இமயம்
இலக்கியக் களஞ்சியம்

தேடல்எழுத்துலகைத் தேடுங்கள்.

நூல்கள் · சிறுகதைகள் · கட்டுரைகள் · நேர்காணல்கள்

ஆகாசத்தின் உத்தரவு
இமயம் · சிறுகதைகள்

ஆகாசத்தின் உத்தரவு

வாசிப்பு முறை
கதைக்குள் நுழைய
இமயம்

ஆகாசத்தின் உத்தரவு

வாசிப்பு
19

சிமெண்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்குப் பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்திருந்தது. சாமி சிலைக்கு முன் எந்த அவசரமுமில்லாமல் கருத்த நிறமுடைய ஒரு ஆள் கும்பிட்டுக்கொண்டிருந்தான். நடந்து வந்த களைப்பால் வழிந்த வியர்வையைக்கூட அவன் துடைக்கவில்லை. கீழே வைத்திருந்த பையிலிருந்து செய்தித்தாள் ஒன்றை எடுத்துத் தரையில் விரித்துப் போட்டான். பையி லிருந்த பொரிகடலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து வைத்தான். ஒரு சீப்பு வாழைப்பழத்தை எடுத்துவைத்து அதில் ஊதுவத்தியைச் செருகி வைத்தான். இரண்டு குவாட்டர் பிராந்தி பாட்டில், ஒரு சிகரட் டப்பி என்று எடுத்து வைத்தான். எலுமிச்சம்பழம், கற்பூரம், தேங்காய், பூ, வெற்றிலைபாக்கு என்று படையலுக்குரிய பொருட்களை எடுத்து வைத்தான். கற்பூரத்தை எடுத்து சாமிக் குதிரையின் காலடியில் வைத்து ஏற்றினான். மூன்று முறை கற்பூர தீபம் காட்டிவிட்டுத் தேங்காயை உடைத்தான். ஊதுவத்தியைக் கொளுத்தினான். எலுமிச்சம்பழத்தை எடுத்துப் பக்கத்திலிருந்த சூலத்தில் செருகி இரண்டுஇரண்டாக நான்கு பழங்களைப் பிளந்தான். அதில் திருநீறு, குங்குமத்தைத் தடவி வைத்துவிட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டான். எழுந்து எலுமிச்சம்பழத் துண்டுகளை எடுத்துக் கும்பிட்டு, கண்களில் ஒற்றிகொண்டு நான்கு திசையிலும் விட்டெறிந்தான். பொரிகடலையை ஒரு பிடி அள்ளிக் குதிரை மீதிருந்த சாமியின் பக்கம் விசிறினான். எஞ்சியதை நான்கு திசைகளிலும் தூவிவிட் டான். பிராந்தி பாட்டிலில் ஒன்றைத் திறந்து தண்ணீர் தெளிப்பது மாதிரி சாமி மேடையைச் சுற்றி வந்து தெளித்தான். குதிரையின் மீதும் கொஞ்சம் தெளித்துவிட்டான். நான்கு வாழைப்பழங்களை எடுத்துத் தோலை உரித்துவிட்டு மாவு பிசைவது மாதிரி பிசைந்தான். அதை நான்கு உருண்டைகளாக்கி நான்கு திசைகளிலும் விட்டெறிந்தான். குதிரையின் காலடியில் கொட்டிக்கிடந்த திருநீறு, குங்குமத்தை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டு விழுந்து கும்பிட்டுவிட்டு எழுந்தான். நான்கு திசைகளிலும் பார்த்தான். ஏழு எட்டு வன்னி மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுகொண்டிருந்தன. ஒரு வேப்பமரம். கால் மைல், அரை மைல் தூரம் தள்ளிச் சவுக்குத் தோப்புகள், மக்காச்சோளக் காடுகள் இருந்தன. கோவி லைச் சுற்றி எதுவுமில்லை. வெறும் கட்டாந்தரை. களர் நிலமாக இருந்தது. ஆடுமாடுகள்கூடக் கண்ணில் படவில்லை. சாமியின் பக்கம் திரும்பிக் கும் பிட்டான். ரகசியம் மாதிரி முணுமுணுத்தான்.

“இன்னிக்கி மாசிமகம். தெப்பத்திருநா நடக்கிற எடத்துக்குத் தொழி லுக்குப் போவப்போறன். அதான் ஒங்கிட்ட உத்தரவு கேக்க வந்தன். நீ உத் தரவு கொடுத்தா போறன். இல்லன்னா திரும்பி ஊட்டுக்குப் போறன்.”

அந்த ஆள் கோவிலைச் சுற்றிலும் பார்த்தான். ஆட்கள் நடமாட்டம் இல்லை. காக்காய் குருவிகள்கூட இல்லை. காற்றின் அசைவு மட்டும்தான் இருந்தது என்பதைக் கவனித்தவன், சாமியிடம் ரகசியம் மாதிரி சொன் னான். “இன்னிக்கு தொழிலுக்குப் போவவா வாணாமா? உத்தரவு கொடு.

