
உயிர்நாடி
‘நான் செத்தப்பறம் வித்துட்டுப் போ.’
‘நீ சாவுறமுட்டும் கம்பனிக்காரன் காவ காத்துக்கிட்டு ஒக்காந்திருப்பானா?’
‘போனாப் போறான் போ.’
‘சொல்றதப் புரிஞ்சிக்க மாட்டியா?’
‘எல்லாம் எனக்குப் புரியுது. என்னெக் குயிலெத் தள்ளி மூடிட்டுப் போயி கையெயித்தெப் போடு.’
‘சீ, என்னா மனுசன்?’ என்று சொன்ன ராமசாமி கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான். எரித்துவிடுவது மாதிரி கிழவரைப் பார்த்தான். அவர் முன்பு போலவே நெல் தாள் கட்டும் வைக்கோல் பிரியைக்கொண்டு பழுதைக் கயிறு திரித்துக்கொண்டிருந்தார். அதைப் பார்க்கப்பார்க்க அவனுக்கு எரிச்சல் அதிகரித்தது. எரிச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தலை யில் அடித்துக்கொண்டான். விருட்டென்று வீட்டுக்குப் பின்புறமாகச் சென்றான். சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தவன், கிழவரை எப்படிச் சம்மதிக்கவைப்பது என்று யோசித்தான்.
கிழவர் வீட்டுக்குப் பின்புறம் பார்த்தார். ராமசாமி கண்ணில் படவில்லை. சிகரெட் புகை மட்டும் தெரிந்தது. ‘இந்தப் பய எதுக்கு நெலக்குத்தா நிக்குறான்?’ என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, எது நடந்தாலும் நிலத்தை மட்டும் விற்கக் கூடாது என்று நினைத்தார். அதே நேரத்தில் ராமசாமியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்றும் யோசித்தார். ஊர்ச்சனங்களால் அவன் கெட்டுவிட்டதாக நினைத்தார். ஊர் போகிற போக்கில் அவனையும் குறைசொல்ல முடியாது. தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிலம் வைத்திருந்தவர்கள் எல்லோரும் ஒரே மாதத்தில் பணக்காரர்களாகி விட்டார்கள். கம்பனி கட்டப்போவதாகச் சொல்லி, சாலை ஓரமாக இருந்த எல்லா நிலத்தையும் ஒரே மாதத்தில் வடநாட்டுக்காரன் ஒருவன் வாங்கி விட்டான். இருபதாயிரம், முப்பதாயிரம் போகக் கூடிய நிலத்தையெல்லாம் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று கொடுத்து வாங்குகிறான். ஒரு ஆளிடம் இவ்வளவு பணம் இருக்க முடியுமா? எங்கிருந்து இவ்வளவு பணமும் வந்திருக்கும் என்று நினைத்தார் கிழவர். ‘அவன் கோடிகோடியா கொடுத்தாலும் சரி, உசுரக் கொடுத்தாலும் கொடுக்கலாம், நெலத்தக் கொடுக்க முடியாது. சோறு போடுற பூமாதேவியாச்சே’ என்று முணு முணுத்தார்.
வீட்டுக்குப் பின்புறமிருந்து வந்த ராமசாமி முன்பு போலவே கிழவர் முன் வந்து நின்றுகொண்டு, கிழவர் வாயைத் திறக்கிறாரா என்று பார்த்தான். அவன் அங்கு நிற்பதையே பார்க்காதவர் மாதிரி கிழவர் கைக்காரியத் தில் கவனமாக இருப்பது அவனுக்குக் கோபத்தை உண்டாக்கிற்று. ஆனா லும், கோபத்தை வெளியே காட்டாமல் கிழவரிடம் நிதானமாகப் பேச முயன்றான். நிலத்தை விற்காவிட்டால் வரக் கூடிய நஷ்டத்தைப் பற்றியும், எல்லோரும் நிலத்தை விற்றுவிட்ட பிறகு நம்முடைய நிலத்திற்குப் போவதற்கு வழி இருக்காது, அதனால், நிலத்தைக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சொன்னான். எதற்கும் கிழவர் வாயைத் திறக் காததால் ‘நான் சொல்லுறது புரியுதா?’ என்று சற்றுக் கடுப்புடனே கேட்டான். அதற்குச் சிறிது நேரம் கழித்து ‘எனக்குக் காது கேக்குது’ என்று மட்டும் சொன்னார் கிழவர். கோபத்தில் ராமசாமிக்குத் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. கிழவருக்கு எப்படிப் புரியவைப்பது என்பது அவ னுக்குத் தெரியவில்லை. யார் சொன்னால் கேட்பார் என்று யோசித்தான். மறுநொடியே சலிப்புடன் சூள்கொட்டினான்.
ஒரு வாரமாக ஊரிலிருந்து அழைத்து வந்து பேச வைக்காத ஆளில்லை. ஒரு மணி நேரம் பேசினாலும், ஒரு நாள் முழுவதும் பேசினாலும், மறு வார்த்தை பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுக் கடைசியாக ‘என்னோட உசுரக் கேட்டா நான் என்னா சொல்ல முடியும்? நான் செத்தப்பறம் வித்துக்கச் சொல்லு’ என்று ஒரு வார்த்தையில் எதிராளி யைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார் என்பதால் கடைசி முயற்சியாக நேற்று சாயங்காலம் மெத்தை வீட்டு முத்தையாவை அழைத்துவந்தான். ஊரிலேயே பெரிய ஆள் அவர்தான். அவர் சொன்னால் ஊரே கட்டுப்படும். ராமசாமியைத் தட்ட முடியாமல் கிழவரிடம் வந்து இரண்டு மூன்று மணி நேரம் முத்தையா பேசினார். நிலத்தை விற்பதால் வரக் கூடிய நன் மைகளையும் நிலத்தை விற்காவிட்டால் வரக் கூடிய நஷ்டங்களையும் பற்றிச் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கிழவர் ‘எங் கண்ணப் புடுங்கிக்கிட்டு என்னெ நொள்ளையனாக்கப் பாக்குறீங்க’ என்று மட்டும்தான் சொன்னார். ‘அப்படி இல்லெ’ என்று என்னென்னவோ சொல்லிச் சமாதானப்படுத்த முயன்று, கடைசியில் தோற்றுப்போய் ‘காலத் துக்குத் தகுந்த மாரி போவாத ஆளுகிட்டெ என்னால பேச முடியாது’ என்று சொல்லிவிட்டுச் சலிப்புடனும் கோபத்துடனும் போய்விட்டார். முத்தையா கோபித்துக்கொண்டு போனதற்காக ராமசாமிதான் கவலைப் பட்டான். முத்தையா சொல்லியே கேட்காத கிழவர், ஊரில் வேறு யார் சொன்னாலும் கேட்க மாட்டார் என்பது நேற்றிரவே ராமசாமிக்குத் தெரிந்துவிட்டது. அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தான். ஊரில் எல்லோருக்கும் புரிகிற விசயம் கிழவருக்கு மட்டும் ஏன் புரிய மாட்டேன் என்கிறது என்பதுதான் அவனுடைய கவலையாக இருந்தது.
காட்டிலிருந்து வந்த ராணி தலையிலிருந்த விறகுக் கட்டைக் கிழவ ருக்குப் பக்கத்தில் நின்ற நிலையிலேயே ‘பொத்’தென்று போட்டாள். அந்த இடத்திலிருந்த ராமசாமியிடமோ கிழவரிடமோ ஒரு வார்த்தைகூடப் பேசாமல் விருட்டென்று வீட்டுக்குள் போனாள். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள் ‘மத்தியானம் சாப்புடலியா?’ என்று கேட்டாள். அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் ‘போடி அந்தாண்ட’ என்று சொல் லிக் கத்தினான் ராமசாமி. ‘எதுக்கு எம்மேல வியிந்து புடுங்கிற?’ என்று அலட்சியமாகக் கேட்டுவிட்டுக் கிழவருக்குப் பக்கத்தில் கிடந்த விறகுக் கட்டை அவிழ்த்துக் கொஞ்சம் குச்சிகளை அள்ளிக்கொண்டு வீட்டுக்குள் போனாள். அடுப்பைப் பற்றவைத்துவிட்டு வெளியே வந்து ‘எங்க புள்ளிவுள காணும்?’ என்று கேட்டாள்.
‘எங்க போயி தொலஞ்சதுகளோ சனியனுங்க. அப்பிடியே எங்கியாச்சும் போயி செத்துத் தொலயட்டும்.’
‘புள்ளிவுள எதுக்கு அப்பிடிச் சொல்ற?’
‘போடி உள்ளார. மனுசன் இருக்கிற நெலம தெரியாம.’
‘அப்பனுக்கும் மவனுக்கும் ஓரியாட்டமின்னா, அதுக்கு நானும், எம் புள்ளிவுளுமா காரணம்? அந்த ஒண்ணுமத்த ஔக் காட்டெ வச்சிக்கிட்டு அப்பனும் மவனும் அடிச்சிக்கிறதில்லாம எங்களயும் ஏன் போட்டுக் கொல்லுறீங்க?’ என்று சொல்லிவிட்டு ராணி வீட்டுக்குள் போனாள். அதுவரை குனிந்தே இருந்த கிழவர் வெடுக்கென்று தலையைத் தூக்கிப் பார்த்தார். ராணி வீட்டுக்குள் போய்விட்டது தெரிந்ததும் தெருப் பக்கம் பார்த்தார். பிறகு முன்புபோலப் பிரியைத் திரிக்க ஆரம்பித்தார்.
வீட்டுக்கும் வாசலுக்கும் ராமசாமி நடந்துகொண்டிருந்தான். அவனால் ஒரு நிலையில் மட்டுமல்ல, ஒரு இடத்தில்கூட இருக்க முடியவில்லை. ‘நாளயோட கடசி. அப்பறம் கம்பி வேலி போட்டுடுவம். பின்னால கொடுத்தா கம்பி வேலி போட்ட செலவு ஒங்களதுதான்’ என்று கம்பனிக்காரன் சொன்னது மட்டும்தான் அவனுக்கு நினைவில் இருந்தது. அதனால், அடிக்கடி பெரு மூச்சு விட்டான். ஓயாமல் கைகளைப் பிசைந்துகொண்டான். அப்போது தெருவில் விளையாடிவிட்டு வந்த கமலா ‘அம்மா வந்துடுச்சாப்பா?’ என்று கேட்டாள். அவளை ஏறஇறங்கப் பார்த்த ராமசாமி ‘இன்னமுட்டும் எங்க போயி சுத்திப்புட்டு வர்ற?’ என்று விரட்டுவது மாதிரி கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியாமல் கமலா விழித்தாள். ‘சாயங்காலமானா படிக் கணுமின்னு அறிவில்லே? பொட்டெக் குட்டி தெருக் காடு சுத்தலாமா? எங்கேருந்து கத்துக்கிட்டெ இந்தப் பயக்கத்தெ?’ என்று கேட்டான். கமலாவால் பேச முடியவில்லை. அழுகைதான் வந்தது. ‘இப்ப என்னா சொல்லிப்புட்டன்னு அயிவுற? வாயால கேக்குறதுக்கே அயிவுறியா?’ என்று கேட்டு ராமசாமி அவள் கன்னத்தில் அறைந்தான். கமலாவின் அழுகைச் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த ராணி ‘ஒனக்கென்ன பித்தா புடிச்சியிருக்கு? ஒங் கோவத்தக் கொண்டுபோயி ஒங்கப்பன்காரன்கிட்டெ காட்டு’ என்று சொல்லிக் கத்திவிட்டுக் கமலாவை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் போனாள். அப்போது வாசலுக்கு மேற்குப்புறமாகக் கட்டியிருந்த மாடு மூத்திரம் பெய்தது. அதில் சில துளிகள் தெறித்து வந்து ராமசாமியின் காலில் பட்டதுதான் தாமதம், அவன் கண்மண் தெரியாமல் மாடுகளை அடிக்க ஆரம்பித்தான். அவன் மாடுகளை அடிப்பதைப் பார்த்த கிழவர் மறிக்காமல் முன்பு போலவே பழுதைக் கயிறு திரிப்பதில் மும்முரமாக இருந்தார்.
