இமயம்
இலக்கியக் களஞ்சியம்

தேடல்எழுத்துலகைத் தேடுங்கள்.

நூல்கள் · சிறுகதைகள் · கட்டுரைகள் · நேர்காணல்கள்

திருட்டுப்போன பொண்ணு
இமயம் · சிறுகதைகள்

திருட்டுப்போன பொண்ணு

வாசிப்பு முறை
கதைக்குள் நுழைய
இமயம்

திருட்டுப்போன பொண்ணு

வாசிப்பு
19

“திருட்டுப்போன பொண்ணு வீடு எங்க இருக்கு?” என்று வீட்டின் முன் தலையைச் சீவிக்கொண்டிருந்த பெண்ணிடம் சேதுபதி கேட்டான்.

“பொண்ணு ஊட்டயா கேக்குறீங்க?”

“இல்லீங்க. திருட்டுப்போன பொண்ணுன்னு ஒருத்தங்க இருக்காங்க ளாமே, அவுங்க வீட்டெக் கேட்டன்.”

“அது பேருதான் பொண்ணு.”

“நீங்க ஆள மாத்தி சொல்றீங்கன்னு நெனக்கிறன்.”

லேசாகச் சிரித்துக்கொண்டே அந்தப் பெண் சொன்னாள். “நீங்க சொல்ற

ஆளும் நான் சொல்ற ஆளும் ஒரே ஆளுதான். அது பேரு பொண்ணுதான். ஊருல அதெ திருட்டுப்போன பொண்ணுன்னும் சொல்வாங்க.” மீண்டும் அந்தப் பெண் சிரித்தாள்.

“வீடு எங்க இருக்கு?” டேவிட் கேட்டான்.

“தெருக் கடசியில ஒரு ஓட்டு ஊடு தெரியுதில்லெ. அதுக்குப் பக்கத்திலெ ஒரு கூர ஊடு இருக்கு பாருங்க, அதான்.” அந்தப் பெண் கிழக்குப் பக்கமாகக் கையைக் காட்டினாள்.

“சரிங்க” என்று சொல்லிவிட்டு டேவிட்டும் சேதுபதியும் திரும்பும் போது அந்தப் பெண் “வெள்ளக்கார ஆளுயெல்லாம் வந்திருக்கே என்னா விசியம்?” என்று கேட்டாள்.

“சும்மா ஊரப் பாக்கத்தான்.”

“இந்த மொட்டயான மலக்காட்டுலயும், கட்டாந்தரயிலயும் என்னா இருக்குன்னு பாக்க வந்திருக்காரு நாடு வுட்டு நாடு?” என்று கிண்டலாகக் கேட்டாள்.

“சும்மாதான்.”

“போட்டோ கீட்டோ எடுக்கப்போறாங்களா?”

“அதெல்லாமில்லெ. அவுங்க இப்ப வீட்டுல இருப்பாங்களா?”

“ஊட்டுலதான் இருக்கு. இப்பத்தான் தண்ணி எடுத்துக்கிட்டுப் போச்சி”

என்று சொல்லிவிட்டு, சீப்பிலிருந்த முடியைக் கொத்தாகப் பிடுங்கிச் சுருட்டித் தரையில் விட்டெறிந்தாள்.

“சரிங்க” என்று சொல்லிவிட்டு சேதுபதியும் டேவிட்டும் நடக்க ஆரம் பித்தனர்.

இருவருடைய பார்வையும் தெருவின் இரண்டு பக்கமும் இருந்த வீடுகளின் அமைப்பை அலசின.

“வீட்டுல யாருங்க?” என்று வாசல்முன் நின்றுகொண்டு சேதுபதி கேட்டான்.

சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஒரு பையன் வெளியே வந்து “என்னா வேணும்?” என்று கேட்டான்.

“திருட்டுப்போன பொண்ணு வீடு இதுதான?” என்று சேதுபதி கேட்டான்.

“ஆமாம். பொண்ணெப் பாக்கணுமா?” என்று அந்தப் பையன் கேட்டான். டேவிட்டும் சேதுபதியும் ஒரே நேரத்தில் “ஆமாம்” என்பது மாதிரி தலையை ஆட்டினர்.

“யே பொண்ணு” என்று அந்தப் பையன் வீட்டைப் பார்த்துக் கத்தினான்.

“என்னடா பயல, பொண்டாட்டியக் கூப்புடுற மாரி கூப்புடுற?” என்று கேட்டுக்கொண்டே வயதான பெண் ஒருத்தி வெளியே வந்தாள்.

“வா, வந்து ஒன்னெப் பாக்குறதுக்கு வெளிநாட்டுக்காரங்க வந்திருக் கிறதப் பாரு” என்று சொல்லி அந்தப் பையன் சிரித்தான்.

“யாரு?” என்று பொண்ணு கேட்டாள்.

“நான் இந்தப் பக்கம்தான். இவுரு அமெரிக்கா. ஒங்க பேரப் பத்தி இவுரு கிட்டெ சொன்னன். ஒடனே ஒங்களப் பாக்கணுமின்னுட்டாரு. அதான் வந்தம்?” என்று சேதுபதி சொன்னான்.

“எங்கிட்டெ என்னா இருக்கு பாக்குறதுக்கு, அதுக்குன்னு ஆளக் கூட்டியாந்துட்டெ” என்று சிரித்துகொண்டே பொண்ணு கேட்டாள்.

“இவுரு நம்ப நாட்டோட பேருகளப் பத்தி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காரு, ஒங்களப் பாக்கணுமின்னு சொன்னாரு. அதான் கூட்டியாந்தன்.”

“எங்கிட்டெ என்னா இருக்கு ஆராய்ச்சி பண்றதுக்கு? நானு என்னெ குமரிப் புள்ளெயா?”

“யே கிழட்டு மூதி. மெனக்கிட்டு பாக்க வந்தவங்கக்கிட்டெ அது இதுன்னு பேசிக்கிட்டு. ஊட்டுக்குள்ளார அழச்சிக்கிட்டுப் போயி பேசுவியா?” என்று அந்தப் பையன் சத்தமாகக் கேட்டான்.

“எல்லாம் எனக்குத் தெரியும். நீ போ, ஒன் மணியாரு வேலயப் பாத்திட்டு” என்று சொல்லி, பொண்ணு பையனை முறைத்தாள். அவள் முறைத் ததைப் பொருட்படுத்தாமல் “சார், நீங்க உள்ளெ போங்க” என்று சொன்னான். பிறகு பொண்ணுவிடம் “போ. ஒனக்கு யோகம்தான். வெளி நாட்டுக்காரங்க எல்லாம் ஒன்னெப் பாக்க வராங்க பாரு” என்றான்.

“எல்லாம் பாத்துக்கிறன். நீ போடா. இல்லன்னா ஒன் கிளியப் புடிச்சி அம்மீயில வச்சி அரச்சிப்புடுவன்” என்று சொல்லிச் சிரித்தாள்.

“கிழடிக்கு வாயப் பாரு” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே அந்தப் பையன் நடக்க ஆரம்பித்தான். அதற்குள் டேவிட்டைப் பார்ப்பதற்கு ஐந் தாறு பிள்ளைகள் வந்துவிட்டார்கள்.

“ஓடுங்கடா. இங்க என்னெ படமா காட்டுறாங்க. வேடிக்க பாக்குறதுக்கு வந்துட்டீங்க? அவுரும் நம்பளப் போல ஆளுதான்” என்று சொல்லிப் பிள்ளைகளைத் துரத்தினாள். பிறகு “உள்ளார வந்து குந்துங்க” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள்.

“எம் மனசுதான் வெம்பரப்பாப் போயிடிச்சே. அதுல என்னா இருக் கும்ன்னு கேக்க வந்தீங்க?”

“ஒங்கப் பேரப் பத்திக் கேள்விபட்டன். அதனாலதான் இவுரக் கூப்புட்டுக் கிட்டு வந்தன். பொண்ணுன்னு சொன்னாங்க.” தயக்கத்தோடு கேட்டான் சேதுபதி.

“பொண்ணா இருந்தாத்தான் பாப்பீங்களா? கிழடியா இருந்தா பாக்க மாட்டீங்களா? பேருதான் பொண்ணு. கிழடிதான்.”

“சரிதான்” ஆர்வமில்லாமல் சொன்னான் சேதுபதி. டேவிட்டின் முகமே மாறிவிட்டது.

“இவுருக்கு நாம்ப பேசுறது புரியுமா?”

“நல்லாப் புரியும். நாலு வருசமா இங்கதான் இருக்காரு. ஊர் ஊராப் போயி வயசானவங்க பேரயெல்லாம் எழுதிவச்சியிருக்காரு. அவுங்க பேசுறத டேப்புல புடிச்சி வச்சியிருக்காரு. கேக்குறீங்களா?” என்று சொல்லி ஒரு கை அகலமுள்ள டேப்ரிக்காடரை எடுத்து வெளியே வைத்தான்.

“அதெல்லாம் போடாதீங்க. கும்பக் கூடிப்புடும்.”

டேப்ரிக்காடரை ஆன் செய்துவிட்டு “இவரோட ஆராய்ச்சியே நம்ப ஊருல உள்ளெ பேருகளப் பத்தித்தான். மதுர பக்கம் ஒரு அம்மாவுக்கு ‘வசந்த மாளிக’ன்னு பேரு. வசந்த மாளிக சினிமாவப் பாத்துக்கிட்டிருக்கும் போது சினிமா கொட்டாயிலியே புள்ளெ பொறந்ததால அந்தப் பேரு. அதே மாதிரி காஞ்சிபுரம் பக்கம் ஒரு ஆளுக்குப் பேரு மீனவன். ‘மீனவ நண்பன்’ங்கிற சினிமா பாத்துக்கிட்டிருக்கும்போது பொறந்ததால அந்தப் பேரு. மணப்பாற பக்கத்தில ஒரு பொண்ணுக்கு பேரு ‘வண்டி’. பிரசவத்துக்காக வண்டியில போயிக்கிட்டு இருந்திருக்காங்க. வழியில வண்டியிலியே குழந்த பொறந்திடுச்சாம். அதான் அந்தப் பேரு. இன்னம் சொல்லப்போனா ஒரு ஆளுக்கு ‘கடமொல’ன்னு பேரு இருக்கு. அப்பறம் இன்னொரு ஆளுக்கு ‘உருட்டுன புளி’ன்னு பேரு.” சேதுபதி சிரித்தான்.

“இப்பிடியொரு பேரா? அதிசயம்தான்” என்று சொன்ன பொண்ணுக்கு என்ன தோன்றியதோ “அந்தக் காலத்தில பெத்த புள்ளெக்கி நல்ல பேரா வைக்கணும்ங்கிறதுகூட தெரியாமத்தான் இருந்திருக்குதுவோ.”

“அந்தக் காலத்திலெ குலசாமிப் பேரு, குடிசாமிப் பேருன்னு வச்சாங்க. அப்பறம் அரசியல் கட்சித் தலைவருங்க பேர வச்சாங்க. இப்ப சினிமா நடிகர், நடிகயோட பேர வைக்கிறாங்க. எல்லாம் வடநாட்டுப் பேரா இருக்கு.

இதத்தான் இவுரு ஆராய்ச்சிப் பண்றாரு.”

“நல்ல ஆராய்ச்சிதான்.” பொண்ணு சிரித்தாள்.

“எந்தப் பேரா இருந்தாலும் அது சொந்தப் பேரா இருக்கணும். பட்டப் பேரா இருக்கக் கூடாது. பண்ணிக்காரன், தொந்தாளி, சக்கர, மரக்காயன், மாங்கான், குழம்புச்சட்டி, அடியாளுன்னு இருந்தாலும் சொந்தப் பேரா இருக்கான்னுதான் இவுரு பாப்பாரு. ஒவ்வொரு பேருக்குப் பின்னாடியும் ஒரு கதெ இருக்குல்ல. அந்தக் கதெதான் முக்கியம்.”

“யாருக்கு எப்பிடிப் பேரு இருந்தாலும் கல்யாணம் நடந்திருக்கும்ல்ல.”

“ஆமாம்.”

“அப்பறமென்ன? கழுதன்னு இருந்தாலும் குதிரன்னு இருந்தாலும் என்னா கெட்டுப்போச்சி?”

பொண்ணு என்ன சொல்கிறாள் என்று தெரியாமல் அவர்கள் பேசாமல் உட்கார்ந்திருந்தனர்.

“ஒங்கக் கூட யாரு இருக்காங்க?” சேதுபதி மறைமுகமாகப் பேச்சை ஆரம்பித்தான்.

பொண்ணு சிரித்தாள். சிரிப்பினூடே சொன்னாள். “நான் பட்டெ தும்ப

துயரம்தான் எங் கூட இருக்கு. சனங்கன்னு ஒருவருமில்லெ.”

“வாட்?”என்றான் டேவிட். அப்போது முன்பு பொண்ணுவின் வீட்டுக்கு வழிகாட்டிய பெண் உள்ளே வந்தாள்.

“என்னா ஆயா, ஒன்னெப் பாக்குறதுக்கு வெளிநாட்டு ஆளுவோ எல் லாம் வந்திருக்கு?” என்று கேட்டுக் கிண்டலாகச் சிரித்தாள்.

“போடி போக்கத்தவள, இந்த வயசில என்னெப் பாக்குறதுக்கு வெளி நாட்டுக்காரங்கயெல்லாம் வராங்க. நீயும்தான் எளந்தாரியா நிக்குற. உள்ளுர்ப் பய ஒருத்தங்கூட ஒன்னெத் திரும்பிப் பாக்க மாட்டன்ங்கிறான்.”

“ஒம் பேரு பொண்ணுன்னு சொன்னன். இவுங்க நம்ப மாட்டன்னுட்டாங்க” என்று சொல்லி அந்தப் பெண் சிரித்தாள்.

“எம் பேருதான் ஊரு அறிஞ்சி கெடக்கே. போ. போயி எவனயாவது புடிச்சிவச்சிக்க. இல்லன்னா ஒம் பூட்டுக்குத் தொறக்கோலு கெடைக்காது”

என்று சொல்லிச் சிரித்தாள் பொண்ணு.

“கிழட்டு முண்டக்கிப் பேச்சப் பாரேன். ஊட்டுக்கு வருவ இல்லெ. அப்ப வச்சிக்கிறன் ஒன்னெ” என்று சொன்னதோடு பொண்ணுவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டுப் போனாள் அந்தப் பெண்.

“போடி போ. பொண்ணு புழுக்கத்தான். போன எடம் வழுக்கத்தான்” என்று சொல்லிச் சிரித்தாள் பொண்ணு.

“ஒங்க பேரு என்ன?”

“எதுக்கு கேக்குறீங்க?”

“பொண்ணுன்னு சொன்னாங்க. அப்பறம் திருட்டுப்போன பொண் ணுன்னு சொன்னாங்க. ஏழாம் பொண்ணுன்னும், கசம்பாயின்னும் சொன் னாங்க.”

“இப்ப வந்தாளே அந்த மினிக்கியா?”

“ம்.”

“அது இல்லெ எம் பேரு.”

“நாங்க வீட்டுக்கு வரும்போது இங்க இருந்த பையனும் அப்பிடித்தான்

சொன்னாரு?” என்று சீண்டுவது மாதிரி கேட்டான் சேதுபதி.

“அந்த நாயிவோ சொல்ற மாரிதான் என்னெ ஊருல கூப்புடுவாங்க.”

“பொண்ணுன்னா, இல்லெ, திருட்டுப்போன பொண்ணுன்னா?”

“ரெண்டு விதமாவும் சொல்லுவாங்க, கூப்புடுவாங்க.” கொஞ்சம் கடுப்புடன் சொன்னாள் பொண்ணு.

“ரியலி” என்றான் டேவிட்.

“எதனால அப்பிடிச் சொல்றாங்க?” துருவித்துருவிக் கேட்டான் சேதுபதி.