பல்லி வந்து எனக்குச் சயனம் சொன்னாத்தான் போவன். அதுவும் பீச்ச கைப்பக்கம் தாங்கல்ல சொல்லக் கூடாது. போற காரியம் விடியாது.

சோத்துக் கைப்பக்கம் ஏவல்ல சொல்லணும். அப்பத்தான் போற காரியம் ஜெயிக்கும். புரியுதா, இன்னம் செத்தயில இருட்டிப்புடும். சட்டுன்னு உத் தரவக் கொடு” என்று சொல்லிவிட்டு அந்த ஆள் தரையில் உட்கார்ந்தான். அவனுடைய பார்வை சிமெண்ட் மேடை, குதிரை, சாமி சிலை என்று அங்குலம்அங்குலமாக ஆராய்ந்தது, அதோடு தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பல்லியின் சத்தம் கேட்கிறதா என்று காதுகளைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக்கொண்டான். ஐந்து பத்து நிமிசம்வரை உட்கார்ந்திருந்தான். தட்டான் பறக்கிற சத்தம்கூடக் கேட்கவில்லை. மேற்கில் பார்த்தான். சூரி யன் சீக்கிரத்தில் மறைந்துவிடும் போலிருந்தது. அவனுடைய முகம் கடுகடுவென்று மாறியது. சாமியிடம் கோபித்துக்கொண்டவன் மாதிரி சொன்னான், “இங்கிருந்து நடந்து ரெண்டு மையிலு தாண்டிப் போயித்தான் காரப் புடிக்கணும். அப்பறம் அங்கயிருந்து அர மணி நேரம் கார வுட்டு எறங்குனா தெப்பத்திருநா நடக்கிற எடத்துக்கும் நடந்து போவணும். இங் கியே லேட்டாப் போனா காரியம் ஆவுமா? கூட்டம் கலஞ்சிப்புடாதா? கூட்டம் கலஞ்சிப்புட்டா நான் போயி அலஞ்சி, திரிஞ்சி வெறும் ஆளா திரும்பணுமா? ஏன் எதுக்கும் பதிலு சொல்லாம குந்தியிருக்க? காயா பழ மான்னு சொல்லிடு. முடியாதின்னா அப்பறம் எதுக்கு நான் ஒம் மூஞ்சியில முழிக்கப்போறன்?”

தரையிலிருந்து அந்த ஆள் எழுந்தான். சாமி மேடையைச் சுற்றி வந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். தரை, சிமெண்ட் மேடை, குதிரை சாமி என்று எல்லா இடங்களிலும் பார்த்தான். பல்லி இருக்கிற மாதிரியே தெரியவில்லை. சத்தம் வருகிறதா என்று கவனித்தான். சாமி கோவிலுக்கு வரும் வழியைப் பார்த்தான். ஆட்கள் யாரும் வரவில்லை. மேற்கில் பார்த்தான். இன்னும் சற்றைக்கெல்லாம் சூரியன் மறைந்துவிடும்போல் இருந்தது. நேராக சாமி யின் முன்வந்து கோபமாகக் கேட்டான், “குவாட்டரு பாட்டுலு, சிகரட்டு, எலுமிச்சங்கா, பூ, பழமின்னு ஒனக்கு வேண்டிய எல்லாத்தயும் கொண்டாந்து படயல் போட்டுட்டன். எல்லாக் கருமாதியும் செஞ்சப் பின்னாலயும் எனக்கு ஏன் உத்தரவு கொடுக்க மாட் டங்குற? கைநெறயா பொருளு கெடைக்கணும். கெடைக்கறதிலதான் பாதியக் கொண்டாந்து ஒனக்கு சூலம், மணி, அங்கவஸ்திரம், கோழி காவு, குவாட்டரு பாட்டுலுன்னு கல்லு கருமாந்தரம் எடுக்குறனே, அப்பறம் என்ன? எனக்கு ஏன் உத்தரவு கொடுக்காம லேட்டாக்குற? போன வெள்ளிக் கிழம வேப்பூர் சந்தக்கிப் போனன். பாவப்பட்ட சனியந்தான் மாட்டுச்சி. பாவப்பட்டதின்னு நெனச்சா நான் எப்பிடி சோறு திங்குறது? என் வவுறு மண்ணயா திங்கும்? ஒரு பவுனுன்னு நெனச்சிக் கொண்டுபோயி கொடுத்தன். தேஞ்சிப்போச்சி. மக்கிப்போச்சி. முக்கா பவுனுதான் தேறும்ன்னு சொன்னான். கையில காச வாங்குனன். மறுநாளு ஒனக்கு படயல் போட்டனா இல்லியா? நேரமாவறது ஒனக்குத் தெரியலியா?” என்று கேட்ட அந்த ஆள் பல்லியின் சத்தம் கேட்கிறதா என்று கவனமாகக் கேட்டான். சலிப்பு மேலிட “சயனத் தடங்கலோட போவக் கூடாதின்னு ஒனக்குத் தெரியாதா?” என்று கேட்டான்.