கோவில் பக்கமிருந்து ஓடிவந்த செல்வராஜை ராமசாமி மறித்துவைத்துக்கொண்டு ‘இன்னமுட்டும் எங்கடா போயிருந்த? இந்த வயசிலியே ஊர்காலி மாடு மாரி சுத்த ஆரம்பிச்சிட்டியா? இனிமே என்னெக் கேக்காம வெளிய போவியா?’ என்று கேட்டு அடிக்க ஆரம்பித்தான். அழுகைச் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த ராணி படாத பாடு பட்டுத்தான் ராமசாமியின் பிடியிலிருந்து செல்வராஜைத் தன் பக்கம் இழுக்க முடிந்தது. அப்போது ராணியையும் இரண்டு அடி அடித்தான். அதோடு ‘புள்ளயாடி பெத்திருக்க? ஒன்னோட வளப்பம் மாரிதான நீ பெத்த புள்ளயோட வளப்பமும் இருக்கும்’ என்று சொல்லி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச ஆரம்பித்தான். அவன் திட்டுவதைக் காதில் வாங்காமல் ராணி, செல்வராஜின் கன்னத்தில், முதுகில் வீங்கியிருந்த இடங்களைத் தேய்த்துவிட்டாள். ‘அந்தாளு பண்ற கங்காட்சியெல்லாம் கண்ணால பாக்கலியா? தெனம்தெனம் புள்ளிவுளப் போட்டு அடிக்கிறது தெரியல? ஒரு வாரம் பத்து நாளா தொசம்கட்டிக்கிட்டு ஊட்டுல நேரத்துக்குச் சோறு திங்காம ஊட்ட ரெண்டு பண்றது கண்ணுக்குத் தெரியல? அந்தக் காட்டெ வித்துத் தொலச்சாத்தான் என்ன?’ என்று சத்தமாகக் கிழவரிடம் கேட்டாள். கிழவர் அவளை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. அதனால், ஆத்திரமடைந்து ‘வாயத் தொறக்காம நீ கோட்டானாட்டம் குந்தியிரு. அந்தாளு என்னையும் எம் புள்ளிவுளயும் அடிச்சியே கொல்லட்டும்’ என்று சொன்னாள். அப்போது ‘பேசாம போடி’ என்று ராமசாமி சொன்னான். அவன் சொன்னதைக் காதில் வாங்காமல் ‘உண்டு இல்லன்னு சொல்லிட்டுப் போவ வேண்டியதுதான, அந்த ஐநூறு ஆயிரங் காணியிலயும் பூமியிலயும் வௌஞ்சிதான் சோறு திங்கிறமா?’ என்று சொன்னதும், கிழவருக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ, வெடுக்கென்று தலையைத் தூக்கி ராணியைப் பார்த்தார். பிறகு கடுகடுப்புடன் சொன்னார்:
‘ஒங்கப்பன் ஒனக்கு எயிதிக் கொடுத்தானில்ல மஞ்சக்காணி, அதெ வேணுமின்னா ஒம் புருசன வித்துக்க சொல்லு.’
‘எங்கப்பன் எதுக்கு மஞ்சக்காணி எயிதித் தரணும்? நீயும் ஒம் புள்ளயும் வித்துத் திங்கவா?’
‘ஒங்கப்பன் ஊட்டுக் காணிய வித்துதான் நாங்க இங்க கறியும் சோறும் திங்குறம். பிஞ்ச மொறத்துக்கு ஐவேசி இல்லாதவன் மவங்கிறது மறந்தாப் பூடும்?’
‘பிஞ்ச மொறத்துக்கு ஐவேசி இல்லாதவன் மவள எதுக்கு ஏறி வீந்து வந்து கட்டுனீயாம்?’
‘வேறென்ன? புத்திகெட்டுப்போயிதான். நீ இந்த ஊட்டுல அடி வச்சதிலிருந்து எதுவும் தங்க மாட்டங்குது. நாசத்தத் தவுத்து வேற ஒண்ணும் நடக்கல. ஒன்னால இப்ப அவனும் நாதேறியாயிட்டான்.’
‘இந்த ஊட்டுல கெட்ட காரியமெல்லாம் என்னாலதான் நடக்குதா?
அப்பிடின்னா ராசியில்லாதவள இத்தினி வருசமா எதுக்கு வச்சியிருந்தியாம்? வந்த அன்னிக்கே திருப்பி அனுப்பிவுடுறதுதான?’
‘போடி ஊட்டுக்குள்ளார. எதுத்துஎதுத்துப் பேசிக்கிட்டு’ என்று ராமசாமி சொன்னதைக் காதில்வாங்காமல் ராணி ‘அங்க போயி என்னாத்தத் திம்பியாம்’ என்று கேட்ட கிழவரைத் திருப்பி அடிப்பது மாதிரி ‘இங்க என்னாத்தத் திங்குறனோ அதத்தான் அங்கேயும் திம்பன்’ என்று சொன் னாள்.
‘உப்புக்கும் மொளவாக்கும் அங்க கதம்பாடுறது தெரியாதாக்கும்’ என் றார் கிழவர்.
‘இங்க மட்டும் என்ன வாயிதாம்? எல்லாமிருக்கு பொட்டியில, கீரக் கடய மட்டும் சட்டியில்லயாம்.’
‘எதுத்துஎதுத்துப் பேசுறியா? நரிக்குறத்தி மாரி இருக்கிறவள இயித்து வச்சித் தாலி கட்டச் சொன்னது எந் தப்புதான்.’
‘ஊரு சுத்துற மாட்டுக்குக் கயித்த நீட்டுனது எந் தப்புதான்.’
‘ஊரு சுத்துற மாட்டுக்கூட எதுக்கு இருக்குற? போக வேண்டிய எடத்துக்குப் போய்ச் சேர வேண்டியதுதான?’
‘நான் கொண்டாந்ததக் கொடுத்திடு. இப்பியே நடயக் கட்டுறன்.’
‘என்னாத்தக் கொண்டாந்தியாம்? நூறு வண்டி, இருநூறு வண்டின்னு கொண்டாந்து இறக்குனியா? ஊடு கூட்டுற வௌக்கமாறுகூட இல்லாம வந்தது மறந்துபோயிடிச்சா?’
‘அப்பிடின்னா நான் கைய வீசிக்கிட்டா வந்தன்? நான் கொண்டாந்தத வச்சித்தான மூணு மவளுக்கும் கண்ணாலம் கட்டுன? நான் சொல்றது பொய்யின்னா அதெ வச்சி வாயிறவுளுவோ வாயாமப் போவட்டும்’ என்று ராணி சொன்னதுதான் தாமதம், ‘என்னடி சொன்ன? எந் தங்கச்சிவோ வாயாமப் போவணுமா?’ என்று கேட்ட ராமசாமி, ராணியைக் கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான். ஏதோ பேச வந்தவளைப் பேச விடாமல் வாயிலேயே அடித்தான். கமலாவும், செல்வராஜுவும் அலறிக்கொண்டு அழுவதைப் பார்த்துவிட்டுதான் அடிப்பதை நிறுத்தினான். கடைசியாக ‘போடி உள்ளார’ என்று சொல்லி எட்டி உதைத்தான். பிறகு அந்த வேகத்திலேயே கடைப் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.
அழுது புலம்பிய ராணி வாயிலிருந்து வழிந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டாள். கன்னத்தில், முதுகில் வீங்கியிருந்த இடங்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டாள். ராமசாமியையும் கிழவரையும் வாய்க்கு வந்தபடி யெல்லாம் பேசினாள். ‘பத்து ஜென்மத்துக்கு நாயா பொறந்தாலும்கூடப் பரவாயில்ல, பொண்ணா மட்டும் பொறக்கக் கூடாது. மீறிப் பொறந்தாலும் இந்த நாதேறி ஊட்டுல மட்டும் வாக்கப்படக் கூடாதுடா கடவுளே’ என்று புலம்பிக்கொண்டிருந்தபோது அடுப்பிலிருந்து தீய்ந்த வாடை வரு வது தெரிந்தது. ‘அய்யோ, போச்சே’ என்று அலறிக்கொண்டே வீட்டுக்குள் ஓடினாள்.
தெரு முனைக்குப் போன ராமசாமி போன வேகத்திலேயே திரும்பி வந்தான். கிழவருக்கு எதிரில் நின்றுகொண்டு கிழவரை எரித்துவிடுவது மாதிரி பார்த்தான். கோபத்தில் பல்லை நறநறவென்று கடித்தான். கிழவர் அவனை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. அதனால், சலித்துகொண்டே திண்ணையில் போய் உட்கார்ந்தான். ஒரு நொடிதான் அவனால் உட்கார்ந் திருக்க முடிந்தது. எழுந்து வீட்டுக்குள் போய்த் தானாகவே தண்ணீர் மொண்டு குடித்தான். பிறகு ‘யாண்டி ஒரே பொகயா இருக்கு?’ என்று கேட்டான். ராணி வாயைத் திறக்கவில்லை. அதற்குப் பதிலாக மொறத்தை எடுத்து எதிர்ப் பக்கமாக வேகமாக விட்டெறிந்தாள். புகையால் தொடர்ந்து இருமல் வரவே ராமசாமி வெளியே வந்தான். அவனை அடுத்து இருமிக்கொண்டே வெளியே வந்த செல்வராஜை அதட்டலாக ‘எங்கடா போற? போடா ஊட்டுக்குள்ளார’ என்று சொல்லி விரட்டினான். அவன் கண்களைக் கசக்கிக்கொண்டே வீட்டுக்குள் போனான்.
தெரு முனையில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து உள்ளூர் ஆட்கள் மூன்று, நான்கு பேரும் வெளியூர் ஆட்கள் இரண்டு பேரும் இறங்கியது தெரிந்தது. காரை நோக்கிப் பிள்ளைகள் ஓடுவதும், ஒன்றிரண்டு பெரி யவர்கள் போவதும் தெரிந்ததும் ராமசாமிக்குத் தலைகால் புரியாத அளவுக்குக் கோபம் வந்தது. அதனால், எப்போதுமில்லாத அளவுக்குத் தடித்த குரலில் ‘முடுவச் சொல்லு’ என்றான்.
‘ஒரே முடுவுதான். நான் செத்ததும் வித்துக்க.’
‘எனக்குக் கோவம் வரும்.’
‘நீ சம்பாரிச்சதுன்னு ஏதாச்சும் இருந்தா வித்துக்க.’
‘நீ உருப்பட மாட்டெ.’
‘இனிமே உருப்பட்டு நான் என்னா செய்யப் போறன்?’
‘மனுசனா நீ?’ என்று சொன்ன ராமசாமி ஆத்திரத்தில் தரையில் எட்டி உதைத்தான். கோபத்தில் நெடுக்கும் குறுக்குமாகச் சிறிது நேரம் நடந்தான். பிறகு வாசலுக்கு நேராக நின்றுகொண்டு ‘யே,யே’ என்று பலமுறை கூப்பிட்டான். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராணி கடுப்புடன் ‘யேயிக்கு என்னா வச்சியிருக்கியாம்?’ என்று கேட்டாள். அவளை எதற் காகக் கூப்பிட்டோம் என்பதை மறந்துவிட்ட ராமசாமி அலுப்புடன் ‘எல் லாம் என் தலயெயித்து. இல்லன்னா ஒங்கிட்டெ வந்து மாட்டிக்கிட்டு மாரடிப்பனா?’ என்று சொல்லிவிட்டு முகத்தைச் சட்டென்று திருப்பிக் கொண்டான். அடுத்து அவன் ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்தாள். அவன் பேசாததால் ‘ஒனக்கு மட்டும்தான் தலயெயித்தா?’ என்று சொன் னாள். பிறகு வீறாப்புடன் ‘எதுக்குக் கூப்புட்டெ? மாட்டெ அடிக்கிற மாரி அடிக்கிறதுக்கா?’ என்று கேட்டாள். ‘அதான் கூப்புட்டவுடனேயே பக்குன்னு வந்துட்டெ. போடி, போயி வேலயப் பாரு’ என்று சொல்லிவிட்டு, அவள் என்ன சொல்கிறாள் என்பதற்காகக்கூடக் காத்திருக்காமல் மாட்டுத் தண்ணீர்த் தொட்டியின் விளிம்பில் போய் உட்கார்ந்துகொண் டான். ‘பித்துப் புடிச்ச கூட்டத்திலெ வந்து மாட்டிக்கிட்டனே, கடவுளே’ என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் போனாள் ராணி.
ராமசாமியால் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அப் படி உட்கார்ந்திருந்தால் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. எதற்கும் அசைந்து கொடுக்காத ஆளாகக் கிழவர் இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டான். அதே நேரத்தில் கோபமும் பட்டான். அவருக்கு எப்படிப் புரிய வைப்பது? புரிந்தும் புரியாததுபோல நடிக்கிறாரா? சரியான நேரத்தில் நிலத்தை விற்காவிட்டால் வரக் கூடிய நஷ்டம் எவ்வளவு என்பது புரியா மலிருக்குமா? நிலம் போகிறது என்று அவருக்கு மட்டும்தான் கவலையா? நிலத்தை விற்று விரயச் செலவா செய்யச் சொல்கிறோம்? எதற்காகப் பிடித்த பிடியில் நிற்கிறார் என்று யோசித்த ராமசாமிக்குக் கோபம் தலைக்கு ஏறியது. அதனால், விர்ரென்று எழுந்து பெட்டிக்கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
‘முடிச்சாச்சா?’ என்று கேட்டுக்கொண்டே வந்த முருகேசன், சிகரெட் ஒன்றை வாங்கிப் பற்றவைத்தான். பிறகு ‘இது ஒரு அபூர்வமான டைம். பயன்படுத்திக்கணும். நம்ப நேரம், கம்பனிக்காரனா கொண்டாந்து பணத்தெக் கொட்டுறான். இருபது, முப்பதாயிரத்துக்குப் போவாத ஔக் காடெல் லாம் இன்னிக்கி ரெண்டு, மூணு லட்சமின்னு போவுது. இதுக்கு மின்னாடி ஒரு லட்சத்த மொத்தமா பாத்தவன் நம்ப ஊருல எவனாவது இருக்கானா? இது ஏன் ஒங்கப்பனுக்குப் புரியல?’ என்று கேட்ட முருகேசன் புகையை நன்றாக உள்ளுக்கு இழுத்து ஊதினான். பிறகு நிதானமாக ‘நாலு ரோடு வேற போடப்போறான். அப்ப ரோட்டு ஓரமா இருக்க நெலத்தயெல்லாம் அடிமாட்டு வெலக்கி அரசாங்கம் எடுத்துக்கப்போவுது. அதுக்கு இது எவ் வளவோ தேவலாம். நாலு ரோடு வந்ததாலதான் கம்பனிக்காரன் நெலத்தயே வாங்குறான்’ என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தான். அவனோடு சேர்ந்துகொண்டு ராமசாமியும் ஊரில் யார்யார் எவ்வளவு நிலம் விற்றார்கள், எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்பதைப் பற்றிப் பேச ஆரம் பித்தான்.
