இமயம்
இலக்கியக் களஞ்சியம்

தேடல்எழுத்துலகைத் தேடுங்கள்.

நூல்கள் · சிறுகதைகள் · கட்டுரைகள் · நேர்காணல்கள்

ஈசனருள்
இமயம் · சிறுகதைகள்

ஈசனருள்

வாசிப்பு முறை
கதைக்குள் நுழைய
இமயம்

ஈசனருள்

வாசிப்பு
19

“பால் ஊத்துங்க. உசுரு அடங்கிடும்” கோசலைப் பாட்டி சொன்னாள்.

“மூணு நாளாகியும் புண்ணியமில்ல” என்று ஒரு தினுசாக சிவபுண்ணியத்தின் மனைவி தில்லையம்மாள் சொன்னாள்.

“மனசுல அவ்வளவு ஆச இருக்கணும். அதான் உசுரு அடங்க மாட்டங்குது.” கோசலை சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“இழுத்துக்கிட்டு கிடக்கிறதவிட உசுரு அடங்குறதுதான் நல்லது. மூணு

நாளாக் கஷ்டப்படுறாங்க. எப்பிடி இருந்தவங்க இப்பிடிக் கஷ்டப்படுறாங்க.” சிவலோகத்தின் மனைவி செல்லம்மாள் சொன்னாள்.

“யார் வீட்டுல பசும்பால் இருக்கு?” கோசலை கேட்டதும் செல்லம் மாளின் மகள் புனிதவதி “எங்க வீட்டுல இருக்கு. எடுத்துக்கிட்டு வர்றன்” என்று சொல்லிவிட்டு, எழுந்து தன்னுடைய வீட்டை நோக்கி ஓடினாள்.

வீட்டுக்குள்ளிருந்து புனிதவதி ஓடிவந்ததைப் பார்த்ததும் வாசலில் நின்றுகொண்டிருந்தவர்களும் உட்கார்ந்திருந்தவர்களும் பதட்டத்தோடு “என்னா ஆச்சி? முடிஞ்சிடிச்சா?” என்று கேட்டனர்.

“ஒண்ணுமில்ல. பால் எடுத்துக்கிட்டு வரப் போறன்” என்று சொல்லி விட்டுப் போனாள் புனிதவதி.

வாசலில் உட்கார்ந்திருந்த கலியம்மாள் சொன்னாள்: “ஒரு உசுரக் கொல்றதுக்குச் சனங்க எம்மாம் பாடு படறாங்க.”

புனிதவதி போன வேகத்திலேயே பசும்பாலை எடுத்துக்கொண்டு வந் தாள். “காலயிலதான் ஊத்துனமே. நல்ல சேதி ஒண்ணுமில்ல. இப்பயும் ஊத்தணுமா?” தில்லையம்மாள் கேட்டாள்.

“ஊத்திப்பாப்பம்” என்று சொன்ன கோசலை, “முதல்ல சொந்தக் காரங்க ஊத்துங்க” என்று சொன்னாள். புனிதவதி தேக்கரண்டியை எடுத் துக் கொடுத்தாள்.

“நீயே முதல்ல ஊத்து” கோசலை சொன்னாள்.

“அப்பாகிட்ட கேக்க வாண்டாமா?”

“கேட்டா கோவப்படுவாரு. எத்தன முற பாலு ஊத்துறதுன்னு கேப் பாரு. பரவாயில்ல, நீ ஊத்து” என்று செல்லம்மாள் சொன்னாள். எந்த நினைவும் இல்லாமல் கிடந்த சந்திரவதனத்தின் வாயில் புனிதவதி ஒரு தேக்கரண்டிப் பாலை ஊற்றினாள். வெடிப்பில் ஊற்றிய தண்ணீர் மாதிரி சந்திரவதனத்தின் வாய்க்குள் பால் இறங்கியது.

“உரிம உள்ளவங்க எல்லாம் ஊத்துங்க.” கோசலை சொன்னாள். புனிதவதிக்குப் பிறகு செல்லம்மாள் பால் ஊற்றினாள். அவளுக்கு அடுத்து தில்லையம்மாள் ஊற்றினாள். பிறகு அந்த இடத்திலிருந்த பெண்கள் ஒவ் வொருவராக ஒவ்வொரு தேக்கரண்டி பாலை ஊற்றினார்கள். எவ்வளவு ஊற்றினாலும் சந்திரவதனத்தின் வாய் உள்ளே வாங்கியதே தவிர வெளியே தள்ளவில்லை. பெண்கள் ஆச்சரியப்பட்டனர். இன்றும் உயிர் அடங்காது என்று கவலைப்பட்டனர். சந்திரவதனத்துக்குக் கல்யாணமாகவில்லை. அப்பா அம்மாவும் இல்லை. உடன்பிறந்தவர்கள் என்றும் யாருமில்லை. அவளுடைய பெரியப்பா மகன்களான சிவலோகமும், சிவபுண்ணியமும் அவர்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும்தான் நெருங்கிய சொந்தம். அவர்கள்தான் சந்திரவதனத்தின் உயிர் சீக்கிரம் போக வேண்டும் என்று விரும்பினார்கள்.

புனிதவதி வெளியே வந்து “நீங்க வந்து பால் ஊத்துங்கப்பா. அத்த

உயிர் அடங்கிடும்.” சிவலோகத்திடம் சொன்னாள்.

“பால் ஊத்துற மாதிரியா அது நடந்துகிட்டுது?” சிவலோகம் கேட்

டார். புனிதவதி பதில் பேசவில்லை.

“உள்ளாரப் போ” என்று சொன்னார். எதிர்த்துப் பேச முடியாமல் நின்றுகொண்டிருந்தாள் புனிதவதி. அப்போது சிவபுண்ணியத்தின் மனைவி தில்லையம்மாள் வெளியே வந்து “பால் ஊத்த வாங்க. உசுரு அடங்குனாத்தான அடுத்த வேல பாக்க முடியும்?” என்று கூப்பிட்டதும் மறுவார்த்தை பேசாமல் சிவபுண்ணியம் எழுந்து போனார். போன வேகத் திலேயே பாலை ஊற்றிவிட்டு வந்தார். அவரைப் பார்த்து சிவலோகமும் பால் ஊற்றப் போனார். அவருக்குப் பின்னால் புனிதவதியும் போனாள்.

எல்லாரும் பால் ஊற்றி முடிந்துவிட்டதும் “கலியம்மாவப் பால் ஊத்தச் சொல்லலாமா? அவ ஊத்தினா சந்திராவோட உசுரு அடங்கிடும்” என்று கோசலை சொன்னதும், அந்த இடத்திலிருந்த எல்லாப் பெண்களுமே முகத்தைச் சுளித்தனர். கோசலையிடம் சண்டைக்குப் பாய்ந்தனர். மற்ற வர்களைக் காட்டிலும் தில்லையம்மாள்தான் சீறி விழுந்தாள்.

“அவுங்கதான் சாதிய வுட்டுட்டாங்க. அதுக்காக மத்தவங்களும் சாதிய வுட்டுடணுமா? காலம் மாறிட்டா சாதியும் மாறிடுமா?”

கோசலை பதில் சொல்லவில்லை. ஆனாலும் கலியம்மாள் பால் ஊற்றி னால் சந்திரவதனத்தின் உயிர் சிரமப்படாமல் போகும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது. இதே எண்ணம் புனிதவதிக்கும் இருந்தது. ஆனால் இருவருமே வெளியே சொல்லவில்லை.

தில்லையம்மாளை அடுத்து உட்கார்ந்திருந்த பெண்கள், சந்திரவதனம்

கலியம்மாளுக்கு அதிகமாக இடம்கொடுத்துவிட்டதாகப் பேச ஆரம்பித் தனர். சற்று முன்புவரை சந்திரவதனத்தின் உயிர் அடங்கவில்லையே

என்று கவலைப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்போது அவ ளுடைய நடத்தையைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். அந்த இடத்தில்

சந்திரவதனம்பற்றி யாருமே ஒரு வார்த்தைகூட நல்ல விதமாகச் சொல்ல

வில்லை. ரேடியோ கேட்டது, ரேடியோ நாடகம் கேட்டது, சினிமாப் பாட்டுப் புத்தகம் படித்தது, அதிகமாக சினிமா பார்த்தது, இருபத்திநான்கு மணி நேரமும் சினிமாப் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தது, ஊர் ஊராகக் கோவில்களில் தேவாரம், திருவாசகம் பாடப் போனது, தெருவிலுள்ள பெண்களையெல்லாம் சினிமாப் பாட்டுப் பைத்தியமாக மாற்றியது, திமிர்த்தனத்தால் கல்யாணம் கட்டிக்கொள்ளாதது, எல்லா வற்றுக்கும் மேலாக, இரவும் பகலும் கலியம்மாளைத் தன்னுடனேயே தங்கவைத்துக்கொண்டது பற்றியெல்லாம் பேசினார்கள். அதுவும் கட்

டிலில் கிடத்தியிருக்கும் சந்திரவதனத்தைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு

தான் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவது சந்திரவதனத்துக்குக் கேட்கலாம். ஆனால், எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது; சிறு துரும் பைக்கூட அவளால் எடுத்துப்போட முடியாது. அவள் வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் ‘சிவனே’, ‘ஈஸ்வரா’ என்ற வார்த்தைகளைக்கூட இப்போது அவளால் சொல்ல முடியாது. அவளுக்கு நினைவு தவறி மூன்று நாட்களாகிவிட்டன. யார் என்ன பேசினாலும் அவளுடைய காதுக்குப் போய்ச் சேருமா? ஆனால், தெரு வாசலை ஒட்டி உட்கார்ந்திருந்த கலி

யம்மாளுக்கு வீட்டுக்குள் இருந்த பெண்கள் பேசிக்கொண்டது தெளி வாகவே கேட்டது. அவர்கள் பேசுவதற்குக் காரணம் இருந்தது.

கலியம்மாள் தாண்டவராயனுக்கு மனைவியாகத் தாலி கட்டிக் கொண்டு கொக்குத்துறைக்கு வந்தபோது அவளுக்கு இருபத்திரண்டு வயது. தில்லைவனம் வீட்டில் தாண்டவராயனும், அவனுடைய அப்பா

வும் வேலைசெய்துகொண்டிருந்தனர். கொக்குத்துறைக்கு வந்த ஆறாவது நாள்தான் தில்லைவனம் வீட்டுக்குக் கலியம்மாள் போனாள். அப்போது தில்லைவனம் இல்லை. அவருடைய மனைவி மரகதம்தான் இருந்தாள். கலியம்மாளின் வயதுதான் அவளுக்கும். மறுநாளிலிருந்து தினமும் போனாள். வாசலைத் தாண்டி அடி வைக்க மாட்டாள். கூடுதலாக ஒரு

வார்த்தை பேச மாட்டாள். எப்போது வந்தாலும் வீட்டுக்குப் பின்புற மாகவே வந்து, பின்புறமாகவே போவாள். வார்த்தைக்கு வார்த்தை ‘சாமி, சாமி’ என்று சொல்வாள். மீறினால் ‘பாப்பா’ என்று சொல்வாள். எவ்வளவு வேலை வைத்தாலும் முகம் சுளிக்காமல் செய்வாள். வீட்டுக்குப் போக வேண்டும், புருசன் தேடுவான், பிள்ளை தேடும் என்று அவசரமாக ஓட மாட்டாள். தில்லைவனத்தைக் கண்டால் பத்து இருபதடி தூரம் தள்ளி நின்றே பேசுவாள். எந்த வேலை சொன்னாலும் “அப்பறம்” என்றோ “நாளைக்குச் செய்யுறன்” என்றோ சொல்ல மாட்டாள். கொடுப்பதை மட்டும் வாங்கிக்கொள்வாள். போடுவதை மட்டும் சாப்பிடுவாள். அத னால் மரகதத்துக்குக் கலியம்மாளைப் பிடித்துப்போய்விட்டது.

கொக்குத்துறைக்குக் கலியம்மாள் வந்து ஐம்பத்திரண்டு, ஐம்பத்தி

மூன்று வருஷமாகிவிட்டது. அதுகூட அவளுடைய பெரிய மகனுடைய வயதை வைத்துத்தான் தனக்கு இத்தனை வயதாகிறது, இந்த ஊருக்கு வந்து இத்தனை வருஷமாகிறது என்ற கணக்குச் சொல்வாள். இத்தனை வருஷத்தில் அவள் தில்லைவனம் வீட்டுக்கு வராத நாள் எத்தனை என்று எண்ணிவிடலாம். முதல் பிள்ளை அமாவாசை பிறந்தபோது எட்டு, ஒன்

பது நாள் வரவில்லை. இரண்டாவதாக அன்னக்கிளி பிறந்தபோது ஏழெட்டு நாள் வரவில்லை. மூன்றாவது பிள்ளை செல்லக்கிளி பிறந்தபோது நான்கு நாள் மட்டும்தான் வீட்டிலிருந்தாள். மூன்று பிள்ளைகளுக்கும் கல்யாணம் நடந்தபோதும் பெண்ணும் மாப்பிள்ளைகளும் உள்ளூர் என்பதால் மாப்பிள்ளை வீடு பார்க்கப்போகிறேன், பெண் வீடு பார்க்கப் போகிறேன் என்று எங்கும் போகவில்லை. கல்யாணம் நடந்த மூன்று நாளும் போகவில்லை. அவ்வளவுதான். இத்தனை வருஷத்தில் குளிர் சுரம், தலைவலி, மண்டைவலி என்று சூர் போட்டுக்கொண்டு வீட்டில் இருந்ததில்லை. மீறி இருக்க முயன்றாலும் தாண்டவராயன் விட மாட்டான். “போ. போ. ஓடு. தேடுவாங்க. கூப்புடுவாங்க. கோபப்படுவாங்க” என்று துரத்துவான். கூடவே அவனும் வருவான். தூங்கி எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தால் மாட்டுப்பட்டியிலிருந்து, தெருக் கூட்டுவது

வரை எல்லா வேலைகளையும் முடித்து, போடுவதைச் சாப்பிட்டுவிட்டு வயலுக்குப் போவாள். சாயங்காலம் வயலிலிருந்து மீண்டும் தில்லை

வனத்தின் வீட்டுக்கு வருவாள். மரகதம் சொல்கிற வேலைகளைச் செய் வாள். பிறகு போடுவதைச் சாப்பிட்டுவிட்டு படுப்பதற்குத்தான் வீட்டுக்குப் போவாள். தாண்டவராயனும் அப்படித்தான்.

மரகதம் சாகும்போது சந்திரவதனத்துக்கு ஐந்து வயது. எப்போதும்

கோழி கூப்பிட்டவுடன் தோட்டத்துக்குப் போய்விட்டு, வீட்டுக்குப் பின் புறம் இருக்கும் குளத்தில் குளித்துவிட்டு வந்து பால் கறப்பாள். அடுப்பைப் பற்றவைத்து காப்பி போட்டு, முதல் காப்பி குடிக்கும்போது லேசாக இருள் விலகியிருக்கும். அன்றும் அப்படித்தான் தூங்கி எழுந்ததுமே தோட்டத்துக்குப் போயிருக்கிறாள். அரவான் தீண்டிவிட்டது. வண்டி வைத்துக்

கொண்டு பக்கத்து ஊர் பாம்புக்கடி வைத்தியரிடம் போவதற்குள் உடம்பு முழுவதும் விஷம் ஏறித் தலை தொங்கிவிட்டது. உயிர் போய்விட்டது.

