இமயம்
இலக்கியக் களஞ்சியம்

தேடல்எழுத்துலகைத் தேடுங்கள்.

நூல்கள் · சிறுகதைகள் · கட்டுரைகள் · நேர்காணல்கள்

கொலைச்சேவல்
இமயம் · சிறுகதைகள்

கொலைச்சேவல்

வாசிப்பு முறை
கதைக்குள் நுழைய
இமயம்

கொலைச்சேவல்

வாசிப்பு
19

“இன்னம் செத்த நேரம்தான். ஒன்னோட எல்லாக் குறையும் நீங்கிடும். பாதயப் பாத்து நடடி கோகிலா.”

“எதப் பாத்து என்னா ஆவப்போவுது அக்கா? அந்தப் பயதான் என் ஊட் டுல நெருப்ப வச்சிட்டுப் போயிட்டானே. செய்யுறத பெருசாச் செய்யச் சொல்லு பூசாரிகிட்ட. அவன் பட்டுனு சாவக் கூடாது. கைகாலு வௌங்கா மப் போவணும். பீ மூத்தரம் பேளக்கூட அவன் சூத்தாலதான் நவுந்து போவ ணும். அதெ என் கண்ணாலப் பாக்கணும். என் நெஞ்சில இருக்கிற நெருப்பு அவனச் சும்மா வுடுமா?” என்று கேட்ட கோகிலா கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டாள். சாந்தாவுக்குக் கேட்காதவாறு “நாந்தான் புத்தி கெட்டு அவங்கூடப் படுத்தன். நான் பெத்த நாயிவுளுமா அவங்கூடப் படுக்க ணும்?” என்று சொல்லி முனகினாள்.

“நீ எதுக்குடி மனம் பேதலிக்கிற? இப்ப நாம்ப போறமே, முத்தாண்டி குப்பத்துக் கருப்பையா கோவுலு, அங்க இருக்கிற சூலத்தில ஒரு சேவலக் குத்திவுட்டின்னா போதும், அவன் கத முடிஞ்சுடும். எதக் காட்டி அறியாப் புள்ளய இயித்துக்கிட்டுப் போனானோ அது மாங்கா பயம் அயிவுறாப்ல அயிவிப்போயிடும். நான் சொல்றது நடக்குதா இல்லியான்னு பாரு” என்று சாந்தா அடித்துச் சொன்னதும் கோகிலாவுக்கு லேசாக நம்பிக்கை உண்டா யிற்று.

“என்னடி கோகிலா அப்பிடிப் பாக்குற? நீ யாரு? மூணாவது ஊட்டுக் காரி. கூடப்பொறந்த பொறப்பு மாரி. ஒம் புள்ள ஓடிப்போனா ஒனக்கு மட்டும்தான் மனசு பதறுமா? எனக்குப் பதறாதா? நான் பாத்துப் பொறந்த புள்ள, நான் பாத்து வளந்த புள்ள இப்பிடி செஞ்சிப்புட்டுப் போயிட்டா ளேன்னு எனக்கு அங்கம் பதறாது? நீ வுட்டாலும் நான் அந்தப் பயலச் சும்மா வுட மாட்டன். வேடப்பர் கோவுல்ல பன ஓல எயிதிக் கட்ட வுடாம, நாண மேடு ஐயனாரு கோவுல்ல முட்டய ஓதிப் பொதைக்க வுடாம, ஆலிச்சிக்குடி கோனாருகிட்டப் போயி ஈடுமருந்து வைக்க வுடாம, ஆவட்டிக்கிப் போயி எலுமிச்சங்காய ஓதிப் போட வுடாம எதுக்கு இங்க இயித்துக்கிட்டு வரன்? மத்த எல்லாத்தவிட இது பவரு உள்ள சாமி. வேண்டுனது நடக்கும்.

கைகண்ட பலன் கெடைக்கும். நான் சொல்றது பொய்யா நெசமான்னு அங்க வந்திருக்கிற கூட்டத்தப் பாத்தாலே ஒனக்குத் தெரிஞ்சிடும். காருல எல்லாம் சனங்க வந்து குமியும் தெரியுமா?” என்று அடித்துச் சொன்னாள் சாந்தா.

அதற்குப் பட்டும்படாமலும் “நான் நெனக்கிறது நடந்தா சரிதான்” என் றாள் கோகிலா.

“நடக்காம எப்பிடிப் போயிடும்? பொறாமையிலியா செய்யுற? மனம் வெந்துதான செய்யுற? பூசாரி சொல்றபடி செய். ஒம் மேல ஆண, காரியம் நடந்திடும்” என்று சாந்தா உற்சாகமாகப் பேசினாள்.

சாந்தா எவ்வளவு உற்சாகமாகப் பேசினாலும், நம்பிக்கையாகப் பேசி னாலும் கோகிலாவின் மனம் மாறவில்லை. புலம்பிக்கொண்டே வந்தாள்.

“நகயா நட்டா, பணமா பண்டமா? போனா போவுதின்னு போற துக்கு? பத்தாவது படிக்கிற குட்டிதான, சொந்த அக்கா புருசங்கிட்டதான பேசுறான்னு இருந்திட்டன். அவ நெஞ்சு என்ன அம்மாங் கல்லா? எங் கண் ணப் புடுங்கிப்புட்டுப் போயிட்டாளே” என்று சொல்லும்போதே கோகிலா வுக்கு அழுகை வந்துவிட்டது.

“பேசாம வாடி. ஒன் மனக்கொறய கருப்பையாகிட்ட வந்து சொல்லு. அவன் கேப்பான் எல்லாத்தயும். இன்னியோட ஒனக்கு விடிவுகாலம்தான்.”

“என்னக்கா செய்யச் சொல்லுற? அந்தப் பயலுக்குப் பெரிய குட்டியக் கட்டிக்கொடுத்து ஒரு வருசம்தான் தாண்டியிருக்கும். அதுக்குள்ளார இந்தக் கூத்து. இப்ப நான் பெரிய குட்டிக்கி என்னா வயிபண்றது? ஒவ்வொருத்தியா மசக்கி இயித்துக்கிட்டுப் போறானே, அவன் எப்பிடிப்பட்ட கொலகாரனா இருப்பான்? ஒரு மாசமா கண்ண மூடுனா தூக்கமா வருது? சினிமாப் படம் ஓடுறாப்லதான் அவன் செஞ்சதெல்லாம் ஞாவகத்துக்கு வருது.”

“இப்படிப்பட்டவனெல்லாம் பெத்த தாயிகூடயும் படுப்பான், பெத்த புள்ளகூடயும் படுப்பான். இவனெல்லாம் பாடயில போவயில, இவனோட புள்ள பய மொறத்திலதான் போவும்.”

“அவந்தான் ஊர்காலிப் பய. அது தெரியாமத்தான் பெரியவ அவங் கிட்ட மாட்டுனா. அக்காக்காரிதான் வெறும் பயலோடப் போயிட்டா. நாம் பளாவது புத்தியா இருக்கணும்ன்னு நெனக்க வாணாம்? பாஞ்சி வயசுகூட முடியல. அதுக்குள்ளார அவளுக்குப் புருசன் கேட்டிருக்கு.”

“மொதல்ல அவளுக்குத்தான்டி கொலச்சேவ குத்தணும்” என்று கோப மாக சாந்தா சொன்னாள். அதற்கு அழுதுகொண்டே “செய்யலாம்தான். பெத்துத் தொலச்சிட்டனே. நாந்தான் சாவணும்” என்று சொன்னாள் கோகிலா.