வேப்ப மரத்திற்குப் போனான். சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தான். சகுனம் கிடைக்கவில்லை. வேப்ப மரத்திற்கு வடக்கிலிருந்த வன்னி மரத்தின் கீழே வந்து நின்றான். நேரம் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அவன் நினைத்த காரியம் நடக்கவில்லை. வெறுப்போடு திரும்பிவந்து சாமிக்கு நேரெதிராக நின்றுகொண்டு கோபத்தோடு கேட்டான்.

“உத்தரவு கொடுக்காட்டி போ. போன வாட்டிக்கும் மொத வாட்டி என்னா செஞ்ச? ஒரே ஒரு செயினுதான் ஆம்புட்டுச்சி. வெரலு மொத் தத்தில இருக்கேன்னு பாத்தா கடசியில அது கவரிங். அதுக்குத்தான் அம்மாம் அடி, ஒத. மயிரான் நீயா அம்மாம் அடியும் ஒதயும் வாங்குன? கவ ரிங் நகக்கித்தான் பெரிய கூட்டமாக் கூடி அடிச்சானுவ. நகக்காரி வந்து ‘கவரிங்’ன்னு சொன்னதாலதான் உசுரோட வுட்டானுவ. இல்லன்னா போலீஸ், கோர்ட்டுன்னு ஒரு மாசம் ஜெயிலுக்குப் போயிருக்கணும். பெரிய கோவுலுக்கு உள்ளார போவயிலதான் குண்டா இருக்கா, கிழ வியா இருக்கான்னுதான் செயின அறுத்தன். அரியாப்புள்ளவுளவிட அந்தக்கிழட்டு முண்டதான் அதிகமா சத்தம் போட்டா. ‘செயின அறுத்திட் டான். புடி, புடி’ ன்னு அவ போட்ட சத்தத்திலதான் வழியில இருந்த தேங்காக் கடக்காரன் ஒடியாந்து வளச்சிப் புடிச்சிட்டான். ‘ஓடியாங்க. ஓடியாங்க’ன்னு கிழவி போட்ட சத்தத்தில கூட்டம் கூடிப்போச்சி. கதறகதற அடிச்சானுவ. பாவ புண்ணியம் பாக்கல. சாமி கும்புட வந்த மொத்தக் கூட்டமும் கூடிப்போச்சி. ஆம்பள, பொம்பள எல்லாருந்தான் அடிச்சாங்க. காறி எம் மூஞ்சியிலியே துப்புனாங்க. தரும ஞாயம் பாக்கல.” அந்த ஆளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கண்ணீரைப் புறங்கையால் துடைத்துவிட்டு உள்ளடங்கின குரலில் சொன்னான்:

“அன்னிக்கி வாங்குன அடிய நெனச்சா இப்பியும் வலிக்குது. கூட்டத் திலிருந்து என்னெக் காப்பாத்திவுட ஒன்னால முடியல. எங்காலுக்கு ஓடுறதுக்குத் தெம்பக் கொடுக்க ஒன்னால முடியல. ஒண்ணும் செய்யாததுக்கு நீ எதுக்குக் குலசாமின்னு இருக்க? ‘ஆகாச வீரன்’ன்னு ஒனக்கு எந்த மயி ராண்டி பேரு வச்சான்? என்னெவிட ஓக்கியன் ஒலகத்தில யாருங்கிற மாரிதான் எல்லாரும் அடிச்சாங்க. ஒலகத்தில எவன் ஓக்கியம்? ‘பொய் சொன்னதில்ல. பித்தலாட்டம் செஞ்சதில்ல. அடுத்தவன் பொருளுக்கு ஆசப் பட்டதில்ல, தொட்டதில்ல’ன்னு சொல்ற ஓக்கியன் எவனும் இன்னம் பூமியில பொறக்கல. நேரம் சரியில்ல. ஒன்னோட தொண எனக்கு இல்லெ. ஒன்னோட அருளு இல்லெ. அதான் அன்னிக்கி மாட்டிக்கிட்டன். இருவது வயசில காத்து மாரி ஓடுனன். அப்ப முயலுகூட எங்கூட போட்டிப்போட முடியாது. இப்ப ஓட முடியல. வயசாயிடிச்சி. எங் காலுக்கு மின்னலா ஓடி மறயுற தெம்ப நீ கொடுத்திருந்தா நான் எதுக்கு மாட்டிக்கப்போறன்? அம்மாம் அடியயும் ஒதயயும் வாங்கிக்கிட்டு ஒங்கிட்டத்தான் வந்து நிக்கு றன். நீ உத்தரவு கொடுக்க மாட்டங்குற. எத்தன முற படயல வாங்கித் தின்னுப்புட்டு என்னெ அலயவச்சி வெறுங்கையோட அனுப்பி இருக்க? அப்பல்லாம் ஒன்னெ வந்து திட்டுனனா? அன்னிக்கிப் பெரிய கோவுல்ல நீதான் என்னெ மாட்டிவுட்டுட்ட, மின்ன மாரி ஊராங்க அடிய என்னால தாங்க முடியுதா? நீ என்ன, எனக்குப் பிறத்தியாளா? அந்நியமா? நீ எனக்குக் குடிசாமி. என்னெ ஒனக்கே நல்லாத் தெரியும். திருநாவுக்குத் திருநா வந்து படயல் போடுற ஆளில்ல நானுன்னு. என்னோட மூணு புள்ளைக்கும் ஒன்னோட சன்னதியிலதான் மொட்ட போட்டன். காது குத்துனன். பேரும் வச்சன். எல்லாத்துக்கும் மேல எங்கம்மா ஒன்னோட பேரத்தான எனக்கு ‘ஆகாசம்’ன்னு வச்சா. பேரச் சொன்னா ஊருல மட்டுமில்ல, போலீஸ் ஸ்டேசனில, கோர்ட்டுல எல்லாம் சிரிக்கிறாங்க. ஆனா ஒன்னெப் பத்தி நான் எல்லார்கிட்டயும் பெருமயாத்தான் சொல்றன். குத்தம் சொன் னனா? அதுக்கும் மேல எம் பெரிய மவனுக்கு ஒம் பேரத்தான் ‘ஆகாஷ்’ன்னு வச்சிருக்கன். பிரமாதமான பேருன்னு சொல்றாங்க. அதுக்காச்சும் உத்தரவு கொடுடா. திருட்டுப் பயலே” என்று சொன்ன அந்த ஆள் மடியிலிருந்து ஒரு பீடியைப் பற்றவைத்துக் குடித்துக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான். சகுனம் கிடைக்கிறதா என்று கூர்மையாகக் கவனித்தான். அவன் கேட்டது கிடைக்காததால் வெறுப்படைந்து எஞ்சியிருந்த ஒரு பாட்டில் பிராந்தியைத் திறந்து கையில் ஊற்றிக் குதிரையின் மீதும், சாமியின் மீதும் தெளித்தான்.

