
சாந்தா
சாந்தாவின் வீட்டுக்கு முன் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் செல்வகுமார். வீட்டுக்கு முன் யாரும் இல்லாததால், இது அவளுடைய வீடுதானா என்ற சந்தேகம் வந்தது. திரும்பிப் பார்த்தான். எதிர்வீட்டுத் திண்ணையில் ஒரு பெண் தலை சீவிக்கொண் டிருப்பது தெரிந்தது. அவளிடம் “இது சாந்தா வீடுதான? ஆள் இருக்காங்களா?” என்று கேட்டான்.
“இருக்காங்க” என்று சொன்ன அந்தப் பெண் தலையைச் சீவி முடித்துவிட்டுச் சீப்பிலிருந்த முடியைப் பிடுங்கி, சுருட்டித் தெருவில் விட்டெறிந்துவிட்டு வீட்டுக்குள் போனாள். சாந்தாவின் வீடு தெருவிலிருந்து பத்தடி தள்ளி உள்ளேயிருந்தது. வீட்டைச் சுற்றிப் படல் வேலி போடப்பட்டிருந்தது. வாசல் படலைத் திறந்துகொண்டு போவதா, வேண்டாமா என்று யோசித்தான்.
‘யார் வீட்டுல?’ என்று கூப்பிடவும் தயக்கமாக இருந்தது. வீட்டில் யார் இருப்பார்கள், அவளுடைய புருஷன் இருப்பானா, மாமியார், பிள்ளைகள் என்று வேறு யாராவது இருப்பார்களா? வீட்டுக்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்பாளா, வீட்டுக்கு வந்தது சந்தோஷம் என்று சொல்வாளா என்று பலவிதமாக யோசித்தான். விருத்தாசலத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரம்வரை வரும்போது எழாத கேள்விகளெல்லாம் இப்போதுதான் அவனுக்குள் எழுந்தன. முப்பது கிலோமீட்டர் தூரம் தாண்டி வர முடிந்த செல்வகுமாரால் ஏழு, எட்டு அடி தூரம் தாண்டி உள்ளே போக முடியவில்லை. அது பெரிய தூரமாகத் தெரிந்தது. போவதா, வேண்டாமா என்ற குழப்பம் உண்டாயிற்று. சாந்தா இல்லாமல் வேறு யாராவது இருந்தால் “அடிபட்டதப் பாக்க வந்தன்” என்று சொல்லிவிடலாம். தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டான். வேலை செய்கிற இடத்தில் அடிபட்டதை விசாரிப்பதற்காக வீட்டு முதலாளியே சித்தாள் வீட்டுக்கு வந்ததை யாராவது நம்புவார்களா என்ற சந்தேகமும் உண்டாயிற்று. வீட்டைவிட்டுக் கிளம்பும்போதும், ‘ஆபிஸுக்குப் போகிறேன்’ என்று மனைவியிடம் பொய் சொல்லிவிட்டுக் கிளம்பும்போதும் இருந்த உற்சாகத்தில் இப்போது ஒரு துளிக்கூட அவனிடத்தில் இல்லை.
அப்போது வடக்குப் பக்கமிருந்து வந்த ஒரு பையன் காரையே வெறித்துப் பார்த்தான். பிறகு செல்வகுமாரைப் பார்த்தான். அந்தப் பையனிடம் கேட்டான் “இது சாந்தா வீடுதான? சித்தாள் வேல செய்யுறவங்க.”
“இரு வர்றன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வாசல் படலைத் திறந்துவிட்டு நேராக வீட்டுக்குச் சென்று லேசாகச் சாத்தியிருந்த கதவைத் திறந்து “ஒங்க ஊட்டுக்கு யாரோ கார்ல வந்திருக்காங்க” என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்தான். வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த சாந்தா செல்வகுமாரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். உடனே வீட்டுக்குள் ஓடி சீலை, தலைமுடியைச் சரிசெய்துகொண்டு வெளியே வந்து, “வாங்க சார், உள்ளார வாங்க” என்று சிரித்துக்கொண்டே கூப்பிட்டாள். செல்வகுமார் வாசல் படலைத் தாண்டிச் சென்றான். காரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பையனிடம் “யே தம்பி, ஒங்க ஊட்டுல இருந்து ஒரு சேரக் கொண்டா” என்று சாந்தா சொன்னதும், பையன் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் பிளாஸ்டிக் சேர் ஒன்றைத் தூக்கிக்கொண்டு வந்து வாசல் முன் போட்டுவிட்டுத் திரும்பவும் போய் காரை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
“உள்ளார ஒக்கார்றீங்களா? இப்பிடியே ஒக்கார்றீங்களா? வெளியில ஒக்காந்தா காத்தோட்டமா இருக்கும்” என்று சொன்ன தோடு, நாற்காலியை செல்வகுமார் உட்காருவதற்கு வசதியாக நகர்த்திப் போட்டாள். செல்வகுமார் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். அவனுக்கு மூன்று, நான்கடி தூரம் தள்ளி வாசலை ஒட்டி மேற்குப் பக்கம் பார்த்த நிலையில் உட்கார்ந்தாள் சாந்தா.
“பக்கத்தில எங்கியாச்சும் வேல நடக்குதா?”
“இல்லியே” என்று சொன்ன செல்வகுமார் சாந்தாவினுடைய முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்த்தான். எதையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்வகுமார் தன் னையே பார்ப்பதைப் பார்த்த சாந்தா லேசாகச் சிரித்துக்கொண்டே “என்ன புதுசாப் பாக்குறாப்ல பாக்குறீங்க சார்?” என்று கேட்டதும் செல்வகுமாருக்கு வெட்கமாகிவிட்டது. பதில் சொல்லாமல் சிரிக்க மட்டுமே செய்தான்.
“என்னா சார் இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?”
“ஒன்னெப் பாக்கத்தான். அடிபட்டது சரி ஆயிடிச்சான்னு விசாரிக்கத்தான் வந்தன். அன்னிக்கி என்னா நடந்துச்சி?”
“அன்னிக்கி மூணு மணி இருக்கும். கலவய அள்ளித் தூக்கிக் கிட்டுப் போறதுக்கு மேல இருந்த பாண்டக் கீழ போடுன்னு ராணிகிட்ட சொன்னன். அது ஒவ்வொண்ணா போட, நான் கீழயிருந்து புடிச்சி வச்சிக்கிட்டிருந்தன். அப்ப கலவய பாண்டுல அள்ளிப் போட்டுக்கிட்டு இருந்த கொத்தனாரு ‘கொஞ்சம் கிட்ட தள்ளிவை’யின்னு சொன்னாரு. சரின்னு ஒரு பாண்ட நவுத்தி வைக்க லாமின்னு போனன். அது தெரியாம ராணி போட்ட பாண்டு, நேரா வந்து எந் தலயில விழுந்துபோச்சி. மண்ட பொத்துக்கிச்சி. ஆறு தையலு போட்டாங்க” என்று சொன்ன சாந்தா, தலையில் தையல் போட்ட இடத்தைக் காட்டினாள்.
அதைப் பார்த்த செல்வகுமார், “பெரிய காயம்தான்” என்று சொன்னான். அப்போது தெருவிலிருந்து வந்த சாந்தாவின் புரு ஷன் பன்னீர், சாந்தாவையும் செல்வகுமாரையும் மாறிமாறிப் பார்த்தான். பன்னீர் கேட்காமலேயே சாந்தா சொன்னாள். “நான் வேல செய்யப் போறனில்ல, அந்த ஊட்டு சாரு. அடிபட்டது என்னாச்சின்னு கேக்கறதுக்கு வந்திருக்காரு.” உடனே பன்னீர் செல்வகுமாருக்கு வணக்கம் சொன்னான். செல்வகுமார் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில் சாந்தா வேலை செய்துகொண்டிருக்கும் போது பாண்டு அவளுடைய தலையில் விழுந்தது, மருத்துவமனைக்குப் போனது, தையல்போட்டது, வீட்டுக்கு வந்தது என்று எல்லாவற்றையும் நேரில் பார்த்தவன் மாதிரி தானாகவே பன்னீர் சொன்னதைக் கேட்ட செல்வகுமார் “அடிபட்ட அன்னிக்கி நான் ஊர்ல இல்ல. சி.ஈ மீட்டிங் மெட்ராசில. அதுக்கு நான் போயிட்டன். ஒடனே வர முடியல. ஆபிஸ் வேல. இன்னிக்கித்தான் வர முடிஞ்சிது. அதான் என்னான்னு பாத்திட்டுப் போவலாமின்னு வந்தன். கொத்தனார்கிட்ட அட்ரஸ் கேட்டன். கொடுத்தாரு. அடிபட்டதுமே போன்ல சொன்னாங்க. ஒடனே எங்க ஆளுங்கள விட்டு ஆஸ்பத்திரிக்கிக் கொண்டுபோகச் சொன்னன். ஆஸ்பத்திரிச் செலவுக்குப் பணமும் கொடுக்கச் சொன்னன்” என்று சொன்ன செல்வகுமார் “பணம் கொடுத்தாங்களா?” என்று சாந்தா விடம் கேட்டான்.