“நீ எதுக்குடி சாவணும்?”

“பெத்துத் தொலச்ச பாவத்துக்குத்தான் மொதக் குட்டிய அந்த நாயிக் குக் கட்டிவச்சன். ரெண்டாவது குட்டியும் அவங்கூடவே ஓடுனா நான் சாவாம என்னா செய்ய முடியும்?” என்று கேட்ட கோகிலா சட்டென்று வேகம் வந்து “எஞ் சொத்தே அயிஞ்சாலும் பரவாயில்ல. அவன் கைகால மொடமாக்காம வுட மாட்டன்” என்று சொன்னாள்.

“வெளிய சொல்லாதடி. வாத்த காத்தாப் பறந்துபோயிடும். கோவுலு பக்கத்தில வந்துடுச்சி. பேசாம வா.”

“எப்பிடிப் பேசாம வரது? நாகத்தக் கொண்டாந்து நடு வூட்டுல வுட்டுட்டனே. எதிர் ஊட்டுல எரும மாடு மாரி ரெண்டு பயலுவோ இல்ல? வடக்கால ஊட்டுல காலேஜ் படிச்சிப்புட்டு சேகர் பய இல்லெ? தெருவுல எம்மாம் பயலுவோ இவுளுவுள சுத்திசுத்தி வந்தானுவ. அதுல ஒரு பயல இயித்துக்கிட்டு போயிருக்கக் கூடாது? அக்காளும் தங்கச்சியும் பீ தின்ன பயல யேவா புடிப்பாளுவோ?” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள் கோகிலா.

“ந்தா தெரியுது பாரு ஒரே மரமா. அதான் கோவுலு. அங்க போயி அயிவு. ஒன் கொறயக் கேப்பான் கருப்பையா” என்று சொன்ன சாந்தா கருப்பையா சாமியின் வீரதீரங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

கோகிலாவும் சாந்தாவும் கோவிலின் முன் வந்தபோது பூசாரி சிமெண்ட் டால் செய்யப்பட்ட ஒரு குதிரையின் முன் நின்றுகொண்டிருந்தான். பச்சை நிறச் சீலை கட்டியிருந்த ஒரு பெண்ணின் தலையில் ஒரு சேவலை நிற்க வைத்து “நில்லுடா கருப்பையா” என்று சொன்னான். சேவல் ஆடாமல் அசையாமல் மிரண்டு நின்றது. பெண்ணின் தலையில் சேவல் நிற்பதைப் பார்த்து கோகிலா அசந்துபோனாள். அவள் மட்டுமல்ல, அந்த இடத்தில் இருந்த நாற்பது ஐம்பது பேரும் வியந்துபோனார்கள்.

“அண்டம் கிடுகிடுங்க, ஆகாயம் தத்தளிக்க, ஏழுமலையை விட்டு நீ எறங்கி வர வேணும், ஏழ மக்களக் காக்க வேணும். நீ போதவெறியனாச்சே, பொல்லாத சூரனாச்சே, நல்லவங்களுக்கு நல்லது செய்ய வாடா கருப் பையா. வந்து அருளு கொடுடா” என்று கோழியைப் பார்த்துக் கத்தினான் பூசாரி. கோழியின் தலையில் தண்ணீரைத் தெளித்தான். மறு நொடியே பறக்க முயன்றது கோழி. இறக்கைகளை விரித்ததுமே காட்டுக்கத்தலாகக் கத்தி “ஆகா, கருப்பையா உத்தரவு கொடுத்திட்டான். படிப்பணத்தக் கட்டச் சொல்லிட் டான்” என்று சொன்ன பூசாரி, பெண்ணின் தலையிலிருந்து சேவலைப் பறந்துவிடாமல் சாதுரியமாகத் தூக்கிக்கொண்டான். பிறகு சேவலைப் பார்த்து “டே கருப்பையா, ஒன்னெ நம்பிப் படிப்பணத்தக் கட்டச் சொல் லப்போறன். அடுத்த எட்டாம் நாளுக்குள்ளார நீ காரியத்த முடிக்கணும். இல்லன்னா ஒனக்குப் பாலும் பழமும் தர மாட்டன். கறியும் கருவாடும் தர மாட்டன். பீடியும் சுருட்டும் தர மாட்டன். கள்ளும் சாராயமும் கொடுக்க மாட்டன். கொலப்பட்டினிப் போட்டுக் கொன்னுடுவன்” என்று சொன்ன தும் கோழி இறக்கைகளை விரித்தது. அதைப் பார்த்த மறு நொடியே “பாத் தில்ல. கருப்பையா உத்தரவு கொடுத்தத? போ. போயி படிப்பணத்தக் கட்டு” என்று பச்சை நிறச் சீலைக்காரியிடம் பூசாரி சொன்னான். அவள் பணத்தை எடுத்துக் கொடுத்ததும் கோபப்பட்டு “ச்சீசி. ச்சீசி. கருப்பையாவுக் குண்டான காசையோ, பொருளயோ நான் பீச்சகையாலயும் தொட மாட் டன். போ. போயி கருப்பையாவோட காலடியில வை” என்று சொன்னான். சேவல் தலையில் நின்றது, பூசாரி கத்தியது, கோபப்பட்டது என்று மிரண்டு போயிருந்த அந்தப் பெண் நடுங்கிக்கொண்டே போய் சாமிச் சிலையின் காலடியில் பணத்தை வைத்துவிட்டு வந்தாள்.

பூசாரியையும், பச்சை நிறச் சீலைக்காரியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த கோகிலா “என்னக்கா அதிசயமா இருக்கு? பூசாரி சொல்றபடியெல்லாம் கோயி கேக்குது” என்று கேட்டாள்.

“சாமியோட அருளு பெத்தவன் சொன்னா கோயி என்ன, குதிரயும் கேக்கும். சத்தம் போடாத. பாரு நடக்கிற அதிசயத்த” என்று சொன்னாள் சாந்தா. கோகிலா பூசாரியையே பார்த்தாள்.

பச்சை நிறச் சீலைக்காரியிடம் பூசாரி “செய்வினங்கிறது புடி இல்லாத கத்தி மாதிரி. படிப்பணம் மூணு வாட்டி கட்டணும். தவறிட்டா செய்வின செஞ்சவங்க பக்கமே திரும்பிடும். அப்பிடித் திருப்பிக்கிட்டா அப்பறம் என்னால ஒண்ணும் செய்ய முடியாது. நான் ஒத்துக்கிட்டாலும் கருப்பையா ஒத்துக்க மாட்டான். பேயிக்கிட்ட பாலு குடிச்சி வளந்தவன். அவனோட தலமயிரு ஒண்ண நூறு ஆளு சேந்து தூக்குனாலும் தூக்க முடியாது. கோவக் காரப் பய. மோடிவச்சான்னா அதெ எடுக்கிறது லேசுப்பட்ட காரியமில்லெ. காவுகொடுத்து, பீர், பிராந்தி பாட்டுலு வச்சிப் படயல் போட்டு, உதிரப் பலி தந்து, அவனத் திங்க வச்சித்தான் மனசக் குளிர வைக்க முடியும். என்னா பண்றது! கோவக்காரப் பயகிட்ட மாட்டிக்கிட்டனே. என்னோட மந்திரக் கட்டுல மூணே முக்கா நாழிதான் இருப்பான். அதுக்கு மேல அவனக் கட்டுப்படுத்த முடியாது. அப்பறம் கன்னிமார்களோட வௌயாடுறதுக்கு நந்தவனத்துக்குப் போயிடுவான். வௌயாடப் போயிட்டா அவனப் புடிக்கிறது லேசுப்பட்ட காரியமில்லெ. என்னோட புடியில இருக்கிற நேரத்திலதான் அவன ஆக்ரோசப்படுத்தி, ஒன் காரியத்த முடிக்க வைக்கணும். என்னா சொல்ற? மூணு வாட்டி படிப்பணம் கட்டுறியா?” என்று கேட்டான்.