“அம்பது அறுவது வருசத்துக்கு முன்னால நடந்த கதெ அது.”

“கோவப்படாம அதெப் பத்தி சொல்லுங்க. இந்த மாரி பேர நான் கேள்விப்பட்டதே இல்லெ. நீங்க சொல்றது இவரோட ஆராய்ச்சிக்கு ஒதவும்.”

“ஆமாம்” என்றான் டேவிட். அதோடு புது செல்லையும் புது கேசட் டையும் போட்டு டேப்ரிக்கார்டரைக் கொஞ்சம் நகர்த்திப் பொண்ணுக்குப் பக்கத்தில் வைத்தான்.

“அய்யோ, அதயேங் கேக்குறீங்க? சொன்னா ஏழு ராத்திரி கதயாவும்.”

“பரவாயில்லெ, சொல்லுங்க. நாங்க கேக்குறம்.”

“என்னியப் பத்தி என்னாத்த சொல்றது? நாந்தான் செத்துப்போனவ

ளாச்சே.”

“எந்தக் கதெயா இருந்தாலும் நாங்க கேப்பம்” சிரித்துக்கொண்டே சொன்னான் சேதுபதி.

“நான் வயசுக்குவந்த எட்டாம் நாளு நடந்தது.” அடுத்து, பேசாமல் பொண்ணு உட்கார்ந்திருந்ததால் அவளிடமிருந்து வார்த்தையைப் பிடுங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு “அப்பிடியா?” என்று கேட்டான் சேதுபதி.

“நான் வயசுக்குவந்தது நெறஞ்ச வெள்ளிக்கிழம. வங்கோட. மந்தயில வௌயாடிக்கிட்டிருந்தன். உச்சி மத்தியான வெயிலு நேரம். வவுத்த சண்டி சண்டி இயித்துச்சி. கருங்கல்லத் தின்னுப்புட்டாப்ல வவுறு கனமா இருந்துச்சி. சரின்னு ஒரு வேப்ப மரத்துக் கீயப் போயி குந்துனன். செத்தெக்கெல்லாம் சித்தாட நனஞ்சிபோச்சி. என்னான்னு பாத்தா வெவகாரம் தெரிஞ்சது. ஒண்ணும் சொல்ல முடியல. ஊட்டுக்கு ஓடியாறன். எங்கம்மாளக் கண்ட தும் தேளு கடிச்சிட்டாப்ல அயிதன். விசியம் இப்பிடின்னு சொன்னதும் ‘இதுக்கு யாண்டி அயிவுற? ஊட்டுக்குத் தீட்டு ஆவாது. போயி ஊட்டுக்குப் பின்னால குந்து’ன்னு சொல்லிப்புட்டு, ஊடுஊடா போயி தாக்கலு சொல் லிச் சிரிக்கிறா. செத்த நாழிக்கெல்லாம் ஊரு பொம்பளயெல்லாம் என்னெ வேடிக்கபாக்க வந்துச்சிவோ, எனக்கு வெக்கமாப்போயி அயிவயா வந்துச்சி. வந்தவங்க எல்லாம் ‘இதுக்கு யாண்டி அயிவுறா? எம் மவனுக்குக் கட்டிக் கிறன். அயிவாத’ன்னு சொல்றாங்க, நான் வாயத் தொறக்கல. ரெண்டு பொம்பளய வச்சிக்கிட்டு எங்கம்மா மாவு இடிச்சா. எங்கண்ணன் ஓடிப் போயி எங்க மாமன அயிச்சாந்தாரு. வந்த வேகத்திலியே எங்க மாமன்

சோளத்தட்டய வச்சி ஊர் மந்தயில குச்சல் கட்டுனாரு.”

“ஊரு மந்தயிலியா?”

“ஆமாம்.”

“குமரிப்புள்ளெ குச்சலக் கட்டி முடிச்சதும் எங்க எனத்துப் பொம்பளங்க யெல்லாம் கூட்டமா சேந்து என்னெ அயிச்சிக்கிட்டுப் போயி குச்சல்ல குந்த வச்சிட்டு வந்தவங்களுக்கெல்லாம் மாவு கொடுத்தாங்க. மாவ தின்னுக் கிட்டே எல்லாரும் போயிட்டாங்க. நான் மட்டும் தனியா பரண்ல குந்தியிருந்தன்.”

“பரண்லயா?”

“ஆமாம். குமரிப்புள்ளெ குச்சல் கட்டும்போதே பரண் வச்சிக் கட்டு வாங்க. வயசுக்குவந்த குமரு ஏணியில ஏறி மேல இருந்துக்கணும். காவலுக்கு இருக்கிறவங்க கட்டில போட்டுக் கீய படுத்துக்குவாங்க.”

“எதுக்காக பரண் வச்சிக் கட்டுறாங்க?”

“ஊர சுத்தியும் மலக்காடா இருக்கிறதால ராத்திரியில நரி, காட்டுநாயி, பூரான், பூச்சின்னு பலதும் வரும். அதுக்குப் பயந்துகிட்டுத்தான்.”

“துணைக்கு யார் இருப்பாங்க?”

“ராத்திரியில மட்டும் எங்கண்ணனோ எங்கப்பாவோ வந்து படுத்துக்கு வாங்க.”

“பகல்ல தொணைக்கு?”

“தீட்டு வாசனக்கி காத்து கருப்பு, பேயி பிசாசு வருமின்னு பண்ணருவா, இரும்பு சீணுக்கருக்கியப் பொண்ணுக்கிட்டெ கொடுத்திடுவாங்க. அதான் தொண.”

“எத்தன நாளு குமரிபுள்ளெ குடிசயில இருக்கணும்?”

“பதினாறு, இல்லன்னா இருவத்தியொரு நாளு.”

“சாப்பாடெல்லாம்?”

“ஊட்டுலயிருந்து வரும். சொந்தக்காரங்கயெல்லாம் ஒறவு மொற

சோறுன்னு கோழி அடிச்சி எடுத்துக்கிட்டு வருவாங்க. ஆட்டுக்கறி, கோழிக் கறின்னு மூணு வேளயும் சோறும் வெஞ்சனமும் வரும். குடிசக்குள்ளியே ஒரு பள்ளம் வெட்டி வச்சியிருப்பாங்க. தின்னுப்புட்டு எலும்புவுள அதுக் குள்ளார போட்டுடணும். அப்ப திங்குற நெல் அரிசி சோறுதான் ஒரு பிள் ளயப் பொம்பளயாக்குறது.”

“நெல்லரிசி சோறுங்கிறது பெரிய விசியமா?”

“அப்பலாம் மாசத்துக்கு ஒரு நாளக்கி நெல்லரிசி சோறு கெடச்சாலே அதிசயம்தான். நெல்லரிசி சோத்துக்கு, ‘ஆச் சோறு’ன்னு சொல்லுவாங்க.”

“மழ காலமா இருந்தா?”

“எந்த மழயா இருந்தாலும், இடியா இருந்தாலும் குச்சல்ல வுட்டு வெளிய வரக் கூடாது. ஊருக்காரவங்களும் வந்து கூப்புட மாட்டாங்க. குடிசயத் தொடவும் மாட்டாங்க. பொழுது மசங்குன பெறவு யாரு கண்ணிலயும் படாமத்தான் மூத்தரம் வுடுறதுக்கு, பீ பேளுறதுக்குப் போவணும். சாமி வேட்டக்கிப் போற நேரத்துல குச்சல வுட்டு வெளிய வரக் கூடாது.”

“ஆச்சரியமா இருக்கு. ஒலக அதிசயமாவும் இருக்கு” என்று சேதுபதி சொன்னான்.

“ஆச்சரியமுமில்லெ. அதிசயமுமில்லெ. இன்னிய தேதிமுட்டும் எங்க எனத்தில இதான் வயக்கம். எங்க ஆறு அக்காளும் மந்தயில குமரிப்புள்ளெ குச்சல்லதான் குந்தியிருந்தாங்க. நானும் குந்தியிருந்தன்.”

“எங்க பக்கத்திலெ இந்த மாரி இல்லெ.”

“எங்க ராஜ கம்பளத்து தொட்டி நாயக்கரு எனத்திலெ இதான் வயக்கம். கோடி ரூவா கொடுத்தாலும் மாற மாட்டாங்க.”

“இன்னிக்குமா?”

“ஆமாம்.”

“ரியலி?” என்று வியப்பு மேலிட டேவிட் கேட்டான்.

“அப்பறம் என்னா நடந்துச்சி?”

“என்னெ ஊட்டுக்கு அழக்கிறதுக்கு நாலு நாளு இருக்கயில மேலத் தெருவுல முத்துபேச்சின்னு ஒருத்தி வயசுக்குவந்தா. அதுக்கு மறாம் நாளு சொல்லி வச்ச மாரி அரசாலன்னு ஒருத்திக்கு குமரிப்புள்ளெ குடிச கட்டு னாங்க. எனக்குத் தலக்கி ஊத்தி மோளமடிச்சி ஊட்டுக்கு அழக்கிறது இன்னம் ரெண்டு நாளுதான் இருந்துச்சி. அன்னிக்கித்தான் எங்க மாமன் எனக்குக் கரக்கட்டு துணி, கண்ணு மை டப்பி, மஞ்ச, சீப்பு, மொக பவுடரு, எண்ணெ, கண்ணாடின்னு சோடிப்புப் பொருளு எல்லாம் வாங்கியாந்து தந்தாரு. ராத்திரி சோறு எடுக்கறதுக்கு எங்கப்பா ஊட்டுக்குப் போன நேரத்திலதான் எனக்கு எல்லா வெனயும் நடந்துபோச்சி.” அதோடு நிறுத்திவிட்டாள் பொண்ணு. முகம் மாறிவிட்டது. முதன்முதலாக அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வெளிப்பட்டது. அவளாகப் பேசட்டும் என்று சேதுபதியும் டேவிட்டும் பேசாமல் உட்கார்ந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து அவளைப் பேசவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேதுபதி கேட்டான்:

“அப்பறம் என்னாச்சி?”

“கண் சிமிட்டுற நேரம்தான். அஞ்சாறு பேரு ஓடியாந்து வாயக் கட்டி, கைகாலக் கட்டி ஒரு சாக்குல போட்டு என்னெத் தூக்கிக்கிட்டுப் போயிட் டாங்க. ஆளு மாத்தி ஆளு ஆறு, ஏயி மையிலு தாண்டி தூக்கிக்கிட்டுப் போனாங்க. கத்தி அயிவ முடியல. கைய கால ஒதைக்க முடியல. கண்ணுல தண்ணீ மட்டும்தான் வருது. மூக்குல சாக்கு அருவி அருவித் தும்மலா வருது. தும்ம முடியல. ‘முக்காத, மொணவாத, மீறி முக்குனா சூரி கத்தியால வவுத்தில சொருவிப்புடுவன்’னு கத்துறான் ஒருத்தன். மின்நேரத்திலெ தலச்சொமயா தூக்குனவங்க விடியுறதுக்கு செத்த இருக்கயிலெ ஒரு மாட்டுக் கொட்டாயில மூட்டய எறக்கி வச்சாங்க. இன்னா ஊரு, இன்னா எட மின்னு நெகா தெரியில. நான் சாக்குக்குள்ளாரியே கண்ணுத் தண்ணீய வுட்டுக்கிட்டு குந்தியிருக்கிறன். வாய் வுட்டு அயிவ முடியல. உச்சி உரும நேரத்துக்குத்தான கட்ட அவுத்துவுட்டாங்க.”

ஆர்வம் மேலிட “அப்புறம்?” என்று சேதுபதி கேட்டான்.

“கட்டெ அவுத்து வுட்டாங்க. எம் மின்னால ஆறு ஆம்பள வீமசேனாட்டம் நிக்குறாங்க. அதுல ஒருத்தன் திடுமலா இருந்தான். அவந்தான் என் னெப் பாத்திட்டுத் தலயில அடிச்சிக்கிட்டு அயிது புரண்டான். ‘யே சண் டாளப் பாவிவுளே, யாருடா இது? பொண்ண மாத்தித் தூக்கிக்கிட்டு வந்துட்டீங்களே. குடி முழுவிப்போச்சே’ன்னு அயிவுறான். எனக்கு மேல அந்தாளு அயிவறான். ‘என்னெக் கொண்டுபோயி எங்க ஊட்டுல வுட்டுடுங்க’ன்னு சொல்லி நான் அயித அயிவயப் பாத்திட்டு அந்தத் திடுமலான ஆளு ‘நீ அயிவாம இருந்தாத்தான் நான் ஒன்னெக் கொண்டு போயி ஒங்க ஊட்டுல வுடுவன். அதுமுட்டும் சத்தம் காட்டக் கூடாது. மீறுனா ஒன்னெ இங்கியே வெட்டிப் பொதச்சிப்புடுவ’ன்னு சொன்னான். அதோட இடுப்புல இருந்த சூரி கத்திய உருவிக் காட்டுனான். அப்பியும் நான் அயிவய நிறுத்தல. துடியா துடிக்கன். அங்கஇங்க நவுர வுடாம ரெண்டாளக் காவ லுக்குக் குந்த வச்சான். என்னெக் கொண்டுபோயி எப்பிடி சேக்குறதின்னு பேசிக்கிட்டானுவ. ‘அந்த ஊருல என்னா நடக்குதின்னு தெரிஞ்சிக்கிட்டு வாடா’ன்னு ஒரு ஆள அனுப்புனாங்க. அவன் போயிட்டு வந்து ‘ஊரே திமிலோகப்படுது. பொண்ணெத் தேடிக்கிட்டு ஊர்ஊரா ஆளு போயிருக்கு. எனக் கூட்டம் கூட்டியிருக்காங்க. பொண்ணெ எடம் மாத்தி வைக்கிறது நல்லது. இருக்கிற நெலமயில கொண்டுபோயி வுட முடியாது’ன்னு சொன் னான். ‘நீங்க நாலு பேரும் இந்த எடத்த வுட்டு வெளிய போவக் கூடாது. காவலு இருங்க. சோறு தண்ணியெல்லாம் நானே கொண்டாரன். ரெண்டு மூணு நாளு கழிச்சி நெலவரத்துக்குத் தக்கன செஞ்சிக்கலாம். நம்ப ஊருக்கும் ஆளு வந்தாலும் வரும் ஜாக்கிரதி’ன்னு சொல்லிட்டு அந்தத் திடுமலான ஆளு போயிட்டான். எனக்கு மூணு வேளக்கும் சுடுசோறும் வெஞ் சனமும் வருது. நான் ஒண்ணத்தயும் தொடல. மூத்தரம் பீ பேளக்கூட அவனுவோ என்னெ வுடல. கூடவே செவுத்துக்கிட்டெ வந்து நின்னானுவ. அதோட ‘சத்தம் போட்டாலும் சரி, ஓடிப் போவ நெனச்சாலும் சரி. ஒன் உசுரு ஒனக்கு சொந்தமில்ல’ன்னு வாயிக்கு வாயி சொல்லிக்கிட்டே இருந் தானுவ.

“மூணு பவலு மூணு ராத்திரி குந்துன எடத்தெ வுட்டு நவுராம உசுரக் கையில புடிச்சிக்கிட்டுக் குந்தியிருந்தன். நாலாம் நாளு ராத்திரி வாயக் கட்டி, கைகாலக் கட்டி ஒரு சாக்குல என்னெத் தூக்கி வச்சிக் கட்டுனாங்க. நடுச்சாமத்துக்கு என்னெத் தூக்கிக்கிட்டு வந்து எங்க ஊரு இலுப்பத் தோப்புக் கிட்டெ மூட்டய எறக்கி வச்சிட்டு என்னெ அவுத்து வுட்டுட்டு ஓடிப் போயிட்டானுவ. நான் ராத்திரின்னும் பாக்கல, இருட்டுன்னும் பாக்கல. பேய் மாரி நின்னுக்கிட்டிருந்த பனங்காட்டயும் பாக்கல. ஏழு பன கழிஞ்சா ஊர்க்காடு. கத்தி குமுறிக்கிட்டே ஊட்டுக்கு ஓடியாந்தன்.”

