
அரசாங்கப் பள்ளிக்கூடம்
“எங்க இருக்காருடி?'' வள்ளி கேட்டாள்.
பக்கத்து கிளாஸ்லம்மா'' என்று ஷாலினி சொன்னாள்.
“வேகமா வா.''
“ரொம்பக் கத்தாத'' ஷாலினி சொன்னதை வள்ளி காதில் வாங்கிக் கொள்ளாமல் வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்தாள். ஷாலினி தயக்கத் துடன் வாசலிலேயே நின்றுகொண்டாள்.
‘இந்தியக் குடிமகனின் கடமைகளும் உரிமைகளும்' என்று போர்டில் எழுதிக்கொண்டிருந்த பொன்னம்பலத்திடம் “எங்க பொண்ண ரெண்டு நாளா எதுக்கு வெளிய போன்னு வெளிய துரத்தி வுடுறீங்க?'' என்று வள்ளி கேட்டாள்.
“நீங்க யாரு, வகுப்பு நடக்கறப்போ திடுதிப்புன்னு உள்ள வரலாமா? ஒரு வாத்த கேட்டுட்டு வந்தா என்னா?'' பொன்னம்பலம் கேட்டார். அவர் சொன்னதைக் காதில் வாங்காத வள்ளி “எதுக்காக எம் பொண்ண உள்ளார வுடாம ரெண்டு நாளா துரத்தியடிக்கிற?'' மீண்டும் கேட்டாள். வாசலில் நின்றுகொண்டிருந்த ஷாலினியைப் பார்த்த பிறகுதான் விசயம் என்னவென்று அவருக்குப் புரிந்தது. “அந்தப் பொண்ணோட அம்மாவா நீங்க?''
“ஆமாம், ஆமாம். விசியத்தச் சொல்லுங்க. நான் போவணும்.''
“ஒங்க பொண்ணு என்னா செஞ்சியிருக்கு தெரியுமா?''
“கொலயா பண்ணிப்புட்டா?'' வள்ளியின் குரல் உயர்ந்துவிட்டது. அவள் நின்ற தோரணையும், பேச்சும் எரிச்சலை ஏற்படுத்தியது. எரிச்சலை வெளிக்காட்டாமல் “நான் என்ன சொன்னன்னு தெரியுமா?'' பொன்னம் பலம் நிதானமாகக் கேட்டார்.
“வெளிய போ, வெளிய போன்னு நீங்கதான துரத்தியடிச்சீங்க?''
“துரத்தியும் அடிக்கல ஒண்ணும் அடிக்கல. ஹெட்மாஸ்ட்டரப் பாத்திட்டு வான்னு சொன்னன். அவ்வளவுதான்.''
“இம்மாம் புள்ளங்க இருக்கும்போது அவ மட்டும் எதுக்குப் போயி ஹெட்மாஸ்ட்டரப் பாக்கணும்?'' வள்ளி வெடுக்கென்று கேட்டாள்.
“காரணம் இல்லாம சொல்லுவாங்களா?''
“வெளிய போன்னு நீதான சொன்ன? ஹெட்மாஸ்ட்டரா?''
“நாந்தான் சொன்னன்.''
“அப்பறம் எதுக்கு ஹெட்மாஸ்ட்டரப் பாக்கணும்?''
“எதுக்கும்மா கத்திகத்திப் பேசுற? இது கிளாஸ் ரூமா? காய்கறிக் கடயா?'' பொன்னம்பலம் சத்தமாகக் கேட்டார். அதே வேகத்தில் பிள்ளைகளிடம் கத்தினார். “ஒங்க வேலயப் பாருங்க. எதுக்கு வேடிக்கபாக்குறீங்க?''
பொன்னம்பலம் கத்தியதைப் பொருட்ப்படுத்தாமல் ஒரு தினுசாகச் சொன்னாள் வள்ளி. “இது பள்ளிக்கூடமின்னு எங்களுக்கும் தெரியும். நெனச்சதுக்கெல்லாம் வெளிய போ, ஹெட்மாஸ்ட்டரப் பாரு, அப்பா அம்மாவ அழச்சிக்கிட்டு வா'ன்னு சொன்னா நெனச்ச நேரத்துக்கு எங்க ளால வர முடியுமா? ஓடியாடி பொயப்பப் பாக்க வாணாம்? ஒங்கள மாரி குந்திக்கிட்டா சம்பளம் வாங்குறம்?''
