இமயம்
இலக்கியக் களஞ்சியம்

தேடல்எழுத்துலகைத் தேடுங்கள்.

நூல்கள் · சிறுகதைகள் · கட்டுரைகள் · நேர்காணல்கள்

உண்மைக் கதை
இமயம் · சிறுகதைகள்

உண்மைக் கதை

வாசிப்பு முறை
கதைக்குள் நுழைய
இமயம்

உண்மைக் கதை

வாசிப்பு
19

“இங்க வள்ளலார் அனாத இல்லம் எங்க இருக்கு?” செல்வம் ஆட்டோக்காரனிடம் கேட்டான்.

“கவர்மண்டு ஆஸ்பத்திரி தெரியுமா?” ஆட்டோக்காரன் திரும்பிக் கேள்வி கேட்டான்.

“தெரியும்.”

“கவர்மண்டு ஆஸ்பத்திரியத் தாண்டி நேரா மேற்க போ. நீ சொல்ற எடம் வந்துடும்.”

“ஆட்டோ வருமா?”

“அறுபது ரூபா ஆவும். ஏறுங்க போவலாம்” ஆட்டோக்காரன் சொன்னான்.

“பரவாயில்ல. மேல பத்து ரூபாக்கூட தர்றன்” என்று சொன்ன செல்வம், பஸ் ஸ்டாண்டு பக்கம் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்த லீலா வதியிடம் “வா. வந்து ஆட்டோவுல ஏறு. போவலாம்” என்று சொல்லிவிட்டு, லீலாவதி என்ன சொல்கிறாள் என்றுகூட கேட்காமல் ஆட்டோ வுக்குள் ஏறப்போனான்.

“நடந்து போவலாம்.”

ஆட்டோவில் ஏறாமல் திரும்பிப்பார்த்து “என்னம்மா சொல்ற? பணம் போனா போவுது. வா. ஏறு. ஆட்டோவுல போனா சீக்கிரம் போயிடலாம்” என்று சொல்லிவிட்டு, செல்வம் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தான்.

“கல்யாணத்துக்காப் போறம்? முகூர்த்த நேரம் முடியுறதுக்குள்ளார போவணுமின்னு வேகமா போறதுக்கு? நான் வன வாசம்தான போறன்.”

செல்வத்தின் முகம் செத்துப்போயிற்று. உடனே ஆட்டோவை விட்டுக் கீழே இறங்கி லீலாவதிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு “வெயிலா இருக்கும்மா.” என்று சொன்னான்.

“நான் அவ்வளவு வேகமாப் போயி என்னா செய்யப்போறன்?”

“விசாரிக்கத்தான போறம்? ஒடனே தங்கவாப்போற? வா. ஆட்டோவுல போயிடலாம்.” கெஞ்சுவது மாதிரி சொன்னான்.

“நான் சீக்கிரம் போவணுமா? நான் சுடுகாட்டுக்குப் போறதில ஒனக்கு அவ்வளவு ஆசயா?”

அவள் கேட்ட விதம் செல்வத்தைக் கோபம் கொள்ளவைத்தது. அடுத்த வார்த்தை பேசத் தெம்பு இல்லாமல் செய்தது. அதனால் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டு ஆட்டோவையும், டிரைவரையும் பார்த்தான்.

“நடந்தே போவலாம்.” சண்டைக்காரனிடம் சொல்வது மாதிரி லீலா வதி சொன்னாள்.

“நான் எதுக்கு சொல்றன்னு புரியுதா? நடக்கிறதுக்குக் கஷ்டமா இருக்கும்னுதான் சொன்னன்.”

“ஒனக்கு அவசரமின்னா நீ வீட்டுக்குப் போ. நான் நடந்தே போறன். நானா விசாரிச்சிக்கிறன். நீ என்கூட வந்தாத்தான் சேத்துக்க மாட்டாங்க. நான் தனியா போனா அனாதன்னு சொல்லிடுவன். நம்புவாங்க.”

செல்வத்துக்குக் கோபத்தால் முகம் சிவந்துபோயிற்று. “நான் ஒண்ணு சொன்னா நீ வேற ஒண்ணாப் புரிஞ்சிகிற.” லீலாவதியைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு ரோட்டைப் பார்த்தான்.

லீலாவதியையும் செல்வத்தையும் மாறிமாறிப் பார்த்த ஆட்டோக்காரன், “ஆட்டோ வேணாமா?” என்று கேட்டான். அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல், “அனாத இல்லத்தில யார வேணுமின்னாலும் சேத்துக்குவாங்களா? பணம் கட்டணுமா? சாதி பாப்பாங்களா?” என்று லீலாவதி அவனிடம் கேட்டாள். லீலாவதியை ஏறஇறங்கப் பார்த்த ஆட்டோக் காரன். பட்டும் படாமலும் சொன்னான் “இலவசம்தான். பணமெல்லாம் கட்ட வேண்டியதில்ல. அனாதயா இருக்கணும்.”

“அனாதையா இல்லன்னா சேத்துக்க மாட்டாங்களா?”

“சேத்துக்க மாட்டாங்க” என்று சொன்ன ஆட்டோக்காரன் “ஆட்டோ வேணுமா? வேணாமா?” என்று கேட்டான்.

“நான் அனாததான். என்னெ சேத்துக்குவாங்களா?”

“போயி கேட்டுப்பாரு” என்று சொன்ன ஆட்டோக்காரன் செல் வத்தின் பக்கம் திரும்பி “ஆட்டோ வேணுமா? வேணாமா?” என்று வேகமாகக் கேட்டான். அவன் வாயைத் திறக்காததால் ஆட்டோக்காரன் வெடுக்கென்று நான்கு ஐந்து அடி தூரம் தள்ளிப் போய் நின்றுகொண்டு வேறு சவாரி பிடிப்பதற்குத் தயாரானான்.

லீலாவதிக்கு சப்பென்றாகிவிட்டது. அனாதை இல்லத்தில் தன்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்களோ என்ற கவலை வந்தது. அதே நேரத்தில் ஆட்டோக்காரன்மீது கோபம் உண்டாயிற்று. “பணம் காசு கொடுக் கிறதவிட இப்ப சனங்களுக்குப் பேசுறதுதான் பெரிய கஷ்டமா இருக்கு.” என்று சொன்னாள். மொட்டையாக ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டுத் தூரமாகப் போய்விட்டானே என்று ஆட்டோக்காரனையே பார்த்தாள். பக்கத்தில் போய் விசாரிக்கலாமா என்று யோசித்தாள். செல்வம் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும்போது எப்படிக் கேட்க முடியும் என்று தயங்கினாள். அப்போது இடித்துவிடுவது மாதிரி பஸ் ஒன்று வந்ததும் பயந்துபோய், பின்னுக்கு நகர்ந்தாள். அதைப் பார்த்த செல்வம் “கொஞ்சம் ஓரமா வாம்மா” என்று சொன்னான்.

“போவம். வா.”

“வெயிலா இருக்கு. அவ்வளவு தூரம் குச்சிய ஊணிக்கிட்டு நீ எப்பிடி நடப்ப? ட்ராபிக்கா வேற இருக்கு. ஆட்டோவுல போயிடலாம்மா.” கெஞ்சுவது மாதிரி கேட்டான்.

“வழிய மட்டும் சொல்லு. நான் போய்க்கிறன்.” லீலாவதி கறாராகச் சொன்னாள். சொல்லிவிட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

செல்வம் தலையில் அடித்துக்கொண்டான். “ஒருத்தர் பேச்ச ஒருத்தர் கேக்காததாலதான் போவக் கூடாத எடத்துக்கெல்லாம் போவ வேண்டி யிருக்கு.”

“நீ வழிய மட்டும் சொல்லு.”

“விதிய மாத்த யாராலயும் முடியாது.” என்று செல்வம் அலுப்புடன் சொன்னான். கோபத்துடன் லீலாவதியைப் பார்த்தான்.

“சீக்கிரம் செத்துப்போறவங்கதான் புண்ணியம் செஞ்சவங்க. நான் புண்ணியம் செஞ்சவ இல்லெ.”

“பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டு என்னம்மா பேசுற?” வெறுப்புடன் கேட்டான்.

“போற எடத்தில என்னா சொல்லப்போறாங்கன்னு தெரியல. அதுவே பெரிய மனக் கொதிப்பா இருக்கு. வா போவம். நடக்கிறது நடக்கட்டும். நான் நெனைக்கிறதுதான் நடக்கணுமின்னு சட்டமா இருக்கு? எனக்கு ஒரு தெய்வமும் தொண இல்லாமப் போயிடுச்சி.” எதிரிலிருந்த அன்னபூரணி ஹோட்டலைப் பார்த்தவாறு சொன்னாள்.

“அம்மா.”

“வர்றதா இருந்தா வா. இல்லாட்டிப் போ” என்று சொன்ன வேகத்தி லேயே நடக்க ஆரம்பித்தாள்.

“அப்படி இல்ல. இப்பிடி.” என்று சொல்லிவிட்டு செல்வம் தலையில் அடித்துக்கொண்டான்.

அவன் காட்டிய பக்கமே நடக்க ஆரம்பித்தாள் லீலாவதி. அவளுக்குப் பின்னால் நடக்க ஆரம்பித்தான் செல்வம்.

குச்சியை ஊன்றிக்கொண்டு லீலாவதி நடப்பதைப் பார்ப்பதற்கு செல் வத்துக்குக் கஷ்டமாக இருந்தது. இடுப்பை வளைத்துவளைத்து, உடம்பைக் கோணிக்கோணி நடப்பதைப் பார்ப்பதற்கு என்னவோ மாதிரி இருந்தது. கால்களை நெளித்துநெளித்து ஒவ்வொரு அடியையும் மெல்லமெல்ல எடுத்து வைத்துதான் அவளால் நடக்க முடியும். பார்ப்பவர்கள் விநோதமாகப் பார்ப்பார்கள். நடக்க முடியாத ஆளை நடத்தி அழைத்துக் கொண்டு போவதற்காக, தெரிந்தவர்கள்தான் என்றில்லை, ரோட்டில் போகிற யார் வேண்டுமானாலும் திட்டுவார்கள் என்ற எண்ணம் வந்ததும் செல்வத்துக்கு லீலாவதியின் மீது கோபம் உண்டாயிற்று. ரோட்டில் போகிற ஆட்களெல்லாம் என்ன நினைப்பார்கள் என்பது அவனுக்குப் பெரும் கவலையாக இருந்தது. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நொண்டிநொண்டி லீலாவதி பித்துப்பிடித்த மாதிரி நடந்துகொண் டிருந்தாள். அவள் நடந்துகொண்டிருந்த விதம் ஏற்கனவே தெரிந்த இடத்துக்குப் போவது மாதிரி இருந்தது. “சொல்றதக் கேட்டாத்தான? ஆட்டோவுல போனா என்னா கேடு வந்துடும்? கிழட்டு முண்டச்சிக்கு என்னா பிடிவாதம்? சனியன்” என்று சொல்லிக்கொண்டு செல்வம் பல் லைக் கடித்தான்.

லீலாவதியின் பிடிவாதம் செல்வத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. புதுப் பெண்ணாக இருந்தாள். மூன்று நாட்களாக சாப்பிடவில்லை. யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. “அனாத ஆசிரமத்துக்குப் போறன்” என் பதையே மந்திரம் சொல்வது மாதிரி சொல்லிக்கொண்டிருந்தாள். காரணம் கேட்டால் பதில் சொல்லவில்லை. கெஞ்சிகெஞ்சிப் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்து வீட்டார்களிடம் சொல்லி லீலாவதியிடம் பேச வைத்தான். தெருவில் இருந்த பலரும் வந்து சொல்லிப்பார்த்தார்கள். யாருடைய பேச்சையும் அவள் கேட்கவில்லை. வெறுத்துப்போய் “இந்த வயசில இம்மாம் புடிவாதமா? போய்தான் தெரிஞ்சிக்கிட்டு வரட்டும். ஒரு வாரம் இருந்து பாக்கட்டும். அப்பத்தான் வீட்டோட அரும தெரியும். சின்ன புள்ளைங்களவிட அதிகமா அடம் புடிச்சா என்னா செய்ய முடியும்? வயசு ஆயிட்டாலே புத்தி கோளாறாயிடுது. குழந்தைகள வச்சிருக்கிறதவிட வயசானவங்கள வச்சிருக்கிறதுதான் இந்தக் காலத்தில பெரிய சிக்கலாஇருக்கு” என்று ஒருவர் தவறாமல் சொன்னார்கள். வேறு வழியில்லாமல்தான் செல்வமும் ஒத்துக்கொண்டான். காலையில் கிளம்பும்போதுகூட “சாப்புடு” என்று கெஞ்சினான். ஒரு நூல் அசையவில்லை. காலையில்கூட சாப்பிடவில்லையே என்ற எண்ணம் வந்ததும் வேகமாக பக்கத்தில் வந்து “ஏதாச்சும் சாப்புட்டுட்டுப் போவலாம். வீட்டுலதான் சாப்புடல. கடயிலியாவது சாப்புடன். போனதுமே எப்பிடிம்மா சேத்துக்குவாங்க? எப்ப சாப்புட முடியுமோ? நீ சாப்புட்டு மூணு நாளாயிடிச்சே” என்று உடைந்துபோன குரலில் சொன்னான்.

