இமயம்
இலக்கியக் களஞ்சியம்

தேடல்எழுத்துலகைத் தேடுங்கள்.

நூல்கள் · சிறுகதைகள் · கட்டுரைகள் · நேர்காணல்கள்

சாவு சோறு
இமயம் · சிறுகதைகள்

சாவு சோறு

வாசிப்பு முறை
கதைக்குள் நுழைய
இமயம்

சாவு சோறு

வாசிப்பு
19

“யாரும்மா அங்க போறது? உள்ளாரலாம் போவக் கூடாது. இந்த நேரத்திலெல்லாம் புள்ளங்களப் பாக்க முடியாது. பரீட்ச நடந்துக்கிட்டிருக்கு. வெளிய போம்மா” என்று கத்திக்கொண்டே ஓடிவந்தான் வாட்ச்மேன். கேட்டைத் தாண்டி ஐந்தாறு தப்படி தூரம்கூட வந்திருக்க மாட்டாள் பூங்கோதை. அதற்கே அடித்து விடுவது மாதிரி முறைத்தபடி வழியை மறித்துக்கொண்டு அவன் நின்றான். கணுக்காலுக்கு மேலே தூக்கிக் கட்டியிருந்த சீலை, மொட்டைத் தலை, வியர்வை வழிந்து உப்புப் பூத்திருந்த சட்டை, தடித்த கருத்த உருவம், பேந்தப்பேந்த விழித்துகொண்டு நிற்பதைப் பார்த்ததும் பைத்தியமாக இருக்குமோ என்று நினைத்தான் வாட்ச்மேன். அதனால் அவனுக்கு முன்பைவிட இப்போது கோபம் கூடியிருந்தது. பார்வையிலும் அலட்சியம் அதிகரித்தது.

“இங்கலாம் வரக் கூடாது. நீ எப்பிடி கேட்டத் தாண்டி உள்ளார வந்த? பசங்களத் தவுத்து வேற யாரும் கேட்டத் தாண்டி உள்ளார வரக் கூடாது. போ வெளிய. நீ உள்ளார வந்தது மேடத்துக்குத் தெரிஞ்சா என் வேல போயிடும் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு நெட்டித் தள்ளாத குறையாகப் பூங்கோதையை கேட்டுக்கு வெளியே தள்ளிக்கொண்டு வந்துவிட்டான். “பிச்ச எடுக்கிறதுக்குப் பள்ளிக்கூடத்துக்கா வருவாங்க? சீக்கிரம் இந்த எடத்த வுட்டுப் போம்மா. கரஸ்பாண்டண்டு மேடம் வந்தா அவ்வளவுதான் என் வேல. படிக்கிற புள்ளங்களோட பெத்தவங்களயே உள்ளார வுட மாட்டாங்க மேடம்.”

“ஒரு பொண்ணப் பாக்கறதுக்குத்தான் வந்தன்.”

“யாரப் பாக்கிறதா இருந்தாலும் இப்பப் பாக்க முடியாது. வெளிய வந்த பின்னால பாத்துக்க. அதுவரைக்கும் இந்த கேட்டத் தாண்டக் கூடாது. புரியுதா? ஒம் புள்ளயா படிக்குது?” என்று ஒரு தினுசாகக் கேட்டான் வாட்ச்மேன்.

“படிக்கிற புள்ளெ இல்லெ சாமி.”

“பின்னெ?”

“அம்சவள்ளின்னு ஒரு பொண்ணு வேல செய்யுதான்னு கேக்கத்தான் வந்தன்.”

“அந்தப் பேருல இங்க யாரும் இல்லெ.”

தான் சொல்வது அவனுக்குப் புரியவில்லைபோல் இருக்கிறது என்று நினைத்த பூங்கோதை ரகசியமாகச் சொன்னாள் “படிக்கிற புள்ளெ இல்லெ. டீச்சரா வேல செய்யுதான்னு பாக்க வந்தன்.”

“அப்பிடி யாரும் இங்க வேல செய்யல.”

“உள்ளார செத்த கேட்டுப்பாருங்க. ஒங்களுக்குப் புண்ணியம் கெடைக்கும்.”

வாட்ச்மேனுக்குக் கோபம் வந்துவிட்டது. கோபத்தோடு கேட்டான். “இங்க நான்தான் வாட்ச்மேன். எனக்குத் தெரியாதா? நீ சொல்ற பேருல இங்க யாரும் டீச்சரா இல்லெ.”

“வேலக்கி சேந்து பத்து பாஞ்சி நாளுதான் இருக்கும். சிவப்பா உசரமா இருப்பா. இடுப்புமுட்டும் சாட்டயாட்டம் மசுரு தொங்கும்.”

“முழாண்டு பரீட்ச நடக்கிற நேரத்தில யாரயும் வேலக்கி சேக்க மாட் டாங்க. வேணும்ன்னா வேறப் பள்ளிக்கூடத்தில போயி பாரு” என்று சொல்லிவிட்டு வாட்ச்மேன் உட்காருவதற்கு என்று போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்துகொண்டு மீசையை முறுக்கித் தடவ ஆரம்பித்தான். பூங்கோதைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அம்சவள்ளியைப் பற்றிச் சொல்லலாமா என்று யோசித்தாள். விசயம் தெரிந்தால் மனம் இரங்கி உண்மையைச் சொல்லக்கூடும் என்று நம்பினாள். அதனால் வாட்ச்மேன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தாள். ஏழெட்டு அடி தூரம் நடந்திருப்பாள். அதற்கே அவளுக்கு முடியவில்லை. தலை கிறுகிறுப்பு வந் தது. பசிமயக்கம். தண்ணீர் தாகம். வெயில், காலையிலிருந்து ஒவ்வொரு இடமாக நடந்தது, ஒவ்வொரு ஆளாக விசாரித்தது என்று அவளைக் களைப் படைய செய்தது. நிற்பதற்கே சிரமப்பட்டாள்.

“சொன்னா புரிஞ்சிக்க. நீ சொல்ற பேருல இந்தப் பள்ளிக்கூடத்தில யாரும் இல்லெ. மேடம் வர்ற நேரமாச்சு. வழியில நிக்காத.”

“எங்க பொண்ணு ஊட்ட வுட்டு வந்துடுச்சி. படிச்சியிருக்கு. அதனால பள்ளிக்கூடத்தில எங்கனாச்சும் டீச்சரா வேல செய்யலாமின்னு தேடிக்கிட்டு அலயுறன் சாமி. கொஞ்சம் விசாரிச்சி சொல்லுங்க” என்று பூங்கோதை சொன்னதும் வாட்ச்மேனின் முகம் மாறிவிட்டது.

“என்னம்மா சொல்ற?”

“கோவிச்சிக்கிட்டு வந்துடுச்சி. அதான் எங்கியாச்சும் இருக்குமான்னு தேடுறன்.”

“மத்தப் பள்ளிக்கூடத்தில போயி விசாரிச்சிப்பாரு. நீ சொல்ற பேருல இங்க யாரும் இல்லெ.”

“எல்லா எடத்துக்கும் போயிப் பாத்தங்க. பாத்தன்னு யாரும் சொல்லல. கண்டன்னு யாரும் சொல்லல.”

வாட்ச்மேனுக்குக் கோபம் வந்துவிட்டது. மீசையை உருவிவிட்டபடியே “இந்த ஊருல இருவதுக்கும் மேல பள்ளிக்கூடம் இருக்கு, தெரியுமா?”

“போவாத எடமில்லெ சாமி.”

வாட்ச்மேன் சிரித்தான். சிறிது நேரம் பூங்கோதையையே பார்த்தான். பிறகு கரஸ்பாண்டண்டு கார் வருகிறதா, பள்ளிக்கூடத்தை நோக்கி யாரும் வருகிறார்களா என்று பார்த்தான்.

“பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில ஒரு பள்ளிக்கூடம் இருக்கே. அங்க பாத்தியா?”

“போனங்க.”

“பெரிய கோவுலுக்குப் பக்கத்தில பெருசா ஒரு பள்ளிக்கூடம் இருக்குமே.”

“அங்க காலயிலியே போயி தேடுனங்க.”

“ஆத்த ஒட்டி ஒரு பள்ளிக்கூடம் இருக்கே. அங்க போனியா?”

“மொதல பஸ்ட்டு அங்கதான் போனங்க.”

“பெருமா கோவுலுக்கிட்ட ஒரு வீட்டுல சின்னதா ஒரு பள்ளிக்கூடம் இருக்கு.”

“அவங்கதான் இங்க வழிய காட்டிவுட்டாங்க.”

வாட்ச்மேனுக்குக் கோபம் வந்துவிட்டது. பூங்கோதையை ஏறஇறங்கப்பார்த்தான். பைத்தியமா இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. எதற்கெடுத் தாலும் பதில் பேசுகிறாளே என்று வெறுப்பும் வந்தது. ஆனாலும் அவள் நிற்கிற விதமும், அவளுடைய தோற்றமும், பேச்சும் பைத்தியம் இல்லை என்பதைக் காட்டின. அதனால் “கவருமண்டு ஸ்கூல்லப் பாத்தியா? அங்க தான் பி.டி.ஏ.வுல ஆளு எடுப்பாங்க” என்று சொன்னான்.

“தாலூகா ஆபீஸ்கிட்ட இருக்கே அந்தப் பள்ளிக்கூடமா?”

“ம்.”

“நல்லா விசாரிச்சிட்டங்க. ஒரு மணி நேரம் குந்தியிருந்தும் பாத்தங்க.”

“அப்பன்னா ஒம் பொண்ணு இந்த ஊருல இல்ல. போ. ஓடிப்போன பொண்ணப் பள்ளிக்கூடத்திலியா தேடுவாங்க?” என்று சொல்லி முறைத்த வாட்ச்மேன், திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி “கேள்ஸ் ஸ்கூல்ல பாத் தியா?” என்று கேட்டான்.