“அப்பறம்?” என்று கேட்டான் சேதுபதி.

“அப்பறம் என்னாவும்? பொண்ணெ யாரோ தூக்கிட்டுப்போயிட்டாங்கன்னு நாலு நாளும் ஊர் ஊரா ஆளு வுட்டுத் தேடியிருக்காங்க. சொந்தக்காரங்க யாரும் தூக்கிட்டுப் போவலன்னு தெரிஞ்சதும் எனக் கூட்டம் எட்டு நாளு வச்சாங்க. யாரும் குத்தத்த ஒப்புக்கல. நாயத்துக்குக் கட்டுப்பட்டு யாரும் நடக்கல. ஒன்னெத் தூக்கிட்டுப் போன ஆளுவுள அடயாளம் காட்டுன்னு கேட்டாங்க. எந்தத் திருடன் வந்து மந்தயில உலாத்திக்கிட்டு நிப்பான், நான் அடயாளம் காட்டுறதுக்கு? மேலத் தெரு அரசாலங்கிற பொண்ணெத் தூக்கிட்டு போவ வந்தவங்கதான் ஆள மாத்தித் தூக்கிக்

கிட்டு போயிட்டாங்கின்னு ஒரு பத்து நாளு கயிச்சி தெரிஞ்சிச்சி. எனக் கூட்டம் வச்சி இந்தக் காரியத்த செஞ்சது யாருன்னு கேட்டாங்க. குத்தவரி கட்டணுமின்னு யாரும் வாயத் தொறக்கல. அரசாலயோட தாய்மாமன் நாலு பேரயும் அவனுவோ மவனுவளயும் கூட்டிவச்சிக் கேட்டதுக்கு ‘ஐயோ சாமி, நாங்க ஒரு பழிபாவத்தயும் கண்டதில்லெ. எங்க தங்கச்சி மவள நாங்க எதுக்குத் தூக்கப்போறம்’ன்னு இடுப்புத்துணிய அவுத்துப் போட்டுத் தாண்டி சத்தியம் செஞ்சாங்க. பஞ்சாயத்திலெ நீங்க பேசுறதுக்கு ருசு இல்லெ. அதனால குளிச்சிட்டு ஈரத்துணியோட வந்து நம்ப ஜக்கம்மா கோவுல்லெ சத்தியம்பண்ணி திருநீறு எடுங்கன்னு சொல்லிட்டாங்க. அந்த மாரியே அரசாலயோட தாய் மாமனுவோ, அவனுவோ மவனுவோ எல் லாம் சேந்து சத்தியம் செஞ்சாங்க. குத்த வரி கட்டணுமின்னு எனக் கூட்டத்திலெ குத்தத்த ஒப்புக்கல.”

“ஜக்கம்மா கோயிலு இந்த ஊருல இருக்கா?”

“இல்லெ.”

“பின்னெ எப்பிடி?”

“ஒரு கைப்புடி மண்ணெடுத்து ஜக்கம்மா மாரி உருவஞ்செஞ்சி வச்சி

சத்தியம் வாங்குனாங்க.”

“கடசி வரெ ஒங்கள யாரு தூக்கிக்கிட்டுப் போனாங்கன்னு தெரிய லியா?”

“ஏன் தெரியல? எல்லாம் தெரிஞ்சித்தான் போச்சி. ஆனா ஒண்ணும் செய்ய முடியல?”

“யாரு தூக்கிக்கிட்டு போனது?”

“அரசாலயோட மாமன் ஒழுங்குமுறக் கூட்டத்திலெ சத்தியம் செஞ்சிட்டுப் போன மூணாம் நாளே தடத்திலெ கெடந்த பாம்பு கடிச்சி செத்துப் போனான். அவன் மவன் எட்டாம் நாளே கொண பேதகமாயி ஊட்ட வுட்டுப் போனவந்தான். இன்னியமுட்டும் ஊரு நாடு திரும்பல.”

“ஓ” என்று ஆச்சரியப்பட்டான் டேவிட்.

“நீங்க என்னா செஞ்சீங்க?”

“நான் என்னெ செய்யுறது? சமுத்திரத்தில குதிச்சா தப்பிக்க முடியுமா? கொதி எண்ணெயில வியிந்த ஈயாட்டம் கெடந்தன். எங் கதெதான் ஊரே பாரு, நாடே பாருன்னு எட்டு நாளு நடந்துச்சி. அப்பறம் திருட்டுப்போன பொண்ணு திரும்பி வந்துருச்சின்னு ஊரு ஒலகத்துச் சனமெல்லாம் வண்டி கட்டிக்கிட்டு வந்து என்னெப் பாத்துச்சிவோ. திருட்டுப்போனதில திரும்பி வந்த ஒரே பொண்ணு நான் மட்டும்தான்.”

“அப்பிடின்னா பொண்ணு திருட்டு போவுமா?” நம்பாதது மாதிரி கேட்டான் சேதுபதி. பொண்ணு சொன்னதில் டேவிட்டுக்கும் நம்பிக்கை ஏற்படாமல் “உண்மயா, உண்மயா?” என்று திரும்பத்திரும்பக் கேட்டான்.

“வருசத்தில ஒரு பொண்ணாவது திருட்டுப்போகாம இருக்காது.”

“சத்தியமா?”

“பொய்யா சொல்றன்? வேணுமின்னா ஊருல கேட்டுக்க. எங்க எனத்துக்காரங்கக்கிட்டெ கேட்டுக்க. எம் மனசுல உள்ளபடிதான் சொல்றன். ஆகாயம் சாச்சியா, பூமாதேவி சாச்சியாத்தான் சொல்றன்.”

“யாரு திருடிக்கிட்டுப் போவாங்க?”

“அத்த மவனுங்க. தாய் மாமன், இல்லன்னா தாய் மாமன் மவனுங்க தான். பிறத்தியாரு கிட்டத்திலியும் வர மாட்டாங்க.”

“எதுக்காக இப்பிடித் தூக்கிக்கிட்டு போறாங்க?”

“நாலஞ்சி தாய்மாமன் இருந்தா போட்டியில தூக்கிக்கிட்டுப் போயிடு வாங்க. அப்பிடித் தூக்கிக்கிட்டுப் போயி தாலியக் கட்டிப்புட்டா அம் புட்டுத்தான். அப்பறம் ஒண்ணும் செய்ய முடியாது.”

“ஒண்ணுமே செய்ய மாட்டாங்களா?”

“அத்த மவன், தாய் மாமன் மவன்கிட்டெ என்னா பேச முடியும்? பொண்ணுக்கு உரும உள்ளவன். பொருளுக்காரன் பொருளத் தூக்கிக் கிட்டுப் போயிட்டான். என்னா பேசுறதின்னு பஞ்சாயத்தில சொல்லிடு வாங்க.”

“அப்பறம் ஒங்க கதெ என்னாச்சி?”

“எங்கண்ணீர எந்த பானயில வடிக்க? மரத்தோட ஆணி வேரப் புடுங்கு னாப்லதான். அரசாலயோட மூணாவது மாமன் ஆளு வச்சித் தூக்கிக்கிட்டுப் போனானா, இல்லெ வேற யாரும் தூக்கிக்கிட்டுப் போனாங்களா தெரியாது. தெரிஞ்சி செஞ்சாங்களா, தெரியாம செஞ்சாங்களா தெரியாது. அப்ப நானு ரவப் புள்ளெதான். அதோட தீட்டுக்காரிச்சி வேற, தீட்டோடதான் என்னெத் தூக்கிக்கிட்டு போயிட்டாங்க. காலத்துக்கும் குமரி பொண்ணாவே நின்னுட்டன். திருட்டுப்போன பொண்ணுங்கிற பேரும் நெலச்சிப் போச்சி. நெஞ்சும் தூந்துபோச்சி” என்று சொல்லும்போது பொண்ணுவின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். அப்போது ‘தீட்டுன்னா என்ன?’ என்று டேவிட் சேதுபதியிடம் கேட்டான். சேதுபதி ஆங்கிலத்தில் சொன்னதும் டேவிட் குறித்துகொண்டான்.

“அப்பிடின்னா இன்னிய வரெ ஒங்களுக்குக் கல்யாணமே நடக்கலியா?” சேதுபதி ஆதங்கத்தோடு கேட்டான்.

“நான் திருட்டுப்போனது மூணாம் பேருக்குத் தெரியாம இருந்திருந்தா நடந்திருக்கும். அதான் ஊரு ஒலகமே தெரிஞ்சிபோச்சே? பொண்ணு ஒண்ணு திருட்டுப்போயிடிச்சின்னு ஊர்ஊராத் தேடப் போனதால எல்லா ஊருக்கும் விசியம் தெரிஞ்சிப்போச்சி. இன்னியமுட்டும் எம் மேல ஆம்பள வாட படாமத்தான் இருக்கன்.”

“ரியலி?” என்று டேவிட் வியப்புடன் கேட்டான்.

“ஒங்க வீட்டுல எந்த முயற்சியும் எடுக்கலியா?”

“ ‘இருக்கிற ரெண்டு காணி பூமியயும் வித்துத் தர்றன். ஊட்டெயும் எய்திவைக்கிறன். ஒரு பயலப் பாத்து முடி’ன்னு எங்கம்மா சொல்லிச்சி. எங்கய் யாவும், எங்கண்ணனும் ஊர்ஊரா அலஞ்சாங்க. நடந்தாங்க. ரெண்டாம் தாரமா இருந்தாலும் சரி, பொண்டாட்டிய சாவ கொடுத்தவன்னாலும் சரின்னு தேடுனாங்க. கடசி முட்டும் எங்கயித்திலெ தாலி ஏறல.”

“அதிசயம்தான்” என்று சேதுபதி சொன்னான்.

“அதிசயமெல்லாம் ஒண்ணுமில்லெ, நடந்த கதயத்தான் சொல்றன்.”

“பொண்ணு கேட்டு யாருமே வல்லியா?”

“ஏன் வல்லெ? எல்லாம் வர்றத்தான் செஞ்சாங்க. ‘தூக்கிக்கிட்டுப் போன வங்க எத்தன நாளு வச்சியிருந்தாங்க? என்னா சாதி ஆளு தூக்கிக்கிட்டுப் போனாங்க’ன்னு வந்தவனெல்லாம் அதியேதான் திருப்பித்திருப்பிக் கேட் டாங்க. சொல்லிச்சொல்லி எனக்கும் ‘சீ போ’ன்னு ஆயிபோச்சி. இனிமே இந்த ஆம்பளவோ மூஞ்சிலியே முழிக்கக் கூடாதின்னு புடிவாதமா இருந்தன். அப்பலாம் ஆம்பளயோட கை வயசுக்குவந்த குமருமேல பட்டாலே புள்ளெ பொறந்திடும்ன்னு நெனச்சிக்கிட்டிருந்த காலம் அது” என்று சொல்லும்போது பொண்ணுவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அழுகையினூடே “என்னெத் தூக்கிக்கிட்டுப் போயி நாலு நாளு வச்சியிருந்தானுவங்கிறதுக்காக ஒருத்தனும் எனக்குத் தாலி கட்டல. ஒலகத்திலியே நான் ஒருத்தித்தான் அவுசாரியா போயிட்டாப்ல. அப்ப நான் வெடல புள்ளெதான். இடுப்புல துணியக்கூட சரியா கட்டத் தெரியாது. சரி, நம்ப ளுக்குன்னு ஒலகத்தில ஒரு சப்ப சருவ இல்லாமியாப் போயிடுவான்னு இருந்தன். காலம் ஓடிப்போச்சி. கிழவி ஆயிட்டன்.”

பொண்ணு சொன்னதை நம்பாதவன் மாதிரி சேதுபதி கேட்டான். “அப்ப கடசி வரெ ஒங்களுக்குக் கல்யாணமே நடக்கல?”

“ஆமாம். என்னெக் கட்டிக்கத்தான் ஒருத்தனும் வல்லெ. ஆனா எங்கூட படுக்கிறதுக்கு ஊரே அலஞ்சிச்சி. நான் ஊருக்குத் தரிசு நிலம் மாரி. அர நாழியில அவனவன் சோலிய முடிச்சிட்டு, சூட்டெத் தணிச்சிக்கிட்டுப் போயிடுவான். நானில்ல வவுத்து சொமய சொமக்கணும்?” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள். திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி “பட்டா இல்லாத நெலம்தானன்னு ஊர்ப்பட்ட ஆடுமாடு எல்லாம் மேயறதுக்கு வர்றத்தான் செஞ்சிச்சி. ஒண்ணும் வௌயாட்டியும்போவுது, கடசிமுட்டும் கரம்பாக் கடந்தாலும் சரின்னு ஒரு நாயயும் நான் கிட்டெ சேக்கல. கால ரெண்டயும் இறுக்கிக்கிட்டு இன்னிய முட்டும் இருந்திட்டன். நம்ப மனசுக்கு நாம்பதான காவ இருக்கணும்? இந்த நேரமுட்டும் நான் ஒரு ஆம்பளக்கூடயும் பேசிப் பழகி, புழங்கி ஒரு குடும்பமா இருந்ததில்ல.”

“ஊருல என்னா சொன்னாங்க?”

“யாரோ ஒரு சண்டாளன் செஞ்சதுக்கு ஊரு என்னா பண்ணும்? கொஞ் சம் நாளானா எல்லாம் சரியாப்போயிடும். ஊரு மறந்திடும்ன்னு எங்க ஊட்டுச் சனங்க நெனச்சாங்க. ஆனா நாளவநாளாவ கதய மறக்கிறதுக்குப் பதிலா வளத்துட்டாங்க. மொதல்ல தூக்கிக்கிட்டு போயி நாலு நாளு வச்சி இருந்தாங்கிறத எட்டு நாளு, பத்து நாளுன்னு சொன்னாங்க. அப்பறம் ஒரு

மாசமின்னாங்க. அதுக்கப்பால தீட்டுக்காரிச்சின்னு பாக்காம சோலிய முடிச் சாங்கன்னு சொன்னாங்க. அப்பறம் வவுத்து புள்ளெயோட வந்தான்னும், புள்ளெய கலச்சிட்டான்னும் ஊருல ஆளாளுக்கு ஒரு கதெயப் பரப்பிவுட் டாங்க. மனசுக்கேத்தப்படி, கேக்குற ஆளுக்கு ஏத்தப்படி, கதெக்கிக் காது மூக்கு, கண்ணு வச்சி உசுரு கொடுத்தாங்க. அது மரம் மாரி வளந்துபோச்சி. அடுப்பு ஒலய மூட முடியும், ஊரு வாய மூட முடியுமா? நெருப்பில்

லாமியே எரியறது ஊரு வாயிதான?”

“நீங்க சொல்றது அதிசயமா இருக்கும்மா. ஒரு ஆம்பளக்கூட வல்லெங் குறீங்களே.”