“கட்டுறன் சாமி.”

“வாக்குத் தவறப்படாது. ஏன்னா இவன் முருகன், விநாயகரு, அம்மன் மாரி சாதுவான ஊட்டு சாமியில்ல. காட்டு சாமி. வனத்து சாமி. அதிலயும் இவன் முரடன். ஒரலு ஒலக்க சத்தம் இவனுக்கு ஆவாது. சேவலக் குத்திப் புடலாமா?”

“சரி சாமி.”

“சாமிப் பொருளெல்லாம் எங்க?” என்று பூசாரி கேட்டதும் ஒதுங்கி நின்றுகொண்டிருந்த-, பச்சை நிறச் சீலைக்காரியின் புருசன் ஓடிப்போய் ஒரு பையைப் பூசாரியின் கையாளிடம் கொடுத்தான். பையை வாங்கிக்கொண்ட கையாள் மூன்று வாழை இலைகளை விரித்துப்போட்டுப் பையிலிருந்த படை யல் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வைக்க ஆரம்பித்தான். பொருட் களைப் பார்த்ததும் “நெறயா செலவு புடிக்குமா அக்கா?” என்று கோகிலா கேட்டாள். “பேசாதே” என்று வாயில் விரலை வைத்துக் காட்டிவிட்டுப் பூசாரியைப் பார்க்க ஆரம்பித்தாள் சாந்தா.

“இந்தக் கோழி எப்பிடித் துடிதுடிச்சி சாவுதோ அதே மாதிரி ஒன்னோட எதிராளியும் சாவான்” என்று பச்சை நிறச் சீலைக்காரியிடம் சொன்ன பூசாரி சேவலைப் பார்த்து “டே கருப்பையா, ஒங் காலடியில தண்டனிட்டு நீதான் கதின்னு வந்து ஒனக்குப் படையல் போட்டு, படிப்பணம் கட்டிட்டு நிக்குற இந்தப் பொம்பளயோட மனசில இருக்கிற கோரிக்கய நீதான் நிறைவேத்தி வைக்கணும். இல்லன்னா ஒன்னெக் கொலப்பட்டினி போட்டுக் கொன்னுப் புடுவன்” என்று சொல்லிவிட்டுச் சேவலைக் கையாளிடம் கொடுத்துவிட்டுத் தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றிப் படையலுக்கும் கோழிக்கும் தீபா ராதனை காட்டினான். பிறகு சேவலை வாங்கிக்கொண்டு கோவிலைச் சுற்றி மூன்று முறையும், குதிரைகளையும் சூலங்களையும் சுற்றி மூன்று முறையும் ஓடி வந்த பூசாரி நிற்க முடியாமல் ஆடிகொண்டிருந்தான். ஆனாலும் சேவ லைக் கோயில் பக்கமும் குதிரையின் பக்கமும் தூக்கி வானத்துப் பக்கமும் காட்டிவிட்டு ஆட ஆரம்பித்தான். வேகமான ஆட்டத்தில் மிருகம் மாதிரி கத்திக்கொண்டே போய்ச் சேவலைக் கையாள் சந்தனம் குங்குமம் தடவி, மாலை போட்டு வைத்திருந்த சூலத்தில் குத்தினான். சிறிது நேரத்தில் பூசாரி பேய் பிடித்த மாதிரி ஆனான். கூட்டத்தைப் பார்த்து “டே, நான் கருப்பையா வந் திருக்கன். எனக்குப் படயல் போட்டு, காவுகொடுத்து, படிப்பணம் கட்டி அழச்சது யாருடா? வா, வந்து ஒன் வேதனயச் சொல்லு, ஒன் கோரிக்கயச் சொல்லு. ஒன் எதிராளி பேரச் சொல்லு. அவனோட ஊரச் சொல்லு. குலம், கோத்தரம், ஊட்டு அடயாளத்தச் சொல்லு. அவன் இனி ஒன்னோட எதிரி யில்ல. என்னோட எதிரி. சீக்கிரம் சொல்லு. நான் மலயேறணும். ஒன் சத்ரு வோட குலசாமிப் பேரச் சொல்லு. அதோட வாயக் கட்டுனாத்தான் மந்திரம் பலிக்கும். அது இருக்கும் தெசயச் சொல்லு. எல்லய வுட்டு வெளிய வரமா இருக்க தெசக்கட்டுக் கட்டணும்” என்று பூசாரி கத்தியதும், அவனுடைய கையாள் ஓடிவந்து, பச்சை நிறச் சீலைக்காரியிடம் “ஒன்னோட எதிரி பேர யும், என்னா செய்யணுங்கிறதயும் சாமியோட காதில சொல்லு” என்று சொல்லி விரட்டியதும், ஓடிப்போய்-, ஆடிக்கொண்டிருந்த பூசாரியின் காதில் அந்தப் பெண் ஏதோ சொன்னாள். மறு நிமிசம் பூசாரி முன்பைவிட ஆக் ரோஷமாக ஆட ஆரம்பித்தான்.

“போ. போ. என்னோட வழியில குறுக்க நிக்கக் கூடாது. ஒன்னோட கோரிக்க எட்டு நாளக்குள்ளார நிறவேறிடும்” என்று சொல்லிவிட்டுக் கோவி லைச் சுற்றி மூன்று சுற்றும், குதிரைகள், சூலங்களைச் சுற்றி மூன்று சுற்றும் ஓடி வந்து சேவலைக் குத்திய சூலத்திற்குப் பக்கத்தில் விழுந்து புரள ஆரம்பித்தான்.

“சாமி வந்திருக்கு. அதான் பூசாரியப் போட்டு முறுக்குது” என்று சொன்ன சாந்தா பூசாரியின் பக்கம் கையெடுத்துக் கும்பிட்டாள். அவளைப் பார்த்துக் கோகிலாவும் கும்பிட்டாள். கூட்டமும் கும்பிட்டது.

சேவலின் உயிர் அடங்கிய சிறிது நேரம் கழித்துதான் பூசாரி எழுந்தான். தூங்கிவிட்டு எழுந்த மாதிரி கூட்டத்தைப் பார்த்தான். பிறகு அவனுடைய கையாள் கொடுத்த திருநீறை வாங்கிப் பச்சை நிறச் சீலைக்காரிக்குச் சிறிது கொடுத்தான். “திரும்பிப் பாக்காம போ. கருப்பையா எல்லாத்தயும் பாத்துக் குவான். வர வெள்ளிக்கிழம பணத்தோட, சாமிப் பொருளோட வா” என்று சொல்லிவிட்டுக் கோவிலின் வாசல்படிக்கு முன் போய் உட்கார்ந்தான்.

“புதுக்குப்பம் பெரியசாமி வா” என்று பூசாரியின் கையாள் கூப்பிட் டான். ஒரு ஆள் ஓடிப்போய்ப் பூசாரியின் முன் உட்கார்ந்தான்.