“அது எங்க இருக்கு?”

“காந்தி நகர்ல.”

“எந்த எடமின்னு தெரியலியே சாமி.”

“பெண்ணாடம், திட்டக்குடி போற ரோட்டுல கடசியில இருக்கு.”

“அங்க போவல. அந்த எடம் பக்கத்திலியா, தூரத்திலியா?”

“நீ நடந்து போவ முடியாது. காருல போனா ரெண்டு பஸ் புடிக்கணும். அப்பிடி நீ போறதுக்குள்ளார ஸ்கூல வுட்டுடுவாங்க. அதனால நீ ஒரு ஆட்டோ புடிச்சி போ. இன்னியோட பரீட்ச முடியுது. நாளயிலிருந்து முழாண்டு லீவ். நேரத்திலியே பள்ளிக்கூடத்த வுட்டாலும் வுட்டுடு வாங்க.”

“காரு எங்க ஏறணும்?”

“நான் சொல்றது ஒங் காதில விழலியா? நேரத்தில போனா விசாரிக்கலாம். போனா போ. போவாட்டிப் போ. எனக்கென்ன?” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கரஸ்பாண்டண்டு கார் வருவது தெரிந்ததும் முகத்தையும், உடலையும் விறைப்பாக்கிக்கொண்டு, குல்லாவை எடுத்துத்தலையில் மாட்டிக்கொண்டு “போ, போ. எட்ட போ. மேடம் காரு வருது. போ” என்று கத்த ஆரம்பித்தான் வாட்ச்மேன்.

பூங்கோதைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நடக்க ஆரம்பித்தாள். கேர்ள்ஸ் ஸ்கூல் மூடிவிடுவார்களோ, எவ்வளவு தூரம் இருக்கும், எப்படிப் போவது, ஆட்டோவில் இதுவரை ஏறியது இல்லையே, எவ்வளவு பணம் கேட்பான் என்று யோசித்தாள். குழப்பமாக இருந்தது. போகலாமா வேண்டாமா? இத்தனை பள்ளிக்கூடத்திலும் இல்லாதவள், அந்தப் பள்ளிக்கூடத்தில் மட்டும் எப்படி இருப்பாள் என்று யோசனையாக இருந்தது.

கட்சிக்காரர்களைப் பார்க்கப் போகிறோம் என்று போன தன்னுடைய புருசன், மகன்கள் வீட்டுக்கு வந்திருப்பார்களா என்று யோசித்த பூங் கோதைக்கு வீட்டுக்குப் போய்விடலாம் என்று தோன்றியது. அம்சவள்ளி யைத் தேடிக்கொண்டு அலைவது தெரிந்தால் தன்னை உயிரோடு வைத்துக் கொளுத்திவிடுவார்களே என்று கவலையும் வந்தது. அதே நேரத்தில் “எனக்குச் சாவு வர மாட்டங்குதே. அவள எங் கண்ணுல காட்டுடா நொண்டி வீரா” என்று தன்னுடைய குலசாமியை வேண்டினாள்.

கடலூர் ரோட்டுக்கு வந்ததும் அங்கே நின்றுகொண்டிருந்த ஆட்டோக் காரனிடம் “காந்தி நகரு எங்க இருக்கு?” என்று கேட்டாள். அவன் இடத்தைச் சொல்லாமல் “போவலாம் ஏறு. எங்க போவணும்? ஏறு” என்று கட்டாயப்படுத்தினான். “எம்மாம் காசு?” என்று கேட்டதற்குப் பதில் சொல்லாமல் “ஏறு, ஏறு” என்று சொல்லிக் கட்டாயப்படுத்தினான். “செம்பளகுறிச்சி பஸ்ஸு போயிருக்குமா?” என்று கேட்டதற்கும் அவன் பதில் சொல்ல வில்லை. “ஏறு, ஏறு” என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தான். இழுத்துப்பிடித்து ஏற்றாத குறையாகத் தயங்கி நின்றுகொண்டிருந்தவளை ஆட்டோ வில் ஏற்றினான். ஆட்டோ வேகம் எடுத்தது. அவளுக்குத் தலைச்சுற்றல் மாதிரி இருந்தது. “தண்ணீ இருக்குமா தம்பி?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் ஆட்டோவுல கெடைக்காதும்மா. நீ காந்தி நகர்ல எங்க போவணும்?”

“பள்ளிக்கூடத்துக்கு.”

“கேர்ள்ஸ் ஸ்கூலா?”

“ஆமாம்ப்பா.”

ஆட்டோ முன்னைவிட வேகமெடுத்தது. பூங்கோதையின் பார்வை சாலையில் சீலை கட்டிக்கொண்டு போகிற பெண்களை ஆராய்ந்தது. அம்சவள்ளி இருப்பாளா?

“-----”

“இதான் கேள்ஸ் ஸ்கூல். எறங்கிக்க.”

“எம்மாம்?”

“அறுவது.”

“அம்மானா? பஸ்ஸில் வந்தா அஞ்சி ரூவாதான?”

“இது டவுனு பஸ்ஸில்ல. ஆட்டோ. எடு பணத்த.”

பூங்கோதைக்கு அதிகம் பேச முடியவில்லை. ஆட்டோக்காரனோடு பேசிக்கொண்டிருக்கும்போது பள்ளிக்கூடம் விட்டுவிட்டால் என்ன செய்வது என்ற கவலை. தன்னுடைய மகன்கள், புருசன் வீட்டிற்கு வருவதற்குள் வீட்டிற்குப் போய்விட வேண்டும் என்ற கவலை. பணத்தைத் தூக்கிக் கொடுத்துவிட்டுப் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தாள்.

கேட் இல்லை. வாட்ச்மேன் இல்லை. ஆள் நடமாட்டம் இல்லை. பிள்ளைகளின் சத்தம் இல்லை. பள்ளிக்கூடம் விட்டிருக்குமோ என்ற கவலையுடன் வேகமாக நடந்து ஒரு கட்டடத்திற்கு வந்தாள். வெளியில் நின்றபடியே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். பிள்ளைகள் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தது தெரிந்தது. அந்தக் கட்டடத்திலிருந்த ஒவ்வொரு ஜன்னலாக, ஒவ்வொரு அறையாகப் பார்த்துக்கொண்டே வந்தாள். அப்போது பள்ளிக்கூடத்தின் மையத்தில் இருந்த தூங்குமூஞ்சி மரத்தில் கட்டியிருந்த மணியில், மணியை அடிக்க வந்த ஒரு பெண் “யாரும்மா அங்க போறது?

அங்கலாம் போவக் கூடாது. ஹெட்மாஸ்ட்டரு திட்டுவாரு” என்று சொல் லிக்கொண்டே போய் ஒன்று, இரண்டு, மூன்று என்று மூன்று முறை மணி அடித்தாள். பூங்கோதை அடுத்த கட்டடத்தை நோக்கி நடப்பதைப் பார்த்த அந்தப் பெண் வேகமாக வந்து, “நான் சொன்னது கேக்கலியா? பசங்க பரீட்ச எழுதிக்கிட்டிருக்கு. இந்த நேரத்தில யாரயும் பாக்க முடியாது. அந்த மரத்துக்கிட்ட போயி இரு. பள்ளிக்கூடம் வுட்டதும் நீ யாரப் பாக்கணுமோ பாரு” என்று சொன்னாள்.

“இங்க அம்சவள்ளின்னு ஒரு பொண்ணு இருக்கா?”

“இங்க மூவாயிரம் புள்ளங்க படிக்குது. அம்சவள்ளிய யாரு கண்டா, அம்சம் இல்லாத வள்ளிய யாரு கண்டா? எத்தனாவது படிக்குது?”

“டீச்சரா இருக்கா.”

“அப்பிடி யாரும் இல்லெ.”

“நீ டீச்சரா?”

“இல்லெ. கூட்டுற வேலதான் செய்யுறன். கமலான்னா இங்க எல்லா ருக்கும் தெரியுமே. நீ புதுசா?”

“அம்சவள்ளின்னு யாருமில்லியா?”

“புள்ளங்க இருக்கலாம். டீச்சருங்க யாருமில்லெ. ரெண்டு வருசமா நான் இங்கதான் எழவு எடுக்கிறன். நீ சொல்ற பேருல எந்த டீச்சரும் இல்லெ. சரி. எதா இருந்தாலும் நீ அந்த மரத்துக்கிட்ட போயிடு. ஒன்ன இங்க கண்டா ஹெட்மாஸ்ட்டரு என்னத்தான் திட்டுவான்” என்று சொன்னாள் கமலா.

மரத்தை நோக்கி இரண்டு தப்படி நடந்த பூங்கோதை நின்று “ஒரு விசியம் கேக்கணும்” என்று சொன்னாள்.

“சொல்லும்மா. அந்த ஹெட்மாஸ்ட்டரு பய வேற நெனச்சதுக்கெல்லாம் மணியடிச்சிக் கூப்புடுறதயே பெரிய வேலயா செய்வான். அவனுக்குப் பொம்பளயக் கண்டாலே பேச்சு ஊத்து எடுத்துக்கும்” என்று சொல்லிக் கொண்டே பூங்கோதையிடம் வந்தாள் கமலா.

“அம்சவள்ளின்னு யாருமில்லியா?”

“ஒனக்கு சொன்னா புரியாதா? இருந்தா சொல்ல மாட்டனா?” என்று கேட்டு முறைத்த கமலா “அம்சவள்ளிங்கிறது யாரு? ஒம் பேத்தியா?” என்று கேட்டாள்.

“எம் மவ.”

“ஒம் மவங்கிற, அது எங்க வேல செய்யுதுன்னு ஒனக்குத் தெரியாதா?”

“தெரியாதும்மா.”