ராமசாமியும் முருகேசனும் பெட்டிக்கடையில் நின்று வெகுநேரமாகப் பேசிக்கொண்டிருப்பது கிழவருக்குத் தெரிந்ததும் முன்பைவிட அவருடைய மனம் இறுகியது. ‘அவனாலதான் இவன் ஆடுறானா? அவங்கூட இவனச் சேரவுடக் கூடாது’ என்று நினைத்தார். தன்னுடைய எண்ணம் ஈடேறாவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் அவருக்கு வந்தது. நடக்கக் கூடாத விபரீதம் நடக்கப் போவதாகத் தோன்றியது. அந்தக் கவ லையில் கைவேலையை மறந்துவிட்டு உட்கார்ந்திருந்தார்.
சோளத்தட்டை கட்டைத் தூக்கிக்கொண்டு வந்த பார்வதி கிழவருக்கு முன் போட்டு ‘இதெ நறுக்கி மாட்டுக்கிட்டெ போடு’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள். அவள் வருவதற்காகவே காத்திருந்தவள் மாதிரி ராணி வாய்விட்டு அழ ஆரம்பித்தாள். அவளோடு சேர்ந்துகொண்டு கமலாவும் செல்வராஜும் அழுதனர். பதறிப்போன பார்வதி என்ன நடந்தது என்று கேட்டாள். ராணியால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை. கமலாதான் ராமசாமி தன்னையும் செல்வராஜையும் ராணியையும் அடித்ததையும், அதனால் ராணிக்கு உதடு கிழிந்துபோனதையும் சொன்னாள். அதோடு வீங்கிப்போயிருந்த இடங்களையும் காட்டினாள். காயம்பட்டிருந்த இடங்களைப் பார்த்த பார்வதிக்குக் கடுமையான கோபம் வந்தது. ‘அப்பனும் மவனும்தான் துக்குரிக் கொணம் கொண்ட பயலுவளாச்சே. நானில்லாதப்ப நீ எதுக்குடி அவனுவோகிட்டெ போயி வாயக்கொடுத்த? புள்ளிவுளயும் அடிச்சியிருக்கானே, சண்டாளப் பய. அவன் வரட்டும், உண்டு இல்லன்னு பண்ணிப்புடுறன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ராமசாமி வீட்டுக்குள் வருவது தெரிந்தது. அவள் மல்லென்று அவனிடம் சண்டைக்குப் பாய்ந்தாள்.
‘புள்ளிவுள எதுக்குடா அடிச்சவன்? பொட்டச்சியப் போட்டு அடிச்சி வாயக் கியிச்சி வச்சியிருக்கியே, இது குடும்பத்துக்காரன் செய்யுற வேல யாடா? ஒம் மனசுல என்னதான் நெனச்சிக்கிட்டிருக்க? ஊரு சுத்திப்புட்டு வந்து திங்குற திமுறு வாட்டமாடா?’ என்று பார்வதி கேட்டதைக் காதில் வாங்காத ராமசாமி ‘நாளக்கித்தான் கடசி. வந்து கையெயித்து போடுறாரா இல்லியான்னு ஒம் புருசன்கிட்டெ கேட்டுச் சொல்லு’ என்று சொன்னான். அவன் சொன்னதைக் கேட்காத பார்வதி ‘இனி ஒரு நாளக்கி புள்ளிவோ மேலயும், அவ மேலயும் கைய வச்ச, அவ்வளவுதான். ஒன்னெ உண்டு இல் லன்னு பண்ணிப்புடுவன். ஒன்னோட திமுறு வாட்டத்தயெல்லாம் வேற எங்கியாவது போயிக் காட்டு’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து ராமசாமியைத் திட்டிக்கொண்டேயிருந்தாள். அவள் திட்டுவதைக் கேட்க முடியாமல் தரையில் இருந்த செம்பை எட்டி உதைத்துவிட்டு அவன் விர்ரென்று வந்து திண்ணையில் உட்கார்ந்துகொண்டான்.
‘சோளத்தட்டய வெட்டி மாட்டுக்குப் போடச் சொன்னனே, போடல? கவுற அப்பறமா திரிச்சா என்ன?’ என்று கேட்ட பார்வதி கடுப்புடன் கத்தியை எடுத்து வந்து தானே சோளத்தட்டையைத் துண்டுதுண்டாக வெட்டிப் போட ஆரம்பித்தாள். ‘அப்பனுக்கும் மவனுக்கும் சூத்த முட்டுற மாரி கோவம்தான் வரும். காரியத்தில ஒண்ணுமில்ல’ என்று சொல்லி முனகினாள்.
பார்வதியிடம் வந்த ராமசாமி வீறாப்புடன் ‘நான் சொன்னது என் னாச்சி?’ என்று கேட்டான். அவனைப் பார்க்காமலேயே ‘ஒங்கப்பன் என்ன, காத தூரத்திலியா இருக்கிறாரு? கண்ணு மின்னாலதான குந்தியிருக் காரு? கேக்குறத நீயே கேளன். இடயிலெ நான் எதுக்கு எதுப்புச் சீட்டு ஆளு’ என்று பார்வதி சொன்னாள். ராமசாமி அவளை முறைத்துப் பார்த்தான். பிறகு பார்வதி வெட்டிப் போட்டிருந்த சோளத்தட்டைகளை அள்ளிக்கொண்டு போய் மாடுகளுக்கு முன் போட்டுவிட்டுத் தண்ணீர்த் தொட்டி விளிம்பில் உட்கார்ந்தான். ‘அவன் கேக்குறது கேக்கலியா? ஊருல உள்ளதுதான் நம்பளுக்கும். நமக்கு மட்டும் தனியாவா சட்டம் போடப் போறான்? ஊரே ஒக்கச்சேந்துகிட்டு ஓடும் போது நம்பளும் ஓடித்தான ஆவணும். எதிர்க்கச்சியா கட்ட முடியும்? அப்பிடிச் செஞ்சா ஊரே நம் பளப் பாத்துக் காறிமிய்யாதா?’ என்று சொன்னதுதான் தாமதம், கிழவர் பார்வதியை ஏறஇறங்க வினோதமாகப் பார்த்தார். பார்வதிதான் பேசுகிறாளா என்ற சந்தேகம் அவருக்கு உண்டாயிற்று. பேச வேண்டும் போல இருந்தாலும் ஒன்றும் பேசாமல் தொடர்ந்து கயிறு திரிக்க ஆரம்பித்தார்.
‘அந்தாளு தானும் சாவ மாட்டான். சாவுறவங்களயும் வுட மாட்டான். ஊர்ச் சனங்க எல்லாம் காட்டெ வித்து மெத்த மாளின்னு கட்டி வாயட்டும். நாம்ப மட்டும் இந்த செவுரு இடிஞ்ச ஊட்டுலியே கெடந்து சாவுவம். இத்தினி வருசக் காலத்திலெ அந்தாளு காட்டெ வுட்டு ஒரு நாளும் எட்டெ நவுந்ததில்லெ. என்னெயும் நவுற வுட்டதில்லெ. அந்தக் காட்டெ வச்சிக்கிட்டெ அந்தாளு சாவட்டும்’ என்று பார்வதி சொன்னதும், கிழவர் கயிறு திரிப்பதை நிறுத்திவிட்டுப் பார்வதியை நிதானமாகப் பார்த்தார். பிறகு ‘ஒங்கப்பன் எனக்கு எதுக்குப் பொண்ணு கொடுத்தான் தெரியுமா?’ என்று கேட்டார்.
‘யான் தெரியுமா? வெக்கங்கெட்டுப்போயிதான். வேறென்ன?’
‘சும்மா இருடி, மயிரான் மவள.’
‘ஆத்த மாட்டாதவன் ஆத்தாளயும் மவளயும் கட்டிக்கிட்டானாம்.
அந்த மாரிதான் எங்கப்பங்காரன் ஒங்கிட்டெ வந்து என்னெப் புடிச்சிக்
கொடுத்தான். அஞ்சாறு கப்பல் வச்சியிருக்கன்னா பொண்ணு கொடுத்தான்?’
‘அதில்லடி அறிவு கெட்டவன் மவள. அந்தக் காலத்திலெ இந்த ஊருல எட்டுக் காணி நெலம் வச்சியிருந்தது எங்கப்பன் ஒருத்தந்தான். அந்த நெலத்த நம்பித்தான் ஒன்னெ எனக்குக் கொடுத்தான் ஒங்கப்பங்காரன்.’
‘வரவும் சோளமும் வௌயுற கொல்லன்னு அந்த மன்னாருசாமிக்குத் தெரியாதுபோல இருக்கு. மண்ணாங்கட்டி மாப்புள்ளெக்கி எருமுட்டெ பணியாரம்தான்.’
‘அந்த வரவும் சோளமும் வௌயுற காட்டாலதான் ஊருல ‘காணி மிராசு, பட்டாக்காரன்’ன்னு பேரு இருக்கு.’
‘அப்படின்னா அந்தக் காட்டுலியே ஒன்னெக் கொண்டுபோயி அடக்கம் பண்ணிக்க’ என்று பார்வதி சொன்னதும் கிழவருக்கு வாயடைத்துப் போயிற்று. தன்னுடைய கைப்பொருள் போகப்போகிறது என்ற எண்ணம் அவருக்கு முதன்முதலாக வந்தது. அதனால், மின்சாரத்தால் தாக்கப்பட்ட வர்போல் அதிர்ந்து போனார். ஆனாலும், தன் உயிரை இழந்தால்கூடப் பரவாயில்லை, நிலத்தை மட்டும் இழக்கக் கூடாது என்ற வைராக்கியம் வந்தது. கயிறு திரிப்பதை விட்டுவிட்டு உட்கார்ந்திருந்த கிழவரிடம் ‘முடுவச் சொல்லு’ என்று நிலைகோல் போட்டு நின்றுகொண்டு மீண்டும் நச்சரிக்க ஆரம்பித்தான் ராமசாமி. அவனுடைய நச்சரிப்பைத் தாங்க முடியாமல் ‘யாண்டா என்னோட தங்கத்த தாரவாக்குறதுக்கு இம்மாம் அல அலயுற?’ என்று கோபமாகக் கேட்டார்.
‘வரகு வௌயுற காட்டெ வச்சிக்கிட்டு என்னா பண்றது?’
‘சோறு சாப்புடலாம்.’
‘ஒங்கிட்டெ மனுசன் பேசுவானா? சொல்றத புரிஞ்சிக்காம. நம்ப நெலத்தச் சுத்தியிருக்கற நெலத்தயெல்லாம் வாங்கிப்புட்டான். கம்பி வேலி, மதிலு சுவருன்னு கட்டிப்புடுவான். அப்பறம் நம்ப நெலத்துக்கு வேணுமின்னே போவ வர வயி இல்லாமப் பண்ணிப்புடுவான். அந்த மாரி ஆயிப்புட்டா நம்பளால ஒண்ணும் பண்ண முடியாது. கடசியிலெ வேற வயி இல்லாம நம்பளே போயி நெலத்த வச்சிக்கன்னு அவங்கிட்டெ தொங்கணும். அப்ப அவன் அடிமாட்டு வெலக்கித்தான் கேப்பான். அதுக் குப் பதிலா இப்பியே கொடுத்தா நாலு பணமாவது கூடக் கெடக்கும். கம்பனிக்காரன்கிட்டெ பணமிருக்கு. அவன் சொல்றது, செய்யுறதுதான் நாட்டுல மேவும். இந்த ஊருல ஒன்னெத் தவுத்து மத்தவங்கயெல்லாம் போட்டிப் போட்டுக்கிட்டுப் போய் நெலத்தக் கொடுக்கல? ஊருல நடக்குற எல்லாத்தயும்தான் நீயே ஒங் கண்ணால பாக்குறியே. அப்புறமென்ன? எனக்கு மட்டும் நெலத்த விக்கணுமின்னு ஆசயா? ஊரே கூடி நம்பளக் கவுக்க பாக்குறானுவோ.’