கோபம் மேலிட “இப்பியாச்சும் ஒன் ஆக்ரோசம் அடங்கி உத்தரவக் கொடுடா” என்று கேட்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். பல்லி கண்ணில் படவில்லை. வெறுப்பு மேலிட்டுச் சொன்னான் “இப்பத்தான் எல்லாப் பயலுவளும் ஒரம், பூச்சிமருந்துன்னு தெளிச்சிக் காட்டுல இருக்கிற பூச்சி பொடுவ எல்லாத்தயும் கொன்னுப்புடுறானுவ. அப்பறம் எங்க இருந்து வரும் பல்லி?”

மேற்கில் பார்த்தான். சூரியன் மறைந்துவிட்டிருந்தது. லேசாக இருள் படர ஆரம்பித்திருந்தது தெரிந்தது. எப்போதையும்விட இப்போது அவ னுக்குக் கோபம் கூடுதலாக வந்தது. வேகமாகக் கேட்டான். “நேரமாவறது ஒனக்குத் தெரியலியாடா?” கோபத்தில் மேடையைச் சுற்றிச்சுற்றி வந்தான். வெறுத்துப்போய் தரையில உட்கார்ந்தான். சிறிது நேரம் தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவனுக்கு என்ன தோன்றியதோ வெடுக்கென்று தலையைத் தூக்கி ‘நீயெல்லாம் சாமியா’ என்பது மாதிரி பார்த்தான். பிறகு சண்டைக்காரனிடம் கேட்பது மாதிரி சாமியிடம் கேட்டான்.

“எனக்கு சோதன வைக்கிறியா? இத்தினி வருசமா இல்லாம இன்னிக்கி ஏன் எனக்கு உத்தரவு கொடுக்க மாட்டங்குற? ஒன்னோட உத்தரவு இல்லாம என்னிக்காச்சும் திருடப் போயிருக்கனா? நீ திருட்டுக்குப் பேர் போன சாமிதான? திருடனுவுளுக்குத்தான நீ குலசாமியா இருக்க? திடுதிப்புன்னு நீ திருந்திப்புட்டா நான் என்னா செய்யுறது? கருமாதி எனக்கு வேற தொழிலும் தெரியாது. ஒங்கிட்ட நான் என்னா கேக்குறன்? என்னெ எம்.எல்.ஏ. ஆக்கு, எம்.பி. ஆக்கு, மந்திரியாக்கு, குபேரனாக்கு, பணக்கார னாக்குன்னா கேக்குறன்? திருடப் போற எடத்தில மாட்டக் கூடாதின்னுதான கேக்குறன். அது ஒரு பெரிய குத்தமா? நான் திருடப் போறது மாடி வூடு கட்டவா? காரு பங்களா வாங்கவா? நெலம் நீச்சு வாங்கவா? எம் பொண்டாட்டிக்கி வைரத்திலெ ஒட்டியாணம் செஞ்சி போடவா திருடப் போறன்? கருமாதி, சோத்துக்குத்தான செயின அறுக்கப்போறன். ஒரு நாளு போனா, ஒரு மாசம், ரெண்டு மாசம் பொழப்பு ஓடிப்புடும். கையில காசு இருக்கிறப்ப நான் திருடப் போறனா? எங்கப்பா, எங்கம்மா சம்பாரிச்சி வச்சிருந்தா நான் எதுக்கு சாமி சாட்சியா கட்டுன தாலிய அறுக்கப்போறன்? பாலு குடிக்கிற புள்ள இடுப்புல கெடக்குற கொடிய அறுக்கப்போறன்?”