மரகதம் செத்த பிறகு தில்லைவனம் வீட்டில் கலியம்மாள் இருக்கிற நேரம் அதிகரித்தது. மரகதம் செத்ததும் மறுகல்யாணம் கட்டிக்கொள்ள உறவினர்கள் தில்லைவனத்தைக் கட்டாயப்படுத்த ஆரம்பித்தார்கள்.

சாதிக்காரர்கள், தெருக்காரர்கள், ஊர்க்காரர்கள் என்று எல்லாருமே சொல்

லிப்பார்த்தார்கள். யார் என்ன சொன்னாலும் “பார்க்கலாம்” என்ற வார்த்தையை மீறி அவர் மறுவார்த்தை பேசவில்லை. அப்படி இப்படி

என்று காலம் ஓடிவிட்டது. தில்லைவனம் கடைசிவரை இரண்டாம் கல்யாணம் கட்டிக்கொள்ளவில்லை.

அப்படிக் கட்டியிருந்தால் கலியம்மாள் தில்லைவனம் வீட்டில் இருக்

கும் நேரம் குறைந்திருக்கும். சந்திரவதனம் வயதுக்குவந்தவுடனே கல் யாணமாகி வெளியூர் போயிருந்தாலும் தில்லைவனம் வீட்டுக்குக் கலி

யம்மாள் வருவது குறைந்திருக்கும். தில்லைவனம் சாவதற்கு ஒரு வரு

ஷத்துக்கு முன்புதான் தாண்டவராயன் செத்தான். பத்து வருஷமாகிவிட்

டது. தில்லைவனம் செத்த பிறகு கலியம்மாள் இரவும் பகலும் சந்திர வதனத்தோடு இருக்கும்படியாகிவிட்டது. மகனும் சரி, மகள்களும் சரி,

“ஏன் அங்கேயே தங்குகிறாய்?” என்று ஒருநாளும் கேட்டவர்களில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் குளிப்பதற்காகவும், துணி மாற்றுவதற்காகவும் வீட்டுக்குப் போவாள். ஒரு மணி நேரம்கூட அதற்கு ஆகாது. அதற்குள் சந்திரவதனம் ஆள் விட்டுக் கூப்பிட்டுவிடுவாள். “ஒரு

ஆளு குளிக்கிறதுக்கு எம்மாம் நேரம் ஆவும்?” என்று சந்திரவதனம் கேட் பாள்.

“தலயில ஒரு வட்டா தண்ணிய ஊத்துன வேகத்திலதான் பாப்பா திரும்பி வர்றன்” என்று கலியம்மாள் சொல்வாள்.

“ஒன்னோட வீடு பத்து மைலு தொலைவுலியா இருக்கு? ரெண்டு தெரு தள்ளிப் போனா கொளம் வந்துடும். கொளத்தைத் தாண்டி ஒரு தெரு இருக்குமா? இந்த எடத்துக்குப் போயிட்டு வர ஒனக்கு அர நாளாகுமா?”

“ஒன்னெ வுட்டுட்டு நான் எங்க பாப்பா போவப்போறன்?”

என்றைக்கெல்லாம் கலியம்மாள் குளிக்கவும், துணி மாற்றவும் போகி றாளோ, அன்றெல்லாம் தவறாமல் சந்திரவதனம் இதே கேள்வியைத்தான் கேட்பாள். கலியம்மாளும் சொன்ன பதிலையேதான் சொல்வாள்.

தில்லைவனம் இறந்த பிறகு கலியம்மாள் வயலுக்குப் போவதையும் நிறுத்திவிட்டாள். தாண்டவராயனும் இல்லை. மகன், மகள்கள் என்று மூன்று பேருக்கும் கல்யாணமாகிவிட்டதால் வீட்டிலும் வேலை இல்லை. பொழுது முழுவதும் சந்திரவதனம் திண்ணையில் உட்கார்ந்திருந்தால் கலியம்மாள் வாசலில் உட்கார்ந்திருப்பாள்; சந்திரவதனம் வீட்டுக்குப் பின்புறம் தோட்டத்தில் உட்கார்ந்திருந்தால், அவளுக்கு ஏழெட்டு அடி

தள்ளி இவள் உட்கார்ந்திருப்பாள். சாயங்காலமானதும் சிவன் கோவி

லுக்குப் போகும்போது கூடவே போய்க் கோவில் வாசலில் நின்று கொண்டிருப்பது, சாமி கும்பிட்டுவிட்டுச் சந்திரவதனம் வெளியே வந்த தும் நிழல் மாதிரி பின்னாலேயே நான்கைந்தடி தள்ளி வருவது, காப்பி கொடுத்தால் குடிப்பது, சாப்பாடு போட்டால் சாப்பிடுவது. இரவில் மாட்டுக் கொட்டகையில் படுத்துக்கொள்வது; அவ்வளவுதான் வேலை. கலியம்மாள் சாப்பிடுவதற்கென்று தனித் தட்டு, தண்ணீர் குடிப்பதற்குத் தனிச் சொம்பு, காப்பி குடிப்பதற்கென்று தனித் தம்ளர் இருந்தது. நடக்கிற இடமும், புழங்குகிற இடமும் தனியாக இருந்தாலும் கலியம்மாளுக்குச் சந்திரவதனம் அதிக இடம் கொடுப்பதாகத் தெருவில் உள்ளவர்கள், ஊர்க்காரர்கள் மட்டுமல்ல, சிவலோகமும், சிவபுண்ணியமும் பலமுறை சொல்லியிருக்கிறார்கள், திட்டியிருக்கிறார்கள். எல்லாருக்கும் ஒரே பதில் தான் சந்திரவதனம் சொல்வாள்: “நான் சாவுறவரைக்கும் கலியம்மா எங்கூடத்தான் இருப்பா.”

“நவுரு நவுரு.” மூன்று நான்கு பேர் கத்திய சத்தத்தில்தான் கலியம்மாள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். பிணம் வைக்கிற கண்ணாடிப் பெட்டி

யைக் கொண்டுவந்து வைத்தார்கள். அதைப் பார்த்ததும் அவளுக்குப் பயங்கரக் கோபம் வந்தது. “உசுரு அடங்குறதுக்குள்ளாற எதுக்குப் பொணப் பொட்டியக் கொண்டாந்து வைக்கிறாங்க?” அவளுடைய கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை. அவளை ஒரு ஆளாகவே அங்கு யாரும் பொருட்படுத்தவில்லை. அப்போது எதற்காகவோ வெளியே வந்த புனித

வதியிடம் “எதுக்கு அதுக்குள்ளாற பொணப் பொட்டியக் கொண்டாந் திட்டாங்க?” என்று வேகமாகக் கேட்டாள்.

“முன்னாடியே எல்லாத்தயும் ரெடி பண்றாங்க.”

“உசுரு போறதுக்குள்ளாறியா?”

“நீ எதுவும் பேசாம இரு.”

“சாவுறதுக்குள்ளாறியே பொணப் பொட்டியக் கொண்டாந்து வச்

சிருக்கிற அதிசயத்த இங்கதான் பாக்குறன்.”

“எப்ப வேணுமின்னாலும் உயிர் போவலாம். அவசரத்துக்குப் போயி கேட்டா கிடைக்காது. இப்பவே வாட அடிக்குது.” சத்தமில்லாமல்

சொல்லிவிட்டுப் புனிதவதி எதிர் வீட்டுப் பக்கம் போனாள்.

“என் தங்கத்தோட ஒடம்பு நாத்தமடிக்குதா? ஐயோ கடவுளே!” கலி யம்மாள் வாயில் அடித்துக்கொண்டாள்.

அமாவாசையினுடைய மனைவியும் அவளுடைய மூன்று பிள்ளை களும் வந்தனர். அவர்களிடம் ஒரு வார்த்தைகூடக் கலியம்மாள் பேச

வில்லை. சிவலோகத்துக்குச் சிறிது தள்ளி நின்றுகொண்டிருந்த அமா வாசை கலியம்மாளுக்குப் பக்கத்தில் வந்து நின்றான். அவனிடமும் அவள்

ஒரு வார்த்தை பேசவில்லை. அமாவாசையும் அவனுடைய மனைவியும் அழுதனர். அதைப் பார்க்கப் பொறுக்காமல் எழுந்து வீட்டின் பின்

புறத்துக்குப் போனாள்.

சாயங்கால நேரத்தில் சந்திரவதனம் கட்டில் போட்டு உட்கார்ந்திருக்

கும் இடத்தைப் பார்த்தாள். இருட்டுவதற்கு முன்பு கட்டிலில் உட் கார்ந்துகொண்டு அவள் காப்பி குடிப்பது ஒரு அழகாக இருக்கும். பேசுவது ஒரு அழகாக இருக்கும். சிரிப்பது ஒரு அழகாக இருக்கும். பேசாமல் இருப்பதுகூட அழகாகத்தான் இருக்கும். குளித்துவிட்டுத் தலைமுடியைக் காயவைப்பது ஒரு அழகாக இருக்கும். வயதான பிறகும் தெருவில் நடக்கும்போது புதிதாக வயதுக்குவந்த பெண் மாதிரி குனிந்த தலை நிமிராமல் நடப்பது ஒரு அழகாக இருக்கும். எப்போதுமே காப்பிப் பொடி நிறச் சீலைதான் கட்டுவாள். மூக்குத்தி, தோடு, இரண்டு கைகளிலும் ஒரு ஜோடி வளையல், கழுத்தில் நூல் மாதிரி ஒரு சங்கிலி, அவ்வளவுதான் அவள் போட்டிருந்த மொத்தத் தங்கம். அவளுடைய நிறத்துக்கும், உடல் வாட்டத்துக்கும், முக வாட்டத்துக்கும் எவ்வளவு தங்கம் போட்டாலும் அதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். நகை போட்டாலும் அழகுதான். போடாவிட்டாலும் அழகுதான். பாடும்போது, பாட்டுக்கு விளக்கம் சொல்லும்போது ஒரு அழகு இருக்கும். சந்திரவதனத்தைப் பற்றி ஒவ் வொன்றாக நினைத்துப்பார்த்தாள். அப்போது தில்லையம்மாள் வந்தாள். வந்த வேகத்திலேயே “வீட்டயும், வயலயும், தோட்டத்தயும் யார் பேருல எழுதிவச்சிருக்காங்க?” என்று கேட்டாள்.

“தெரியலியே சாமி.”

“ஒனக்குத் தெரியாம எப்படி இருக்கும்? ஒன்னோட உத்தரவு இல்லாம அவுங்க வாசலுக்குக்கூட வந்ததில்லியே.”

“ஆண்டவன் அறிய எனக்குத் தெரியாது சாமி.” கலியம்மாள் சத்தியம்

செய்தாள். அவளுடைய சத்தியத்தை ஒரு பாக்கு அளவுக்குக்கூடத் தில்லை யம்மாள் நம்பவில்லை. முகத்தைக் கோணிக் காட்டினாள்.

“புனிதவதியத்தான் அவுங்களுக்குப் புடிக்கும். அவுங்கள மாதிரியே

சாவம்புடிச்சி அவதான் கல்யாணம் ஆவாம வீட்டுலியே குந்தியிருக்கா.

அவ பேர்ல எழுதிவச்சிருப்பாங்களா?”

“எனக்குத் தெரியாது சாமி.”

“ஒன்னோட நாடகமும் தெரியும். அவுங்களோட நாடகமும் தெரியும் கலியம்மா” என்று சொல்லி முறைத்துவிட்டு வேகமாக வீட்டுக்குள் போனாள் தில்லையம்மாள்.

“ஒரு உசுரு போவுதின்னு யாருக்குக் கவல? யாருக்கு அக்கற?” என்று சொன்ன கலியம்மாள் வீடு, நிலம், தோட்டம் என்று எல்லாவற்றையும் யாருடைய பெயரில் சந்திரவதனம் எழுதி வைத்திருப்பாள் என்று ஒரு

கணம் நினைத்தாள். அது பற்றி அவள் ஒரு வார்த்தைகூடச் சொன்ன

தில்லை. இவளும் கேட்டதில்லை. சந்திரவதனம் சாவாள் என்று யார்

நினைத்தது?

கலியம்மாள் தரையில் உட்கார்ந்தாள். சந்திரவதனம் சாயங்கால நேரத் தில் கட்டிலைப் போட்டு உட்கார்ந்திருக்கும் இடத்தையே பார்த்தாள். என்ன தோன்றியதோ ஒரு கைக்குழந்தையைத் தடவிக்கொடுத்துத் தட

விக்கொடுத்துத் தூங்கவைப்பது மாதிரி அந்த இடத்தைத் தடவிக்

கொடுத்தாள். அவளுடைய கண்ணீர் மண்ணில் சிந்தியது.

ஒன்பது நாட்களுக்கு முன் தஞ்சாவூர் மருத்துவமனையிலிருந்து “வீட்டுக்குப் போயே தீருவேன். ஆஸ்பத்திரியில இருக்க மாட்டன்” என்று அடம்பிடித்துக்கொண்டு வந்த அன்றுதான் இத்தனை வருடத்தில் கலியம்மாள் சந்திரவதனத்துடன் சண்டைபோட்டாள். அதிசயமாக எடுத் தெறிந்து பேசினாள்.

“ஏன் பாப்பா ஆஸ்பத்திரிய வுட்டு வந்த?”

கலியம்மாளின் வாயை அடைப்பது மாதிரி சந்திரவதனம் சொன்னாள்: “ஒன்னெப் பாக்கத்தான்.”

“என்னெ நீதான் பாப்ப. வேற யாரு பாக்கப்போறா? சரி, நீ எதுக்கு ஆஸ்பத்திரிய வுட்டு வந்த?”

“நான் உண்மயத்தான் சொல்றன்.” சந்திரவதனத்தின் கண்களில் கண்

ணீர் நிறைந்திருந்தது. அதைப் பார்த்ததுமே கலியம்மாளின் வேகம் கொஞ் சம் குறைந்தது.

“ஒடம்பப் பாக்காம அம்மாம் அவசரமா எதுக்கு வந்த? நான்தான் நீ

போன நாளா இந்த ஊட்ட வுட்டு ஒரு அடி நவுராம இங்கியே குந்தி யிருக்கிறனே. ஊட்ட நான் பாத்துக்க மாட்டனா?”

“நான் ஒன்னெ பாக்கத்தான் வந்தன்.”

“என் வாய அடைக்காத பாப்பா. ஆஸ்பத்திரிலியே இருந்தா என்னா? எதுக்கு வந்த?”

“ஆஸ்பத்திரிலியே இருந்தா நான் சாவ மாட்டனா கலியம்மா?”

“அங்கியே இருந்தா வேளாவேளைக்கி மருந்து மாத்தரயத் தருவாங்க. ஊசியப் போடுவாங்க. இதுதான் ஆளக் கொல்ற புத்துநோவாச்சே பாப்பா.”

“மாத்தர மருந்து எதுக்குக் கலியம்மா?”

“ஒடம்பப் பாக்க வேணாமா?”

“‘யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்ன்னு’ ஒரு தேவாரப் பாட்டு பாடுவனே ஞாபகம் இருக்கா?”

“நான் எந்த பாட்டக் கண்டன். நீதான் பாடுறதுக்கின்னே பொறந்த. அந்தப் பாட்டுத்தான் ஒன்னெக் கொன்னுடுச்சி.” கலியம்மாள் கண்களில் கண்ணீர். அழுதுகொண்டே சொன்னாள்: “ஒடம்பப் பாக்க வேணாமா? உசுரோட இருக்க வேணாமா?”

“எதுக்கு?”

“நான் செத்தா எம் பொணத்த யாரு தூக்கிப்போடுவா? ஒனக்கு முன் னாடி நான் சாவணும். அதுதான் என் வேண்டுதல்.”