“ஆம்பளயா வல்லெ? தொகதொகயா வகவகயா எல்லாம் வரத்தான் செஞ்சானுவ, என் வவுத்திலெ புள்ளெயக் கொடுக்கிறதுக்கு. தாலிதான் கட்ட மாட்டன்னானுவ. அப்பிடித்தான் ஒரு சமயம் தொழிலுக்குப் போயிருந்தப்ப ஒரு ஊருல ஒரு பய என்னெ ஒருவிதமா பாக்குறதும் ஓரிட மின்னு இல்லாம திரியுறதுமா இருந்தான். இதென்னடா சனியன், போறவர்ற எடமெல்லாம் ரச்சயா இருக்குன்னு கண்ணு பாக்கல, காது கேக்கலன்னு இருந்தன். அந்தப் பயலோட நடெய ஒடயப் பாத்திட்டு எங்கம்மாக்காரி தரிசா கெடக்குற நெலத்தில ரெண்டு புல்லு பூண்டாவது மொளைக் கட்டும்ன்னு தானா போயி அவங்கிட்டெ வாத்தய வளத்தா. கேணச் செருக்கி மவ, எனக்கு அந்த வெகரம் எல்லாம் புரியல. நான் எம் பாட்டுக்கும் ஊட்டு வேலய செய்யவும் காச்சுன கஞ்சிய குடிக்கவுமின்னு இருக்கிறன். கம்மாயிக்குக் குளிக்கப் போனா அந்தப் பய எம் பின்னாலியே வர்றான். நான் பயந்துகிட்டுப் போயி எங்கம்மாக்கிட்டெ சொன்னா, நீ போத்தா, அவனக் கோக்குமாக்கு போட்டு வுடுறன்னு சொல்லி இன்னது இப்பிடின்னு கதெய அவுத்துவுட்டா அந்தப் பழிகாரி. நானும் அந்தப் பயகிட்டெ போயி, நெயலாட்டம் பின்னாலியே சுத்துறியே என்னா வெகாரம்? நீ என்னா

சாதின்னு தெரியில. ஒனக்குப் பொண்டாட்டி புள்ளென்னு இருக்கு. அப் புறம் எதுக்கு எம் பின்னால சுத்துற? நீபாட்டுக்கும் ஒன் சோலிய முடிச்சிட்டுப் போயிட்டின்னா எங் கதெ என்னாவறது? குளிக்க வந்தனா, ஒங் கூடப் படுத்துப் புள்ளெ பெக்க வந்தனான்னு கேட்டன். அதுக்கு அந்தப் பய சொல்றான், “சங்கிலிய வாங்கிப் போடுறன். ஒலகத்திலுள்ள அத்தன வகக் கறியும் சோறும் வாங்கி போடுறன். ஒன்னெக் கண்ட நாளா கண்ணுல தூக்கமில்லெ. செத்த ஒதுங்கிட்டு போனா ஒங்களது தேஞ்சிடும்மாக்கும். வெத்தலபாக்கு போடுற நேரம் ஆவுமா? இன்னிக்கு முடியாட்டி நாள பின்னெ வரட்டுமா? இல்லெ, இன்னிக்கி பொழுதடய வரட்டுமா? ஒனக் குள்ளத நான் எடுத்துக்க முடியாது. எனக்குள்ளத நீ எடுத்துக்க முடியாது. அப்பறம் எதுக்கு மன வேசட? ஒண்ணுக்கு வுடுற நேரந்தான் ஆவும். ஒரு நாளு எங்கூட பேசிப் புழங்கிட்டுப் போ’ன்னான். அடெ, தூமயத் தின்ன பயல. ஒங்கூட ஒரு நாளு படுக்கவா புள்ளயா பொறந்தன்? புள்ளெ உண்டானா ஒம் பேரத்தான் சொல்லுவன். கம்பு காட்டெப் பங்குபோடுவன்னு சொன்னதும் அந்தப் பய போன எடம் தெரியில.” பொண்ணு வாய்விட்டுச் சிரித்தாள்.

“ஒங்கம்மாவுக்கு இதெல்லாம் தெரியுமா?”

“அந்தச் சண்டாளிதான் மொத்தத்துக்கும் காரணம். அந்த ஊருல இருக்க மட்டும் அந்தப் பயதான் அவளுக்கு வெத்தல, பாக்கு, பொவலன்னு குத்துகுத்தா வாங்கிக் கொடுத்தான். வாக்கு சொல்லு, குறி சொல்லு, மை வைய்யி, தகடு வையின்னு காசு, பணத்தக் கொடுத்துக்கிட்டிருந்தான். ஒரு நாளு எங்கம்மாக்காரி அவனப் பத்தி எங்கிட்டெ பேச்ச எடுத்தா. ‘சும்மாயிருடி சண்டாளி. வர்றவன் புள்ளெய உண்டமிச்சிப்புட்டு தானாச்சி தன்னோட தடியாச்சின்னு ஓடிப்போயிட்டா வவுத்தத் தள்ளிக்கிட்டு நானில்லெ ஊருல பங்கப்பட்டு நிக்கணும். ஏற்கெனவேதான் ஊரு ஒலகம் சிரிச்சிப் போயி நிக்குறனே’ன்னு சொன்னன். அதுக்கு அவ ‘நீ வாயாலியே சிரிச்சிப் பேசி அவன் சரக்க எறக்கு. பண்டத்த எதுக்குக் காட்டப்போற? அவன மயக் குறதுக்குச் சீட்டுகட்டி மை வச்சிப்புடுறன்’னு சொன்னா. எனக்குக் கோவம் வந்துச்சி. அடெ, கண்டாரஒளி முண்டெ, என்னா பாவம் செஞ்சனோ இந்தக் கதிக்கு ஆளாயி நிக்குறன். எனக்கு இந்தப் பாவம் வேறயான்னு கேட்டு சண்டபுடிச்சன்.”

“அதுக்கு ஒங்கம்மா என்னா சொன்னாங்க?”

“அதுக்கு அந்த ஒங்கப்பனஒளி மவ சொன்னா. ‘ஆம்பளகூடப் பேசுறதுன்னா புழங்கிறதுன்னா என்னான்னு தெரியாமியே எம்மாம் புள்ளிவோ பயலுவுள இயித்துக்கிட்டு ஓடிப்போவுதுவோ. கண்ணாலம் ஆவாமியே திருட்டுப் புள்ளெ வாங்குதுவோ. ஒரு பயல, சிரிச்சிப்பேசி மயக்கி இயித் துக்கிட்டுப் போவ ஒனக்குத் துப்பு இல்லெ. ஒரு ஆட்டுக்காரப் பயல, மாட்டுக்காரப் பயலகூட ஒனக்கு மசக்கத் தெரியில. சூத்து பெருக்காதவ, மொல பெருக்காதவயெல்லாம் புருசன் சேத்துக்கிட்டு ஓடல? அந்த மாரி நீயும் ஒரு பயலப் புடிச்சி இயித்துக்கிட்டு ஓடன். பொட்டச்சின்னு எதுக்குச் சீலய இடுப்புல சுத்திக்கிட்டுத் திரியிற, சாணி உருண்டயாட்டம். நானும் பெத்தன் பாரு புள்ளன்னு. ஊருல புள்ளிவோ எல்லாம் எம்மாம் விகரமா இருக்குதுவோன்னு என்னெ திட்டுனா’ என்று சொல்லிவிட்டுப் பொண்ணு அழ ஆரம்பித்தாள். அழுதுகொண்டே எப்பிடியாச்சும் ஒரு ஆமபளக்கூட நான் படுத்து எயிந்திரிக்கணுமின்னு அந்தப் பழிகார முண்டெ படாத பாடுபட்டா.”

“யாரு?”

“என்னெ பெத்த பாவிதான்.” பொண்ணுக்கு அவளை அறியாமலேயே அழுகை வந்தது. அவள் அழும்போது டேவிட்டும் சரி, சேதுபதியும் சரி, ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை. அசைந்துகூட உட்காரவில்லை. மூக்கை உறிஞ்சிக்கொண்டு அவளாகவேதான் பேசினாள்.

“அதோட எங்கய்யா எங்கம்மாகூடத் தொழிலுக்குப் போற எடத்துக்கும் போறத வுட்டுட்டன். எம் புள்ளெக்கி ஒரு நல்லது நடக்க மாட்டங்குதின்னு ஆரம்பத்திலெ அயிதா, புலம்புனா. நாளாவட்டத்திலெ அவ கருதரிச்ச நேரம் சரியில்லென்னு சொல்லி என்னியே திட்டுனா. என்னியே குத் தம் சொன்னா. பூக்காமியே பட்டுப்போனாளேன்னு சொல்லி ராத்திரியில ஒப்பாரி வச்சி அயிவுவா. ஊரத் திட்டித்திட்டியே செத்துபோனா பாவி.” அழுதுகொண்டே சொன்னாள்.

“சாவுறமுட்டும் எங்கய்யாவுக்கும் எங்கம்மாவுக்கும் எங் கவலதான். எங் கவலியிலியே ரெண்டு பேரும் ஒன்னெப் புடி என்னெப் புடின்னு காடு போயி சேந்துட்டாங்க. இப்ப எனக்குப் பெத்தவங்க, கூடப்பொறந்தவங்கின்னு யாருமில்லெ. சொல்லி வச்சாப்ல எல்லாம் அவசரம்அவசரமின்னு மண்ணுக் குள்ளார போயி சேந்துட்டாங்க. இப்ப நான் மட்டும்தான் மிச்சம். எனக்கும் என்னிக்கி குழிவெட்டணுமோ.”

சிறிது நேரம்வரை யாருமே பேசவில்லை. ஒருவரையொருவர் பார்த்த வாறு உட்கார்ந்திருந்தனர்.

“ஒங்கக்கூட பொறந்தவங்க எத்தன பேரு?” சேதுபதி கேட்டான்.

“தண்ணீ குடிக்கிறிங்களா? பேச்சு பிராக்குல கேக்க மறந்துட்டன்.”

“வேணாம். வேணாம். நாங்க பாட்டில்ல வச்சியிருக்கம்” என்று சொல்லிவிட்டு ஆளுக்கொரு பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடித்தனர்.

“காசி போட்டு வாங்குனீங்களா?”

“ஆமாம்.”

“எம்புட்டு?”

“பதனஞ்சி ரூவா.”

“பாட்டுல்ல தண்ணீ குடிச்சா நோவு வராதா?”

டேவிட்டும் சேதுபதியும் சிரித்தனர்.

“ஒரு சொம்பு தண்ணி பாஞ்சி ரூவான்னா தண்ணிக்கே ஒரு நாளக்கி நூறு ரூவா ஆவும் போல இருக்கு. எனக்கெல்லாம் எந்தத் தண்ணியக் குடிச்சாலும் ஒரு நோவும் வராது. ஒரு ரூவா அரிசி சோத்தத்தான் திங்குறன். எங்க எனத்து ஆளுவோ பல ஊரு தண்ணியக் குடிப்பாங்க. ஆனா ஒண்ணுஞ் செய்யாது. ஊர்ஊரா நாடுநாடா போனாலும், காடு கரன்னு அலஞ்சாலும், கண்ட எடத்தில படுத்தாலும் ஒடம்புக்கு ஒண்ணும் வராது. காசி பணம் புழுத்துப்போனவங்கதான் காசி போட்டுத் தண்ணி குடிப்பாங்க. ஒரு பாட்டுலு தண்ணி பாஞ்சி ரூவான்னா இதான் ஒலக அதிசயம்.”

பொண்ணு சொன்னதைக் கேட்டுச் சேதுபதி சிரித்தான்.

“என்னா?” என்று டேவிட் கேட்டான்.

“ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா, ஒரு லிட்டர் தண்ணி பாஞ்சி ரூபா அதச் சொன்னங்க.”

“ரியலி?” என்று கேட்டு டேவிட் சிரித்தான்.

“காசி போட்டுத் தண்ணி குடிச்சா நாடும் ஊடும் வாயிந்தாப்லதான்” என்று பொண்ணு சொன்னதும் “வெரி குட்” என்றான் டேவிட்.

“ஒங்கக்கூடப் பொறந்தவங்க எத்தினி பேருன்னு முன்னெ கேட்டன்” என்றான் சேதுபதி.

“என்னியும் சேத்தா எட்டு உருப்பிடி. எட்டுல நாந்தான் கடசி. பொன் னரும்பு, பூவரும்பு, பூவாயி, பூங்கோத, பூங்காவனம், பூமாரின்னு ஆறு அக்கா எனக்கு. பூமாலன்னு ஒரு அண்ணன். ஏழாவதா நான் பொறந்த தால அடுத்ததும் பொண்ணா பொறக்கக் கூடாதின்னு எனக்கு ஏழாம் பொண்ணுன்னு பேரு வச்சாங்க. ஏழு பொண்ணப் பெத்துக் கஷ்டப்பட்ட தால ஊருல ‘கசம்பாயின்னு பேரு வையி. இனிமே பொம்பளப் புள்ளெ பொறக்காது’ன்னு ஊரே பாத்து எனக்குக் கசம்பாயின்னு பேரு வச்சது. எல்லாரும் இந்த உள்ளங்கை ஊட்டுலதான் பொறந்தம். எங்க அக்காளுவோ கண்ணாலமும் எங்கண்ணன் கண்ணாலமும் இந்த ஊட்டுலதான் நடந்துச்சி. எங்க அக்காளுவோ ஒவ்வொருத்தியும் நாலு அஞ்சி புள்ளென்னு இந்த ஊட்டுலதான் பெத்தாளுவ. தன் பங்குக்கு எங்கண்ணன் பொண்டாட் டியும் நாலு பொட்டக் குட்டிவுள இந்த ஊட்டுலதான் பிதுக்கித்தள்ளுனா. எல்லாம் சேத்தா நாப்பது அம்பது புள்ளீவோ கணக்கு வரும். அத்தன புள் ளிவோ பீத் துணியயும், மூத்தரத் துணியயும் நாந்தான் அலசுனன். அப்பறம் எங்க அக்கா பெத்த புள்ளிவோ பெத்த புள்ளிவுளுக்கும், எங்கண்ணன் பெத்த புள்ளிவோ பெத்த புள்ளிவுளுக்கும் நாந்தான் பீத் துணியும் மூத்தரத் துணியும் அலசினன்.”

“ஒங்க அண்ணன் ஒங்களுக்கு ஒண்ணும் செய்யலியா?”

“எங்கண்ணன் தரும தொரதான். சாவுற காலமுட்டும் என்னெக் கண் ணாத்தான் பாத்துக்கிட்டாரு. வாயிக்கு வாயி ‘அம்மா அம்மா’ன்னுதான் கூப்புடுவாரு. தொழிலுக்குப் போயிட்டு ஊட்டுக்கு வந்தா எம் பேரச் சொல்லிக் கூப்புட்டுக்கிட்டுத்தான் ஊட்டுக்கு வருவாரு. அவரால முடிஞ்ச மட்டும் மாப்ள பாத்தாரு. வெறும் கழுத்தியா சாவணுமின்னு எந் தலயில எயிதியிருக்கும்போது அலஞ்சா மட்டும் காரியம் நடந்திடுமா? அவரால முடிஞ்சமட்டும் ஓடியாடிப் பாத்தாரு. கடசியில, ‘சரி வுடும்மா நீதான் நம்ப ஊட்டு ஜக்கம்மா. சாவுறமுட்டும் நானாச்சு ஒனக்கு’ன்னு சொன்னாரு. ஆனா பட்டுன்னு போயி சேந்துட்டாரு.”முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“ஒங்கண்ணன் பொண்டாட்டி ஒங்களப் பாக்கலியா?”