‘எல்லார்கிட்டெயும் இந்த நெலம்தான் பாக்கின்னு சொல்லிச்சொல்லித் தான் ஊருல இருக்கிற நெலத்தயெல்லாம் வளச்சிப்போடுறான்.’
‘எப்பிடியோ வாங்குறான். நமக்கென்ன? நாளக்கி நீ கையெயித்துப் போடுறியா, இல்லியா? அதெ மட்டும் சொல்லு.’
‘இல்லங்கிற எடத்திலெ பல்லியும் சேராது. கொடுத்துப்புட்டா அப்புறம் வாங்க முடியுமா?’
‘ஊருல இருக்கிறவனெல்லாம் கொடுக்கல? நீதான் ஒலகத்திலேயே இல்லாத அதிசயமான நெலம் வச்சியிருக்கியா? சரியான ஔக் காடுங்கிறது மறந்துடுச்சா?’
‘ஔக் காடுதான். யாரு இல்லன்னா? கரும்பு கோணலா இருந்தா தித்திக் காதா? நீ சொல்ற ஔக் காட்டெ வச்சித்தான் இத்தினி வருசமா குடும்பம் நடத்துனன். ஒங்களயும் வளத்தன். அதெ வச்சித்தான் இப்ப ஒன்னோட புள்ளிவுளும் வளருது.’
‘அந்த நெலமில்லன்னா செத்திருப்பமா?’
‘செத்திருக்க மாட்டம். காணிக்காரன் பூமிக்காரன்னு பேரு இருக்குமா? அந்த நெலம் இருக்கிறதாலதான், வௌயுறதாலதான் நாலு பேரு இந்த ஊட்டுக்கு வர்றாங்க. படி கேட்டு தொம்பன், பரியாரி, வண்ணான், கூத் தாடின்னு பல பேரு வரப் போவ இருக்காங்க. நீ சொல்ற மாரி தங்கமான நெலமா இருந்தாலும் பயிர் பண்ணலன்னா காக்கா குருவிகூடக் காட்டுப் பக்கம் வராது.’
‘காக்கா குருவிக்காகத்தான் பயிர் பண்றியா?’
‘ஆடு, மாடு, காக்கா, குருவின்னு எல்லாத்துக்கும் சேத்துதான்.’
‘நல்ல ஆளுதான் நீ. கதெ வசனம் பேசாம முடுவச் சொல்லு.’
‘நெலத்த வித்துப்புட்டு ஆடுமாடு தீனிக்கி என்னா பண்றது?’
‘அதுவுள மேய்க்கத்தான் ஆளில்லியே. எல்லாச் சனியனையும் ஓட்டிக்கிட்டுப் போயி சந்தயிலெ வித்துத் தள்ளு.’
‘எல்லாத்தயும் வித்து சிகரெட் ஊதவா? ஆடுமாடு வாணாம், கம்பனி வேணும். அப்படித்தானா?’
‘காலம் போற போக்கு ஒனக்குப் புரியல.’
‘எல்லாம் எனக்குப் புரியுது. எல்லா எடத்தயும் கட்டடமா கட்டிப் போட்டுட்டா பயிர் எங்க பண்றது? சோறு எப்பிடித் திங்குறது? மங்குதிர ஏறிக்கிட்டு ஆத்துல இறங்கப்போறங்கிற. ஒன்னெ ரோட்டுல நிக்கவுடப் போறானுவோ, பாத்துக்க.’
‘எல்லாம் எனக்குத் தெரியும்.’
‘நெலத்த கொடுத்தா நெலம் மட்டுமா போவும்? ஆடு மாடு போவும், கோயி போவும், வண்டி போவும், மாடு தண்ணி குடிக்கிற தண்ணித் தொட் டிப் போவும், வெத நெல்லு, வெத தானியம், வெதப் புட்டி, ஏரு, கலப்ப, பூட்டாங்கவுறு, நெல்லு குத்துற உரலு, உலக்கன்னு பலதும் போவும். படி, வள்ளம், மரக்கா இருக்காது. குதிர் இருக்காது. மம்பட்டி, களக்கட்டு, அருவான்னு ஒண்ணும் இருக்காது. இந்த ஊட்டுல இருக்கிற எல்லாப் பொருளும் போயிட்டா நீயும் நானும்தான் இருப்பம். நீயும் நானும் இருக்கிறதுக்கு பேருதான் ஊடா? எல்லாம் போன பின்னால நீயும் நானும் எதுக்கு இருக்கணும்? எப்பவும் மூட்டமூட்டயா அடுக்கியிருந்த ஊட்டுல படுத்திருந்தவன், வெறும் ஊட்டுல படுத்திருக்க முடியுமா? அதுக்கு, செத் துப் போகலாம்ண்டா. மூளியா இருக்கிற ஊட்டெ எவன் மதிப்பான்? ஊட்டுல இருக்கிற பொருளெல்லாம் போனா மானம் போயிடும். உசுரு போனாக்கூட பரவாயில்லெ. மானம் போவக் கூடாதுடா. அரக் காசுக்குப் போன மானம் ஆயிரம் காசு கொடுத்தாலும் திருப்பி வராதுடா. இந்த ஊருல ஒன்னெ ஒருத்தன் மதிக்கிறான்னா அது நீ போட்டிருக்கிற வெள்ள வேட்டி, வெள்ளச் சட்டைக்காவா? கம்பனிக்காரன் ஒன்னெ எதனால தேடிக்கிட்டு வர்றான்? ஆளு வாட்ட சாட்டமா இருக்கியே, அதுக்காவா? எல்லாம் அந்த ஔக் காட்டாலதான். அந்தக் காடு போயிட்டா நீ என்னா பண்ணுவ?’
‘பணத்தோட வேலயும் தர்றான்.’
‘என்னா வேலெ?’
‘என்னெ நீ பெரிய படிப்பா படிக்கவச்ச? எட்டாவதுதான? அதுக்குத் தகுந்த வேலதான் கொடுப்பான். கூட்டுற வேல.’
‘ஒலகத்திலேயே பெரிய வேலதான். நெலத்தெப் புடுங்கிக்கிட்டு கூட் டுற வேல தர்றனா? சோத்தெப் போட்டுட்டுத் தொண்டய நெரிக்கிற மாரிதான்.’
‘கெயவன்கிட்டெ பேசி ஜெயிக்க முடியாது’ என்றாள் பார்வதி.
‘இந்தாளுகிட்டெ இத்தனி வருசமா எப்பிடிம்மா காலந்தள்ளுன?’
‘வெக்கங்கெட்டுப்போயிதான். வேறென்ன?’ என்று சொன்ன பார்வதி, நறுக்கிப் போட்ட சோளத் தட்டைகளை அள்ளிக்கொண்டுபோய் மாடுகளுக்கு முன் போட்டாள். திரும்பி வந்து உட்கார்ந்து எஞ்சியிருந்தற்றை நறுக்கிப் போட ஆரம்பித்தாள். அப்போது அரிசி அலசிய தண்ணீ ரையும், காய் அறுத்துப்போட்டு அலசிய தண்ணீரையும் கொண்டுவந்து வீட்டுக்குக் கிழக்குப் புறமாகக் கட்டியிருந்த ஆடுகளுக்குக் குடிப்பதற்காக வைத்தாள் ராணி.
வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த செல்வராஜ், பார்வதியிடம் வந்து உட்கார்ந்துகொண்டு சோளத் தட்டைகளை வெட்டுவதைப் பார்க்க ஆரம்பித்தான். தானாகவே கொஞ்சம் சோளத்தட்டைகளை அள்ளிக்கொண்டுபோய் மாடுகளுக்கு முன் போட்டான். அப்படியே தெருப் பக்கம் நழுவப் பார்த்தான். அவனைக் கூப்பிட்டு ‘இருட்டுற நேரத்திலெ எங்கடா போற?’
என்று கேட்டுத் தலையில் கொட்டினான் ராமசாமி. அழ ஆரம்பித்த பையனை இழுத்து மடியில் படுக்க வைத்துக்கொண்டு ‘நெனச்சதுக் கெல்லாம் யாண்டா புள்ளெயப் போட்டு அடிக்கிறவன்? வௌயாடுற புள்ளெ ஒரு எடத்திலெ இருன்னா இருக்குமா? ஒனக்குக் கோவமின்னா ஒங்கப்பன்கிட்டெபோயி காட்டு’ என்று சொல்லி ராமசாமியைப் பார்வதி திட்டினாள்.
‘கமலா, கமலா’ என்று கூப்பிட்டான் ராமசாமி. திருதிருவென்று விழித் துக்கொண்டே வெளியே வந்த கமலாவிடம் ‘ஒங்கம்மா என்னா பண்றா?’ என்று கேட்டான். பதில் சொல்லவந்த கமலாவைப் பதில் சொல்ல விடாமல் ‘ஏதாவது பண்ணிட்டுப்போறா பிச்சக்காரன் மவ. அவளோட அப்பன் புத்திதான் அவளுக்கும் இருக்கும். சரி, நீ போயி குடிக்கிறதுக்குத் தண்ணீ கொண்டா’ என்று சொன்னான். கமலா வேகமாக வீட்டுக்குள் போனாள். திடீரென்று அவனுக்கு என்ன தோன்றியதோ, குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டுவரச் சொன்னதை மறந்துவிட்டு விர்ரென்று பெட்டிக்கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
‘கண்ணாலம் கட்டி ரெண்டு புள்ளெ பெத்தவன்கிட்டெ போயி எதுக்குத் தர்க்கம் பண்ணிக்கிட்டிருக்க? ஊருல நடக்குறதெதான சொல்றான்? இன்னிக்கிக் காட்டுல களவெட்ட வந்த பொட்டச்சிவோகிட்டெ நானும் தான் வெசாரிச்சன். நம்ப நெலத்தச் சுத்தியிருக்கிற காட்டுக்காரன் பூரா பேரும் கையெயித்துப் போட்டுட்டானுவளாம். பணத்த மட்டும் வச்சிக்கிட்டு சனங்க என்னாப் பண்ணப்போவுதுவளோ தெரியல. ஊருக்கே கொள்ள நோவும் அவக்கேடும் வந்தாப்ல இருக்கு’ என்று பார்வதி சொன்னதும், ‘நம்ப தெக்கால காட்டுக்காரன் சின்னசாமியும் கொடுத்திட்டானா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார் கிழவர்.
‘நாளக்கித்தான் கடைசின்னு முந்தாநாளே கையெயித்து போட்டுட்டானாம் அந்த ஆளு.’
‘சரிதான். நெருப்புல பூச்சிவோ தானா போயி வியிந்து மடியுறாப்புலன் இருக்கு’ என்ற கிழவர் கயிறு திரிப்பதை நிறுத்திவிட்டுப் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஊர்காரர்கள் செய்வது சரியா என்று தன்னையே கேட்டுக்கொண்டார். ஊருக்குப் பெரிய கெடுதல் வருவதுபோல உணர்ந்தார். அதனால், தன்னுடைய நிலம் கைமாறிப் போய்விடுமோ என்ற கவலை அவரை அரிக்க ஆரம்பித்தது.
அதே நேரத்தில் அவருடைய நம்பிக்கையும் படிப்படியாகக் குறைய ஆரம் பித்தது. ‘சனங்க போற போக்கு சரியில்லியே’ என்று சொல்லிக்கொண்டே கிழவர் அருகில் வந்த கோழியை விரட்டியடித்தார்.
‘ரோட்டோரமா நெலம் வச்சியிருந்தவனுக்குத்தான் கொள்ள லாவம். உள்காட்டயெல்லாம் சீந்த மாட்டங்குறான். எங்கிருந்துதான் தேடிப் புடிச்சி இந்த ஊருக்கு வந்தானோ, ஊருக்கே சனிபுடிச்சாப்ல ஆயிப் போச்சி. ஊருல பணம் இல்லாதவங்க ஊடுன்னு ஒண்ணு பாக்கியில்லெ. எப்பயும் இல்லாத புது வயக்கமா பணத்தயெல்லாம் கொண்டுபோயி நகக் கடயிலயும் துணிக் கடயிலயும்தான் கொட்டுதுவோ சனங்க’ என்று பார் வதி ஊர் நடப்பைச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொல்வதில் ஒரு வார்த்தைகூடக் கிழவரின் காதில் விழவில்லை. தன்னுடைய நிலம் எங்கே பறிபோய்விடுமோ என்ற கவலையில் பேச்சற்றுப்போய் உட் கார்ந்திருந்தார்.
