும் என்று சொன்னான். “போயிட்டு வா” என்று சொன்னாள். “நீயும் வா” என்று சொல்லி அழுதான். மெல்ல எழுந்து விளக்கைப் போட்டுப் பையனை பாத்ரூமுக்கு அழைத்துக்கொண்டுபோய் ஒண்ணுக்கு விடவைத்தாள். திரும்ப அழைத்துக்கொண்டுவந்து படுக்கவைத்தாள்.

செல்போனை எடுத்து நேரத்தைப் பார்த்தாள். மணி இரண்டு. மதி வந்துவிடுவான் என்பது உறைத்ததுமே நெருப்பில் விழுந்துவிட்ட மாதிரி அவளுடைய நெஞ்சு துடித்தது. உடல் நடுங்கியது. வீட்டுக்கு வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. குளுமையாக இருந்தது. ஆனால் பத்மாவதிக்கு வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்தது. விளக்கை நிறுத்தலாமா, வேண்டாமா என்று யோசித்தாள். விளக்கை அணைப்பதில்கூட அவளுக்கு ஒரு முடிவும் கிடைக்கவில்லை. நேரம் இருக்கிறது என்று தெரிந்தாலும் சந்தேகத்தில் ஜன்னலைத் திறந்து மதி வந்துவிட்டானா என்று பார்த்தாள். வாசலில் மதி இல்லை. கார் இல்லை. ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அப்படியே நின்றாள். மழைத் தூறலாகப் பெய்துகொண்டிருந்தது. இடி, மின்னல் இல்லை. மதி வீட்டுக்குள் வந்ததும் என்ன நடக்கும் என்ற ஒரே கேள்வியைத்தான் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டாள்.

“எங்கப் போயி, எப்பிடி முடியும்?”

மதி பத்மாவதியை வந்த வேகத்தில் அடித்தாலோ, வீட்டை விட்டுத் துரத்தினாலோ அடுத்த நொடியே ஊர் முழுவதும் விசயம் தெரிந்துவிடும். திடீரென்று மதி ஊருக்கு வந்திருக்கிறான். பொண்டாட்டியை அடிக்கிறான் என்று தெரிந்தாலே போதும். அதற்கு மேல் ஊருக்கு எதையும் சொல்லித்தர வேண்டியதில்லை. “மத்தவங்க கதயப் பேசுறது சனங்களுக்குக் கறி சோறு சாப்புடுறாப்ல. என்னென்ன பேசுமோ, என்னென்ன சொல்லுமோ?” ஊர்ச் சனங்களுக்கெல்லாம் வாய் ஊமையாகிவிட வேண்ம் என்று ஆசைப்பட்டாள். ஊரே இருட்டில் கிடந்தது. தெருவில் படுத்திருக்கும் நாய்களைக்கூடக் காணவில்லை. ஜன்னலைச் சாத்தினாள். பையனுடைய பக்கத்தில் வந்து படுத்தாள். ஊர்ச் சனங்களைப் பற்றி யோசித்தாள். காரணமின்றி ஊரைத் திட்டினாள். தெருவில் நடந்தால் ஒரு பேச்சு பேசும். வாசலில் நின்றால் ஒரு பேச்சு பேசும். சாகிறவரைக்கும் குத்திக்காட்டும் என்பதை நினைத்தபோது மனது குளிர்ந்துபோகிற மாதிரி ஒரு யோசனை வந்தது. “நான் செத்துட்டா என்ன?”

பத்மாவதிக்குப் பயமும், நடுக்கமும் லேசாகக் குறைய ஆரம்பித்தன. வியர்ப்பதுகூடக் குறைந்துவிட்டிருந்தது. மின்னல் வெளிச்சம் மாதிரி மனதில் தெம்பு வந்தது. இந்த நேரத்தில் விஷம் கிடைக்காது. நாளை மதியம்வரை காத்திருக்க வேண்டும். என்ன செய்வது? தூக்குப் போட்டுக்கொண்டு சாகலாமா? தூக்குப் போட்டுக்கொண்டு சாகலாம் என்றால் தனியாக இருக்கும்போதுதான் செய்ய முடியும். பிள்ளைகள் படுத்திருக்கிறார்கள். மாமியாரும், மாமனாரும் மாடியில் படுத்திருக்கிறார்கள். திடீரென்று எழுந்து வந்துவிட்டால் காரியம் நடக்காது. தூக்குக் கயிறு அறுந்துவிட் டாலும் காரியம் நடக்காது. குழம்பிய பத்மாவதிக்கு ரயிலில் விழுந்து செத்துவிடலாம் என்ற எண்ணம் வந்தது. ரயில் எப்போது வரும், எப்படி ரயிலில் விழ வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு நாளும் விடியற்காலம் நாலரை மணிக்குச் சென்னையிலிருந்து சேலத்துக்குச் செல் லும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் என்பது அவளுக்குத் தெரியும். வீட்டை விட்டு எப்போது கிளம்புவது, எப்படிப் போவது, எந்த இடத்தில் நின்று கொண்டு ரயிலில் விழுவது? ரயிலில் விழுவதா? தண்டவாளத்தில் படுத்துக் கொள்வதா? ஓடிப்போய் ரயிலில் விழுவது சாத்தியமில்லை. தண்டவாளத்தில் படுத்துக்கொள்வதுதான் சரி. ரயிலின் தண்டவாளத்தில் படுத்துச் சாவது என்று முடிவெடுத்ததுமே அவளுடைய உடம்பு குளிர்ந்துபோயிற்று. அந்தக் குளிர்ச்சி ஒரு நிமிடம்தான் இருந்தது. அந்தக் குளிர்ச்சி மறுநொடியே சிதறிப்போய் உடம்பு நெருப்பாகக் காய்ந்தது. தூக்குப் போட்டுக்கொண்டு செத்தாலும், ரயிலின் தண்டவாளத்தில் படுத்துச் செத்தாலும் “கண்ணன வச்சிருந்தா, அது புருசனுக்குத் தெரிஞ்சி அடிச்சி வீட்ட வுட்டுத் துரத்திப்புட்டான். அதனாலதான் செத்திட்டா” என்று ஊர் பேசுமே என்ற கவலை வந்தது. உயிரோடிருந்தாலும் பேசும், செத்துவிட்டாலும் பேசும். “இந்த ஊர்மேல இடி விழுந்தா என்ன?” பத் மாவதி கோபமாகக் கேட்டாள்.