பொன்னம்பலத்தின் முகம் மாறிற்று. கோபம் தலைக்கு ஏறிற்று. ஆத்திரத் தில் படபடத்தார். “யாரும்மா குந்திக்கிட்டு சம்பளம் வாங்குறா?''
“சனி ஞாயிறு, காலாண்டு லீவு, அரயாண்டு லீவு, முழாண்டு லீவுன்னு குந்திக்கிட்டு நாங்களா சம்பளம் வாங்குறம்? சித்தாளு வேலக்கிப் போனாத் தான கூலி கொடுக்கிறான். போவாம இருந்தா கொடுப்பானா?'' முகத்தில் அறைவது மாதிரி கேட்டாள்.
பொன்னம்பலத்திற்குப் பேச முடியவில்லை. கோபத்தோடு வள்ளியைப் பார்த்தார். வாசலில் நின்றுகொண்டிருந்த ஷாலினியைப் பார்த்தார். பிறகு வகுப்பிலிருந்த பிள்ளைகளிடம் “பேசிக்கிட்டு இருக்கும்போதுதான் சத்தம் போடுவீங்களா? இப்ப நடத்தின ‘இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளும் கடமைகளும்'ங்கிற பாடத்தப் படிச்சிக்கிட்டு இருங்க. கேள்வி கேக்கப்போறன்'' சத்தமாகச் சொன்னார். ஒரு நிமிடம்தான் வகுப்பறை அமைதியாக இருந்தது. பிறகு மெல்ல சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது.
“நான் வேலக்கிப் போவணும் சார். நீங்க சொல்லி முடிங்க.'' வள்ளி கசப்போடு சொன்னாள்.
“நான் சொல்றதப் புரிஞ்சிக்க. நான் வெளிய போன்னு சொல்லல. வேணுமின்னா ஒம் பொண்ணயே கேட்டுக்க. ஹெட்மாஸ்ட்டரப் பாத்திட்டு வான்னுதான் சொன்னன்.'' பொன்னம்பலம் தன்மையான குரலில் சொன்னார்.
“ஒரு வாத்தியாரா இருக்கிற ஆளு என்னா ஏதுன்னு கேட்டுக்கிட்டுப் போவ வேண்டியதுதான? எதுக்கு ஹெட்மாஸ்ட்டரப் பாக்கச் சொல்லுறீங்க? நெனச்சதுக்கெல்லாம் ஹெட்மாஸ்ட்டர்கிட்டப் போனா ‘என்னா ஏது'ன்னு கேக்காம Gkzu எடுப்பிலேயே அவுரு ‘எங்களால இந்தக் கழுதய எல்லாம் வச்சிக்கிட்டு மேய்க்க முடியாது. டி.சி.யக் கொடுக்கிறன் வாங்கிக் கிட்டுப் போ'ன்னு மூச்சு வுடாம கத்துவாரு. அவரே ஒரு கொணம் கெட்ட ஆளு.''
வள்ளியின் வாயையே பார்த்துக்கொண்டிருந்த பொன்னம்பலம் ‘ரொம்ப விவரமான ஆளுதான்' என்று எண்ணினார். வாய் அதிகம்தான் என்று முணுமுணுத்துவிட்டு “ஹெட்மாஸ்ட்டரப் பாக்குறதில தப்பு ஒண்ணும் இல்லெ. நெனச்சதுக்கெல்லாம் டி.சி.யக் கொடுக்க மாட்டாங்க, பசங்கள நாங்க சண்டப்போடக் கூடாதா?''
“அம்மாம் பெரிய தப்பா பண்ணிப்புட்டா எம் மவ?'' என்று கிண்டலான குரலில் கேட்டாள் வள்ளி. கத்திகத்திப் பேசுவது, முரட்டுப் பிடிவாத மாகப் பேசுவது எரிச்சலை உண்டாக்கியது. எதையும் வெளிக்காட்டாமல் “ ‘தமிழ்ச் சிங்கம்'ங்கிற நடிகரோட பொறந்த நாளுக்கு கிளாஸ் பூராவும் எல்லாப் பசங்களுக்கும் சாக்லேட் கொடுத்திருக்கு. படிக்கிற புள்ளெ இந்தமாரி செஞ்சது தப்புன்னு சொல்லக் கூடாதா? நல்லதுக்குத்தான சொல்றம்?''