“நீ சாவ மாட்ட கலியம்மா.”

“எனக்கு எத்தினி வயசாவுதின்னு தெரியுமா பாப்பா? நீ நேத்திய புள்ளைதான?”

“எனக்குப் பின்னாலதான் ஒனக்குச் சாவு கலியம்மா.”

பேச்சை மாற்றினாள் கலியம்மாள். “கர்ப்பப்பையிலிருந்து, குடலு பூராவும் பரவி, தொண்டைக்கும் வந்திடுச்சி. இருந்தா ஒண்ணு ரெண்டு மாசம்தான்னு ஆஸ்பத்திரியில சொன்னாங்களாமே. அம்மாசி சொன்

னான். அப்படி இருக்கயில நீ ஆஸ்பத்திரிய வுட்டு வரலாமா?”

“எதுக்கு அழுவுற கலியம்மா?”

“அந்த வாத்தயக் கேட்டதிலிருந்து என் உசுரு எங்கிட்ட இல்லெ.”

“இன்னிக்கிச் செத்தாலும், இன்னும் ஆறு மாசம் கழிச்சி செத்தாலும்

சாவு ஒண்ணுதான? மனசுதான் என்னிக்கோ செத்துப்போச்சி. ஒடம்புதான் இன்னும் சாவல. அதுவும் முடிஞ்சிடும்.” சந்திரவதனத்தின் கண்களில் கண்ணீர். அதைப் பார்த்ததும் கலியம்மாளுடைய முகம் மாறிவிட்டது. குரலிலும் வேகம் கூடிவிட்டது.

“அந்தக் கொலகாரன் எங்க வச்சி என் சாமியப் பாத்தானோ? ஊர்ஊரா வந்து பாட்டக் கேட்டுப்புட்டு சீட்டக் கொடுத்துப்புட்டு, மனசையும் பொசுக்கிப்புட்டுப் போயிட்டானே.” கலியம்மாள் அழுதாள்.

“யாரயும் குத்தம் சொல்லக் கூடாது. கொற சொல்லக் கூடாது. திட்

டக் கூடாது. என் தலயெழுத்துக்கு நீ ஏன் அழுவுற? எங்கம்மா சாகலியா? அப்பா சாகலியா? எல்லா விசயத்துக்கும் ‘ஈசனருள், ஈசனருள்’னு ராவும் பகலும் சொல்லிக்கிட்டேயிருந்த ஆதீனம் செத்துப் போகலியா? எல்லா

ரும் செத்துதான ஆவணும்? அதுதான சட்டம். அத மீற முடியுமா? அதுதான ஈசனோட கட்டளை” என்று சொன்ன சந்திரவதனமும் அழுதாள். அவளுடைய குரலில் உயிரில்லை. தொண்டையில் சளி வந்து அடைத்துக்

கொண்டது மாதிரி ‘கொர்கொர்’ என்று இழுத்தது. மூச்சு வாங்கியது. மணி அடித்த மாதிரி பேசுவாள். பாடுவாள். அந்தக் குரல் அல்ல இந்தக் குரல் என்று நினைத்த கலியம்மாள் தனக்கே நோய் வந்து, தான் சாகப்போவது மாதிரி சொன்னாள்:

“நீ என் வவுத்தில பொறக்கல. என் மாருல பாலு குடிக்கல. மத்தது என்னா இருக்கு? நீ இப்பிடி வதங்கிப்போயிக் கெடக்குறதப் பாக்கிறதுக்கா நான் உசுரோட குந்தியிருக்கன்? அந்தக் கூரநாட்டுக்காரனாலதான் ஒனக்கு இந்த நோவு வந்துடுச்சி. அவன்தான் ஒன்னெ செல்லு அரிச்சித் திங்குற மாரி திங்குறான். அந்த ஆளு மட்டும் என் கையில கெடைச்சான்னு வையி, நடுத் தெருவுல வச்சி நறுக்குன்னு அப்பிடியொரு கேள்வியக் கேப்பன்.” ஆங்காரத்தோடு கத்தினாள் கலியம்மாள்.

“அவன் இவன்னு யாரயும் பேசாதன்னு ஒனக்கு எத்தினி வருசமா

சொல்றன். கேக்குறியா?”

“என் குலசாமிய ஒருத்தன் உசுரோட வச்சிப் பொசுக்கிட்டுப் போவான். அப்படிப்பட்டவன நான் ‘வாங்க சாமி, போங்க சாமி’ன்னு சொல்லணுமா? இதே என் சாதிப் பயலா இருந்தா நடுத் தெருவுல வச்சி

சிண்டப் புடிச்சி இழுத்து ஒரு வழிய சொல்லிட்டுப் போடா பேப் பயலேன்னு கேட்டிருப்பன்.” கோபத்தில் கத்தினாள் கலியம்மாள்.

சந்திரவதனம் எதுவும் பேசவில்லை. தலையைக் கவிழ்த்துக்கொண்

டாள். அவள் உட்கார்ந்திருந்த விதமும் அழுத விதமும் கலியம்மாளுக்கு ஆத்திரத்தை உண்டாக்கின.

“குத்து விளக்காட்டம் இருப்பியே பாப்பா. இப்ப சீக்குப் புடிச்ச கோழியாட்டம் குந்தியிருக்கியே. ஒனக்கு முன்னால நான் செத்திடணும் பாப்பா.” வாய்விட்டு அழுதாள் கலியம்மாள்.

“நீ செத்திட்டா எனக்கு யாரு இருக்கா கலியம்மா?”

“ஒனக்கு இல்லாத சாதியா, சனமா பாப்பா?” என்று சொன்ன கலி யம்மாவுக்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது. வேகமாகக் கேட்டாள் “நீ எதுக்கு ஆஸ்பத்திரிய வுட்டு வந்த?”

“ஒனக்கு யாரு சோறு போடுவா? காப்பி கொடுப்பா?”

“நான் எங்கியோ தின்னுக்கிறன். எனக்குச் சோறா முக்கியம்? என் உசுரு அம்மாம் முக்கியமா? சாவப்போற கிழவிதான நானு? ஒனக்கு ஒண்ணுன்னா நான் எப்படி உசுரோட இருப்பன்?” கலியம்மாளின் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கியது.

“அழுவாத கலியம்மா. நீ அழுவுறதப் பாத்தா எனக்குக் கஷ்டமா

இருக்கு” என்று சொன்ன சந்திரவதனம் சிறிது நேரம் அங்குமிங்கும் பார்த் தாள். பிறகு ஒரு சின்னப் பிள்ளையிடம் சொல்வது மாதிரி சொன்னாள்: “நடக்க ஆரம்பிச்சதிலிருந்து ஒன்னோட குவளயில நான்தான இத்தினி வருசமா காப்பிய ஊத்தியிருக்கன். மூணு வேளயும் சோறு போட்டிருக்கன். ஆஸ்பத்திரிக்குப் போன இந்த முப்பத்தி மூணு நாளா நான் காப்பி ஊத்தல, சோறு போடல. ஒனக்குக் காப்பி கொடுக்காம, சோறு போடாம என்னால எப்பிடி இருக்க முடியும்? எப்பிடி நான் ஆஸ்பத்திரியில படுத்திருக்கிறது?”

“நான்தான் கூடவே ஆஸ்பத்திரிக்கி வர்றன்னு சொன்னன். நீதான் ‘எம் பேச்ச மீறாத, ஊட்டுலியே இரு. ஊட்டப் பாத்துக்க’ன்னு சொல்லிட்ட. ஒம் பேச்ச இத்தினி வருசத்தில என்னிக்கி நான் மீறி இருக்கன்?”

“பெரியண்ணன் கூடவே இருக்காரு. அவுரு எங்க போனாலும் சாதிய

வுட மாட்டாரு. எல்லாத்துக்கும் சாதி பாப்பாரு. எல்லாம் ஒனக்குத் தெரி யும். எல்லாத்துக்கும் மேல ஆஸ்பத்திரியில நீ எங்க தங்குவ? என்னெப் பாக்க வர்றவங்க ஒன்னெ ஏதாச்சும் ஒரு வார்த்த சொல்லிட்டா அத என்னால தாங்க முடியுமா? இந்தச் சாதியப் பத்திதான் ஒனக்குத் தெரியுமே. சாப் பாட்டுக்கு வழியில்லன்னாலும் இவங்களுக்குச் சாதிப் பெரும போகாது. நெத்தியில திருநீறு இல்லாம இருக்காது.”

“என்னிக்கி நீ வந்து என்னோட ஏனத்தில காப்பி தண்ணீன்னு சுடு தண்ணீய ஊத்துனியோ அன்னியிலிருந்து கோயிலுக்குப் போறத வுட்டுட் டன். ஒன்னத்தான் என் சாமியா கும்புடுறன். இன்னியமுட்டும். என் சாமி

ஊர்ஊராப் போயிப் பாடுன பாட்டு என்னா? சொன்ன கத என்னா? எல்லாத்தயும் தொலச்சிப்புட்டு நெருப்புல வாட்டுன கருவேப்பில எல மாரி குந்தியிருக்கியே. ஒம் பாட்டு எங்க சாமி போச்சி? உன் கத எங்க சாமி போச்சி? மணி கோத்தாப்ல சரம்சரமாப் பேசுவியே. அந்தப் பேச்செல்லாம், வாத்தயெல்லாம் என்னா சாமி ஆச்சி? ஊருப்பட்ட கூட்டத்தயெல்லாம்

ஒம் பாட்டால, பேச்சால மயக்கினியே. இப்பப் பேசக்கூடத் தெம்பு இல்

லாம குந்திருக்கியே. எல்லாத்தயும் பாத்துக்கிட்டு நான் உசுரோட இருக்

கனே, என்னவிட ஒலகத்தில பாவம் செஞ்சவங்க யாருமில்ல.” முகத்தில் அடித்துக்கொண்டாள் கலியம்மாள். அடித்து ஓயட்டும் என்று காத்திருந்த சந்திரவதனம் சொன்னாள்: “நீ அடிச்சிக்காத. அழுவாத. அத என்னால பாக்க முடியாது. துக்கப்படுறதுக்காகவே பொறந்தவ நானு.” கண்ணீரை மறைப்பதற்காக முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டாள்.

சந்திரவதனம் அழுததைப் பார்த்ததும் கலியம்மாவால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. கண்களில் கண்ணீர் கொட்டக் கொட்டச் சொன்னாள்: “நீ நல்லாயி வந்து காப்பித் தண்ணிய ஊத்துனா நான் குடிக்க மாட்டனா? ஒன்னெ வுட்டுட்டு நான் எங்க போவப்போறன்? எமன் வந்து கூப்புட்டாலும் நான் போவ மாட்டன் பாப்பா. நீ எதுக்கு ஆஸ்பத்திரிய வுட்டு வந்த? ஒம் பேச்ச மீறக் கூடாதின்னுதான் முப்பத்தி மூணு நாளா இந்த எடத்திலியே குந்தியிருந்தன். ஆனா என் ஆவி, என்

உசுரு ஒங்கூடதான இருந்துச்சி. அத மறந்திட்டியே பாப்பா.” கலியம் மாள் அழுதாள். அவளைவிட அதிகமாக அழுதாள் சந்திரவதனம். அழுது கொண்டே கேட்டாள்: “என் பேச்ச மீறக் கூடாதுன்னு நீ இந்த வீட்டு வாசல்லியே குந்தியிருப்ப. நான் என் உசுரக் காப்பாத்திக்க ஆஸ்பத்திரியில படுத்திருக்கணுமா?” கலியம்மாள் பார்க்க முதன்முதலாக சந்திரவதனம் வாய்விட்டு அழுதாள்.

“எனக்காகவா வந்திட்ட சாமி?” கேட்டுக்கேட்டு அழுதாள் கலியம்

மாள். கடைசியாக “பாம்பு மாதிரி வந்து என் குடி சாமிய கொன்னுப் புட்டானே சண்டாளன்” என்று சொல்லி அழுதாள்.

“பேசாம இரு கலியம்மா. வாசல்ல உட்காந்துகிட்டு என்னா செய்யுற?” என்று கேட்ட சந்திரவதனம் சொன்னாள்: “நான் செத்தா நீ அழுவக் கூடாது கலியம்மா. ஒனக்காக நான் ஒண்ணுமே செய்யல. எத்தினி வருசமா எங்கூடவே இருந்த? நான் பொறந்ததிலிருந்து இந்த வாசல்லியே எனக்

காகக் குந்தியிருந்திட்டியே.”

“நீ ஒண்ணும் செய்ய வேணாம். நீ உசுரோட இரு. அது போதும். அதுதான் நான் வேண்டுற அருளு. ஒலகத்தில ஒன்னெவிடப் பெரிய சாமி

எனக்கு இருக்கா? சோறு போடுறவங்கதான சாமி? நீதான் சாமி, நீதான்

ஒலகம்ன்னு இத்தினி வருசமா நான் இருக்கல? அதுக்காகவாச்சும் நீ உசு ரோட இருக்கணும். மனுசங்கதான் சாவாங்க. நீ சாமி. ஒனக்கு சாவில்ல பாப்பா. நீ பாடுன பாட்டு சாவாது. நீ சொன்ன கதெ சாவாது. நீ பாடாத கோவிலு இந்த நாட்டுல உண்டா? ஒரு சாமியும் உனக்குத் தொண இல்லாமப் போயிடிச்சே.” கலியம்மாள் கைப்பிள்ளை மாதிரி அழுதாள்.

“அதெல்லாம் பழய கதெ. இப்ப அதெல்லாம் வெறும் நெனப்பா மட்டும்தான் இருக்கு. பழசெல்லாம் நெனச்சா கண்ணுல தண்ணிதான் வரும். வேற எதுவும் திரும்பி வராது. ஆத்தில போன தண்ணி என்னிக்கித் திரும்பி வந்திருக்கு?”

“ஒரு மாசத்தில பாதி ஒடம்பா திரும்பி வந்திருக்கிற. மூஞ்சி வெளுத்துப்போச்சி.”

“நான் செத்தா நீ அழுவக் கூடாது கலியம்மா. ஒன் பாவத்தயும் நான் வாங்கிட்டன். இத்தினி வருசமா எங்கூடவே இருந்திட்டியே. அத நெனச்

சாதான் சீக்கிரம் செத்திடணும் போல இருக்கு. இத்தினி வருசமா இந்த வாசப் படியத் தாண்டி நீ உள்ளார வரல. நானும் விடல. புருசன், புள்ளை

கூட நீ இருந்ததவிட அதிகமா எங்கூடதான் இருந்திட்ட. நான் பெரும்

பாவி. அப்பா சொன்னத நான் கேக்கல. கேட்டிருக்கலாம். தப்புதான்.

அந்த ஈசன் எனக்கு அந்தப் புத்தியக் கொடுக்கல. ஆரம்பத்தில கோவில்ல பாடுறது பாக்கியம்னு சொன்னவங்க பிற்காலத்தில ஒரு பொட்டச்சி எப் பிடி சபயில பாடலாம், அவ நல்ல நடத்த உள்ளவளான்னு கேட்டாங்க. ஒரு ஆம்பளயும் என்னெ நம்பல. அதனாலியே கிழவி ஆயிட்டன்.” சந்திரவதனம் அழுதாள். அழுதுகொண்டே சொன்னாள்: “ஒங்கிட்ட மட்டும்தான் என்னால அழுவ முடியுது கலியம்மா.”