பல்லி கத்தியது மாதிரி அவனுக்குத் தோன்றியது. பேச்சை நிறுத்திவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரே நேரத்தில் பல்லி சகுனம் சொன்ன மாதிரியும் இருந்தது. சொல்லாத மாதிரியும் இருந்தது. சந்தேகத்தில் அசைவின்றி உட்கார்ந்திருந்து சத்தம் கேட்கிறதா என்று பார்த்தான். காற்றின் அசைவுகூட இல்லை. அவன் கடுப்பாகிவிட்டான். சாமியிடம் முறைப்பது மாதிரி சொன்னான்.

“உத்தரவக் கொடு. முடியாதின்னா வுடு. இங்க நிக்குற சூலத்தயெல்லாம் புடுங்கிக்கிட்டுப் போயி பழய இரும்புக் கடயில போட்டுட்டு அரிசி பருப்பு வாங்கிப்புடுவன். குல சாமியுமாச்சி. மசுருமாச்சின்னு போற ஆளு நானு, தெரியுமில்ல. போதயப் போட்டுட்டன்னு வையி அப்பறம் குலசாமின்னு பாக்குற ஆளில்ல நானு தெரியுமா?” என்று சொன்னவனின் குரலின் வேகம் குறைந்தது. தனக்குத் தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னான்:

“இதென்ன பழய காலமா? சோளக் கதிர அறுக்கிறது, நெல்லுக் கதிர அறுக்கிறது, பூசிணிக்காய, பரங்கிக்காய அறுக்கிறதின்னு அறுத்தாந்து சோறு திங்கிறதுக்கு. இப்பத்தான் எல்லாப் பயளுவுளும் பருத்திய ஊணுறான். சவுக்க நட்டுப்புடுறான். மிஞ்சினா கருப்பங்கயி. அதுவும் இல்லன்னா பிளாட்டா போட்டுடுறான். அப்பறம் எங்கயிருந்து கதிர அறுத்தாந்து சோறு திங்குறது? கோழி திருடுறது, ஆடுமாடு திருடுறது, மோட்டார் கொட்டாயில கரண்டு கம்பிய திருடுறதுன்னு எல்லாம் செஞ்சிபாத்தாச்சி. எல்லாம் ஒரு வார சோத்துக்குக்கூட தேற மாட்டங்குது. அதோடவும் உள்ளூர்ப் பய ளுவோ அடயாளம் கண்டுபுடிச்சி வந்துடுறானுவ. திருடன்ங்கிற பேரோட உள்ளூர்ல குடும்பம் நடத்த முடியுமா? இப்பல்லாம் எவன் ஆடுமாடு வளக்குறான் திருடருதுக்கு? இப்ப ஊர்நாட்டுல கோழிகூட இல்லெ. ஊருக்கு ஊரு பிராய்லர் கோழிக் கடயப் போட்டுட்டானுவோ. காலம் மாறி, ஊரு நாடெல்லாம் மாறிப்போச்சின்னு ஒனக்குத் தெரிய மாட்டங்குது. அதனாலதான் ஒண்ணுத்துக்கும் ஒதவாத களர் நெலத்தில ஒன்னெக் கொண்டாந்து குடி வச்சியிருக்கானுவ. ஒனக்கு ஒரு கூரகூடப் போடல தெரியுமில்ல? புத்தியுள்ள சாமியா இருந்தா இதெல்லாம் தெரியும். நீதான் குடிகாரப் பய. அதனாலதான் சாராயத்தப் படைக்கிறவனுக்கு அருளு கொடுக்கிற.