“என்னா சொல்ற? எப்ப ஒம் மவ வேலக்கிப் போச்சி?”

“வேலக்கிப் போவல. ஒரு பயகூட ஓடிப்போச்சி. படிச்சியிருந்தா. அதனால எங்கியாச்சும் பள்ளிக்கூடத்தில வேல செய்யலாமின்னு நானா நெனச்சிக்கிட்டு தேடிக்கிட்டு வந்தன்.”

கமலாவின் முகமும் மாறிவிட்டது. குரலும் மாறிவிட்டது, லேசாகக் கோவப்பட்டு “ஒனக்கென்ன பைத்தியமா?” என்று கேட்டாள். பூங்கோதை பேசவில்லை. தலைமை ஆசிரியரின் அறையின் பக்கம் பார்த்துவிட்டு “எப்பப் போச்சி ஒம் பொண்ணு?” என்று கமலா கேட்டாள்.

“இன்னியோட சேத்து இருவது நாளு.”

“நீ என்னா ஊரு?”

“செம்பளக்குறிச்சி.”

“மூள இருக்கா ஒனக்கு? ஓடிப்போன இருவதாம் நாளே இந்த ஊருக்கு வருவாங்களா? ஒங்க ஊருக்கும் இந்த ஊருக்கும் எம்மாம் தூரம்? ஒங்க ஊரு புள்ளிவோதான பாதி இங்க படிக்குது.”

“எம் மவளும் இந்த ஊருலதான் படிச்சா. அவகூட படிச்ச புள்ளிவோ இருக்கும், கேக்கலாமின்னு வந்தன். ஒவ்வொரு பள்ளிக்கூடமா அலயுறன்.”

“ரெண்டாயிரத்திப் பதிமூணுலயும் இப்பிடியிருக்கியே. ஓடிப்போனவங்க தெரிஞ்ச ஊருலியே இருப்பாங்களா? புத்திகெட்டு அலயாம போம்மா ஊட்டுப் பக்கம்” என்று வேகமாகச் சொன்ன கமலா தலைமை ஆசிரியர் இருந்த அறைப் பக்கமும், பரீட்சை நடந்துகொண்டிருந்த அறைகளின் பக்கமும் பார்த்தாள். அப்போது “அவளுக்கு உண்டானத அவகிட்ட சேத் திட்டா, அப்பறம் எதுக்கு நான் அவளத் தேடப்போறன்” என்று பூங்கோதை சொன்னாள்.

“ஓடிப்போன பொண்ணுக்கு என்னாத்தக் கொடுக்கப்போற? போயி தலய முழுகிட்டு ஒரு கோவுலப் பாத்துக் கும்புட்டுப் போவியா?”

என்று வெறுப்போடு சொன்னாள் கமலா. பொருள்களைக் காட்டினாலாவது கமலா தனக்கு உதவுவாள் என்று நம்பி, அவள் சொன்னதைக் காதில் வாங்காத பூங்கோதை மடியில் கட்டி வைத்திருந்த பையை எடுத்து “எட்டு பவுனு நக, இருவதாயிரம் பணம், அப்பறம் அவ படிச்ச இந்தச் சீட்டுவோ, இது இருந்தா இதெக் காட்டி ஒரு எடத்தில வேல செஞ்சி பொழச்சிக்குவா இல்லெ?” என்று சொல்லி ஒவ்வொரு பொருளாக எடுத்துக் காட்டினாள்.

கமலாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பித்துக்குளி மாதிரி இருக்கிற பெண் என்ன செய்துகொண்டிருக்கிறாள்? அவளால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. பூங்கோதையின் மொட்டைத் தலையிலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் கமலாவுக்கு என்ன தோன்றியதோ, “சரி. பையை பத்திரமா வை. வா எங்கூட” என்று சொல்லி, பூங்கோதையை அழைத்துக்கொண்டு வந்து மணி மாட்டியிருந்த தூங்குமூஞ்சி மரத்தின் கீழ் உட்கார வைத்தாள்.

சிறிது தள்ளி எதிரில் மரத்தின் வேரில் உட்கார்ந்துகொண்டு “இப்படித் தேடுனா எப்பிடிக் கெடப்பாங்க? பணத்தயும் தங்கத்தயும் தூக்கிக்கிட்டு அலயலாமா? தொலஞ்சிப்போச்சின்னா என்னா செய்வ?” என்று கேட்டாள். மறுநொடியே அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி “தண்ணி குடிக்கிறியா?” என்று கேட்டாள். பூங்கோதை என்ன சொல்கிறாள் என்று கேட்காமல் விடுவிடுவென்று ஒரு கட்டடத்தை நோக்கி நடந்தாள். சிறிது நேரத்திலேயே ஒரு பிளாஸ்டிக் தம்ளரில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். பள்ளிக்கூடத்திற்குள் மேய்வதற்கு வந்த ஏழெட்டுப் பன்றிகளைப் பார்த்ததும் “இந்தச் சனியன்தான் பொழுது முழுக்க. பள்ளிக்கூடம் கட்டுற நாயிவோ சேத்து ஒரு மதிலு செவுரும் கட்டுனா என்னா? மூவாயிரம் பொட்ட புள்ளங்க படிக்கிற எடத்தில ஒரு கக்கூஸ் ரூமுகூட இல்லெ. அப்பறம் பன்னி வராம என்னா செய்யும்?” என்று திட்டிக்கொண்டே பன்றி களைத் துரத்திக்கொண்டுபோய் ரோட்டுப் பக்கம் விட்டுவிட்டு வந்து முன்பு போலவே உட்கார்ந்துகொண்டு கேட்டாள். “நீ இப்பிடித் தேடுனா, எப்பிடி ஆம்புடுவாங்க?”

“பெத்த தாயிதான நானு? இன்னது இப்படின்னு எங்கிட்ட ஒரு வாத்த சொல்லியிருக்கக் கூடாது? சண்டாளி. போனவ இந்த எடத்தில இருக்கன், இப்பிடி இருக்கன். உசுருக்கு ஒண்ணும் பாதகமில்லெ. சோறு தின்னன். தண்ணி குடிச்சன். இந்த எடத்துல படுத்து எயிந்திரிச்சன்னு சொன்னா என்னோட ஆவி அடங்கிப்போவாது? அந்த வாத்தயக் கேட்டிருந்தா நான் ஒரு வாக் கஞ்சி குடிச்சியிருக்க மாட்டன்? கண்ணெ மூடித் தரயில செத்த மொடக்கி எயிந்திரிச்சியிருக்க மாட்டன்? என்னோட நடுக்கம் நின்னு ருக்காது? கொல பதறலு அடங்கியிருக்காது? ஒரு எடத்திலெ குந்தியிருக்க மாட்டன்? அந்த வாத்தயக் கேக்கத்தான அலயுறன். அவ அம்மாம் கெட்டிக்காரி. நான் அம்மாம் கெட்டவ, அதான் என்னெ நாயா பேயா அலய வுடுறா” பூங்கோதை சொன்னாள்.

பூங்கோதையின் கண்களிலிருந்து வந்த கண்ணீர், புகை மாதிரி கமலாவின் கண்களையும் கலங்க வைத்தது. தன்னுடைய மகளே ஓடிவிட்ட மாதிரி அவளுக்குப் பதைபதைப்பு உண்டாயிற்று. ஒரு நொடி பள்ளிக்கூடம் என்பதுகூட அவளுக்கு மறந்துபோயிற்று. பூங்கோதையையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள். சொந்தக்காரப் பெண்ணிடம் கேட்பது மாதிரி கேட்டாள் “ஒங்களுக்கு முன்னாடியே தெரியாதா?”

“தெரிஞ்சியிருந்தா நான் எதுக்கும்மா அலயுறன்? அவ அப்பிடி செய்யுற ஆளில்லன்னுதான் இப்பியும் ஊரே சொல்லுது. நம்பிட்டன். ஏமாத்திப் புட்டா. எனக்கு மட்டுமா வாய்க்கரிசி போட்டா? தனக்கும்தான் போட்டுக்கிட்டா.”

“கடசிமுட்டும் சந்தேகமே வல்லியா?”

“எப்பிடிம்மா வரும்? ஒருத்தங்கக்கிட்ட பேச மாட்டா. சிரிக்க மாட்டா. புள்ளிவோகூட கூட்டு சேந்துக்கிட்டுத் தெருவுல சுத்த மாட்டா. வௌயாடப் போவ மாட்டா. குந்துன எடத்த வுட்டு நவுர மாட்டா. இந்த ஊருக்கு ஏயி வருசம் படிக்க வந்தா. ஒரு நாளும் நேரம் தவறி வந்தவ இல்லெ. கார வுட்டுட்டன்னு சொன்னவ இல்லெ. நாம்ப பத்து வாத்த பேசுனா அவ ஒரு வாத்த ‘என்னாதுன்னு?’ கேப்பா. அப்பிடியே எம் மாமியாக் காரி மாரியே நெஞ்சி அடச்சிப்போயி குந்தியிருப்பா. கருங்கல்ல நவுத்திப்புடலாம், அவளப் பேச வைக்கிறதுக்குள்ளார.” மூக்கில் வழிந்த சளியை முந்தானையில் துடைத்தெடுத்தாள். இப்போது அவளுடைய பார்வை கமலாவின் முகத்தில் பதியவில்லை. தரையை நோக்கியிருந்தது. அவள் கமலாவைப் பார்த்துப் பேசவில்லை. தரையைப் பார்த்துப் பேசினாள்.