“கொடுத்தாங்க. காரிலியே ஊட்டுல கொண்டாந்து வுட்டுட்டுப் போனாங்க.”
“அந்த நேரத்தில நீங்க செஞ்சது பெரிய காரியம். எனக்கு என்னான்னு போயிருந்தீங்கின்னா என்னா ஆவறது?” என்று சொன்ன பன்னீர், “டீ, கலரு, சோடா ஏதாச்சும் குடிக்கிறீங்களா சார்?” என்று கேட்டான்.
“அதெல்லாம் ஒண்ணும் வாண்டாம். நான் இப்பக் கிளம் பிடுவன்” என்று சொன்னான்.
“அப்பிடின்னா நீங்க பேசிக்கிட்டு இருங்க” என்று செல்வ குமாரிடம் சொன்ன பன்னீர், சாந்தா பக்கம் திரும்பி, “ ‘நெல்லு அறுக்கிற மிஷனக் கூப்புடப் போவணும் வா’ன்னு வேலுமயிலு கூப்பிட்டாரு. போயிட்டு வர்றன்” என்று சொன்னான். பிறகு “வர்றன் சார்” என்று செல்வகுமாரிடம் சொன்னதோடு வணக்க மும் வைத்துவிட்டுப் போனான். பன்னீர் போன சிறிது நேரம் கழித்து செல்வகுமார் கேட்டான். “என்னா வேல செய்யுறாரு?”
“இன்னா வேலன்னு இல்ல. கூப்புடுற எடத்துக்குப் போவும், சொல்ற வேலயச் செய்யும். நெனச்சிக்கிட்டா ரெண்டு மூணு மாசம் பெங்களூருக்குப் போவும்.”
“அடிக்கிறது. ஒதக்கிறதுன்னு ஒண்ணும் பிரச்சன இல்லியே.”
“பணம் காசு இருக்கிற ஊட்டுல, கவர்மண்டு வேலயில இருக் கிறவங்க ஊட்டுல சண்டயே வராதா? புருசன் பொண்டாட்டின்னு இருந்தா, குடும்பமின்னு இருந்தா சண்ட சச்சரவு இல்லாம எப்பிடி சார் இருக்கும்?” சாந்தா சிரித்தாள். ஆனாலும், அவளுடைய குரலிலும் முகத்திலும் லேசான மாற்றம் ஏற்பட்டிருப் பதைப் பார்த்த செல்வகுமார் “கஷ்டம்தான்” என்று சொன்னான். செல்வகுமார் எதற்காக அந்த வார்த்தையைச் சொன்னான் என்ப தைப் புரிந்துகொண்ட மாதிரி “கைகாலு நல்லா இருக்கணும் சார்.
அது ஒண்ணுதான் எனக்கு வேணும், எவ்வளவு கஷ்டமான வேலயா இருந்தாலும் செஞ்சிட்டு, சோறு தின்னுக்குவன்” என்று சொன்ன சாந்தாவின் குரலில் பெரிய மாற்றம் தெரிந்தது. செல்வ குமார் சாந்தாவினுடைய முகத்தையே கூர்ந்துபார்த்தான். ஆறு மாதமாகப் பார்த்துக்கொண்டிருந்தாலும் இவ்வளவு நெருக்கமாக அவன் அவளுடைய முகத்தை ஒரு முறைகூடப் பார்த்ததில்லை. தலையில் இருந்த காயத்தை மறைப்பதற்காகச் சிறு துண்டைத் தலையில் போட்டிருந்தாள். அது ஒன்றுதான் உறுத்தலாக இருந் தது. அதை எடுத்துவிட்டால் அழகாகவே இருப்பாள் என்ற எண் ணம் அவனுக்கு இருந்தது. அவனுடைய மனதை அறிந்த மாதிரி சிரித்துக்கொண்டே, “என்னா சார் அப்பிடிப் பாக்குறீங்க?” என்று கேட்டாள். அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் “செலவுக்கு என்னா செய்யுற?” என்று கேட்டான்.
“சோத்துக்குத்தான? அப்பறம் என்னா செலவு இருக்கு?” என்று கேட்ட சாந்தா, செல்வகுமாரைப் பார்க்காமல் தரையைப் பார்த்த வாறு சொன்னாள். “ரெண்டு புள்ளைங்களயும் கான்வென்டுல சேத்ததால பெரிய கஷ்டமா இருக்கு. அதுங்ககிட்ட சொன்னா கேக்க மாட்டங்குது. ஊர்ல பத்துப் பதினஞ்சிப் புள்ளைங்களத்தவுத்து மத்ததெல்லாம் கான்வென்டுலதான் படிக்குது. எம் புள்ளைங்களும் கான்வென்டுலதான் படிக்கணும். ஊரே ஒருவழியாப் வயில, நான் மட்டும் தனி வழியா போவணுமா? இப்பலாம் கவர்மண்டு பள்ளிக்கூடத்தில எவன் பாடம் நடத்தறான்னு கேட்டுச் சண்டக்கி வருது” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு கோழி படலின் வழியே நுழைந்து வந்தது. சாந்தாவையும் செல்வகுமாரையும் பார்த்தது. தயங்கியபடியே இரண்டு மூன்றடி முன்னே வந்தது. வீட்டுக்குள் போவதற்குப் பார்த்தது. “த்தூ. த்தூ” என்று கோழியை விரட்டினாள் சாந்தா. கோழி வெளியே போகவில்லை. தலையில் போட்டிருந்த துண்டை எடுத்துப் பலமாக விசிறிய பிறகுதான் கோழி படலின் சந்து வழியே வெளியேறி, வீட்டுக்குப் பின்புறமாகச் சென்றது. கோழியையே பார்த்துக்கொண்டிருந்த செல்வகுமார் சாந்தாவிடம் “பீஸ் எப்பிடிக்கட்டுறீங்க?” என்று கேட்டான்.
“பீஸ் கட்ட முடியாமத்தான் நான் சித்தாளு வேலக்கிப் போக ஆரம்பிச்சன். ஒரு வருசத்துக்கு மேல ஓடிப்போச்சி.”
“எத்தன புள்ளைங்க? எந்த கிளாஸ் படிக்குதுங்க?”
“பொண்ணு ஒண்ணாவது, பையன் எல்.கே.ஜி.”
“ஸ்கூல் விட்டு வந்ததும் பசங்கள யாரு பாத்துக்குவாங்க?”
“எம் மாமியாரு.”
“அவுங்க என்னா பண்றாங்க?”
“ஆடு மேய்க்குது.”
“நான் ஒன்னெப் பாக்க வந்ததில பிரச்சன ஒண்ணும் வராதே?”
“அது அப்பிடிப்பட்ட ஆளில்ல சார்” என்று சொல்லி சாந்தா சிரித்தாள்.
“எப்பிடிச் சொல்ற?”
“ஒங்களப் பத்தி அதுகிட்ட நான் சொல்லியிருக்கன் சார்.”
“என்னான்னு?”
சாந்தா சிரித்தாள். அவள் சிரித்த விதம் ரகசியம் மாதிரி இருந் தது. எப்போதும் ரசிப்பதுபோல இப்போது செல்வகுமாரால் அவளுடைய சிரிப்பை ரசிக்க முடியவில்லை. தன்னைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லியிருப்பாளா, கெட்ட விதமாகச் சொல்லியிருப் பாளா? செல்போன் நெம்பர் கேட்டு நச்சரித்ததை, தனியாகப் பேச முயன்றதை, பஸ்ஸுக்குப் பணம் கொடுக்க முயன்றதை, தீபாவளிக்குச் சீலை எடுத்துக்கொடுக்கிறேன் என்று சொன்னதை, செருப்பை மாற்று என்று பணம் கொடுக்க முயன்றதைச் சொல்லி யிருப்பாளா? எதைச் சொல்லியிருப்பாள்? என்று யோசித்தான். அப்போது தெருவிலிருந்து வந்த ஒரு வயதான பெண் சாந்தாவை நோக்கி வந்து “யாரு?” என்று கேட்டாள்.
“நான் வேல செய்யப் போன எடத்தில மண்ட ஒடஞ்சிபோச்சில்ல? அந்த ஊட்டுக்கார சார். எப்பிடி அடிபட்டுதுன்னு விசாரிக்க வந்திருக்காரு” என்று சாந்தா சொன்னதும் “அன்னிக்கி இவுரு இல்லியா?” என்று கிழவி கேட்டாள்.
“இல்ல” என்று சாந்தா சொன்னதை அந்தப் பெண் நம்ப மாட்டாளோ என்ற சந்தேகத்தில் தானாகவே செல்வகுமார் சொன்னான். “நான் அன்னிக்கி மெட்ராசில மீட்டிங்குக்குப் போயிட்டன். இன்னிக்கித்தான் வந்தன். அதான் பாத்திட்டுப் போவலா மின்னு வந்தன்.”
“கவர்மண்டு வேலயா?” கிழவி நேரிடையாக செல்வகுமாரிடம் கேட்டாள்.
“ஆமாம். பி.டபிள்.யூ. டிபார்ட்மண்டுல இஞ்சினியர்.”
“எம்மாம் சம்பளம்?”
கிழவி கேட்ட கேள்விக்கு செல்வகுமார் உடனடியாகப் பதில் சொல்லவில்லை.