“அடக் கடவுளே. எங்கண்ணன் கர்ணனுக்கு வந்த மவராசியப் பத்தியா கேக்குறீங்க? அந்தப் பாதகத்தி பேரு என்னா தெரியுமா? பொன்னம்மா. பேருதான் அப்பிடி. அசலு பித்தளதான். பாக்குறதுக்குப் பனமரம் மாரி அப்பிடியொரு வளத்தி. அப்பிடியொரு ஒசத்தி. வாய தொறந்தான்னா தமுக்குத்தான். அப்பிடி முழங்குவா. ஊருப்பட்ட புளுவு புடிப்பா. அவள மாரி ஒருத்திய இந்தப் பூலோகத்திலியே நான் பாக்கல. நல்லத்தங்கா நாத்தனாத்தான் அவ. அம்மாம் சூது, அம்மாம் கவடகம். கருநாகம்தான். அவ சிரிச்சி நான் அறிஞ்சது இல்லெ. எங்கண்ணன் செத்த அன்னிக்கும் அவ கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வல்லெ. அப்பிடியொரு பொறப்பு. கருங்கல்லு பொறப்பு. அவ வேற யாருமில்லெ. தாய்மாமன் மவதான். எங்கம்மாளோட அண்ணன் மவ. பேசுனான்னா சீனிக்கட்டியா இனிக்கும். ஆனா குனிஞ்சி நிமிந்து ஒரு வேல செய்ய மாட்டா. அதுக்குத்தான் புழுக்கச்சி நானிருக்கன்ல. அம்மா மகாராணிதான். தொழிலுக்குப் போவா. அவ்வளவு தான். ஊட்டு வேல ஒண்ணு செய்ய மாட்டா. ஊட்டெக் கூட்ட மாட்டா, வாசலக் கூட்ட மாட்டா. மீறிக் கேட்டா வவுத்த வலிக்குதின்னு சூர்போட்டுக்கிட்டு மொடங்கிக்குவா. மோடி வச்சான்னா வச்சதுதான். எட்டு நாளானாலும் மோடிய எடுக்க மாட்டா. ஊட்டு வேலயெல்லாம் எந் தலயிலதான். அவ ஏவுன வேலய செஞ்சிக்கிட்டு ஊத்துன கஞ்சியக் குடிச்சிக்கிட்டு கெடந்தன். ஆனா அவ பெத்த புள்ளிவோ அப்படியில்லெ. எங்கண்ணன் குணம்தான். நாலு புள்ளெ பிதுக்கித்தள்ளுன அந்தக் கண்டார ஒளி ஒரு ஆம்பளப் புள்ளெயப் பெக்கல. எங்கண்ணன் பேரச் சொல்ல ஒரு புள்ளெ இல்ல. அவ பொறப்பே ஆம்பளப் பொறப்புத்தான். கட்டாந்தரயாட்டம் இருக்கும் அவ நெஞ்சு மோடு. பொட்டச்சிக்கு மாரு இருந்தாத் தான் பகரு. அந்தப் பரதேசி நாயிக்கு அதுவுமில்லெ. எப்பிடியோ அவக் கூடயும் படுத்து எங்கண்ணன் நாலு புள்ளெயப் பெத்தாரு. நாலும் பொட்ட தான்.”

“ஒங்கண்ணியா ஒண்ணுமே செய்யலியா?”

“ஏன் செய்யல? என்னெ வேல வாங்கவே பொறந்தவ மாரிதான் எனக்கு நாளெல்லாம் வேல வைப்பா. அவ வுடுற வேலய செய்யணும், ஊத்துன கஞ்சியக் குடிக்கணும். எனக்கு வேல வுடுறத மறந்துப்புட்டுக் காடு போயி சேந்துப்புட்டா” என்று சொல்லிச் சிரித்தாள். அப்போது வீட்டுக்குள் ஓடி வந்த பத்து வயது மதிக்கதக்க பிள்ளை வந்த வேகத்திலேயே “எங்கம்மா ஊருக்குப் போவுதாம் ஒன்னெக் கையோட கூப்புட்டாரச் சொல்லிச்சி” என்று சொன்னாள்.

“நீ போ. இவுங்ககிட்டெ ரெண்டே ரெண்டு வாத்த பேசிப்புட்டு வந்துடுறன்.”

“இப்பியே வா.”

“வர்றன் போ. மூஞ்சி பூரா எதுக்குடி அம்மாம் பகடரப் பூசி வச்சியிருக்க? பகடரப் பூசியே பண்டத்துக்குக் கிராக்கிய உண்டாக்குறியாடி?”

“சீ” என்று சொல்லிச் சிரித்தது அந்தப் பிள்ளை.

“பண்டத்தப் பதனமா வச்சிக்கடி. ஊருக்குள்ளார ஊருப்பட்ட ஆடு மாடு இருக்கு. மேஞ்சிட்டுப் போயிடப்போவுது.”

“ஊட்டுக்கு வா ஒன்னெ வச்சிக்கிறன்”என்று சொல்லிப் பொண்ணுவின் கன்னத்தில் கிள்ளிவிட்டு அந்தப் பிள்ளை வெளியே ஓடியது. பொண்ணு கலகலவென்று சிரித்தாள்.

“அவசரமாப் போகணுமா?” என்று சேதுபதி கேட்டான்.

“ஊட்டு வேல செய்யுறதுக்குக் கூப்புட்டிருப்பா.”

“சின்ன வயசுல என்ன வேல செஞ்சிக்கிட்டு இருந்தீங்க?”

“ஊட்டு வேலதான்.”

“அவ்வளவு வேல இருக்குமா?”

“எங்க மூத்த அக்கா மவளுக்கு எனக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம். எனக்கு ஒரு வயசு கூடுதல. எங்க பெரியக்கா புள்ளெ பெக்க ஆரம்பிச்சதும்தான் எங்கம்மாவுக்கு புள்ளெ பொறக்குறது நின்னுச்சி” என்று சொல்லும் போதே பொண்ணு சிரிக்க ஆரம்பித்தாள்.

“ரியலி?” என்று டேவிட் கேட்டான்.

“அந்த நாளயிலெ தாயும் மவளும் ஒரே நேரத்திலெ புள்ளெ உண்டாயி இருப்பாங்க.” மீண்டும் சிரித்தாள்.

“எங்க அக்காளுவோ ஆறு பேராச்சா. வருசத்துக்கு ரெண்டு பேராவது வவுத்தத் தள்ளிக்கிட்டு வராம இருக்க மாட்டாளுவ. ஊட்டுல கெடக்குற ஒரே ஆளு நாந்தான? அதனால வவுத்துப் புள்ளெக்காரிவுளுக்கு நாந்தான் சித்தாளு. எல்லாப் பாங்கு படுவிதனயும் நாந்தான் செய்யணும். நான் மட்டும் எப்பிடி சும்மா இருப்பன்னு எங்கண்ணியாக்காரியும் நாளு புள்ளெய பிதுக்கித்தள்ளுனா தன் பங்குக்கு. புள்ளெ பொறக்காத வருசமின்னு ஒண்ணு பாக்கி இருக்காது. எல்லாப் புள்ளிவோ பீமுத்தரத்தயும் நாந்தான் வாரி வழிச்சி ஊத்துனன். ஊடு பூராவும் புள்ளிவுளா நிக்கும். பீமூத்திரத்த அள்ளவே எனக்கு நேரம் பத்தாது. அப்பிடியே நாளு ஓடிப்போச்சி. அப் பறம் எங்க அக்கா மவளுவோ புள்ளெ பெக்க ஆரம்பிச்சாளுவ. புள்ளெ பொறக்கிற ஊடுஊடா என்னெ அயிச்சிக்கிட்டுப் போயிடுவாளுவ. ஊடுஊடா ஊருஊரா போனன். பீமூத்தரத்த அள்ளுறதுக்கு, காயம் அறச்சிப் போடுறதுக்கு. இந்த ஊட்டுல மின்னலாம் ஒரு மாசம் ரெண்டு மாசம் நெலச்சித் தரிச்சி இருந்தாலே பெரிசு. புள்ளெ பொறக்கப்போவுது வான்னு சொல்லி யாராச்சும் வந்து இயித்துக்கிட்டுப் போயிடுவாளுவோ. போன மாசம்கூட பத்து நாளு மெட்ராசில எங்கண்ணன் பேத்தி ஊட்டுல இருந் தன்.”

“மெட்ராசிலயா?”

“ஆமாம்.”

“அங்கியே இருக்க வேண்டியதுதான?”

“சீ. கருமத்த, அது ஒரு ஊரா? பேயி புடிச்சாப்ல சனங்க அலயுதுவோ. தெருவுல நிக்க முடியல. நடக்க முடியல. மோட்டாரும் வண்டியுமா ஓடுது, அதுல யாரு எப்ப அடிபட்டுச் சாவாங்கன்னு தெரியில. அதுக்கும் மேல எங்கண்ணன் பேத்தி இருந்த ஊடு பொட்டியாட்டம் ஒரு கை அகல ஊடுதான். அதுல எத்தன பேரு இருக்கிறது? எனக்குப் பாம்பப் புடிச்சிப் பொட்டியில அடச்சிவச்சாப்ல இருந்துச்சி. என்னால இந்த ரவ எடத்திலெ இருக்க முடியாதுன்னு ஓடியாந்துட்டன்.”

“இந்த வீடும் சின்ன வீடுதான?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் சேதுபதி.

“தலய சாய்க்கிறதுக்கு மட்டும்தான் இந்த ஊடு. எல்லா வேலையும் வாசல்லயும் தெருவுலயும்தான்.”

“அது சரிதான்.”

“மெட்ராசில அப்பிடியா? சோறு ஆக்குற எடமும், பீ மூத்தரம் பேளுற எடமும் ஒண்ணுதான். நடுவுல செவுரு ஒண்ணுதான். அது எனக்குப் புடிக்

கல. ஒரே ஓட்டமா ஓடியாந்துட்டன்” என்று சொல்லிவிட்டுப் புதுக் கல் யாணப் பெண் மாதிரி பொண்ணு சிரித்தாள். அவளுடன் சேர்ந்து சேதுபதி யும் டேவிட்டும் சிரித்தனர்.

“வெளியூர் போவாதப்ப, என்னா செய்வீங்க?”

“சும்மா குந்தியிருந்தா ஏனத்திலெ சோறு வந்துடுமா? பச்சப் புள்ளக் காரிவோ, பாலுக்காரிவோ புள்ளிவுள வச்சியிருப்பன். பொடச்சி, தொவச்சித்

தருவன். ஏனம்பானம் கழுவித் தருவன். இட்டெ வேல, இடாத வேலன்னு செய்வன். ஊடு மொழுவி, மொறம் மொழுவித் தருவன். இந்த வேலன்னு இல்லெ. எல்லா வேலயும் செய்வன். கஞ்சி கொடுத்தா குடிச்சிட்டு வந்து மொடங்கிக்குவன்.”

“காட்டு வேலக்கெல்லாம் போவீங்களா?”

“அந்த வேலயெல்லாம் எனக்கு ஒத்துக்காது.”

“ஏன்?” என்று வியப்புடன் கேட்டான்.

“எங்க பெரியக்கா மொதப் புள்ளெ பெக்கற முட்டும்தான் ஆடுமேய்க்க, மாடுமேய்க்க, கம்பறக்கன்னு போனன். அப்பறம் புள்ளெய வச்சிக்க ஆரம் பிச்சனா. அதுல பத்து பாஞ்சி வருசம் ஓடிப்போச்சி. தொழிலுக்கும் போவ மாட்டன்.”

“அப்ப நீங்கதான் ஒங்க வீட்டு டாக்டரு” சேதுபதி சிரித்தான்.

“ஊட்டுக்கு மட்டுமில்லெ. ஊருக்கும் நாந்தான். இருபது இருபத்தி அஞ்சி வருசமா ஊருல யாருக்குப் புள்ளெ பொறந்தாலும் மொதல்ல என்

னெத்தான் கூப்புடுவாங்க. புள்ளெக்கி எப்பிடிப் பாலு கொடுக்கிறது. புள்ளெ

வவுத்தில பாலு தங்கலன்னா என்னா செய்யுறதுன்னு நாந்தான் சொல்லு வன். செய்வன், ஊருல இருக்கிற பொட்டச்சிவுளுக்கெல்லாம் நாந்தான் காயச்சோறு ஆக்கிப் போட்டன். இப்பத்தான் புள்ளெ தரிச்ச நாளுலயிருந்து ஆசுபத்திரி ஆசுபத்திரின்னு ஓடுறாளுவ.”

“அப்பிடின்னா ஊருல ஒங்கள நல்லபடியா பாத்துக்குவாங்க.”

“ஆமாம். எல்லாரும் எங்கையில பொறந்த புள்ளீவோதான?”

“கல்யாணம் நடக்கல. அது ஒண்ணுதான் குறை. மனக்கஷ்டமா இருக்கா?”

“சின்ன வயசில வெள்ளரிப் பிஞ்சாட்டம் இருப்பன். ஊரு சனமே என் னப் பாத்து மெச்சிபோவும். அப்ப எங்கம்மாகிட்டெ ‘பொண்ணா பெத்து வச்சியிருக்கிற? தங்கத்த இல்ல பெத்து வச்சியிருக்கிற. ஒத்த ரூவா பணம் செலவு இல்லாம ஒரு படி அரிசி செலவு இல்லாம, ஒம் பொண்ணெக் கொத்திக்கிட்டு போயிடுவானுவோ பாரு’ன்னு சொல்லுவாங்க. யாரு கண்ணு பட்டுச்சோ. என்னெத் தூக்கிக்கிட்டுப் போயிட்டானுவ. காலமும் நேரமும் கூடி வந்தப்ப கழுத குறுக்கால வந்துச்சுங்கிற கதெதான். ‘எம் புள்ளெக்கி ஒரு மஞ்சக் கவுத்தக் கொடு. ஒனக்கு அக்கினிச் சட்டி தூக்கி, பூ மிதிச்சி, மொறப் பூச செஞ்சிக்கிட்டு வர்ற’ன்னு ஜக்கம்மாகிட்டெ நேந்துகிச்சி. பொங்க வைக்கிறன். கெடா வெட்டுறன். கோயி காவு கொடுக்கிறன். குதிர

கட்டிவைக்கிறன்னு வேண்டாத நாளில்ல. வெள்ளாமயில கழுத வாய வச்சாப்ல என்னெத் தூக்கிக்கிட்டுப் போயி சீப்பட்டு சீரழிய வைச்சிட் டானுவ.”

“ஒங்கள ஊருல கிண்டல் கேலி செய்வாங்களா.”

“குத்தம் சொல்லிப் பேச மாட்டாங்க. அந்தக் காலத்தில ஐயோ பாவ மின்னுதான் சொல்லுவாங்க. எஞ்சோட்டுப் பொண்டுவோதான் என்னெ ஒரு மாதிரியா பேசுவாளுவோ.”

“எப்பிடி?”

“எனக்கு மட்டும்தான் எங்க ஊருல கண்ணாலம் நடக்கல. மத்தவங் களுக்கெல்லாம் நடக்கத்தான செஞ்சிச்சி. எங்க ஊருல கேணையன்னு ஒருத்தன் இருந்தான். அவனுக்கு சரியா வாய் பேச முடியாது, சரியா நடக்கவும் முடியாது. வேலக்கி வித்தக்கி போவ முடியாது. ஏனத்துல இருக்கிற சோத்தக் கூடத் திங்க முடியாது. இடுப்பு வேட்டியக்கூடக் கேணமாணன்னுதான் கட்டு வான். நடக்கறதுக்கூட இயித்து இயித்துதான் நடப்பான். சாவுறமுட்டும் ஊட்டாளாவே இருந்தான். அவனயும் கட்டிக்கிட்டு ஒரு மவராசி ரெண்டு புள்ளயையும் பெத்தா. அந்த மாரி எங்க ஊருல நொண்டிப்புள்ளன்னு ஒருத்தி இருந்தா. அவளுக்கு வலதுகை சூம்பிப்போயி இருக்கும். கிரணத்துல அடிப்பட்டு மே ஒதடு கிழிஞ்சிப்போயி இருக்கும். பாக்கறத்துக்கு அப்புடி இருப்பா. அவ கையால தண்ணி வாங்கிக் குடிக்க முடியாது. ஆனா அவுளுக் கும் கண்ணாலமாச்சி. என் வயசில கண்ணாலம் ஆனவளுவோ, எங்கூடக் கூடி வௌயாண்டவ எல்லாம் கண்ணாலம் கட்டிக்கிட்டுப் போன மொத நடெ புருசனோட வருவாளுவோ. அடுத்து வரயில வவுத்தத் தள்ளிக்கிட்டு வருவாளுவ. மறுவருசம் பாத்தா வவுத்தில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுமா வருவாளுவ. வழியில தடத்தில கண்டு வழி மறிச்சிக் கேட்டா ‘ஒனக்கென்னா கொடுத்துவச்ச புண்ணியவதி. புருசனா புள்ளெயா? இன்னிக்கிப் பூராவும் இந்த எடத்திலியே நின்னு பேசிக்கிட்டேயிருந்தாலும் என்னா ஏதுன்னு கேக்கறதுக்கு ஆளிருக்கா? மாமனா மாமியா புடுங்கலா? நாத்தனா கொழுந் தனா கொந்தலா? நானு அப்பிடியா? நானு இன்னம் செத்த நேரத்தில போவ லன்னா ‘இன்னமுட்டும் எங்கடி போயிருந்த தேவிடியா, புது மாப்பள புடிக்கப் போயிட்டியா’ன்னு கேட்டு மொளக்குச்சியக் கழட்டிக்கிட்டு எம் பிரிசன் அடிக்கிறதுக்கு ஓடியாருவான். அவனத் தாண்டி போனா ‘ஊரு சுத் துற மாட்டெ எதுக்குடா ஊட்டுல வச்சியிருக்கிற மானங்கெட்ட பயல. இப் பியே அவ மசுர அறுத்து மானபங்கப்படுத்தி அடிச்சி ஓட்டிவுடு. அவ அப்பன் ஊட்டுக்கு’ன்னு எம் மாமியாக்காரி தூவம் போட்டு வுடுவா. அதுக்கு மேல அம்மாளக் காணுமேன்னு புள்ளிவோ மொகம் வாடிப்போயி கெடக்குங்க. ஒவ்வொண்ணும் உசுரு போறாப்லதான் ஊரக் கூட்டிவச்சி அயிவும். இதுல எங்க ஒங்கிட்டெ பேசுறது?’ன்னு கேட்டுட்டுப் போவாளுவ. அப்பத்தான் நான் அயிவுவன்.”