பத்மாவதி ரயில் தண்டவாளத்தில் படுத்துச் செத்தாலும், தூக்குப் போட்டுக்கொண்டு செத்தாலும், செத்துப்போனதைப் பற்றிப் பேசாமல் அவள் கண்ணனுடன் இருந்ததைப் பற்றிதான் அதிகமாகப் பேசுவார்கள். பிணத்தைச் சீக்கிரமாக எடுப்பதைப் பற்றிக்கூடப் பேச மாட்டார்கள். பிணத்தை எடுத்த பிறகு பத்மாவதியைப் பற்றிப் பேச மாட்டார்களா? பேசுவார்கள். உயிரோடிருந்தாலாவது சண்டை வரும் என்று குறைவாகப் பேசுவார்கள். ஆளில்லாத நேரமாகப் பார்த்துப் பேசுவார்கள். செத்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. சாவது நல்லதா, உயிரோடிருப்பது நல்லதா? இதே கேள்வியைப் பலமுறை தனக்குள் கேட்டுக்கொண்டாள். பதில் கிடைக்கவில்லை. “உசுரு பெருசா? மானம் பெருசா?” இந்தக் கேள்விக்கும் அவளால் பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. “சாதாரணமான புருசன் பொண்டாட்டி சண்டைக்கே எத்தனயோ பேர் செத்துப் போகலயா?” தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். சாவதுதான் நல்லது. “நெனச்ச நேரத்துக்குச் செத்துப்போற மாதிரி இருக்கக் கூடாதா?” ஏக்கத்துடன் அழுதாள்.

பத்மாவதி ரயில் தண்டவாளத்தில் படுத்து, ரயில் ஏறிச் செத்தாலும் ஊர் முழுவதும் ‘பத்மாவதி’ செத்துவிட்டாள் என்று சொல்ல மாட்டார்கள். ‘துபாய்க்காரன் பொண்டாட்டி செத்துட்டா’ என்றுதான் சொல்வார்கள். நல்லூரிலிருந்து துபாயில் ஏழெட்டு பேர் இருக்கிறார்கள். அவர் களில் யாருடைய பெண்டாட்டிக்கும் துபாய்க்காரன் பொண்டாட்டி என்று பெயர் வரவில்லை. அவர்களைப் பார்த்து யாரும் ‘துபாய்க்காரன் பொண்டாட்டி’ என்று கூப்பிடுவதில்லை. பத்மாவதிக்கு மட்டும்தான் அந்தப் பெயர். நல்லூரிலிருந்து முதலில் துபாய்க்குப் போனது மதிதான். அதனால்தான் பத்மாவதிக்கு அந்தப் பெயர். சின்னப் பிள்ளையிலிருந்து, நாளைக்குச் சாகிற கிழவிவரை ஊரில் எல்லாருக்குமே பத்மாவதி ‘துபாய்க்காரன் பொண்டாட்டி’தான். அப்படித்தான் எல்லோரும் கூப்பிடு வார்கள். கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த புதிதில்தான் ‘பத்மா’ என்று கூப்பிட்டார்கள். மதி என்றைக்குத் துபாய்க்குப் போனானோ அதிலிருந்து அவள் ‘துபாய்க்காரன் பொண்டாட்டி’ என்றாகிவிட்டாள். ஆனால் மதி மட்டும்தான் ‘பத்மாவதி’ என்று கூப்பிடுவான். அவன் ‘பத்மாவதி’ என்று கூப்பிடும்போது பெற்றவள் கைப்பிள்ளையைக் கூப்பிடுவது மாதிரி இருக் கும்.