“நீ எதுக்கு இப்பிடி அழுவுற? ஒங்கூட இருக்கத்தான் அந்த ஆண்டவன் என்னெப் பொறப்பிச்சான். எனக்கு ஒரு கொறயுமில்ல. இத்தினி வருசமா நீ அழுவலியே. இன்னிக்கி அழுவுறியே. அத எங் கண்ணால பாக்கவா?” என்று சொன்ன கலியம்மாள். பிறகு “எப்பியும் பாடுவியே ‘காதலாகிக் காதலாகி’ன்னு என்னமோ ஒரு பாட்டு பாடுவியே, அந்தப் பாட்டப் பாடன் பாப்பா. மனசுக்கு ஒரு இதா இருக்கும்.” என்று சொன்னாள். ‘காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி’ என்ற பாட்டைத்தான் பாடச் சொல்கிறாள்

என்று தெரிந்தாலும் அந்தப் பாட்டைப் பாடாமல் “‘பிறவாமை வேண்

டும்... ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க’ங்கிற தேவாரப் பாட்

டத்தான் பாடணும்” என்று சந்திரவதனம் சொன்னாள்.

சந்திரவதனம் பாட மாட்டாள் என்று தெரிந்தும் கேட்டாள். அவள் பாடி எட்டு ஒன்பது வருசமாகிவிட்டது. “என் சாமியோட வாய ஊம யாக்கிட்டானே” என்று சொன்னாள் கலியம்மாள்.

சந்திரவதனம் கோவில்களில் பாட ஆரம்பித்த எட்டாவது வருஷத்தி

லிருந்து அவள் எந்தெந்தக் கோவிலில் பாடுகிறாளோ அங்கெல்லாம் வைத்

தீஸ்வரன் வர ஆரம்பித்தார். ‘காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி’ என்ற பாடலைப் பாடச் சொல்லி ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து அனுப்புவார். சந்திரவதனமும் பாடுவாள். அந்தப் பாட்டைப் பாடும்

போது அவளுடைய உயிரும் உடலும் கரைந்து போவது மாதிரி இருக்

கும். கண்கள் மூடியிருக்கும். மனம் திறந்திருக்கும். பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு வாய் இருக்காது. கண்களும் காதுகளும் மட்டும்தான் உயிரோடு இருக்கும்.

எந்த ஊர்க் கோவிலுக்குப் பாடப் போனாலும் அவள் பாட்டைக் கேட்க ஒரு கூட்டம் வரும். அவளைப் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் வரும். பாடுவதற்கு முன் ‘நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க’ என்று சொல்லிக் கும்பிட்டுவிட்டுத்தான் ஆரம்பிப்பாள். அதே மாதிரி பாட்டுப் பாடி முடிக்கும்போதும் ‘நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க’ என்று சொல்லிதான் முடிப்பாள். திருவாசகத்தின் அறுநூற்றி ஐம்பத்தெட்டுப் பாடல்களில் எப்போது எதைக் கேட்டாலும் சொல்வாள், பாடுவாள். அவளுடைய பாட்டைக் கேட்ட ஆதீனம் மடத்துக்குக் கூப்பிட்டுப் பட்

டுச் சால்வை போர்த்தி ‘சிவநேயச் செல்வம்’ என்று பட்டம் கொடுத்தார். “எல்லாத்தயும் நெருப்பு வச்சிக் கொளுத்திட்டானே” என்று மனதிலிருந்த வெறுப்பை எல்லாம் கொட்டினாள் கலியம்மாள்.

‘காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி’ பாட்டைப் பாடச் சொன்

னதும் சந்திரவதனம் மறுபேச்சுப் பேசாமல் எழுந்து வீட்டுக்குள் போய்

விசிப்பலகையில் படுத்துக்கொண்டாள். அப்போதுதான் அந்தப் பாட்

டைப் பாடச் சொல்லிக் கேட்டிருக்க வேண்டாம் என்று கலியம்மாளுக்குப் புரிந்தது. அந்தப் பாட்டுதான் சந்திரவதனத்தை ஊமையாக்கிவிட்டிருந்

தது. பிணமாக்கிவிட்டிருந்தது. தெரிந்தும் கேட்டோமே என்று நொந்து போனாள். சந்திரவதனத்தின் கூடவே இருந்ததால் அவள் பாடுகிற பாட்டில் பாதி கலியம்மாளுக்கும் தெரியும்.

எதைஎதையோ நினைத்துப்பார்த்த கலியம்மாள் சந்திரவதனம் கட்டி

லைப் போட்டு உட்கார்ந்திருந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்

தாள். பிறந்த குழந்தைக்குக் கை, கால், மூக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது மாதிரி அந்த இடத்தை ஒவ்வொரு அங்குலமாகத் தட

வித்தடவிப் பார்த்தாள். அந்த இடத்திலிருந்து சிறிது மண்ணைப் பிட்டு வாயில் போட்டுக்கொண்டாள். அப்போது வீட்டுக்குள் பெண்கள் படித்துக்கொண்டிருந்த தேவாரச் சத்தம் நின்றுவிட்டது. புனிதவதி வாய் விட்டு அழுகிற சத்தம் கேட்டது. “சொர்க்கத்துக்குப் போயிட்டாங்க. அழு வாத” என்று அவளுடைய அம்மா சொல்வது கேட்டது.

தெருவிலிருந்து ஓடிவந்த அமாவாசை “அம்மா, நம்ப பாப்பா போயி டிச்சிம்மா” என்று சொல்லிக் கதறி அழுதான். “என் சாமி போயிடிச்சா? என் சாமி போயிடிச்சா?” திரும்பத்திரும்பக் கேட்டாள் கலியம்மாள். சந்திரவதனம் கட்டிலைப் போட்டு உட்கார்ந்திருக்கும் இடத்தை முத்த மிட்டாள். “போயிட்டியா சாமி? ‘விடுதல என்பதும் கிடையாது’ன்னு பாடுவியே. ஒனக்கு விடுதல வந்துடுச்சா?” கத்தி அழுதாள். அமாவாசை அவளைவிட வேகத்துடன் முகத்தில் அடித்துக்கொண்டு அழுதான். அப் போது அமாவாசையின் மனைவி அழுதுகொண்டே வீட்டுக்குப் பின்புறம் வந்து கலியம்மாள், அமாவாசையுடன் சேர்ந்துகொண்டு அழ ஆரம்பித்தாள்.

“வா முன்னாடி போவலாம்” என்று அமாவாசையின் மனைவி கலி

யம்மாளை அழைத்துக்கொண்டு தெருவுக்கு வந்தாள். கூடவே அமாவா சையும் வந்தான். வந்த வேகத்திலேயே ஓடிப்போய் சிவலோகத்தின் பக்

கத்தில் போய் நின்றுகொண்டு அழுதான்.

சந்திரவதனம் செத்துவிட்டாள் என்று தெரிந்ததும் சனங்கள் வர ஆரம்

பித்தார்கள். எப்போதும் திண்ணையை ஒட்டி வாசலை ஒட்டி உட்காரு

வது மாதிரி உட்கார்ந்தாள் கலியம்மாள். மூன்று நாட்களாகவே நினைவு தவறியதிலிருந்து பார்க்க வந்த பெண்கள் எல்லாம் “இன்னுமா உசுரு அடங்கல?” என்று கேட்டார்கள். நேற்றும் அதற்கு முந்தின நாளும் “ஒரு உசுரு எப்ப அடங்கும்ன்னு கேக்குறாங்களே” என்று கலியம்மாள் திட்டினாள். இப்போது அவள் யாரையும் திட்டவில்லை. கன்றுபோடத் தவிக்கும் பசுவின் உடல் மாதிரி அவளுடைய உடம்பும், மனதும் தவித்துக் கொண்டிருந்தன. சந்திரவதனத்துக்கு எப்போது நினைவு தவறியதோ, எப்போது வேண்டுமானாலும் உயிர் அடங்கலாம் என்று சொன்னார்

களோ அதிலிருந்து மூன்று நாட்களாக ஒரு தம்ளர் தண்ணீர்கூட அவள் குடிக்கவில்லை. வாசல், தோட்டம் என்றுதான் உட்கார்ந்திருந்தாள்.

சிவலோகமும் சிவபுண்ணியமும் பரபரப்பாக இருந்தார்கள். தங்க ளுடைய உறவினர்களுக்கெல்லாம் தகவல் சொன்னார்கள். உள்ளூர்த் தொழிலாளிகளுக்கு ஆள் விட்டார்கள். குழி வெட்ட ஆள் அனுப்பினார்

கள். பூ, மாலை, வெடி, பிணக்குழி மேட்டில் செய்ய வேண்டிய சடங்கு களுக்கான பொருள்கள் என்று எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வருவதற்கு ஆள் விட்டார்கள். கோடித்துணி எடுத்து வர ஆள் அனுப்பி னார்கள். வீட்டிலிருந்து சுடுகாட்டுக்குப் பிணத்தை ஏற்றிச்செல்ல ‘சொர்க்க

ரதம்’ வண்டிக்கு போன் போட்டுச் சொன்னார்கள். “இப்ப மணி பதி

னொண்ணு. நாலு மணிக்கெல்லாம் எடுத்திடணும். வாட வீச ஆரம்

பிச்சிடிச்சி. லேட் பண்ண முடியாது” என்று ஆட்களிடம் வேலை வைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இணையாக அவர்களுடைய

பெண்டாட்டிகளும், பிள்ளைகளும் இங்குமங்குமாக ஓடிக்கொண்டிருந் தார்கள். சந்திரவதனம் வீடு, தோட்டம், வயல் என்று எல்லாவற்றையும் தங்களுக்குத்தான் எழுதி வைத்திருப்பாள் என்று எண்ணிக்கொண்டு, சொத்தில் உரிமை கொண்டாட இரண்டு குடும்பங்களும் ஆட்டமாக ஆடிக்கொண்டிருந்தனர்.

கலியம்மாளுக்கு உள்ளே சென்று பிணத்தைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. அவள் சந்திரவதனத்தைப் பார்த்து மூன்று நாட்களாகிவிட்டது.

இப்போதும் பார்க்க முடியவில்லை. கூட்டமாக இருந்தது. தெருவி லிருந்த ஆண்களும் வீட்டுக்குள்ளிருந்த பெண்களும் “பொணத்த ஒடனே

எடுத்திடணும். வாட அடிக்குது” என்று ஒரே குரலாகச் சொல்லிக்கொண் டிருந்தார்கள். அதைக் கேட்கக்கேட்கக் கலியம்மாளுக்கு எரிச்சலாக இருந் தது.

சிவலோகம் வீட்டுக்குள் போனார். வாசற்படியை ஒட்டி உட்கார்ந்

திருந்த கலியம்மாவை முதன்முதலாகப் பார்ப்பது மாதிரி பார்த்தார்.

ஆனால் ஒரு வார்த்தை பேசவில்லை. “தூரமாகப் போய் உட்கார். வாசப் படியில எதுக்கு உட்கார்ந்திருக்க? ஆளுங்க வராங்கல்ல?” என்று எந்த வார்த்தையும் இல்லை. சிவலோகம் மட்டுமல்ல, உள்ளூர், வெளியூர் ஆட்

கள் வந்தார்கள். போனார்கள். ஒரு முறைகூடக் கலியம்மாள் எழுந்து நிற் கவோ ஒதுங்கி உட்காரவோ செய்யவில்லை. அமாவாசையின் மனைவி

தான் புது ஆட்கள் வரும்போதெல்லாம் எழுந்துஎழுந்து நின்றாள்.

கலியம்மாள், முதன்முதலாகத் தில்லைவனம் வீட்டுக்கு வந்து எந்த இடத்தில் நின்றாளோ, எந்த இடத்தில் உட்கார்ந்தாளோ அன்றிலிருந்து இன்றுவரை அதே இடம்தான். மேற்குப்புறத் திண்ணையை ஒட்டியும், வாசலை ஒட்டியும் இருந்த இடம்தான் அவளுடையது. தில்லைவனம் இல்லாத நேரத்தில் மேற்குப்புறத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு எப்படி மரகதம் பேசுவாளோ, வேலை சொல்வாளோ அதே இடத்தில்

தான் சந்திரவதனமும் உட்காருவாள், பேசுவாள். வேலை சொல்வாள்.

ரேடியோவில் பாட்டுக் கேட்கும்போது மட்டும் வீட்டுக்குள் இருப்பாள். டிரான்சிஸ்டர் வந்த பிறகு மேற்குப்புறத் திண்ணையில் வைத்துப் பாட்

டுக் கேட்பாள். கலியம்மாளிடம் பேசுவாள். கடைசியாக மருத்துவமனை யிலிருந்து வந்த அன்றும் அதே இடத்தில் உட்கார்ந்துதான் பேசினாள். கலியம்மாள் திண்ணையைப் பார்த்தாள். வெறுமையாக இருந்தது. எழுந்து சென்று அந்த இடத்தைத் தடவிப் பார்த்தாள். அப்போது தன்னுடைய வீட்டிலிருந்து சந்திரவதனத்தின் வீட்டுக்குள் போக வந்த புனிதவதி கேட்டாள்: “என்ன கலியம்மா? அத்தயப் பாக்கணுமா?”

“இனிமே பாத்து நான் என்னா செய்யப்போறன்?”

“ஒரு ஓரமா ஒக்காரு. கூட்டம் கொறயட்டும். கடசியா வந்து முகத்தப் பாத்திடு.”

“ஒனக்குப் புண்ணியம் கிடைக்கும்.”

“காப்பி குடிக்கிறியா? வேணுமா?”

“என் சாமியே செத்துப்போச்சி. எனக்குக் காப்பித் தண்ணியா கேக் குது?” கலியம்மாள் அழுதாள். அதற்கு மேல் புனிதவதி ஒன்றும் சொல் லாமல் பிணத்தைக் கிடத்தியிருந்த இடத்துக்குப் போனாள். கலியம்மாள் திண்ணையை மீண்டும் தடவிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

ஏழெட்டுப் பேர் கொண்ட வெளியூர் ஆண்கள் கூட்டம் மாலையோடு வந்ததைப் பார்த்ததும் அமாவாசையின் பெண்டாட்டி கலியம்மாளை அழைத்துவந்து முன்பு உட்கார்ந்திருந்த இடத்தில் உட்காரவைத்தாள். அப்போது முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு தில்லையம்மாள் போவ

தைப் பார்த்ததும் “பொணத்துக்கிட்ட கூடமா வீறாப்பு?” என்று கலி யம்மாள் கேட்டாள். அதற்கு அமாவாசையின் பெண்டாட்டி “பேசாம

இரு” என்று சொன்னாள். அதைக் காதில் வாங்காத கலியம்மாள் “சண் டாளன். அவன் மனசு கல்லு மட்டுமில்ல, கல்லு பூமியாத்தான் இருக்கும். புயலு காத்து வந்து வாழ மரத்தச் சாச்சிட்டாப்ல சாச்சிட்டானே.” வைத் தீஸ்வரனைத் திட்ட ஆரம்பித்தாள்.