“நீ ஒண்ணும் எம் பொண்ணுக்கு நல்லது பண்ண வாணாம்? வாங்குற சம்பளத்துக்கு வேல பாத்தாலே பெருசு. இன்னிக்கி எம் பொழப்புப் போச்சி'' என்று சொன்னாள் வள்ளி. நறுக்நறுக்கென்று அவள் பேசுவது பொன்னம்பலத்திற்கு அடக்க முடியாத அளவுக்குக் கோபத்தை உண்டாக்கிற்று. திட்டி வெளியே அனுப்பிவிடலாமா? இன்னும் காட்டுக்குத்தலாகக் கத்தினால் என்ன செய்வது? சட்டென்று தன் மேலேயே அவருக்குக் கோபம் வந்தது. யார் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன என்று விடாதது தன் தவறுதான் என்று நினைத்தார். அதே நேரத்தில் அரசாங்க வேலைக்கு ஏன் வந்தோம் என்ற எண்ணமும் ஏற்பட்டது.
அவர் படிக்கிற காலத்தில் கிராமத்திலிருந்து வருகிற மாணவர்கள் பெரும்பாலும் வரலாறு பாடம்தான் எடுப்பார்கள். அதனால் அவரும் வரலாறு பாடம்தான் படித்தார். வரலாறு பாடம் படித்தால் வேலை கிடைக்காது என்று அப்போது தெரியவில்லை. ஐம்பத்திரண்டாவது வயதில் பதிவு மூப்பு அடிப்படையில் மூன்று மாதத்திற்கு முன்புதான் வேலை கிடைத்தது. வேலைக்கு வந்தபோது தினம் இது போலப் பிரச்சினைகள் வரும் என்று அவர் நினைத்துப்பார்த்ததே இல்லை. அரசாங்க வேலை, அதுவும் ஆசிரியர் வேலை, ஜாலியாக இருக்கும் என்றுதான் நினைத்துக்கெண்டிருந்தார். அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், எப்போது வேண்டுமானாலும் மிரட்டலாம், அதுவும் பெண்கள்கூட வந்து தாறுமாறாகப் பேசுவார்கள் என்று அவர் கற்பனையில்கூட நினைத்துப்பார்த்ததில்லை. தன் மகள் செய்த தவறைக் கேட்காமல் தன்னிடம் வந்து மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கிறாளே என்று வள்ளியின் மீது கோபம் உண்டாயிற்று. அதைவிட அதிகமாக ஷாலினியின் மீது உண்டயிற்று. பள்ளிக்கூடத்தில் வகுப்பு நடக்கும்போது வந்து தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் ‘கணீர்கணீர்' என்று என்ன தைரியத்தில் பேசுகிறாள் என்று ஓரக்ண்ணால் வள்ளியைப் பார்த்தார். சண்டைக்கோழி மாதிரி நின்றுகொண்டிருந்தாள் வள்ளி. “நல்ல ஆளுதான்'' என்று முணுமுணுத்தார். அப்போது ஒரு பிள்ளை எழுந்து வந்து “சார் கமலா என் நோட்டெ எடுத்துக்கிட்டு தர மாட்டங்குது சார்'' என்று சொன்னாள்.
“போ. எட்டெ. அறியாப் புள்ளங்க மாரி அடிச்சிட்டா, கிள்ளிட்டான்னு வந்து சொல்லிக்கிட்டு. வளந்த பசங்க மாரியா நடந்துக்குறீங்க?'' என்று சத்தம் போட்டுக் கத்தியதும் அந்தப் பிள்ளை அழுதுகொண்டே தன்னுடைய இடத்திற்குப் போனாள். பிள்ளையிடம் கத்திய அதே வேகத்திலிலேயே “ஒங்க பொண்ணு கெட்டுப்போறதுக்கா சொன்னன்? ஹெட்மாஸ்ட்டரப் பாத்திட்டு வான்னு சொன்னதுக்கு சண்டக்கி வர்றீங்களே. இப்பிடியிருந்தா நாங்க புள்ளங்கள எப்படிக் கண்டிக்கிறது? புள்ளங்க எப்பிடி எங்க பேச்சக் கேக்கும்? புள்ளங்க எப்பிடி வாத்தியாருக்குப் பயப்படும்?''