ரயிலில் அடிப்பட்டுச் செத்த பிறகு தன்னுடைய பெயரை யாராவது சொல்வார்களா என்ற சந்தேகம் வந்தது. ஆள்காட்டி விரலால் ‘பத்மாவதி’ என்று ஒரு முறை தரையில் எழுதினாள். தரையில் பெயர் எழுதியதற்கான எந்த அடையாளமும் இல்லை. “நல்ல பேருதான்.” கசப்புடன் சொன் னாள். பிறகு என்ன தோன்றியதோ தன்னுடைய பெயரைத் தானே சொல் லிக்கொண்டாள். “பத்மாவதி.”

“நான் செத்தாலும் ‘துபாய்க்காரன் பொண்டாட்டி’ங்கிற பேரு என்னெ வுடாதுபோல இருக்கே.” சிறு பிள்ளையிலிருந்து பெரியவர்கள்வரை ‘துபாய்க்காரன் பொண்டாட்டி’ என்று கூப்பிடும்போது, ஏன் அப்படிக் கூப்பிடுகிறாய் என்று கேட்டு ஒருவரிடமும் ஒருநாளும் அவள் சண்டைக்குப் போனதில்லை. தெருவில் தோரணையாக நடந்துபோகும்போது கல்யாணம், ஆஸ்பத்திரி என்று வெளியூர் போகும்போதெல்லாம் அவள் போட்டிருக்கிற நகையைப் பற்றி, கட்டியிருக்கிற சீலையைப் பற்றி, தலை யில் வைத்திருக்கிற பூவைப் பற்றியெல்லாம் நல்ல விதமாகவும், கெட்ட விதமாகவும் பேசுவார்கள். நல்ல விதமாகப் பேசினாலும் கெட்ட விதமாகப் பேசினாலும் ‘துபாய்க்காரன் பொண்டாட்டி’ என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. சில நேரங்களில் அந்த வார்த்தையைக் கேட்டுப் பத்மாவதி சிரித்திருக்கிறாள். “புருசன் துபாயில இருந்தாலும் சீவலும், பவு டரும் மேக்கப்பும் மாறாமதான திரியிறா” என்று சொல்வார்கள். அந்த மாதிரி வார்த்தைகளைக் காதிலேயே வாங்க மாட்டாள்.

ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. எழுந்து உட்கார்ந்தாள். மதி வந்திருப்பானா? கதவைத் தட்டியிருப்பானா என்ற சந்தேகம் வந்தது.

செல்போனை எடுத்து நேரத்தைப் பார்க்கலாமா என்று நினைத்தாள்.

செல்போனை எடுக்கவே பயமாக இருந்தது. வெடிகுண்டைப் பார்ப்பது மாதிரி செல்போனைப் பார்த்தாள். கார் நிற்கிற சத்தம், கதவைத் தட்டு கிற சத்தம் கேட்கிறதா என்று கவனமாகக் கேட்டாள். எந்தச் சத்தமும் கேட்கவில்லை என்பது தெரிந்த பிறகுதான் அவளுக்கு மூச்சு விடவே முடிந்தது. அதே நேரத்தில் மதி சீக்கிரம் வர வேண்டும். அவன் வந்துவிட்டால் எல்லாக் குழப்பமும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். மனக் கொதிப்பு அடங்கிவிடும் என்று நினைத்தாள். மதி வந்துவிட்டால் போதும்என்ற நிலைக்கு வந்துவிட்டாள். செல்போனை எடுத்துப் பார்த்தாள்.

மணி மூன்று. மதி ஏன் இன்னும் வரவில்லை? அவன் வந்துவிடுவான் என்று திடமாக நம்பினாள். “புருசன்னு இருந்தான். மூணு புள்ளைங்க இருந்துச்சி. வீடு, ஊர், சொந்தம்ன்னு எல்லாம் இருந்துச்சி. இப்ப எதுவு மில்லன்னு சொல்லி என்னெ இப்பிடி உட்கார வச்சிட்டானே. பாவி. அவன் நல்லா இருப்பானா? இந்த ஊர்ல இருக்கிற சாமியெல்லாம் அவனக் கேக்காதா?” பத்மாவதி அழுதாள்.