“பசிக்கல.”

“நான் சொல்றதக் கேளும்மா.”

“அப்பிடியாச்சும் நான் செத்தா சரி.” பேச்சை வெட்டிவிட்டாள். ஆனால் செல்வம் விடவில்லை.

“ஒரு காப்பியாச்சும் குடியன்.”

“வெறும் வயித்தில குடிச்சா குடலப் புரட்டும். வாண்டாம்.”

“இளநிக்காரன் நிக்குறான். ஒண்ணு வாங்கட்டுமா?”

“தேவயில்ல.”

“பெத்த புள்ளைக்கிட்ட எதுக்குப் புடிவாதம்? சொன்னாக் கேளும்மா.” செல்வம் கெஞ்சினான். லீலாவதியை எப்படியாவது சாப்பிட வைத்துவிட வேண்டும் என்று விரும்பினான்.

“வெயிலா இருக்கு. போயிடலாம். போற எடத்தில என்னா சொல் வாங்களோ? அனாதயா இருந்தாத்தான் சேத்துப்பாங்களாம்.”

“எதுக்கு வெட்டிவெட்டிப் பேசுற? ஓரமா வா. காருக்காரன் ஏத்திப் புடப்போறான்” என்று சொல்லி, லீலாவதியின் கையைப் பிடித்து லேசாக நகர்த்திவிட்டான்.

“அப்படித்தான் ஒண்ணும் நடக்க மாட்டங்குது. சனியன் நமக்கு எதுக் குன்னு ஒவ்வொரு காருகார நாயும் ஒதுங்கிஒதுங்கிப் போவுதுங்க.”

“கண்டபடி பேசாத. இங்கப் பாரு. ‘சாப்புட வாங்க’ன்னு ஒரு ஹோட்டல் இருக்கு. வா. போயி ரெண்டு இட்லி தின்னுட்டுப் போயிடலாம். கோபப்படாம சொல்றதக் கேளு.”

“வாண்டாம். ஓட்டலுக்கு இப்பிடியெல்லாம் பேரு வைக்க ஆரம்பிச்சிட்டாங்களா? சனியன் புடிச்சவங்க.” முன்னைவிட வேகமாக நடக்க முயன்றாள். லீலாவதியின் செயல் செல்வத்தைப் பைத்தியம் பிடிக்க வைத்துவிடும்போல இருந்தது. ஒரு நொடி அவளைப் பார்க்காமல் இருப்பதற்கு முயன்றான். தெருவில் போகிற வண்டி வாகனங்களைப் பார்க்க முயன்றான். மனம் எதிலும் நிற்கவில்லை. திரும்பி லீலாவதியைப் பார்த்தான். கோபமாகவும் இருந்தது, வருத்தமாகவும் இருந்தது. கோபம் தான் அதிகமாக இருந்தது. அவளுடன் நடப்பது சங்கடமாக இருந்தது. எரிச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்டான். “வீட்டுக்காப் போறம்? போன ஒடனே சாப்புட்டுக்கலாம்ன்னு இருக்க? இல்லெ, சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போறமா?”

“நான் வன வாசம் போறன், சுடுகாட்டுக்குப் போறன்.”

“எனக்கு கோவத்த உண்டாக்காத” என்று கத்திய செல்வம் மறு நொடியே குரலை மாற்றிக்கொண்டு தன்மையான குரலில் சொன்னான் “நான் எந்தத் தப்பும் செய்யல. நீதான் அடம்புடிச்சிக்கிட்டு அனாத இல் லத்துக்குப் போறன்னு வர்ற? இத்தினி வருசத்தில நான் எப்பயாச்சும் ஒன்னெ எடுத்தெறிஞ்சிப் பேசி இருக்கனா? கெட்ட வாத்த சொல்லித் திட்டியிருக்கனா?”

“வீட்டு விசயத்த ரோட்டுல எதுக்குப் பேசுற?”

லீலாவதியின் குரலில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. மூன்று நாட்களாகச் சாப்பிடாத பெண்ணினுடைய குரல் மாதிரி இல்லை. மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகளைச் சொல்வது மாதிரி ஒவ்வொரு வார்த்தையையும் பயன்படுத்தினாள். செல்வத்துக்குதான் குழப்பம். வார்த் தைகளைத் தேடினான். தடுமாறினான். லீலாவதி அனாதை இல்லத்தில் சேர்ந்துவிட்டால் பரவாயில்லை என்றும், சேர்ந்து விடக் கூடாது என்றும் ஒரே நேரத்தில் இரண்டு எண்ணங்களும் அவனுக்குத் தோன்றின. சேர்த்து கொள்வார்களா, சேர்த்துக்கொள்ள மாட்டார்களா? மகன் இருப்பதால் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிடுவார்களா? திடீரென்று பாசம் வந்த மாதிரி பக்கத்தில் வந்து நடந்துகொண்டே சொன்னான். “என்னெப் புரிஞ்சிக்க மாட்டியாம்மா?”

“ஒனக்கு வெக்கமா இருந்தா திரும்பிப் போயிடு. வழியக் கேட்டுக்கிட்டு நானே போயிக்கிறன். பாதி தூரம் வந்திருக்க மாட்டம்?”

“நான் என்ன சொல்றன்? நீ என்ன சொல்ற?” கோபத்தில் கத்தினான்.

“நீ எங்கூட வர்றதுதான் தொந்தரவு. அங்க வந்து ‘இது எங்கம்மா’ன்னு சொல்லாத. தெரிஞ்ச பொம்பள, தெருக்கார பொம்பளன்னு சொல்லிடு. அப்பத்தான் என்னெ சேத்துக்குவாங்க.”

“வாய மூட மாட்டியா? பேசுறதுக்கும் ஒரு அளவு இல்லெ?” என்று சொல்லி முறைத்தான். கோபத்தில் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். “எல்லாம் என் தலயெழுத்து. ஒனக்குப் புள்ளையா பொறந்து நான் படுற பாடு இருக்கே. அதுக்கு நான் செத்துப்போவலாம்.”

“நாங்கதான் ஆசப்பட்டு பெத்தம் ஒன்னெ. நீ கேக்கல.” லீலாவதியினுடைய கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

“எதுக்காக இந்த வாத்தய சொல்ற? நானா அனாத இல்லத்துக்குப் போன்னு சொன்னன்? நீதான் திமிர் புடிச்சிப்போயி வர்ற.”

செல்வத்துக்கு மண்டை வெடித்துப்போகிற அளவுக்குக் கோபம் உண் டாயிற்று. வீடாக இருந்திருந்தால் பெரிய சண்டை போட்டிருப்பான். காட்டுக் கத்தலாகக் கத்தியிருப்பான். கோபத்தில் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டியிருப்பான். லீலாவதியை அடிக்க முடியாமல் தன்னுடைய பிள்ளைகளைப் போட்டு அடித்திருப்பான். வீட்டிலுள்ள பொருட் களைத் தூக்கிப்போட்டு உடைத்திருப்பான். பெரிய ரகளை நடந்திருக்கும். கடைத் தெருவில் என்ன செய்ய முடியும்? ரோட்டின் இரண்டு பக்கமும் இருந்த கடைகளைப் பார்த்தவாறு நடந்தாலும் அவனுடைய மனம் நெருப்பாக எரிந்துகொண்டிருந்தது. எதைப் பார்த்தாலும் கோபம் குறைவது மாதிரி தெரியவில்லை. மனம் வெறுத்துப்போய்ச் சொன்னான், “ஏண்டா பொறந்தம்ன்னு இருக்கு.”

செல்வத்துக்குத்தான் நடக்க முடியவில்லை. ஆனால் லீலாவதி கால்களை இழுத்துஇழுத்து வைத்து வேகமாக நடந்துகொண்டிருந்தாள்.

ரோடு, வண்டி, வாகனங்கள், ஆட்கள், வெயில், வியர்வைக் கசகசப்பு எதை யும் அவள் பொருட்படுத்தவில்லை. வழி அவளுடைய கண்களில் இல்லை. மனதில் இருந்திருக்க வேண்டும். நடை அவ்வளவு வேகமாக இருந்தது. ஸ்கூட்டர்கள், பஸ், கார் என்று வரும்போதுகூட அவள் ஒதுங்கியோ, தயங் கியோ நடக்கவில்லை. செல்வத்துக்கு வியப்பாக இருந்தது. அவளை நடக்க வைக்கும் சக்தி எதுவென்று தெரியவில்லை.

அரசுப் பொது மருத்துவமனைக்கு அருகில் வந்ததும் லீலாவதி நின்றாள். செல்வமும் நின்றான். ஒருவருக்கொருவர் பார்த்துகொண்டனர். ஆனால் பேசிக்கொள்ளவில்லை. ஜென்ம விரோதிகள் பக்கத்தில் நிற்க நேரிட்டது மாதிரி இருவரும் நின்றுகொண்டிருந்தனர். செல்வம் வாயைத் திறக்காமல் நிற்பதைப் பார்த்த லீலாவதி “தடம் தெரியுமா?” என்று கேட்டாள்.

“கேக்கணும்” என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த மருந்து கடைக்குச் சென்று விசாரித்துவிட்டு வந்து “அடுத்தத் தெருவுல கடசியில இருக் காம்.” என்று வழிப்போக்கிக்குச் சொல்வது மாதிரி சொன்னான்.

“எப்பிடி?”

“இப்பிடி.”

செல்வம் கையைக் காட்டிய பக்கம் லீலாவதி நடக்க ஆரம்பித்தாள். பக்கத்தில் கூடவே நடந்துகொண்டிருந்த செல்வம், ரகசியம் சொல்வது மாதிரி சொன்னான் “கோவப்படாத. இப்பவும் ஒண்ணுமில்ல. வீட்டுக்குத் திரும்பிப் போயிடலாம். மருமவக்கிட்ட கோவிச்சிக்கிட்டு யாராச்சும் அனாத இல்லத்துக்குப் போவாங்களா? நீ அவகிட்ட எத்தினியோ முற சண்ட போட்டிருக்க, ஏன்னு ஒரு முற கேட்டிருப்பனா? ஒன்னெ வுட்டுட்டு நான் எப்பிடிம்மா சோறு திங்கிறது?” அழாதக் குறையாகக் கேட்டான்.

“எனக்கு யாரு மேலயும் கோவமில்ல. வருத்தமில்ல. வீட்ட விட்டு வந்துட்டப் பின்னால திரும்பி எந்த முகத்தோட போறது?”

“அது ஒன்னோட வீடும்மா.”

“தப்பு. என்னோட வீடு இல்ல. ஒம் பொண்டாட்டியோட வீடு. ஒன் னோட வீடு. ஒன் மாமியா வீட்டுச் சனங்களோடது.”

“எதுக்குப் பிரிச்சிபிரிச்சிப் பேசுற? அவதான் வேத்தாளு. நானுமா?”

செல்வத்தின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.

“யாரும் யாருகிட்டயும் பேசாத வீட்டுல எப்பிடி இருக்கிறது? ஆளுங்க இல்லாதப்பக்கூட அந்த வீடு எங்கிட்ட பேசிக்கிட்டு இருந்துச்சி. இப்ப அந்த வீடு எங்கிட்ட பேசல. அதனாலதான் வெளிய வந்தன். அந்த வீட்டுக்கு இப்ப யார்யாரோ வர்றாங்க. யாராரோ போறாங்க.”

“என்னம்மா சொல்ற? புரியல. கலாமணி தப்பு செய்யுறாளா? கெட்ட நடத்த உள்ளவளா?”

“நான் அப்பிடிச் சொல்லல.” நடப்பதை நிறுத்திவிட்டுச் செல்வத்தை விநோதமாகப் பார்த்தாள். அவளுடைய கண்களில் கண்ணீர் வந்தது.

“நான் என்னா தப்பு செஞ்சன்? எம் புள்ளைங்க என்னா தப்பு செஞ்சிச்சி? அதுகளகூடப் பாக்காம வர்ற? மாமியா மருமவ சண்ட ஒலகத்தில எல்லா வீட்டுலயும் நடக்குறதுதான? புதுசாவா நடக்குது? இல்லெ, நம்ப வீட்டுல மட்டும்தான் நடக்குதா? வயசாயிடிச்சி. நீ கொஞ்சம் அனுசரிச்சிப் போனா என்ன?”