“இப்பல்லாம் மோட்டார் வண்டி, காரு எடுத்துக்கிட்டுப் போயி திருடுறாங்க. ஊர்ஊராப் போயி ரூம் போட்டுத் தங்கித் திருடுறாங்க. சொல்லப் போனா கோயில்லியே திருடுறாங்க. உண்டியல ஒடக்கிறாங்க. கொஞ்சம் துணிஞ்சவங்க சாமி சிலயவே திருடி விக்குறாங்க. நான் அந்த மாரியா செய்யுறன்? விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பெண்ணாடம், உளுந்தூர் பேட்டன்னு சுத்திச்சுத்தி வர்றன். அதுவும் கையி வறண்டுபோனா. என்னா ஒண்ணு, பட்டப் பாட்டுல பாதிக்குப் பாதி வீணாப்போவுது. பாதிக்கிப் பாதி கவரிங்கா இருக்கு. ஒனக்குப் படயல் போடுற செலவு தண்டக் கரு மாதியாப் போவுது. தங்கம், வைரமின்னு போட்டுக்கிட்டு இருக்கிற நாயிவோ எல்லாம் எந்த எடத்துக்கு வந்தாலும் காருலியே வருதுவோ, எந்த எடத்துக் குப் போனாலும் காருலியே போவுதுவோ. கவரிங் மாட்டியிருக்கிற நாயி வோதான் சந்தக்கி வருது, தெருவுல நடக்குதுவோ. சந்தக்கி சந்த மஞ்சப் பையத் தூக்கிக்கிட்டு காயி வாங்க வர்ற கிராக்கிவோ கவரிங்கத்தான மாட்டி யிருக்கும்? பகலா இருந்தா பாத்து அறுக்கலாம். இருட்டுல எப்புடிப் பாத்து அறுக்கிறது? முட்டுச் சந்துல, இருட்டுல வரும்போதுதான செயினப் புடிச்சி இழுக்க முடியும்? கவரிங் ஆம்புட்டுதின்னு ஒனக்குப் படயல் போடாம இருந்திருக்கிறனா? எப்ப கொற வச்சன்?”

சத்தம் கேட்டது மாதிரி இருக்கவே திரும்பிப் பார்த்தான். ஆட்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. ஆடுமாடு எதுவுமில்லை. காக்கை, குருவி, பருந்து எதுவும் பறக்கவில்லை. மரங்கள்கூட அசையவில்லை. பிறகு எப்படி ஆள் வருவது மாதிரி சத்தம் கேட்டது? மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்தான். ஆள் யாருமில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டதும் மீண் டும் சாமியிடம் சொன்னான்.

“நெய்வேலியில கைநெறயா பொருளு ஆம்புட்டப்ப ஒனக்கு ஒரு சூலம் வாங்கியாந்து நட்டுவச்சன். ஒரு கல்யாண ஊட்டுல செயின அடிச்சப்ப அதே விருத்தாசலம் ரெட்டத் தெருவுல இருக்கிற கொசவங்கிட்ட சொல்லி ஒனக்கு வேட்டக்கிப் போறதுக்கு ஒரு மங்குதிர வாங்கியாந்து வச்சன். ரெண்டு மூணு முற அங்கவஸ்திரம் வாங்கியாந்து போட்டன். ஒரு முற வெங்கல மணி வாங்கியாந்து கட்டுனன். வருசா வருசம் கோழி காவு கொடுத்து முப்பூசப் போட்டிருக்கன். எல்லாத்தயும் வாங்கித் தின்னுப்புட்டு இப்ப உத்தரவு கொடுக்க மாட்டங்குற. கொடுக்காட்டி போ. எம் மசுருக்கென்ன, நீதான பட்டினி கெடப்ப.”

அந்த ஆள் பீடி ஒன்றைப் பற்ற வைத்தான். புகையை ஊதிக்கொண்டே பல்லியைத் தேடினான். அது கண்ணில் படும் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. வாயிலிருந்து பீடியை எடுத்துத் தரையில் தேய்த்து அணைத்துவிட்டுச் சலிப்புடன் சொன்னான். “என்னிக்கும் இல்லாம இன் னிக்கென்ன எங்கிட்ட ஒனக்கு வௌயாட்டு? எதுக்காக சயனத்தக் கொடுக் காம சோதன வைக்கிற? இப்பலாம் நான் செல்போனு எடுக்கறதயும் வுட்டுட்டன். இப்ப அதுக்குக் கிராக்கி இல்லெ. ஆயிரத்துக்கே போனு வந்துடுச்சி. கஷ்டப்பட்டு அடி, மிதிபட்டுத் திருடிக்கிட்டு போயி குடுத்தா நூறு அம்பதுதான் தரன்ங்குறானுவோ.” லேசாகச் சிரித்தான். பிறகு “திருட்டுப் பொருளுக்கு அதுக்கு மேல எவன் தருவான்? திருட்டுப் பொருளுனாலே அடிமாட்டு வெலதான? அதனால இப்ப நான் செல்போனத் தொடுறதில்லன்னு ஒனக்குத்தான் தெரியுமே.” சட்டென்று வேகம் வந்து விட்ட மாதிரி அடுத்து ஒரு பீடியைப் பற்றவைத்தான். மேற்கில் பார்த்தான். மறுநொடியே அவனுடைய முகம் கறுத்துவிட்டது. வார்த்தைகளும் தடித்து விட்டன.