“கொலச்சேவ குத்திப்புட்டன். என் பொருள எடுத்தவன் வர எட்டாம் நாளுக்குள்ளார கோயி செத்த மாதிரி செத்துடுவான்” என்று சொல்லிச் சிரித் துக்கொண்டே கோகிலாவைத் தாண்டிப் போனாள் பச்சை நிறச் சீலைக்காரி. அவளையே வெறிக்கப் பார்த்த கோகிலா “நம்பள எப்பக்கா கூப்புடுவாங்க?” என்று கேட்டாள்.

“சொல்லியிருக்கன். எப்ப கூப்பிடுவாங்கன்னு தெரியல” என்று சொன்ன சாந்தா, தரையில் உட்கார்ந்தாள். கோகிலாவும் உட்கார்ந்தாள். அப்போது எங்கிருந்தோ வந்து ஒரு பெண் சாந்தாவுக்குப் பக்கத்தில் உட் கார்ந்தாள். அவளிடம் யார், என்ன ஊர், வந்த விசயம் என்னவென்று கேட்க “எருமனூரா நீ? சொந்தப் புருசனுக்கா கொலச்சேவ குத்த வந்திருக்க?” என்று கேட்டாள் சாந்தா.

“புருசனாவது புள்ளயாவது? முதனையிலிருந்து வர சித்தாளு வேல செய்யுறவளப் புடிச்சிக்கிட்டு என்னெ ஏறெடுத்தும் பாக்க மாட்டங்கிறான். பெத்த புள்ளிவுளயும் என்னா ஏதுன்னு கேக்க மாட்டங்கிறான். கேட்டா அடி தான். ஒததான். குத்துதான். புதுப் பொண்ணு புது மாப்பிள்ளை மாரி ஜோடி போட்டுக்கிட்டு ரெண்டு பேரும் விருத்தாலம் டவுனுல சுத்துறாங்க. நான் வைக்காத பஞ்சாயத்தில்ல. வுடாத கண்ணீரு இல்லெ. அடி வாங்கி அடி வாங்கி என் ஒடம்புதான் புண்ணாப் போச்சி. எம்மாம்தான் அடி வாங்குறது? அடி வாங்குனாலும் அவன் திருந்துற வயியக் காணும். அவ இருக்கிற தெசய வுட்டு வேற தெச திரும்பிப் பாக்க மாட்டங்கிறான். கொத்தனாரு வேலக்கிப் போவ வாணாமின்னாலும் கேக்க மாட்டங்கிறான்.”

“எளம் பொண்ணா?” என்று சாந்தா கேட்டதுதான். அவளை அடிக்காத குறையாக முறைத்த எருமனூர்க்காரி முன்பைவிட ஆக்ரோஷத்துடன் சொன்னாள்.

“அட நீ ஒண்ணு. நாலு புள்ளயப் பிதுக்கித்தள்ளுனவதான். மூணு புள் ளயக் கலச்சவதான். அஞ்சாரு கை மாறுனவ. ஆளப் பாத்தா நெடுநெடுன்னு புளியா மரம் மாரி இருப்பா. பங்கரன்னா பங்கர அப்பிடியொரு பங்கர. நாட்டு வெல்ல மூட்ட மாரி அம்மாம் மொத்தம். தடிப்பு. கரிக்கொட்டயக் கரைச்சி ஊத்துனாப்ல அப்பிடியொரு நெறம். அப்பிடியாப்பட்ட உப்பு மூட்டயத்தான் தங்கமிங்குறான். பொன்னுங்கிறான்.”

“நீ அவகிட்ட பேசிப் பாத்தியா?”

“என்னாத்தம்மா பேசுறது? ரெண்டு வருசமா எங் கண்ணுல தண்ணீ வராத நேரமில்லெ. ஒதயும் அடியும் குத்தும் வாங்காத நாளில்ல. ஒண்ணுத் திலியும் அவன் திருந்தல. ஊட்டுப் பஞ்சாயத்து, ஊருப் பஞ்சாயத்து எல்லாம் வச்சிப்பாத்திட்டன். ஒண்ணுத்துக்கும் அவன் கட்டடயல. ‘என்னிஸ்டம்’ங் கிறான். மீறிக் கேட்டா ‘போடி ஒங்கப்பன் ஊட்டுக்கு’ங்கிறான். மூணு புள்ள பெத்த பின்னால அப்பன் ஊட்டுல போயி என்னம்மா செய்யுறது?” என்று சொன்ன எருமனூர்க்காரி கண்கலங்கினாள். அழுதுகொண்டே “ஊருல நாட்டுல எம்மாம் பயளுவோ இருக்கானுவ? அதுல ஒருத்தனப் புடிக்கக் கூடாது? மூணு புள்ள பெத்த கெயவனப் புடிச்சியிருக்கா பாரு, நாதேறி முண்ட. ராத் தூக்கம் இல்லாம, பகல் தூக்கம் இல்லாம எப்படி நான் அலயு றனோ அதே மாரி அவளும் அலயணும். என்னோட வதயும், எம் புள்ளிவு ளோட வதயும் அவளக் கேக்கணும்” என்று சொன்னாள் எருமனூர்க்காரி.

“அவளுக்குப் புருசன் இல்லியா?” என்று சாந்தா கேட்டாள். வாயைக் கொடுக்காதே என்று கோகிலா சாந்தாவை இடித்தாள்.

“இருக்கான் இருக்கான், மன்னாரு சாமி. அவனுக்கென்ன மூணு வேல யும் குண்டான் நெறய சோறு வந்தா சரி. அவ சம்பாரிக்கிற காசிலதான் பீர், பிராந்தி குடிக்கிறான். பீடி, சிகரட் குடிக்கிறான். அப்பறம் எப்படிக் கோபப் படுவான், வேகப்படுவான்? அவ எங்க போனா என்ன, எங்க வந்தா என்ன? அவனுக்குப் பொயிதானா குடிக்கிறதுக்குக் காசி வந்தா சரிதான்” என்று சொல்லிவிட்டுப் பூசாரிப் பக்கம் பார்த்தாள். பிறகு சாந்தாவைப் பார்த்து அலுப்பும் சலிப்புமாக “அவளுக்கோ அவ புள்ளிவுளுக்கோ நோவு, நொடின்னு ஒண்ணும் வர மாட்டங்குது. காய்ச்ச, தலவலின்னு ஒண்ணும் தரயில தலய சாய்க்க மாட்டங்குது. எனக்குத்தான் பச்சத்தண்ணியக் குடிச் சாலே பூச்சிமருந்தக் குடிச்ச மாரி ஒத்துக்க மாட்டங்குது” என்று சொன்ன எருமனூர்க்காரி லேசாகச் சிரித்துவிட்டு “ஆளப் பாத்தா சின்னக் குதிருமாரி தான் இருப்பா” என்று சொன்னாள்.

“ஒம் பிரிசன் சரியில்லாததுக்கு ஊருல இருக்கிறவள எதுக்குத் திட்டுற?”

“அவ சீலயத் தூக்கிக் காட்டுறதாலதான இவன் போறான்?” என்று கோபத்துடன் கேட்ட எருமனூர்க்காரி, “குண்டான் குண்டானாத் தின்னு ஒடம்ப வளத்து ஊரானுக்குப் படயல் போட்டுக்கிட்டிருக்கா முண்ட. எனக் குத் தீம்பு நெனக்கிறாளே. ஊருல நாட்டுல எம்மாம் பாம்பு பல்லி இருக்கு ஒண்ணுகூட அவளக் கடிக்க மாட்டங்குது. வெறிநாய் அவளப் புடுங்கக் கூடாது? ஒரு எறும்புகூட அவளத் தீண்ட மாட்டங்குது. இத்தினி வயசில பவுடர் போட்டுக்கிட்டு வயசுக் குட்டியாட்டம் திரியுறாம்மா” என்று சொல்லித் திட்டிவிட்டுக் காறித் துப்பினாள். பிறகு “எந்தக் கோவுல்ல மருந்து வச்சான்னு தெரியல. ஆனா அவ மருந்த எடுக்காம, எதிரு மருந்து வைக்காம வுட மாட்டன்” என்று ஆத்திரத்துடன் சொன்னாள்.