“நான் எத அனுசரிப்பன்?” லீலாவதியின் கண்களில் நெருப்பு பறந்தது. செல்வத்தை எரித்துவிடுவது மாதிரி பார்த்தாள். பல்லைக் கடித்தபடி “நான் அனுசரிச்சிப் போவன், ஒம் பொண்டாட்டி ஊர் சுத்தப் போவாளா? பேரு வச்சியிருக்கான் பாரு கலாமணின்னு. திருட்டுமணின்னு வைக்காம. எல்லாத்துக்கும் அவளப் பெத்தவனச் சொல்லணும்.” சத்தமாகச் சொன் னாள்.

“என்னம்மா சொல்ற?” செல்வம் பரிதாபமாகக் கேட்டான்.

“வாயக் கிண்டாத. எம் போக்குல என்னெ வுட்டுடு. அதான் ஒனக்கும், ஒம் புள்ளைங்களுக்கும் நல்லது.”

“என்னெப் புடிக்கல சரி. எம் பொண்டாட்டியப் புடிக்கல. எம் பொண் டாட்டி வீட்டுச் சனங்களப் புடிக்கல சரி. பேரப் புள்ளைங்களகூட நீ நெனைக்கலியா?”

“அந்த ரெண்டு சனியனுங்களாலத்தான் இத்தினி வருசமா நான் அந்த வீட்டுல குந்தியிருந்தன்.”

“இப்பியும் அதுங்களுக்காக இருந்திட்டுப் போயன்.”

“இனிமே அந்த வீட்டுல நான் இருக்க மாட்டன். பொட்டச்சிக்கு எதுக் குத் தனியா செல்போனு? ஒரு பொட்டச்சி போனுல எம்மாம் நேரம் பேசலாம் ஒரு நாளக்கி?” நடக்க ஆரம்பித்தாள் லீலாவதி.

“எம் பொண்டாட்டி தப்பு செய்யுறாளா? நீ சந்தேகப்படுறியா? அவ வீட்டுச் சனங்க வரும், போவும். பணம் கொடுப்பா. அதச் சொல்றியா? தப்பு செய்யுறான்னு சொல்லு, அவள வெட்டிச் சாய்க்கிறன்.”

“பணம் காசா எனக்குப் பெருசு?” நின்று திரும்பிப் பார்த்துக் கேட்டாள் லீலாவதி.

“அப்பறம் ஒனக்கு என்னாதான் பிரச்சன?” வழியை மறித்துக்கொண்டு கேட்டான் செல்வம்.

“தெருவுல என்னா செய்யுற நீ?”

“காரணத்தச் சொல்லு.”

“எனக்கு ஒரு பிரச்சனயுமில்ல.”

“இதான் ஒன்னோட முடிவா?”

லீலாவதி கொஞ்சம்கூட தயங்கவில்லை. யோசிக்கவில்லை. ஒரே வெட்டாக வெட்டினாள் “ஆமாம்.” செல்வத்தின் கைகளை விலக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

“அப்பாவ ஆட்டிப் படச்ச மாதிரியே என்னெயும்தான் ஆட்டிப்படச்ச. சாதாரணமாவே நீ அதிகமாப் பேசுவ. இந்த ஒரு வாரமா அளவு கடந்து பேசுற.” நடப்பதை நிறுத்திவிட்டுக் கேட்டாள் “ஒன்னெயும் ஒங்கப்பனையும் நான் ஆட்டிப்படச்சனா?” லீலாவதியின் கண்களில் கண்ணீர். முதன் முதலாக வாய்விட்டு அழுதாள்.

“கட்டுன பொண்டாட்டியவிட, முப்பது நாப்பது வருசம் ஆக்கிப் போட்டவளவிட, சூத்து துணிய அலசிக் கொடுத்தவளவிட, கூடப்படுத்து எழுந்திருச்சவளவிட, மூத்திரம் வுடுற நேரத்தில பெத்த புள்ளை. ஒனக்காகத் தான ஒங்கப்பன் தூக்குல தொங்கி செத்துப்போனான்?” கோபத்தில் கத்தினாள். அவளுடைய உடம்பு நடுங்கியது. அவளுடைய கைகள் கைக்குச்சியை அழுத்திப் பிடித்தன. அவளுடைய அழுகையும், பேச்சும் செல் வத்தை நிலைகுலைய வைத்துவிட்டன. அவளைச் சமாதானப்படுத்துவது மாதிரி சொன்னான்: “நான் ஒன்ன நெனச்சிக்கிட்டு சொல்றன். அத நீ வேற ஒண்ணா நெனச்சிக்கிற. எதச் சொன்னாலும் தப்புத்தப்பாப் போயிடுது.” அவனுடைய கண்களில் கண்ணீர். “ரெண்டு பொம்பளைங்கக்கிட்ட நான் மாட்டிக்கிட்டுப் படுற பாடு இருக்கே, மருந்தக் குடிச்சிட்டு செத்துடலாம். எல்லாம் என் தலயெழுத்து.” தலையில் அடித்துக்கொண்டான்.

“நில்லும்மா, பேசிட்டுப் போவலாம்.” செல்வத்தினுடைய பேச்சை லீலாவதி கேட்கவில்லை.

‘வள்ளலார் அனாதைகள் இல்லத்’துக்கு முன் வந்து நின்றாள் லீலாவதி. கட்டடத்தைப் பார்த்தாள். பெரிய வீடாகத் தெரிந்தது. கட்டடத்தின் வாசலைப் பார்த்தாள். கல்யாண மண்டபத்தின் வாசல் மாதிரி பெரியதாக இருந்தது. உடனே உள்ளே போகலாமா, யாரையாவது பார்த்து விசாரித்து விட்டுப் போகலாமா என்று யோசித்தாள். என்ன செய்வது என்று தெரி யாமல் சிறிது நேரம் அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தாள். வெயில் உறைக்கவே பக்கத்திலிருந்த வேப்ப மரத்தின் நிழலுக்கு வந்து நின்றுகொண்டு, கட்டடத்துக்குள்ளிருந்து ஆட்கள் யாரும் வெளியே வருகிறார்களா என்று பார்த்தாள். அறிமுகம் இல்லாத பெண்ணுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பது மாதிரி செல்வம் அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். லீலாவதி அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

கட்டடத்துக்குள்ளிருந்து பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்பிள்ளை வெளியே வந்ததைப் பார்த்ததும் “யே, பாப்பா இங்க வா.” என்று லீலாவதி கூப்பிட்டாள்.

“என்னா?”

“இங்க வாம்மா.”

“என்னா?” என்று கேட்டுக்கொண்டே அந்தப் பிள்ளை லீலாவதியின் முன் வந்து நின்றது.

“நீ இங்க உள்ள புள்ளையா?”

“ஆமாம்.”

“இங்க சேர முடியுமா? சேத்துப்பாங்களா?”

“தெரியல.”

“இங்க சேரணுமின்னா யாரப் பாக்கணும்?”

“அண்ணன.”

“எந்த அண்ணன்?”

“இளயராஜா அண்ணன.”

“யாரு அவுரு?”

“ஓனரு.”

“இருக்காரா?”

“ம்.”

“என்னெ அழச்சிக்கிட்டுப்போயி வுடுறியா தாயி?”

“நான் கடைக்கிப் போவணும்.” என்று சொல்லிவிட்டு அந்தப் பிள்ளை லீலாவதியைத் திரும்பத்திரும்பப் பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தது.

லீலாவதிக்குத் திடீரென்று பயம் உண்டானது. உள்ளே இருக்கக்கூடிய ஆள் எப்படி இருப்பார்? தன்னைச் சேர்த்துக்கொள்வாரா? சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? தெற்கிலும் வடக்கிலும் பார்த்தாள். கிழக்கிலும் மேற்கிலும் பார்த்தாள். பிறகு, செல்வத்தைப் பார்த்தாள். அவன் ‘வள்ளலார் அனாதைகள் இல்லம்’ என்று கட்டடத்தின் மேல் எழுதியிருந்ததைப் படித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

“நீ போயி உள்ளாரப் பாத்துட்டு வர்றியா?”

“வாண்டாம்மா.” செல்வத்தின் கண்களில் கண்ணீர் இருந்தது. அதை மறைப்பதற்காக முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.

லீலாவதி கட்டடத்துக்குள் நுழைந்தாள். முதலில் பெரிய ஹால் இருந்தது. ஹாலின் வடக்குப் பக்கமாக ஒரு அறை இருந்தது. அறையை ஒட்டிச் சுவரில் பெரிதாக வள்ளலார் படம் இருந்தது. படத்துக்குக் கீழே குத்துவிளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அதிகச் சத்தமில்லாமல் ‘அருட் பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை’ என்ற வரி கேசட்டில் ஓடிக் கொண்டிருந்தது கேட்டது. ஹாலின் தென்பகுதியில் ஆறேழு வயதுள்ள இரண்டு பெண்பிள்ளைகளும் ஒரு பையனும் உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருப்பது தெரிந்தது. குச்சியை ஊன்றி நின்றுகொண்டிருந்த லீலா வதியைப் பார்த்ததும் அந்தப் பிள்ளைகளுக்கு என்ன தோன்றியதோ-, ஒன் றும் சொல்லாமல் மிரளமிரளப் பார்த்தன. அதில் பச்சை நிறப் பாவாடை கட்டியிருந்த பிள்ளை எழுந்து ஹாலின் வடக்குப் பக்கமாக இருந்த அறைக்குள் ஓடியது. லீலாவதி கூப்பிட்டதை அந்தப் பிள்ளை காதில் வாங்கவில்லை. சிறிது நேரத்தில் அந்த பிள்ளையும் நடுத்தர வயதுள்ள ஆளும் அறையிலிருந்து வெளியே வந்தனர். ஆளைப் பார்த்ததுமே அடை யாளம் தெரிந்த மாதிரி லீலாவதி இளையராஜாவுக்கு வணக்கம் சொன் னாள்.

“யாரம்மா பாக்கணும்?”

“ஒங்களத்தான்.”

“என்னையா?”

“ம்.”

“என்னா விஷயம்மா?”

“சும்மாத்தான்.”

லீலாவதியின் தோற்றம், பேச்சு, பார்வை எல்லாமும் சேர்ந்து இங்கு அவள் ஏன் வந்திருக்கிறாள், ஏன் தன்னை பார்க்க வேண்டும் என்று சொல்கிறாள் என்பதெல்லாம் ஒரு நொடியிலேயே அவனுக்குப் புரிந்துவிட்டது.

ஆனாலும் தெரியாத மாதிரி கேட்டான், “என்னா வேணும்? சொல்லுங் கம்மா.”

லீலாவதிக்குப் பேச்சு வரவில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கட்டடத்துக்கு முன் வரும்வரை இருந்த தைரியத்தில் ஒரு துளிகூட இப்போது இல்லை. நாக்கிலிருந்த ஈரமெல்லாம் வறண்டுபோய்விட்டது. அதோடு வாய் திறக்கவும் மறுக்கிறது. வார்த்தை வரவில்லை. ஆனால் கண்ணீர் மட்டும் எந்தத் தடையும் இல்லாமல் வந்துகொண்டிருந்தது.

“என்னெப் பாக்கணுமா? இல்லெ, இங்க தங்கி இருக்கிறவங்களப் பாக்கணுமா?”

லீலாவதிக்கு என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. வீட்டிலும், வழியிலும் பேசிய பேச்சு, காட்டிய வீறாப்பு எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை. லீலாவதி அழுதாள். அதை இளையராஜா பொருட்படுத்தவில்லை. அவள் மாதிரியான பல பெண்களுடைய கண் ணீரைப் பார்த்துப்பார்த்துச் சலித்துப்போனவன் மாதிரி “என்னெப் பாக்கத்தான் வந்தீங்களா?” என்று திரும்பவும் கேட்டான்.

“ஆமாம்.” என்பது மாதிரி லீலாவதி தலையை மட்டும் ஆட்டினாள்.

“நான் வெளிய போவணும். விஷயத்தச் சொல்லுங்க.” அப்போது உள்ளே வந்த செல்வம் இளையராஜாவைப் பார்த்து “வணக்கம் சார்” என்று சொன்னான்.

“வணக்கம். வாங்க.”

“சார் இளையராஜாவா?”

“நான்தான்.”

“இந்த இல்லத்த நடத்துறவருதான?”

“ஆமாம்.”

“இது எங்கம்மா சார்” என்று லீலாவதியைக் காட்டினான் செல்வம்.

“அப்பிடியா?”

“ஒங்கக்கூடக் கொஞ்சம் பேசணும் சார்.”

“என்ன விசயம்?”

“சும்மாதான் சார்.” செல்வத்தின் குரல் தாழ்ந்துவிட்டது. இளைய ராஜாவைப் பார்ப்பதையும் தவிர்த்தான்.

“ஏதாச்சும் உதவி செய்யப்போறீங்களா? பொறந்த நாளா, கல்யாண நாளா, நினைவு நாளா?”

“அதெல்லாம் இல்ல சார்.”