“நான் ரயில்ல அடிபட்டு செத்த பின்னால ஊர்ல இல்லாததெல்லாம் இருந்துதுன்னு பேசுங்க, நடக்காததெல்லாம் நடந்ததின்னு பேசுங்க. “புரு சன் அனுப்புன பணத்த, நகெய எல்லாத்தயும் அவங்கிட்டதான் கொடுத் தான்னு சொல்லுங்க. அன்னிக்கி மட்டும் அவன் கடயில நிக்காட்டி சண்ட வந்திருக்காது. அவன் அந்த வாத்தய சொல்லாட்டிக் கோபம் வந்திருக்காது. எல்லாம் சினிமா மாதிரி நடந்துபோச்சி. இனிமே ஊரு பேசுற பேச்சு கடலு கொள்ளாது. ஊர்ச் சனங்களுக்கு வாய் சலிச்சிப்போவாது. இதுவர, ஆளில்லாதப்ப, மறமுகமாப் பேசுனாங்க. இனிமே எந்தத் தடயுமில்ல. கூட்டம் கூடிப் பேசுவாங்க. ஏன் அப்பிடிப் பேசுனன்னு யாரு சண்டக்கிப் போவப்போறா? சுத்திசுத்தி வந்து என்னெ நெருப்புல தள்ளிவுட்டுட்டான். நான் செத்தாலும் ‘எம் பேரு அழியாது. சுத்திசுத்தி வந்து என்னெத் தேவிடியா பட்டம் வாங்க வச்சிட்டான். என்னெப் பேயா ஆக்கி இப்பிடி ஒக்கார வச்சிட்டான். அவன் நல்லா இருக்கட்டும். நான் பாவம் பாத்தன். அதான் நான் செஞ்ச கருமம். பாவம் பாத்தது குத்தமா? இரக்கப்பட்டது பாவமா? நம்பளால ஒரு உசுரு போவக் கூடாதின்னு நெனச்சன். அதுக்காக எனக்குப் பொணக்குழிய வெட்டிட்டான். நல்ல மகராசனா இருக்கட்டும். மனசறிஞ்சா செஞ்சன்?” திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டாள். வேகம் வந்த மாதிரி தரையில் குத்தினாள். முகத்திலேயே அடித்துக்கொண்டாள். சீலை அவிழ்ந்து கிடந்தது, ஜாக்கட் பட்டன் அவிழ்ந்து கிடப்பது, தலைமுடி அவிழ்ந்து கிடப்பது எதுவும் அவளுடைய சிந்தனையில் இல்லை. இரண்டு கண்களிலிருந்து எவ்வளவு கண்ணீர் வழிந்ததோ, அதே அளவுக்கு மூக்கிலிருந்தும் சளி ஒழுகிக்கொண்டிருந்தது. அதைத் துடைக்கக்கூட அவ ளுக்குச் சிந்தனையில்லை.

“மனசறிஞ்சா செஞ்சன்?”

அழுதுகொண்டிருந்த பத்மாவதிக்குத் தான் ரயிலில் அடிபட்டுச் சாவது சரியா என்ற எண்ணம் வந்தது. அவள் ரயிலில் அடிபட்டுச் செத்த மறு நாளிலிருந்து காலையிலோ, மாலையிலோ ரயில் ரோட்டுப் பக்கம் எந்தப் பெண்பிள்ளையும் போகக் கூடாது என்று ஊர் உத்தரவு போட்டுவிடும். மீறிப் போனால் துபாய்க்காரன் பொண்டாட்டி பிடித்துக்கொள்வாள் என்று சொல்வார்கள். கொஞ்ச காலத்துக்கு ஊரில் யாருக்குப் பேய் பிடித் தாலும் “துபாய்க்காரன் பொண்டாட்டி புடிச்சிக்கிட்டா” என்றுதான் சொல்வார்கள். “நான் செத்தாலும் என் பேரு சாவாது போலருக்கே?” ஓங்கித் தரையில் அடித்தாள். பிறகு முகத்தில் அடித்துக்கொண்டாள். அப் போது இரண்டாவது மகள் திடீரென்று எழுந்து உட்கார்ந்துகொண்டு அழுதாள். “ஒண்ணுக்கு வருதும்மா.” மகளை அழைத்துக்கொண்டுபோய் ஒண்ணுக்கு விடவைத்து, திரும்ப அழைத்துவந்து படுக்கவைத்தாள். பத்மா வதியினுடைய முகத்தைப் பார்த்த கயல்விழி கேட்டாள் “என்னம்மா?”

“ஒண்ணுமில்ல படு. தூங்கு” மகளை மடியில் படுக்கவைத்து முதுகில் தட்டிக்கொடுத்துத் தூங்கவைத்தாள். அப்போதுதான் அவளுக்குத் தெரிந் தது இதுவரை பிள்ளைகளைப் பற்றி யோசிக்கவே இல்லை என்பது. கயல்விழியின் கன்னத்தில் தன்னுடைய முகத்தை வைத்து அழுத்தினாள். அப்படிச் செய்தது பெரிய ஆறுதலாக இருந்தது. “மானம் பெருசா? மூணு புள்ளை உசுரு பெருசா?” தன்னையே கேட்டுக்கொண்டாள். “நான் செத்திட்டா மூணு புள்ளையும் தெருவுல நின்னுடுமே. நான் செத்திடுவன். மண்ணாப் போயிடுவன். மூணு புள்ளையும் எப்பிடி உசுரோட இருக்கும், எப்பிடி வளரும்?” வாய்விட்டுக் கேட்டாள். மகளுடைய முகம், கை, கால்கள் என்று ஒவ்வொரு பகுதியாகத் தடவிக்கொடுத்தாள். எது நடந்தாலும் சாகக் கூடாது. அப்படி நினைத்து ஒரு நொடிதான் கழிந்திருக்கும். மறு நொடியே வாசலில் நாய் குரைப்பது மாதிரி இருந்தது. கார் வந்த சத்தம் மாதிரி கேட்டது. பத்மாவதிக்கு உயிர் நின்றுவிட்ட மாதிரி இருந்தது.