“கொலச்சேவ குத்த வந்திருக்கியே. நாளக்கி ஒம் புருசனுக்கு ஒண்ணு ஆயிப்போச்சின்னா என்னா செய்வ?” என்று சாந்தா கேட்டதுதான், எங் கிருந்துதான் எருமனூர்க்காரிக்கு அவ்வளவு கோபம் வந்ததோ. ஒரே வார்த் தையாக “செத்துப்போறான்” என்று சொன்னாள்.

“நம்ப கதயவிடப் பெரிய கதயா இருக்கே” என்று சொன்ன கோகிலா “நம்பள எப்பக்கா கூப்புடுவாங்க?” என்று கேட்டாள். “சொல்லிட்டு வந்தன். இரு, இன்னொரு வாட்டி சொல்லிட்டு வரன்” என்று சொல்லிவிட்டு எழுந்து கோவில் வாசல் முன் உட்கார்ந்து ஒரு ஆளிடம் பேசிக்கொண்டிருந்த பூசா ரியை நோக்கி நடந்தாள். பூசாரியின் கையாள் பாதியிலேயே வந்து அவளை மறித்து “என்ன?” என்று கேட்டான்.

“ரெண்டு பேரும் பொட்டச்சிவுளாத்தான் வந்திருக்கம். போவணும். நேரமாவுது” என்று சாந்தா சொன்னாள்.

“ஒங்க இஸ்டமா?” என்று கேட்டு முறைத்துவிட்டு “பேரு என்னா?” என்று கேட்டான்.

“கோகிலாதான் செய்வின செய்ய வந்திருக்கு. நான் கூட வந்த ஆளு.”

“கூப்புடுறன். போ. பூசாரி திட்டுவாரு. எட்டப் போ” என்று சொல்லி விட்டு வெடுக்கென்று போனான். கோகிலாவிடம் திரும்பி வந்தாள் சாந்தா.

“என்னாச்சி?” என்று கோகிலா கேட்டாள்.

“அடுத்தாளு நாம்பதானாம். கூப்புடுறன்னு சொல்லியிருக்கான்” என்று சாந்தா பட்டும்படாமலும் எருமனூர்க்காரி சொன்னாள்.

“ஒங்களுக்கென்னா?” என்று எருமனூர்க்காரி சாந்தாவிடம் கேட்டாள்.

“கிரக வாட்டம் சரியில்ல. அத என்னா ஏதுன்னு கேட்டுட்டுப் போவ லாமின்னு வந்தம்” என்று சொன்னாள்.

“நக கிக காணாமப் போவலியே?” என்று அக்கறையாகக் கேட்டாள் எருமனூர்க்காரி.

“அதெல்லாமில்லெ” என்று அவசரமாகச் சொன்னாள் சாந்தா.

“இந்தம்மா ஏன் புள்ளய சாவக்கொடுத்த மாரி குந்தியிருக்கு?” என்று கோகிலாவைக் காட்டிக் கேட்டாள்.

“ஒடம்பு சரியில்ல. அந்தப் பொண்ணுக்கு மொக வாட்டமே அப்பிடித் தான்” என்று சொன்ன சாந்தா, எருமனூர்க்காரியிடம் நெருங்கி உட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். முகம் தெரியாத ஆட்களோடு எப்படி சாந்தாவால் இவ் வளவு எளிதாகப் பேசவும் பழகவும் முடிகிறது என்று ஆச்சரியப்பட்டாள் கோகிலா.

சாந்தாவுக்குக் கோகிலாவைவிட நான்கு-, ஐந்து வயது கூடுதலாக இருக் கும். நான்குச் சக்கரத் தள்ளுவண்டியில் வாழைப்பழ வியாபாரம். காலை யில் எழுந்து போனால் இரவு படுக்கும்வரை பேருந்து நிலையத்திலேயேதான் நின்றுகொண்டிருப்பாள். மூன்று பெண். ஒரு ஆண் பிள்ளை. புருசன் இறந்து பத்துப் பதினைந்து வருசமிருக்கும். அவள்மீதோ அவளுடைய பிள்ளைகள் மீதோ தெருவிலும் சரி, பேருந்து நிலையத்திலும் சரி, எந்தக் குற்றமும் குறை யும் இல்லை. ஒரு நாளைக்கு ஆயிரம் ஆண்களைப் பார்க்கிறாள். சத்தமாகப் பேசுவாள், கத்திப் பேசுவாள் என்பது மட்டும்தான் அவள் மீதுள்ள ஒரே குறை. தனக்கும், தன்னுடைய மகள்களுக்கு மட்டும் விதி ஏன் இப்படி அமைந்துவிட்டது என்று நினைத்த கோகிலாவின் கண்கள் கலங்கின. “ஒரு ஆம்பள இல்லாததால எங்க வந்து குந்தியிருக்கன் பாரு? சோறு தின்னதக்கூட மறந்திட்டன் பாரு, பாவி” அழ ஆரம்பித்தாள் கோகிலா.

“கோகிலா யாரு? வா. சாமி கூப்புடுது” என்று பூசாரியின் கையாள் கூப் பிட்டதும் ஒரே நேரத்தில் கோகிலாவும் சாந்தாவும் எழுந்து பூசாரியிடம் சென்றனர்.

“விசாரிச்சிட்டுப் போவ வந்தீங்களா? செய்வின செய்ய வந்தீங்களா?”

“முடிஞ்சா இன்னிக்கே காரியத்த முடிச்சிடலாங்க” என்று சாந்தா சொன்னாள்.

“யாரு செய்யுறது?”

“இந்தப் பொண்ணுதான்.”

“அப்பிடின்னா நீ வேப்ப மர நெழல்ல குந்து. கருப்பையாகிட்ட எதி ராளியோட பேரச் சொல்லும்போது மத்தவங்க இருக்கக் கூடாது. இருந்தா காரியம் பலிக்காது” என்று பூசாரி சொன்னதும் முன்பு உட்கார்ந்திருந்த இடத்திற்கே சாந்தா திரும்பிச் சென்றாள். பூசாரியின் முன் கோகிலா உட்கார்ந்தாள்.

“சொல்லும்மா.”

பூசாரியின் குரல் பேயின் குரல் மாதிரி கேட்டது. எதைச் சொல்வது, எதைச் சொல்லாமல் மறைப்பது என்று கோகிலா குழம்பிப்போனாள். பூசாரி தானாக உண்மையைக் கண்டுபிடித்துவிட்டால் அசிங்கமாகிவிடுமே என்ற கவலை ஏற்பட்டது. வேப்பமரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தபோது இருந்த தைரியம், நம்பிக்கை, தெளிவு எதுவுமே இப்போது அவளிடத்தில் இல்லை. பயம் கூடியிருந்தது. பயத்தில் வியர்த்தது. அடுத்த வெள்ளிக்கிழமை வரு கிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விடலாமா என்றுகூட யோசித்தாள்.

பூசாரி மீண்டும் “சொல்லும்மா” என்று கேட்டான்.