“சொன்னா ஊட்டு வேல செய்வா. இல்லென்னா நோட்டு புக்க எடுத்துக்கிட்டு எயிதறதுக்குக் குந்திக்குவா. ஒவ்வொரு வருசமும் அவதான் மொத பஸ்ட் மார்க்கு வாங்குவா. ஊருப் புள்ளிவோ மாரி இன்ன முட்டும் ஒரு வருசமும் பெயிலுன்னு சொல்லிக்கிட்டு ஊட்டுக்கு வந்தது கெடயாது. வளயாத இரும்புக் கம்பின்னு நானும் சரி, எம் புருசனும் சரி, எம் மவனுவுளும் சரி, நம்பி இருந்துட்டம். பாறாங்கல்லையே கரச்சிப்புட்டான் ஒரு பய. அவன் எப்பிடியாப்பட்ட கைக்காரிக்கிப் பொறந்தவனா இருப்பான்?”

“எல்லாத்திலியும் புத்தியா இருந்த ஒம் மவளுக்கு எதுல புத்தியா இருக் கணுமோ அதுல இல்லியே.”

“பொட்டச்சிக்கிப் பணம் காசா பெருசா தெரியுது? நகநட்டா பெருசா தெரியுது? நாலு நல்ல வாத்தத்தான பெரிய மலயாத் தெரியுது. அதெ நம்பிப் போயிடுறாளுவ.”

“ஒம் மவ என்னா படிச்சியிருக்கு?”

“எம்.எஸ்ஸின்னு ஒண்ணு படிச்சா. அப்பறம் எம்.எட்டுன்னு ஒண்ணு படிச்சா. எம்.எட்டுல கடசி பரிட்ச எயிதப் போனவதான். ஊடு திரும்பல. ஆச்சி. இன்னியோட இருவது நாளு.”

“பையன் என்னா பண்றான்?”

“ஜில்லா கலெக்ட்டரு” காறித் துப்பினாள். முகம் மாறியது. குரலில் வேகம் கூடிவிட்டது. “கல்யாணம் கருமாதியில போட்டா புடிக்கிற பய.”

“ஸ்டுடியோ வச்சிருக்கானா?”

“அந்த மாரிகூட இல்லெ. கூலி ஆளுதான். போனா சம்பளம். இல்லன்னா இல்லெ.” அவளுடைய குரலில் அவ்வளவு கசப்பும் வெறுப்பும் வெளிப் பட்டது. உடலில் கூடுதல் தெம்பு வந்த மாதிரி இருந்தது.

“போட்டா புடிக்கிறவன், வீடியோ படம் எடுக்கிறவன் பின்னாலதான ஒலகம் ஓடுது. அப்பறம் ஒம் மவ மட்டும் எப்பிடி மாறி இருப்பா? அது சரி, அந்தப் பய வேல செஞ்ச கடயில கேட்டுப்பாத்தியா?”

“விசாரிக்க போன எம் மவனுவோ அந்தக் கடய அடிச்சி நொறுக்கிப் புட்டானுவ. கடக்காரன் கேசு கொடுத்துப்புட்டான். எம் மவனுவளயும், எம் புருசனயும், கூடப் போன பங்காளிப் பயலுவோ எட்டு பேரையும் போலீசு புடிச்சிக்கிட்டுப் போயிடிச்சி. பத்து நாளு ஊட்டுக்கும் ஸ்டேஷ னுக்குமா நடந்தாங்க. அந்தக் கடக்காரன் வுடல. பொருளு போச்சி. கடப் போச்சி. ஆள அடிச்சிப்புட்டாங்க. கூலிக்காரப் பயலுக்காக என்னெ எப்படி அடிக்கலாம். ஒரு லட்சம் கொடுத்தாத்தான் கேச வாபசு வாங்கு வன்னுட்டான். ஒடஞ்ச கடய போட்டோ எடுத்து, வீடியோ படம் எடுத்து போலீசுல கொடுத்துப்புட்டான். ஒண்ணும் தப்பிக்க முடியல.”

“போலீசில பணத்த அடிச்சிப் பாக்க வேண்டியதுதான?” இன்னும் பக்கத்தில் நகர்ந்து உட்கார்ந்துகொண்டு அக்கறையோடு கேட்டாள் கமலா.

“எல்லாம் பாத்தாச்சி. கடக்காரன் எதுக்கும் அடங்கல. கட்சிக்காரன்னு தெரிஞ்சி அப்பறம் கட்சிக்காரனுவுள தேடிக்கிட்டு விழுப்புரம், திண்டிவனம், அரியலூரு, ஜெயங்கொண்டம்ன்னு போனாங்க. ‘பிரச்சனன்னாத்தான் சாதிக்காரன், கட்சிக்காரன்னு தேடி வர்றீங்க. ஓட்டுக் கேட்டு வந்தா சினிமாக்காரப் பயலுக்குப் போடுறீங்க. அப்ப ஒங்களுக்கெல்லாம் நம்ப சாதிக்காரன் ஜெயிக்கணுமின்னு தோணல. கடக்காரன் நம்ப சாதிக்காரன்தான, பேசிக்கலா’மின்னாங்க. அப்பறம் கடக்காரனக் கூப்புட்டு ‘நம்ப சாதிக்காரங்க. சமாதானமா போ. வேணுங்கிற காச வாங்கிக்கிட்டு போ’ன்னு அம்பதாயிரத்த வாங்கிக் கொடுத்தாங்க. அப்பறம் போலீசுக்காரங்க, பஞ்சாயத்துக்கு வந்த கட்சிக்காரங்க தலக்கி அம்பதாயிரத்தப் புடுங்கிக்கிட்டு வுட்டாங்க. அதோட முடியல. கடய ஒடக்கப் போனப்ப கூட வந்தவங்க, பொண்ணத் தேடக் கூட வந்தவங்க, ஸ்டேசனுக்குக் கூட வந்தவங்கன்னு ஒரு அம்பதாயிரத்தப் புடுங்கித் தின்னு கரச்சாங்க. கேசு முடிஞ்சி அஞ்சி நாளுதான் ஆவுது. பொண்ணும் போச்சி. பணமும் போச்சி.”

கமலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. பக்கத்து வீட்டில், தெருவில் நடந்த கதையை சொல்கிற மாதிரி சொல்கிறாளே என்று வியந்துபோனாள். விச யம் பெரியதாக நடந்துவிட்ட பிறகும் இந்தப் பெண் இப்பிடி மகளைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறாளே என்று நம்புவதற்கே சிரமமாக இருந்தது. அதனால் பூங்கோதையின் மீது பற்றுதல் ஏற்பட்டது.

“கேசு முடிஞ்சி அஞ்சி நாளுதான் ஆவுதுங்கிற. நீ இப்பிடி வந்து குந்தி யிருக்கியே. தெரிஞ்சா என்ன ஆவும்?”

“என்னெ நெருப்புல வச்சி கொளுத்துவானுவதான். வாழ வேண்டி யவளே சாவறதுக்குப் போயிட்டா. சாவ வேண்டிய கிழவி நானு. செத்தா என்னா ஆயிடப்போவுது?”

பூங்கோதை தெரிந்து பேசுகிறாளா, தெரியாமல் பேசுகிறாளா என்று கமலாவுக்குக் குழப்பம் ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் தன்னை மணி அடித்துக் கூப்பிட்டிருக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனாலும், அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க அவளுக்கு மனமில்லை. பூங்கோதையின் தோற்றமே அவளுடைய மனதைக் கரைத்துவிட்டது. “பெத்துத் தொலச்சதுக்கு எம்மாம்தான் படுறது?” என்று சொல்லும்போதே கமலாவின் கண்கள் கலங்கின. அவளுடைய மனதில் என்ன காயமோ.

“ ‘என்னா புள்ளெ பெத்தெ? என்னா புள்ளெ பெத்த’ன்னு எம் புருசன் கேட்டாலும் மனசு ஒறுத்துக்கும். எம் மவனுவோ கேக்குறானுவம்மா. மானம் போச்சி. மானம் போச்சின்னு சொல்லி பிராந்தியக் குடிச்சிப்புட்டு பித்தா, பேயா அலயுறானுவ. இதுல பங்காளிப் பயலுவோ, தெருக்காரப் பயலுவோ எல்லாம் சேந்துக்கிட்டு உசுப்பேத்திவுட்டு பிராந்தியக் குடிக்கிறானுவ. பரோட்டாவா திங்குறானுவ. குடிக்கிறதயும் குடிச்சிப்புட்டு, திங்குறதயும் தின்னுப்புட்டு என்னெயும் எம் மவளயும் பேசுற பேச்சக் காது கொடுத்து கேக்க முடியாது. நான் யாருக்குன்னு பதில் சொல்லுவன்? எம் புருசன்கிட்டியாவது ஒரு வாத்த பேச முடியுது. அவனவன் ஆதாயம் இருந்தாத்தான வருவான்? இல்லன்னா எப்பிடி வருவான்? எம் புருசனும், எம் மவனுவளும் காசக் கொடுத்து சூனியம் வச்சிக்கிறானுவ. தடுக்க முடியாம பண்ணிப்புட்டுப் போயிட்டா. வண்டிச் சக்கரத்தில மாட்டுன எலி யாட்டம் சாவுறன். எம் மவனுவக்கிட்ட வாயத் தொறக்க முடியல. பெத்த தாயின்னு பாக்கல. கூடப்பொறந்த பொறப்புன்னு பாக்கல. அம்மாம் பேச்சு. பச்சபச்சயா பேசுறானுவ. எங்கூட முப்பது வருசமா படுத்து எயிந் திரிச்சவனே என்னெ அவுசாரின்னுட்டான். அவனுக்கு மேல அவன் பெத் ததுவோ பேசுதுவோ. ‘நீ நல்லவ இல்லெ. அதான் நீ பெத்தது மாடு திங்குற பயகூட, பன்னி திங்குற பயகூட ஓடிப்போச்சி’ன்னு சொல்றானுவ” என்று சொல்லும்போதே பூங்கோதையின் கன்னத்திலிருந்து கண்ணீர் வழிந்தது. கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