பெட்டிக்கடையிலிருந்து வந்த ராமசாமி பார்வதிக்குப் பக்கத்தில் கிடந்த மர உரலில் உட்கார்ந்தான். திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது மாதிரி ‘என்னம்மா ஆச்சி?’ என்று பார்வதியிடம் கேட்டான். பார்வதி வாயைத் திறக்கவில்லை. திரும்பத்திரும்பக் கேட்டான். பிறகு, கடைசியில் கோபமாக ‘அந்த நெலத்திலிருந்து என்னா வருதுன்னு வீம்பு புடிக்கிறாரு?’ என்று அவன் கேட்டதும், அதுவரை தரையைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்த கிழவர் வெடுக்கென்று தலையைத் தூக்கி ராமசாமியை எரித்துவிடுவது மாதிரி பார்த்தார். ‘நெலத்தில இருந்து ஒண்ணுமே வரலியா? வருசத்துக்கு அம்பது அறுவது மூட்டெ நெல்லு வௌயில? கல்லெ, எள்ளு, சோளம், வரவுன்னு வௌயில? மோட்டாங் காட்டுல துவர, மல்லின்னு வௌயில? அது வௌயாமத்தான் இத்தினி வருசமா சோறு திங்குறமா?’
‘வௌஞ்சி என்னாத்துக்கு ஆச்சி? எத்தன மாடி ஊடு கட்டியிருக்கிற?’
‘மாடி கட்டத்தான் காடு வௌயுதா? சோறு திங்கிறதுக்கு இல்லெ?’
‘சோறு தின்னா மட்டும் ஆச்சா?’
‘பின்னெ என்னாப் பண்ணனுங்கிற? அந்தக் காட்டுல வௌஞ்சத வச்சித்தான் மூணு பொட்டப் புள்ளிவுளுக்குக் கண்ணாலம் கட்டிக்கொடுத் துச்சி. காட்டுலேர்ந்து வந்தத வச்சித்தான் மூணு பொட்டப் புள்ளிவுளுக்கும் இன்னிய தேதிமுட்டும் நல்லது கெட்டது பண்ணுது. அதுல வந்தத வச்சித்தான் ஒனக்குக் கண்ணாலம் கட்டுச்சி. எல்லாத்துக்கும் மேல என்னெயும் ஒன்னெயும் வளத்தது அந்த ஔக் காடுதான். அந்தக் காடுதான் இப்ப ஒம் புள்ளிவுளுக்கும் சோறு போடுது. மனுசனுக்கு சோறுதான வேணும்? இந்த ஊட்டுல நூறு பேரு இருந்தாலும் அத்தன பேருக்கும் அந்தக் காடு சோறு போட்டுடும். மனுசன் நூறு மாடி கட்டணும், கப்பல் வாங்கணுமின்னு ஆசப்பட்டா, அதுக்குக் காடு என்னா பண்ணும்?’
‘சோறு போடும், சோறுபோடும்ங்கிறியே, ஊருல நெலம் இல்லாதவங் கெல்லாம் செத்தாபோயிட்டாங்க? உசுரோட இல்லெ?’
‘காணி மிராசுங்கிற பேரு போயிடும்ல?’
‘அந்தப் பேரு மசுரு இருந்து என்னாத்துக்கு ஆவப் போவுது?’
‘நெலத்தெ விக்குறதுக்கு இந்தப் பாடு படறியே, அந்த நெலம் என்னா கெடயிலெ கெடக்குன்னு பாத்திருக்கியா? கெணத்தோட சுத்துச்சுவரு இடிஞ்சிப் போயி கெடக்கு. தெக்கால கொல்லயிலெ வெள்ளம் போயி போயி வாரியா போயிடுச்சின்னு அக்கறப்பட்டிருக்கியா? புளியமரத்துக் கொல்லயிலெ வடக்கால காட்டுக்காரன் போன பயிருக்கு நாலு ஏரு கரய சேத்துப் புடிச்சி ஓட்டிப்புட்டான். அதெ ‘யாண்டா’ன்னு கேட்டுருக்கியா? குறுக்க நெடுக்கன்னு காட்டுப் பக்கம் அடி வைக்காத நீ, நெலத்த வெல பேச மட்டும் வந்துட்டெ.’
‘நான் காட்டுக்கு வந்ததே இல்லியா? நானில்லாமதான் காட்டுப் பயி ரெல்லாம் ஊட்டுக்கு வந்து சேருதா?’
‘ரெண்டு மூணு மாசத்துக்கு மின்னாடி ஒனக்கும் கருப்பன் மவனுக்கும் சண்ட வந்தப்ப ‘இந்த ஊருலியே பத்துக் காணி பூமிக்காரன் நான் ஒருத்தன்தான். எம் மசுர ஒருத்தனாலயும் புடுங்க முடியாது’ன்னு ஊரே திரண் டிருக்கும்போது சொன்னியே. எதெ வச்சி அப்பிடி சொன்ன?’
‘எனக்கு மட்டும் நெலத்தெ விக்கிறதுக்கு ஆசன்னா நெனச்சிக்கிட்டெ? கம்பனிக்காரனுக்கு மின்னாடி ஊருக்காரப் பயலுவோதான் நம்பளக் கவுக் கப் பாக்குறானுவோ. மத்தவங்க விக்கலன்னா நான் ஏன் இதெப் பத்திப் பேசப்போறன்? காட்டெக் கொடுத்துட்டு எதெ வச்சி சோறு திங்கிறதுன்னு நான் மட்டும் யோசிக்க மாட்டனா? நான் மட்டும் மனுசனில்லியா?’
‘நூறு காணி, இருநூறு காணின்னு இருந்தா ஒரு ஓரம் பாரத்தக் கைய காட்டிப்புட்டுப் போவலாம். அதுக்குத்தான் வயி இல்லியே. நம்பகிட்டெ இருக்கிறதே ஒரு கோமணம்தான். அதெயும் கொடுத்துப்புட்டு நடுத் தெரு வுல ‘நாராயணா’ன்னு நிக்குறதா? கால ஜீவனத்தெ எப்பிடி ஓட்டுறது?’
‘இப்பத்தான் ரெண்டு ரூவாயிக்கி ஒரு கிலோ அரிசி தர்றானே.’
‘ரேசன் கடயிலப் போயி நின்னா பேரு கெட்டுப் போவாதா? பொயப் புச் சிரிச்சிப்போவாதா? பங்கும் பங்காளிங்க, ஒறவுக்காரனுங்க ஒரு காசுக்கு மதிப்பாங்களா? காடு இருக்கிறதாலதான் இன்னியமுட்டும் காய்வாங்க, மொளகா, புளி வாங்கன்னு கடக்கி ஆளு வுடாம இருக்கிற. இனிமே அதுக்கெல்லாம் காசிதான் கொடுக்கணும். சரி, எந்தப் பயிரோட கொல்லிய வுடனுமாம்?’
‘இந்தப் பயிரோடத்தான்.’
‘ஓகோ, அப்படியா?’
‘அவன் மட்டும் ஆம்பள இல்லியா? அவனுக்கு மட்டும் தெரியாதா? பொண்டாட்டி புள்ளென்னு இருக்கிறவனுக்குப் பொறுப்பு அக்கற இருக் காதா? ஊருக்காரப் பயலுவோ ஒண்ணுசேந்தாப்ல போயி வியிம்போது அவன் மட்டும் என்னா செய்வான்? உள்ளெ நெலவரத்ததான அவன் சொல்றான்?’ என்று பார்வதி சொன்னதும் கிழவர் அவளை ஏறஇறங்கப் பார்த்தார். கோபம் தணிந்தவர் மாதிரி நிதானமாகக் கேட்டார். ‘நெலத்தக் கொடுத்துப்புடலாம். அந்தப் பணத்தை வாங்கி என்னா பண்றது?’
‘வேற எங்கியாச்சும் நெலம் புதுசா வாங்கிக்க வேண்டியதுதான். இல்லன்னா பொட்டிக்கடெ, டீக் கடென்னு வச்சிப் பொயச்சிக்க வேண்டி யதுதான்’ என்று ராமசாமி சொன்னதும் கிழவர் கேலியாகச் சிரித்தார். பிறகு ‘நல்லா இருக்குடா ஞாயம். கூப்புடுற தூரத்திலெ ரோட்டு மேல இருக்குற நெலத்தெக் கொடுத்துப்புட்டு மூணு மைலு, நாலு மைலுன்னு தாண்டிப் போயி நாம்ப நெலம் வாங்கணும், இல்லெ? கம்பனிக்காரன் மேனி நோவாம ரோட்டு மேலியே வந்து ரோட்டு மேலியே போவான். அவனுக்கு ஒடம்பு வலிக்கக் கூடாதின்னுதான் ஊருக்காரப் பயலுவோ அக்கறப்படுறானுவோ. உள்காட்டுலப் போயி நாம்ப நெலம் வாங்குனா அதுக்குப் பத்திரச் செலவ ஆரு போடுறது? அப்படியே வாங்குனாலும்
நம்ப நெலம் மாரி ஊருலெ நல்ல அயனான நெலம் எங்க இருக்கும்?’
‘டீக்கடெ வச்சிடலாம்.’
‘இன்னொருத்தன் எச்சி கிளாசிய கயிவித்தான் சோறு திங்கணுமா? நம்ப சாதிக்கேத்த, குடும்பத்துக்கேத்த தொயிலாடா அது? நெலத்த வித்த நூறு பேரும் பொட்டிக்கடெயோ, டீக்கடெயோ வச்சா பொருளு வாங்க வரவங்க யாரு?’
விறகு எடுப்பதற்காக வெளியே வந்த ராணி ஒரு தினுசாகக் கிழவரைப் பார்த்தாள். சளி வந்து அடைத்துக்கொண்டது மாதிரி பலமாக இரண்டு மூன்று முறை காறித் துப்பினாள். விறகை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் போகும்போது ‘வுட்டுட்டுப் போயன். ஒனக்கு மட்டும்தான் வேத்திருக்கா? செத்தா அவங்கப்பனக் கொண்டுபோயி பொதச்ச மாதிரி இந்தக் கெயவ னயும் அந்தக் காட்டுலியே கொண்டுபோயி பொதச்சிப்புடு. செத்தப் பெற வும் கெயவனோட ஆவியும் அந்தக் காட்டெயே பேயாட்டம் சுத்திச்சுத்திவரட்டும்’ என்று சொல்லிவிட்டுப் போனாள். அவளை முறைத்துப் பார்த் தார் கிழவர்.
சோளத்தட்டை வெட்டி முடித்ததும் துண்டாக்கிப் போட்டவற்றை அள்ளிக்கொண்டுபோய் மாட்டுக்குப் போட்டுவிட்டு வீட்டுக்குள் போனாள் பார்வதி. போனவள் வெளியே வராததால் ராமசாமி வீட்டுக்குள் போனான்.
பிறகு வெளியே வந்தான். சிறிது நேரம் நின்ற நிலையிலேயே இருந்தான். கிழவரைப் பார்த்தான். அவர் கயிறு திரித்துக்கொண்டிருப்பது அவனுக்கு எரிச்சலை உண்டுபண்ணிற்று. கிழவரைப் பார்க்கப் பிடிக்காமல் பெட்டிக் கடைப் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.
வெளியே வந்த பார்வதி ‘இருட்டுல எதுக்குக் குந்திக் கெடக்குற? தண்ணி கிண்ணி வேணுமா? செத்த நேரம் படுத்திருந்துட்டு அப்பறமா கவுறத் திரியன்’ என்று சொன்னாள். கிழவர் வாயைத் திறக்காததால் வெறுப்படைந்து ‘ஊரே ஒரு பரமா ஓடும்போது, இவுரு மட்டும் எதிர்ப் பரமா ஓடப்பாக்குறாரு. ஒலகம் புரிய வேணாம்? நாட்டுல என்னா நடக் குதுன்னு தெரிய வாணாம்?’ என்று சொல்லிச் சலித்துக்கொண்டாள். திடீ ரென்று நினைவுக்கு வந்தது மாதிரி ‘நாளக்கி நெல்லு அறுக்கிறதுக்கு ஆள் சொல்லிப்புட்டு வர்றன்’ என்று சொல்லிவிட்டுக் கிழக்குப் பக்கமாகப் போனாள். அவள் போவதையே பார்த்த கிழவருக்கு ஆச்சரியமாக இருந்தது. பேசியது பார்வதிதானா என்ற சந்தேகமும் உண்டாயிற்று. ‘எல்லாருமா சேத்து எங் கண்ணெப் புடுங்கப் பாக்குறாங்க’ என்று சொன்ன கிழவர் கயிறு திரிப்பதில் வேகம் காட்டினார்.