பொண்ணு லேசாகக் கண்கலங்கினாள். மூக்கை உறிஞ்சினாள். முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு அலுப்பான குரலில் சொன்னாள்.

“புருசன் பாக்காத கோலம் பொண்டாட்டிக் கோலம், வெறும் கோலம். ஒலக்கயக் காணாத ஒரலுண்டா ஒலகத்தில? எனக்குக் கண்ணாலம் ஆவல. புருசன் இல்லெ. புள்ளெ இல்லன்னு நான் ஒரு நாளும் அயிதவளில்லெ. கண்ணாலம் கட்டிக்கிட்டுப் போனவளுவோ படுற பாட்டப் பாத்தாலேயே யே அப்பா. கழுத்த நீட்டுன பாவத்துக்குச் சீரு வரிச வண்டி நெறயா கொடுக்கணும். பொங்க சீரு, தீவாளி சீருன்னு கொடுக்கணும். அப்புறம் புள்ளெ பொறப்பு, புள்ளக்கி பொறந்த முடி எடுப்புன்னு பாக்கணும். மாமனா மாமியா செத்தா அதுக்கும் கல்லு கருமாதி எடுக்கணும். துணிமணி, நக நட்டுன்னு எடுத்துப்போடணும். எல்லாத்தயும் வாங்கிக் கொடுத்துப்புட்டு அவன் கொடுக்கிற அடியயும், ஒதயயும் வாங்கணும். அப்பறம் அவன் பெத் தப் புள்ளெயோட பீ மூத்தரத்தயும் அள்ளிக் கொட்டணும். எல்லாத்தயும் கணக்குப் பாத்தா இந்த ஆம்பள நாயிவோ மூஞ்சியிலியே முழிக்கக் கூடா தின்னு இருக்கு. இத்தினி வயசுக்கும் என் திரேகத்திலெ ஆம்பள வாட பட்டதே இல்லெ.”

“பாவம்தான். உள்ளுர்லதான் ஒங்களக் கட்டிக்க யாரும் வல்லெ. சொந்தபந்தத்தில் ஒரு ஆளப் புடிச்சி ஒங்க ஊட்டுல கட்டிவைக்கலியா? ஒரு ஆம் பளக் கூடவா இல்லெ? சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க” என்று சேது பதி அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

“ஐயனாரு செலயாட்டம் மீச வச்சிக்கிட்டு எம்மானோ பேரு இருந் தாங்கதான். இல்லன்னு சொல்லல. பிறத்தி ஆளுவுளாவது ‘இந்த வயசிலியே இப்பிடி ஆயிப்போச்சே’ன்னு வெளிய சொல்லாம ஜாதகம் சரியில்லெ, பொருத்தம் சரியில்லெ, கிரகம் சரியில்லன்னு சொல்லிட்டுப் போனாங்க. ஆனா உத்த ஆளுவோதான் ‘ஜாதகக் குத்தம், கிரக குத்தம் இருந்தாக்கூட கட்டிக்கலாம். இந்தப் பொண்ணுக்குப் பேரில்ல குத்தமா இருக்கு. பேரு குத்தமுள்ள புள்ளயக் கட்டிக்கிட்டுப் போயி எந்தூர்ல குடும்பம் நடத்துறது? புள்ளெ குட்டி பெக்கிறது? திருட்டுப்போன பொண்ணு இதான்னு எப்

பிடிச் சொல்றது?’ன்னு மூஞ்சிக்கு நேராவே கேட்டாங்க.”

“ஊரு பஞ்சாயத்து சாதி பஞ்சாயத்து ஒண்ணும் இதுக்கு வைக்கலியா?”

“யாராச்சும் என்னெத் தொட்டிருந்தா வைக்கலாம். அதுக்குத்தான்

வய்யி இல்லியே. இன்னார்ன்னு ஆளு அடயாளமும் தெரியில. அப்பறம் எங்க இருந்து எனத்துப் பஞ்சாயத்த, ஊரு பஞ்சாயத்தக் கூட்டுறது? மீறி,

பஞ்சாயத்துக்குப் போனாக்கூட ‘ஒருவாட்டி எங்கூடப் படுக்க வர்றியா’ன்னு கூப்புடுவானுவ.”

“அதுவும் சரிதான்.”

“கடசிகடசின்னு எம் பிரிசனுக்கு ரெண்டாம்தாரமா கட்டிவைக்கிறன்னு எங்க மூணாவது அக்கா பூங்கோத வந்து கேட்டா. கட்டி வைச்சாலே சரின்னு ஒரே புடியா நின்னா. எனக்கும் வயசி கூடிப்போச்சி. அக்கா பிரிசனக் கட்டிக்கிறது அப்ப சாதாரணம்தான்” என்று சொல்லிச் சிரித்து விட்டு சொன்னாள். “மூணு பிள்ளெ பெத்தவன்தான். இருவது வயசி கூடு

தலதான். முத்துன கிழவன்தான். சரி என்னா பண்றது? அங்கஇங்க போறதவிட சொந்த அக்கா கிட்டியே போறது நல்லதுன்னு எங்கூட்டுல ஒத்துக்

கிட்டாங்க. சரின்னு எங்க அக்காவும் போயிட்டா. தேதி வைக்கிறது ரெண்டு நாளு இருக்கயில எங்க மச்சான்காரன் தொழிலுக்குப் போற வழியில பொழுது அடஞ்ச நேரமா வந்து எங்கிட்டெ ரகசியமா ‘வா நம்ப ரெண்டு பேரும் ஒண்ணாமுண்ணா பேசிப் பழகி இருக்கலாம். எனக்கு அடங்குன வளான்னு பாத்திட்டுத் தாலிய கட்டுறன்’னு சொன்னான். அடச் சீ. இவனும் ஒரு ஆம்பளயான்னு ஒரே புடியா மாமன நான் கட்டிக்க மாட்டன் னுட்டன். மீறுனா மருந்த அரச்சிக் குடிச்சிடுவன், தூக்குல தொங்கிடுவன்னு சொல்லி அயிதன். அடிச்சி ஒதச்சிப்பாத்தாங்க. நான் எதுக்கும் அடங்கல.”

“அப்பறம் என்னாச்சி?”

“அதோட அந்தக் கண்ணாலம் நின்னுப்போச்சி. அப்பறம் அவன் மூஞ்சி லியே நான் முழிக்கல. ஊட்டுக்கு வந்தாக்கூட நான் என்னா ஏதுன்னு பேசுனது கெடயாது. அவன் சாவுற முட்டும் ஒரு வாத்த நான் பேசல. அவன் செத்ததுக்குக்கூட நான் போவல. கருமாதிக்கும் நான் போவல. எங்க அக்கா சாவுறமுட்டும் கேட்டுப்பாத்தா நான் விசியத்த ஒடைக்கல. ஒருத்தங்க

சொத்து இன்னொருத்தங்களுக்குப் பாத்தியமாவுமா? எதுக்கும் ஒதவாத ஆட்டுப் புழுக்கன்னாலும் தனித்தனிதான்.”

“வெரி குட்” என்றான் டேவிட்.

“ஊருக்கெல்லாம் இவுரு சண்டியரு, என் சாண்ட குடிக்க வந்த மண் டயருன்னு அப்பறம் எங்கம்மா வகயிறாவுள ஒருத்தனப் புடிச்சாந்தாங்க. பேரு கருப்புசாமி. பேருக்கேத்த மாரியே இருந்தான். மொத தாரம் செத்துப் போச்சி. ரெண்டாம் தாரம் வாழப் புடிக்கிலன்னு ஓடிப்போச்சி. அஞ்சிப் புள்ளெக்கித் தாயா இருக்கணுமின்னு மூணாம் தாரமா என்னெ முடிக்க வந்தான். கெயவனுக்குக் கட்டிவைக்காதீங்கின்னு எங்க ஊட்டுல சொன்னா, வாய மூடுன்னு என்னெத்தான் அடிக்க வராங்க. ஊருல, ஊட்டுல சொன்னதால சரின்னு நானும் ஒப்புக்கிட்டன். அவன் ஆளு எப்பிடின்னா கம்பந்தட்டயாட்டம் வெடுக்குவெடுக்குன்னு இருப்பான். வறட்டு இருமலுக்காரன். செத்த நேரம் பேசுனா செத்த நேரம் மூச்சு வாங்குவான். அவனோட மொத மவனுக்கும் எனக்கும் அஞ்சி வயசிதான் கம்மி. எனக்கு அஞ்சி வயசி கூடுதல். இதுவும் விதியாடா கடவுளேன்னு மருவிப்போறன். சரி, ஊருக்கும் பேருக்கும் கன்னி கழிஞ்சமின்னு பேராயிடுமின்னு இருந்தன். அப்ப அவ

மவளுவோ ரெண்டு பேரு வயசிக்கு வந்து ஊட்டுல குந்தியிருக்காளுவ.

கடசியில அவங்கூடயும் நான் தாலி கட்டிக்கிட்டு வாயறதுக்குப் போவல.”

“அடக் கடவுளே! என்னாச்சி?”

“என்னெ புடிச்ச சனியன் என்னெ சேந்தவங்களயும் புடிச்சிக்கிச்சி. அது வேசட காலம். வெளியூருக்குத் தொழிலுக்குப் போயிட்டு வந்தவனுக்கு ஊருல ஒரு ஊடு தீ புடிச்சி எரிஞ்சிக்கிட்டிருந்திருக்கு. அதெ வேடிக்கப்பாக்க ஓடுனவன்தான். ஓடுறப்பவே மயக்கமாயி கீய வியிந்து வாயாலயும் மூக்காலயும் ரத்தம் வந்து செத்துப்போனான். என் கண்ணாலமும் நின்னுப் போச்சி. ஏழாமிடத்து சனி எடத்த வுட்டுத் துரத்தும், ஒம்பதாம் எடத்து சனி ஒறவுக்காரங்களக் கொல்லும்னு சொல்லுவாங்க.”

“வெரி பேட் லக்” டேவிட் சென்னான்.

“கண்ணாலமாயி அந்தாளு செத்திருந்தான்னா என்னோட கிரகம்தான் அவன அடிச்சிடிச்சின்னு சொல்லியிருப்பாங்க.”

“அதுக்கு ஊருல என்னா சொன்னாங்க?”

“ஊரு வாய்தான் நாறவாயாச்சே. ‘வயசுக்குவந்து தீட்டுக்கழிச்சி ஊட்டுக்கு அழைக்கிறதுக்குள்ளார திருட்டுப்போயிட்டா. சொந்த அக்கா பிரிசன் கூட பேசி முடிச்ச கண்ணாலம் நின்னுப்போச்சி. கடசியா நாளு, தேதி

குறிச்சிட்டுப் போனவனும் செத்துப்போயிட்டான். ஆம்பள ராசி கொண்

டவ. அதான் கண்ணாலம் ஆவல’ன்னு பேசுனாங்க. வெறும் வாயாலியே கதயக் கட்டிவுட்டுட்டாங்க. பொண்ணு கேக்க வந்தவனெல்லாம் இந்தக் கதய கேட்டுட்டு வந்த அடி மாறாம திலுப்பிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்பிடியே காலம் ஓடிப்போச்சி. எனக்கு தலயும் நரச்சிப்போச்சி. இப்ப கிழவியும் ஆயிட்டன்.”

“ஒங்கம்மா சொன்ன மாதிரி நீங்களே ஒங்களுக்குப் புடிச்ச ஒரு ஆளக் கட்டியிருக்கக் கூடாதா?”

“திருட்டுப்போன பொண்ண வச்சி எவன் வாயிக்க செய்வான்? சொல்

லிக்காட்டி சொல்லிக்காட்டியே சாவடிப்பானுவோ. கண்ணாலம் ஆவாட்டி யும் போவுது. வாணலுக்குப் பயந்துகிட்டு அடுப்புல விழ வேணாமின்னு இருந்தாலும் எங்கம்மா வுடல.”

“என்னா செஞ்சாங்க?”

“அடெ நீ ஒண்ணு. ஒரல வச்சிக்கிட்டு என்னா செய்ய, ஒலக்க வாணாமா? ஒரலும் ஒலக்கயும் ஒண்ணா இருந்தாத்தான மாவு இடிக்க முடியும்? ‘சொல்லுக்கு மடங்காத புள்ளெயப் பெத்தனே’ன்னு குடிச்ச கஞ்சி கூட்டுல தங் காம எங்கம்மா சாமி ஆடுவா. எங்கம்மாக்காரி புடுங்கலு தாங்க முடியாம வெக்கம் உதிந்துபோயி அதெயும்தான் செஞ்சிப் பாத்தன். இங்க வடக் கால தெருவுல பாண்டியன்னு ஒருத்தன் இருந்தான். இப்ப அவன் செத்துப்போயிட்டான். பாக்குறதுக்குக் கண்ணுக்கு நெறமா இருந்தான். எம் பேருல அவனுக்கு ஒரு இது இருந்துச்சி. எனக்கும்தான் இருந்துச்சி. நான் போற வர்ற எடமெல்லாம் நெயலாட்டம் கூடவே வருவான். பீ மூத்தரம் பேளப் போனாக்கூட கூடவே வருவான். நானும் அவங்கிட்டெ மொகம் கொடுத் துப் பேசுனன். எங்க ஊட்டுக்குப் போக்குவரத்தா இருந்தான். கட்டுனா இந்தப் புள்ளெயத்தான் கட்டுவன்னு நின்னான். நான் தோட்டம் தொறவுக் குப் போனா புள்ளிவோயெல்லாம் ‘பாண்டி பாண்டி’ன்னு எம் பின்னால கத்துங்க.”

“வெரி இன்டரஸ்டீங்க்” சிரித்துக்கொண்டே டேவிட் சொன்னான்.

“பாண்டிக்கி என்னாச்சி?” சேதுபதி கேட்டான்.