“ஒன்னெ சொல்லிக் குத்தமில்லடா. என்னெப் பெத்தவளச் சொல்லணும். எல்லாக் கருமாதியும் அவதான் கத்துகொடுத்தா. பக்கத்து ஊட்டுல நின்ன முருங்க மரத்தில இருட்டுனதும் யாருக்கும் தெரியாம முருங்கக் கீரய அவதான் ஒடிச்சியாரச் சொன்னா. நடபாதயில நின்னுக்கிட்டு வயக்காட்டுல போயி புளிச்சக்கீரயப் புடுங்கியாரச் சொன்னா. கம்புக் கதிர ஒடிச்சியாரச் சொன்னா. பரங்கிக்காய, பூசிணிக்காய அறுத்து தூக்கியாரச் சொன்னா. எவன் ஊட்டு காட்டுலியோ கல்லச் செடியப் புடுங்கியா, கத்திரிக்காய, வெண்டக்காயப் பறிச்சிக்கிட்டு வா, ஊரான் ஊட்டுப் புளியாமரத்தில புளியாம்பழம் பறிச்சியான்னு அவதான் சொன்னா. பஸ்ஸில போவயில வயசக் கொறச்சி சொல்லுன்னு சொல்லி டிக்கட் வாங்காம சண்டபோட்டா. கூலி வேலக்கிப் போனா வயசக் கூட்டிச்சொல்லிச் சம்பளம் கேட்டு சண்டபோட்டா. தட்டுமாத்திப் பேச அவதான் கத்துக்கொடுத்தா. எல்லாக் கருமாதியும் அந்தச் சண்டாளிதான் கத்துக்கொடுத்தா.

காலுல போட்டுக்கிட்டுப் போனா செருப்போடவாரு அறுந்துபோவுமின்னு நாளெல்லாம் கையிலியே செருப்பத் தூக்கிக்கிட்டு அலஞ்ச உண் ணாமல பெத்த புள்ளதான நானு? எல்லாத்துக்கும் அவ ஒங்கிட்டதான் வந்தா. நானும் ஒன்னத்தான் சுத்திச்சுத்தி வர்றன். மத்தவங்கள மாரி மாசத்துக்கு ஒரு சாமிக்கிட்டியா போறன்? மாசத்துக்கு ஒரு கோவு லுன்னா போறன்? ஒரே சாமி நீதான்னு ஒங்கிட்டியே வர்றன். நீ என்னடான்னா சயனம் சொல்ல மாட்டங்குற. உத்தரவு கொடுக்க மாட்டங்குற. முதன்முதலா பக்கத்து ஊட்டுல கோழி முட்ட திருடுனப்ப ஒரு முட்டயக்கொண்டாந்து ஒனக்குத்தான் கொடுத்தன். அண்டா குண்டான் திருடுனப்ப, கற்பூரம் ஏத்தி, சூடம் கொளுத்தித் தேங்கா ஒடச்சியிருக்கன். ஆடு மாடு திருடுனப்ப ஒனக்கு ஒரு பங்கு கறியக் கொண்டாந்து படச்சன்.

இப்ப நகநட்டத் திருடுறப்பயும் ஒனக்கு நான் கொற வச்சதில்ல. இந்தக் காலத்திலதான இம்மாம் நகநட்டுன்னு வந்திருக்கு? எதா இருந்தாலும் நேரத்தப் போக்காம உத்தரவக் கொடுடா சண்டாளப் பயலே” என்று சொல்லிவிட்டு வேகம் வந்தவன் மாதிரி தரையில் விழுந்து கும்பிட்டபடியே கிடந்தான். முனகுவது மாதிரி சொன்னான்.

“என்னமோ ஒலக அதிசயமா நான் மட்டுந்தான் அடுத்தவனக் கெடுக்குறதுக்கு வேண்டுறன்னு நெனக்காத. எவன் வந்து ‘எனக்கு அடுத்தவனக் கெடுக்காத மனசக் கொடு, அடுத்தவன் பொருளுமேல ஆசப்படாத மனசக் கொடு, அடுத்தவனப் பாத்துப் பொறாமப்படாத, அடுத்தவன் பொண்டாட் டியப் பாத்து ஆசப்படாத மனசக் கொடு. என்னிக்கும் என்னெ ஏழயாவே, பிச்சக்காரனாவே வச்சியிரு’ன்னு வேண்டுனவன் யாரு? கூர வூட்டுலியே என்னெ வச்சியிருன்னு சொன்னவன் யாரு? புள்ளைங்களும் நண்டும்சிண்டுமா இருக்குதுவோ. இப்பத்தான் எட்டாவது, ஒம்பதாவதின்னு படிக்கு துவோ. அதது சோத்துக்கு அதது சம்பாரிக்க ஆரம்பிச்சிட்டா நான் எதுக்குத் திருடப் போறன்? இதென்ன கலெக்ட்டரு வேலயா, இல்லெ வாத்தியாரு வேலயா? சாவுற முட்டும் இதெயேதான் செய்வன்னு சொல்றதுக்கு? ஊராங்க மாரி எம் புள்ளைங்கள டாக்ட்ராக்கு, கலெக்ட்டராக்குன்னா கேக்குறன்? ஏதோ வவுத்துச் சோத்துக்குத் திருடுறது ஒரு குத்தமா? ஒலகத்திலெ நான் ஒருத்தன்தான் திருடன் மாரி நீ உத்திரவு கொடுக்காம குந்தியிருக்கிற?” என்று கேட்டபோது பல்லி கத்தியது மாதிரியும், அதுவும் வலது கைப் பக்கம் கத்தியது மாதிரியும் தோன்றியது. வெடுக்கென்று தலையைத் தூக்கி வலது கைப் பக்கம் பார்த்தான். பல்லி சகுனம் சொல்லிவிட்டதாகவே நம்பி உற்சாகத்தோடு எழுந்தான். சாமிக்குக் கும்பிட்டான். சிரித்துக்கொண்டே “போதும்ண்டா” என்று சொன்னான்.