‘புள்ளாண்டான் போறதப் பாத்தியா? தம்பிக்குத் தரெ எது, பாத எதுன்னுக்கூடத் தெரியாமப் போறாரு. எல்லாம் கம்பனிக்காரன் பணம் பண்ற பாடு. கம்பனிக்காரன் பணத்தால ஊரே தலகீயாப் பூடுச்சி. ஊருல இன்னம் என்னென்ன அதிசயமெல்லாம் நடக்கப் போவுதோ. ஆரு கண்டா?’ என்று, குடித்துவிட்டுத் தள்ளாடிக்கொண்டே போன குமாரைப் பற்றி இரண்டு பெண்கள் பேசிக்கொண்டு போவதைக் கேட்டதும் கிழவர் சட்டென்று அப்பெண்களைப் பார்த்தார். இருட்டாக இருந்ததால் ஆள்
அடையாளம் தெரியவில்லை. ஆனாலும், அப்பெண்களின் பேச்சு கிழவ ரைப் பதற்றமடைய வைத்தது. ராமசாமியைப் பற்றியும் பின்னொரு நாள் இப்படித்தான் பேசுவார்களோ என்ற எண்ணம் வந்ததும் அவருக்கு உயிர் நாடியே அடங்கிவிட்டது போலிருந்தது. கைப்பொருள் விரயமாவதோடு அவப் பெயரும் அல்லவா வந்து சேரும் என்று நினைத்தார். என்ன நடந் தாலும் நிலத்தை விற்கக் கூடாது என்ற வைராக்கியம் வலுவாயிற்று. கம்பனிக்காரன் கேட்கிற நிலத்தை வாங்குவதற்காகத் தன்னுடைய அப்பாவும் அம்மாவும் தானும் பட்ட கஷ்டமெல்லாம் அவருக்கு நினைவுக்குவர ஆரம்பித்தது. மறுநொடியில் அவருடைய கண்கள் கலங்கின.
கிழவருடைய அப்பாவுக்கு அரைக் காணி மோட்டாங்காடும் ஒரு கூரை வீடும் மட்டும்தான் இருந்தன. அந்த அரைக் காணி நிலத்தை வைத்துதான் பத்துக் காணி நிலத்தைச் சம்பாதித்தார். அதற்காக அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. அது கடவுளுக்குத்தான் தெரியும். காலை
யில் எழுந்ததுமே பெண்டாட்டியை இழுத்துக்கொண்டு சாணி பொறுக்கு வதற்காகப் போவார். காடுகாடாக அலைந்து பதினோரு மணிவரை சாணி யைப் பொறுக்கிக் கொண்டுவந்து முட்டாகக் குவித்து வைத்து, எருவாக்கி விற்பார்கள். சாயங்காலத்தில் விறகு வெட்டி வந்து விற்பார். தீபாவளி, பொங்கல் போன்ற விசேச நாட்களில்கூட வீட்டில் தங்க மாட்டார்கள். நல்ல சோறு, நல்ல குழம்பு வைத்துச் சாப்பிட மாட்டார்கள். எல்லா நாளுமே தண்ணீரில்தான் சோறு சாப்பிடுவார்கள். அப்பா அம்மாவோடு சேர்ந்துகொண்டு எட்டு வயதிலேயே கிழவரும் காடுகாடாகச் சாணி பொறுக்கப் போயிருக்கிறார். விறகு வெட்டப் போயிருக்கிறார். பத்து வய தில் வாரத்திற்கு நான்கு ஆடுகளை பிடித்து மேய்க்க ஆரம்பித்தார். ஐந்தாறு வருசத்தில் சொந்தமாக ஒரு பட்டி ஆடு உருவாயிற்று. அந்த ஆடுகளை விற்றுவிற்றுதான் கால் வீசம், அரை வீசம் என்று சேர்த்துக் கால் காணி, அரைக் காணி என்று நிலம் வாங்கிச் சேர்த்தார்கள். கிணறு இருக்கிற நிலத்தை வாங்கும்போது பத்திரச் செலவுக்குப் பணமில்லாமல் தவித்தபோது வேறு வழியின்றி ‘தாலியக் கொடு. கல்லப் போட்டதும் புதுசாவே எடுத்துப் போடுறன்’ என்று கேட்க, ‘என் உசுர எடுத்துக்க, தாலிய மட்டும் கேக்காத’ என்று ஆரம்பித்த சண்டை கிழவருடைய அப்பாவையும் அம்மாவையும் ஆறு மாதம் பிரித்துவைத்தது. ஆறு மாதம் கழிந்தாலும் கடைசியில் தாலியை விற்றுத்தான் நிலத்தைப் பதிவு செய்தார். ‘கல்லப் போட்டு எடுத்துத் தர்றன்’ என்று சொன்னதோடு சரி. எத்தனையோ முறை கடலையும் போட்டார். எள், கொத்தமல்லி என்று எவ்வளவோ தானியங்களை விற்றார். பணம் சேர்த்தார். நிலம் சேர்த்தார். ஆனால், பெண்டாட்டிக்குத் தாலி மட்டும் வாங்கிப் போடவில்லை. சாகும்போதுகூட தன்னுடைய புருசனைத் திட்டிக்கொண்டேதான் கிழவரின் அம்மா செத்தாள். தன்னுடைய அம்மா சாகும்போது சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்ததும் கிழவருக்குக் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
கிழவருடைய அப்பா செத்தபோது கருமக் காரியச் செலவுக்குப் பணல்லாமல் திண்டாடியபோதுகூட நிலத்தைப் போக்கியமோ, அடமா னமோ கிழவர் வைக்கவில்லை. அதற்கு அவருடைய மனம் இடம் தர வில்லை. மூன்று மகள்களின் கல்யாணச் செலவுக்குக்கூட அவர் நிலத்தை விற்க மட்டுமல்ல, அடமானம்கூட வைக்கவில்லை. இரண்டு வருசத்திற்கு முன்புகூட கால் காணி நிலம் வாங்கினார். இன்னும் மூன்று நான்கு வருட விளைச்சலை வைத்துக் கால் காணியோ, அரைக் காணியோ வாங்க வேண் டும் என்று நினைத்துக்கொண்டிருந்தார். அதற்காகக் காட்டில் கடுமையாக வேலை செய்தார். அவருடைய ஆசையில் நெருப்பை வைப்பதற்காக எமன் மாதிரி இப்போது ஊருக்குள் கம்பனிக்காரன் வந்திருக்கிறான். நிலத்தை விற்காமல் இருப்பதற்குப் பெரிய ஆயுதமாக நம்பியிருந்தது மூன்று மகள் களைத்தான். ஆனால், அவர்கள் ஒன்றுசேர்ந்தாற் போலக் கிழவருடைய காலை வாரிவிட்டுவிட்டார்கள். ‘அண்ணன் சொல்றதுக்கு எதுத்துப் பேசுறதா? அண்ணனவிட எங்களுக்குப் பெரிய சொத்து ஒலகத்திலெ இருக்கா? அண்ணனுக்கு நல்லது கெட்டது தெரியாதா? பொட்டச்சிவோப் போயி ஆம்பளக்கிப் புத்தி சொல்றதா?’ என்று சொல்லிக் கிழவருடைய முகத்தில் கரியைப் பூசிவிட்டார்கள். ராமசாமியோடு சேர்ந்து கொண்டு ராணியும் நிலத்தை விற்றே தீர வேண்டும் என்று ஆடுகிறாள். ஊர்க்காரர்களைக் காரணம் காட்டி, பக்கத்து நிலத்துக்காரர்களைக் காரணம் காட்டிப் பார் வதியும் ராமசாமியோடு சேர்ந்துகொண்டு அவன் சொல்வதுதான் சரி என்பதுபோல் பேசுகிறாள். தன்னுடைய பேச்சு மட்டும் எப்படி மேவும்? ‘சங்கிலி எடுத்துப் போடுறன்’ என்று ராமசாமி தங்கைகளைச் சரிக்கட்டிய விதம்தான் கிழவருக்கு ஆச்சரியமாக இருந்தது. சங்கிலி எடுத்துப் போடு கிறேன் என்று ராமசாமி பார்வதியையும் ராணியையும் சரிக்கட்டியிருப்பானோ என்று சந்தேகப்பட்டார். ‘வௌயுற நெலத்த வித்துக் காதுலயும் கழுத்துலயும் தங்கத்த மாட்டிக்கிறதால என்னா வரும்? தங்கம் வவுத்துப் பசிய போக்கிடுமா? தங்கத்தத்தான் திங்க முடியுமா? அயிவுறப் புள்ளிவு ளுக்குத் திங்கிறதுக்கு எதெக் கொடுக்க முடியும்? எல்லாரும் ஒரு பரமாப் போறாங்களே. நாந்தான் தப்புப் பண்றனா? வவுறு காயாம சோறு திங் கிற ஜீவனத்திலெ வேட்டு வைக்கறதுக்கு வர்றானுவளே, அவனுவோ நாசமத்துப்போவக் கூடாதா?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டார் கிழவர். நிலத்தை விற்பதால் நடக்கக் கூடிய காரியங்கள் குறித்துத் தொடர்ந்து யோசிக்க ஆரம்பித்தார்.
‘அம்மா சாப்புடக் கூப்புட்டுது’ என்று சொல்லிக் கமலா வந்து கிழ வரைக் கூப்பிட்டாள். ‘போம்மா வர்றன். மொதல்ல நீ போயி சாப்புடு’ என்று சொல்லி அவளை அனுப்பினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராணி ‘சண்டன்னா, சோறு சாப்புடாம படுத்துக்குவாங்களா? வா, வந்து சோத்தச் சாப்புடு. ஒன்னோட வீறாப்பயெல்லாம் எதுக்குச் சோத்துக்கிட்டெ காட்டுற? ஒன்னெ மாரியேதான ஒம் புள்ளெயும் இருக்கும், ஊருக்கு அடங்காம’ என்று சொல்லிச் சாப்பிடுவதற்காகப் பல முறைக் கிழவரைக் கூப்பிட்டுப் பார்த்தாள். கிழவர் வாயைத் திறக்காததால் சலித்துப்போய் வீட்டுக்குள் போய்விட்டாள். தெருப் பக்கமிருந்து வந்த பார்வதி ‘அவ எத்தன மொற சொல்றா? போயி சோத்தத் தின்னா என்னா கேடு வந்துடும்? வயசி ஆவஆவத்தான் கெயவனுக்கு மாப்புள்ளெ முறுக்கு ஏறு றாப்ல இருக்கு. எத்தனை நாளக்கி இந்த வீறாப்புல கெடப்ப? இஷ்டப் பட்டா கையெயித்துப் போடு, இல்லாட்டி வுட்டுட்டுப் போ. யாரு ஒன் னெத் தூக்குலப் போடப்போறா? எதுக்காக வவுத்தக் காயப்போடுற? வவுத்துப் பசிக்குத் தெரியுமா, காடு போவப்போவுதின்னு?’ என்று கேட்டுச் சத்தம் போட்டாள். பெண்டாட்டியைப் பறிகொடுத்த மாதிரி கிழவர் உட் கார்ந்திருந்தாரே தவிர, ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் தன்னைத் திட்டுகிறாள் என்பதுகூட அவருக்கு உறைக்கவில்லை. அவருடைய மனம் பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடந்தது. அதிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. ‘சாப்புட வா’ என்று சொல்லிச்சொல்லிப் பார்த்துச் சலித்துப்போன பார்வதி ‘குண்டி காஞ்சாத்தான் புத்தி வரும்’ என்று சொல்லிவிட்டுக் கடுகடுப்புடன் வீட்டுக்குள் போனாள்.
சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்த கமலா ‘சாப்புட வா தாத்தா’ என்று சொல்லிப் பல முறை கூப்பிட்டுப்பார்த்தாள். கிழவர் அசைந்து கொடுக்காததால் கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள். அவளுடைய தொந்தரவைத் தாங்க முடியாமல் ‘வவுறு சரியில்லம்மா. நீ போயி சாப்புட்டுட்டு படு சாமி’ என்று சொல்லி அவளைச் சமாதானம் செய்து அனுப் பினார். அப்போது திண்ணையில் உட்கார்ந்திருந்த பார்வதி ‘நாப்பது அம்பது வருசமா வராத வவுத்துக் கோளாறு புதுசா இன்னிக்கித்தான் வந் திருக்கா? நெசமாலுமே வவுத்துக் கோளாறு வரணுமின்டா கடவுளே’ என்று சொன்னாள்.