“சின்னப் புள்ளெ வௌயாட்டுத்தனமா செஞ்சதுக்கு ரெண்டு நாளா வெளிய துரத்தி வுடுவியா?''
“நான் எங்கம்மா துரத்திவுட்டன்? திருப்பித்திருப்பியே அதயே சொல்ற?''
“நீ துரத்தாம அவளா வெளிய வந்துட்டாளா?''
“தெரிஞ்சி பேசணும். புரியுதா? ஒங்க பொண்ணு ஒண்ணும் சின்னப் புள்ளெ இல்லெ. பிளஸ் டூ படிக்குது. புள்ளங்க மேல அக்கற இல்லாமியா கண்டிப்பாங்க?''
“ஒங்க அக்கறையெல்லாம் எங்க இருக்குன்னு எங்களுக்குத் தெரியாதா? ஒங்க புள்ளிவுளுக்குச் சொல்லித்தர்ற மாரியா இந்தப் புள்ளிவுளுக்குச் சொல்லி தர்றீங்க? ‘லேபுக்கு வா, ரூமுக்கு வா, டியூசனுக்கு வா'ன்னு நீங்க பண்றதெல்லாம் தெரியாமியா இருக்கு. எல்லாத்தயும்தான் டி.வி.க்காரன் புட்டுபுட்டு வைக்கிறானே. அஞ்சாவது, ஆறாவது படிக்கிற பால் குடிக்கிற புள்ளிவோ எம்மாம் பாடுபடுதுவோ.''
“தப்பாப் பேசக் கூடாது. இந்தப் பள்ளிக்கூடத்தில மூவாயிரத்துக்கும் மேல பசங்க படிக்குது. எல்லாருமே பொம்பளப் பசங்கதான். ஏன், ஒங்க பொண்ணு படிக்கிற இந்த கிளாஸில தொண்ணூறு புள்ளங்கப் படிக்குது. ஒரு பிரச்சனயும் கெடயாது தெரியுமா?''
டியுசனுக்கு வராத புள்ளிங்கக்கிட்ட மார்க் போட மாட்டன்னு சொல்லி மிரட்டுறீங்களா இல்லியா?''
“நான் சயின்ஸ் வாத்தியார் கெடயாது. எதயும் தெரிஞ்சிக்கிட்டுப் பேசணும். புரியுதா?'' பொன்னம்பலம் கத்தினார். பதிலுக்கு வள்ளியும் கத்தி னாள். “எம்மாம் நாளக்கி அவள வெளிய போவச் சொல்லுவ?''
“கிளாஸ் நடந்துகிட்டிருக்கு. என்னா ஏதுன்னு கேக்காம நீ பாட்டுக்கும் உள்ள வந்ததே தப்பு. அதில்லாம ஒன் இஷ்டத்துக்குக் கண்டபடி பேசுற? இதே மாதிரி நீ போயி தனியார் பள்ளிக்கூடத்தில நுழய முடியுமா? வாயிக்கு வந்தபடி பேசத்தான் முடியுமா? மறு வாத்த பேசினா டி.சி.யக் கையில கொடுத்து துரத்திப்புடுவான் தெரியுமா?'' பொன்னம்பலம் சொன்னதும், அவரைவிட வேகமாகவும் குரலை உயர்த்தியும் “தனியார் பள்ளிக்கூடத்துக்குப் போவத் தெரியாமியா இங்க வந்தோம்? பெரிய இது மாதிரி பேசுற'' வள்ளி கத்தினாள். இருவரும் மாறிமாறிக் கத்திக்கொண்டார்கள். கடைசியில் பொன்னம்பலத்தின் குரல்தான் அடிப்பட்டுப்போயிற்று. நொந்துபோய் வாசலில் நின்றுகொண்டிருந்த ஷாலினியைக் கூப்பிட்டு “ஒன்னெ என்னெ சொல்லிட்டன்னு வீட்டுலயிருந்து ஆளக் கூப்புட்டுக்கிட்டு வந்து மிரட்டுற? இதெ எங்கிருந்து கத்துக்கிட்டெ?'' என்று கேட்டார். ஷாலினி வாயைத் திறக்கவில்லை. அதற்கு வள்ளிதான் பதில் சொன்னாள். “ஒங்கிட்ட யிருந்துதான், வாத்தியாருவோகிட்டதான் புள்ளங்க எல்லாத்தயும் கத்துக்குது.''