தில்லைவனத்தைக் கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த ஆறாவது மாதத் தில், மரகதத்தினுடைய அப்பா ரேடியோ வாங்கிவந்து கொடுத்தார். ஊருக்கு முதலில் வந்த ரேடியோ அதுதான். வேலையில்லாத நேரத்தில், தில்லைவனம் வீட்டில் இல்லாத நேரத்தில் ரேடியோவைக் குடைந்து கொண்டிருப்பதுதான் அவளுக்கு வேலை. எப்போது செய்தி வாசிப்பார்

கள், எப்போது பாட்டுப் போடுவார்கள் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியும். சென்னை, திருச்சி, இலங்கை வானொலியில் எப்போது என் னென்ன நிகழ்ச்சிகள் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியும். எல்லாம் மனப்பாடமாக இருக்கும். அவளால்தான் தெருவிலுள்ள பெண்கள் எல்

லாம் ரேடியோவில் பாட்டுக் கேட்கவும், செய்தி கேட்கவும் ஆரம்பித்

தார்கள். ‘தேவாரம், திருவாசகம், பெரிய புராணத்தப் படிக்கிறத விட்டுட்டு சினிமாப் பாட்டுக் கேக்கிறீங்களா?’ என்று கேட்டு வீட்டு ஆண்கள் சண்டை

போட்டாலும் சினிமாப் பாட்டுக் கேட்பதில்தான் பெண்களுக்கு ஆர்

வம் இருந்தது. முதலில் தமிழ் விஷயங்களை மட்டுமே கேட்டுக்கொண்

டிருந்த மரகதம், பிறகு கன்னடம், தெலுங்கு, இந்தி என்று கேட்க ஆரம்பித்தாள். அவள் பைத்தியமானது மட்டுமல்லாமல் தெருவிலுள்ள இளம் பெண்களையும் பிள்ளைகளையும் ரேடியோ பைத்தியமாக்கிவிட்

டாள். எல்லாவற்றுக்கும் மேலாக, சந்திரவதனத்துக்கும் ரேடியோ பித்துப் பிடிக்க வைத்துவிட்டாள்.

மரகதம் பத்து மடங்கு ரேடியோ பைத்தியம் என்றால் சந்திரவதனம்

நூறு மடங்கு. ஆளில்லாத நேரத்தில் ரேடியோவில் கேட்கிற பாட்டை மரகதம் அப்படியே பாடிக் காட்டுவாள். அந்தப் பழக்கம் சந்திரவதனத்துக்

கும் பிறந்ததிலிருந்தே வந்துவிட்டது. ரேடியோ, டிரான்சிஸ்டர் சத்தம் இல்லாமல் தில்லைவனம் வீடு ஒரு நிமிடம்கூட இருக்காது. மரகதம்

செத்த பிறகு சந்திரவதனத்துக்கு அம்மாவாக இருந்தது ரேடியோதான். பிள்ளை மனம் கோணக் கூடாது என்று தில்லைவனம் டிரான்ஸிஸ்டருக்கு மாதத்துக்கு இரண்டு மூன்று முறை பேட்டரி வாங்கிப் போட்டார்.

அதோடு பெரிய புராணம், தேவாரம், திருவாசகம் புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்துப் படிக்கச் சொன்னார். சில நேரங்களில் அவரும் சேர்ந்து

ராகம் போட்டுப் படிப்பார். அவருக்குத் தேவாரப் பாடல்களைப் பாடு வதில் சிறிது பயிற்சி இருந்தது.

படித்ததைப் பாட்டாகப் பாடச் சொல்லிக் கேட்டார். அவரும்

சேர்ந்துகொண்டு பாடுவார். அச்சு அசலாகப் பாடுவாள். தடங்கலோ, தடு

மாற்றங்களோ இருக்காது. அதனால் அவளைப் பல முறை பாடச்

சொல்லித் தில்லைவனம் கேட்பார். தெருவிலுள்ள சனங்களும் கேட்கும். அவளால்தான் சினிமாப் பாட்டுப் புத்தகம் வாங்குகிற பழக்கம் ஊர்ப் பெண்களிடம் ஏற்பட்டது. ஒவ்வொரு சினிமாப் பாட்டுப் புத்தகமும் ஒவ்வொரு வீடாகச் சுற்றிச்சுற்றி வரும். சினிமாப் பாட்டுப் புத்தகம் கிடைப்பது பொக்கிஷம் கிடைத்த மாதிரிதான். குளிக்கப் போகும்

போதும், கூட்டமாகச் சேரும்போதும் பெண்கள் பேசுகிற பேச்சு சினி

மாப் பாட்டுப்பற்றித்தான் இருக்கும். வீட்டுப் பெரியவர்களுக்குத் தெரி

யாமல் சினிமாப் பாட்டுப் புத்தகத்தை மறைத்து வைப்பதற்கும், பாடு வதற்கும் அவ்வளவு பாடு படுவார்கள். சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம் என்று யார் போனாலும் அவர்களிடம் சந்திரவதனம் வாங்கிவரச் சொல்வது சினிமாப் பாட்டுப் புத்தகம்தான். நன்றாகப் பாடு கிறாள் என்று பலரும் வாங்கிவந்து கொடுத்தார்கள். சந்திரவதனத்திடம் சினிமாப் பாட்டுப் புத்தகத்தைக் கடனாக வாங்கி ரகசியமாகப் பெண்கள் படிப்பார்கள். ஒரு சினிமாப் பாட்டைக் கேட்டால் எப்படி அச்சுஅசலா

கப் பாடுவாளோ, அதே மாதிரி தேவாரத்தில் எந்தப் பாட்டைப் படித்தா

லும் மறுநிமிஷமே படித்த பாட்டை அப்படியே திருப்பிச் சொல்வாள். சினிமாப் பாட்டு மட்டுமல்ல, பாட்டுப் புத்தகத்தில் முதலில் அச்சிட்

டிருக்கும் கதைச் சுருக்கத்தையும் அப்படியே சொல்லி எல்லோரையும்

அசத்திவிடுவாள். ஆண்கள் வெளியே போனதும் தெருவிலுள்ள பெண்கள் எல்லாம் சந்திரவதனத்திடம் வந்து, வட்டமாக உட்கார்ந்துகொண்டு

பாடச் சொல்லிக் கேட்பார்கள்.

காதல் பாட்டு, சோகப் பாட்டு, தத்துவப் பாட்டு என்று ஒவ்வொரு

வரும் ஒவ்வொரு பாட்டுக் கேட்பார்கள். யார் என்ன பாட்டுக் கேட்டாலும் பாடுவாள். எந்தப் பாட்டைக் கேட்டாலும் கடமைக்குப் பாட மாட்டாள். சிவன் கோவில் திருவிழாவில் தேவாரம், திருவாசகம் பாடுவாள். அப்படி ஒருமுறை கோவிலில் பாடியபோதுதான் வேதபுரி ஆதீனம் அவளுடைய பாட்டைக் கேட்டு வியந்துபோனார். உடனே யார் என்று விசாரித்துத் தில்லைவனத்தை வரச் சொல்லி “ஆதீனத்துக்கு வந்து முறயாப் பாட்டுக் கத்துக்கட்டும். நான் ஏற்பாடு செய்யுறன்” என்று சொன்னார். ஆதீனத்தை எதிர்த்துப் பேச முடியாது. தில்லைவனம் பேசவுமில்லை. உடனே “சரி அனுப்புறன்” என்று சொல்லிவிட்டார். ஆதீனமே அழைக்கிறார் என்ற பெருமை தில்லைவனத்துக்கு.

மூன்று வருடம் வேதபுரிக்கு சந்திரவதனம் பாட்டு கற்றுக்கொள்ளப் போனாள். அப்போது அவளுக்கு வயது பதினெட்டு. தினமும் மாட்டு வண்டியில் போய் வர வேண்டும். வண்டியைச் சிவலோகம்தான் ஓட்டி

னார். துணைக்குத் தினமும் வண்டிக்குப் பின்னாலேயே கலியம்மாளும் போனாள். மூன்று வருடத்தில் சிவலோகமோ, சந்திரவதனமோ வண்டி

யில் ஏறிக்கொள் என்று அவளை ஒரு முறைகூடச் சொன்னதில்லை. கலி

யம்மாளும் கேட்டதில்லை. கால் வலிக்கிறது, நடக்க முடியவில்லை,

உடம்பு சரியில்லை என்று ஒரு நாள்கூடக் கலியம்மாள் சொன்னதில்லை. தினம் போக வர என்று ஐந்து மைல் நடந்தாள். ஆனால் ஒரு நாள்கூட ஆதீனக் கட்டடத்துக்குள் போனதில்லை.

அதே மாதிரி இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மூன்று மாதத்துக்கு

ஒரு முறை என்று சிதம்பரத்துக்கு வண்டி கட்டிக்கொண்டு சந்திரவதனம் சினிமாவுக்குப் போவாள். துணைக்குக் கலியம்மாளும் போவாள். போகும்போதும் சரி, திரும்பி வரும்போதும் சரி நடந்துதான் போக வேண்டும். நடந்துதான் வர வேண்டும். செல்லம்மாள், தில்லையம்மாள், புனிதவதி, ஆதிரை என்று எல்லாருக்கும் ஒரு ரூபாய்க்கு பெஞ்சு டிக்கட் வாங்குவாள். கலியம்மாளுக்கு மட்டும் தரை டிக்கட். சந்திரவதனம்

சினிமாவுக்குப் போய்விட்டு வருகிற மறுநாள் தெருப் பிள்ளைகளும், பெண்களும் கதை கேட்க வந்துவிடுவார்கள். அவளும் சலிக்காமல் கதை சொல்வாள்.

எந்தப் பாட்டைப் பாடினாலும் மனதை உருக்கும் விதமாகத்தான் பாடுவாள். ஏற்ற இறக்கத்துடன் அவள் பாடுவதைக் கேட்கும்போது பெரிய மனுஷி பாடுவது போலத்தான் இருக்கும். ஆதீனம் மட்டும்தான் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்பார். வீட் டிலிருக்கும்போது தெருப் பெண்கள் சினிமாப் பாட்டுகளைத்தான் பாடச் சொல்லிக் கேட்பார்கள். தெருப் பெண்கள் அவற்றைத்தான் விரும்பிக் கேட்பார்கள்.

ரேடியோ போய் டிரான்சிஸ்டர் வந்ததும் சந்திரவதனம் அதை வீடு

முழுவதும் தூக்கிக்கொண்டே போவாள். திண்ணையில் உட்கார்ந்தால்

திண்ணையில், தோட்டத்திலிருந்தால் தோட்டத்தில் என்று டிரான்ஸிஸ்

டர் பாடிக்கொண்டேயிருக்கும். படுக்கும்போதும் தலைமாட்டில் டிரான்

சிஸ்டர் பாடிக்கொண்டுதான் இருக்கும் அவளும் கூடவே பாடிக்கொண்

டிருப்பாள். முதலில் ரேடியோ பைத்தியம் என்று பெயர் எடுத்தாள். பிறகு டிரான்சிஸ்டர் பைத்தியம். கடைசியில் சினிமாப் பைத்தியம்.

பாட்டுப் பயிற்சி முடிந்ததும் ஆதீனம்தான் ஒவ்வொரு கோவில் திரு விழாவிலும் “பாட்டுப் பாடு” என்று சொன்னார். “பெண்பிள்ளைக்கு

அது சரிவராது” என்று தில்லைவனம் சொன்னதை ஆதீனம் கேட்க

வில்லை. “நான் இருக்கன். பாத்துக்கிறன். தெய்வ சேவ. ஈசனோட அருளு. அத வீணாக்கக் கூடாது. தேவாரம் பாடுறவளா பொம்பள இருக்கக் கூடாதா?” ஆதீனம் சொன்னதைத் தில்லைவனத்தால் மீற முடியவில்லை. மீறவும் முடியாது. ஆதீனம் சந்திரவதனத்தின் சாதிக்கு ராஜா மாதிரி. ஆதீ னம் சொன்னால் சொன்னதுதான்.

சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கங்கைகொண்ட சோழ

புரம், என்று ஒவ்வொரு வருஷமும் திருவிழாவின்போது பாடுவதற்குப் போக ஆரம்பித்தாள். ஒவ்வொரு ஊர்க் கோவிலிலும் திருவிழா நாள் குறிக்கப்பட்டதும், தகவல் சந்திரவதனத்துக்கு வந்துவிடும். குறிப்பிட்ட நாளில் அழைத்துப்போவதற்கு ஆளும், வண்டியும் வந்துவிடும். சந்திர வதனம் மாட்டு வண்டியில் போனால், வண்டிக்குப் பின்னால் கலியம்மா

வும் போவாள். போக வேண்டும். அது தில்லைவனத்தின் கட்டளை. அதை மீற முடியாது. வருடாவருடம் சந்திரவதனம் பாட்டுப் பாட போனாள். ஒரு பெண் பாடுகிறாள் என்பதைப் பார்ப்பதற்காகவே கூட்டம் கூடும். எந்த அளவுக்குக் கூட்டம் கூடுகிறதோ அந்த அளவுக்குச் சந்திரவதனம் உற்சாகமாகிப் பாடுவாள். கூட்டத்தை மயக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவளுக்குள் இருக்கும்.

சந்திரவதனத்தை எந்தக் கோவிலில் வைத்து வைத்தீஸ்வரன் பார்த் தாரோ தெரியாது. ஆனால், அவள் கோவிலில் பாட ஆரம்பித்த எட்டாவது ஒன்பதாவது வருடத்திலிருந்துதான் சந்திரவதனத்துக்கு அவரைத் தெரியும். அதுகூட ‘காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி’ என்ற பாட்டைப் பாடச்

சொல்லிக் கேட்டுச் சீட்டு எழுதிக் கொடுத்ததால்தான் தெரியும். முதல்

வருடம் சாதாரணமாகச் சீட்டு வந்தது. சாதாரணமாகப் பாடிவிட்டுப்

போனாள். அடுத்தடுத்த வருடங்களில் எந்தெந்தக் கோவிலில் பாடுகி

றாளோ, எந்தத் தேதியில் பாடுகிறாளோ அங்கெல்லாம் வைத்தீஸ்வரன்

ஆஜராகிவிடுவார். சீட்டு மட்டும் வரும். அவ்வளவுதான். நேரில் வந்து ஒரு

வார்த்தை பேசியதோ, பார்த்ததோ இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு வைத்தீஸ்வரனிடமிருந்து எப்போது சீட்டு வரும் என்று காத்திருந்தாளா சந்திரவதனம்? தெரியாது. அவர் கேட்ட பாட்டைப் பாடும்போது மட் டும் சந்திரவதனம் வேறு ஒரு ஆளாகிப் பாடுவது மாதிரி இருக்கும். வைத் தீஸ்வரன் கொடுத்த சீட்டு அவளுடைய மனத்தில் பாம்பு மாதிரி படம் எடுத்து ஆடும். அந்த ஆட்டம் எளிதில் அடங்காது. தொடர்ந்து பாடுவாள். எவ்வளவு நேரம் பாடினாலும், பாடுவதற்கான ஆசை மட்டும் அவளிடம் குறையாது. அவளுடைய தொண்டைக்குழி ஊற்றுதான். அவள் அவரிடம் பேசியதில்லை. பக்கத்தில் நின்று பார்த்ததில்லை. தூரத்தில் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும் உருவத்தை மட்டும்தான் பார்த்திருக்கிறாள். அவ்வளவு

தான். எது சந்திரவதனத்தைப் பொசுக்கியது? வைத்தீஸ்வரனைச் சந்திரவத னம் விரும்பினாளா? கடைசிவரை பாடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தாளா? கல்யாணம், குடும்பம் என்று மாறிவிட வேண்டும் என்று நினைத்தாளா? எந்த முடிவை எடுப்பது என்று குழம்பிப்போய் தவித்தாளா? யாருக்கும் எதுவும் தெரியாது. ஒவ்வொரு விஷயமும் சந்திர வதனத்தின் மனதுக்கு மட்டும்தான் தெரியும்.