நாக்கு வறண்டது, உடல் வியர்த்தது. உடல் நடுங்கியது. மதி வந்துவிட்டான் என்று நினைத்தாள். கயல்விழியை மடியிலிருந்து நகர்த்திப் பாயில் போட்டாள். ஒவ்வொரு அடியாக வைத்துக் கதவிடம் வந்தாள். கதவைத் தட்டுகிற சத்தம் கேட்கிறதா என்று கேட்டாள். ஒரு நொடி, இரண்டு நொடி, ஒரு நிமிசம், இரண்டு நிமிசம் கழிந்தது. கதவு தட்டப்படவில்லை. சத்தம் கேட்கவில்லை. நாய் குரைக்கவில்லை. கார் நிற்கிற சத்தமோ, கார் புறப்பட்டுப் போகிற சத்தமோ கேட்கவில்லை. கதவைத் திறக்க முயன்றாள். கை நடுங்கியது. தாழ்ப்பாளைப் பிடித்துக்கொண்டு அப் படியே நின்றாள். பிறகு கதவில் தலையைச் சாய்த்துக்கொண்டாள். சிறிதுநேரம்தான் நிற்க முடிந்தது. கால்கள் துவண்டதால் திரும்பிவந்து மகளுக்குப் பக்கத்தில் படுத்தாள். மகளையும், மகனையும் தடவிக்கொடுத்தாள். பெரிய மகள் கலாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. கலா, தாத்தா பாட்டியோடு மாடியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவளை எழுப்பிக்கொண்டுவந்து இங்கே படுக்க வைக்கலாமா? இவள் கூப்பிட்டாலும் அவள் வருவாள் என்று சொல்ல முடியாது.

கலா எப்போதும் தாத்தா பாட்டியோடுதான் இருப்பாள். பத்மாவதி யோடு ஒட்டவே மாட்டாள். துளசிமணிக்கும், அருணாச்சலத்துக்கும் கலா என்றால் உயிர். பேச்சுக்குப் பேச்சு ‘கலா கலா’ என்று நாள் முழுவதும் கூப்பிட்டுக்கொண்டேயிருப்பார்கள். கலாவினுடைய நடை, பாவனை, பேச்சு, சிரிப்பு எல்லாம் மதி செய்வது மாதிரியே இருக்கும். இரண்டாவது பையன். அவன் மட்டும்தான் பத்மாவதி மாதிரி. மூன்றாவது பிள்ளையான கயல்விழியும் மதி மாதிரிதான் இருப்பாள். பெண் பிள்ளைகள் இரண்டும் எப்படி அப்பா மாதிரி இருக்கிறது, பையன் மட்டும் எப்படி அம்மா மாதிரி இருக்கிறான் என்று ஊரில் கேட்பார்கள். கிண்டல் செய் வார்கள். பிள்ளைகளைப் பற்றி நினைக்கநினைக்க எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதுதான் அவளுக்குக் கூடுதல் குழப்பம் உண்டாயிற்று. மனம் கசந்துபோய்ச் சொன்னாள் “மதியா என் வவுத்திலிருந்து பொறந்தான்? எம் புள்ளைங்கதான் பொறந்துச்சிங்க? தூங்கி எழுந்திரிச்சதும் ‘அம்மா’ன்னு என்னதானத் தேடுங்க. மூணு புள்ளையும், மூணு முத்தாட்டம் இருக்கும்போது நான் எதுக்குச் சாவணும்?” எழுந்து உட்கார்ந்தாள். மகளையும், மகனையும் பார்த்தாள். உடலிலிருந்த நடுக்கமும் பதட்டமும் குறைந்தது. மதி வந்து என்ன செய்கிறான் என்று பார்க்கலாம், அதன் பிறகு முடிவு செய்துகொள்ளலாம் என்று நினைத்ததுமே மனதுக்குப் புதுத் தெம்பு வந்த மாதிரி இருந்தது. எழுந்து சென்று தண்ணீர் குடித் தாள். தலைமுடியைக் கட்டினாள். சீலையைச் சரிசெய்துகொண்டாள். ஜாக்கெட் பட்டன்களையும் போட்டாள். எல்லாம் சிறிது நேரம்தான். பத்மாவதியினுடைய மனம் மீண்டும் குழப்பத்துக்குள் விழுந்தது. வீடும், வீட்டிலிருந்த பொருட்களும் அவளைப் பயமுறுத்தின. கொள்ளிச்சட்டி மாதிரி அவளுடைய மனம் பயத்தில் எரிய ஆரம்பித்தது.