கோகிலாவுக்கு வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை. ஆனால் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

கோகிலாவின் புருசன் மாது இறந்து நான்கு வருசமாகிறது. செல்வத் துடன் அவளுக்குப் பழக்கம் ஏற்பட்டு இரண்டு வருசம்தான் இருக்கும். மாது வைத்திருந்த விறகுக் கடையில் செல்வம் வேலைக்குச் சேர்ந்து பத்து பதி னைந்து வருசம் இருக்கும். அப்போது அவனுக்குப் பத்து பன்னிரெண்டு வயதுதான் இருக்கும். ஒவ்வொரு மரப்பட்டறையாகச் சென்று, கழித்துப் போட்ட மரத்துண்டுகளை மொத்தமாக வாங்கி வந்து கிலோ கணக்கில் டீக் கடை, இட்லிக் கடை, வீடுகள் என்று விற்பதுதான் மாதுவின் வேலை. அவனுக்கு ஒத்தாசையாக இருந்தான் செல்வம். வாசலை ஒட்டியே விறகுக் கடை இருந்தது. மாது இறப்பதற்கு இரண்டு வருசத்திற்கு முன்புதான் செல் வத்தின் அம்மா இறந்தாள். அதிலிருந்து கஸ்பாவிலிருக்கும் வீட்டுக்குப் போக வேண்டாம், கடையிலேயே படுத்துக்கொள் என்று மாது சொல்லிவிட்டான். மூன்று வேளையும் கோகிலாதான் சோறு போட்டாள். ‘தம்பி, தம்பி’ என்று கூப்பிடுவாள். மாது இறந்ததும் செல்வத்துடன் ஒவ்வொரு மரப்பட்டறைக் கும் கோகிலா போனாள். டீக்கடை, இட்லிக் கடைகளுக்கு மூன்று சக்கர ரிக்ஷாவில் விறகுகளை ஏற்றிக்கொண்டு செல்வம்தான் போவான். எங்கு போனாலும் எங்கு வந்தாலும் கோகிலாவுக்கு நிழல் மாதிரி இருந்தான். நூல்நூலாகச் செல்வம் கோத்தானா, கோகிலா கோத்தாளா தெரியவில்லை. இரண்டு பேருக்கும் உறவாகிவிட்டது. அதனால் வீட்டிற்குள் படுக்கச் சொன் னாள்.

“பொட்டச்சி எத்தன எடத்துக்குத் தனியாப் போய் வர முடியும்? குடும் பத்த யாரு பாக்குறது? ஊட்டுக்கு ஒரு ஆம்பளன்னு இருக்கணும்” என்று கோகிலா தன் மனதுக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டாள். செல்வம் வீட் டிற்குள் படுக்க ஆரம்பித்து ஒரு வருசம்கூட முடிந்திருக்காது. கோகிலாவின் பெரிய மகள் லதாவுக்கும் செல்வத்துக்கும் உறவாகிவிட்டது. லதா பன்னி ரெண்டாம் வகுப்பு பெயிலாகி வீட்டிலிருந்தாள். செல்வம் ஐந்தாவதுகூட முடிக்கவில்லை. விசயம் தெரிந்து கோகிலா நல்லவிதமாக எவ்வளவோ சொல் லிப்பார்த்தாள். திட்டி, அடித்து, உதைத்துப்பார்த்தாள். சோறு போடாமல், பேசாமல்கூட இருந்துபார்த்தாள். சொந்தக்காரர்களை வைத்து மிரட்டிப் பார்த்தாள். சாந்தாவை வைத்துப் பேசிப்பார்த்தாள், எதற்கும் லதா கட்டுப் படவில்லை. மருந்து குடித்துவிடுவேன், தூக்கில் தொங்கிவிடுவேன் என்று சொன்னதோடு மூன்று நாள், நான்கு நாள் என்று பட்டினி கிடக்கவும் ஆரம் பித்தாள். வேறு வழியின்றி செல்வத்தைக் கடைக்கோ வீட்டிற்கோ வரக் கூடாது என்று சொல்லிவிட்டு “எங்கூடயும் படுப்ப, எம் மவகூடயும் படுப் பியாடா கவுட்டுக்காரப் பயல?” என்று கேட்டு, திட்டி அனுப்பினாள். அன்று சாயங்காலம் லதா செல்வத்தின் வீட்டுக்குப் போய்விட்டாள். போய்க் கூப்பிட்டதற்கு வர மறுத்துவிட்டாள். புதுப்பேட்டை நாறியதோடு கஸ்பா விலும் லதா விசயம் நாறிவிட்டது. வேறு வழியின்றி ‘கண்ணாலம் கட்டிவைக் கிறன்’ என்று சொல்லி வீட்டுக்கு அழைத்துவந்து, மறுநாளே கொளஞ்சியப்பர் கோவிலில் கல்யாணத்தை முடித்துவைத்தாள். அதோடு செல்வத்திடம் பேசு வதையும் நிறுத்திக்கொண்டாள்.

விறகுக் கடையை லதாவும் செல்வமும்தான் பார்த்துக்கொண்டனர். ‘உருப்பட்டா சரிதான்’ என்று கோகிலா விட்டுவிட்டாள். எல்லாம் நல்ல முறையில் போவது மாதிரிதான் இருந்தது. திடீரென்று இருபது நாட்களுக்கு முன் பத்தாவது படித்துக்கொண்டிருந்த கௌரியை இழுத்துக்கொண்டு செல் வம் ஓடிவிட்டான். ஓடிப்போனவர்களைக் கண்டுபிடிக்கப் பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. திருப்பூரில் சாயப்பட்டறையில் வேலை செய்துகொண்டி ருந்தவனை அழைத்துவந்து “வுட்டுடு. நான் செஞ்ச தப்புக்கு எதுக்கு என் ரெண்டு புள்ளிவுளயும் வீணாக்குன? இந்த ஊட்டத் தவித்து, இந்தக் கடயத் தவுத்து எங்கிட்ட வேற என்னடா இருக்கு? சோறு தின்னத மறந்திட்டியே” என்று கேட்டு செல்வத்தைத் திட்டித் தீர்த்தாள். கன்னத்திலேயே அறைந்தாள். யார் யாரிடமோவெல்லாம் சொல்லிப் பஞ்சாயத்து வைத்தாள். எதற்கும் அவன் கட்டுப்படவில்லை. அவனைவிட கௌரிதான் பிடிவாதமாக இருந் தாள். ஒரு வாரமாக செல்வத்தையும், கௌரியையும் அடித்து, உதைத்து, கெஞ்சிப்பார்த்துவிட்டுக் கடைசியாக சாந்தா சொன்ன மாதிரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள்.

மகளிர் காவல் நிலையத்தில் கௌரிக்கு எவ்வளவோ புத்திமதி சொன் னார்கள். சொந்த அக்கா புருசன். கல்யாணமாகி ஒரு வருசம்தான் ஆகிறது என்று சொன்னதை கௌரி காதுகொடுத்துக் கேட்கவில்லை. எல்லாவற்றுக் கும் அவள் சொன்ன வார்த்தை “செத்துடுவன்” என்பதுதான்.