பார்வதி சொன்னது எதுவும் கிழவருடைய காதில் விழவில்லை. அவருடைய நினைவும் மனமும் காட்டிலிருந்தது. பத்துப் பதினோரு வய துக்கு மேல் என்றாவது காட்டுக்குப் போகாமல் இருந்திருக்கிறோமா என்று யோசித்துப்பார்த்தார். அப்படிப்பட்ட நாள் ஒன்றுகூட அவர் நினைவுக்கு வரவில்லை. காட்டுக்கு என்று போக ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து இன்றுவரை காலைச் சோறு மதியச் சோறு எல்லாமே காட்டில் தான். பொங்கல், தீபாவளிகூட அவருக்குக் காட்டில்தான் ஓடும். கல் யாணம், சாவு, விசேசம் என்று எங்காவது போக வேண்டும் என்றால் அவற்றுக்கெல்லாம் பார்வதியைத்தான் அனுப்புவார். மீறிப் போனலும் போன வேகத்திலேயே திரும்பி வந்துவிடுவார். வெளியூர் என்று எங்காவது போனால் திரும்பி வரும்போது நேராக வீட்டுக்கு வராமல் காட்டுக்குத்தான் போவார். வெளியூருக்கு என்று போய் இதுவரை ஒரு இரவுகூடத் தங்கியது கிடையாது. காட்டிற்குப் போக வேண்டுமே, காட்டிற்குப் போய் வேலை செய்ய வேண்டுமே என்று ஒரு நாள்கூட அவர் சுணங்கியதில்லை. ராத்திரி தூங்கி விட்டுக் காலையில் காட்டுக்குப் போனவுடன் முதல் வேலையாகக் காட்டை ஒருமுறை சுற்றிவந்து பார்ப்பார். அதே மாதிரி சாயங்காலம் வீட்டுக்குக் கிளம்பும் போதும் காட்டை ஒரு முறை சுற்றிப்பார்த்துவிட்டுதான் வருவார். இதற்காகப் பார்வதி கிழவரைத் திட்டாத நாளில்லை. ‘ஒங் காட்டெ எந்தத் திருடனும் தூக்கிக்கிட்டுப் போவ மாட்டான்’ என்று எத்தனையோ முறை கோபமாகவும் கேலியாகவும் சொல்லிப்பார்த்துவிட்டாள். ஆனால் கிழவர் அந்த ஒரு விசயத்தில் மட்டும் மாறவேயில்லை. நிலத்தை விற்றுவிட்டால் எங்கே போய் உட்கார்ந்திருப்பது? நாள் முழுக்க வேலை செய்யாமல் எப்படி உட்கார்ந்திருப்பது? ‘திங்கிற சோறு செரிக்க வாணாமா? அதுக்கு வேல செய்ய வாணாமா?’ என்ற கேள்விகள் திரும்பத் திரும்ப வந்து அவரை இம்சித்தன.
சாலை ஓரமாக நிலம் வைத்திருந்தவர்கள் எல்லோருமே நிலத்தைக் கொடுத்துவிட்டார்கள். அந்தக் குடும்பத்து ஆட்களெல்லாம் என்ன செய் வார்கள்? கம்பனிக்காரன் கொடுக்கிற பணம் எத்தனை காலத்திற்கு இருக் கும்? சோற்றுக்கு என்ன செய்வார்கள்? ஆண்களைவிடப் பெண்கள்தான் நிலத்தை விற்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். உப்பு வாங்க, மிளகாய், புளி, மிளகு, சீரகம் வாங்க என்று கால் படி, அரைப் படி தானியத்தைக் கொடுத்துப் பிள்ளைகளைக் கடைக்கு நூறு முறை அனுப்புவார்கள். இனிமேல் எதைக் கொடுத்து வாங்குவார்கள்? ஊக்கு, மை டப்பி, கொண்டை ஊசி, குஞ்சம், சவுரி முடி, அரைஞாண்கயிறு என்று குறத்திக ளிடம் வாங்கும்போது எதைக் கொடுப்பார்கள்? வரகு, சோளம், நெல் என்று போட்டு ஐஸ் வாங்குகிற பிள்ளைகள் இனிமேல் எதைக் கொடுத்து ஐஸ் வாங்குவார்கள்? ‘பத்துக் காணி நெலம் வச்சியிருந்தவன், வண்டி மாடு வச்சியிருந்தவன், வருசத்துக்கு ஐம்பது அறுவது மூட்டெ நெல்லு அடிச்சவன், எயுவது, எம்பது மூட்டெ வரவு, சோளமின்னு அடிச்சவன் இன் னொருத்தங்கிட்டெ போயி ஒரு மரக்கா வரவுக்காக கூலி வேல பாக்க முடியுமா?’ என்று முனகிய கிழவருக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. ‘சனங்களுக்குக் கிறுக்குதான் புடிச்சியிருக்கு. கம்பனி மருந்து மாயத்தத்தான தரும். சோறு தருமா? பறயன் மூட்டு கருமாதியிலெ பாப் பான் வந்து அரிசி எடுத்துக்கிட்டுப் போற கதெ மாரியில்லெ இருக்கு’ என்று வாய்விட்டே சொன்னவர், மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார்.
கிழவருக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து ஒரு நாள்கூடக் கோவிலுக்கு, திருவிழாவுக்கு, விசேசங்களுக்குப் போக வேண்டும், வீட்டில் படுத்திருக்க வேண்டும் என்று ஆசை வந்ததே இல்லை. அவருடைய ஆசையெல்லாம் காட்டிற்குப் போக வேண்டும், வேலை செய்ய வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக மகசூல் எடுக்க வேண்டும், பயிரை ஆடுமாடு மேயக் கூடாது, அதில் எலிவெட்டு இருக்கக் கூடாது என்பதுதான். அவருடைய ஆசை இதுவரை வீண் போனதில்லை. நிலம் போய்விட்டால் போவதற்கு மட்டுமல்ல, வேலை செய்வதற்கு மட்டுமல்ல, ஆசைப்படுவதற்குக்கூட ஒன்றுமிருக்காது. பயிரிட, அறுவடை செய்ய, அதற்கடுத்துப் பயிரிட, அறுவடை செய்ய என்று காத்திருக்கவும் இனிமேல் முடியாது என்று நினைத்தவர் ‘சாவுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கணும்’ என்று சொல்லிக் கொண்டார். திரித்திருந்த கயிற்றுச் சுருணைகளையும், எஞ்சிய நெல்தாள் கட்டுகளையும் எடுத்துத் திண்ணையில் வைத்தார். மாடுகளைப் போய்ப் பார்த்தார். சிதறிக் கிடந்த சோளத் தட்டைகளை மாட்டின் வாய்க்கு அருகில் தள்ளிவிட்டார். ஒரு மாட்டைத் தடவிக் கொடுத்தார்.
திண்ணையில் போய் உட்கார்ந்தவர், அப்படியே சுருண்டு படுத்துக்கொண் டார்.
‘நேரமாவறது தெரியிலியா? வந்து சோத்தத் தின்னுப்புட்டுப் போயி படு. ராம்டியும் வௌக்கு எரியணுமா? கரண்டுக்காரனுக்கு யாரு தெண்டம்கட்டுறது? நேரத்திலெ படுத்தாத்தான காலயிலெ போயி நெல்லு சூடு அறுக்க முடியும்? ஊரே அரவடங்கிப் போயிடிச்சி’ என்று சொல்லிக் கிழ வரைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தினாள் பார்வதி. எவ்வளவுசொல்லியும் கிழவர் கட்டுப்படவில்லை. பிடிசாதனையாகப் படுத்திருந்தார். சொல்லிச்சொல்லி அலுத்துப் போன பார்வதி, ‘இப்பத்தான் மாப்புள முறுக்குக் காட்டுறியா? ஊருல எல்லாருக்கும் உள்ளது நம்பளுக்கு. ஜென்ம சனி புடிச்சாப்ல எங்கிருந்தோ கம்பனிக்காரன் வந்துட்டான். அதுக்கு யாரு பொறுப்பு? அதுக்காக யாரு மேல கோவப்படுறது? நம்ப காலத்திலேயே இன்னும் என்னென்ன பாக்கணுமின்னு இருக்கோ, ஆரு கண்டா?’ என்று சொல்லிக் கிழவரைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப்போய் ‘கடைசி யில ஊருல, நாட்டுல நடக்கறதயெல்லாம் நீதான் தடுத்து நிறுத்தப் போறியா?’ என்ற கேட்டுவிட்டு சர்ரென்று வீட்டுக்குள் போய்விட்டாள்.
வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்த ராமசாமியிடம் ‘இம்மாம் நேரம் எங்க போயிட்டு வர்ற? நேரத்திலே வந்து சோத்தத் தின்னுப்புட்டுப் போயி ஒன்னோட வேலயப் பாக்கக் கூடாதா? பொயிதினிக்கும் காட்டுல வேல செஞ்சிப்புட்டு வந்து, விடியவிடிய ஒங்களுக்காக ஒக்காந்திருந்தா விடிஞ்சிபோயி பொட்டச்சி காட்டுல எப்பிடி வேல செய்வா? இதெல்லாம் ஆம்பளக்கி ஒறெக்க வாணாம்? அந்த மனுசன்தான் ஊருக்கே வரப்போற வெள்ளத்தத் தான் மட்டும்தான் தடுக்கப்போறன்னு சொல்லிக்கிட்டுப் படுத்துக்கெடக்குறான். ஒனக்கென்ன நோக்காடு வந்துச்சி? இந்த வேப்பூரான் மவ சுடுகாடு போயி சேந்த பின்னாலதான் அப்பனுக்கும் மவனுக்கும் சேதி புரியும். எனக்கு மட்டும் ஒடம்ப வலிக்காது? எனக்கு மட்டும் ஒடம்பு இரும்பாலயா செஞ்சி வச்சியிருக்கு? எனக்கு மட்டும் கைகாலு அசந்துபோவாது?’ என்று சொல்லிக் கத்த ஆரம்பித்தாள்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த ராமசாமி ‘இப்பியும் போயி விசாரிச்சன். நெலத்தக் கொடுக்கிறதுதான் நல்லதுன்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்கு என்னா செய்யுறதின்னே புரியலெ. ரோட்டோரமா இருந்த எல்லா நெலத் தயும் வாங்கிப்புட்டான். இன்னம் மூணே பேருதான் பாக்கி. மத்த ரெண்டு பேரும் இப்பத்தான் பணத்த வாங்கியாந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் நாளக்கி கையெயித்துப் போடப்போறாங்க. இம்மாம் நெலத்தயும் வாங்கி என்னாத்தான் பண்ணப் போறானோ, கேக்குற வெலயக் கொடுக்கிறான். ஒரு ஆளுகிட்ட இம்மாம் பணம் எப்பிடித்தான் இருக்குதோ. நெலத்துக்கே இம்மாம் பணம் போட்டா கம்பனி கட்டெ, சம்பள ஆளுக்கு சம்பளம் கொடுக்கிறதுக்கு எம்மாம் பணம் வேணும்? இம்புட்டுப் பணம் வச்சியிருக் கிறவன் எப்பிடி இருப்பான்னே தெரியல’ என்று சொல்லிச் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தான்.
‘பைபையா இம்மாம் பணத்த வாங்கி சனங்க என்னாதான் பண்றாங்க?’
‘ஊடு வாசன்னு கட்டுவாங்க. காய்கறின்னு வாங்கித் திம்பாங்க.’
‘எத்தன காலத்துக்கு அப்பிடித் திங்க முடியும்?’
‘தெரியலெ. ஒலகமே இப்ப அப்பிடித்தான் இருக்கு. துணி கட்டுறதும், திங்கிறதும், பேளுறதுமா இருக்கு.’
‘பணம் வாங்குனா நீ என்னாப் பண்றதா யோசன?’
‘மொதல்ல ஒரு டி.வி. வாங்கணும். அப்புறம் அங்க இங்கப் போவ வர ஒரு வண்டி வாங்கணும். அப்புறமா இந்த ஊட்டெக் கொஞ்சம் சரி பண்ணணும். தங்கச்சிவுளுக்கு ஆளுக்கொரு சங்கிலி வாங்கிப் போடணும்.’
‘வௌயுற காட்டெ வித்துத் தூங்குறதுக்கு ஊடு கட்டறன்ங்கிற. சரி, எனக்கு ஒண்ணும் இல்லியாடா?’
‘சாவப்போற ஒனக்கு எதுக்கும்மா நககிக எல்லாம்? குமரிப் பொண்ணா நீ?’ சாப்பிட்டுக்கொண்டே ராமசாமி ஊரில் யார்யார் எவ்வளவு நிலம் விற்றார்கள், யார்யாருக்கு எவ்வளவு பணம் வந்தது, நகை வாங்கிப்போட வில்லை என்று யார்யாருடைய வீட்டில் சண்டை நடக்கிறது என்பதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். நிலத்திற்குக் கையெழுத்துப் போடும்போது தனக்கு ஒரு வேலை கேட்க வேண்டும் என்று சொன்னான். அதிகம் படிக்காமல் விட்டதற்காகத் தன்னையே நொந்துகொண்டான். நிலம் கொடுத்த வீடுகளில் யாருமே அதிகம் படிக்கவில்லையே என்று சொல்லி வருத்தப் பட்டான். நிலம் கொடுத்தவர்களுக்கென்று வேலை கொடுத்தால் வாட்ச் மேன், பியூன் வேலையும், கூட்டுகிற, பெருக்குகிற, தண்ணீர் எடுத்து வரு கிற, மணியடித்தால் கதவைத் திறந்துவிடுகிற வேலைகளும்தான் கொடுக்க முடியும் என்று ஆதங்கப்பட்டான். திடீரென்று உணர்ச்சிவசப்பட்டவன் மாதிரி ‘நம்ப காட்டெச் சுத்தியிருக்கிறவங்க விக்காட்டி நம்பளும் பேசாம இருந்திருக்கலாம். இப்ப வேற வயி இல்லெ. நம்ப ஊரு தண்ணியும் மண் ணும்தான் நல்லா இருக்காம். அதனாலதான் கேக்குற வெல கொடுத்து வாங்குறானுவளாம். கையெயித்துப் போடுறதப் பத்தி நெனச்சாலே மனசெல்லாம் பகீர்ன்னு ஆயிப்போவுது. வேணாமின்னு வுடவும் முடியல. ஊரே நாகம் புகுந்த ஊடு மாரி ஆயிப்போச்சி’ என்று சொல்லிவிட்டுக் கையைக் கழுவினான். பிறகு ‘அப்பா என்னம்மா சொல்றாரு?’ என்று கேட்டான்.