“இரு பூவா, தலையான்னு ஒரு தடவ பாக்குறன். காயா பழமான்னு தெரிஞ்சிட்டா துணிஞ்சி போயிடுவன்” என்று சொல்லிக்கொண்டே பாக்கு தடிமனில் சிறுசிறு கற்களாக ஒரு பிடி பொறுக்கி எடுத்தான். இரண்டு கைகளுக்குள்ளும் கற்களை வைத்துக்கொண்டே சாமி கும்பிட்டான். மூன்று நான்கு முறை குலுக்கிவிட்டுத் தரையில் போட்டான். உட்கார்ந்துகொண்டு பதட்டம் கூடகூட இரண்டுஇரண்டு கற்களாக ஜோடி சேர்த்துப் பக்கத்தில் வைத்தான். கற்கள் குறையக்குறைய அவனுடைய பதட்டம் கூடிக்கொண்டே போயிற்று. விரல்கள் நடுங்கின. லேசாக வியர்த்தது. கடைசி ஜோடிக் கற்களை எடுத்த பிறகு ஒரே ஒரு கல் மட்டும் எஞ்சி இருந்ததைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்ந்தது. சிரித்தான். தங்கம் மாதிரி அந்தச் சிறு கல்லை எடுத்து மடியில் பத்திரப்படுத்திக்கொண்டான். “ஒனக்கு அப்பப்ப கிறுக்குப் புடிச்சிப்போவும். என்னெ வீணா அலய வுடுவ. காத்திருக்க வைப்ப. சில நேரம் புடிச்சிக் கொடுத்திடுவ. ஆனா இந்த முற சயனம் சொல்லிடிச்சி. இப்ப கல்லுலயும் பூ கொடுத்திட்ட. ஒன்னோட தொண இல்லாம, ஒம் பேச்சக் கேக்காம ஒரு எடத்துக்குமே அடி எடுத்து வைக்க மாட்டன், தெரியுமில்ல?” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.

வேப்ப மரத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவுக்கு வேப்பிலைகளை உருவிக்கொண்டு வந்து முன்பு போலவே உட்கார்ந்து கற்களை ஜோடி சேர்த்துப் பக்கத்தில் வைத்த மாதிரி வேப்பிலைகளை ஜோடி சேர்த்து வைக்க ஆரம்பித்தான். என்ன தோன்றியதோ இரண்டு கைகளையும் குவித்து கும்பிட்டு “பூ கொடுக்காத வுட்டுடாதடா, தொழிலுக்குப் போவ முடியாது” என்று சொல்லி வேண்டினான். பிறகு மீண்டும் இலைகளை ஜோடி ஜோடியாக எடுத்து வைக்க ஆரம்பித்தான். கடைசி ஜோடி இலையை எடுத்தபோது தரையில் ஒற்றை இலை மட்டும் கிடந்ததைப் பார்த்ததும். அவனுக்குக் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. பயபக்தியோடு அந்த ஒற்றை வேப்பிலையை எடுத்து மடியில் பத்திரப்படுத்திக்கொண்டான். எழுந்து நின்றுகொண்டு இரண்டு கைகளையும் குவித்துக் கும்பிட்டான்.

“நீ சக்தியுள்ள தெய்வம்ண்டா. காரணம் இல்லாமியா ஒன்ன நான் கும்பு டுவன்?” என்று கேட்டான். கும்பிட்டுக்கொண்டே சிமெண்ட் மேடையை மூன்று சுற்று சுற்றி வந்தான். குதிரையின் காலடியில் கிடந்த திருநீற்றை அள்ளி நெற்றி நிறையப் பூசிகொண்டு, “போற காரியம் நல்லபடியா முடிஞ்சதும் நாளக் காலயில வர்றன்” என்று சொல்லிவிட்டு நடைப்பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இருட்டாக இருந்தாலும் அவனுடைய கால்களுக்குப் பாதை தெளிவாகத் தெரிந்தது. அதனால் அவனுடைய கால்கள் வேட்டை மிருகத்தின் கால்கள் மாதிரி உற்சாகத்தோடு நடந்தன.

* * * * *

இமயம்