“நீ பத்தாவதுதான் படிக்கிற. வயசு பாஞ்சிதான் ஆவுது. நீ கட்டிக்கிட்ட கல்யாணம் செல்லாது. இன்னம் நாலு மாசம் போயி பத்தாவது முடிச்சின்னா ஒன் கல்யாணத்துக்கு அரசாங்கமே ஐம்பதாயிரம் தரும், தெரியுமா? அதப் பயன்படுத்திக்க” என்று ஆய்வாளர் சொன்னபோது “எனக்கு வயசு ஆனப் பறம் சட்டம் வந்து கல்யாணம் கட்டிவைக்குமா?” என்று கௌரி கேட்டது தான், ஆய்வாளர் அதிர்ந்துபோய் “இது எளசிலியே முத்துன கேசு. பித்தம் தெளிய கொஞ்ச நாள் ஆவும். எதிர்காலத்தில இவ ரோட்டுக் கிராக்கியாத் தான் போவா. அதுக்காகத்தான் இந்த நாயியும் இயித்துக்கிட்டுப் போயிருக் கான்” என்று சொன்ன ஆய்வாளர் “ஒரு வருசத்திலியே அக்காளயும் இயித் துக்கிட்டுப் போவ, தங்கச்சியயும் இயித்துக்கிட்டுப் போவியாடா, தேவிடியா மவன. ஒனக்கு சாமான் அம்மாம் பெருசாடா?” என்று கேட்டு செல்வத்தின் உயிர்நிலையிலேயே எட்டி உதைத்தார்.

“யே ஏட்டு. இவன உள்ளார ஒக்கார வையி. அப்பத்தான் புத்தி வரும்” என்று சொல்லிக் கத்தினார். மறு நொடியே கௌரியைக் கூப்பிட்டு “ஒனக்கு ஒயிங்காப் பாவாட கட்டத் தெரியுமா? அதுக்குள்ளார புருசன் கேக்குதா? ஒனக்குப் பாஞ்சி வயசு. அவனுக்கு முப்பது வயசு இருக்கும். புடிச்சவ எரும மாட்டத்தான் புடிப்பியா? ரெண்டு நாள் டயம் தரன். அதுக்குள்ளார அவன் கட்டுன தாலிய அவுத்துக் கெடாசு. இல்லன்னா அவனுக்குச் சாமானே இல்லா மப் பண்ணிப்புடுவன்” என்று சொல்லிக் கத்தினார் அந்தப் பெண் ஆய்வா ளர். அவர் பேசிய பேச்சைக் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை. அவ் வளவு பச்சைபச்சையாகப் பேசினார்.

“என்னாடி புள்ள பெத்திருக்க?” என்று கேட்டு கோகிலாவுக்கும் திட்டு கிடைத்தது. கடைசியில் “முதலமைச்சர் வராரு. நான் பந்தோபஸ்துக்குப் போறன். வர மூணு நாளு ஆவும். அதுவரைக்கும் இவுங்கள இங்க வச்சி யிருக்க முடியாது. ஸ்டேசனிலயும் யாரும் இருக்க மாட்டாங்க. அதனால நாலு நாளு கயிச்சி அயிச்சிகிட்டு வா. பிச்சி வுட்டுறன்” என்று சொல்லி நேற் றுக்கு முதல் சாயங்காலம் ஆய்வாளர் அனுப்பிவைத்தார். போலீசுக்கும் பயப் படவில்லை என்பதால் செல்வத்துக்குக் கொலைச்சேவல் குத்திவிடலாம் என்று சாந்தா சொன்னாள். காவல் நிலையத்திலிருந்து வந்ததிலிருந்து காலை யில் கோவிலுக்குக் கிளம்பும்வரைகூட கௌரியிடமும் செல்வத்திடமும் கெஞ்சிப்பார்த்தாள் கோகிலா. அவர்கள் எதற்கும் மசியாததால் கோபத்தில் வந்துவிட்டாள். லதாவை நினைத்துதான் அவளுக்குக் கவலை. கௌரி செல் வத்துடன் ஓடிப்போன இந்த இருபது நாட்களில் லதா எப்போது சாப்பிடு கிறாள், எப்போது தூங்குகிறாள் என்பது யாருக்கும் தெரியாது. செல்வத்தை யும் கௌரியையும் பார்க்க மறுத்துவிட்டாள். இருவரிடமும் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று ஒரு வார்த்தை பேசவில்லை. காவல் நிலையத்துக்குக்கூட வர மறுத்துவிட்டாள். இதே நிலையில் அவள் இருந்தால் ஒரு மாதத்திற்குள் செத்துவிடுவாள், இல்லையென்றால் பைத்தியமாகிவிடுவாள் என்ற எண்ணம் தான் கோகிலாவுக்கு உண்டாயிற்று.

கோகிலா எதுவும் பேசாமல் அழுதுகொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த பூசாரி “ஒனக்குச் சொல்றதுக்குக் கஷ்டமா, வெக்கமா இருந்தா வுட்டுடு. ஒண்ணும் சொல்ல வாணாம். கருப்பையா எல்லாத்தயும் எங்கிட்ட சொல்லிட்டான். பொண்ணு ஒண்ணு ஊட்ட வுட்டு ஓடிப்போயிடிச்சி. நீ சோறு போட்டு வளத்த பயலே கொண்டுகிட்டு போயிட்டான். ஒம் புள்ள ஒம் பேச்சக் கேக்க மாட்டங்குது. ஒஞ் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நிக்க மாட்டங்குது. அதனால வுட்ட கண்ணீருக்குக் கூலி கேக்க வந்திருக்கிற. உன் ஊட்டுல நாசக் காரியம் செஞ்சவனுக்குக் கூலி கொடுக்கச் சொல்லி வந்திருக் கிற. வந்த காரியம் பலிக்குமா பலிக்காதான்னு ஒம் மனசு குளத்தில கெடக்கிற மீனு மாரி துடிச்சிக்கிட்டிருக்கு. கெட்டவங்களுக்குக் கெட்டது செய்யவும் நல்லவங்களுக்கு நல்லது செய்யவும்தான் கருப்பையா என்னெ இந்த வன்னி மரத்துக்குக் கீழ குந்த வச்சிருக்கான். வன்னி மரம் ஈஸ்வரனுக்கு ஒகந்தது. ஈஸ் வரன் யாரு? வரம் கொடுக்கிறவன். அவன் நெழல்ல குந்திக்கிட்டு என் வாயிலிருந்து பொய் வராது. சத்தியம்தான். சத்தியவாக்குதான் வரும். பொய் வந்தா இம்மாம் சனங்க என்னெத் தேடிக்கிட்டு வருமா?” என்று கேட்ட பூசாரி தூரத்தில் உட்கார்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு நிதான மாகச் சொன்னார். “நான் சொன்னதும் ஒம் மனசுல கலக்கத்த உண்டாக்கிக் கிட்டு இருக்கிற காரியமும் ஒண்ணா இல்லியா? மாறியிருந்தா சொல்லு” என்று அதிகாரத்தோடு கேட்டார்.

“ஆமாம்” என்பதுபோல் கோகிலா தலையை மட்டும் ஆட்டினாள்.