“வுடும்மா. அயிவாத, இரு வர்றன். போயிடாத” என்று சொல்லிவிட்டு எழுந்த கமலா தலைமை ஆசிரியரின் அறைக்குப் போனாள். பிறகு பரீட்சைப் பேப்பரை எடுத்துக்கொண்டு போய் மூன்று நான்கு அறைகளில் கொடுத்து விட்டு வந்தாள். வந்ததும் ஒரு மணியை அடித்தாள். தூரத்தில் ஒரு பெண் வந்துகொண்டிருப்பது தெரிந்ததும் “யே பொன்னம்மா, இங்க வா” என்று கூப்பிட்டாள். அந்தப் பெண் வந்ததும் “செத்த நேரம் எட் மாஸ்ட்டரு ரூம்கிட்ட நில்லு. எதனா சொன்னா செய்யி. கேட்டா மரத் துக்கிட்ட நிக்குறன்னு சொல்லு” என்று சொன்னாள். கமலா சொன்னதைப் பொன்னம்மா ஈடுபாடு காட்டாமல் காதில் வாங்கிக்கொண்டு தலைமை ஆசிரியரின் அறையை நோக்கி நடந்தாள். தரையில் உட்கார்ந்த கமலா தானாகவே “எங்கூட கூட்டுற வேல செய்யுது” என்று சொன்னாள். “வச்ச தண்ணி அப்பிடியே இருக்கே. குடிம்மா” என்று சொன்னாள். எதையும் காதில் வாங்காமல் உட்கார்ந்திருந்த பூங்கோதையின் பார்வை அம்சவள்ளி கண்ணில் படுகிறாளா என்று தேடியது.

“இம்மாம் கூத்து நடந்த பிறகு நீ ஊட்ட வுட்டு வரலாமா? நேரத்தில ஊட்டுக்குப் போ. கண்ணெல்லாம் பஞ்சி அடச்சிப்போயி கெடக்கு. பேசக்கூட முடியல. ஒடம்பு நடுங்குது, ஒரு வாரம், பத்து நாளா குளிக்கலப் போல இருக்கு. ஒம் மவனுவ ஒன்னெ ஏதாச்சும் செஞ்சிடப்போறானுவ. அலஞ்சி திரியாம ஊட்டுக்குப் போ. பெத்துத் தொலச்சதுக்கு எல்லாத்தயும் பட்டுத்தான தீரணும்?” என்று ரொம்பவும் அக்கறையாகச் சொன்னாள் கமலா.

“அந்த ஊட்டுல என்னால இருக்க முடியல. உள்ளாறப் போனாலே நடுக்கமா இருக்கு. ஒரு பண்டத்தத் தொட முடியல. அவளத் தொட்ட மாரியே இருக்கு. அவ ஊட்டுல இருந்தா வௌக்கு எரியுறாப்ல இருக்கும். இப்ப இருளடஞ்சிபோயி கெடக்கு.”

“சரி. எப்பிடி ஊட்ட வுட்டு வெளிய வந்த?”

“ஒடம்புக்கு ஆவுல. ஆஸ்பத்திரிக்கிப் போறன்னுட்டுத்தான். நாலு நாளா ஊரூரா, பள்ளிக்கூடம், பள்ளிக்கூடமா அலயுறன். போதாக்குறெக்கி நான் ஏறி எறங்காத போட்டாக் கட இல்லெ. யாரக் கேட்

டாலும், ‘தெரியல, பாக்கல.’ மறு வாத்த இல்லெ. செல்லுபோனு நெம்பரயாச்சும் தாங்கன்னு கண்ணு தண்ணியால நான் கழுவாத காலு இல்லெ. ஒருத்தருக்கும் மனம் எரங்கல. அப்பிடியொரு பாவிப் பொறப்பு நானு.” அவள் அழவில்லை. ஆனால் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கிற்று. சிறிது நேரம் பேச முடியாதவள் மாதிரி உட்கார்ந்திருந்தாள். பிறகு தனக்குத் தானே பேசிக்கொள்வது மாதிரி முனகினாள். “எங்கப்பன் செம்பளக் குறிச்சிக்காரன்கிட்ட என்னெப் புடிச்சிகொடுக்கயில எனக்கு வயசி பதி னேழுதான். இப்ப ஆச்சி முப்பத்தஞ்சி வருசம். இன்னிய முட்டும் ஒத்தயில ஒரு எடத்துக்கு போனவ இல்லெ. ஒத்தயில காரு ஏறுனவ இல்லெ. தனி வழி போனதில்லெ. இந்த நாலு நாளாதான். ஒத்தயா வந்திருக்கன். காரும் ஏறிப்புட்டன். இத்தினி வருசத்தில எம் புருசன்கிட்டயும் சரி, நான் பெத்த புள்ளிவோகிட்டயும் சரி ஒரு வாத்த மாத்திப் பேசுனவ இல்லெ. இந்த நாலு நாளாத்தான் எம் புருசன்கிட்டயும் சரி, எம் புள்ளிவோகிட்டயும் சரி, பொய் பேசிப்புட்டு திருடியாட்டம் நிக்குறன். என் கண்ணுத் தண்ணி அவ கண்ணுல படலியே. என் வவுறு கத்துற சத்தம் அவ காதுல விய்யலியே. ‘என்னாம்மா’ன்னு போனுலகூட எங்கிட்ட ஒரு வாத்த பேசல. அம்மாம்

சாமத்துரோகியாயிட்டன் நானு.”

“அழுவாத. ஒன்னால பேச முடியல. ரவ தண்ணியாச்சும் குடியன்”

என்று சொன்னாள் கமலா. அவள் சொன்னது பூங்கோதையின் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை. அவளுடைய பார்வை கமலாவின் முகத்தில் மட்டும் படியவில்லை. அவ்வப்போது பள்ளியின் மைதானம் முழுவதும் ஆராய்ந்தது. அலைந்தது. அம்சவள்ளியின் உருவம் கண்ணில் படாதா?

பூங்கோதையின் தோற்றத்திற்கும் அவளுடைய பேச்சுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. அவளால் இவ்வளவு பேச முடியும் என்பதே நம்ப முடியாமல் இருந்தது. ஆச்சரியத்தில் கேட்டாள் கமலா “ஒன்னால பேச முடியுதா? இதுக்கு மட்டும் தெம்பு எங்கிருந்து வருது?” யாருக்கோ சொல்வது மாதிரி பூங்கோதை சொன்னாள் “நான் வாயத் தொறந்து இருவது நாளாச்சி. அடி வவுத்திலெ அம்மாம் நெருப்பு இருக்கு.”

பொன்னம்மா ரோட்டுப் பக்கம் போவது தெரிந்ததும் “என்னா விசியம்?” என்று கேட்டாள். “தங்கம் டீச்சரு டீ வாங்கியார சொன்னாங்க” என்று சொல்லிக்கொண்டே நடந்தாள் பொன்னம்மா. “நில்லு, வர்றன்” என்று சொன்ன கமலா எழுந்து சென்று “ரெண்டு டீ சேத்து வாங்கியா” என்று சொல்லிக் காசு கொடுத்தாள். “ஏன், நீ போயி வாங்கி குடிக்க மாட்டியா? பெரிய வாத்தியாரு அம்மாதான்” என்று ஒரு தினுசான குரலில் கேட்டுவிட்டு டீக்கடைக்கு நடந்தாள் பொன்னம்மா. திரும்பி வந்த கமலா பூங்கோதையிடம் கேட்டாள்.

“ஒம் பொண்ணுக்கூட படிச்ச பசங்கக்கிட்ட கேட்டுப் பாத்தியா?”

“அவ படிச்ச காலேஜு, சொல்லிக்கொடுத்த வாத்தியாருவோ, கூடப் படிச்ச புள்ளிவோன்னு எல்லாம் பாத்தன். ‘தெரியல’ங்குறாங்க. ‘அம்சவள்ளி அப்பிடி செய்ய மாட்டாளே’ன்னு என்னியவே கேக்குறாங்க. என்னாத்த சொல்றது? என்ன மட்டுமா அவ ஏமாத்தியிருக்கா?”

“ஊருல அதுக்கு பிரண்டுன்னு யாரும் இல்லியா?”

“இல்லெ. அவதான் யார் கூடவும் சேர மாட்டாளே. அதெ மீறியும் ஒம் மவள அங்க பாத்தன் இங்க பாத்தன்னு யாராச்சும் சொல்லுவாங்கன்னு நான் ஒவ்வொரு மூஞ்சியாத்தான் பாக்குறன். யாரும் வாயத் தொறக்கல. எனக்குப் புறத்தால பேசுறாங்க. எனக்குப் புறத்தால சிரிக்கிறாங்க. எனக்குத்தான் யாருகிட்டயும் பேச முடியல. யாரோட மொகத்தியும் பாக்க முடியல. எங்கிட்டயும் யாரும் பேசுறதில்ல. என்னெ ஏறெடுத்தும் பாக்குறதில்ல. எனக்குத் தெரியாம இருக்காதுன்னு ஊருல பேசிக்குறாங்க. நான் ஏமாந்துப்போயி நிக்குறன். பெத்த மவளயே ஒரு கீச்சாதிக்காரப் பயகூட அனுப்புறவளா நானு? அப்பிடித்தான் ஊருல சொல்றாங்க.” பூங்கோதை தலையைக் குனிந்துகொண்டாள். கண்ணீர் தரையில் விழுந்தது. மூக்குச்சளியை முந்தானையில் துடைத்தெடுத்தாள். குனிந்த வாக்கிலேயே சொன்னாள்: “மனசுல உள்ள அத்தினியயும் எங் கண்ணுத் தண்ணியாலதான் கரைக்குறன். உரியவகிட்டெ இந்தப் பொருள ஒப்படச்சிட்டா மாண்டுபோயிடுவன். கோவத்தில இந்தச் சீட்டுவுள கொளுத்திப் புட்டா அவ பொழப்பு அநாத பொழப்பா ஆயிடுமேன்னு இந்தச் சீட்டுவுள மறச்சிவைக்க நான் படுற பாடு கொஞ்சமில்லெ. நெருப்பத் தின் னுப்புடலாம். எம் மவனுவ கண்ணுல ஆம்புட்டா அடுத்த நிமிசம் சாம்பதான். எனக்குப் பித்துப் புடிச்சிக்கிட்டா போதும். அதத்தான் அந்த ஆண்டவங்கிட்ட வேண்டுறன். அந்தப் பய எம் பேச்ச காது கொடுத்துக் கேக்க மாட்டங்குறான்.”