“பின்னெ?”

“போன வாரம் இந்த அனாத இல்லத்தப் பத்தி லோக்கல் டி.வி.யில ஒரு செய்தி வந்துச்சி. அதப் பாத்ததிலிருந்து ‘நான் அங்க போயி சேந்து கிறன்’ன்னு சொல்லி எங்கம்மா அடம்புடிச்சிக்கிட்டு வந்துடுச்சி சார்.”

செல்வத்தினுடைய குரலில் வெறுப்பும் கசப்பும் மண்டியிருந்தன.

“உதவி செய்யுறவங்க செய்யலாம்ன்னு விளம்பரம் கொடுத்திருந்தன். ஒரு உதவியும் வரல. நீங்கதான் வந்திருக்கீங்க.” இளையராஜா சிரித்தான்.

“என்னால முடிஞ்சத நான் கொடுக்கிறன் சார்.” செல்வம் உற்சாகத்துடன் சொன்னான்.

“அப்பிடிச் செஞ்சீங்கன்னா பெரிய உதவியா இருக்கும். ரொம்ப சிரமப்பட்டுத்தான் பதிமூணு வருசமா நடத்திக்கிட்டு வர்றன்.”

“பதிமூணு வருசமாவா?”

“ஆமாம்.”

செல்வம் பேசவில்லை. லீலாவதி பேசவில்லை. இளையராஜாவும் பேசாமல் ஹாலைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். அப்போது சட்டென்று லீலாவதி இளையராஜாவின் காலில் விழுந்து கும்பிட்டாள். அதைப் பார்த்ததும் செல்வத்துக்கு உயிரே நின்றுவிடும் போலிருந்தது. கோபத்தில் அவனுக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது. ஆனால், இளையராஜா சாதாரணமாக “எழுந்திருங்கம்மா” என்று மட்டுமே சொன்னான். என்ன தோன்றியதோ செல்வத்தையும் லீலாவதியையும் மாறிமாறிப் பார்த் தான். பிறகு “உள்ளார வாங்க” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய அலுவலக அறைக்குள் போனான். அவனுக்குப் பின்னால் லீலாவதியும், செல்வமும் போனார்கள். இளையராஜா உட்கார்ந்திருந்த நாற்காலிக்கு எதிரிலிருந்த மரப் பெஞ்சில் இருவரும் உட்கார்ந்தனர். இளையராஜா பேசவில்லை. செல்வம் பேசவில்லை. லீலாவதிதான் பேசினாள் “என்னெ அனாதயா சேத்துக்குங்க. புண்ணியமா இருக்கும்.” கையெடுத்துக் கும் பிட்டாள்.

“எதுக்காக நெனச்சதுக்கெல்லாம் அழுவுறீங்க? கும்புடுறீங்க?” லேசான கோபத்துடன் இளையராஜா கேட்டான். பிறகு குரலை மாற்றிக்கொண்டு “இது அனாதைங்களுக்காக நடத்துறது. ஒங்களுக்குத்தான் மகன் இருக் காரில்ல?” என்று சொல்லி லேசாகச் சிரித்தான்.

“எல்லாம் இருக்கு. ஆனா எதுவும் இல்லெ.” லீலாவதியின் குரலில் அவ்வளவு கசப்பு இருந்தது. கண்களில் கண்ணீர் இருந்தது.

“நான் சொல்றதப் புரிஞ்சிக்குங்க. சொத்துபத்து உள்ளவங்கள, புள் ளைங்க உள்ளவங்கள சேத்துக்க ஆரம்பிச்சா எல்லாரும் இந்தத் தப்ப செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. அந்த அளவுக்கு நடத்துறதுக்கு எங்கிட்ட வசதியும் இல்ல.” இளையராஜா சிரித்தான்.

“எனக்கு வீடு இல்ல. புருசன் இல்லெ.”

“என்னாச்சி?”

“செத்து எட்டு வருசமாச்சி. அப்பவே செத்திருக்கணும். வயசாயி உயி ரோட இருக்கக் கூடாது. அதிலயும் இடுப்பு ஒடிஞ்சிப்போயி.” லீலாவதியின் கண்களில் கண்ணீர்.

“இடுப்புல என்னா? சரியா நடக்க முடியாதா?”

“கஷ்டப்பட்டுத்தான் நடக்கணும். பஸ்ஸில ஏறும்போது படிக்கட்டுலயிருந்து சறுக்கி விழுந்து இடுப்புல எலும்பு முறிஞ்சிபோச்சி. கோரிமேடு ஆஸ்பத்திரியில ஆறு மாசம் கெடந்தன். வயசாயிடிச்சி. ஆப்பரேசன் செய்ய முடியாது. முடிஞ்சவரைக்கும் குச்ச வச்சிக்கிட்டு கால ஜீவனத்த ஓட்டுங்கன்னு அனுப்பிட்டாங்க.” லீலாவதி தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். அழுகையில் அவளுக்கு உடம்பு குலுங்கியது.

பேச்சை மாற்றுவதற்காக “சார் என்னா செய்யுறீங்க?” என்று செல்வத்திடம் இளையராஜா கேட்டான்.

“அரசாங்க ஸ்கூல்ல க்ளர்க்கா இருக்கன்.”

“பரவாயில்ல. ஏம்மா, ஒங்க மகன் அரசாங்க வேலயில இருக்காரு. அனாதைன்னு சேத்துக்கச் சொல்றீங்க? இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் நீங்க வரக் கூடாது.”

“மனசு செத்துப்போச்சி.”

“என்னம்மா சொல்றீங்க?” ஆச்சரியத்துடன் கேட்டான் இளையராஜா.

“எப்படியாச்சும் என்னெ இங்க சேத்துக்குங்க. ஒங்களுக்கும் புண்ணியம் ஒங்களப் பெத்தவங்களுக்குப் புண்ணியம்.” லீலாவதி அழுதாள். கையெடுத்துக் கும்பிட்டாள்.

“சேத்துக்கிறது பிரச்சன இல்லெ. ஒங்கள மாதிரி செல பேரு வீட்டுல சண்ட போட்டுக்கிட்டு வருவாங்க. ஒரு வாரம் போனதும் கோவம் கொறஞ்சிடும். அப்பறம் வீட்டுக்குப் போவணும்ன்னு அடம்புடிப்பாங்க. பதிமூணு வருசமா நான் பாக்காத கதயா. பேசாம வீட்டுக்குப் போங்க.” சிரித்துக்கொண்டே சொன்னான்.

“ரவரவ புள்ளைங்கெல்லாம் தூக்குல தொங்கி சாவுதுங்க. எளம் புள் ளைங்க எல்லாம் ரெண்டு மூணு புள்ளைங்கள வுட்டுட்டுத் தீக்குளிச்சி சாவுதுங்க. மாமியா சண்ட போட்டா, புருசன் சண்ட போட்டான்னு எம்மாம் பேரு செத்துப்போறாங்க? பரீட்சயில பெயில்ன்னுக்கூட புள் ளைங்க செத்துப்போவுதுங்க. ரவரவ புள்ளைங்களுக்கு இருக்கிற மனசு எனக்கு இல்லெ. ஒலகத்த வெறுக்கத் தெரியல. அந்த மனசு இல்லாததால எம்மாம் அசிங்கம்?”

“என்னம்மா சொல்றீங்க?” ஆச்சரியமாகக் கேட்டான் இளையராஜா.

“வாழப் புடிக்கல. சாகவும் முடியல.”

திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி “எப்ப சாப்புட்டீங்க?” என்று கேட்டான். லீலாவதி பதில் சொல்லவில்லை. செல்வம்தான் சொன்னான். “மூணு நாளாச்சி.”

“ஐயோ கடவுளே” என்று பதறிப்போன இளையராஜா லீலாவதியிடம் “சாப்புடுறீங்களா?” என்று கேட்டான். பிறகு யாரிடமும் என்றில்லாமல் பொதுவாக சொன்னான் “சோறுதான் உலகம். அது இல்லன்னா எப்பிடி?”

“என்னெ சேத்துக்குங்க சாமி. சாப்பாடு வாண்டாம்.”

“நீங்க அனாதைன்னு சொன்னா ஒரு கேள்வியும் இல்லம்மா. ஒடனே சேத்துக்குவன். வீட்டுல சண்டயா?” என்று நிதானமாகக் கேட்டான் இளையராஜா.

“அதெல்லாமில்ல.”

லீலாவதியின் முகம் கோணியதைப் பார்த்த இளையராஜா செல்வத்தின் பக்கம் திரும்பி “சொந்த மகனா?” என்று கேட்டான்.

“ஆமாம்.”

“எத்தன பேரு?”

“நான் ஒருத்தன்தான்.”

இளையராஜா சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்தான். சிறிது நேரம் செல்வத்தையும் லீலாவதியையும் ஆராய்வது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தான். ரொம்பவும் சலிப்பான குரலில் “ஒங்கம்மா ரொம்ப மனக் கொழப்பத்தில இருக்காங்க. வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போங்க. ஒரு வாரம் ஆனா எல்லாம் சரியாப் போயிடும்” என்று சொன்னான்.

“வேண்டாம் சாமி” குரல்விட்டு அழுதுகொண்டே கையெடுத்துக் கும்பிட்டாள் லீலாவதி. அதைப் பார்த்த செல்வத்துக்கு எழுந்து ஓடிவிட வேண்டும்போல இருந்தது. கோபத்தில் அவனையும் அறியாமல் கத்தி

னான். “கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?”

“சாவப்போற கிழவிக்கு எதுக்கு வாய்?”

வெறுப்புடன் லீலாவதியைப் பார்த்தான் செல்வம். பல்லைக் கடித்தான். தலையில் அடித்துக்கொண்டான். பிறகு “அது இஷ்டப்படியே இருக் கட்டும் சார். மாசா மாசம் நீங்க சொல்ற பணத்த நான் கொடுத்திடுறன்” என்று சலிப்புடன் சொன்னான்.

“பணத்துக்காக இத நான் நடத்தல.” வெட்டி விட்டான் இளையராஜா.

“பணத்துக்காக நடத்துறீங்கன்னு நான் சொல்லல சார்” என்று சொன்ன செல்வத்தின் குரல் உடைந்துபோய்க் கேட்டது. சிறிது நேரம் பேசாமல் இருந்தான். என்ன தோன்றியதோ “நான் யார் பேச்சக் கேக்கு றது? எங்கம்மா பேச்சக் கேட்டா ‘ஒங்கம்மா பேச்சயே கேளு’ன்னு எம் பொண்டாட்டி சொல்றா. எம் பொண்டாட்டி பேச்சக் கேட்டா ‘ஒம் பொண்டாட்டிப் பேச்சயே கேளு’ன்னு எங்கம்மா சொல்லுது. ஒரு வருச மாவே எங்கம்மாவுக்கும் எம் பொண்டாட்டிக்கும் இடையில என்னாமோ நடக்குது. அத என்னான்னு என்னால கண்டுபிடிக்க முடியல. எனக்குப் பைத்தியம் புடிச்சிடும்போல இருக்கு.” சொல்லும்போதே அவனுக்குக் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. மூக்கை உறிஞ்சிக்கொண்டு சொன் னான் “கருண அடிப்படயில வேலைக்கிப் போனதால ஒரு பயலும் மதிக்க மாட்டங்குறான். எல்லா வேலயும் என் தலயிலயே கட்டிடுறானுவ. அறுபது பேரு வேல செய்யுற ஸ்கூலு. ஒரு நிமிசம் நிக்க நேரமில்ல. சனி ஞாயிறுலயும் வேலதான். சம்பளம் போடுறது, சரண்டர் போடுறது, ஜி.பி.எஃப். போடுறது, சி.எல்.போடுறது, மெடிக்கல் லீவ் போடுறதுன்னு ஒரே வேல. வாத்தியாருங்க பாடம் நடத்தறாங்களோ இல்லயோ எந்த பேங்குல என்னா லோனு தர்றான்னு தெரிஞ்சிகிட்டு விதவிதமா லோன் போட்டுக்கிட்டே இருப்பாங்க. அதுக்கும் நாந்தான் தபால் எழுதணும். எல்லாத்துக்கும் மேல தெனம் ஒரு புள்ளிவிவரம் கேக்குறான் கவர்மண்டுல. எல்லாத்துக்கும் ஒரே க்ளர்க்கு என்னா பண்ணுவான்? கம்ப்யூட்டர் டைப் பிங் தெரியாது. அதனால எல்லாத்துக்கும் வெளியவெளிய ஓடுறன். வேல பாப்பனா? குடும்பச் சண்டயப் பாப்பனா சார்?” செல்வம் லேசாக அழுதான்.