“நாயக்கக் குட்டிய நீ எப்பிடிக் கட்டுவ? அதுலயும் அவ திருட்டுப்போனவ. எல்லாத்துக்கும் மேல நம்ப சாதி என்னா, அவ சாதி என்னா? மை, மந்திரம், பில்லி, சூனியம், வைப்புன்னு வைக்கிற சாதி. பொண்டாட்டி புள்ளெக்கிக் கஞ்சி ஊத்த வக்கத்துப்போயி வாக்கு சொல்றன், சோழிப்போட்டு குறி சொல்றன்னு குடுகுடுப்பய ஆட்டிக்கிட்டு எரக்கப் போனாலும் நெறக்கப் போறன்னு ஊர்ஊரா திரியுற கூட்டம். செவத்த தோலுக்காக சாதி மாத்திக் கட்ட முடியாது. மீறிக் கட்டுனா நீ கைகாலோட போவ வேண்டியதுதான். இந்தாப் பாரு, நான் தூக்குல தொங்கப்போறன்னு மாட் டுக் கவுத்த அவுத்துக்கிட்டு ஓடுனான் அவன் அப்பங்காரன். போறதுக்கு மின்னாடியே இந்தக் கூத்துன்னா, போன பின்னால என்னா கூத்தெல்லாம் நடக்குமோ, அவனது வலுத்த குடும்பம், என்னுது பஞ்சக் குடும்பமாச்

சேன்னு ஆம்பளப் பயலுவோ ஒறவே வாணாமிண்டா சாமின்னு அந்தப் பயல மறந்திட்டன்.”

“இதுல பயப்படுறதுக்கு என்னா இருக்கு?”

“தேவமாரு பெரும் கூட்டம். அடிதடி வெட்டுகுத்துக்கு அஞ்சாத சாதி.

எங்க எனம் அப்பிடியில்ல. தெனம் ஒரு ஊருக்குப் போற கூட்டம். எங்க ஆளுவோ சண்டக்கிப் போவ மாட்டாங்க. வலுவில்லாத கூட்டம். நாடோடிதான?”

“பாண்டிக்கு என்னாச்சி?”

“அடுத்த ஆறாம் மாசம் உள்ளுரிலியே ஒரு பொண்ணப் பாத்து அவன் அப்பன் கண்ணாலத்த முடிச்சிட்டான். அஞ்சி மக்களப் பெத்துப்புட்டு அவ னும் செத்துப்போயிட்டான்” என்று சொல்லும்போது பொண்ணுக்குச் சிரிப்பு வந்தது. கல்யாணப் பெண் மாதிரி வெட்கப்பட்டுச் சிரித்தாள்.

ஆனால் சேதுபதிக்கும் டேவிட்டுக்கும் சிரிப்பு வரவில்லை. எந்த விதத்தி

லாவது அவளுக்குக் கல்யாணம் நடந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட் டனர்.

“பாண்டி என்னா சாதி?” டேவிட் கேட்டான்.

“தேவரு.”

“பாண்டியோட அப்பா பேரு?”

“தங்கபாண்டி தேவரு.” டேவிட் குறித்துக்கொண்டான்.

“அதுக்குப் பின்னால ஒங்கள யாரும் பொண்ணு கேட்டு வரலியா?”

“அப்பப்ப எவனாச்சும் நெனப்பு எடுத்துக்கிட்டாப்ல வருவான். பேசுவான். போயிடுவான். பத்து இருவது வருசம் இதான் நடந்துச்சி. எல்லாரும் என்னெ ஊர்க்காலி மாடா வச்சிக்கத்தான் ஆசப்பட்டாங்க. ஒருத்தனும் தொழுவத்து மாடா வச்சிக்க விரும்பல. நான் பாத்தன். வயசும் முப்பதுக்கு மேல ஆச்சி. போங்கடா நீங்களுமாச்சு, ஒங்க சாமானுமாச்சுன்னு ஒரேடியா கண்ணாலம் வாணாமின்னுட்டன். இந்தா அந்தான்னு எனக்கும் வயசாயிப் போச்சி. ஒடம்புல இருந்த நீரும் சுண்டிப்போச்சி. சின்ன வயசுல சீனிக் கிழங்காட்டம் இருப்பன். இன்னமுட்டும் நான் ஒரு ஆம்பளகூட படுத்ததில்ல தெரியுமா?”

பொண்ணுவின் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கிற்று. சேதுபதியும் டேவிட்டும் பேசாமல் உட்கார்ந்திருந்தனர். காரணமே இல்லாமல் தண்ணீர் குடிப்பதும் டேப்ரிக்காடரைச் சரிசெய்வதுமாக உட்கார்ந்திருந்தனர்.

“ஒங்கம்மாதான் மை, மந்தரம்ன்னு செய்யுற ஆளாச்சே. ஒங்களுக்கு அந்த மாரி ஒண்ணும் செய்யலியா?”

“ஊருக்குத்தான் பலிக்கும். ரத்த ஒறவுல செஞ்சா பலிக்காது.”

“ஊருக்கெல்லாம் குறி சொன்ன ஒங்க அப்பா அம்மா ஒங்களுக்கு ஒண்ணும் சொல்லலியா?”

“யாருக்கு எப்ப கண்ணாலம் நடக்கும், யாருக்கு எப்ப புள்ள பொறக்கும், யாருக்கு எப்ப நல்லது நடக்கும்ன்னு சொன்ன எங்க அம்மா எனக்கு எப்ப என்னா நடக்கும்ன்னு ஒரு வாத்த சொல்லல.”

“கலியாணம் கட்டி, குழந்த, குடும்பமின்னு இருந்திருந்தா சந்தோசமா இருந்திருக்குமா?”

“ஊருல ஒலகத்தில இருக்கிற பொண்டுவோ படும் பாட்டெப் பாக்கயில என் சீவனம் மோசமில்லெ. நேத்துத்தான் என்னெ மந்தயில போயி குமரிப்புள்ளெ குச்சல்ல குந்தவச்ச மாரி இருக்கு. இன்னிக்கிப் பாத்தா கிழ வியா குந்தியிருக்கன். காலம் ஓடிப்போச்சி. என்னெ சாக்குல போட்டுக் கட்டிக் கொண்டாந்து வுட்ட அன்னிக்கி எனக்கு ஒரு அரளி வெதகூட பஞ்சமாப் போச்சி. மருந்து குடிச்சி, தூக்குல தொங்கி சாவணுமின்னு எம்மனசுல படல. அப்ப எனக்கு எள வயசு. சிரிக்கிற மனசு. எங்கூடப் பொறந்தவங்க, கூட இருந்தவங்க, பெத்தவங்கன்னு எல்லாரும் மண்ணுக்குள்ளார போயிட்டாங்க. நான் மட்டும் குந்தியிருக்கன்.”

“கவலப்படாதீங்கம்மா.”

“எனக்கு நல்ல பொழப்பு கெடயாது. வெறும் வாளியா கெடக்குறன். சேட்டமில்லாம, மண்டயிடி, தலயிடின்னாத்தான் கேக்குறதுக்கு ஆளில்ல. பொண்ணா பொறந்தது குத்தமாப் போச்சி.” பொண்ணுவின் கண்கள் கலங்கியதும் “அழுவாதீங்கம்மா” என்று சேதுபதி சொன்னான். அவன்

சொன்னதைப் பொருட்படுத்தாத மாதிரி தன் போக்கில் சொன்னாள்.

“ ‘எவனயாச்சும் இயித்துக்கிட்டு ஓடண்டி. ஊரு ஒலகம் பேசுனா போவுது. திருட்டுப் புள்ளயாவது வாங்கிக்க’ன்னு ராவும் பகலும் புலம்பிப் புலம்பியே செத்துப்போனா அந்தச் சண்டாளி.”

பொண்ணுவின் மனதையும் பேச்சையும் மாற்ற நினைத்த சேதுபதி, “அந்தச் சமயத்திலெ நான் பொறந்திருந்தா சத்தியமா ஒங்கள நான் கட்டியிருப்பன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னான். கொஞ்சம்கூட யோசிக்காமல் “சோலி முடியுற மட்டும் எல்லா ஆம்பள நாயிவுளும் பொம்பளய ‘சக்கரசக்கர’ம்பானுவோ. சோலி முடிஞ்சதும் ‘கழிசட, கழிசட’ம்பானுவோ” என்று பொண்ணு சொன்னதும், சேதுபதியின் முகம் தொங்கிப்போயிற்று. டேவிட் வாய்விட்டுச் சிரித்ததும் சேதுபதியும் சிரித் தான்.

“அந்தக் காலத்தில குஞ்சி தடிக்காத பயலுவோ எல்லாம் எஞ்சூத்து பின்னாலியேதான் திரிவாங்க. எங்க ஊட்டடியே சுத்திசுத்தி வருவாங்க.”

“எதுக்காக?”

“ஊருல வழுக்கி விழுந்தவங்கிற பேரோட ஆளில்லாம ஒத்தயில சும்மா இருந்த பொண்ணு நான் மட்டும்தான? அதுக்குத்தான்” என்று சொன்ன பொண்ணு ஒரு புது கல்யாணப் பெண் மாதிரி வெட்கப்பட்டுச் சிரித்தாள். மறுநொடியே அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

“ஆனாலும் என் வவுறு தரிசாப் போச்சி.”

“சின்ன வயசில எப்பிடியிருந்தீங்க? என்னா செஞ்சிக்கிட்டு இருந்தீங்க?”

“இந்த ஊட்டுலதான் பொறந்தன். இந்த வாசப்படியிலயும், தெருவு லயும்தான் வளந்தன்.”

“கல்யாணம் ஆகாததால ஒங்க வாழ்க்க வீணாப்போயிடிச்சின்னு

நெனக்கிறீங்களா?”

“வாழ்க்க வாழ்க்கன்னு சொல்லுறியே, அது என்னா கல்லூடா? இப்

பிடிக் கட்டலாம் அப்பிடிக் கட்டலாமின்னு சொல்றதுக்கு, செய்யுறதுக்கு? பெய்யுற மழ வெள்ளமா ஆத்துல ஓடுமா, ஓடயில ஓடுமா, கம்மாயில

தேங்கி நிக்குமான்னு யாருக்குத் தெரியும்? எல்லாம் மனசுதான். ஒருத்தங் கூட படுக்கல. ஒரு புள்ளக்கிப் பாலு கொடுக்கல. வேற என்னா கொற? இடுப்பு மறைக்கிறதுக்கு ஒரு வட்டுத் துணி, வவுறு காயாம இருக்கிறதுக்கு ரவ கஞ்சி. அதுக்கு மேல என்னா வேணும்? நகநட்டயா திங்க முடியும்? ஏதோ பொறந்தம், வளந்தம், செத்தமின்னு போவணும். புள்ளெ மக்களப் பெத்தவங்க மட்டும் சாவாம இருக்கப்போறாங்களா? யாரயோ தூக்கப் போயி என்னெத் தூக்கிட்டுப் போயிட்டாங்க. அதுக்கு யாரக் குத்தம் சொல்றது? தெனம்தெனம் சமுத்திரத்தில குதிக்கிறவனுக்குச் சமுத்திரம் பெருசா?”

பொண்ணுவின் மனநிலையை மாற்ற நினைத்த சேதுபதி கேட்டான்: “ஒங்கள மந்தயில உட்கார வச்சப்ப துணைக்கு யாரு இருந்தாங்க?”

வாய்விட்டு சிரித்த பொண்ணு. “தீட்டுக்காரிச்சிக்கூட யாரு இருப்

பாங்க? தனியாத்தான் இருக்கணும். ராத்திரியில மட்டும் பரணுக்குக் கீழ எங்கப்பா படுத்திருப்பாரு. பகல்ல தனியாத்தான் குந்தியிருக்கணும்.”

“எப்பிடி சும்மாவே குந்தியிருப்பீங்க?”

“பொயிதுபோறதுக்கு ஆடு புலி ஆட்டம், தாயங்கட்ட, பல்லாங்குழி, புளியமுத்து ஆட்டமின்னு ஆடிக்கிட்டிருப்பன்.”

“யாருகூட?”

“ஒத்தயிலதான்.”

“இந்த ஊருல யாரு வயசுக்குவந்தாலும் மந்தயிலதான் குடிசப் போட்

டுத் தங்கவைப்பாங்களா?”

“எங்க எனத்துல மட்டும்தான் அப்பிடி.”

“இப்பியுமா?”

“ஆமாம்.”

“உண்மயத்தான் சொல்றீங்களா?”

“ஜக்கம்மா மேல சத்தியம்.”

“இப்ப யாராச்சும் வயசுக்குவந்திருக்காங்களா?”

“போன புதன்கிழம கௌதமின்னு ஒரு பொண்ணு வயசுக்குவந்தா.

இப்ப அவ மந்தயில குமரிப்புள்ள குடிசயிலதான் குந்தியிருக்கா. போனிங் கின்னா பாக்கலாம்.”

“ரியலி... ரியலி... ரியலி... ரெண்டாயிரத்து பதிமூணுலயும் அப்பிடி இருக்கா?” என்று திரும்பத்திரும்பக் கேட்டான் டேவிட்.

“இப்பிடியே சோத்துகை பக்கமா போனா, குமரிப்புள்ளெ குடிசயில அந்தக் குட்டியப் பாக்கலாம்.”

“போவும்போது பாத்துக்கிறம். ஒங்கப்பா அம்மா எப்ப செத்தாங்க? ஒங்கண்ணன் எப்ப செத்தாரு? அவுருக்குப் பின்னால ஒங்களுக்கு யாரு ஆதரவா இருந்தாங்க?”

“என்னோட எளம் வயசிலியே என்னெப் பெத்தவங்க போயிட்டாங்க. எனக்குத் தலயில நர தெரியுறப்ப எங்கண்ணன் செத்தாரு. எங்கண்ணனுக்கு முன்னயும் பின்னயுமா எங்க அக்காளுவ போயி சேந்தாங்க.”

“ஒங்களுக்கு யாரு ஆதரவா இருந்தாங்கன்னு கேட்டன்?”

“காட்டுல மொளக்கிற செடிக்கி யாரு காவலு? கடவுளுதான் காவலு.

அந்தக் காலத்திலெ பொறக்குறமுட்டும்தான் தாயோட வவுறு. மத்ததெல் லாம் தெருவுலதான். இந்தத் தெருவுலதான் வளந்தன். நான் மட்டுமில்லெ, இந்த ஊருல பொறந்த புள்ளிங்க எல்லாம் தெருவுலதான் வளருங்க. தூங் கறதுக்கு மட்டும்தான் ஊடு. அந்தக் காலத்து சனங்களுக்கு வவுத்துக்குச் சோறு மட்டும்தான். அதுக்குத்தான் ராவும்பகலும் பறவாப் பறந்தாங்க. எங் கண்ணன் இருக்க மட்டும் என் வவுறு பசி அறிஞ்சதில்லெ. அவரு போன தும் மழ அறியாத காடு மாரி ஆயிப்போச்சி. எப்பியும் எங்கண்ணன் என்னெ ‘சின்னப் புள்ளெ சின்னப் புள்ளெ’ன்னுதான் கூப்புடுவாரு.”

“ஒங்க அக்கா பொண்ணுங்க, ஒங்க அண்ணன் பொண்ணுங்கன்னு இன் னம் ஒங்களப் பாக்க வர்றாங்க இல்லியா?”

“எல்லாம் ரெண்டாம் கால் மூணாங்கால் ஒறவாயிடிச்சி. எல்லாத்துக் கும் பச்ச இருந்தாதான் மேயுறதுக்கு ஆடு மாடு வரும்? சொந்தம் அத்துப் போச்சி.”

“அப்ப யாருமே வர்றதில்லியா?”

“வர்றாங்க, வர்றாங்க. அதான் முன்னியே சொன்னல்லெ. புள்ளெ பொறந்தா பீ மூத்தரம் அள்ளுறதுக்குக் கூப்புட வருவாளுவோன்னு. தொழிலுக்குப் போகயில புள்ளிவுள எங்கையில போட்டுட்டுப் போயிடுவாளுவ.”

“ஜக்கம்மா கோவுலுக்குப் போயிருக்கீங்களா?”