‘அதெ அந்தாளுகிட்டெ நீயே கேட்டுக்க.’
‘நாளக்கிதான் கடேசித் தேதின்னு சொல்லிப்புட்டானுவோ. அதனால காலயிலியே வந்து மரியாதயா கையெயித்துப் போட்டுட்டுப் பணத்த வாங் கச் சொல்லு. இல்லேன்னா தெக்குத் தெரு மூக்கன் மவன், அவனோட அப்பன அடிச்சி இயித்துக்கிட்டுப் போயி கையெயித்துப் போட வச்ச மாரி ஆயிப்புடும்.’
‘என்னடா சொல்ற?’
‘உள்ளதததான் சொல்றன். நெலத்த வித்து என்னோட பொண்டாட்டி புள்ளக்கி நக எடுத்துப் போடுறதுக்கா அலயுறன்?’
‘மொல்லமாப் பேசுடா. அந்தாளுக்குக் கேக்கப் போவுது.’
‘கேட்டா கேக்கட்டும். மூக்கன் மவன் செஞ்ச மாரி செய்யுறதுக்கு வயி வக்காத மாரி நடந்துக்கிட்டா சரி.’
பேசாதே என்பதுபோல் வாயில் கையை வைத்து மூடிக் காட்டுவிட்டு அவசரமாக எழுந்து போய்க் கதவைச் சாத்தினாள் பார்வதி. கதவைச் சாத்திய பிறகு பார்வதியும், ராமசாமியும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது கிழவருக்குக் கேட்கவில்லை. ஆனால், கதவைச் சாத்துவதற்கு முன்பே கிழவரின் சப்தநாடியும் அடங்கி, உள்ள உயிரும் போய்விட்டது. ‘மூக்கன் மவன் செஞ்ச மாரி செய்ய வைக்காதீங்க’ என்று ராமசாமி சொன்ன வார்த்தைகள்தான் கிழவரை நெருப்புக்கட்டி மாதிரி சுட்டுப்பொசுக்கிற்று. அது மாதிரி நடக்குமோ என்று சந்தேகப்பட்டவர், சட்டென்று எழுந்து உட்கார்ந்தார். எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டாக இருந்தது. ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடியாமல் எழுந்து வெளியே வந்தார்.
தெருவில் எந்த அரவமும் இல்லை. ஊரே குடியோடிப்போய்விட்ட மாதிரி அவ்வளவு அமைதியாக இருந்தது. அந்த அமைதி ஊருக்கு வர விருக்கும் பெரிய கெடுதியை முன்கூட்டியே எச்சரிக்கை செய்வது மாதிரி இருந்தது. காரணமின்றித் தெருமுனைக்கு நடந்தார். பிறகு திரும்பிவந்து திண்ணையில் படுத்தார். தூக்கம் வருவதற்காக என்னென்னவோ செய்து பார்த்தார். புரண்டுபுரண்டு படுத்தாரே தவிர, தூக்கம் வரவில்லை. நேர மாகநேரமாகத் தூக்கம் வருவதற்குப் பதிலாகப் பழைய நினைவுகளும் சம் பவங்களும்தான் நினைவுக்கு வந்தன. அந்த நினைவுகளிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. அதிலும் ‘நான் செத்தா என்னெ என்னோட கொல்லியிலேயே கொண்டுபோயி பொதச்சிப்புடு’ என்று தன்னுடைய அப்பா சொன்னதையும், அவர் சொன்னது மாதிரியே, அவர் இறந்தபோது சுடுகாட்டில் கொண்டுபோய்ப் புதைக்காமல் காட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்ப் புதைத்ததோடு, பிணக்குழி மேட்டில் ஒரு மாங்கன்றை நட்ட தையும் நினைத்தார். அந்த மரம் இப்போது கால் காணி அளவுக்குப் படர்ந்து வளர்ந்திருக்கிறது. வருசத்திற்கு முப்பது நாற்பது மூட்டைக் காய் காய்த்துக்கொண்டிருக்கிறது. தான் செத்தால் தன்னுடைய பிணத்தையும் மாமரத்திற்குக் கீழேதான் புதைக்கச் சொல்ல வேண்டும், பிணக் குழி மேட் டில் எலுமிச்சைக் கன்றோ மாங்கன்றோ நட்டுவைக்கச் சொல்ல வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே கிழவருக்கு ஆசை இருந்தது. அதுதான் அவருடைய ஒரே ஆசையாகவும் இருந்தது. அவருடைய வாழ்நாளில் ஆசைப் பட்ட ஒரே விசயமும் அதுதான். கம்பனிக்காரன் நிலத்தை வாங்கிவிட்டால் மாமரத்தை விட்டுவைப்பானா? இவருடையப் பிணத்தைப் புதைப் பதற்கு, பிணக்குழி மேட்டில் ஒரு செடியை வைக்கத்தான் விடுவானா என்று நினைத்தவருக்கு நாக்கு உலர்ந்துபோயிற்று. நிலம்பற்றி அவர் வைத்திருந்த நம்பிக்கைகள் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன. ‘உசுரக்கூட அம்மாம் பெருசா நெனச்சதில்லடா சண்டாளனுங்களா. யாரோட போறாத காலமோ இடி வந்து எந் தலயில விய்யிது. குடும்பத்துக்கு வெனவந்து சேந்து போச்சி’ என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார். பிறகு படுத்திருக்க முடியாமல் எழுந்து வெளியே வந்தார்.
செல்வம் மோட்டார் சைக்கிளில் தெருவே அதிரும்படியான வேகத்தில் போனதைப் பார்த்த கிழவருக்குப் பகீரென்றது. மறுநொடியே நல்லமுத்து ஆசிரியர் பற்றிய நினைவு வந்தது. நல்லமுத்து வேலையிலிருந்து ஓய்வு பெற்று நான்கு மாதம்கூட ஆகியிருக்காது. ஓய்வுபெற்றதிலிருந்தே அவ ருக்கும் செல்வத்துக்கும் நாள் தவறாமல் போர்க்களம் நடக்கும். ‘நான் ஒருத்தன்தான் இருக்கன். எனக்குக் கொடுக்காம எதுக்குப் பணத்த பேங்குல போட்டுவச்சியிருக்க?’ என்று கேட்டு தினம்தினமும் சண்டைபோட் டாலும் செல்வத்தினுடைய குணம் அறிந்து, ஓய்வுபெற்ற பிறகு வந்த பணத்திலிருந்து ஆயிரம், ஐநூறுதான் நல்லமுத்து கொடுப்பார். மொத்தத் தையும் எடுத்துக்கொடு என்று நடந்த சண்டையில் ஒருநாள் செல்வம், நல்லமுத்துவை அப்பன் என்றுகூடப் பார்க்காமல் செருப்பால் அடித்துவிட்டான். சம்பவம் நடந்த மறுநாள் காலையிலேயே வங்கியிலிருந்த எல் லாப் பணத்தையும் எடுத்துக் கொடுத்துவிட்டுப் போனவர்தான். இரண்டு நாள் ஆள் ஊருக்கே திரும்பவில்லை. மூன்றாம் நாள்தான் சாராயத்தில் விசத்தைக் கலந்து குடித்துவிட்டுத் தொழுதூர் ஆற்றில் படுத்தவர் அப்படியே செத்துவிட்டார் என்ற செய்தி தெரிந்தது. அவருடைய கருமகாரியம் கூடப் போன வெள்ளிக்கிழமைதான் நடந்தது. ‘அப்பன் செத்த கவலகூட இல்லாம இப்பிடிக் குடிச்சிப்புட்டு நடுராத்திரியில வர்றானே’ என்று சொன்னவருக்கு நாளைக் காலையில் கையெழுத்துப் போடப் போக வில்லை என்றால் மூக்கன் மகன் செய்தது மாதிரி, நல்ல முத்து மகன் செய்தது மாதிரி, ராமசாமியும் செய்துவிடுவானோ என்ற எண்ணம் வந்ததும் அவருடைய உடம்பு நடுங்க ஆரம்பித்தது. படபடப்பு கூடிற்று. ஒரு காரணமுமின்றித் தெரு முனைக்கு நடந்தார். பிறகு திரும்பிவந்து வாசலில் நின்று, இருண்டிருந்த வானத்தைப் பார்த்தார். ‘கம்பனி ஆரம்பிக்கிற வனுவோ, ரோடு போடுறவனுவோ வேற எங்கியாச்சும் போயி செய்யக் கூடாதா, பண்ணக் கூடாதா? எம் பாவத்திலே வந்துதான் காயறுக்கணுமா? பாதி போனாக்கூட பரவாயில்லெ. நறுவுசா போவப்போவுதே. போறதுக்கு, வர்றதுக்கு எடமில்லாம என்னெ ஊனம் பண்ணி மொடக்கிப் போடப்பாக்குறாங்களே. அதுக்கு எங் கண்ணெ ரெண்டயும் புடிங்கிப்புடலாமே’ என்று வாய்விட்டுப் புலம்பினார். ‘நானு யாரோட வம்புதும்புக்கும் போனதில்லெ. இன்னொருத்தன் சொத்த அபகரிக்க நெனச்சதில்லெ. யாரோட பண்டத்துக்கும் ஆசப்பட்டதில்லெ. யாருக்கும் கெடுதல் செஞ்சதில்லெ. காடு உண்டு, நான் உண்டுன்னு இருந்தவன்கிட்டெ எதுக்கு வர்றாங்க? அவனுக்கும் எனக்கும் என்னாப் பகெ? எதுக்கு எம் பொருள சூறயாட வர்றான்?’ என்று முனகியவருக்கு நிற்க முடியவில்லை. அதே நேரத்தில் உட்காரவும் முடியவில்லை. என்ன செய்வது என்ற கேள்விதான் அவ ரைப் போட்டுக் குடைந்தெடுத்தது. கடன் கொடுத்தவன் மாதிரி நாள் குறிப்பிடுகிறார்கள். நாளைக்குத் தான் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்தார். பிடிவாரண்ட் கொண்டு வந்த அமீனாவுக்குப் பயந்து கொண்டு ஓடி, மறைந்துகொள்வது மாதிரி எத்தனை நாளைக்கு ஓடி ஒளிய முடியும்? அப்படி ஓடினால் நிலம் கைமாறாமல் இருக்குமா? ஊரில் என்ன பேசிக்கொள்வார்கள்? சந்நியாசி மாதிரி போய்விடலாமா என்று யோசித்தவருக்கு அந்த எண்ணத்தால் சிறிது நம்பிக்கையும் தெம்பும் வந் தது மாதிரி இருந்தது. அந்த நம்பிக்கையும் தெம்பும் சிறிது நேரம்கூட நிலைக்கவில்லை. சந்நியாசியாகப் போனால் பிச்சை எடுத்து அல்லவா சாப்பிட வேண்டும்? ‘நான் என் வயசிக்கு இதுவர ஒருத்தன் ஊட்டுலயும் கை நனச்சவன் கெடயாது. பச்சத்தண்ணீகூடப் பல்லுல பட்டதில்லெ’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். மறுநொடியே ‘ஊட்டெ வுட்டு தேசாந்திரம் போனா யாசகம் எடுத்துத்தான வவுறுவளக்கணும்? யாசகம் எடுத்துத் தின்னுதான் இந்த உசுர வச்சியிருக்கணுமின்னா அதுக்குத் தனக் குத்தானே மாச்சிக்கிலாமே. கெணத்துத் தண்ணிக்கி பயந்துகிட்டுப் போயி நெருப்புல வியிந்த மாரி ஆயிப்புடுமே’ என்று சொன்னவருக்கு ஒரு தெளிவு வந்தது மாதிரி இருந்தது. அடுத்த நொடியில் அவருக்கு உடம்பில் லேசாகத் தெம்பு ஏறியது மாதிரி இருந்தது. மாடுகளிடம் போனார். ஒவ்வொரு மாடாகத் தடவிக் கொடுத்தார். தண்ணீர்த் தொட்டியைப் பார்த்தார். பக்கத்தில் கிடந்த மர உரலைப் பார்த்தார். அப்படியே ஆடுகள் கட்டியிருந்த இடத்திற்கு வந்தார். ஒவ்வொரு ஆட்டையும் புதிதாகப் பார்ப்பதுபோலப் பார்த்தார். ஏதோ ஒரு எண்ணத்தில் வாசலைத் தாண்டிக் கதவுவரை வந்த வர், கதவைத் தட்டாமல் சிறிது நேரம் அப்படியே நின்றார். கமலாவைக் கூப்பிட்டுப் பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆனால், கூப்பிடவில்லை. நெல் தாள் கட்டுவதற்காகக் காலையில் திரித்துவைத்திருந்த பழுதைக் கயிற் றுச் சுருணையை எடுத்துக்கொண்டு சத்தம் காட்டாமல் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
இமயம்