சிறிது நேரம் யாருமே பேசவில்லை. செல்வம் அழுதபோது லீலாவதியின் கண்களும் லேசாகக் கலங்கியதைப் பார்த்தான் இளையராஜா. ஆனால் எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான். அப்போது ஐந்து ஆறு வயது உள்ள ஒரு பையன் “அண்ணா” என்று சொல்லிக் கத்திக்கொண்டே உள்ளே ஓடிவந்தான். உடனே அந்தப் பையனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டே இளையராஜா “என்னடா கண்ணா? ஒனக்கு என்னா வேணும்? சொல்லு செல்லம்” என்று கேட்டுக் கொஞ்ச ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்துப் பையனைத் தரையில் இறக்கிவிட்டு “ஓடு. போய் விளையாடு தங்கம்” என்று சொல்லி, பையனைத் துரத்திவிட்டான். பிறகு அவனாகவே “பொறந்து பத்து மணி நேரம்தான் இருக்கும். ஆஸ்பத்திரிக்குப் பின்னால யாரோ போட்டுட்டுப் போயிட்டாங்க. நான்தான் தூக்கி யாந்து வளக்கிறன். இன்னிக்கு ஞாயித்துக் கிழமங்கிறதாலதான் எல்லாம் இங்க இருக்கு. மத்த நாளா இருந்தா ஸ்கூலுக்குப் போயிருக்குங்க.”

“படிக்கவும் வைக்கிறீங்களா?”

“ஆமாம். ஆனா எல்லாத்தயும் அரசாங்க ஸ்கூல்லத்தான் படிக்க வச்சியிருக்கன். வேற வழியில்லங்கிறது ஒண்ணு, தனியார் பள்ளிக்கூடத்த சப்போர்ட் பண்ணக் கூடாதுங்குறது ஒண்ணு.” சிரிக்க முயன்றான் இளைய ராஜா. ஆனால் சிரிப்பு வரவில்லை.

“ஆச்சர்யம் சார்.” செல்வமும் இளையராஜாவும் பேசிக்கொண்டதைக் கவனிக்காத லீலாவதி “கடவுளே” என்று சொன்னாள். “பெத்த புள்ளையத் தெருவுல போட்டுட்டுப் போறதுக்கு என்னா மனசு? கல்லு மனசுதான். வேணாங்கற புள்ளைய எதுக்குப் பெக்கறாங்க? ஜனங்களுக்குப் புத்தி எப்புடியெல்லாம் போவுது! ஒலகத்தில பொட்டச்சின்னு, தாயின்னு யார தான் சொல்லுறது?”

“ஏன் சார் மொட்டப் போட்டிருக்கு? ஹாலிலிருந்த புள்ளைங்களுக்கும் மொட்டப் போட்டிருந்துச்சி.” தயக்கத்துடன் கேட்டான் செல்வம்.

“தானா குளிக்க முடியாத புள்ளைங்களுக்கு மொட்டப் போட்டிடுவம். குளிக்க வைக்கிறது சுலபம். அப்பறம் பேன் புடிக்காது. சளி புடிக் காது. முடி வெட்டுற தொல்லையும் இருக்காது. இங்க இருக்கிற வயசானவங்கதான் இவுங்களப் பாத்துக்கிறாங்க.” லேசாகச் சிரித்தான் இளையராஜா. திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி லீலாவதியிடம் “சொல்லுங் கம்மா” என்று கேட்டான்.

“என்னெ இங்க இருக்க வுடுங்க. வீட்டுல இருந்தாலும் நான் தனி யாத்தான் இருக்கணும். மவன், மருமவக்கூட இருந்தாலும் தனியா ஆளில் லாத வீட்டுல இருக்கிற மாதிரிதான். யாரும் யார்கிட்டயும் பேசாத வீட்டுல எப்பிடி இருக்கிறது? மனசு தீஞ்சிப்போச்சி. எம் புருசன் இருந்தா எதுக்கு இங்க வரப்போறன்? சண்டாளன் எதுக்குத்தான் தூக்குப்போட்டுக் கிட்டு செத்தானோ?” லீலாவதி அழுதாள்.

“ஒடம்புக்கு முடியாம சாகலியா?”

“இல்லெ.”

“பின்னெ எப்பிடி செத்தாரு?”

செல்வம் பேசவில்லை. லீலாவதியும் பேசவில்லை. இருவருமே தலை யைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

“பெரிய நோவு வந்து, வலி தாங்காம முடியாம தூக்கில தொங்கிட் டாரா?” செல்வம் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான்.

“சொல்ல வேணாமின்னா விடுங்க. இப்ப ஒரு ஆளு உசுரோட இல்ல. அவ்வளவுதான்.” சலிப்புடன் சொன்னான் இளையராஜா.

“என்னெ சேத்துக்கிறதா இருந்தா சொல்றன்.”

“என்னம்மா கண்டிசன் எல்லாம் போடுறீங்க?” என்று கேட்ட இளைய ராஜா வாய்விட்டுச் சிரித்தான். “சேத்துக்கிறன். சொல்லுங்க” மீண்டும் சிரித் தான்.

செல்வத்தைப் பார்த்தாள். அவன் அறையில் தொங்கவிடப்பட்டிருந்த போட்டோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“எங்க வீட்டுக்காரரு அரசாங்கப் பள்ளிக்கூடத்தில ஓ.ஏ.வா இருந்தாரு. எங்கப் பையன நல்லாத்தான் படிக்க வச்சாரு. என்னா தலயெழுத்தோ இவன் மண்டயில படிப்பு ஏறல. காலேஜ் போயி படிச்சதோட நின்னுட்டான். வருசம் பூராவும் பரீட்சபரீட்சயா எழுதினான். ஒண்ணுத்திலயும் பாசாவல. சொத்துப் பத்து ஒண்ணும் இல்லெ. வீடும் இல்லெ. வேல ஒண்ணுதான். அத வச்சித்தான் சோறு. காட்டுல கெடந்த நம்பளே அரசாங்க வேலைக்கி வந்துட்டம். டவுனுலியே இருந்த நம்பப் புள்ளை இப்பிடி இருக்குதே, வயசும் ஏறிக்கிட்டே போவுதேன்னு அந்த ஆளுக்கு மனசுல கவல. பையனுக்குக் கல்யாண வயசும் தாண்டிப் போச்சின்னு இன்னொரு கவல. மனசுல என்னா எண்ணம் வந்துச்சோ. ரிட்டயர் ஆவறதுக்கு மின்னால தூக்குல தொங்கிட்டாரு.” வாயில் துணியை வைத்து அடைத்தும் லீலாவதிக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உடம்பு நடுங்கியது. தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். சிறிது நேரம் கழித்து இளையராஜா கேட்டான் “சாவும்போது அவருக்கு வயசு என்னா?”

“அம்பத்தி ஒம்பதர.”

“எல்லாருக்கும் அம்பத்தி எட்டுலதான ரிட்டயர்மண்டு?”

“ஓ.ஏ., வாட்ச்மேனுக்கெல்லாம் அறுவது.” செல்வம் சொன்னான்.

“அப்பிடியா? எனக்குத் தெரியாது. கவர்மண்டு வேலயில இருந்த மனு சன் எதுக்குத் தூக்குல தொங்குனாரு?”

செல்வம் பதில் சொல்லவில்லை.

“தம் மவனுக்கு அரசாங்க வேல கெடைக்கணுமின்னு தூக்கில தொங் கிட்டாரு.”

“என்னம்மா சொல்றீங்க?” இளையராஜா வாயடைத்துப்போய்விட் டான்.

“வேலயில இருக்கறப்போ செத்தா தம் புள்ளைக்கிக் கருண அடிப்பட யில வாரிசு வேல கெடைக்கட்டும்ன்னுதான் தொங்கிட்டாரு.” லீலாவதி இப்போது அழவில்லை. அவளுடைய கண்கள் கலங்கவில்லை.

“புதுசாவும் இருக்கு. அதிசயமாவும் இருக்கு. ஒலகத்தில பெத்தப் புள்ளையை ரோட்டுல போட்டுட்டுப் போறாங்க. தூக்கில தொங்கிச் செத்துப் போறாங்க. எத நம்பறது? அரசாங்கம் தொட்டில் குழந்தை திட்டம்ன்னு தொடங்கி நடத்துற அளவுக்கு தெனம் ஒண்ணுரெண்டு புள்ளைய ரோட்டுல, குப்பத் தொட்டியிலன்னு போட்டுட்டுப் போறாங்க. அதே மாதிரி வயசானவங்க தெனம் ஒருத்தராவது ரோட்டுக்கு வந்துடுறாங்க.” என்று சொன்ன இளையராஜா “வேல கெடச்சிதா?” என்று கேட்டான்.

லீலாவதி பதில் சொல்லவில்லை.

“மூணு வருசம் கழிச்சி கெடச்சிது.” வேண்டா வெறுப்பாகச் செல்வம் சொன்னான்.

“பரவாயில்ல.”

“மூணு வருசம் அலயாத அலச்சல் இல்ல. நடக்காத நட இல்லெ. ஏறி இறங்காத ஆபீஸ் இல்ல. பணமும் செலவாச்சி.” செல்வம் சலித்துக் கொண்டான்.

“சரி. இதுக்காகத்தான் செத்தாருன்னு தெரிஞ்சா வேலய கொடுத்திருக்க மாட்டாங்களே?”

“சீட்டு கெடச்சதுமே அடுப்புல போட்டுட்டன். இன்னிக்கித்தான் அதெப் பத்தி முதமுதலா வாயத் தொறக்கிறன் எட்டு வருசம் கழிச்சி.” லீலாவதி அழுதாள்.

“சீட்டுல என்னதான் எழுதியிருந்தாரு?”

“‘அறுவது வயசு கிழவன் நானு. இனிமே உசுரோட இருந்து என்னா செய்யப்போறன்? நான் செத்தா எம் புள்ளைக்கிக் கருண அடிப்படயில வாரிசு வேலயாவது கெடைக்கும். அத வச்சி அவனுக்கு ஒருத்தன் பொண்ணு தருவான். இதென்ன அந்தக் காலமா? ஆள நம்பி பொண்ணு தர? வேலய நம்பி, பணத்த நம்பி, பொண்ணு தரக் காலமா இருக்கு. அவன் ஒருத்தனுக்காகத்தான் உசுர வச்சியிருந்தன். அவனுக்காகவே போவட்டும். எம் மனசுல கொற ஒண்ணும் இல்லெ. எப்பிடியாவது அலஞ்சி திரிஞ்சி எம் புள்ளைக்கு ஒரு வேலய வாங்கு. ஒரு பொண்ணப் பாத்து முடிச்சிவை. நான் செத்த விசயம் யாருக்கும் தெரியக் கூடாது’ன்னு எழுதியிருந்தாரு.”

லீலாவதி அழுகையை அடக்கிக்கொண்டு உட்காந்திருந்தாள். அதுவரை அமைதியாக இருந்த செல்வம் “பொய் பேசாதம்மா. எம் புருசன் செத்ததாலதான் ஒனக்கு வேல வந்துச்சின்னு கோபம் வரும்போதெல்லாம் சொல்லிக்காட்டுல?” என்று கேட்டான்.

“நீயும் ஒம் பொண்டாட்டியும் சும்மா இருக்கும்போது நானாவா வந்து அந்தப் பேச்ச எடுக்கிறன்?” எரித்து விடுவது மாதிரி செல்வத்தைப் பார்த்தாள் லீலாவதி.

“நான்தான் ஒன்னோட மவன். நீ சொல்றதப் பொறுத்துக்குவன். என்ன இருந்தாலும் எம் பொண்டாட்டி வேத்தாளுதான? அவ எப்பிடி ஒம் பேச் சப் பொறுத்துக்குவா?”

“அப்பிடியா?” என்று ஒரு தினுசாகக் கேட்ட லீலாவதிக்குக் கோபம் வந்துவிட்டது. “எம் புருசனோட ஒழைப்ப அவளும்தான திங்குறா? அத நெனச்சிப்பாக்க வாண்டாமா? அம்மாவாச விரதம் இருந்திருக்கீங்களா?

மாசி மகத்தில அந்தாளு பேருல ஒரு பாப்பான்கிட்ட ஒரு படி பச்சரிசியும் ஒரு வாழக்காயும், ஒரு புடி அவித்திக் கீரையும் ஒரு தடவயாவதுகொடுத்திருக்கீங்களா? எல்லாத்துக்கும் நான்தான் போவணுமா? இதெ நான் கேட்டா, சண்டக்காரி. மருமவள வாழவிடாதவ? அப்பிடித்தான? புருசன் பொண்டாட்டி சிரிச்சிப் பேசிக்கிட்டிருந்தா எங்கம்மாவுக்குப் புடிக் காதுன்னு நீயே சொல்லுவ.”

“கத்தாதம்மா. ஒனக்கு விசயம் புரியல. ஒலகத்தில இருக்கிற எல்லா அப்பா அம்மாவும் தான் பெத்த புள்ளைங்களுக்காகத்தான் உசுரு வாழு றாங்க. சம்பாதிக்கிறாங்க. ஆனா நீங்க ரெண்டு பேரு மட்டும்தான் அதி சயமா எனக்காக வாழ்ந்த மாதிரியும், வளத்த மாதிரியும் பேசுறீங்க.”

லீலாவதிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ. “நானும் எம் புருசனும் அதிசயமில்லதான். நீயும் ஒம் பொண்டாட்டியும்தான் அதி சயம். ஒன் மாமியா வீட்டுச் சனங்களும் அதிசயம்தான்.”

“எதுக்கும்மா கத்துற?”

“நான் கத்தல. இனி நான் ஒன்னோட வீட்டுக்கு வல்லெ. என்ன உட்டுடு. ஆனா ஒண்ணு, ஒம் பொண்டாட்டிய மட்டும் பத்தரமா வச்சிக்க. மானம் போனா உசுரோட இருக்கக் கூடாது.”

“எனக்கு புரியல?” என்று செல்வம் கேட்டான்.

வேறு வழியின்றி, சமாளிப்பதற்காக லீலாவதி சொன்னாள் “மனபேதலிப்புல ஏதோ சொல்லிட்டன். வாய் தவறிடிச்சி. விடு பேச்ச.”

செல்வத்தின் முகம் தொங்கிப்போனதைப் பார்த்த லீலாவதி பேச்சை மாற்ற நினைத்தாள். “ஒம் புள்ளைக்கி ஒடம்பு சரியில்லன்னா எப்பிடித் தூக்கிக்கிட்டு ஓடுறீங்க? நான் எத்தன நாளு படுத்த இடத்த வுட்டு எழுந் திருக்காம கெடந்தாலும் ‘என்னா ஏது’ன்னு கேக்குறீங்களா?”

“நான் ஒன்னப் பாக்கலியா?” பரிதாபமாகக் கேட்டான் செல்வம்.

“நல்லாப் பாத்த.” வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் லீலாவதி.

லீலாவதி மீது ஏற்பட்ட கோபத்தைக் காட்டாமல் இருப்பதற்காக இளையராஜாவிடம் கேட்டான் செல்வம்: “பணம் கொடுக்கிறவங்களுக்கு ஸ்பெஷலா ஏதாச்சும் உண்டா சார்?”

“இல்லெ. இங்க அப்படி செய்யுறதில்ல. வயசானவங்க அறுபத்தெட்டுப் பேரு இருக்காங்க. அதுல நாலு பேரால சுத்தமா நடக்க முடியாது. பொறந்த குழந்தையிலிருந்து பதினாறு வயசு புள்ளைங்க வரைக்கும் மொத்தம் எழுபத்தி ஆறு பேரு இருக்காங்க. யாருக்கும் எந்த வித்தியாசமும் இல்லெ. பென்ஷன் வாங்குறவங்க ஆறு பேரு இருக்காங்க. அவங் களுக்கும் ஒரே விதமான நடைமுறைதான். காலயில இட்லி. மத்தியானம் சாப்பாடு, சாம்பாரு. ராத்திரிக்கு இட்லி, தோசன்னு ஏதாச்சும் ஒண்ணு இருக்கும். அசைவம் எப்பவும் கெடையாது.”

“பென்ஷன் வாங்குறவங்க ஏதாச்சும் ஒங்களுக்குக் கொடுப்பாங்களா சார்?” ஆர்வத்துடன் கேட்டான்.

“நானா கேக்க மாட்டன். அவங்களா கொடுத்தா வேணாமின்னு சொல்றதில்ல. கொடுத்தாலும் நானூறு ஐநூறுதான் குடுப்பாங்க” என்று சொன்ன இளையராஜா லேசாகச் சிரித்தான். அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி சொன்னான் “நீங்க ஒங்கம்மாவுக்காக மட்டும்தான் பணம் தரணுமின்னு இல்ல. மத்தவங்களுக்கும் ஒதவலாம். ஒதவுறதுக்குத் தெரிஞ் சவங்களா இருக்கணுமின்னு அவசியமில்ல. நீங்க பணமாத் தரலாம். பொருளாத் தரலாம். அரிசி, பருப்பு, மளிக சாமான், வேட்டி, துண்டு, பொடவ, போர்வ, சோப்புக்கூட வாங்கித் தரலாம். எதக் கொடுத்தாலும் வாங்கிக்குவன். பதிமூணு வருசமா இத நடத்திக்கிட்டு படாத பாடு படுறன். இத ஒரு வியாபாரமா, தொழிலா மாத்த நான் விரும்பல.”

“நிச்சயமா என்னால முடிஞ்சத செய்றன் சார்.” செல்வம் சொன்னான். ரொம்ப நேரத்துக்குப் பிறகு அப்போதுதான் அவனுடைய முகம் லேசாகத் தெளிவடைந்த மாதிரி இருந்தது. என்ன தோன்றியதோ “அனாத இல்லம் நடத்துறதுக்கும் ஒரு மனசு வேணும் சார்.”“ஆரம்பிக்கும்போது கூரக் கொட்டாயிலதான் ஆரம்பிச்சன். அப்ப மூணு பேர்தான் இருந்தாங்க. சொந்த எடம். சொந்த வீடு. அதனால பிரச்சின இல்லாம போவுது. இதுக்குப் பின்னால ரெண்டு கட்டடம் இருக்கு. எல்லாத்திலியும் ஆள் இருக்கு.” விரக்தியாகச் சிரித்தான் இளையராஜா.

“அப்பிடியா?”

“வீட்டுல, ஊருல பொழைக்கத் தெரியாதவன்னு சொல்லித் திட்டு றாங்க. ஏதோ மனசுல பட்டுச்சி. ஆர்வத்தில ஆரம்பிச்சன். இப்ப படாத பாடு. இத ஆரம்பிக்கும்போது எனக்கு இருபத்தஞ்சி வயசு. கொஞ்சம் வயல் இருக்கு. அதுல வர்ற நெல்ல வச்சித்தான் இந்த வண்டி ஓடுது. எப் பிடியோ பதிமூணு வருசம் ஓட்டிட்டன். நெனச்சா ஆச்சரியமா இருக்கு.” சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்த இளையராஜா மிகுந்த சலிப்புடன் சொன்னான் “எப்பயாச்சும் ஒருத்தர் ரெண்டு பேர் வந்து ஆயிரம் ஐநூறுன்னு தருவாங்க. இல்லன்னா ஒரு வேள சாப்பாட்டுக்கான செலவ ஏத்துக்குவாங்க. அதுகூட அப்பா அம்மாவ மறக்காதவங்க. அதிகமா, பொறந்த நாளுக்குத்தான் பிஸ்கட்டு, பழம் வாங்கியாந்து கொடுப்பாங்க. இப்ப பொறந்த நாளு, கல்யாண நாளு கொண்டாடுறவங்க அதிகமாகி யிருக்காங்க. தமிழ்நாட்டுல புது வியாதி பரவி இருக்கு. ஆனாலும் எனக்கு சந்தோசம்தான்.” இளையராஜா சிரித்தான்.

“உண்மதான் சார்.”

“அப்பா அம்மாவ ரோட்டுல வுடுறவங்களும், பெத்தப் புள்ளைய பொறந்ததுமே ரோட்டுல போட்டுட்டுப் போறவங்களும் இருக்காங்க. ஒலகம்ன்னு இருந்தா அதில எல்லா அதிசயமும் இருக்கத்தான செய்யும்?” செல்வம் பேசவில்லை.

“அனாதப் புள்ளை ஒண்ணு இப்ப வந்துச்சே. அத நான் பாக்கட்டுமா?” லீலாவதி கேட்டாள்.

“கூப்புடுறன்.” என்று சொன்ன இளையராஜா “நீங்க கவர்மண்டு வேலயில இருக்கீங்க. நல்ல சம்பளம் வரும். ஒங்கம்மாவுக்கும் பென்ஷன் வருது. சோத்துக்கு வழி இல்லாதவங்க செய்யுற வேலய நீங்களும் செய் யாதீங்க. நான் சோறு போடுறதுக்காகச் சொல்லல. ஒங்களுக்கு செல் வம்ன்னு பேரு வச்சிருக்காங்க. அவங்களுக்கு நீங்கதான் செல்வம். இது பேருக்காக மட்டும் வச்சதில்ல. நல்ல பேரு” என்று சொன்ன இளைய ராஜா செல்வத்தையே கூர்ந்து பார்த்தான். பிறகு நிதானமாகச் சொன் னான் “இப்ப புது பேஷன் ஒண்ணு நம்ம நாட்டுல உருவாகிக்கிட்டு வருது. கல்யாணத்துக்கு, விசேஷத்துக்கு, கோவிலுக்குப் போவும்போது வீட்டுல வயசானவங்க, ஒடம்புக்கு முடியாதவங்க இருந்தா அவுங்களக் கொண்டுபோயி ஆஸ்பத்திரியில விட்டுட்டுப் போறது. இப்ப இந்தத் தொழில் நல்லா வளந்துகிட்டு வருது. மெடிக்கல் டூருன்னு வெளி நாட்டுக்காரங்க இந்தியாவுக்கு அதிகமா வர ஆரம்பிச்சிட்டாங்க. ஆறு மாசம்வரை தங்கறாங்க. மத்த நாட்ட ஒப்பிடும்போது நம்ம நாட்டுல செலவு ரொம்ப சீப். பெரியவங்கள வீட்டுல வச்சிக்க முடியாமதான் இந்தக் காரியங்கள செய்யுறாங்க. சில பேரு பணத் திமிர்லயும் செய்யுறாங்க. நாட்டுல பணப்புழக்கம் அதிகமாயி இருக்கு. அதே மாதிரி முதியோர் இல்லமும் அதிகமாயி இருக்கு.”

செல்வத்துக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அதே நேரத்தில் கோபமும் வந்தது. “இது என்னோட ஆச இல்லெ சார். எங்கம்மாவோட ஆச.

அதோட புடிவாதம். வேற வழியில்ல, கூட வந்தன். அதோட ஆசக்கி ஒரு வாரம் பத்து நாள் இருக்கட்டும். மனசு மாறிட்டா கூப்புட்டுக்கிட்டுப் போயிடுறன்.”

கடகடவென்று இளையராஜா சிரித்தான். “சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்புறீங்களா? கோயில் குளத்துக்கு அனுப்புறீங்களா? ஒரு வாரம் போயிட்டு வரட்டும்ன்னு சொல்றதுக்கு. இது அனாத இல்லம் சார்.” கடுமையான குரலில் சொன்னான் இளையராஜா.

செல்வம் மறுபேச்சுப் பேசவில்லை. கையைக் கட்டிக்கொண்டு ஊமை மாதிரி உட்கார்ந்திருந்தான். இளையராஜாவின் பேச்சு லீலாவதிக்குத் திகிலை உண்டாக்கியது. தன்னைச் சேர்த்துக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது? வீம்பு பிடித்துக்கொண்டு, சண்டை பிடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்த பிறகு மீண்டும் அந்த வீட்டுக்குள் எப்படிப் போவது? மீறிப் போனால் கலாமணி என்ன சொல்வாள்? அவளுடைய பேச்சை எப்படிக் கேட்டுக்கொண்டிருக்க முடியும்? அதைப் பொறுத்துக்கொண்டிருந்தாலும் அவளுடைய நடத்தையைப் பொறுத்துக் கொண்டு எப்படி இருப்பது? அவள் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே போய்விடுவதையும், வீட்டில் இருக்கிற நேரத்தில் யாரிடமோ ஓயாமல் சிரித்துசிரித்து போன் பேசிக்கொண்டிருப்பதையும் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? வேறு யாரோ ஒரு ஆணுடன் பேசிக்கொண்டிருக்கிறாள், பழகிக்கொண்டிருக்கிறாள் என்று சொன்னால் சண்டை நடக்கும். அடிதடியாகும். சண்டையில் புருசன் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டால்? செல்வம் என்ன ஆவான்? பிள்ளைகள் என்ன ஆகும்? யோசிக்கயோசிக்க, பைத்தியம் பிடித்துவிடும் போலி ருந்தது. திகிலாக இருந்தது. எது நடந்தாலும் நடக்கட்டும். எதற்கும் தான் ஒரு சாட்சியாக இருக்க வேண்டாம் என்று நினைத்த லீலாவதி கெஞ்சுவது மாதிரி சொன்னாள் “எனக்கு மாசம் ரெண்டாயிரம் வருது. பூராத்தயும் அப்பிடியே கொடுத்திடுறன். முகம் சுளிக்காம ஒரு வாய் பச்சத் தண்ணி கொடுத்தா போதும். இந்த வயசில பணத்த நான் என்னா செய்யப்போறன்? இங்க இருக்கிற புள்ளைங்களுக்கு மொட்டப் போடுறதுக்காவது என் புருசன் பணம் செலவு ஆவட்டும். நான் இங்கியே இருந்துகிறன். புள்ளைங்களப் பாத்துக்கிறன். ஒரு ஆயா அம்மாவா என்ன வச்சிக் குங்க. புள்ளைங்ககூட இருந்தா பொழுது போறது தெரியாது. இந்த மாதிரி புள்ளைங்களுக்கு ஒதவுனா புண்ணியம் கெடைக்கும். கடசிக் காலத்தில ஏதாச்சும் செஞ்சி நல்ல மோட்சத்துக்குப் போறன். அதுக்காச்சும் என்னெ வச்சிக்குங்க.” அழுதாள். கையெடுத்துக் கும்பிட்டாள்.