“என்னா செய்யணும் சொல்லு. கைகால மொடக்கணுமா? கண்பார் வயக் கொறக்கணுமா? விஷ ஜந்துகள ஏவி வுட்டுப் போற வர எடத்தில கடிக்க வைக்கணுமா? செய்யுற தொழில விருத்திக்கி வராம செய்யணுமா? இல் லெக் கன்னிக்கழியாத புள்ளயோட தீட்டுத் துணிய எடுத்தாந்து எரிச்சி சாம்பலாக்கி, அதோட சேத்து எதுக்கும் ஒதவாத, ஆசாரி பீச்ச கையாலயும் தொடாத சுடுகாட்டுல இருக்கிற எட்டி மரத்தோட வேர வெட்டியாந்து எரிச்சி சாம்பலாக்கித் தலச்சன் புள்ளயோட தல ஓட்டுல வச்சிக் குழைச்சி மையாக்கி அம்மாவாச அன்னிக்கி நடுராத்தியில பாடம் போட்டு, மந்திரிச்சி எடுத்த மைய எடுத்து எதிரியோட உச்சந்தலயிலயும் உச்சங்காலுலயும் தடவிவுட்டா போதும். நீ நெனச்ச காரியம் நடக்கும். அதுவும் வாணா மின்னா துஷ்டதேவாதிகளத் தூண்டி ஏவி வுட்டுப் பட, அரிப்பு, சொறி, செறங்கு, குட்டநோவ உண்டாக்கி ஊரு ஒலகமே பாத்துச் சிரிக்கும்படியா செய்யணுமா? இல்லெ, கொலச்சேவ குத்தி, ஆள உரு இல்லாமப் பண்ண ணுமா? எல்லாத்துக்கும் மருந்து இருக்கு, மந்தரம் இருக்கு. எதச் செய்யணும் சொல்லு.”

“ஊட்டுல வேல செஞ்சிகிட்டிருந்த பய ஒருத்தன் போன வருசம் எம் பெரிய மவள இயித்துக்கிட்டு போயிட்டான் சாமி. இந்த வருசம் எஞ் சின்ன மவள நவுட்டிக்கிட்டு போயிட்டான்” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித் தாள் கோகிலா.

“கருப்பையா இருக்கும்போது எதுக்கும் நீ அஞ்சாதே. கலங்காத. சாமிய அழச்சிரலாம். கருப்பையாவெ ஏவி வுட்டுக் காரியத்த முடிச்சிடலாம்.”

“பத்துப் பாஞ்சி வருசம் பெத்த புள்ளக்கிப் போடுற மாரி சோறு போட்டு வளத்தன். தாயி மவ எல்லாத்தயும் காவுவாங்கிப்புட்டான் சாமி. மூணு பொட்டச்சிவுளும் ஒரே பிய்யத் தின்னுப்புட்டம். பேயக் கட்டிப்போட் டாலும் போடலாம். பொட்டச்சியோட மனசக் கட்டிப்போட முடியாது போலிருக்கே.”

“ஒங் கொறய கருப்பையாகிட்ட சொல்லிட்டல்ல? இனி அவன் பாத் துக்குவான். யாருக்கு என்னா செய்யுணுங்கிறத மட்டும் சொல்லு” என்று சொன்ன பூசாரி அலுப்பாக “நான் மத்தவங்களயும் பாக்கணுமில்லெ. பன ஓல எழுதணுமா, ஈடுமருந்து வைக்கணுமா, எலுமிச்சங்காய, பரங்கிக்காய மந்திரிச்சி சூலத்தில குத்தணுமாங்கிறத நீதான் சொல்லணும். வெட்டநோவு, லிங்கப் புத்து, குடல்வாதம், கண்டமாலன்னு செஞ்சிடலாம். அததுக்குத் தனித்தனிக் கணக்கு இருக்கு. கொலச்சேவ குத்தறதுக்கு மட்டும் கனமா செலவு புடிக்கும்” என்று பூசாரி சொன்னார்.

“எம்மாம் ஆவும் சாமி.”

“படிப்பணம் ஆயிரம். சாமிப் பொருளு முந்நூறு நானூறு புடிக்கும். அதோட முத்துன நாட்டுக்கோழி ஒண்ணு.”

“சாமிப் பொருளுங்கிறது என்னா சாமி?”

“பூ, பழம், பொரிகடல, மஞ்ச, குங்குமம், கட்டிக் கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணி, கல்கண்டு, சந்தனம், நூல்கண்டு, அவுலு, வெத்தலபாக்கு, பீடி, சுருட்டு, முறுக்கு, கருவாடு, கனிவர்க்கம், பிராந்தி பாட்டுலு ரெண்டு.” கோகிலா எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.

“என்னா செய்யணும் சொல்லு. நீ சொல்றது கருப்பையாகிட்ட. இங்க உள்ளத மட்டும்தான் சொல்லணும். இது சாமி குடிகொண்டிருக்கிற எடம். இந்தப் பய கோவக்காரன். துஷ்டன். ஆனா நல்லவங்களுக்கு மட்டும்தான் உவகாரம் செய்வான். கருப்பையாகிட்ட வேண்டுனது பலிக்கும். வசிய மை வச்சியிருந்தாலும், ஈடுமருந்து வச்சியிருந்தாலும், எல்லாத்தயும் சாம்பலாக் கிப்புடுவான். ஏவல், பில்லி, சூனியம், வைப்பு எடுக்கிறதிலியும் வைக்கிறதிலி யும் பெரிய சூரன் இந்தப் பய. மத்த சாமி மாரி இல்லெ இவன். மாயஜாலக் காரன். நான் நில்லுன்னா நிப்பான். போன்னா போவான். எஞ் சொல்லுக்கு மட்டும்தான் கட்டுப்பட்டு நிப்பான். ஏன்னா, இது என்னோட எல்லெ. என் னோட உத்தரவு இல்லாம அவன் இந்த எல்லயத் தாண்ட முடியாது. எங்க முப்பாட்டன் குமாரயிலிருந்து இந்த ஊருக்கு வரும்போது குலசாமின்னு கருப்பையாவயும் கொண்டாந்து குடிவச்சாரு. அதனால என்னோட ஏவல்ல அவன் நின்னாவணும். என்னா ஒண்ணு, ரத்தவெறி புடிச்ச பய. பலி கேப் பான். காவுகொடுக்கணும். குடிகாரப் பய. கள்ளு, சாராயம், பீர், பிராந் தின்னு கேட்பான். அவ்வளவுதான். அவனுக்கு வேண்டியதக் கொடுத்திட்டா நாம்ப சொல்றத மீற மாட்டான். என்னா செய்யணுமின்னு நீ சொல்லு. மலயாள மாந்திரீகம் செய்யுறதின்னாலும் செஞ்சிடலாம்.”

“கொலச்சேவ குத்திடுங்க.”

“ஒம் மவ கதி?”

“பெத்த தாயா அவளுக்கு இதத்தான் நான் செய்யணும் சாமி.”

“ரெண்டு பேருக்குமா?”

“ஆமாம்.”

“சரி. குத்திடலாம்.”

“என்னிக்கி வரணும் சாமி?”

“நல்ல காரியமா வந்திருக்கிற. அதத் தள்ளிப்போடக் கூடாது. அதுவும் இன்னிக்கி நெறஞ்ச வெள்ளிக்கிழம. இனிமே நீ ஊருக்குப் போயிட்டு வர முடியாது. அதனால கோவுலுக்குப் பின்னால போ. ஒரு பய கட போட்டி ருப்பான். சாமிப் பொருளு அவங்கிட்ட வாங்கிக்க. நாட்டுக்கோழியும் அவங்கிட்டயே கேட்டுப்பாரு, கொடுப்பான். என் மவன்தான் அவன்.”

“சரி சாமி” என்று சொன்ன கோகிலா எழுந்து சாந்தாவிடம் வந்தாள். நடந்ததைச் சொன்னாள். “அடுத்த வெள்ளிக்கிழம பாத்துக்கிட்டா என்னா?” என்று கேட்டாள் சாந்தா.

“வந்திட்டம். காரியத்த முடிச்சிடலாம். யோசிக்கிறதுக்கு ஒண்ணு மில்லெ” என்று சொன்ன கோகிலா விடுவிடுவென்று கோவிலின் பின்பக்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

இமயம்