செல்வகுமார் தயங்குவதைப் பார்த்த சாந்தா தன்னுடைய மாமியாரிடம் “ஒனக்கு எதுக்கு அந்த கிராசு கேள்வி எல்லாம்?” என்று கேட்டாள். சாந்தாவைப் பார்த்து “கேட்டா போறாங்க. நீ பேசாம இரு” என்று சொல்லிவிட்டுக் கிழவியைப் பார்த்துச்சொன்னான். “ஒரு லட்சத்துக்கு மேல.”
“மாசத்துக்கா?”
“ஆமாம்.”
“யே அப்பா. அப்ப, பெரிய ஊடாத்தான் கட்டுவீங்க.” கிழவி சொன்னதும் சாந்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது. “பேசாம இருக்கியா?” என்று தன்னுடைய மாமியாரிடம் சொன்னாள்.
“மனுசாள்கிட்ட ரெண்டு வார்த்த பேசுறது குத்தமா?” கிழவி கோபமாகக் கேட்டாள். அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல், பேச்சை மாற்றும் விதமாக “இம்மாம் நேரம் எங்க போன? நேரமாவலியா? ஆடுவுள ஓட்டிக்கிட்டுப் போவ வாணாமா?”
சாந்தா கேட்டாள்.
“மேற்காலத் தெரு சின்னப் பையனோட பெரிய மவன் சேகரு சிங்கப்பூருக்குப் போறானாம். அவன வழியனுப்புறதுக்கு ஊரே தெரண்டு நின்னுச்சி. அத வேடிக்க பாத்துக்கிட்டிருந்தன்.”
“அடுத்தது எந்த ஊர்ல பஞ்சாயத்து?” கிண்டலாகக் கேட்டாள் சாந்தா. அதற்குக் கிழவி உடனே பதில் சொன்னாள், “ஒங்கப்பன் ஊட்டுலதான்.”
“நான் என்னா கேக்குறன், நீ என்னா சொல்ற? அடுத்தது எங்க வேலன்னுதான் கேட்டன்.” செல்வகுமாரின் முன் பேச்சை வளர்க்க வேண்டாம் என்ற விதத்தில் சாந்தா சொன்னாள். ஆனால், சாந்தாவின் முகத்திலடிப்பது மாதிரி கிழவி சொன்னாள். “சுடுகாட்டுலதான்.” சாந்தாவினுடைய முகம் மாறிவிட்டது. மாமியாரைப் பார்க்காமல் தெருப் பக்கம் பார்க்க ஆரம்பித்தாள். கிழவியும் தனக்கென்ன பேச்சு என்பது மாதிரி உடனே வீட்டிற்குப் பின்புறம் சென்று கட்டியிருந்த ஏழெட்டு ஆடுகளை அவிழ்த்து மேய்ப்பதற்காக ஓட்டிக்கொண்டு வந்த வேகத்திலேயே “ஒங்கப்பன் ஊட்டுல செய்யுற மாரி ஊட்டுக்கு வந்தவங்கள வா வார்த்த பேசியே அனுப்பாத. ஒரு டீத் தண்ணீய, சோடா, கலர வாங்கிக் கொடுத்து அனுப்பு” என்று சொல்லிவிட்டு ஆடுகளுக்குப் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.
“தண்ணிய எடுத்துக்கிட்டுப் போவலியா? ஒன்னோட பாட்டுலு எங்க?” சாந்தா அக்கறையோடு கேட்டாள். அதற்கு வெடுக் கென்று “எம் பொணத்துமேல ஒந் தண்ணியக் கொண்டாந்து ஊத்து” என்று சொல்லிவிட்டுப் போனாள் கிழவி. சாந்தாவும் கிழவியும் பேசிக்கொண்டது செல்வகுமாருக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஒம் மாமியாருதான அந்தம்மா?” என்று செல்வகுமார் கேட்டான்.
“ஆமாம்.”
“ஒனக்கும் ஒம் மாமியாருக்கும் சண்டயா?”
சாந்தா வாய்விட்டுச் சிரித்தாள். “அது பேசுனதப் பாத்து அப் பிடிக் கேக்குறீங்களா? அது பேச்சே அப்பிடித்தான். எப்பியுமே வெடுக்குவெடுக்குன்னுதான் பேசும்.” சாந்தா மீண்டும் சிரித்தாள். “ஆளுதான் நாளக்கிச் சாவுற மாரி இருக்கும். ஆனா ஒலகத்து வாயி. வாயத் தொறந்தாலே கல்லடிக்கற மிஷின் மாரிதான்.” திரும் பவும் சிரித்தாள். சாதாரணமாகச் சிரிக்கும்போது இருப்பதைவிட இப்போது அவள் அதிக அழகாக இருப்பது மாதிரி தெரிந்தது.
“பேரு என்னா?”
“சின்னம்மா. பேருதான் சின்னம்மா. வாயத் தொறந்தா ஊருக்கே பெரியம்மாதான். என்னெதான் அதுக்குப் புடிக்காது. ஆனா மவனயும் பேரப் புள்ளைங்களையும் ஒரு மணி நேரம் பாக்காட்டி அதுக்கு உசுரு போயிடும்.”
செல்வகுமார் தெருப் பக்கம் பார்த்தான். சின்னம்மா திரும்பி வருவாளோ என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. அவனிடம் கேள்வி கேட்ட விதம், சாந்தாவிடம் பேசிய விதம் எல்லாமே சின்னம்மா கோபமாக இருந்த மாதிரி தெரிந்தது. தான் வந்தது பற் றித் தவறாக நினைத்திருப்பாளோ என்ற சந்தேகம் வந்தது. தானாக வந்து வம்பில் மாட்டிக்கொண்டோமோ? சாந்தாவை வம்பில் மாட்டிவிட்டோமோ என்ற எண்ணம் உண்டாயிற்று.
சாந்தாவினுடைய புருஷன் என்ன நினைத்திருப்பான், அவளு டைய மாமியார் என்ன நினைத்திருப்பாள் என்று யோசித்தான்.
வீட்டுக்கு வந்தது பற்றி, தன்னைப் பற்றி சாந்தா என்ன நினைக் கிறாள்? வீட்டுக்கு வந்து வம்பில் மாட்டிவிட்டுட்டிங்களே என்று நினைப்பாளா? தெருவில், ஊரில் சனங்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைப்பாளா? யோசித்தபடியே சாந்தாவினுடைய முகத்தைப் பார்த்தான். அவளுடைய முகத்திலிருந்து, அவள் உட்கார்ந்திருக்கும் விதத்திலிருந்து எதையும் யூகித்தறிய முடிய வில்லை.
தன் வீட்டில் கட்டட வேலை நடக்கும்போது சாந்தாவின் தலையில் பாண்டு விழுந்து காயமாகிவிட்டது என்பதை போனில் சொன்னபோது அவன் சென்னையில் இருந்தாலும், உடனே கார் டிரைவரை அனுப்பி மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போக வைத்து, தையல் போட வைத்து, வீட்டில் கொண்டுபோய் விடச் சொன்னான். அதோடு ஆஸ்பத்திரி செலவுக்கு ஐயாயிரம் கொடுத்துவிட்டு வரச் சொன்னான். இவன் சொன்னபடியே டிரைவர் செய்துவிட்டான். எல்லா விஷயமும் முடிந்து ஒன்பது நாட்களாகிவிட்டன. ஒரு காரணமும் இல்லாமல் வந்து உட்கார்ந்துகொண்டு கழுத்தை அறுக்கிறானே என்று நினைப்பாளோ என்று சாந்தாமீது சந்தேகப்பட்டான். அவளுடைய புருஷனும் மாமியாரும் பழக்கப்பட்ட ஆளிடம் பேசுவது மாதிரி எப்படிப் பேசினார்கள் என்று யோசித்தான். அப்போது தெருவில் போன நடுத்தர வயதுள்ள பெண் சட்டென்று திரும்பிச் சிரித்துக்கொண்டே சாந்தாவிடம் வந்து “என்னா காரு நிக்குது?” என்று கேட்டாள்.
“போன வாரம் எந் தலயில அடிபட்டுதில்ல. அந்த ஊட்டு சாரு. விசாரிக்க வந்திருக்காரு.”
“அப்பிடியா?” என்று கேட்டு அந்தப் பெண் சிரித்தாள். அவள் சிரித்த விதம் சாந்தாவைக் கோபப்படுத்தியது. “எதுக்குப் பல்லக் காட்டுற?” என்று கேட்டாள். சாந்தா கேட்டதற்குப் பதில் சொல்லாத அந்தப் பெண் “நான் இன்னிக்கி வேலக்கிப் போவல. என் நாத்தனாருக்குப் புள்ள பொறந்திருக்கு. அதப் பாக்கப் போறன். வாசல்ல காரு நின்னுதா, அதான் என்னான்னு கேட்டுட்டுப் போவ வந்தன்” என்று சொன்னதோடு கண்ணடித்துச் சிரித்துவிட்டுப் போனாள். அவள் கண்ணடித்துச் சிரித்தது சாந்தாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. கோபத்தில் “நாயி” என்று சொன் னாள். அதைக் கேட்ட செல்வகுமார் “என்னாச்சி?” என்று கேட்டான்.