“அழுவாதம்மா. மயக்கம் வந்துடப்போவுது” என்று சொன்ன கமலாவுக்கு என்ன தோன்றியதோ நகர்ந்து உட்காந்து பூங்கோதையின் கண்களைத் துடைத்து விட்டாள். “பெத்தவங்க ஒண்ணு நெனைக்குறாங்க. புள்ளங்க ஒண்ணு நெனக்குதுவோ. சாவுறமுட்டும் எல்லாக் கங்காட்சியயும் பாத்திட்டுத்தான சாவ வேண்டியிருக்கு. வுடும்மா. கண்கலங்காத. இந்த மாதிரி கதெ நடக்காத ஊடுன்னு ஒலகத்திலெ ஒரு ஊடு கெடயாது. மாசத்திலெ ரெண்டுமூணு புள்ளிவோ இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து ஓடிப்போவுதுவோ. அந்தக் கதெய எல்லாம் கேட்டா நீ சொல்ற கதெ சாதா கதெதான். எட்டாவது, ஒம்பதாவது படிக்கிற புள்ளிவுளே ஓடிப் போவுதுவோ. போன வாரம் பத்தாவது படிக்கிற புள்ள ஒண்ணு ஒரு சினிமா நடிகர நெனச்சிக்கிட்டு தானாவே கோவுல்ல போயி தாலி கட்டிக் கிச்சி. தெரியுமா?” என்று சொல்லி ஆறுதல்படுத்த முயன்றாள் கமலா.

“அவ போறதுக்கு ரெண்டு நாளக்கு முன்னால ஊட்டுக் கூர மேல காகம் கத்துச்சி. சாவு சேதி வரும்ன்னு இருந்தன். கடசியில எங் குடும்பத்துக்கே வந்துடுச்சி. குடும்பத்துக்கே சாவு வரும்ன்னு நான் நெனக்கல.”

“சரி. அந்தப் பயலப் பத்தியாவது விசாரிச்சியா?”

“விருத்தாசலத்திலிருக்கிற எல்லாப் போட்டா கடயிலயும் ஏறி எறங்கிட்டன். நேத்து நெய்வேலி பூராம் தேடுனன். முந்தாநாளு உளுந்தூர் பேட்ட பூராம் சுத்துனன். நாலுநாளா அலயாத அலச்ச இல்லெ.”

“அந்தப் பய எப்பிடி? தெரியுமா?”

“தெரிஞ்ச பயதான். குனிஞ்சி நிமிந்து ஒரு வேல செய்ய மாட்டான். நெட்டுக்குத்தா போவான். நெட்டுக்குத்தா வருவான். ஊருல ஒருத்தங்க பேச்ச கேக்க மாட்டான். விடிஞ்சதும் மே சட்டய மாட்டிக்கிட்டுப் போனா ஊரு அடங்கித்தான் வருவான். டவுனு பொறுக்கிப் பய. கா காணி நெலம் கெடயாது. ஒரு முந்திரி கன்னுகூட கெடயாது. வெறும் பயல நம்பிப் போயிட்டா. போட்டா எடுப்பான். வீடியோ படம் எடுப்பான். அதுக்கு ஊர்ஊரா அலைவான். அதான் அவன் செஞ்ச வேல.”

“அவனுக்கும் ஒங்க பொண்ணுக்கும் எப்பிடிப் பழக்கமாச்சி?”

“ஊருல பேச முடியாது. பேசினா வெட்டிப்புடுவானுவ. ஒரு மாசத் துக்கு மின்னால அவ படிக்கிற காலேஜிக்கு குருப்பு போட்டா புடிக்கப் போனானாம். அதுலயிருந்துதான் பழக்கமாம்.”

“ஒரு மாசத்திலியேவா ஓடிப்போச்சி.”

“அதான் பொட்டச்சி மனசுங்கிறது.”

“சரி, பையன் என்னா ஊரு?”

“எங்க ஊருதான்.”

“ஒரே சாதிதான?”

“அப்பிடியிருந்தாத்தான் ஒரு சனியனும் இல்லியே. ஒரு மாசத்துல, ரெண்டு மாசத்தில சமாதானமாப் போயிடுமே. மேம்பட்ட சாதிக்காரன்கூட ஓடிப் போயிருந்தாக்கூட சரின்னு போயிடலாம். கீச்சாதிக்கார பய. அதனாலதான் ஊரே கர்வம் கட்டிக்கிட்டு திரியுது. வெட்டுறன். குத்துறன்னு. அந்தச் சண்டாளப் பய வெளியூர் பயலா இருந்தாக்கூட இம்மாம் அமளிதுமளி நடந் திருக்காது. அந்தப் பயலோட அம்மாக்காரி செத்திருக்க மாட்டா. கடய ஒடச்சி, போலீஸ் கேசுன்னு ஆயி, பணமும் போச்சா. நடக்கிற கூத்துக்கு அளவு இல்லெ.”

“அந்த பயலோட அம்மாக்காரி செத்துப்போயிட்டாளா?”

“பரீட்ச எயிதிட்டு வெளிய வந்தவள அந்தப் பய ஒரு காருல ஏத்திக்கொண்டுக்கிட்டு போறத வாட்ச்மேன் பாத்திருக்கான். அவன் எங்க ஊருப் பய. ஒடனே எம் மவனுக்கு போன போட்டுச் சொல்லிப்புட்டான். ஒடனே ஊரே தெரண்டு அந்தப் பய ஊட்டுக்குப் போச்சி. விசயத்த கேட்ட அந்த சண்டாளி, இனுமே உசுரோட தப்பிக்க முடியாது, ஊட்ட கொளுத்துவானுவ, ஊர கொளுத்துவானுவ, உசுரோட வச்சி எரிப்பானுவ, எதுக்கு அதெல்லாமின்னு தூக்குப்போட்டுத் தொங்கிப்புட்டா. அந்தப் பயலுக்குன்னு அவ ஒருத்தித்தான் இருந்தா.”

“அட பாவமே. எனக்குத் தெரியாதின்னுட்டு அவ பாட்டுக்கும் இருக்க வேண்டியதுதான?” என்று அலட்சியமாகச் சொன்னாள் கமலா.

“அவளோட ஒரு முலய அறுத்திட்டாங்க.”

“என்னா சொல்ற?” பூங்கோதையின் வார்த்தையை நம்பாத மாதிரி குரலும் முகமும் மாற ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“முலய அறுத்ததாலத்தான் அவ செத்தா.”

“ஐயோ ஐயோ” என்று சொல்லி தன்னுடைய கன்னத்திலேயே அடித்துக் கொண்டாள் கமலா.

“ஊரே திரண்டு போயி அறுத்துச்சி. அன்னிக்கி ராத்திரிதான் அவ தூக்கு மாட்டிக்கிட்டது.” ஒரு கோழியின் கழுத்தை அறுத்த மாதிரி சர்வசாதாரணமாகச் சொன்னாள் பூங்கோதை. அவளுடைய பார்வை மெயின் கேட்டுக்கு அருகில் உள்ளே வந்துகொண்டிருந்த மாட்டின் மீது படிந்திருந்தது. பெரிய விசயத்தைச் சொல்லிவிட்டு எங்கோ பார்க்கிறாளே என்று கேட் பக்கம் பார்த்தாள் கமலா. மாடு ஒன்று உள்ளே வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் வந்தது. “இங்க என்னா இருக்கு மேயுறதுக்கு? பஸ் ஸ்டாண்டு பக்கம் போனாலும் சினிமா போஸ்ட்டரத் திங்கலாம்” என்று திட்டினாள். கமலாவுக்கு எழுந்து சென்று மாட்டை விரட்டிவிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எழுந்து போக அவளுக்கு மனமில்லை. பூங்கோதையின் மொட்டைத் தலையைப் பார்த் தாள். வெயிலில் வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்தது.

பூங்கோதை தனக்குத் தானே சொல்லிக்கொள்வது மாதிரி தரையைப் பார்த்துச் சொன்னாள்: “இவ முல என்னிக்கி அறுபடப்போவுதோ.” அந்த வார்த்தையைக் கேட்டதும் கமலா மிரண்டுபோனாள். அவளுக்குப் பேச முடியாமல் வாய் அடைத்துப்போய்விட்டது. சிரமப்பட்டுத்தான் கேட்டாள்.

“என்னா சொல்ற?”

“எம் மவ முலய அறுக்கத்தான் எம் புருசனும், என் மவனுவுளும் சாதி சனத்தோட ஊர்ஊரா தேடிக்கிட்டு அலயுறாங்க.”

“யே சாமி, கொல பதறுதே” என்று சொல்லி இரண்டு கைகளாலும் வாயை மூடிக்கொண்டாள். யாரோ அவளை மலை உச்சியிலிருந்து தள்ளி விட்ட மாதிரி பதறிப்போனாள். “கொலகாரப் பசங்க ஊருல வேலக்கி வந்துட்டேன்போல இருக்கே. நான் பொறந்த பக்கமெல்லாம்கூட சாதிச் சண்ட நடக்குந்தான். ஆனா, இம்மாம் மோசமா இருக்காது,” என்றாள்.