“இம்மாம் பேசுறீயே. ஒங்க பொண்ண ஒரு வாத்த கேக்க மாட்டியா? சாக்லெட் மட்டுமா கொடுத்துச்சி? ஒங்க பொண்ணோட ஒவ்வொரு நோட்டெயும் வாங்கிப் பாரு. ‘தமிழ்ச் சிங்கம்'ங்கிற சினிமா நடிகரோட படத்த ஒட்டி வச்சி இருக்கிறத. புக்குல ஒவ்வொரு பக்கத்திலயும் அந்த நடிகரோட பேரத்தான் எழுதி வச்சியிருக்கு. அத என்னான்னு கேக்க மாட்டியா?'' ஆதாரத்துடன் வள்ளியை வீழ்த்திவிட்டோம் என்ற எண்ணத்தில் லேசாக சிரித்துக்கொண்டார். அதற்கு அசட்டையாக “கேக்காமியா வருவன்? ஊட்டுல பொணமா பொரட்டி எடுத்திட்டுத்தான் வர்றன். நோட்டு புக்குலதான ஒட்டி வச்சியிருக்கா? நெஞ்சிலியா பச்ச குத்தியிருக்கா? ஊருல நாட்டுல இருக்கிற புள்ளங்க எல்லாம் அப்பிடித்தான் செய்யுதுவோ தெரியுமா? சின்னப் புள்ள செஞ்சதுக்கே இப்பிடி குதிக்கிறியே. அந்த சினிமா நடிக ருக்கு ஒடம்பு சரி ஆவணுமின்னு நூறு ஆம்பளங்க பழனி கோவுல்ல மொட்டப்போட்டுக்கிட்டு நடப் பயணம் போனாங்கன்னு நேத்து டி.வி.ல காட்டுனானே அதெப் பாக்கலியா?''
பொன்னம்பலத்தின் முகம் தொங்கிப்போயிற்று. எதைப் பேசினாலும், எப்படிப் பேசினாலும் ஒரே வார்த்தையில் அடித்து நொறுக்கிவிடுகிறாள். ஆத்திரமாக இருந்தது. அவளுடைய வாயை எளிதில் அடைக்க முடியாது என்று நினைத்து முடிவாகச் சொன்னார்: “அம்மா இது கிளாஸ் ரூம். ஒரு கிளாஸ் வீணாப்போச்சி. நீங்க போயி ஹெட்மாஸ்ட்டரப் பாருங்க'' என்று சொன்னார்.
“ஒனக்குத்தான் நேரம் போச்சா? எனக்குப் போவலியா? ஹெட்மாஸ்ட் டருன்னா சிங்கம் புலி கரடியா? கடிச்சி தின்னுடுவாரா?'' என்று சொன்ன வள்ளி “இன்னிய பொழப்புப் போயிடும் போல இருக்கே. இம்மாம் புள் ளிவோ இருக்கயில ஒனக்கு மட்டும் என்னாடி? சனியன. என்னெ வம்புல கொண்டாந்து வுட்டுட்டியே'' முனகிக்கொண்டே வெளியே போனாள். அவளோடு சேர்ந்துகொண்டு ஷாலினியும் வெளியே போனாள்.
“காலயிலியே பெரிய சனியனாப் போச்சி'' என்று சொன்ன பொன்னம்பலம் “என்ன படிச்சிட்டீங்களா? கேள்வி கேக்கலாமா?'' பிள்ளைகளிடம் கேட்டார். ஒரு பிள்ளையும் வாயைத் திறக்கவில்லை. “புஸ்தகத்த எடுங்க'' என்று சொன்னவருக்கு ஷாலினியும் அவளுடைய அம்மாவும் ஹெட்மாஸ்ட்டரிடம் இல்லாததையும் பொல்லாததையும் அள்ளிப்போட்டுவிட் டால் என்ன செய்வது? ஷாலினியின் அம்மா எதையும் பேசுவாள் என்ற எண்ணம் வந்ததும் பெரிய பிரச்சனையாகிவிடுமே என்ற கவலை வந்தது. “சத்தம் போடாம படிச்சிக்கிட்டு இருங்க'' என்று சொல்லிவிட்டு அவர் வேகமாகத் தலைமை ஆசிரியரின் அறைக்கு நடக்க ஆரம்பித்தார்.