சந்திரவதனத்துக்கு இருபத்திநான்கு வயது நடந்துகொண்டிருந்த

போதுதான் தில்லைவனம் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். இரண்டு மூன்று மாப்பிள்ளைகளைப் பார்த்து முடிவு செய்ய முயன்றபோது “இப்ப கல்யாணம் வேண்டாம். இன்னும் ஒரு வருஷம் போகட்டும்” என்று தட்டிக்

கழித்தாள். அதனால் தில்லைவனத்துக்கு வருத்தம். ஆனால் சந்திரவதனத் திடம் நேரிடையாக எதையும் சொல்லவில்லை. மாப்பிள்ளை பார்ப்பதை

யும் நிறுத்தவில்லை. ஆனால் எதனாலேயோ மாப்பிள்ளை அமையவில்லை.

வயதும் ஏறிக்கொண்டிருந்தது. ஊரிலும் பலவிதமாகப் பேச ஆரம்பித்

தார்கள்.“ஏன் ஏன்?” என்றும் “எதனால எதனால?” என்றும் பலவிதமாக

வும் தில்லைவனம் கேட்டுப்பார்த்தார். எல்லாவற்றுக்கும் “இப்ப என்ன

அவசரம்? பாக்கலாம்” என்று சொல்லியே வந்தாள். சந்திரவதனத்தின்

சாதிக்காரர்களிடம் எப்போதும், எல்லாரிடமும் ஒரு பழக்கம் உண்டு. எதைக் கேட்டாலும், எதைச் சொன்னாலும் ‘பார்க்கலாம்’ என்றுதான் சொல்

வார்கள். செய்கிறேன் என்றோ, முடியாது என்றோ ஒருநாளும் சொல்ல

மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் பார்க்கலாம்தான். அதையேதான் சந்திர

வதனமும் சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்துக்குப் பிறகு தில்லை வனம் கோபப்பட்டார். தினம்தினம் சண்டை பிடித்தார். “எல்லாம்

என் தப்பு. ரேடியோ வாங்குனது, டிரான்ஸிஸ்டர் வாங்குனது, ஆதீனம் பேச்சக் கேட்டுப் பாட அனுப்புனது, எல்லாம் என் தப்புத்தான். தேவா

ரத்த, திருவாசகத்தப் பாடச் சொல்லி நானே கேட்டது தப்புத்தான். பதி

னஞ்சி வயசிலியே முடிச்சிருக்கணும். ரேடியோங்கிற பேய் வந்து வீட்டுல உட்கார்ந்ததாலதான் என் குடும்பம் அழிஞ்சிபோச்சி” என்று சொல்லிக் கத்துவார். சந்திரவதனம் எதற்கும் வாயைத் திறக்க மாட்டாள். அதனால் கலியம்மாளுக்கும் திட்டுக் கிடைக்கும். திட்டுக் கிடைக்கும்போதெல்லாம் “பாப்பாவுக்குக் கல்யாண யோகம் இன்னம் வல்ல சாமி. கிரகக் கோளாறு” என்று சொல்வாள். அதற்கு “ஜாதகத்தில எந்தக் குறையும் இல்லியே” என்று சொல்வார் தில்லைவனம்.

“என்னா பாப்பா செய்யுற? காய்க்காம, பூக்காம மொட்ட மரமா நிக்கப்போறியா?” என்று தன் பங்குக்குக் கலியம்மாள் பலமுறை கேட் டிருக்கிறாள். சில நேரம் கோபமாக “நீ செய்றது எனக்குப் புடிக்கல” என்று சொல்லியிருக்கிறாள். கடைசியில் “சீட்டுக் கொடுக்கிற ஆள மனசில நெனைச்சிக்கிட்டு இருக்கியா?” என்று கேட்டாள். அதற்கும் பதிலில்லை. “அந்தாளு யாருன்னே தெரியல. ஆளப் பாத்தா வயசானவனா தெரியு

றான். ஒனக்கும் அவனுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. அந்தாளுக்குப் பொண்டாட்டி புள்ளைன்னு இருக்கும்” என்று சொன்னாள். ஒருநாள்

கேட்டாள்: “நீ ஒரு வாத்த சொல்லு. அந்தாள நடக்க முடியாம செஞ்சிப் புடுறன். மருந்து வச்சிடலாம். நீ எட்டணா தர வேண்டாம்” என்று

சொன்னதற்கு மட்டும் வாயைத் திறந்தாள் சந்திரவதனம். “தப்பா பேசாத கலியம்மா. ஈசனருள் இருந்தாத்தான் எதுவும் நடக்கும். நாம்ப நெனச்சா மட்டும் நடக்காது. எனக்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமுமில்ல. இருந்தா ஒனக்குத் தெரியாதா? அந்த ஈசன்தான் எம் மனசுல இருக்கான். வேற யாருமில்ல.”

கடைசியாக நல்லது செய்கிறேன் என்று தில்லைவனத்திடம் வைத்தீஸ்

வரன் பற்றிய தகவலைக் கலியம்மாள் சொன்னாள். “அதுதான் விஷயமா,

எங்கிட்ட சொன்னா என்ன?” என்று கேட்ட தில்லைவனம் வைத்தீஸ்

வரனைப் பற்றி விசாரித்தார். கல்யாணமாகி நான்கு குழந்தைகள் இருக் கிறது. பெரிய பெண் வயதுக்குவந்துவிட்டது என்ற தகவல் கிடைத்தது. விஷயத்தைச் சந்திரவதனத்திடம் கேட்டார். தனக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று சந்திரவதனம் உண்மையைச் சொன்னாள். ஆனால் அவள் சொன்னதைத் தில்லைவனம் நம்பவில்லை.

தன்னுடைய பேச்சைத்தான் கேட்கவில்லை. ஆதீனத்திடம் சொல்ல லாம் என்று வேதபுரிக்குப் போய் ஆதீனத்தைப் பார்த்து விஷயத்தைச்

சொன்னார் தில்லைவனம். ஆதீனம் சந்திரவதனத்தை வரவழைத்து “கல்

யாணம் பண்ணிக்க” என்று சொன்னார். “சாமி சொல்றபடி செய்றன்” என்று சொல்லிவிட்டு வந்ததோடு சரி. கல்யாணம் கட்டிக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. அதனால் எங்கும் பாடப் போகக் கூடாது என்று தில்லைவனம் பிடிவாதம் பிடித்தார். அது தெரிந்து ஆதீனம்தான் “பாட ணும். ஈசனோட சன்னதியில பாட ஆள் வேணும். இனிமே கார்ல போயி கார்லியே வரட்டும்” என்று உத்தரவு போட்டார். ஆதீனத்தை எதிர்த்துப் பேச தில்லைவனத்தால் முடியவில்லை. பாடக் கூப்பிட வருகிறவர்கள் கார் கொண்டுவர ஆரம்பித்தார்கள். துணைக்கு ஆள் வேண்டும். அதற்

காகக் கலியம்மாளை காரில் ஏற்ற முடியாது. அதனால் சிவலோகத்தின் மகள் புனிதவதி சந்திரவதனத்துடன் போக ஆரம்பித்தாள்.

திருக்கடையூர் கோவிலுக்குப் பாடப் போகும்போது புனிதவதிக்கு உடம்பு சரியில்லை. பக்கம் என்பதால் சந்திரவதனம் மாட்டு வண்டியில் போனாள். கூடவே கலியம்மாளும் போனாள். அங்குதான் வைத்தீஸ்வர

னைப் பார்த்துக் கலியம்மாள்தான் பேசினாள்: “இனிமே பாப்பாவுக்குச்

சீட்டு கொடுக்காதீங்க. மனச மாத்தாதீங்க. ஒங்க வயசு என்னான்னு தெரிஞ்

சிக்கிட்டு எதயும் செய்யுங்க. பாப்பா தீஞ்சிப்போயிக் கெடக்கு. கல்யா

ணம் கட்டாமியே கிழவியா ஆக்கப் பாக்குறிங்களா? வயசு முத்திப்போயி டிச்சி. தெரியுமா?” என்று கேட்டாள். வைத்தீஸ்வரன் ஒரு வார்த்தைகூடப்

பேசவில்லை. அன்று பாட்டு கேட்காமலேயே திரும்பிப் போய்விட்டார்.

வைத்தீஸ்வரனைப் பார்த்துப் பேசியதை ஒருநாள் சந்திரவதனத்திடம் சொன்னாள். “இனிமே வராதீங்க. சீட்டு கொடுக்காதீங்க. இதுதான் மேங் குலத்தவங்க செய்றதான்னு கேட்டன்.”

“நீ செஞ்சது தப்பு. அவுங்க வந்து எங்கிட்டப் பேசி இருக்காங்களா? நான்தான் போயிப் பேசியிருக்கனா? எதுக்கு நீ புதுக் கதய உண்டாக்குற? அந்த ஈசன் எனக்கு ஒரு நல்ல வழியக் காட்ட மாட்டானா?” என்று கேட்டு முறைத்தாள்.

“நீ இப்பிடியே குந்தியிருப்ப. அத நான் பாத்துக்கிட்டு குந்தியிருக் கணுமா? ஆம்பள வாட இல்லாமியே நீ செத்துப்போவணுமா? ஒரு புள்ளைக்கிப் பாலு கொடுக்காமியே போறதுக்கா பொண் ஜென்மம் எடுத்த? இதான் மேங்குலத்தாங்க செய்யுறதா? ‘ஆ’ன்னும் இல்லாம ‘ஊ’ன்னு இல்லாம மை மந்தரமா இருக்கணுமா? இனிமே பாத்தாலும் கேப்பந்தான். எங்க பாப்பா தலயில எதுக்குக் கொள்ளி வைக்கிறீங்க?

நீங்க முக்காக் கிழவங்கிறத மறக்காதிங்கன்னு சொல்லத்தான் செய்வன்.

சண்டயும் புடிப்பன். நீ என்னெத் திட்டுனா திட்டிட்டு போ. ஊட்ட

வுட்டுப் போவச் சொல்றியா, போறன். ஆனா கல்யாணம் கட்டணும். ஒனக்குப் பொறக்குற புள்ளைக்கும் பீத்துணி, மூத்திரத் துணிய அலசிப் போடணும். அதான் என் ஆச.” உத்தரவு போடுவது மாதிரி கலியம்மாள் சொன்னாள். “ஒன்னோட வாய அடைக்க முடியாது. தப்பு செய்யாத. எல்லாத்தயும் அந்த நடராஜன் பாத்துக்குவான்” என்று மட்டும் சந்திர வதனம் சொன்னாள்.

கலியம்மாள் சண்டை போட்டு “இனிமே எங்க பாப்பா பாடுற எடத்

துக்கு வராதீங்க. சீட்டு கொடுக்காதீங்க” என்று சொல்லிவிட்டு வந்த இரண்டு மாதம் கழித்து ஒருநாள் வைத்தீஸ்வரன் தில்லைவனம் வீட்டுக்கு வந்து பெண் கேட்டார். தில்லைவனம் அன்று பேய் மாதிரி கத்தினார். “என்னா பேசுற? ஒனக்கு வயசு என்னா? எம் பொண்ணுக்கு வயசு என்னா? நாலு புள்ளை இருக்கு. எல்லாம் வளந்த புள்ளைங்க. ரெண்டாம் தாரமா கேக்குறியே வெக்கமா இல்ல? ஒனக்கு எம் பொண்ணு பெத்த புள்ளை மாதிரி இருக்கா. மானம், வெக்கம் வேண்டாம்? வெள்ளை வேட்டி கட்

டிக்கிட்டு வந்திட்ட, நீயெல்லாம் பெரிய சாதியில பொறந்தவனா?” என்று பேசாத பேச்செல்லாம் பேசினார். எல்லாவற்றுக்கும் வைத்தீஸ்வரன் ஒரே வார்த்தையில் “தப்புதான்” என்று சொல்லிவிட்டுப் போனார். போனவர் நேராக வீட்டுக்குப் போகவில்லை. எங்கு போனார் என்றும் தெரிய

வில்லை. காசிக்குப் போயிருக்கலாம் என்று சொன்னார்கள். இதுகூட ஒரு

வருஷம் கழித்து ஆதீனத்தைப் பார்க்கப்போயிருந்தபோதுதான் தெரிந்தது.

அந்த விஷயத்தைக் கேட்டதிலிருந்து தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் படிப்பது, பெரிய எழுத்துப் புத்தகங்கள், மதுரை வீரன் கதை,

நல்லதங்காள் கதை படிப்பது, சினிமாப் பாட்டு கேட்பது என்று

எல்லாவற்றையும் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்தாள். அவ

ளுடைய நடவடிக்கையால் தில்லைவனம் ஒடுங்கிப்போனார். வெளியூர்க் கோவில்களுக்குப் பாடப் போவதையும் குறைத்துக்கொள்ள ஆரம்பித்

தாள். கட்டாயப்படுத்துபவர்களிடம் “நான் கோவிலுக்கு வரக் கூடாது” என்று சொல்லி மழுப்பி அனுப்பினாள். சந்திரவதனம் பாட வரவில்லை என்றதும் ஒவ்வொரு கோவிலிலும் டேப் ரிக்கார்டர் வைத்துப் பாட்டுப் போட ஆரம்பித்தார்கள்.

தனியாக இருக்கும்போது “என்னாலதான் பாப்பா எல்லாத் தப்பும் நடந்துபோச்சி. நான் சொன்னதாலதான் அவுரு பொண்ணு கேட்டு வந் தாரு. இல்லன்னா அந்தாளு பாட்டுக்கும் வந்து பாட்டக் கேட்டுட்டுப் போயிருப்பாரு. ஒனக்கு நல்லதுன்னு செய்யப் போயித் தப்பாயிப்

போச்சே” என்று தினம்தினம் கலியம்மாள் புலம்பி அழுவாள். “எனக்கு

இது விதி. அவருக்கு அது விதி. ஈசனோட கட்டள. அது ஒன் மூலமா நடந்திருக்கு. அதுக்கு நீ என்னா செய்வ? காத்து அடிச்சாதான மரம் அசை யும். அந்த மாதிரிதான். நீ எனக்குக் கெடுதல் செய்ய மாட்ட” என்று ஆயிரம் விதமாகச் சமாதானம் சொன்னாலும் கலியம்மாளின் மனம் தவறு செய்துவிட்டோம் என்று ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டுதான் இருந்தது. சில நாட்களில் “ஒலகத்தில எத்தன ஆம்பள எத்தன பொட்டச்

சிக்கு டிமிக்கி கொடுத்திட்டுப் போறான்? அதே மாரி எத்தன பொம்பள எத்தன ஆம்பளக்கி கல்தா கொடுத்திட்டுப் போறா? எதுவுமே இல்லாம நீ

எதுக்கு சாவுற? ஒங் கதயச் சொன்னா அறியாப் புள்ளைகூடப் ‘பொய்யி’ன்னு சொல்லிட்டுப் போவும். பேசிப் புழங்கல. பக்கத்தில நின்னதில்ல. அந் தாளு காத்து ஒம் மேல பட்டதில்ல” என்று சொல்லும்போதெல்லாம் “என்னாலதான காணாமப்போயிட்டாங்க? என்னாலதான நடந்துச்சி?” என்று கேட்பாள். அவ்வாறு கேட்கும்போதெல்லாம் அவளுடைய கண்கள் கலங்கி இருக்கும்.

“என்னாலதான் நடந்துபோச்சி பாப்பா. எல்லாத்துக்கும் ரேடியோவும், பாட்டும்தான் காரணம்.”