இளையராஜாவுக்கு என்ன தோன்றியதோ கூர்ந்து அவளையே பார்த்தான். பிறகு சமாதானப்படுத்துவது மாதிரி சொன்னான் “அழுவா தீங்க.”

“எனக்குப் பணம் வாண்டாம். காசு வாண்டாம். யார்கிட்டயாவது பேசணும். சிரிக்கணும். அழுவணும். அதுதான் எனக்கு வேணும். அதுதான் எனக்குப் பணம். தங்கம். சோறு. சாமி.” மீண்டும் கையெடுத்துக் கும்பிட்டாள்.

“பெத்த புள்ளை உசுரோட இருக்கும்போது நீங்க இப்பிடிப் பேசறதும் தப்பு. நான் சேக்குறதும் தப்பு. இது கோவத்தில, ஆத்திரத்தில பேசுற பேச்சு. உண்ம இல்லெ.”

“தாலி கட்டுன புருசன்னு ஒருத்தன் இருந்தா நான் எதுக்கு இங்க வரப்போறன்? நூறு புள்ளை இருந்தாலும் புருசன் மாதிரி வருமா?” வேக மாகக் கேட்டாள் லீலாவதி.

“சும்மா இரும்மா. ஒலகத்தில இல்லாத புருசன் மாதிரி திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்கிற.” செல்வம் கத்தினான். அவனை முறைப்பது மாதிரி பார்த்த லீலாவதி சொன்னாள் “ஒலகத்தில இல்லாத புருசன் இல்லெதான். ஆனா ஒலகத்தில இல்லாத அப்பன்டா ஒனக்கு.

அறுவது வயசுக்கும் மேல இருந்து என்னா செய்யப்போறம், நம்ப புள்ளையாச்சும் வேல, பொண்டாட்டி, புள்ளைன்னு இருக்கட்டும்ன்னு தூக்குல தொங்கிச் செத்த அப்பன் ஒலகத்தில யாருடா?” லீலாவதிக்கு அழுகை வந்துவிட்டது. அழுதுகொண்டே சொன்னாள் “ஒலகத்திலேயே நீதான் நல்ல புருசன். ஒம் பொண்டாட்டிதான் நல்ல பொண்டாட்டி. அப்பிடித்தான் இருக்கட்டும். நல்லா இருங்க. நீங்க நல்லா இருக்கிறத நானா தடுக்கப்போறன்? நீயும், ஒன் குடும்பமும் கெட்டுப்போயிடக் கூடாதுன்னுதான் நான் ராவும் பகலும் அழுவுறன். அதனாலதாண்டா நான் வீட்ட வுட்டு வந்தன். பெத்தப் புள்ளை சாவட்டும்ன்னு நெனைக் கிறவளாடா நானு?” லீலாவதியின் அழுகை நிற்கவில்லை.

“நீ எதையோ இக்கு வச்சிப் பேசுற. அத ஒடச்சி சொல்லு. எனக்குப் புரிய மாட்டங்குது.”

“ஒனக்கு ஒண்ணும் புரிய வாணாம். தெரிய வாணாம். என்னெ இங்கியே விட்டுட்டுப் போ. இந்த ஒரு ஒவகாரத்த மட்டும் நீ செஞ்சாப் போதும், ஒன்னெப் பெத்ததுக்கு.” லீலாவதி கத்தினாள்.

“கத்திக்கத்தியே மத்தவங்க வாய அடச்சிப்புடு.”

“ஆமாம், நான் கத்துறன். புத்திக் கெட்டுப்போயி. ஊருல இருக்கிற புள்ளைங்க மாதிரிதான நீயும் படிச்ச? பரீட்ச எழுதின? ஏன் எதிலயும் நீ பாசாவல? அப்பிடி நீ பாசாயி ஒரு வேலைக்கிப் போயிருந்தா ஒங்கப்பன் எதுக்குச் சாவப்போறான்? இந்த வேல இல்லன்னா ஒம் பொண்டாட்டி ஒனக்குக் கழுத்த நீட்டியிருப்பாளா? அந்தச் சோத்துக்கு இல்லாத நாயிவோ தான் ஒனக்குப் பொண்ணக் கொடுத்திருக்குமா?”

“எங்க வந்து என்னா பேசிக்கிட்டு இருக்கிற?” செல்வம் பல்லைக் கடித்தான்.

“சனங்களால ஏன் ஒண்ணா இருக்க முடியலங்கிறதுதான் எனக்குப் புரியல. நாய்கூட இருக்காங்க. பூன, ஆடு, மாடுகூட இருக்காங்க. ஆனா மனுசன்கூட இருக்க முடியல. விநோதமா இருக்கு” என்று சொல்லிச் சிரித்த இளையராஜா, “கடசியா ஒங்க முடிவுதான் என்ன?” என்று கேட்டான்.

“நான் இங்கியே இருந்துகிறன். அதுக்குண்டான காசக் கொடுத்திடுறன்.” லீலாவதி வெட்டிப் பேசினாள்.

“நீங்க என்னா சொல்றீங்க?”

“ஒருத்தராச்சும் சந்தோசமா இருக்கணும் சார்.”

“புரியல.”

“மூணு வருசமா எங்கம்மாவுக்கும் எம் பொண்டாட்டிக்கும் சண்ட வரும். ஒடனே போயிடும். ஆனா இப்ப கொஞ்ச நாளாவே அடிக்கடி சண்ட வந்துகிட்டே இருக்கு. சண்ட முடியவும் மாட்டங்குது. ரெண்டு பேருக்கும் இடையில என்னமோ இருக்கு. இதுக்கே எங்கம்மா பாத்து முடிவு பண்ணின பொண்ணுதான் எம் பொண்டாட்டி.”

“ஆமாம். ஆமாம். நல்ல பொண்ணுதான். தங்கம்ன்னு பேரு வைக்கல. அது ஒண்ணுதான் கொற.” லீலாவதி வாயைக் கோணிக் காட்டினாள். முகத்தையும் திருப்பிக்கொண்டாள்.

“நீங்க ரெண்டு பேரும் போட்டுக்கிற சண்டயில யாரு சாவுறது?” கோபமாகக் கேட்டான் செல்வம்.

அப்போது பத்து வயதுள்ள ஒரு பெண் உள்ளே வந்தாள்.

“என்னம்மா?” என்று இளையராஜா கேட்டான்.

“மத்தியானம் சாப்புடுறதுக்குத் தண்ணி இல்லியாம். சமையல்கார அக்கா சொல்லச் சொன்னாங்க.”

“சுத்தமா இல்லியா?”

“இல்லெ.”

“கரண்டு இன்னம் வல்லியா?”

“இல்லெ.”

“கரண்டு இருக்கும்போதே மோட்டாரப் போட்டுத் தண்ணி பிடிச்சி வச்சிக்குங்கன்னு எத்தன முற சொல்றன்?< கேட்டாதான? இப்பத்தான்

ஒரு நாளக்கி எட்டு மணி நேரம் கரண்ட நிறுத்துறாங்க. என்னா கவர் மண்டோ?” என்று சலித்துக்கொண்ட இளையராஜா, “நீ போ. இந்தா வர்றன். பசங்கள பின்னாடி போயி வௌயாடச் சொல்லு. ஒரே சத்தமா இருக்கு” என்று சொல்லி அந்தப் பிள்ளையை அனுப்பிவிட்டு “முடிவச் சொல்லுங்க. என்ன செய்யலாம்?” என்று அலுப்புடன் கேட்டான்.

“என்னால தெனம்தெனம் சாவ முடியாது சார்.”

“முடிவ சொல்லுங்க.”

“எல்லாருக்கும் கஷ்டமா இருக்கு சார். பணக் கஷ்டத்தத் தாங்கிக் கலாம்.”

“எல்லாருக்கும்ன்னா?”

“எங்கம்மா அமைதியா இருக்கணும். எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கு. அது கஷ்டப்படுறத என்னால பாக்க முடியல. ரெண்டு மூணு நாளா சாப்புடாமக் கெடக்கு. பணம் எவ்வளவு செலவானாலும் அது அமைதியா இருந்தா போதும் சார். பணத்த நான் கட்டிடுறன்.” செல்வம் சொன்னான்.

“முடிவுக்கு நீங்க ஏற்கனவே வந்திட்ட மாதிரி தெரியுது” என்று சொல்லிச் சிரித்தான் இளையராஜா. பிறகு “நான் இத பணத்துக்காக நடத் தல. புரிஞ்சிக்குங்க. பணம் சம்பாதிக்கணும்ன்னு நான் நெனச்சிருந்தா வியாபாரம் செய்யலாம். துணிக் கட, இட்லிக் கட நடத்தலாம். அரசி யலுக்குப் போவலாம். எங்கப்பாவே முன்னாள் எம்.எல்.ஏ.தான். செத்துப் போயிட்டாரு. எதுவும் வாணமின்னுதான் இதெ நடத்துறன். புரியுதா? மகன்னு நீங்க ஒரு ஆளு வல்லன்னா ஒரு கேள்வியும் கெடையாது. ஒடனே சேத்திருப்பன். அந்த மாதிரி பொய் சொல்லிச் சேந்தவங்களும் அஞ்சாறு பேரு இங்க இருக்காங்க.”

“சாரி சார். ஒங்களக் கஷ்டப்படுத்துறதுக்காக நான் அப்பிடிச் சொல்லல. நான் பக்கத்தில திருமுட்டத்திலதான் வேல செய்யுறன். குடியிருக்கன். வெளிநாட்டுல இல்லெ. நெனச்சா ரெண்டு மணி நேரத்தில வந்தி டலாம். வாராவாரம் வந்து பாத்திட்டுப் போறன். இல்லெ தெனம்கூட வந்து பாத்திட்டுப் போறன். பெத்த தாயப் பாக்காம எப்பிடி சார் இருக்க முடியும்? பெத்த தாயி சார்.” செல்வம் அழுதான்.

“அமைதியா இருங்க” என்று இளையராஜா சொன்னதைக் காதில் வாங்காத செல்வம், “மாசாமாசம் எவ்வளவு நான் தரணும்ன்னு மட்டும் சொல்லுங்க சார். கொடுத்திடுறன்.” என்று சொன்னான்.

“ஒங்க விருப்பம். கணக்கில்ல. கொடுக்கலாம். கொடுக்காட்டியும் இருக் கலாம். எதுவும் கட்டாயம் இல்லெ. ஒங்கள மாதிரியான ஆளுங்க பணம் கொடுத்தா பெரிய ஒதவியாத்தான் இருக்கும். கரண்டு பில் கட்ட ஒதவும்.” சிரித்தான் இளையராஜா.

மீண்டும் ஏதாவது குழப்பம் வந்துவிடுமே என்று பயந்த லீலாவதி “எனக்கு ரெண்டாயிரம் வருது. அத நான் கொடுத்துக்கிறன். நீ ஒரு சல்லிக் காசுகூடத் தரக் கூடாது. மீறிக் கொடுத்தா நான் அன்னிக்கே செத்திடுவன்.” சொன்ன வேகத்திலேயே முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

லீலாவதியைச் சீறுகிற பாம்பு மாதிரி பார்த்தான் செல்வம். ஆனால் அவள் அவனைப் பார்க்கவில்லை. செல்வத்தையும் லீலாவதியையும் மாறி மாறிப் பார்த்த இளையராஜா. “ஒரு நிமிஷம் வெளிய இருங்க” என்று செல்வத்திடம் சொன்னான். ஏன் என்பது மாதிரி பார்த்தாலும் ஒன்றும் சொல்லாமல் வெளியே போனான் செல்வம்.

லீலாவதியையே கூர்ந்து பார்த்த இளையராஜா கைப்பிள்ளைக்குச் சொல்வது மாதிரி சொன்னான் “நீங்க அனாத இல்லெ. மாசம் ரெண்டாயிரம் பென்ஷன் வருது. அத வச்சி சாப்புட்டுக்கிட்டு வீட்டிலேயே அமைதியா இருக்கலாம். அதுதான் ஒங்களுக்கு நல்லது.”

“நான் சண்ட போடற ஆளில்ல. ஊர் வம்பு பேசுற ஆளில்ல. என்னால ஒரு தொந்தரவும் வராது. உட்கார்ந்த எடத்த வுட்டு எட்டப் போவ மாட்டன். சொல்ற வேலயச் செய்வன்.”