ஷாலினியும் அவளுடைய அம்மாவும் தலைமை ஆசிரியரின் அறைக்கு வெளியே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்ததும்தான் அவருக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. “ஹெட்மாஸ்ட்டரே ஒரு லூசு வாயன். ஆளிருந்தா ஒண்ணு பேசுவான். ஆளில்லன்னா ஒண்ணு பேசுவான். பொம்பள டீச்சர் கிட்டெ ஒருவிதமாவும் ஆம்பள வாத்தியார்கிட்டெ ஒருவிதமாகவும் பேசுவான். காலயிலியே அவங்கிட்டெ போறதா இருக்கு. சனியன்'' என்று முனகிக்கொண்டே தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்தார்.
“வாங்க சார். உட்காருங்க'' என்று பொன்னம்பலத்திடம் சொல்லிவிட்டு எதிரில் நின்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவியிடம் “ஒரு வாரமா பள்ளிக்கூடம் வராம என்னா செஞ்ச? தெனம் வர மாட்டீங்க. எப்ப முடியுமோ அப்ப வருவீங்க, ரிசல்ட்டு வல்லன்னு மேலதிகாரிங்க என்னெப் போட்டுக் கொடயுறாங்க. பேசாம எதுக்கு நிக்குற? பதில் சொல்லு'' தலைமை ஆசிரியர் கேட்டார். திரும்பத்திரும்பக் கேட்டார். அப்போதும் அந்தப் பிள்ளை வாயைத் திறக்காததால் “நீ வாயத் தொறக்க மாட்ட. ஆனா வீட்டுல போயி அந்த வாத்திப் பய அதெச் சொன்னான், இதெச் சொன்னான்னு சொல்லி, என்னெ மிரட்டுறதுக்கு ஒரு படயத் திரட்டிக்கிட்டு வருவ இல்லியா?'' என்று கேட்டார். அதற்கும் அந்தப் பிள்ளை வாயைத் திறக்கவில்லை.
“எனக்கு வேற வேல இல்லெ? கழுத. நான் கேக்குறது ஒனக்குப் புரியல? வாயைத் திறக்காம எரும மாதிரி நிக்குறியே? டி.சி.யக் கொடுத்தாத்தான் வாயத் தொறப்பியா?'' கத்தினார். டி.சி.யைக் கொடுத்துவிடுவேன் என்று மிரடடிய பிறகும் அந்தப் பிள்ளையின் முகத்திலோ உடலிலோ சிறு மாற்றம்கூட ஏற்படவில்லை. இந்தப் பிள்ளையிடம்தான் அவர் டி.சியைக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டினார் என்பதில்லை. எல்லாப் பிள் ளைகளையுமே அவர் அப்படித்தான் மிரட்டுவார். அதனால் அவருக்கு டி.சி.ராமலிங்கம் என்று பெயர். பிள்ளைகளின் மத்தியில், ஆசிரியர்களின் மத்தியில்தான் அந்தப் பெயர் என்றில்லை. டி.இ.ஓ அலுவலகம், சி.இ.ஓ அலுவலகம் எல்லா இடத்திலுமே அவருக்குப் பெயர் டி.சி.ராமலிங்கம்தான். அவர் தலைமை ஆசிரியராகிப் பத்து வருசம் இருக்கும். இதுவரையில் அவர் கோபத்தில் ஒரு பிள்ளைக்குக்கூட டி.சி. கொடுத்ததில்லை.
“இப்பிடிப் பேசாம நின்னுக்கிட்டே மயக்கம் போட்டு விழுந்திடாத. அப்பறம் என் தாலி அறுந்துபோயிடும். ஒரு வாரமா பள்ளிக்கூடத்துக்கு ஏன் வல்லெ. சட்டுன்னு சொல்லு. இல்லன்னா போயி ஒங்க அப்பா அம்மாவை அழச்சிக்கிட்டு வா'' மீண்டும் தலைமை ஆசிரியர் கத்தியதும்தான் அந்தப் பிள்ளை வாயைத் திறந்தது.
“வயித்து வலி சார்.''
“என்னாது?''
“வயித்து வலி.''
“எதனால?''
பிள்ளை வாயைத் திறக்கவில்லை. தலைமை ஆசிரியருக்கு என்ன தோன்றியதோ “ஒங்க அப்பா அம்மாவுக்குத் தெரியுமா?''
“தெரியும்.''