மதி பகலில் போன் பேசியிருந்தால் இவ்வளவு கஷ்டம் இருந்திருக் காது. பொருட்களைப் பார்க்க, ஆட்களைப் பார்க்க, பேச என்று சிறிதுநேரமாவது மனதை மாற்ற முடியும். இரவு, அதுவும் விடியவிடிய மழை பெய்துகொண்டிருக்கிற நேரத்தில் யாரிடம் போய்ப் பேச முடியும், யாரைப் பார்க்க முடியும்? இரவும், மழையும், இடியும், மின்னலும் நல்லதுக்கா கெட்டதுக்கா என்று யோசித்ததுமே அவளுடைய கண்களி லிருந்து கண்ணீர் இறங்கியது. பிருந்தா வீட்டுக்குப் போய் அவளை அழைத்துக்கொண்டு வரலாமா என்று யோசித்தாள். அது நல்ல யோசனை யாக இருந்தது. பிருந்தாவைப் பார்த்ததும் மதியின் கோபம் கொஞ்சம் குறையலாம். “எனக்காக வுடு” என்று பிருந்தா கேட்கலாம். அவளுக்காக அடிப்பதை மதி குறைக்கலாம். பிருந்தாவை அழைத்துவந்தால் பிரச்சினை குறையலாம் என்ற எண்ணம் வந்ததும் வேகமாக எழுந்து சென்று கதவைத் திறந்தாள். மழை கடுமையாகப் பெய்துகொண்டிருந்துது. போகலாமா வேண்டாமா என்று யோசித்தாள். மறுகணமே அவளை என்ன சொல்லி இந்நேரத்தில் கூப்பிடுவது என்ற கேள்வி எழுந்தது. அவளிடம் எல்லா உண்மையையும் சொல்ல நேரிட்டால், முழு விசயமும் தெரிந்தால் தன் னைப் பற்றி என்ன நினைப்பாள் என்ற கவலை வந்ததும் கதவைச் சாத்தி விட்டு வீட்டுக்குள் வந்தாள். ரகசியத்தை நானே சொல்வதா? “நானே மனசு தாங்காம எங் கொறய சொல்லி அழுவலாமின்னா அதுக்குக்கூட ஆளில்லியே. யாரிட்ட சாபமோ” சொல்லும்போதே அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் இறங்கியது. “வீட்டுல ஆளு இருக்கு. ஊர்ப் பூராவும் சனமா இருக்கு. எனக்கு மட்டும் பேசுறதுக்கு ஒரு ஆளு இல்லெ. நான் யார்கிட்டயும் பேசக் கூடாதுன்னுதான் மழயும், இடியும், காத்துமா இருக்கு. எனக்கு ஒரு சாமியும் தொணயில்லாமப் போயிடிச்சி.” சிறிது நேரம் கழித்து “இதெப் போயி நான் எந்தச் சாமிக்கிட்ட சொல்லுவன்?” என்று கேட்டாள். மனதிலுள்ள ஆத்திரத்தை எல்லாம் கத்தித் தீர்க்க வேண்டும். மனத் துயரம் கரையும்படி வாய்விட்டு அழுதுதீர்க்க வேண்டும். மனக்குறைகளை யாரிடமாவது கொட்டித்தீர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். எதற்கும் வழியில்லை. எல்லா வழி களும் மூடிக்கிடந்தன.

மதி வீட்டுக்குள் வந்த வேகத்திலேயே அடிப்பான். அப்பா ஏன் அம்மாவை அடிக்கிறார் என்ற விசயம் மூன்று பிள்ளைகளுக்கும் தெரிந்துவிடும். கலாவுக்குப் பதின்மூன்று வயது. மகனுக்கு பன்னிரெண்டு. கயல் விழிக்குப் பத்து வயது. ‘நம்ப அம்மா கெட்டவளான்னு நெனச்சா நான் என்னா செய்வன்? தெனம் அதுங்க முகத்த என்னால பாக்க முடியுமா?’ யோசித்த மறுநொடியே பத்மாவதியினுடைய உடம்பு ஜில்லிட்டுக் குளிர்ந்துவிட்டது, பிள்ளைகள் போகிற, வருகிற இடமெல்லாம் சொல்லிக்காட்டுவார்கள், குத்திக்காட்டுவார்கள். வளரவளர மூன்று பிள்ளை களுடைய மனதிலும் எவ்வளவு வெறுப்பு வரும்? மற்றவர்கள் சொல்லிக் காட்டும்போது எப்படி அவமானத்தில் தலைகுனிந்து வெட்கிப்போய் நிற்பார்கள்? அப்போது “நீ எல்லாம் ஒரு அம்மாவா? நீயெல்லாம் செத்தா என்ன?” என்று கேட்டால் என்ன செய்வது? கேட்பார்கள்தான். கேட்கக்கூடிய கேள்விகள்தான். எல்லாவற்றுக்கும் மேல் மதியினுடைய முகத்தை எப்படிப் பார்ப்பது? விசயம் வெளியே தெரியாதவரை இருந்தது பிரச்சினையில்லை. தெரிந்த பிறகு எப்படிப் பார்ப்பது? தினம்தினம், பத்மாவதியைப் பார்க்கிற ஒவ்வொரு நிமிசமும் அவனுடைய மனம் என்ன நினைக்கும்? “அந்தப் பாவத்த நான் எங்க போயி கழுவுவன்?” முகத்தில் அடித்துக்கொண்டாள்.