“சித்தாள் வேல செய்யுற நாயிதான். அதோட புத்தியக் காட் டிட்டுப் போவுது.” கோபமாகச் சொன்னாள். சட்டென்று ஏன் கோபமாகப் பேசுகிறாள் என்று புரியாது குழம்பிப்போன செல்வகுமார், “அந்தப் பொண்ணு ஒண்ணும் சொல்லாதப்ப நீ ஏன் கோபப்படுற?” என்று கேட்டான்.
“ஒங்களுக்குப் புரியாது சார்” என்று லேசான கோபத்தோடு சொன்னாள்.
“சரி. நான் கிளம்பறன்” என்று சொல்லிய செல்வகுமார், “செல்போன் நெம்பரச் சொல்லு” என்று கேட்டுவிட்டு, தன்னுடைய செல்போனை எடுத்து எண்களைப் பதிவதற்குத் தயாராக இருந்தான்.
“எதுக்கு சார்?”
“சும்மாதான்.” செல்வகுமார் சிரிக்க முயன்றான். ஆனால், சிரிப்பு வரவில்லை.
“அதெல்லாம் வாண்டாம் சார். எதாயிருந்தாலும் நீங்க கொத்தனார்கிட்டியே பேசிக்குங்க” சாந்தா சொன்னதும் செல்வகுமாருக்குக் கோபம் வந்துவிட்டது. கோபத்தை வெளியே காட்டாமல் “ஒங்கிட்ட எத்தினியோ முற கேட்டிருக்கன். நீ தரல. வீட்டுக்கு வந்தும் கேக்கறன். நீ தர மாட்டங்குற. இந்த நெம்பரக் கொத்தனார்கிட்டியோ, மத்த சித்தாள்கிட்டியோ, கேட்டு வாங்க முடியாதா? இன்னிக்கி வரும்போதுகூட வீட்டு அட்ரஸ் கேட்டுட்டுத்தான் வந்தன். ஆனா, போன் நெம்பரக் கேக்கல. மத்தவங்க மூலமா வாங்குறது அசிங்கம்னு நெனக்கிறன்” என்று சொன்னான்.
“ஒங்க பொண்டாட்டிக்கித் தெரிஞ்சா என்னாவறது?”
“ஒண்ணும் ஆவாது, நான் பாத்துக்கிறன்.”
“எம் புருசனுக்குத் தெரிஞ்சா?”
செல்வகுமார் பேசவில்லை. இப்படியொரு கேள்வியை அவன் சாந்தாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. “நீங்க ஆம்பள சார்.
சமாளிச்சிடுவீங்க. நான் பொம்பள. அதுவும் இல்லாத பட்டவ. என்னால சமாளிக்க முடியாது சார். ஆம்பளத் தப்பு செஞ்சா வேற வழியில்லாம பொம்பளப் பொறுத்துக்குவாங்க. அனுசரிச்சிப் போயிடுவாங்க. பொம்பளத் தப்பு செஞ்சிட்டா ஆம்பள மனசு ஏத்துக்காது. அனுசரிச்சிப்போவாது. வெட்டு, குத்து, கொலன்னு ஆயிடும். ஒலகம் முழுக்க ஆம்பள மனசு ஒரே மாரியாதான் இருக்கும்” என்று சொன்ன சாந்தா சிறிது நேரம் பேசாமல் இருந் தாள். தெருவைப் பார்த்தாள். பிறகு செல்வகுமாரைப் பார்த்தாள். அப்போது அவளுடைய மனதில் என்ன தோன்றியதோ, “ஒங்க பொண்டாட்டி வேல செய்யுற எடத்துக்கு வந்தாலே வேலயப் பாக்காம என்னையேதான் முறச்சிமுறச்சிப் பாக்குறாங்க. அவுங்க மனசுல சந்தேகம் வந்துடுச்சி சார்” என்று சாந்தா சொன்னதும் “அப்பிடியா?” என்பது மாதிரி ஆச்சரியமாகப் பார்த்தான் செல்வ குமார்.
“ஒங்க வௌயாட்டுக்கு வேற எடம் பாருங்க சார்.”
அந்த வார்த்தையைக் கேட்டதும் செல்வகுமாரின் முகம் சுண்டிப்போயிற்று. சாந்தாவைப் பார்ப்பதற்காக ஏன் வந்தோம் என்று நினைத்தான்.
செல்வகுமார் வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்தே சாந்தா சித்தாள் வேலைக்குப் போகிறாள். வீட்டு வேலை ஆரம்பித்த இரண் டாவது மூன்றாவது வாரத்திலேயே சாந்தாவிடம் செல்வகுமார் அவளுடைய செல்போன் எண்ணைக் கேட்டான். “எதுக்கு சார்?”
என்று சிரித்து மழுப்பிவிட்டுப் போய்விட்டாள். அதிலிருந்து இன்றுவரை அவளிடம் அவன் செல்போன் எண்ணைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். சாந்தா தரவில்லை. அவன் எதற்காக செல்போன் எண்ணைக் கேட்கிறான் என்பது அவளுக்குத் தெரி யாமல் இல்லை. செல்வகுமாரைப் பார்த்தாள்.
செல்வகுமார் பொதுப்பணித் துறையில் கோட்டப் பொறியாளராக இருக்கிறான். சம்பளம் ஒன்றரை லட்சம் வாங்குகிறான். பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் ஊட்டியில் ஒரு பங்களா, கொடைக்கானலில் ஒரு பங்களா என்று வாங்கிப்போட்டிருக்கிறான். விருத்தாசலத்தில் இரண்டு வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறான். இரண்டு கார் வைத்திருக்கிறான். அதில்லாமல் அரசாங்க கார் ஒன்றும் இருக்கிறது. அவனுக்குக் கீழே பத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள், ஓவர்சியர்ஸ், சாலைப் பணியாளர் கள் என்று நூறு, இருநூறு பேர் வேலை செய்கிறார்கள் என்று மேஸ்திரி வேலு சொல்லியிருக்கிறான். இப்போது கட்டுகிற வீட் டின் மதிப்பு மூணு கோடி என்றும், ஒரு வருஷத்துக்கு மேல் வேலை நடக்கும் என்றும் மேஸ்திரி சொல்லியிருக்கிறான். பெரிய அதிகாரி, பெரிய பணக்காரன். டியூஷன் வாத்தியாருக்கு முன் பையன் உட்கார்ந்திருப்பது மாதிரி இங்கே உட்கார்ந்திருக்கிறானே? அப்படியென்ன தன்னிடம் இருக்கிறது, எதற்காக அலைகிறான் என்று செல்வகுமாருக்காக வருத்தப்பட்டாள். அவனைச் சமாதானப் படுத்துவது மாதிரி “நான் ஒண்ணு சொன்னா கேப்பிங்களா சார்?” என்று கேட்டாள்.
‘சொல்லு’ என்பது மாதிரி வெறுப்புடன் செல்வகுமார் சாந்தா வைப் பார்த்தான்.
“காலயில ஆறு மணிக்கெல்லாம் நான் ஊட்ட வுட்டுக் கௌம் பணும். ஊட்டுலயிருந்து ரோட்டுக்கு ரெண்டு மைலு நடக்கணும். அப்பறம் ரோட்டுலயிருந்து ஒரு பஸ்ஸப் புடிச்சி விருத்தாசலம் போவணும். பஸ்ஸுல கால வச்சி நிக்க எடமிருக்காது. அம்மாம் கூட்டம். அம்மாம் நெரிச இருக்கும். இடிபுடின்னு பஸ்ஸுல நின்னுகிட்டே ஒரு மணிநேரம் போவணும். பஸ்ஸ வுட்டு எறங்கி சித்தாளு, கொத்தனாரு, மேஸ்திரிங்க நிக்குற எடத்துக்குப் போவணும். அந்த எடத்தில என்னெ மாரி ஆயிரம், ரெண்டாயிரம் பேராவது ஆடு, மாடு மாரி நிப்பாங்க. எவன், எங்க கூப்புடுறான்னு கூட்டத்தில நிக்கணும். வர்றியா, வர்றியா, நான் சொல்ற எடத்துக்கு வர்றியா? செங்கல் தூக்க, மணல் மூட்ட தூக்க, காங் கிரீட் போட வர்றியான்னு கூப்புடுற எடத்துக்குப் போவணும். சில எடம் பக்கத்திலியே இருக்கும். சில எடம் ரெண்டு, மூணு மைலு நடக்கணும். பஸ்ஸுல போவலாம். மினி பஸ்ஸுக்கு அஞ்சி ரூவா கொடுக்கணுமேன்னு நடந்தே போவணும். போனதுமே எடுத்துக்கிட்டுப் போன சோத்த நாலு வாயா அள்ளிப் போட்டுக்கிட்டு வேலய ஆரம்பிச்சா மத்தியானம் ரெண்டு மணிக்குத்தான் செத்த குந்த முடியும். அதுகூட சோறு திங்கிறதுக்கு. அப்பறம் மூணு மணிக்கு ஆரம்பிச்சா ஆறு மணிக்குத்தான் வேல முடியும். கூலிய வாங்கிக்கிட்டுத் திரும்பி நடந்து பஸ் ஸ்டாண்டுக்கு நடக்கணும். அப்பறம் பஸ்ஸப் புடிச்சி ரோட்டுக்கு வந்து, ரெண்டு மைலு நடந்து ஊட்டுக்கு வந்து சேரும்போது மணி ராத்தி எட்டு ஒம்போதாயிடும். அப்பறம்தான் சோறு ஆக்கணும். சோறு திங்கணும். தூங்கணும், மறுநாளு விடியக்காலமே எழுந்திரிச்சி சோறாக்கி வச்சிட்டு, சோத்த எடுத்துக்கிட்டு ஆறு மணிக்கே பஸ்ஸப் புடிக்க ரோட்டுக்கு ஓடணும்.”