“போவாம எப்பிடி இருக்க முடியும்? நான் மட்டுமில்லெ, எங்க எனத்து சனத்தில ஒண்ணு பாக்கி இல்லாம ஜக்கம்மா திருநாவுக்கு வந்துடுங்க. எந்த ஊருல, எந்த நாட்டுல இருந்தாலும் ஓடியாந்திடுங்க. அப்பிடி வல்லன்னா அந்த வருசம் தொழிலு மேவாது. ஜக்கம்மா திருநாவுல ஒம்போது ராஜ கம்பளத்து நாயக்கமாரயும் பாக்கலாம். கண்ணு கொள்ளாது கூட்டம். கடலாட்டம் இருக்கும்.”

“ஒம்போது கம்பளத்து நாயக்கருன்னா?”

“தோக்கலவாரு, சில்லுவாரு, ஒட்ட நாயக்கரு, தொட்டி, பசாலின்னு

மொத்தம் ஒம்போது இருக்கு. ‘ஒம்போது கம்பளத்தாரயும் விளங்கிட செய்வா ஜக்கம்மா’ன்னு ஒரு பாட்டு இருக்கு. அந்த ஒம்போதுல ஒண்ணுதான் கட்டபொம்மு.”

“வாட்-வாட்-கட்டபொம்மன்?” என்று டேவிட் கேட்டான்.

“கட்டபொம்மன் எதுல வராரு?”

“ஒம்போது நாயக்கமாருல ஒண்ணு.”

“ஜக்கம்மா கோயிலு எங்க இருக்கு?”

“பாஞ்சாலங்குறிச்சியில.”

“கட்டபொம்மன் கும்புட்ட சாமியில்லெ” சேதுபதி ஆச்சரியம் மேலிடக் கேட்டான்.

“அதான் எங்களுக்கும் சாமி. குல தெய்வம்.”

கட்டபொம்மன் குறித்து சிறிது நேரம் டேவிட்டிடம் சேதுபதி ஆங்கி லத்தில் சொன்னான். ‘ரியலி ரியலி’ என்று வியப்புடன் கேட்ட டேவிட் சேதுபதி சொன்ன தகவல்களைக் குறித்துக்கொண்டான்.

“இன்னம் ஜக்கம்மாவ நம்புறீங்களா?”

“பின்னெ? ஜக்கம்மா ராத்திரி சாமி. ராத்திரியிலதான் அவளுக்கு பவரு. இருட்டுலதான் அவ அதிகாரம் பலிக்கும். கொடுர குணம் கொண்டவ. அவப் பேரச் சொல்லி மை, மந்தரம் செஞ்சா அப்பிடியே பலிக்கும். ஆனா பகல்ல வெறும் மண்ணாட்டம் கல்லாட்டம்தான் இருப்பா. அதனாலதான் எங்க ஆளுவ ராத்திரியில தொழிலுக்குப் போவாங்க.”

“சாமக்கோடாங்கி. குடுகுடுப்பக்காரன்னு சொல்லுவாங்களே.”

“அதான்.”

“எங்கம்மா தொழிலுக்குப் பகல்லதான் போவா. அவ வாக்கு சொன்னா மாறாது. தோசம், பரிகாரம், மை, மந்தரம்ன்னு அச்சு அச்சா சொல்லுவா. செய்வா.”

“எப்பிடிச் சொல்றீங்க?”

“ராஜ கம்பளத்து நாயக்கன் வாக்கு கடலு கடந்தும் போவுமின்னு

சொல்லுவாங்க.”

“ஒங்கய்யா பேரு என்ன?”

“ஜக்கய்யா.”

“அம்மா பேரு.”

“ஜக்கம்மா.”

“எல்லாம் சரி. ஜக்கம்மா ஒங்களுக்கு ஒண்ணும் செய்யலியே.”

“எல்லாம் செஞ்சியிருக்கா, நல்ல வழியத்தான் காட்டியிருக்கா.”

“புரியல. என்னா வழி?”

“சுடுகாட்டுக்குப் போற வழியத்தான் காட்டியிருக்கா.”

“திருப்பிச் சொல்லுங்க.”

“நான் பருவத்துக்கு வராம இருந்திருந்தா எந்தச் சிக்கலும் வந்திருக்காது. எல்லாம் ஜக்கம்மா முடுவு. என்னெப் பாவக் கிரகம் புடிச்சிக்கிச்சி பொறக் கயிலியே. அதுக்கு ஜக்கம்மா என்னா செய்வா? வழுக்கி விழுந்தவங்கிற பேரோடதான் என் பொணம் போகும். நான் நெனச்சியிருந்தா ஆயிரம் கண்ணாலம் கட்டியிருக்கலாம். ஆயிரம் புள்ளெ பெத்திருக்கலாம். திருட்டுக் கண்ணாலம் கட்டுனதா காலத்துக்கும் அவப் பேருதான?”

“திருட்டுக் கல்யாணமின்னா என்னா?” என்று டேவிட் கேட்டான்.

“லவ் மேரேஜ். அப்பா அம்மாவுக்குத் தெரியாம தானா ஓடிப்போயி கல்யாணம் கட்டிக்கிறது” என்று சேதுபதி சொன்னான்.

“லவ் மேரேஜ்ஜும் திருட்டுக் கல்யாணமும் ஒண்ணா?”

“நோ, நோ. ரெண்டும் ஒண்ணு மாதிரி இருந்தாலும் வித்தியாசம் இருக்கு” என்று சொன்ன சேதுபதி ஆங்கிலத்தில் ஏதோ டேவிட்டிடம் சொன்னான். டேவிட்டும் சேதுபதியும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட பொண்ணுக்கு என்ன தோன்றியதோ “மாப்ளயும் பொண்ணும் தானா போயி கட்டிக்கிறதுக்குப் பேரு கண்ணாலமில்லெ. ஊட்டுல உள்ளவங்க, ஒறவுக்காரங்க, ஊருக்காரங்க, சாதிக்காரங்க பாத்து செஞ்சி வச்சாத்தான் கண்ணாலம். தானா ஓடிப்போயிக் கட்டிக்கிட்டா அது திருட்டுக் கண்ணாலம்தான்” என்று பொண்ணு அழுத்தம்திருத்தமாகச் சொன்னாள். பிறகு தொடர்ந்து “ஊட்டுல உள்ளவங்க, ஒறவுக்காரங்க, ஊருக்காரங்க, சாதிக்காரங்க இல்லாம நடக்கிற கண்ணாலம், கண்ணாலமா அது? அப்பிடி செஞ்சா சாதியில சேத்துக்க மாட்டாங்க. சாதியிலிருந்து ஒதுக்கிவச்சிடுவாங்க” என்றாள்.

“நீங்க எந்தக் கம்பளத்து நாயக்கரு.”

“வாக்கு சொல்றவங்க. தொட்டிநாயக்கரு. குறிகாரன், குறிசொல்றவன் னும் சொல்லுவாங்க.”

“ஒங்களுக்கு ஜோசியம் சொல்லத் தெரியுமா?”

“தெரியாது.”

“பொய் சொல்லிப் பொழப்பு நடத்துறதான்னு நான் கத்துக்கலே.”

“ஆச்சரியமா இருக்கு.”

“இந்த ஒம்போது நாயக்கருல வித்தியாசம் இருக்கா?”

“அப்பிடிலாம் ஒண்ணுமில்லெ. மத்தவங்க எங்களப் பாத்து ‘அவுங்க கொடுக்கப் பிறந்தவங்க இல்லெ. வாங்கப் பொறந்தவங்க. நாடாறு மாசம் காடாறு மாசமின்னு திரியிறவங்க. யாசகம் எடுத்துத் திங்கிற பயலுவோ’ன்னு மட்டரகமா பேசுவாங்க.”

“ஜோசியம் சொல்ல எப்பப் போவாங்க?”

“அறுக்கறப்ப போவாங்க. வெதக்கறப்ப ஊட்டுக்கு வந்துடுவாங்க.”

சேதுபதி சிரித்தான்.

“எதுக்கு சிரிக்கிற? அறுவட நடக்கிறப்பப் போனாத்தான சனங்க கையில தானியம் தவசமின்னு இருக்கும், கொடுப்பாங்க. அப்பத்தான கையில காசி பணம் இருக்கும்? அதுக்காதண்டித்தான் அப்பப் போறது, ஆறு மாசத்தில எங்க சனங்க தமிலு நாட்டயே ஒரு சுத்து சுத்தி வந்துடு வாங்க.” என்று

சொல்லிப் பொண்ணு சிரித்தாள்.

“ஒங்க சனங்க ஊர்ஊரா அலயறத வுட்டுட்டு, மாயமந்தரம்ன்னு செய்

யறத வுட்டுட்டு, ஊருலியே இருந்து வேல செஞ்சி சீவனம் செய்யக் கூடாதா?”

“எங்க சனங்க சும்மா இருந்தாலும் ஊர் சனங்கதான் மாயமந்தரம் செய்

யுற ஆளுவுளத் தேடிக்கிட்டு அலயிறாங்களே. அதுக்கு மேல எங்க சனங் களுக்கு ஒரு எடத்துல இருந்து வேல செய்ய புடிக்காது. ஊர்ஊரா அலயுறது தான் புடிக்கும்.”

“ஒங்க எனத்துல முக்கியமான சாப்பாடு எது?’

“வெத்தலபாக்கு.”

“ஒங்க எனத்து ஆளுவோ எங்க அதிகமா இருப்பாங்க?”

“ராஜபாளையத்துப் பக்கம், கோவில்பட்டிப் பக்கம்.”

“சரி, நாங்க கிளம்பறம்?” என்று சொல்லிவிட்டு சேதுபதி எழுந்ததும் டேவிட்டும் எழுந்தான். பொண்ணுவிடம் ஐநூறு ரூபாய் பணம் கொடுத் தான்.

பணத்தை வாங்கி திரும்பித்திரும்பி பார்த்துவிட்டு “எனக்கு எதுக்குப் பணம்? அதுவும் இம்மாம் பணம். சும்மாப் பேசிக்கிட்டிருந்ததுக்கு எதுக்குப் பணம் தர்றீங்க?” என்று சொல்லிவிட்டுப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தாள். பணத்தைத் திருப்பி தந்ததும் டேவிட் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டு களையும், ஐந்து சாக்லெட்டுகளையும் பையிலிருந்து எடுத்து கொடுத்தான்.

“திங்குற பண்டம் திங்குற வயசா எனக்கு? வாசல்ல புள்ளிவோ இருந்தா கொடுத்திட்டுப் போங்க.”

“ஒரு போட்டோ எடுத்துக்கிறன்.”

“சாவப்போற கிழவியப் படம் எடுத்து என்ன செய்யப்போற?” பொண் ணுவின் பேச்சைக் கேட்காமல் டேவிட் அவளை நிழற்படம் எடுத்தான்.

“நாங்க கௌம்பறம்” என்று சொல்லிவிட்டு சேதுபதி முதலில் வெளியே போனான்.

அவனையடுத்து டேவிட்டும் பொண்ணும் வெளியே வந்தனர். திடீ ரென்று நினைவுக்கு வந்த மாதிரி சேதுபதி கேட்டான்.

“இம்மாம் நேரம் பேசிக்கிட்டிருந்தாலும் ஒங்க உண்மையான பேரக் கேக்கறதுக்கு மறந்திட்டம் பாருங்க.”

“திருட்டுப்போன பொண்ணுதான்.” சேதுபதியும் டேவிட்டும் சிரித் தனர். திருட்டுப்போன பொண்ணும் வாய்விட்டுச் சிரித்தாள்.

“ஒங்களுக்குப் பொழுது எப்பிடி போவுது?”

“பேசிப்பேசித்தான்.”

“இப்ப சந்தோசமாத்தான் இருக்கீங்க?”

“எனக்கென்ன புருசனா புள்ளயா, மாமியா, மாமனா புடுங்கலா? வவுத்து சொம இருந்தாத்தான காலத்துக்கும் தொவந்தன? அதான் எனக்கு இல்லியே. அப்பறம் சந்தோசத்துக்கு எனக்கு என்னா கொறச்ச?” பொண்ணு அழ ஆரம்பித்தாள்.

“இன்னிக்கும் அந்தப் பேரச் சொல்லித்தான் கூப்புடுறாங்களா?”

“ஆமாம். எனக்கு வயசி ஆயிடிச்சி. ஆனா எங்கதெக்கு வயசி ஆவல, பேசிப்பேசி, சொல்லிச்சொல்லியே புதுசா ஆக்கிக்கிட்டேயிருப்பாங்க. எப்பலாம் பொண்ணு திருட்டுப் போவுதோ அப்பலாம் அன்னிக்கித் திருட்டுப் போன பொண்ண வுட்டுட்டு என்னப் பத்தித்தான் சனங்க பேசுறாங்க.”

“ஏன் அப்பிடி?”

“திருட்டுப்போனதில, தூக்கிக்கிட்டுப் போனதில கண்ணாலம் ஆவாம நின்னு போன பொண்ணு நான் மட்டுந்தான. வேற யாருமில்லியே.”

“ஒங்கள தூக்கிக்கிட்டுப் போனப்ப என்னா நெனச்சீங்க?”

“ஜக்கம்மா என்னெ சாவடிச்சிடுன்னு வேண்டுனன்.”

“இப்ப நீங்க ஜாக்கம்மாகிட்டெ என்னா வேண்டுவீங்க?”

“என்னெ சாவடிச்சிடுன்னுதான்.”

“சத்தியமாவா?”

“ஜக்கம்மா மேல சத்தியம். அன்னியிலிருந்து இன்னியமுட்டும் நான் வுட்ட கண்ணீரு கடலத் தாண்டி இருக்கும். புழுத்த நாயா பெருஞ்சோறு தின்னுட்டு குந்தியிருக்கன்.” லேசாக அழுதாள் பொண்ணு. மூக்கை உறிஞ்சிக்கொண்டே சொன்னாள்: “வேற என்னாத்த வேண்டுறது? ஒரே வேண்டுதலதான். அந்த ஒரு வரத்த மட்டும் அந்தச் சாகசக்காரி எனக்குத் தர மாட்டங்கிறா. உசுரோட இருந்தாத்தான எல்லா துன்பமும்? எனக்குப் புள்ளெ வரம் கொடு, புருசன் வரம் கொடுன்னு கேட்டதில்லெ. என்னெச் சாவடிச்சிடுன்னுதான் வேண்டுறன். கண்ணுத் தெரியாத குருடங்களுக்கும், கை கால் இல்லாத நொண்டி மொடங்களுக்கெல்லாம் கண்ணாலம் நடக் குது. புள்ளெ குட்டியும் பொறக்குது. குடும்பமாவும் இருக்குதுவோ. ஒலகத்திலெ யாரும் செய்யாத பாவத்தயா நான் செஞ்சிப்புட்டன்? பச்சப் புள்ள யத் தூக்கிக்கிட்டுப்போயி கழுத்த அறுத்தாப்ல எந்தலயில தீய வாரிக் கொட்டிப்புட்டாங்களே” பொண்ணு அழ ஆரம்பித்தாள்.

அழுது தீர்க்கட்டும் என்று சேதுபதியும் டேவிட்டும் பேசாமல் நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து சன்னமான குரலில் சேதுபதி கேட்டான்: “ஒங்க நெலம இனிமே என்னாகும்?”

“கனிஞ்ச பழம் அயிவிப்போயிடும் இல்லியா? அதான் எங்கதெ. பொண்டாட்டியா ஆவ மாட்டன். தாயா ஆவ மாட்டன். மருமகளா, நாத்தனாரா, கொழுந்தியாளா, பாட்டியா ஆவ மாட்டன். மண்ணாத்தான் ஆவன். சோத்த போட்ட ஜக்கம்மா வெஞ்சனம் ஊத்த மறக்க மாட்டான்னு இருந்திட்டன். “இது என்னோட தலயெழுத்து, என்னோட கவல, நாந்தான் அழுவணும். இது என்னோட சாவு. நாந்தான் சாவணும்.”

இமயம்