“நீங்க சொல்றதெல்லாம் சரி.” என்று சொன்ன இளையராஜா சிறிது நேரம் பேசாமல் இருந்தான். பிறகு சொன்னான் “நீங்க ஏதோ பெரிய மனக்கஷ்டத்தில இருக்கீங்கன்னு தெரியுது. யாரால பிரச்சன? எதனால பிரச்சனன்னு தெரியல. எதனால வீட்ட விட்டு வந்தீங்கன்னும் தெரியல. கோவத்தில வீட்ட விட்டு வயசானவங்க வர்றது சரியில்ல. வீட்டுல இருந்தா ஒரு பிரச்சின. வெளிய வந்தா ஆயிரம் பிரச்சின வரும், தெரியுமா? தனியா இருக்கிறதுதான் சாவு.”

“யாராலயும் எனக்குப் பிரச்சன இல்லெ. என்னாலதான் பிரச்சன எனக்கு. வயசாயிடிச்சி. இடுப்பு எலும்பு ஒடிஞ்சிபோச்சி. புருசன் இல்லெ. இன்னம் சாவாம இருக்கன். அதுதான் பிரச்சன. சிக்கலு.” லீலாவதி வாயில் கையை வைத்துக்கொண்டு அழுதாள்.

“ஒலகத்தில வயசானவங்க எல்லாருக்கும் இருக்கிற பிரச்சனதான் இது. புதுசா ஒண்ணும் இல்லெ. ஒலகத்தில நம்பளுது ஒண்ணும் இல்லன்னு தெரிஞ்சிக்காததாலதான் எல்லாப் பிரச்சனயும். நீ, நான்ங்கற போட்டிதான் பிரச்சன. அப்பறம் ஆச, அதிகாரம்.”

“கெட்ட நடத்த உள்ள பொம்பள இருக்கிற வீட்டுல என்னால இருக்க முடியாது.”

“புரியல.”

“ஒண்ணுமில்ல. இஷ்டப்பட்டா சேத்துக்குங்க. இல்லன்னா வுட்டுடுங்க. சாவறதுக்கு ஒலகத்தில வழியா இல்லெ. கடசி ஆச கேட்டுப் பாப் பம்ன்னு வந்தன்.” லீலாவதி அழுதாள்.

லீலாவதிக்கு அவசரப்பட்டு செல்வத்திடமும் சரி, மற்றவர்களிடமும் வார்த்தையை விட்டுவிட்டோமோ என்று பயம் வந்தது. உயிர் போனாலும் செல்வத்திடம்கூடச் சொல்லக் கூடாது என்று நினைத்திருந்த விசயம் எப்படி வாயிலிருந்து வந்தது? எது வெளியே தெரியக் கூடாது, எதற்காக வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று நினைத்தோமோ அதையே சொல்லிச் சேர வேண்டுமா? செத்தாலும் சரி, வாயைத் திறக்கக் கூடாது என்று நினைத்தாள்.

கலாமணியின் மீது ஒரு நாளும் இல்லாத அளவுக்கு இப்போதுதான் அவளுக்குக் கோபம் உண்டாயிற்று. எங்கே வந்து உட்கார வைத்துவிட்டாள்? ஒரு வருசமாக எப்படி அவளுடைய நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது? எப்போது செல்வம் அவளுக்கு செல்போன் வாங்கி கொடுத் தானோ அதிலிருந்துதான் எல்லா மாற்றமும் ஆரம்பித்தது. பேச்சில், நடத் தையில், சிரிப்பில், உடையில், வெளியே போவதில் என்று எல்லாமும் தலைகீழாகிவிட்டது. செல்வம் வீட்டை விட்டுக் கிளம்பினால் போதும், மறுநொடியே செல்போனில் பேச ஆரம்பித்துவிடுவாள். குறைந்தது அரை மணி, ஒரு மணி நேரம் பேசுவாள். கேட்டால் ‘அம்மாவிடம் பேசினேன், அண்ணனிடம் பேசினேன்’ என்று சொல்வாள். பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்தில் விடப் போகிறேன் என்று போவாள். போனால், திரும்பி வரு வதற்கு ஒரு மணி நேரம் ஆகும். சாயங்காலம் பிள்ளைகளைக் கூப்பிடப் போகிறேன் என்று போனால் அதற்கும் ஒரு மணி நேரம் ஆகும். பத்து நாட்களுக்கு முன் கலாமணிக்கும் லீலாவதிக்கும் பெரிய சண்டை நடந்தது. செல்வம் அலுவலகம் போன மறுநொடியே ஜோடித்துக்கொண்டு வெளியே கிளம்பிப் போனவள், சாயங்காலம் நாலு மணிக்குத்தான் வந் தாள். வீட்டுக்கு வந்த கலாமணியிடம் “எங்க போன? எப்ப திரும்பி வர்ற? நீ செய்யுறது குடும்பத்துக்கு ஏத்ததா? ரெண்டு புள்ளை இருக்கிறத மறந்திடாத. செல்வத்துக்குத் தெரிஞ்சா என்னா ஆவும் தெரியுமா?” என்று லீலாவதி கேட்டதற்குக் கலாமணி சொன்ன பதில் செருப்பால் அடித்த மாதிரி இருந்தது.

“சொல்லு. என்னா சொல்லணுமோ சொல்லு. ஒலகத்திலியே ஒம் மவன் தான் மன்மத ராசாவா? எத ஆக்கி வச்சாலும் அத அப்பிடியே தின்னு தீத்துடுவாரா? எத ஆக்கி, படச்சி வச்சாலும் மூந்துமூந்து பாத்திட்டுப் போற ஆளுதான?”

“அப்பிடின்னா ரெண்டு புள்ளை எப்பிடிப் பெத்த?”

“நீ பெத்த மாதிரிதான்.”

“சரிதான். ரெண்டு புள்ளை இருக்கு. அத மறந்திடாத.”

“நீ செத்தாத்தான் எனக்கு நிம்மதி. நீ என்னிக்கு மண்ணுக்குள்ளாரப் போற நாள் வருமோ?” என்று சொன்னதைவிடப் பெரிய கஷ்டமாக இருந் தது “எத ஆக்கி வச்சாலும் மூந்துமூந்து பாத்திட்டுப் போற ஆளுதான?” என்ற வார்த்தை. லீலாவதியை நெருப்பில் தள்ளியது மாதிரி இருந்தது. கலாமணி சொன்ன வார்த்தையைச் செல்வத்திடம் சொன்னால் என்ன நடக்கும்? ஒருநாள் இல்லை ஒருநாள் சொல்லிவிட நேர்ந்தால் குடும்பம் என்னாகும் என்று யோசித்த லீலாவதி அப்போதுதான் இனி வீட்டில் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தாள். வீட்டிலேயே இருந்தால் கலா மணி செய்வதைப் பொறுத்துக்கொள்ளவும் முடியாது, செல்வத்திடம் சொல்லவும் முடியாது. மீறிச் சொன்னல் குடும்பம் அழிந்துபோகும் என்று நினைத்துத்தான் வந்தாள். ஆனால் அதைச் சொல்லும்படி இளையராஜா கேட்கிறான். உயிர் போனலும் சொல்லக் கூடாது என்று முடிவெடுத்து வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

“என்னம்மா ஒண்ணும் சொல்லாம உட்கார்ந்திருக்கீங்க?” என்று இளையராஜா கேட்டான். லீலாவதி வாயைத் திறக்காததால் எழுந்து சென்று ஹாலில் நின்றுகொண்டிருந்த செல்வத்தை அழைத்துக்கொண்டு வந்தான்.

“எங்கம்மா என்ன சொல்றாங்க?” என்று சிரித்துக்கொண்டே செல்வம் கேட்டான்.

“ரொம்ப மன அழுத்தத்தில இருக்காங்க. மனசுல ஏதோ பெரிய காயம் இருக்கு. கொஞ்ச நாள் இருக்கட்டும். பின்னால என்னா நடக்குதுன்னு பாக்கலாம்.” எந்த ஈடுபாடும் இல்லாமல் சொன்னான் இளையராஜா.

“நல்லதுதான் சார். இடம் மாறி இருக்கட்டும்.”

“என்னிக்கும்மா வர்றீங்க?” இளையராஜா கேட்டான்.

“நான் ஏற்கனவே வந்துட்டன். இப்பிடியே இருந்துக்க வேண்டியது தான்.”

“சரிதான்.” இளையராஜா சிரித்தான். பிறகு செல்வத்தின் பக்கம் பார்த்து “ஏதாச்சும் கொண்டாந்து கொடுக்கிறதா இருந்தா கொண்டாங்க” என்று சொன்னான்.

“என்னம்மா எடுத்தாரணும்?” செல்வம் ரொம்பவும் அக்கறையுடன் கேட்டான்.

“எதுவும் வாணாம். நீ போயி ஒன் பொழப்பப் பாரு. குடும்பத்தப் பாரு.” வெடுக்கென்று சொன்னாள்.

“மாத்துத் துணிகூட வாணாமா?”

“வாணாம்.” ஒரே வெட்டாகப் பேச்சை வெட்டினாள்.

“அவுங்க ரொம்ப கோபமா இருக்காங்க. நீங்க போயிட்டு அப்பறமா வாங்க. பேசிக்கலாம்” என்று செல்வத்திடம் சொன்ன இளையராஜா “உள்ளார வாங்க. மத்தவங்களக் காட்டுறன். நீங்க எங்க படுக்கணும், எங்க இருக்கணும்ங்கிறத பாப்பம். ஒங்க வேலய நீங்கதான் பாத்துக்கணும்.

சமையல் செய்ய ஒதவணும். கூட்ட, பெருக்க செய்யணும். சமைக்கிறதுக்கு மட்டும்தான் இங்க ஆள் இருக்கு. சின்னப் புள்ளைங்களப் பாத்துக்கணும்.” என்று சொல்லிவிட்டுச் செல்வத்தின் பக்கம் திரும்பி “நான் விழுந்தா நீங்க தூக்கிவிடணும். நீங்க விழுந்தா நான் தூக்கிவிடணும்.

அதுக்காகத்தான் மனுசங்க சேந்து வாழறது. அதுக்காகத்தான் சொந்தம் வச்சிக்கிறதெல்லாம். அத மட்டும் நீங்க மனசுல வச்சிக்குங்க. ரெண்டாயிரத்தி பதினாலுலியே ஒலகம் இப்பிடியிருந்தா இன்னம் அம்பது வரு சம் கழிச்சி எப்பிடி இருக்கும்? நெனைக்கவே பயமா இருக்கு” என்று

சொல்லிவிட்டு எழுந்து ஹாலுக்குப் போனான்.

“ஒனக்குத் தலயெழுத்தாம்மா?” என்று சொன்ன செல்வம் அழுதான். லீலாவதி அழவில்லை.

மடியில் வைத்திருந்த சிறு பொட்டலத்தை எடுத்துச் செல்வத்தின் கையில் திணித்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் லீலாவதி. பின்னாலேயே வந்த செல்வம் லீலாவதி கொடுத்த பொட்டலத்தைத் திருப்பிக் கொடுக்க முயன்றான். வெறுப்புடன் முகத்தைச் சுளித்துக்கொண்டு சொன்னாள் “அது ஒனக்குச் சேர வேண்டிய பொருளுதான்.”

“சார் நீங்க கிளம்புங்க. நாளக்கி வாங்க பேசிக்கலாம். எனக்கு வேல இருக்கு.” என்று இளையராஜா சொன்னான்.

“நாளைக்கோ, நாளான்னைக்கோ வந்து பாக்குறன் சார்” என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த பொட்டலத்தை லீலாவதியிடம் கொடுக்க முயன்றான். அவள் தூரமாக நடக்க ஆரம்பித்ததும் இளையராஜாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வெறுப்புடன் வெளியே வந்தான்.

லீலாவதி கொடுத்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தான். மூக்குத்தி, தோடு, இரண்டு மோதிரம் இருந்தது. நூறு ரூபாய் நோட்டுகள் முப்பது இருந்தன. செல்வத்தின் முகம் பிரகாசமானது. பெரிய பாரத்தை இறக்கி வைத்தது மாதிரி பெருமூச்சுவிட்டான். பெரிய ஆபத்திலிருந்து தப்பித்த மாதிரி, அவனுடைய மனது லேசானது. தனக்கு இனி உலகில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது மாதிரி உற்சாகமாக சிகரெட்டைப் பற்றவைத்தான். ஒரு சினிமாப் பாட்டை முனகியபடி பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அனாதை இல்லத்தின் வாசல் கதவு ஓரம் மறைந்து நின்று செல்வம் நடந்து போவதையே பார்த்து அழுதுகொண்டிருந்த லீலாவதியை மட்டுமல்ல, அந்தக் கட்டடத்தையும் அவன் ஒரு முறைகூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

* * * * *

இமயம்