இந்தக் கதையெல்லாம் எதற்காக என்னிடம் சொல்கிறாய் என் பது மாதிரி அவன் அவளுடைய முகத்தைப் பார்த்தான்.
“காலயில ஆறு மணிக்கு ஊட்ட வுட்டுக் கிளம்புனா, திரும்பி ஊட்டுக்கு வர ராத்திரி எட்டு ஒம்போது மணி ஆயிடும். ரோட்டுக்கு நடந்து போவயில, பஸ்ஸுல போவயில ஆள் கூப்புட வர்ற எடத்தில நிக்கயில, வேல செய்யுற எடத்தில, திரும்பி ஊட்டுக்கு வந்து சேருறதுக்குள்ளார ஒரு நாளக்கி எத்தன ஆம்பள என்னெ பாப்பாங்க? எல்லார் மனசுமா நல்லா இருக்கும்? எத்தன பேரு ஆசப்படுவாங்க? ஆசப்பட்டுட்டாங்களேன்னு அத்தன பேர்கூட யும் நான் போவ முடியுமா சார்? அப்பிடின்னா, ஒரு நாளக்கி நான் எத்தன பேர்கூட போவணும்?”
சாந்தா கேட்டது செல்வகுமாருக்குச் செருப்பால் அடித்த மாதிரி இருந்தது. அவள் இப்படிக் கேட்பாள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. ஏன் வந்தோம்? வந்திருக்கக் கூடாது. பெரிய தவறு செய்துவிட்டோம் என்று நினைத்ததும் கண்மண் தெரியாத அளவுக்குக் கோபம் வந்தது. வேலை செய்கிற இடத்தில் ஒரு விதமாகவும், வீட்டில் ஒரு விதமாகவும் நடந்துகொள்கிறாளா என்ற சந்தேகம் உண்டாயிற்று. இவ்வளவு அதிகமாகப் பேசுவாள், முகத்திலடிப்பது மாதிரி பேசுவாள் என்று தெரிந்திருந்தால் அவன் வந்திருக்கவே மாட்டான். ஒன்பது நாட்களாக அவளைப் பார்க்காமல் அவன் எவ்வளவு தூரம் அல்லாடிப்போனான் என் பது அவளுக்குத் தெரியுமா? உண்மையாகவே பேசுகிறாளா, நடிக் கிறாளா என்ற சந்தேகம் அவனுக்கு உண்டாயிற்று.
செல்வகுமார் கட்டுகிற வீட்டுக்குச் சித்தாள் என்று சாந்தா என்றைக்குப் போனாளோ, அதிலிருந்து அவளை அவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். அவள் எந்த இடத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறாளோ அங்கேயே நின்றுகொண்டு, அவளிடம் தனியாகப் பேசுவதற்கு முயன்றிருக்கிறான். சீலை வாங்க, செருப்பு வாங்க பணம் கொடுக்க முயன்றிருக்கிறான். அப்போதெல்லாம் ஒரு வார்த்தை முறைத்துப் பேசியதில்லை. முகத்தைக் கோணிக்கொண்டு போனதில்லை. மற்ற சித்தாள், கொத்தனார்களிடம் எதுவும் சொன்னதில்லை. எது செய்தாலும் மர்மமாகச் சிரித்துக்கொண்டே போய்விடுவாள். அந்த நம்பிக்கையில்தான் அவளைப் பார்ப்பதற்காக வந்தான். ஆனால், சாந்தா என்ன சொல்லிவிட்டாள் என்று யோசித்துக்கொண்டிருந்தான் செல்வகுமார். அவன் என்ன நினைக்கிறான், என்ன யோசிக்கிறான் என்று பார்க்காமல் கேட்டாள் “எதுக்காக சார் துணி கட்டுறம்?”
“மரியாதக்காக. கௌரவத்துக்காக.” கடுப்புடன் சொன்னான்.
“அது ஒங்கள மாரி படிச்சவங்களுக்கு. பணக்காரங்களுக்கு. நான் அதுக்காகக் கட்டல.”
“பின்னெ?” வேகமாகக் கேட்டான்.
“மானத்த மறைக்கிறதுக்கு.”
“புத்திசாலி” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். சரி யான வாயாடிதான். லேசுப்பட்ட ஆளில்லை என்று நினைத்தான். உடனே கிளம்பிவிட வேண்டும் என்று கடிகாரத்தைப் பார்த்தான். மணியாகிவிட்டது தெரிந்தது. உடனே எழுந்து நின்றான். சாந்தா வைப் பார்க்காமல் தெருவையும் காரையும் பார்த்தான். செல்வ குமார் கோபமாகிவிட்டான் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அவனுடைய கோபத்தைக் குறைக்க நினைத்த சாந்தா “ஒக்காருங்க சார். போவலாம். தண்ணி குடிக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
“ஒன்னெப் பாக்க வந்ததுக்காக என்ன வேணுமின்னாலும் பேசுவியா?” ஆத்திரத்தோடு கேட்டான்.
“ஊர்ல போறவங்ககிட்டயா சொன்னன்?” சாந்தா சிரித்தாள். சாந்தாவினுடைய முகத்தைப் பார்த்தான். அவளுடைய முகத்தை இப்போது அவனால் ரசிக்க முடியவில்லை. கடிகாரத்தைப் பார்த் தான். சைலன்ட் மோடில் போட்டிருந்த செல்போனை எடுத்து, சைலன்ட் மோடை நீக்கினான். பத்து இருபது மிஸ்டு கால்கள் இருப்பது தெரிந்தது.
“ஒக்காருங்க சார், ஒக்காருங்க சார்” என்று ஏழெட்டு முறை சொன்ன பிறகுதான் விருப்பமின்றி முகத்தைக் கோணிக்கொண்டு மீண்டும் உட்கார்ந்தான். அப்போது அவனுடைய செல்போன் மணி அடித்தது. அவனுடைய மனைவி கூப்பிட்டாள். ‘பேசலாமா? வேண்டாமா?’ என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏற்கெனவே சாந்தா பேசிய பேச்சால் அளவு கடந்த கோபத்தில் இருந்தான். மனைவி யினுடைய போன் வந்ததும் இன்னும் அவனுக்குக் கோபம் கூடியது. போனை மீண்டும் சைலன்ட் மோடில் போட்டான். மனதுக்குள் தன்னுடைய மனைவியைத் திட்டினான்.
வீடு கட்ட ஆரம்பித்து எட்டு மாதம் ஆகிறது. முதல் நாள் வேலைக்கு வந்ததிலிருந்து சாந்தாவைக் காரணமின்றி செல்வகுமாருக்குப் பிடித்துப்போயிற்று. அவளிடம் அதிகம் பேசிய தில்லை. அதிகம் பழகியதில்லை. அவளைப் பற்றிய விவரம் எதுவும் தெரியாது. சித்தாள் வேலைதான் செய்கிறாள். ஆனாலும், அவளை அவனுக்குப் பிடித்துப்போயிற்று. அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டான். படிப்படியாக மற்ற சித்தாள்களிடம் விசாரித்ததில் கல்யாணமாகிவிட்டது, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்று தெரிந்த பிறகும் அவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. தான் ஒரு கோட்டப் பொறியாளர், மனைவி இருக்கிறாள், இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன, ஐம்பது வயது ஆரம்பிக்கப்போகிறது என்பதும், விஷயம் வெளியே தெரிந்தால் வீட்டில் அசிங்கமாகும், அலுவலகத்தில், தெரிந்தவர்கள் மத்தியில் அசிங்கமாகும் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. எல்லாவற்றையும் சாந்தாமீது இருந்த ஆசை காலி செய்துவிட்டது ‘என்மேல் விழுந்த மழைத்துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ என்ற சினிமாப் பாடலைப் பாட ஆரம்பித்தான். செல்போனில் பதியவைத்து கார் ஓட்டும்போது, வேலையைப் பார்வையிடும்போது, ஃபைல் பார்க்கும்போது, வீட்டில் தூங்கப் போவதற்கு முன்கூட அந்தப் பாட்டைத் திரும்பத்திரும்பக் கேட்டான். ஒரு நாளைக்குக் குறைந்தது நூறுமுறையாவது அந்த ஒரு பாட்டைக் கேட்டிருப்பான். அப்படியும் அந்தப் பாட்டு அவனுக்கு அலுக்கவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் பெரிய ஆற்றல் வருவது மாதிரிதான் இருந்தது. வீடு கட்டுகிற இடத்தில் நிற்கும்போதுகூட அந்தப் பாட்டைத்தான் கேட் பான். சித்தாள், கொத்தனார் எல்லாம் “எதுக்கு சார் ஒரே பாட்ட திரும்பத்திரும்பக் கேக்குறீங்க? வேற பாட்டு புடிக்காதா?” என்று கேட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் கேட்கும்போதெல்லாம் செல்வகுமார் சிரிக்க மட்டுமே செய்திருக்கிறான். சாந்தாகூட ஒருமுறை கேட்டாள். அதற்கு “புடிச்சிருக்கு” என்று மட்டுமே சொன்னான். அவனுக்கு அந்தப் பாட்டு பிடித்திருக்கிறது என் பதற்கான காரணம் புரிந்த மாதிரி அடுத்த வார்த்தை பேசாமல் சிரித்துக்கொண்டே போய்விட்டாள். சாந்தா போன மாதிரி அவ னுடைய மனைவி போகவில்லை. ஒரு மாதம் இரண்டு மாதம் என்று பொறுத்துப்பார்த்துவிட்டு ஒரு நாள் கடுமையான கோபத்தில் கேட்டாள்.