கலாவும், கயல்விழியும் நன்றாகப் படிப்பார்கள். மற்றவர்களுடன் எளிதில் பேசிப் பழகுவார்கள். தங்களுடைய வேலைகளைத் தாங்களாகவே செய்துகொள்வார்கள். பையன்தான் பாவம். சரியாகப் படிக்கவும் மாட்டான். மற்றவர்ளுடன் சிரித்துப் பேசிப் பழகவும் மாட்டான். அவள் பின்னாலேயே சுற்றிச்சுற்றி வருவான். பத்மாவதியை விட்டு ஒரு நிமிடம்கூடப் பிரிந்திருக்க மாட்டான். “நீ கொடுத்த ஆறு பவுனு நகெயும் ஒன்ன வேல செஞ்சதுக்குச் சரியாப்போச்சி” என்று வாய் கூசாமல் சொன்னபோது அந்த இடத்தில் துளசிமணி, அருணாச்சலம், பிருந்தா மூன்று பேருமே இருந்தார்கள். கண்ணன் சொன்ன வார்த்தையைக் கேட்டார்கள். மூன்று பேருமே “நகெய எதுக்காக அவங்கிட்ட கொடுத்த? எதனால அவன் இந்த வாத்தய சொன்னான்?” என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. முகத்தைக் கோணிக்கொண்டு போகவில்லை. நான்கு நாட்களாகியும் அதுபற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. “நக போனா போவுது. நீ வீட்டுக்குப் போ” என்ற வார்த்தையைத் தவிர வேறு வார்த்தை பேசவில்லை என்பதை நினைத்துப்பார்த்தபோதுதான் நிச்சயமாக துளசிமணியோ, அருணாச்சலமோ, பிருந்தாவோ மதியிடம் சொல்லியிருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் வந்தது. வேறு யார் சொல்லியிருப்பார்கள்? சட்டென்று மதி போன் செய்தது உண்மையா, தானாகவே அப்படி நினைத்துக் கொண்டோமோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. மதி போனில் பேசியது நிஜமா? பைத்தியம் பிடித்த மாதிரி அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டாள். எல்லாம் மனபேதலிப்பா?

“நான் என்னா கொற வச்சன்? எதுக்காக அவன்கூட போன? என் னம் போயிடிச்சி. இனிமே நான் எப்பிடி இந்த ஊர்ல இருப்பன்?” என்று மதி கேட்டால் என்ன செய்வது? என்ன சொல்ல முடியும்? “அறி யாப் புள்ளையா தெரியாம செஞ்சிட்டன்னு சொல்ல? மூணு புள்ளை பெத்தவதான நானு? அந்த முகத்த என்னால பாக்க முடியுமா? உசுரு போனாலும் முடியாது.” மெல்லச் சொன்னாள். சாவது என்று அவளால் எளிதில் முடிவெடுக்க முடிந்தது. ஆனால் மதியை எப்படிப் பார்ப்பது என் பதில்தான் அவளுக்கு முடிவு எடுக்க முடியவில்லை. மானம் பெருசா, உயிர் பெருசா? “மீனுக்கு வாழ்க்க தண்ணியில. மனுசனுக்குக் காத்தில. எனக்கு மண்ணுக்குள்ளார.” அடுத்த விநாடியே பித்துப் பிடித்த மாதிரி எழுந்து உட்கார்ந்தாள். கையில் போட்டிருந்த வளையல்களைக் கழற்றினாள். தோடு, மூக்குத்தி என்று கழற்றினாள். கடைசியாகத் தாலியையும் கழற்றினாள். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய் பீரோவில் வைத்தாள். செல்போனில் மணியைப் பார்த்தாள். நான்கு. சென்னை-சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் எப்போது நல்லூருக்கு வரும் என்பது அவளுக்குத் தெரியும். ரயில் வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. ஆனால் மதி எந்த நிமிடமும் வீட்டுக்கு வரலாம். அவன் வரும்போது வீட்டில் இருக்கக் கூடாது. அவனுடைய முகத்தைப் பார்க்க முடியாது. பிள்ளைகளுடைய முகத்தைப் பார்க்க நினைத்தாள். பக்கத்திலும் போனாள். ஆனால் பார்க்கவில்லை. கலாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. மாடிக்குப் போய்க் கதவைத் தட்ட வேண்டும். மாமியாரை எழுப்ப வேண்டும். மாமியாருக்குத் தெரிந்துவிடும். அதைவிடவும் கலாவின் முகத்தைப் பார்த்த பிறகு மனம் மாறிவிடும். மதி வந்து காரிலிருந்து இறங்கு வதற்குள் வெளியே போய்விட வேண்டும். ஒரே தீர்மானம். வெளியே கத்திக்கொண்டிருந்த தவளைகளின் சத்தமும் “சீக்கிரம் வா” என்று அழைப்பது போலிருந்தது. மானம் பெருசா, உயிர் பெருசா? என்ற கேள்வி ஒரு நொடிகூட இடைவெளி இல்லாமல் அவளுக்குள் எழுந்து கொண்டேயிருந்தது. அப்போது கரண்ட் நின்றுவிட்டது. கரண்ட் நின்றது அபசகுனமாக நினைத்தாள். “அவன் வரப்ப நான் பொணமா இருக்கணும். மானம் கெட்டு சாவணுமா? நான் அந்த அளவுக்கா வெக்கங்கெட்டவ?”