“நீ இல்ல கலியம்மா. என் விதி. இருபத்திநாலு வயசிலியே அப்பா

சொன்னபடி கல்யாணம் கட்டியிருக்கணும். கல்யாணம் கட்டுனா பாட்டுப் பாடப் போவ முடியாதேன்னுதான் தள்ளிப்போட்டன். அடுத்த வருஷம் பாத்துக்கலாம். அடுத்த வருஷம் பாத்துக்கலாம்ன்னு இருந்திட்டன். நாள் போயிடிச்சி. வருஷம் போயிடிச்சி. வயசாயிடிச்சி. இப்ப எல்லாரும் வந்து ரெண்டாம் தாரம்தான் கேக்குறாங்க. ‘என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே’ங்கிற பாட்டுதான் நெனவுக்கு வருது. பொண்ணு கேட்டு வந்த எல்லாரும் பேருக்குத்தான கேட்டாங்க. கட்டாயப்படுத்தலியே. பொண்ணு கேட்டு வந்த எல்லாரும் முழு மனசோடவா கேட்டாங்க? எல்

லாருக்கும் எம் மேல சந்தேகம். ‘முகூர்த்த ஓல எழுதுனதுமே பாடப் போறத நிறுத்திடணும்னு’தான சொன்னாங்க? இத்தன வருசமா நான் கோவில்லதான பாடினன்? அதுவும் ஈசன் முன்னால. அதுவா குத்தம்? நெருப்பயும் சந்தேகப்படுற ஒலகமா இருக்கு. இதுவர நான் ஒரு ஆம்பள கூடவாவது சிரிச்சிருக்கன்? தனியா பேசிருக்கன்? எங்கூடவே எப்பவும் சிவலோகம் அண்ணன் இருக்கத்தான செஞ்சாரு. நீயும்தான இருந்த? யாருக்கும் எம்மேல நம்பிக்க இல்லெ. பொம்பள ஒருத்தி மேட ஏறிட்டா போதும், அவ நல்லவ இல்லன்னு ஆயிடுது. மேட ஏத்திவுட்டவங்களே அப்பிடிச் சொல்றதுதான் அதிசயம். நான் கோவில் கோவிலாப் பாடப் போவாம இருந்திருந்தா எந்தச் சிக்கலும் இருந்திருக்காது. கல்யாணமும் நடந்திருக்கும். புள்ளையும் பொறந்திருக்கும். என் விதி தனியா இருக் கணும்ன்னு இருக்கு. அத மாத்த முடியுமா? கைலாயநாதனோட கணக்

குத்தான் செல்லும், நம்ப மனக்கணக்குச் செல்லாது.”

“நீ சொல்றது தப்பு பாப்பா.”

“ஒலகம் தெரியாதவங்களுக்குத்தான் சிரிப்பு, சந்தோசம் எல்லாம் இருக்கும்.”

“எனக்குப் புரியல.”

“புரியாம இருக்கிறதாலதான் ஒன்னால சிரிக்க முடியுது. அழ முடியுது கலியம்மா. ”

தீராத தலைவலி என்று ஒரு வாரம் பத்து நாள்தான் தில்லைவனம் படுக்கையில் படுத்தார். தஞ்சாவூர் மருத்துவமனையில் வைத்துப் பார்த்

தார்கள். மூளைக்காய்ச்சல் என்றார்கள். பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் வைத்து ஒரு மாதம் பார்த்தார்கள். எங்கு போயும் எதுவும் நடக்கவில்லை. அப்படியும் இப்படியுமாகக் கிடந்து மூன்று மாதம் கழித்துத் தில்லைவனம் இறந்தார். அப்போது சந்திரவதனத்துக்கு வயது நாற்பதை நெருங்கிவிட்டது.

தில்லைவனம் செத்த செய்தி அறிந்து ஆதீனம் ஆள் விட்டுச் சந்திரவத னத்தை அழைத்துப் பேசினார். ஒரே பிடிவாதமாக “கல்யாணம் வேண்

டாம் சாமி. நான் ஈசனோட சன்னதியில பாடிப் பாடியே செத்துப் போறன். ஈசனப் பாடுறதவிடப் பெரிய கொடுப்பன என்னா இருக்கு? கோவில்ல பாடுனதால எல்லாரும் என்னெச் சந்தேகப்படுறாங்க. முன்ன

புண்ணியம்ன்னு சொன்னாங்க. இப்ப அசிங்கம்னு சொல்றாங்க. நான்

என்னா தப்பு செஞ்சன்? ‘நானேதும் அறியாதே என்னுள் வந்து நல்லன வும் தீயனவும் காட்ட நின்றாய்’ன்னு சிவனத்தான பாடுனன்? அதுதான் நான் செஞ்ச குத்தம்” என்று சொல்லிவிட்டாள். அவர் பார்த்த மாப் பிள்ளைகளையும் உதறித் தள்ளிவிட்டாள். “பாடுறத மட்டும் விடக் கூடாது” என்று சொல்லி அனுப்பினார். அதன் பிறகு ஆதீனம் இரண்டு மூன்று முறை ஆள் விட்டால்தான் போய்ப் பார்ப்பாள். “பாடுறத ஏன் கொறச்சிக்கிட்டே வர்ற? ஆதீனம் நடத்துற பள்ளிக்கூடத்தில, காலேஜில பாட்டுக் கத்துக்கொடு. சம்பளம் தர்றன். வீடு தர்றன். வருசத்துக்கு முப்பது மூட்ட நெல் தர்றன்” என்று கட்டாயப்படுத்தினார். “நான் கோயில்ல மட்டும்தான் பாடுவன். ஈசன் சன்னிதானத்த வுட்டு வேற எங்கியும் பாட மாட்டன் சாமி” என்று சொன்னதற்கு ஆதீனம் கோபப்படவில்லை. சந் தோஷப்பட்டார். பழைய ஆதீனம் செத்து ஆறு வருடமாகிவிட்டது. புது ஆதீனம் என்ன, ஏது என்று சந்திரவதனத்திடம் கேட்கவில்லை. இவளும் போய்ப் பார்க்கவில்லை.

“எழுந்திரு எழுந்திரு” என்று ஏழெட்டுப் பேர் கத்திய சத்தம் கேட்டு

தான் பழைய நினைவுகளிலிருந்து மீண்டாள் கலியம்மாள். ஒரு நொடி

என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளச் சிரமப்பட்

டாள். பிணத்தை ஏற்றிச்செல்வதற்கான வண்டி வந்து நின்றதைப் பார்த்

தாள். “செத்தா தூக்கிப் போடவும், பாட தூக்கவும் நாலு பேரு வேணும்ங்

கிற வாத்தக்கூடப் பொய்யாப் போச்சே” என்று சொன்னாள். பிணத்தை ஏற்றிச்செல்ல வண்டி வந்துவிட்டதால் பாடைகூடக் கட்டவில்லை. கலி யம்மாவுக்கு எரிச்சல் வந்தது. எரிச்சலை மறைப்பதற்காக வீட்டுக்குள் பார்த்தாள். கூட்டம் குறைவாக இருந்தது. எழுந்து வீட்டுக்குள் போனாள். பிணத்தைச் சுற்றி உட்கார்ந்திருந்தவர்கள் ஒதுங்கி நின்றுகொண்டனர்.

வடக்குத் தெற்காக இருந்தது பிணப்பெட்டி. சந்திரவதனத்தின் முகத்தை ஒரு முறைதான் பாத்தாள். அதற்கு மேல் பார்க்க முடியவில்லை. நான்கைந்து நாட்களுக்கு முன் பார்த்த சந்திரவதனம் அல்ல இவள். வீடே இடிந்து விடுகிற அளவுக்குச் சத்தம்போட்டு அழுதாள். திரும்பத்திரும்ப ஒரே வார்த்தையைத்தான் கேட்டாள் “போயிட்டியா சாமி?”

“போதும் போ கலியம்மா” என்று கூட்டத்திலிருந்த பெண் யாரோ

சொன்னாள். அதைக் காதில் வாங்காத கலியம்மாள் சொன்னாள் “நீ

செத்து நான் உசுரோட இருக்கன். என்னெ வுட்டுட்டுப் போவ ஒனக்கு எப் பிடி மனசு வந்துச்சி? எனக்கு இனி யாரு சோறு போடுவா? காப்பித் தண்ணி ஊத்துவா? ஒன்னோட முடிஞ்சிப்போச்சி இந்த ஊட்டு ஒறவு” என்று

சொல்லி அழுததைப் பார்த்து அந்த இடத்திலிருந்த பெண்களில் புனித

வதி மட்டும்தான் அழுதாள்.

சந்திரவதனத்துக்குப் புனிதவதி என்றால் கூடுதல் பிரியம். சிவபுண்ணி யத்தையும் பிடிக்கும். ஆனால் அவருடைய மனைவி தில்லையம்மாளைப் பிடிக்காது. எதுவாக இருந்தாலும் ‘பட்பட்’ என்று முகத்தை முறித்துப்

பேசிவிடுவாள். ஆனால் சிவலோகமோ, அவருடைய மனைவி செல்லம்

மாளோ, சந்திரவதனம் செய்வது பிடிக்கவில்லையென்றாலும் வெளியில்

ஒன்றும் சொல்ல மாட்டார்கள். தில்லைவனம் இறந்த பிறகு “அத்தகூட

இரு” என்று புனிதவதியைச் சந்திரவதனத்துடனேயே இருக்க விட்டுவிட் டார்கள்.

“போதும் கலியம்மா. புத்துநோவால படாத பாடு பட்டுட்டாங்க. இந்த அளவுக்கு முடிஞ்சதே போதும்னு நென” என்று தில்லையம்மாள் சொன்னாள். கலியம்மாள் அழுது களைத்துவிடுவாள் என்பதற்காக அவள் அப்படிச் சொல்லவில்லை. ‘வாசலுக்குப் போய்விடு’ என்று சொல்லாமல் சொன்னாள். இத்தனை வருஷத்தில் மரகதம் செத்தபோது பிணத்தைப் பார்ப்பதற்காக ஒரு முறை வீட்டுக்குள் வந்தாள். அதற்கடுத்து தில்லை

வனம் செத்தபோது. மூன்றாவது முறையாக இப்போதுதான் வந்திருக்கி

றாள். அதுவே தில்லையம்மாளுக்குப் பொறுக்கவில்லை. அப்போதுதான் கலியம்மாளுக்கு விஷயம் புரிந்தது. இனி இந்த வீட்டுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம்? பிணம் வீட்டை விட்டு வெளியே போனதும், தானும் போக வேண்டியவள்தானா என்ற கேள்வி மனதில் எழுந்தது. அப்போதுதான் உயிர் போவது மாதிரி வீறிட்டு அலறி அழுதாள். இப்படி ஒருநாள் வரும் என்று அவள் நினைத்ததே இல்லை.

அமாவாசையின் பெண்டாட்டி வந்து கலியம்மாளை அழைத்துக்

கொண்டுபோய், முன்பு வாசலில் உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார வைத்தாள். “இனிமே இந்த ஊட்டுக்கும் எனக்கும் ஒண்ணுமில்லியா?” என்று மருமகளிடம் கேட்டாள். அவள் அழுதுகொண்டு “பாப்பாவே போயிடிச்சி. இன்னும் என்னா இருக்கு?” என்றாள்.

“அப்ப நானும் பொணம்தான். அம்மாசிகிட்ட சொல்லி எனக்கும் குழி வெட்டச் சொல்லு.” கலியம்மாள் வாய்விட்டு அழுதாள். அப் போது அவளுடைய மகள்கள் அன்னக்கிளியும், செல்லக்கிளியும் அழுது கொண்டே வந்தார்கள்.

சந்திரவதனத்துக்கு ஆறு மாதமாகவே சாப்பாடு குறைந்துவிட்டது.

கடைசியில் வெறும் காப்பி, பால் என்று மட்டுமே குடித்துவந்தாள். தொண்

டைப்புண், வயிற்றுப்புண் என்று சாதாரண வைத்தியமே பார்த்துவந்

தாள். புற்றுநோய் என்று கடைசியாகத் தஞ்சாவூர் மருத்துவமனையில் தான் கண்டுபிடித்தார்கள். அதுவும் ஒரு மாதத்துக்கு முன்பு. கர்ப்பப்

பையில் ஆரம்பித்து, குடல் முழுவதும் பரவித் தொண்டைக்குழிவரை வந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் மூன்று மடங்கு வளரும், மாதக்

கணக்குத்தான் என்று சொன்னார்கள் என்று அமாவாசை சொன்னபோது

கலியம்மாவுக்கு உயிரே நின்றுவிட்ட மாதிரி இருந்தது. தஞ்சாவூர் மருத்

துவமனைக்குப் புறப்பட்டபோது-, நானும் வருகிறேன் என்று கலியம்மாள்

அடம்பிடித்து அழுதாள். “வர வேணாம். வீட்டுலியே இரு” என்று சந்திர வதனம் சொன்னாள். “இத்தினி வருசமா ஒன் காலடியில கெடக்குறனே. எனக்கு நீ என்னா செஞ்ச? ஆஸ்பத்திரிக்கு ஒங்கூட வர்றன். இந்த உப

காரத்தயாவது செய்” என்று சொல்லிக் கலியம்மாள் அழுதபோது சந்திர வதனம் சொன்னாள்: “அப்பா செத்த பிறகு நான் உசுரோட இருக்கிறதும் தெனம்தெனம் அடுப்புப் பத்த வைக்கிறதும் ஒனக்காகத்தான் கலியம்மா.”

“அப்பிடியா சாமி. நீ தங்கமா இருப்ப. நான் ஆஸ்பத்திரிக்கு வரக் கூடாதா?”

“இங்கியே இரு. வீட்டப் பாத்துக்க.”

“யாருக்கு எம்மாம் கெடைக்கணுமோ அதுதான கெடைக்கும். நீ பத்திர மாப் போயிட்டு வா. ஒன்னோட வாத்த எனக்குக் கோடி ரூவா கெடச்

சாப்ல.”

வெற்றிலைப் பாக்குப் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்துக் கலியம்

மாள் சந்திரவதனத்திடம் கொடுத்தாள். பக்கத்திலிருந்த சிவலோகம் வாங் காதே என்பது மாதிரி கண் ஜாடை காட்டினார். அதைப் பொருட்படுத்

தாமல் சந்திரவதனம் பணத்தை வாங்கிக்கொண்டாள். கார் ஏறித் தஞ்

சாவூர் போனாள். “எனக்கு என்னா செஞ்ச?” என்று கேட்டது தவறு

என்று இப்போது கலியம்மாள் நினைத்தாள். “ஒனக்கென்ன வேண்டும்?” என்று ஒருநாளும் மரகதமோ, தில்லைவனமோ கேட்டதில்லை. சந்திர வதனமும் கேட்டதில்லை. அதே மாதிரி கலியம்மாவும் “எனக்கு இன்னது வேண்டும்” என்று கேட்டதில்லை. சோற்றுப் பஞ்சம், துணிப் பஞ்சம் என்று இதுவரை வந்ததில்லை.

“என் சாமி செத்துப்போச்சி” என்று கலியம்மாள் அழுதுகொண்டிருந் தாள். அமாவாசை, வாணவெடி விட்டுக்கொண்டிருந்தான்.

தில்லையம்மாளின் மகள் தெருவில் உட்கார்ந்திருந்தவர்களுக்குக்

காப்பி கொடுத்துக்கொண்டிருந்தாள். “சாவு ஊட்டுல எப்பிடித்தான்

மனம் வந்து காப்பித் தண்ணிய குடிக்குதுவளோ?” கலியம்மாள் சொன் னாள்.

“நேரமாவறது தெரியலியா? பொணம் சுடுகாட்டுக்குப் போக வேண் டாமா?” ஒரு ஆள் சிவலோகத்திடம் கேட்டான்.