“என்னா பாட்டெல்லாம் புதுசா இருக்கு?”
“சும்மாதான்” சிரித்து மழுப்பினான். ஆனால், அவனுடைய மனைவி விடவில்லை.
“வயது அம்பது ஆவப்போவுது. வீட்டுல வளந்த பசங்க ரெண்டு இருக்குதுங்க. அதுக்கேத்த மாதிரி நடந்துக்குங்க.” செல்வ குமாருக்குக் கோபம் வந்துவிட்டது. “சினிமாப் பாட்டு கேக்குறது தப்பா?”
“ஒரே பாட்ட ஒரு நாளக்கி எத்தன முற கேப்பிங்க?”
“அது என்னிஷ்டம்.”
“ஒரே பாட்டக் கேக்குறது, தனியா சிரிக்கிறது... நீங்க இருவது வயசுப் பையனில்ல. கொஞ்ச நாளா ஒங்க நடவடிக்கயே சரியில்ல” என்று சொல்லி மாலினி கத்தினாள்.
“ஏன் எப்பவுமே ஒன்னோட மூள மட்டும் கோணலாவே வேல செய்யுது?”
“என்னோட மூள கோணலா வேல செஞ்சா போவுது. ஒங்க மூள நேரா வேல செஞ்சா சரி. பதினேழு வருசமா ஒங்களப் பாத்துக்கிட்டு வர்றன், எனக்குத் தெரியாதா?” என்று கேட்டுவிட்டு அடுத்த வார்த்தை பேச விரும்பாத மாதிரி போய்விட்டாள். அந்தச் சண்டை நேற்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. சண்டை நடக்கிற நேரத்தில் மட்டும்தான் பாட்டை நிறுத்துவான். அந்தப் பாட்டால் வீட்டில் சண்டை நடக்காத நாள் எது என்று யோசித்த செல்வகுமார், “அவ என்னடான்னா தினம் சண்ட வாங்குறா. இவ என்னடான்னா இப்பிடிச் சொல்றா. பொட்டச்சியெல்லாம் ஒலகத்தில ஒரே மாதிரியாத்தான் இருக்காளுங்க” என்று அலுப்புடன் முணுமுணுத்தான்.
செல்வகுமார் பள்ளியில் படிக்கும்போதும், இஞ்சினியரிங் படிக்கும்போதும் பெண் பிள்ளைகளோடு பேசியிருக்கிறான், பழகி யிருக்கிறான், சில பிள்ளைகள்மீது ஆசைப்பட்டும் இருக்கிறான். ஆனால், சாந்தா அளவுக்கு அவனை யாருமே ஈர்த்ததில்லை. ஒரு நாள் அவள் வேலைக்கு வராவிட்டால் “ஏன் வரல, ஏன் வரல?” என்று ஒவ்வொரு சித்தாளிடமும் கேட்பான். ஒரு காரணமும் இல்லையென்றாலும் அவளைப் பார்ப்பதற்காக வேலை நடக்கிற இடத்துக்கு ஒரு நாளைக்குள் மூன்று, நான்கு முறை வருவான். ஒரு காரணமும் இல்லாமல் உட்கார்ந்திருப்பான். அலுவலகத்துக்குக் கூட, ரோடு போடுகிற இடத்துக்குக்கூட அவ்வளவு பொறுப்பாகப் போக மாட்டான், ஃபைல் பார்ப்பதைக்கூட, கையெழுத்துப் போடுவதைக்கூட அவ்வளவு பொறுப்பாகச் செய்ய மாட்டான். சாந்தா இருக்கிற இடத்துக்கு வருவதில் மட்டும் அவ்வளவு பொறுப்பு, அவ்வளவு அக்கறை. சாந்தாவை ஒரு நாள் பார்க்காவிட்டால் அன்று அவனுக்குப் பைத்தியம் பிடித்த மாதிரிதான். கடலூரில் மீட்டிங், சென்னையில் மீட்டிங் என்று போகிற அன்று யாரைக் கண்டாலும் எரிந்துஎரிந்து விழுவான். மற்ற அலுவலர்களோடு முகம்கொடுத்துப் பேச மாட்டான். கார் டிரைவரைத் திட்டுவான். பியூனைத் திட்டுவான். செல்போனில் பேசுகிறவர்களிடம் “அப்பறம் பாக்கலாம். இப்ப போன வையிங்க. நான் ரொம்ப பிஸி” என்று சொல்லிவிடுவான். அதுவே, வீட்டு வேலை நடக்கிற இடத்துக்கு வந்து சாந்தாவைப் பார்த்துவிட்டால் போதும்; உருகிப்போய்விடுவான். “வேலயெல்லாம் நல்லாப் போவுதா? கஷ்டமா இருக்கா? டீ குடிக்கிறீங்களா? கொஞ்சம் நேரம் பிரேக் விடுங் களன்” என்று கொத்தனாரிடம் சொல்வான். சாந்தாவைத் தனி யாகப் பார்த்து “எப்ப வந்த? நடந்தா வந்த? ஏன் உம்முன்னு இருக்க? கொத்தனாரு திட்டிட்டானா?” என்று கேட்பதற்கு வாய்ப்புக் கிடைத்து, அவளிடம் ஒன்றிரண்டு வார்த்தை பேசிவிட்டால் போதும், ஒரே சிரிப்பாக, மகிழ்ச்சியாக இருப்பான். அந்த நேரத்தில் கொத்தனார், சித்தாள் எது கேட்டாலும் ‘இல்ல’ அல்லது, ‘நாளைக்கிப் பாக்கலாம்’ என்ற வார்த்தை அவனுடைய வாயிலிருந்து வராது. இத்தனைக்கும் அவன் சாந்தாவிடம் பத்து இருபது வார்த்தைகளைத் தொடர்ச்சியாகப் பேசியது கிடையாது. தனியாகப் பார்த்ததோ, பேசியதோ, பழகியதோ கிடையாது. என்ன காரணமோ அவளைப் பார்த்தால் சந்தோஷம் வந்துவிடுகிறது. உற்சாகமாகிவிடுகிறான். எந்தத் தகுதியும் பார்க்காமல் சாதாரணக் கூரை வீட்டின் முன், நான்கு ஐந்து பேர்கூடப் படுக்க முடியாத வீட்டின் முன், அழுக்கடைந்த, குப்பைக்கூளமான, ஆட்டின் மூத்திர வாடை அடிக்கும் வீட்டின் முன் ஏன் வந்து உட்கார்ந் திருக்கிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்தான் செல்வகுமார்.
சாந்தா செல்வகுமாரையே பார்த்துக்கொண்டிருந்தாள். எவ் வளவு பெரிய பணக்காரன், எவ்வளவு பெரிய அதிகாரி, இப்படி வந்து உட்கார்ந்திருக்கிறானே என்று யோசித்தாள். வீட்டு வேலை நடக்கிற இடத்துக்கு வரும்போதெல்லாம் தன்னையேதான் பார்ப் பான், தன்னிடம் பேசுவதற்கு, சிரிப்பதற்கு, பக்கத்தில் வருவதற்கு எப்படியெல்லாம் முயன்று, முடியாத நிலையில் தவித்துப்போய் நிற்பான் என்பதையெல்லாம் நினைத்துப்பார்த்தாள். ஒவ்வொன் றாக நினைக்கநினைக்க அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
‘ஆம்பளங்க இப்படியெல்லாமா இருப்பாங்க?’