பத்மாவதிக்கு திடீரென்று மதி வருவானா? மாட்டானா? மதி நிஜமாகவே போன் செய்தானா? அவன்தான் பேசினானா? மனக்குழப்பத்தில் நானாகவே அப்படி நினைத்துக்கொண்டேனா? என்று தன்னையே கேட்டுக் கொண்டாள். ஆமாம், என்று அவளுடைய மனது சொல்லியது. மதிக்கு விசயம் தெரியாதபோது, அவன் போன் போட்டுப் பேசாதபோது; அவன் ஊருக்கு வராதபோது நானாகவே போய் ஏன் சாக வேண்டும் என்ற கேள்வி வந்ததும் வீம்பாகச் சொன்னாள்: “தப்பு செஞ்சவ செத்துப் போறதுதான் நல்லது. மதிக்கு விஷயம் தெரியறதுக்கு முன்னாடியே செத்துப்போறதுதான் நல்லது. அசிங்கப்படாம சாவறதுதான் நல்லது. கக் கூஸ்க்குப் போவயில ரயில்ல அடிப்பட்டு செத்திட்டான்னு பேராயிடும்.”

பத்மாவதி கதவைத் திறந்தாள். வாசலுக்கு வந்தாள். மழை உதவி செய்வது மாதிரி ‘பொட்-பொட்’ என்று ஒவ்வொரு துளியாக விழுந்து கொண்டிருந்தது. இருநூறு முந்நூறு அடி தூரம் வருவதற்குள்ளாக நனைந்து குளிரில் உடம்பு நடுங்க ஆரம்பித்துவிட்டது. தெருவைத் தாண்டும்வரை யாராவது தன்னைப் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. தெருவைத் தாண்டிய பிறகு புதர்க்காடு. பாம்பு, பல்லி, முள், தேள் இருக்கக்கூடிய இடம்தான். ஆனால் பத்மாவதியினுடைய மனதில் எந்த அச்சமுமில்லை. இருட்டில், புதர்க்காட்டில் ரயில் ரோட்டுக்குச் செல்கிற பாதை கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் மனதுக்குத் தெரிந்தது. மானத்தைவிட உயிர் பெருசா என்கிற கேள்வி தலைபோகிற அவசர வேலை மாதிரி அவளை ரயில் ரோட்டுக்கு வேகமாக அழைத்துக்கொண்டு வந்தது.

தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தால் சரிவராது என்று நினைத்த பத்மாவதி இரண்டு தண்டவாளங்களுக்கிடையே இருந்த இடத்தில் உட் கார்ந்தாள். வீட்டில் சத்தம்போட்டு அழ முடியாமல் அடக்கிவைத்திருந்த அழுகை பீறிட்டு வந்தது.

“ஊரும் ஒறங்குது ஒலகமும் ஒறங்குது

என் மனசு மட்டும் ஒறங்கல்ல

மானும் ஒறங்குது மயிலும் ஒறங்குது

என் கண்ணு மட்டும் ஒறங்கல்ல

காடும் ஒறங்குது மலயும் ஒறங்குது

என் கவல மட்டும் ஒறங்கல்ல

காத்தும் பகயில்ல காடும் பகயில்ல

மலயும் பகயில்ல வானமும் பகயில்ல

கூட வாழுற சனங்க மட்டும் எனக்குப் பகயாச்சி

ஆடும் ஒறவாச்சி மாடும் ஒறவாச்சி

காடும் ஒறவாச்சி கழனியும் ஒறவாச்சி

கூட வாழுற சனங்க மட்டும் எனக்கு பகயாச்சி

என் ஒடம்பே எனக்குப் பகயாச்சி

என் மனசு பூராவும் நெருஞ்சி முள்ளாச்சி

ஒலகம் பூராவும் எனக்கு இருட்டாச்சி.”

பத்மாவதி அழுது முடிப்பதற்கும் ரயில் வருவதற்கும் சரியாக இருந்தது. தண்டவாளத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள் என்பது சென்னை எக்ஸ்பிரஸுக்கு தெரியாது. சரியான நேரத்துக்கு நல்லூரை எந்தத் தடையும், தடங்கலும் இல்லாமல் ரயில் கடந்து போனது. ஒவ்வொரு நாளும் செல்வதுபோல.

* * * * *

இமயம்