“கீச்சாதிக்காரன் கூட ஓடிப்போனா முலய அறுப்பாங்க. ஏற்கனவே ரெண்டு பேரோட முலய அறுத்திருக்காங்க. எம் மவளுவதையும் சேத்தா மூணு ஆச்சி.” கமலாவுக்கு என்ன தோன்றியதோ “சொந்த சாதியிலியே போனா மசுர அறுப்பாங்களா?” என்று வெடுக்கென்று கேட்டாள். பிறகு காறித் துப்பிவிட்டுக் கேட்டாள். “அதெ எதுக்குப் போயி அறுக்கிறானுவ?” கமலாவுக்குக் கோபம் தலைக்கு ஏறிவிட்டது.

“முலதான பொட்டச்சிக்கு மூஞ்சி.”

“அதுக்கு அடிச்சி கொல்லு. வெசத்த வச்சி சாவடி. அத வுட்டுப்புட்டு மார அறுக்கிறன், மயிர அறுக்கிறன்னா என்னா அர்த்தம்?”

“பொட்டச்சிக்கி மாரும் மயிரும்தான பெருசு. உசுரு. அத அறுத்திட்டா தானா செத்துப்போறா.”

“அதுக்கின்னு ஒரு அளவு இல்லியா?” என்று கேட்டுக் கோபப்பட்டாள் கமலா.

“முலய அறுப்பாங்கின்னு தெரிஞ்சும் ஒருத்தி ஓடிப்போயிட்டாளே”

என்று சொன்ன பூங்கோதை கமலாவைப் பார்த்தாள். அவளுடைய கண்களில் கண்ணீர் கரைகட்டி நின்றது. என்ன தோன்றியதோ இரண்டு கைகள் நிறைய மண்ணை அள்ளித் தலையில் போட்டுக்கொண்டாள். “அவ முல என்னிக்கு அறுபடப்போவுதோ? அவ பொணமும், எம் பொணமும் என்னிக்கி சுடுகாட்டுல வேவப்போவுதோ. சீக்கிரம் செத்துட்டா தேவல. எங்

கப்பன் எங்கம்மா செத்தப்பக்கூட நான் மொட்ட போடலியே” மண்ணை அள்ளி முகத்தில் போட்டுக்கொண்டாள். “பாவி, பாவி” என்று சொல்லிக் கமலா பூங்கோதையின் தலையிலும் முகத்திலுமிருந்த மண்ணை தன்னுடைய முந்தானையால் துடைத்துவிட்டாள். கமலாவின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

பொன்னம்மா டீயோடு வருவது தெரிந்ததும் தானாகவே எழுந்து சென்று இரண்டு டீயை வாங்கிக்கொண்டு வந்தாள். ஒரு டீயைப் பூங்கோதையிடம் கொடுத்தாள். பூங்கோதை டீயைக் குடிக்கவில்லை. தண்ணீர் தம்ளருக்குப் பக்கத்தில் வைத்துவிட்டாள். “சுடு தண்ணிதான. ஒரு வா குடிம்மா. கொஞ்சம் தெம்பா இருக்கும்” என்று சொன்னதையும், டீயைக் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதையும் பொருட்படுத்தாமல் வெறு மனே உட்கார்ந்திருந்தாள். டீயைக் குடித்து முடித்த கமலா கேட்டாள் “ஊருல பெரிய பிரச்சன ஆயிருக்குமே.”

“ஆளு ஆம்புட்டாதான தெரியும் என்னா நடக்குமின்னு.”

“இந்த நெலமயில நீ அலயுறது நல்லதில்லியே.”

“ஊட்டுல குந்தியிருக்க முடியலியே.” சிறிது நேரம் அங்கும்இங்குமாகப் பார்த்தாள். எப்போதும் இல்லாத அளவுக்கு அடங்கிப்போன குரலில் சொன் னாள் “எம் மவன் ஒரு கீச்சாதிக்காரக் குட்டிய இயித்துக்கிட்டு ஓடியிருந்தா எனக்கு இம்மாம் தும்பம் வந்திருக்காது. அவன் ஆம்பள. மூட்ட தூக்கியாவது சோறு தின்னுக்குவான். இவ பொட்டச்சி. எந்த எடத்துக்குப் போனாலும் அவ சீலக்குள்ளார என்னா இருக்குன்னுதான் ஒலகம் பாக் கும்.” அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் இறங்கியது. அதை அவள் பொருட்படுத்தவில்லை. மூக்கில் வழிந்த சளியையும் அவள் துடைத்தெடுக்கவில்லை. “இருவது நாளா ஒரு வா கஞ்சி குடிக்க முடியல. தரயில செத்த தலய சாய்க்க முடியல. ஒரு எடத்தில நிக்க முடியல. ராத்திரி பவல்ன்னு இல்ல. எப்ப விடியுது, எப்ப இருட்டுதுன்னு தெரிய மாட்டங்குது. அவளுக்குண்டானத அவகிட்ட சேக்கணும். அதுக்குத்தான் அலயுறன்.

அப்பறம் எதுக்கு நான் அவளப் பாக்கப்போறன்? ஊட்ட வுட்டுப் போவயில எம் மூஞ்சியக்கூடமா அவளுக்கு நெனவு இல்லாம போயிருக்கும்?”

இந்த முறை லேசாக விசும்பிக்கொண்டே அழுதாள். அவள் அழுவதைத் தடுக்க வேண்டும் என்று கமலாவுக்குத் தோன்றவில்லை. ஆனால் ஏதாவது பேச வேண்டும் என்று மட்டும் தோன்றியது. அதனால் “வெயிலு அடிக் குது. நவுந்து குந்தும்மா” என்று மட்டும் சொன்னாள். ஆனால் மொட்டைத் தலையில் வெயில் அடிப்பதையும், அதிலிருந்து வியர்வை வழிவதையும் பொருட்படுத்தாமல் பூங்கோதை உட்கார்ந்திருந்தாள். அவளைப் பேச வைக்க நினைத்த கமலா சொன்னாள் “தண்ணியும் குடிக்கல. டீயும் குடிக்கல. ஈ மொய்க்குது பாரு.”

“அதது பருவகாலத்தில அததுக்கு என்னா செய்யணுமின்னு பெத்தவ எனக்குத் தெரியாது? எம் மனசு கல்லா? அவதான் படிக்கிறன் படிக்கிறன்னு அலஞ்சா. எம் புருசனும், எம் மவனுவுளும் அவ ஒவ்வொரு முறயும் பாசாயி வரும்போதும் எப்பிடித் தூக்கிவச்சி ஆடுனாங்க தெரியுமா? ஊராங்க பேச்சக் கேக்காம படிக்க வச்சாங்க. அவ கேட்ட பொருள எல்லாம் வாங்கித் தந்தாங்க.”

“அநியாயத்துக்கு வெயிலடிக்குது. வேர்க்குது. நவுந்து குந்தும்மா.”

“வெயிலு கெடந்தாபோவுது. நான் இன்னிக்கா பாக்குறன் வெயில?” அப்போது பொன்னம்மா பேப்பர் கட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு ஒவ் வொரு அறையாகப் போவது தெரிந்ததும் சத்தமாகக் கத்தி கமலா கேட்டாள் “இன்னம் எம்மாம் நேரம் இருக்கு? குளோசிங் பெல் அடிச்சிடலாமா?”

“இன்னம் அர மணி நேரந்தான் இருக்கு. அது முட்டும் நீ காலு வலிக்காம மரத்துக்கிட்டியே குந்தியிரு. மரம் வியிந்திடாம பாத்துக்க” என்று சொல்லிவிட்டுப் போனாள். அதைக் கேட்டதும் கமலாவுக்குக் கோபம் வந்தது. ஆனால் கோபத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் உட்கார்ந் திருந்தாள்.

“மானங்காத்த சாமி ஆயிருந்தான்னாக்கூட ஒரு சூடத்த ஏத்திக் கும்புட் டுட்டுத் தலய முழுகிட்டுப் போயிருப்பன்.”

“அது என்னா மானங்காத்த சாமி?”

“எங்க ஊருல நடந்த கதெதான். இருவது முப்பது வருசத்துக்கு முன்னாடி எங்க எனத்துக் குட்டி ஒருத்தி காலனிக்காரப் பயகூட சேர்மானமாயிட்டா.

சங்கதி ஊரு ஒலகத்துக்குத் தெரிஞ்சிது. ஊரு பஞ்சாயத்து, சாதி பஞ்சா யத்து வச்சாங்க. அப்பலாம் இப்ப மாரி நெனச்சுதுக்கெல்லாம் போலீசுக்குப் போவ மாட்டாங்க. ஊரு பஞ்சாயத்து, சாதி பஞ்சாயத்துதான். அப்படி நடந்த பஞ்சாயத்திலெ காலனிக்காரன்கூட சேர்மானமா ஆயிட்ட. அதனால ஊரு மானம் போச்சி. சாதி மானம் போச்சி. ஒன்னெக் கட்டிக் கொடுக்கவும் முடியாது. ஊருல வச்சியிருக்கவும் முடியாது. அதனால நீயே போயி செத்துடு. இல்லன்னா ஊரே சேந்து ஒன்னெ செங்கல் காளவாயில வச்சிக் கொளுத்திப்புடுமின்னு சொன்னாங்க.”

“கொலகாரக் கூட்டமா இருக்கும்போல இருக்கே” என்று சொல்லி கமலா ஆச்சரியப்பட்டாள். ஏப்ரல் மாசத்து வெயில், உருக்கம், வெக்கை, வியர்வை, அனல் காற்று எதையும் பொருட்படுத்தாமல் உட்கார்ந்திருந்த பூங்கோதையைப் பார்க்க கமலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுடைய பார்வை அடிக்கடி தலைமை ஆசிரியரின் அறைப் பக்கம் சென்றாலும் மனம் மட்டும் பூங்கோதை சொல்கிற கதையில்தான் இருந்தது. அதனால் கமலாவே கதையைத் தொடர வேண்டுமென்று நினைத்து “அப்பறம் என்னாச்சி?” என்று கேட்டுப் பூங்கோதையைச் சீண்டினாள். அந்த ஒரு வார்த்தை ஊற்று தோண்டியதுபோல் ஆகிவிட்டது.