கட்டட வேலைக்கென்று எந்த இடத்துக்குப் போனாலும் ஒரு நாளுக்கு ஒரு டீதான் வாங்கித் தருவார்கள். செல்வகுமாரும் ஆரம்பத்தில் அப்படித்தான் வாங்கித் தந்தான். இரண்டாவது, மூன்றா வது வாரம் கழிந்ததும் என்ன நினைத்தானோ ஒரு நாளைக்கி இரண்டு முறை டீ வாங்கிக் குடிப்பதற்குப் பணம் தந்தான். அதற்கடுத்த வாரம் டீயோடு இரண்டு வடையும் வாங்கித் தர ஆரம்பித்தான். மணல் சலிக்கும்போது, செங்கல் தூக்கும்போது, மணல் மூட்டையை, சிமெண்ட் மூட்டையைத் தூக்கும்போது வேண்டாம் என்று தடுத்தாலும் உதவி செய்ய வருவான். மீறிக் கேட்டால் ‘என்னோட வீட்டுலதான வேல செய்யுறன்’ என்று சொல்வான். அவன் உண்மையைச் சொன்னாலும் சித்தாள்களும் கொத்தனார்களும் நம்பவே மாட்டார்கள். டீ வாங்கித் தருவது, வடை வாங்கித் தருவது, உதவி செய்ய வருவது, எல்லாமே சாந்தா வுக்காகத்தான் செய்கிறான் என்பது எல்லோருக்குமே தெரியும். வேலை நடக்கிற இடத்துக்கு வந்ததுமே செல்வகுமார் எந்த இடத்தில் நிற்கிறான், யாரிடம் பேசுகிறான், யாரைப் பார்க்கிறான், யாரிடம் சிரிக்கிறான், யாரிடம் பேச முயல்கிறான் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். எட்டு மாதத்தில் செல்வகுமார் வீட்டுக்கு சாந்தா வேலைக்குப் போகாதது மூன்று நாள்கூட இருக்காது. மற்ற சித்தாள்கள் மாதிரி ஒரு நாளைக்கு ஒரு இடம் என்று அவள் வேலைக்குப் போகவில்லை. கொத்தனாரே இன்று வேலை இல்லை என்றாலும் தானாகவே மணல் சலிக்கலாம், மணலை அள்ளிக் கொட்டலாம், செங்கல்லை மேலே தூக்கி வைக்கலாம் என்று சொல்லி வேலையை உருவாக்கிக்கொண்டு வேறு ஒரு சித்தாளையும் அழைத்துக்கொண்டு வந்துவிடுவாள். அதையெல்லாம் புரிந்துகொண்டு சித்தாள்களாக இருப்பவர்கள், “பஸ்ஸுக்குக் காசு இல்ல சார்” என்று கேட்பார்கள். செல்வகுமார் ‘இல்லை’ என்று சொல்ல மாட்டான். கொத்தனார்களும் கேட்பார்கள், அவர்களுக்கும் கொடுப்பான். பத்து ரூபாய்தான் பஸ்ஸுக்கு என்றால் இருபது ரூபாயாகக் கொடுப்பான். அவனிடம் சித்தாள்கள் காசுபிடுங்குவதைப் பார்க்கும்போது சாந்தாவுக்குக் கோபமாக இருக் கும். ஒரு நாள் கோபத்தை அடக்க முடியாமல், “சம்பளம்தான் தர்றீங்களே. அப்பறம் எதுக்கு பஸ்ஸுக்குன்னு தனியா பணம் தர்றீங்க?” என்று கேட்டாள்.
“பரவாயில்ல. இருக்கட்டும்” என்று செல்வகுமார் சொன்னான். ஆனால், சித்தாள்கள் “ஒனக்கென்ன? ஒங் காசியவா தர்ற? ஏழ சனங்களாச்சேன்னு சாராப் பாத்துப் பிரியப்பட்டுத் தர்றாரு” என்று சண்டைக்கு வந்துவிட்டார்கள்.
சித்தாள்களுக்கும் கொத்தனார்களுக்கும் செல்வகுமார் என்றெல்லாம் பஸ்ஸுக்குப் பணம் தருகிறானோ அன்றெல்லாம் சாந்தா பொருமுவாள். பணம் தருவதைக்கூட அவளால் பொறுத்துக்கொள்ள முடியும். சில நேரங்களில் அவனே போய் டீ வாங்கிக்கொண்டு, வடை வாங்கிக்கொண்டு, சாப்பாடு கொண்டு வராதவர்களுக்குச் சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்து தருவான். அதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியாது. “ஒங்க ளுக்கு வேற வேல இல்லியா?” என்று கேட்பாள். அதற்கு செல்வ குமார் சிரிக்க மட்டுமே செய்வான்.
“கொடுக்கிறதெல்லாம் வாங்கித் தின்னுப்புட்டு, பின்னால கண்ணடிச்சி சிரிக்கிறது தெரியுமா?” என்று கேட்பாள். அதற்கும் அவன் சிரிக்க மட்டுமே செய்வான். தன்னால்தான் எல்லாம் செய்கிறான் என்பது தெரிந்த பிறகு சாந்தா, வேலை முடிந்து போவதற்கு முன் பொருள்கள் ஏதாவது தவறிக் கிடக்கிறதா, திருடு போகும் நிலையில் எந்தப் பொருளாவது கிடக்கிறதா, மழையில் நனையுமளவுக்கு சிமெண்ட் மூட்டை கிடக்கிறதா என்று பார்ப் பாள். ஒரு ஆணி, ஒரு செங்கல் தவறிப்போய்க் கிடந்தால்கூட அதை எடுத்து வந்து பத்திரப்படுத்திவிட்டுத்தான் போவாள். அவள் செய்கிற வேலைகளைப் பார்த்துவிட்டு மற்ற சித்தாள்களும் கொத்தனார்களும் ரகசியமாகச் சிரிப்பார்கள். மற்றவர்கள் சிரிக்கிறார்களே என்று தெரிந்தாலும் தான் செய்ய நினைத்த வேலையைச் செய்யாமல் போக மாட்டாள்.
‘ரொம்ப அக்கறதான்’ என்று மற்றவர்கள் கிண்டலடிப்பதைப் பொருட்படுத்த மாட்டாள். சித்தாள் வேலைக்குப் போக ஆரம் பித்து ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. எந்த இடத்திலும் சாந்தா இந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் வேலை செய்தது கிடையாது. எப்போதாவது உடம்புக்கு முடியாமல் வீட்டில் இருந்துவிட்டால், அன்று முழுவதும் கட்டடத்தில் என்ன வேலை நடக்கிறதோ என்ற எண்ணத்துடன்தான் இருப்பாள். ஏன் தன்னுடைய மனம் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது பேண்ட் பாக்கட்டிலிருந்து நூறு ரூபாய் பணக்கட்டை எடுத்து சாந்தாவிடம் செல்வகுமார் நீட்டினான்.
“எதுக்கு சார்?”
“ஆஸ்பத்திரிச் செலவுக்கு.”
“அன்னிக்கேதான் ஒங்க ஆபிஸ் ஆளுங்க வந்து எல்லாத்தயும் பாத்துக்கிட்டாங்களே.”
“அடுத்து நீ போவணுமில்ல?”
“நேத்துதான் கட்டுபிரிச்சிட்டு வந்தன். இனிமே செலவு ஒண்ணுமில்ல சார்.”
“ஆஸ்பத்திரி செலவ நாந்தான் பாக்கணும்.”
“பாத்தது போதும்.” ஒரு தினுசாகச் சிரித்தாள்.
“அடிபட்டதிலிருந்து நீ வேலக்கிப் போவல.”
“ஒடம்பு சரியில்லன்னு ஊட்டுல குந்தியிருந்தா அதுக்கும் நீங்க சம்பளம் தருவீங்களா?” கிண்டலாகச் சிரித்தாள்.
“தருவன்.”
“அது எனக்குத் தெரியும்.” லேசாகச் சிரித்தாள்.
“புடி.”
“வாணாம் சார். பையில வையிங்க. தெருவே போறவங்க யாராச்சும் பாத்தா தப்பா நெனப்பாங்க.”
“என்ன புரிஞ்சிக்க மாட்டியா?” என்று கெஞ்சுவது மாதிரி சொன்ன செல்வகுமார் சாந்தாவினுடைய கையைப் பிடித்துப் பணக்கட்டைத் திணித்தான்.
“நான் தனியாளு இல்ல சார்” என்று சொல்லும்போதே அவ ளுடைய கண்களிலிருந்து கண்ணீர் இறங்க ஆரம்பித்துவிட்டது. கண்ணீரைப் பார்த்ததும் அவளுடைய கையை விட்டுவிட்டான். பயந்துபோய் “என்னாச்சி?” என்று கேட்டான்.
“இந்தக் கூர ஊட்டுலதான் இருக்கம். சொத்துப் பத்து ஒண் ணும் இல்ல. நாலு பேருகூட படுத்து எழுந்திருக்க முடியாது. தலவலி, காய்ச்சன்னு படுத்தா மறுநாளு சோத்துக்கு இல்லதான். ஆனா இன்னமுட்டும் மனசுல அழுக்கு இல்லாம, பாரம் இல்லாம இருக்கன் சார்” அவள் சொல்லி முடிப்பதற்குள் கண்களிலிருந்து கண்ணீர் சரம்சரமாக இறங்கியது.
“நிசமாவே ஆஸ்பத்திரி செலவுக்குத்தான் கொடுத்தன்.”