“எல்லா வேலயும் நடந்துகிட்டிருக்கு. நாலு மணிக்கு எடுத்திட

வேண்டியதுதான்.” சிவலோகம் சொன்னார். பிணத்தைக் குளிப்பாட்டு

வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

பிணத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தெற்குத் தெரு பெண்கள் இரண்டு பேர் “கடசி முட்டும் கல்யாணம் கட்டிக்காமியே இருந்திட்

டாங்க. அம்மாம் இறுமாப்பு. ஒவ்வொரு கோவிலுக்கும் பாடுறதுக்கு அழச்

சிக்கிட்டு போறாங்கங்கிற பெருமதான் திமுராயிடிச்சி. எல்லாத்துக்கும் மேல கிரகக் கோளாறு இருக்கணும். அதான் கல்யாணம் நடக்கல. அதே மாதிரி புனிதவதிக்கும் இழுத்துக்கிட்டுக் கெடக்கு. இவுங்க வீட்ட ஏதோ சாபம் புடிச்சிருக்கும்” என்று பேசிக்கொண்டே போனார்கள். அதைக் கேட்ட கலியம்மாளுக்குக் கோபம் வந்தது. “என் தங்கத்த எப்பிடிச்

சொல்றாங்க பாரு” என்று சொன்னாள்.

எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் சந்திரவதனம் கூச்சமில்

லாமல், தயக்கமில்லாமல் பாடுவாள். அவள் பாடுவதை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். கோயில் தர்மகர்த்தா என்ன கொடுக் கிறாரோ அதை மட்டும்தான் வாங்கிக்கொள்வாள். கூடுதலாகக் கொடுங் கள் என்று ஒருநாளும் கேட்க மாட்டாள். கூடுதலாகக் கேள் என்று

சொன்னால் “ஆண்டவனுக்குத்தான பாடுனன். அதுக்குக் கூலி கேக்க மாட்டன்” என்று சொல்லிவிடுவாள். தன்னுடைய மனத்தில் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டாள். என்ன நினைக்கிறாள், அவளுடைய மனத்தில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சந்திரவதனம் பிறரைத் திட்டியோ, முகம் சுளித்துப் பேசியோ கலியம்மாள் ஒருநாளும் பார்த்ததில்லை; கேட்டதில்லை.

வீட்டுக்குப் பின்புறம் காய வைத்திருக்கிற தானியத்தைத் தின்னக் கோழி வந்தால்கூட துரத்திவிட மாட்டாள். “கோழிய ஓட்டு பாப்பா” என்று கலியம்மாள் சொன்னால் “கோழி தின்னா குதிர் தானியம் தீந்

திடப்போவுது?” என்று சொல்லிவிட்டுக் கோழியை விரட்டிவிட மாட்டாள். கலியம்மாள்தான் கோழியை ஓட்டுவாள். தில்லைவனம் இறந்த பிறகு ஒருநாள்கூட வயலுக்கு வந்ததில்லை. அதற்கு முன்பும் வந்த

தில்லை. களத்துமேட்டுக்கு வந்ததில்லை. அவளுடைய சாதிப் பெண்கள் ஒருநாளும் வயலுக்கோ, களத்துமேட்டுக்கோ வந்ததில்லை. சந்திரவத

னம் மட்டும் எப்படி வருவாள்? எல்லாவற்றையும் அமாவாசையும், அவ னுடைய பெண்டாட்டியும்தான் பார்த்துக்கொண்டார்கள். தில்லை

வனம் செத்த பிறகு கலியம்மாளையும் வயலுக்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அமாவாசை வயலில் என்ன செய்கிறான், உரம் எவ்வளவு போடுகிறான், எத்தனை ஆள் வேலை செய்கிறார்கள் என்று எதுவும் கேட்க மாட்டாள். அமாவாசை சொல்கிற கணக்குத்தான். எத்

தனை மூட்டை நெல் விளைந்தது என்பதைக்கூடக் கேட்க மாட்டாள்.

“கூடுதலா ஏன் செலவு செஞ்ச? இந்தப் போகம் ஏன் நெல்லு கொறஞ் சியிருக்கு?” ஒரு வார்த்தை கேட்க மாட்டாள். அவளுடைய நம்பிக்கையை அமாவாசையும் சரி, அவனுடைய பெண்டாட்டியும் சரி, இதுவரை பொய்யாக்கினதில்லை. வார்த்தை மாறிப் பேச மாட்டார்கள். சொந்த

வயல் மாதிரிதான் வேலை செய்வார்கள். ஒரு படி நெல்லை, ஒரு படி உளுந்தை மறைக்க மாட்டார்கள். களத்துமேட்டில் நெல் அடித்து முடித் ததுமே யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்று அமாவாசை கேட்பான்.

“தொழிலாளிகளுக்கு வீட்டுக்கு ரெண்டு மூட்டை கொடுத்திடு. பெரி யண்ணன் வீட்டுக்கு இருவது. சின்னண்ணன் வீட்டுக்குப் பதினஞ்சி. சிவன் கோவிலுக்கு அஞ்சி. கூலி ஆளுக்குக் கொடுத்திடு. நீ வேணுங்கிறத எடுத்

துக்க. மிச்சத்தக் கொண்டா” என்று சந்திரவதனம் சொல்வாள். அவ

ளுடைய வார்த்தையை மீற மாட்டான் அமாவாசை. இதனால்தான்

ஊரில் பொறாமை. அதிலும் சிவபுண்ணியத்துக்கும், தில்லையம்மாளுக்கும் தான் அதிகப் பொறாமை. அதிக எரிச்சல். “திருடுறான். கொள்ளையடிக்கி

றான்” என்று சொல்வார்கள். யார் எவ்வளவு சொன்னாலும் அதைக் காதில் வாங்கவே மாட்டாள் சந்திரவதனம்.

பிணத்தைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவதற்கு முன், பிணத்தின் மீது போட்ட மாலைகளை அள்ளிக்கொண்டுவந்து பிண வண்டியின் மீது போட்டார்கள். அதைப் பார்த்ததும் “விடுதல கெடயாதுன்னு பாடுனியே. இப்ப விடுதல ஆயிட்டியே” என்று சொல்லிக் கலியம்மாள் அழுதாள்.

பிணத்தை வெளியே கொண்டுவந்து குளிப்பாட்டினார்கள். அதைப் பார்த்த கலியம்மாள் “ஊர்ஊராப் போயி பாடுன. இப்ப ஒரு வாத்த ஒன்

னால பேச முடியலியே அம்மா.” தலையில் அடித்துக்கொண்டாள். “எந்த ஒரு ஆசயும் இல்லாமியே செத்துப்போனியே. ஒம் மனசுல என்னா ஆசதான் இருந்துச்சி சாமி? ரேடியோ பொட்டி ரூபத்தில ஒன்னெப் புடிக்க

சனியன் வந்திருக்கானே. வாழ மறந்த பொண்ணு பாப்பா நீ. சந்தோசமின்னா என்னான்னு தெரியாமியே வாயிக்குள்ளார மண்ணப் போட்டுக்கிட்ட. இனிமே ஒனக்கு ஒரு சொமயும் இல்ல பாப்பா.”

“கத்தாம இரும்மா” அன்னக்கிளி சொன்னாள்.

“யாரோ எங்கியோ போயிட்டான்னு நீயே பொணக்குழியில போயி எறங்கிட்டியே சாமி. ஒண்ணுமே இல்லாம ஒருத்திய சாவடிச்சிட்டான். தன்னால ஒருத்தன் ஊடு, வாசலு, பொண்டாட்டி, புள்ளைய வுட்டுட்டுப் போயிட்டான்னு மருவி மருவிச் செத்திட்டியே அம்மா. ஒன்னெ மாரி ஒரு பொறப்பு இனி இந்த மண்ணுல பொறக்குமா?”

“கத்தாம இரு” அமாவாசையின் பெண்டாட்டி சொன்னாள்.

வைத்தீஸ்வரனைப் பற்றி நினைத்ததுமே கலியம்மாளுக்கு உடம்பு தீப்

பற்றி எரிவது மாதிரி இருந்தது. ஒருமுறை ஆதீனத்தைப் பார்ப்பதற்

காகப் போயிருந்தபோது, வைத்தீஸ்வரனுடைய குடும்பத்தார்களும்

ஆதீனத்தைப் பார்க்க வந்திருந்தார்கள். அங்கு பேசிக்கொண்ட பேச்சி

லிருந்துதான் வைத்தீஸ்வரன் வீட்டை விட்டுப் போய்விட்டார் என்ப

தும், சந்நியாசம் போயிருக்கலாம் என்பதும் சந்திரவதனத்துக்குத் தெரிய

வந்தது. அதிலிருந்துதான் சந்திரவதனம் உருக்குலைந்துபோனாள். பாட்டுப்

பாடுவது, வெளியூர்ப் பயணம் என்று எல்லாவற்றையும் படிப்படியாகக்

குறைத்துக்கொண்டே வந்து கடைசியில் வீட்டை விட்டு வெளியே போக

மாட்டேன் என்று சொல்கிற அளவுக்கு வந்துவிட்டாள். ஒரு காலத்தில்

எந்த அளவுக்குக் கூட்டத்தோடு இருந்தாளோ அந்த அளவுக்குக் கூட்

டத்தை விட்டு ஒதுங்கிப் போய்விட்டாள். கொக்குத்துறை வட்டாரத்

தில் அவளை மாதிரி புகழ் பெற்றவர்களுமில்லை, அதே அளவுக்கு அவள்

அளவுக்குத் துன்பப்பட்டவர்களுமில்லை. ஒவ்வொன்றாக நினைத்துப்

பார்த்த கலியம்மாள் சொன்னாள்: “எல்லாப் பாவத்திலயும் நான்தான்

பங்காளி. எல்லாத்துக்கும் ‘ஈசனருள்’னு சொல்லுவியே பாப்பா. நீ

இப்பிடிப் பாதியிலியே செத்துப்போறதும் ஈசனருள்தானா? வாய்க்கு

வாய் சிவசிவான்னு சொல்லுவியே. அந்த சிவனுக்கும் கண்ணு இல்லாமப் போயிடிச்சே.”

செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்தார்கள். பிணத்தை

‘சொர்க்க ரத’த்தில் ஏற்றினார்கள். ஊரே திரண்டு நின்று வேடிக்கை பார்த்தது. பிண வண்டி புறப்பட்டபோது கலியம்மாள், அமாவாசை, அவனுடைய பெண்டாட்டி, அன்னக்கிளி, செல்லக்கிளி, புனிதவதி என்று ஒருசிலர்தான் அழுதார்கள்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து, பாடுவதை நிறுத்தும்வரை சந்திர வதனம் சாமிப் பாட்டு, சினிமாப் பாட்டு, என்னென்ன பாடினாள் என் பதையெல்லாம் நினைத்துப்பார்த்தாள் கலியம்மாள். அவள் ‘சிவசிவ’ என்று சொல்வதையும், ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்வதையும் ‘நமச்சிவாயம் வாழ்க, நாதன் தாள் வாழ்க’ என்று சொல்வதையும் கேட்கும்

போது சின்னப் பிள்ளை சொல்வது மாதிரி அவ்வளவு அழகாக இருக்கும். எதைச் சொன்னாலும், எதைப் பாடினாலும் மனத்தின் ஆழத்திலிருந்துதான் குரல் வரும்.

பிண வண்டி சுடுகாட்டை நோக்கி நகரத் தொடங்கியது. ஒருசிலர் வண் டிக்குப் பின்னால் நடந்தனர். பலரும் மோட்டார் பைக்குகளில் சென்ற

னர். எல்லாருக்கும் பின்னால் கலியம்மாள் சுடுகாட்டை நோக்கி நடக்க

ஆரம்பித்தாள். வெயில் இல்லை. மழைக்காலம் மாதிரி வானம் மூடிக்கொண் டிருந்தது.

சந்திரவதனம் பாடும்போது அவளுக்கு முன் நல்ல கூட்டம் இருக்கும். கூட்டத்தைப் பார்க்காத மாதிரி, தன்னந்தனியாக பாடிக்கொண்டிருப்பது மாதிரிதான் பாடுவாள். நேரம் கரைந்துகொண்டிருக்கும். அது அவளுக்குத் தெரியாது. எத்தனை பாட்டு பாடியிருக்கிறாள், இன்னும் எத்தனை பாட்

டுப் பாட வேண்டும் எதுவும் அவளுக்குத் தெரியாது. ஒவ்வொரு பாட்டைப் பாடி முடிக்கும்போதும் அவளுடைய முகத்தில் மலர்ச்சி ஏற்படும். பொது வாக, சந்திரவதனம்பற்றிக் கலியம்மாள் சொல்லும்போது ‘நாக்குல உசுர வச்சியிருக்கா’ என்று சொல்வாள். சந்திரவதனத்தால் பாட்டு இல்லாமல், பாட்டு சம்பந்தமாக இல்லாமல் ஐந்து நிமிசம்கூடப் பேச முடியாது. பாட்டு இல்லாமல் நடக்கவோ, குளிக்கவோ, தூங்கவோ முடியாது. ஒவ்

வொன்றாக நினைத்தபடி நடந்துகொண்டிருந்த கலியம்மாள் சொன்

னாள்: “பாட்டு இல்லாம இப்ப எப்பிடிம்மா பாடயில போற?”

கலியம்மாள் சுடுகாட்டுக்கு வந்து சேர்வதற்குள்ளாகவே பிணக்குழி

மேட்டில் செய்ய வேண்டிய எல்லாச் சடங்குகளையும் செய்துவிட்டிருந்

தனர். பிணத்தையும் குழிக்குள் இறக்கிவிட்டார்கள். “மண்ணு அள்ளிப் போடுறவங்க வாங்க” என்று சொன்னான் ஒரு ஆள். சொந்தக்காரர்கள், தெருக்காரர்கள், சாதிக்காரர்கள் என்று பலரும் மண்ணைப் புறங்கையால் தள்ளிவிட்டு வந்தனர். கடைசியில் அமாவாசை மண்வெட்டியை எடுத்து மண்ணைப் பிணக்குழியில் தள்ள ஆரம்பித்தபோது, கலியம்மாள் கேட்டாள்: “சாமி, ஒரு புடி மண்ண நானும் அள்ளிப் போடட்டுங்களா?”

சிவலோகமும் சரி, சிவபுண்ணியமும் சரி வாயைத் திறக்கவில்லை. பிணக் குழியைச் சூழ்ந்து நின்றவர்களும் ‘போடு’ என்றும் சொல்லவில்லை. ‘போடாதே’ என்றும் சொல்லவில்லை. கொக்குத்துறையில் சுடுகாட்டுக்கு, அதுவும் மேல்சாதிச் சுடுகாட்டுக்கு வந்த முதல் பெண் கலியம்மாள்தான். அதோடு மண்ணள்ளிப் போடுகிறேன் என்று கேட்டவளும் அவள்தான். எல்லாரும் அமைதியாக இருந்தார்கள். அந்த அமைதியே போதும் என்று

துணிந்து போய் இரண்டு கைகளாலும் மண்ணை அள்ளி ஆசை தீரப்

பிணத்தின் மீது போட முயன்றாள். ஆனால் மண்ணை அள்ள முடிய வில்லை. கைகள் நடுங்கின. நிற்க முடியவில்லை. சிரமப்பட்டுத்தான் மண்ணை அள்ளி அவளால் போட முடிந்தது. அப்போது அவளுக்கு சந்திரவதனம் விரும்பியும் அடிக்கடியும் பாடும் பாட்டு நினைவுக்கு வந்தது. ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைக்கூட மறந்து பாடினாள்;

“இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை

நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை

உடல் வாதைக்கும் ஆசைக்கும் வேலையில்லை.”

* * * * *

இமயம்