“என்னெ ஊரும் எரிக்க வாணாம். ஒலகமும் எரிக்க வாணாம். நானே போயி சூளயில எறங்கி சாம்பலாயிடுறன்னு சொல்லிப்புட்டா. சொன்ன மாரி செஞ்சும்புட்டா.”

“சத்தியமாவா?”

“என்னோட மூணு புள்ளமேல சத்தியம். தானாவே போயி செங்கல் சூளயில எறங்கி செத்ததால ஊரே அசந்துபோச்சி. சாதி மானத்தக் காப்பாத்த, ஊரு மானத்தக் காப்பாத்த சூளயில எறங்கிச் செத்தாளேன்னு ஊரே கூடி சூள இருந்த எடத்திலெ அவளுக்குக் கோவுலு கட்டுனாங்க. கல்யாணின்னு பேரு இருந்தாலும் சாதி மானத்தயும் ஊரு மானத்தயும் காப்பாத்துனதால அவளுக்கு மானங்காத்த சாமின்னு பேரு வச்சாங்க.

எங்க ஊருலியே இப்ப அதான் பெரிய சாமி. கண்ணாலம் ஆவாத புள்ளிவுளுக்குக் கண்ணால வரம் கொடுக்கிற சாமி அது. புள்ள இல்லாத பொம்மனாட்டிவுளுக்குப் புள்ள வரம் கொடுக்கிற சாமி. பாலு சுரக்காதவளுவோ போயி வேண்டிக்கிட்டா ஊத்து மாரி பாலு சுரப்பு நிக்காது.”

“ஒனக்கு வாயி பேச முடியல. தொண்டயக் கட்டுது. ஒரு வாயி தண்ணியக் குடியன்” என்று கமலா சொன்னாள். அதைக் காதில் வாங்காமல் உட்கார்ந்திருந்த பூங்கோதைக்கு என்ன தோன்றியதோ வறண்டுபோன குரலில் சொன்னாள். “அந்தப் பய எம் மவளக் கூப்புட்டுக்கிட்டு போவல.

எமன் வந்து அயிச்சிக்கிட்டு போயிருக்கான். அவ ஓடுனது சாவறதுக்குத்தான். அந்தச் சேதி எனக்கு இன்னம் வந்து சேரல” என்று சொல்லும் போதே அவளுடைய உடல் லேசாக நடுங்கியது. அதைப் பார்த்த கமலா பூங்கோதையின் கைகளை அழுத்திப் பிடித்தாள். அப்போது லேசாக முனகினாள் “எம் மவ சாவணுமின்னுதான் ஊரு ஒலகம் நெனக்குது.”

“ஓடிப்போனவங்களயே நெனச்சிக்கிட்டு இருந்தா நீ செத்துடுவபோல இருக்கே.”

“கடல வாங்கப் போறன்னு போயிருக்கா. வாங்கட்டும். நானா வாணாங்குறன்? போனவ நாலு காசு பணத்த, படிச்ச சீட்டுவுள எடுத்துக்கிட்டு போயிருந்தாகூட எம் மனசு ஆறிப்போயிருக்கும். இம்மாம்

அலச்ச அலய மாட்டன். கயித்திலெ கெடந்த ஒரு பவுனு செயினயும் கயிட்டிக் கெடாசிப்புட்டுப் போயிட்டா” என்று சொன்ன பூங்கோதை நேருக்கு நேராகக் கமலாவைப் பார்த்தாள். “மனசு இருந்தா நான் செத்த அன்னிக்காச்சும் பெத்தவளாச்சேன்னு வந்து எம் மொவத்தப் பாக்கட்டும்.

அவ கெடக்குறான்னு போனாலும் போவட்டும். செத்த பின்னால யாரு வர்றாங்க, யாரு போறாங்கின்னாப் பாக்கப்போறம்?” பேச்சை நிறுத்திவிட்டுத் தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தாள். பிறகு ரகசியம் மாதிரி சொன்னாள் “மீறி வந்தாலும் ஊருக்குள்ளார பொணமாத்தான் வருவா.”

“என்னம்மா சொல்ற?”

“அவ என்னிக்கி வந்தாலும் ஊருக்குள்ளார பொணமாத்தான் வர முடியும். அவளத் தேடிக்கிட்டு இன்னம் ஊர்ஊரா ஆளு போய்க்கிட்டுத்தான் இருக்கு. எங்க ஊரு சனங்க இருட்டா இருந்தாலும் ஊசியக் கண்டுபுடிச்சிடுங்க. எங்க இருந்தாலும் வெட்டிப் பொணமாக்கிப்புடுவானுவ.

முலய அறுத்துப்புடுவானுவ. அதனால கண்ணுக்குத் தெரியாத தேசமா ஓடிப்போயிடுன்னு சொல்லத்தான் பணத்தத் தூக்கிக்கிட்டு அலயுறன்.”

“நீ பெத்த புள்ளெதான. வுடு. எங்கயிருந்தாலும் உசுரோட இருந்திட்டு போவட்டும்.”

“ஒனக்குத் தெரியாது. நாலு நாளக்கி மின்னாலதான் எம் மவளுக்குக் கரும காரியம் செஞ்சானுவ. அவ ஓடிப்போன அன்னிக்கே எம் புருசன், எம் மவனுவ மொட்டயடிச்சிக்கிட்டாங்க. எனக்கும் மொட்டப் போட்டு வுட்டாங்க. ஊட்டுல சாவுப் பந்த போட்டாங்க. சாவு மோளம் அடிச்சாங்க. அவ போட்டோவயும், சீல, துணிமணியயும் பொணமாக் கட்டி எடுத்துக் கிட்டுப் போயி சுடுகாட்டுல வச்சி எரிச்சாங்க. பாலு தெளிப்பு நடத்தியாச்சி. ஊரு மெச்ச எல்லாச் சடங்கும் நடத்தியாச்சி. எம் மவ செத்திட்டான்னு கருமகாரியப் பத்திரிக்க அடிச்சி ஊர்ஊராக் கொடுத்துக் காரியத்தயும் முடிச்சிப்புட்டாங்க. ஊரே கூடி செஞ்சிடிச்சிம்மா.” தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். அவளுடைய உடம்பு லேசாக அதிர்ந்தது. “அம்மா, அம்மா” என்று பலமுறை கூப்பிட்டும் பூங்கோதை தலையை நிமிர்த்தவில்லை. கட்டாயப்படுத்திய பிறகுதான் தலையை நிமிர்த்தினாள். பதட்டத்தோடு “என்னம்மா பேசாம அப்பிடியே இருந்திட்ட? உசுருக்கு ஒண்ணு ஆச்சின்னா என்னா செய்ய முடியும்? இது பள்ளிக்கூடம் வேற.”

“நாலு நாளக்கி மின்னால பதினாறாம் நாளு கருமகாரியம் நடந்துச்சி. எங்க ஊரு ஏரிக்கரயில எள்ளும் தண்ணீயும் தெளிச்சிக் காரியம் நடந்துச்சி. எட்டாம் துக்கப் படயல் சோத்த, கருமகாரியப் படயல் சோத்தக் காக்காவும் தின்னுட்டுப் போயிடிச்சி. எம் மவளோட கருமக்காரிய சோத்தத் தின் னவதான்ம்மா நானு. ஊரு முழுக்க கண்ணீர் அஞ்சலின்னு படமும் ஒட்டிப் புட்டானுவ.”

“எல்லா ஊருக்கும் தெரியுமா?”

“ஊரே கூடித்தான் எட்டாந் துக்கம் படச்சிச்சி. கருமகாரியக் கறி சோத் தத் தின்னுச்சி. நானும்தான் தின்னன்.”

திடீரென்று கமலாவுக்குப் பயமாகிவிட்டது. பூங்கோதையைத் தேடிக் கொண்டு யாராவது வந்தாலும் வரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதும் அவ ளுக்கு நடுங்க ஆரம்பித்தது. “இந்த நெலமயில நீ இங்க வந்தது மகா தப்பு. கிளம்பு. ஊட்டுக்குப் போயி சேரு. முலய அறுத்திட்டாங்க. மொட்ட அடிச்சிட்டாங்கன்னு சொல்ற. எனக்குப் பயமா இருக்கு. சேதி கெடச்சா சொல்றன். முதல்ல நீ ரோட்டுக்குப் போயிடு” என்று சொல்லிவிட்டுப் பட்டென்று எழுந்தாள் கமலா.

“அவனுவுவளா அவள வவுத்தில வச்சியிருந்தானுவ? அவனுவுவளா அவளுக்குப் பாலு கொடுத்தானுவ? பீ, மூத்தரத்த அள்ளிக் கொட்டுனானுவ? அவளோட பீ, மூத்திரத் துணிய அலசிப்போட்டானுவ? என் வவுத்திலிருந்து வெளிய வந்து பூமியில வியிந்ததிலிருந்து அவனுவுவளா அவகூட படுத்திருந்தானுவ? அவளுக்கு அவனுவுவளா உசுர கொடுத்தானுவ? அவ ளுக்கு நாந்தான சீவி வுட்டன். சீல கட்டி வுட்டன். அவ தீட்டுத்துணிய நாந்தான அலசிப்போட்டன். எல்லாக் கருமாதியயும் நாந்தான செஞ்சன்? அதனால தான் அலயுறன்” என்று சொன்ன பூங்கோதை எழுந்து பித்திச்சி மாதிரி நடக்க ஆரம்பித்தாள்.

கமலா போய் குளோசிங் மணியை அடித்தாள்.

இமயம்