அவன் சொன்னதைக் காதில் வாங்காத சாந்தா சொன்னாள் “சித்தாள் வேலக்கிப் போறவங்க ஒரே எடத்துக்கா சார் போவ முடியும்? தெனம் ஒரு எடத்துக்குத்தான போவ முடியும்? ஒரு சில எடத்திலதான் ஒரு வாரம் பத்து நாள்ன்னு வேல இருக்கும். வேல செய்யுற எடத்தில எல்லாம் என்னா நடக்கும்னு நெனைக்கிறீங்க? மேஸ்திரிங்க, கொத்தனாருங்க தொல்ல ஒரு பக்கம், வீட்டுக்காரங்க தொல்ல ஒரு பக்கம் இருக்கும். முறச்சிமுறச்சிப் பாப் பாங்க. இடிக்கிற மாரி கிட்டகிட்ட வருவாங்க. பின்னாலியே சுத்திசுத்தி வருவாங்க. தெரியுமா? பொம்பளைங்க தெருத்தெருவா அலஞ்சி திரிஞ்சி, கூவிக்கூவி மீனு விக்கிறாங்க. கீர, காயி விக்கு றாங்க. தள்ளு வண்டியில பழம் விக்கிறாங்க. ஊட்டு வேல செய் றாங்க. இன்னம் இப்பிடி என்னென்னமோ வேலயெல்லாம் செய் றாங்க, எதுக்காக?”
செல்வகுமாருக்கு ஆத்திரம் உண்டாயிற்று. “நான் கிளம்பறன்” என்று சொல்லிவிட்டு இரண்டு மூன்றடி தூரம் போனவனைக் கட்டாயப்படுத்தித் திரும்ப அழைத்துகொண்டு வந்து உட்கார வைத்தாள் சாந்தா. சிறிது நேரம் அவனும் பேசவில்லை. அவளும் பேசவில்லை.
“எம் மேல கோவமா சார்?”
செல்வகுமார் வாயைத் திறக்கவில்லை.
“ஒங்ககிட்ட தனியா பேசணுமின்னு ரொம்ப நாளா ஆச சார் எனக்கு.”
“அதான் பேசுறதெல்லாம் பேசிட்டியே அப்பறமென்ன?” கடு மையான குரலில் சொன்னான் செல்வகுமார்.
“நீங்க கஷ்டப்பட்டுப் பேசாதீங்க சார். நீங்க கஷ்டப்படுறத என்னால பாக்க முடியாது.” சாந்தா அழுதாள்.
“நீ எதுக்கு நெனச்சதுக்கெல்லாம் அழுதுஅழுது என்னெக் கஷ்
டப்படுத்துற?” செல்வகுமாருக்கு லேசாகக் கோபம் குறைந்திருந்தது.
“நான் ஒண்ணு ஒங்களக் கேக்கட்டா சார்?”
“என்னா?”
“பொட்டச்சி சோறு திங்கிறதுக்கு ஒலகத்தில இருக்கிற ஒரே வழி சீலய தூக்கிக் காட்டுறது மட்டும்தானா சார்?”
செல்வகுமாருக்கு முகத்தில் காறித் துப்பியது மாதிரி இருந்தது. பதில் சொல்ல முடியாமல் தவித்துப்போனான். ஏன் வந்தோம் என்று தன்னையே நொந்துகொண்டான். தெருவைப் பார்த்தான். கடுமையான வெயில் இருப்பது தெரிந்தது. உட்கார்ந்திருப்பதா, எழுந்து போவதா என்ற குழப்பத்தில் உட்கார்ந்திருந்தான். செல்வகுமாரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த சாந்தா சொன்னாள்.
“சம்பந்தம் இல்லாம எதுக்குப் பேசுற?” சாந்தாவை முறைப்பது மாதிரி கேட்டான்.
“நீங்க நல்ல ஆளு சார்.”
“கண்ணாடி மாரி ஒடஞ்சிப்போச்சி.”
“எது?”
“எம் மனசு.” செல்வகுமார் முகத்தைத் தாழ்த்திக்கொண்டான்.
சாந்தா அடுத்த வார்த்தை பேசவில்லை. செல்வகுமாரைப் பார்த்தாள். பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது. அவனுடைய மனதை மாற்றவும் கோபத்தைக் குறைக்கவும் நினைத்தாள்.
“எங்கூட வேலக்கி வருதில்ல மல்லிகா. அந்தப் புள்ளய வேணு மின்னா பாருங்க. அதுதான் அப்பிடி இப்பிடி இருக்கும். நான் ஒங் களப் பத்தி சொல்றன். நான் சொன்னா அந்தப் புள்ள கேக்கும்.” சாந்தா சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அடக்க முடியாத ஆத்திரத்துடன் செல்வகுமார் சொன்னான், “பெரிய புத்திசாலிதான்.”
“எங்கூட இருக்கறீங்கன்னு வெளிய சொன்னா ஒங்களுக்குத் தான் அசிங்கம். ஒங்களுக்கு என்னால ஒரு அசிங்கம் வரக் கூடா தின்னு சொல்றன்.” சாந்தா சொல்லி முடிப்பதற்குள்ளாகவே “நான் கிளம்பறன்” என்று சொல்லிவிட்டு எழுந்து நின்றான். அப்போது படலைத் தாண்டி உள்ளே வருவதற்கு முயன்ற பன்றி ஒன்றை “த்தூ. த்தூ” என்று கத்தி விரட்ட முயன்றாள். அது நகராததால் எழுந்து சென்று “சனியன, எங்க வர்ற?” என்று திட்டிப் பன்றியை ஓட்டிவிட்டு வந்தாள். வெளியே போவதற்குத் தயா ராக நின்றுகொண்டிருந்த செல்வகுமாரிடம் “ஒக்காருங்க சார், போவலாம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். செல்வ குமார் உட்காரவில்லை. “ஒக்காருங்க” என்று பல முறை சொல் லிக் கெஞ்சிய பிறகும் அவன் உட்காரவில்லை.
“வெயிலா இருக்கா சார்?” என்று சாந்தா கேட்டாள். செல்வகுமார் வாயைத் திறக்கவில்லை.
“மத்த கொத்தனாருக்கு இவன் எம்மானோ தேவலாம் சார். அதனாலதான் சிடுமூஞ்சா இருந்தாலும் அவன் கூப்புட்ட இடத்துக்குப் போறன். கொத்தனாரு பயலுவோ எம்மாம் மோசம்னு எனக்குத்தான் தெரியும்.”
“இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட சொல்ற?” முறைப்பது மாதிரி கேட்டான்.
“ஒங்ககிட்ட சொல்லாம ரோட்டுப் பொறுக்கிங்ககிட்ட சொல்லணுமா?”
“. . . . .”
“காலயில ஆறு மணிக்கு ஊட்ட வுட்டுப் போனா திரும்பி ஊட்டுக்கு வர ராத்திரி எட்டு, ஒம்போது மணி ஆயிடும். இதுவர, ஏன் லேட்டு, எங்க சுத்திட்டு வர்றன்னு அது கேட்டதில்ல சார்.”
“சரி. அதுக்கு நான் என்னா செய்யணும்?”
“அது என்ன நம்புது சார்.”
“நான் வந்தது தப்புத்தான்” செல்வகுமாரின் குரலில் வேகம் கூடி விட்டது.
“எட்டு மாசமா ஒங்களப் பாக்குறன். ஒங்க மனசு எனக்குத் தெரியாதா?”
“என்ன தெரியும் ஒனக்கு?”
“கடவுளு ஒங்க மனசக் கெடுத்துட்டான் சார். அதான் எங் கவல.” சொல்லும்போதே சாந்தாவினுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். மூக்கை உறிஞ்சினாள்.
“நான் கௌம்பறன். மனுசனப் புரிஞ்சிக்கத் தெரியல. இத வச்சிக்கிட்டா நான் நிம்மதியாப் போவன்” என்று சொல்லி பணக்கட்டை நீட்டினான். பணக்கட்டைப் பார்க்காமல் செல்வகுமாரின் வாடிப்போன முகத்தையே சாந்தா பார்த்தாள். சரி என்று பணக்கட்டை வாங்கினாள். கட்டிலிருந்து ஒரே ஒரு நோட்டை மட்டும் உருவி எடுத்துக்கொண்டு பணக்கட்டைத் திருப்பிக் கொடுத்தாள். பணக்கட்டை வாங்கி சேரில் வைத்துவிட்டு விர்ரென்று காரிடம் சென்ற செல்வகுமாரிடம் “ஒங்க வீட்டு வேல முடியுறவரைக்கும் அந்த எடத்துக்கு நான் வரணுமின்னு நெனச்சிங்கின்னா பணத்த எடுத்துக்கிட்டுப் போங்க. சோத்துக்கு இல்லாத நாயிதான இதுன்னு நெனச்சிங்கின்னா வச்சிட்டுப் போங்க” சாந்தா சொன் னதும் திகைத்துப்போய் நின்றுவிட்டான் செல்வகுமார்.
“எடுத்துக்கிட்டு வா.”
“நீங்களே வந்து எடுத்துக்கிட்டுப் போங்க.”
“பெரிய ராங்கிக்காரிதான்” என்று சொல்லிக்கொண்டே வந்து பணத்தை எடுத்துக்கொண்டு போய் காரில் ஏறிக்கொண்டான்.
கார் கிளம்பும்வரை சிரித்த மாதிரி நின்றுகொண்டிருந்த சாந்தா, கார் கண்ணை விட்டு மறைந்ததும் அழ ஆரம்பித்தாள்.
* * * * *
இமயம்