“எந்த ஆஸ்பத்திரிக்கிப் போன?''
“----''
“இப்ப வயித்த வலிக்குதா?''
“சரி ஆயிடிச்சி.''
“சரி. கிளாசுக்குப் போ. இனிமே இந்த மாதிரி செஞ்சா ஒங்கப்பா அம்மா வோடதான் வரணும். இல்லன்னா டி.சி.யக் கொடுத்திடுவன். புரியுதா?'' அதிகாரமாகக் கேட்டார்.
புரிகிறது என்பது மாதிரி அந்தப் பிள்ளை தலையை மட்டும் ஆட்டியது.
“போ'' என்று தலைமை ஆசிரியர் சொன்னதும் அந்தப் பிள்ளை வணக்கம் சொல்லிவிட்டு வெளியே சென்றது.
“இந்தப் புள்ளக்கி நெசமா வயித்து வலின்னா நெனக்கீறீங்க? நடிக்குது. எதச் சொன்னா இந்த ராமலிங்கத்த ஏமாத்தலாமின்னு புள்ளங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. பொட்ட புள்ளகிட்டெப் போயி ‘என்னா வயித்து வலி'ன்னு கேக்க முடியுமா? தப்பாயிடும்ல. இந்தப் பொம்பள டீச்சர்வுளுக்கு இதே
வேலயாப் போச்சி. நெனச்சதுக்கெல்லாம் ‘ஹெச்சம்கிட்ட போ, ஹெச்சம் கிட்ட போ'ன்னு எல்லாத்தயும் எங்கிட்டத் தள்ளிவுட்டுடறது. ‘சீ, கழுத, இனிமே இப்பிடி செய்யாதெ'ன்னு சொல்லிட்டு வகுப்புள்ளார சேத்துக் கிட்டுப் போவ வேண்டியதுதான?'' என்று சொன்ன தலைமை ஆசிரியர் தண்ணீர் குடித்தார். பிறகு “நீங்க வந்த விசியத்தக் கேக்க மறந்திட்டன் பாருங்க. என்னா விசயம் சார்?'' பொன்னம்பலத்திடம் கேட்டார்.
“வாசல்ல நிக்குதில்ல சார் ஒரு பொண்ணு. அது மூணு நாளக்கி முன் னாடி தமிழ்ச் சிங்கம்ங்கிற நடிகரோட பொறந்த நாளுன்னு வகுப்பு பூராவும் சாக்லேட் கொடுத்திருக்கு. அதோட நோட்டு புக்குல எல்லாம் ‘தமிழ்ச் சிங்கம்'ங்கிற நடிகரோட பேர ஒவ்வொரு பக்கத்திலயும் எழுதி வச்சியிருக்கு. படத்தையும் ஒட்டி வச்சியிருக்கு. அதுக்காக நீ எச்.எம்மப் பாத்திட்டுவான்னு சொன்னன். ஒங்களப் பாக்காம அவங்கம்மாவை அழச்சிக்கிட்டு வந்திருக்கு. அந்தம்மா வந்து எங்கிட்டெ காணாமூணான்னு கிளாஸ் ரூமுலியே கத்துது சார்.''
“எந்தச் சனியனோ எப்பிடியோ போகுதுன்னு விடாம எதுக்கு சார் அதெப் போயி கேட்டீங்க?'' என்று தலைமை ஆசிரியர் கேட்டதும் பொன் னம்பலத்தின் முகம் சுருங்கிப்போயிற்று. அதைப் பொருட்ப்படுத்தாமல் வாசலில் நின்றுகொண்டிருந்த ஷாலினியையும் அவளுடைய அம்மாவையும் “இங்க வாங்கம்மா'' தலைமை ஆசிரியர் கூப்பிட்டார்.
ஷாலினியும் அவளுடைய அம்மாவும் தலைமை ஆசிரியரின் அறைக்குள் வந்தனர்.
“என்னம்மா விசியம்?''
“எம் புள்ளக்கி ஒண்ணுமே தெரியாது சார். புள்ளங்க தூண்டிவுட்டு கிளாஸில சாக்லேட் கொடுத்தாளாம். அதுக்காக ரெண்டு நாளா கிளாசில ஒக்கார வுடாம துரத்தி அடிச்சியிருக்காரு. இந்த சாரு'' என்று வள்ளி சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டு “வெளியில துரத்தல சார். எச்.எம்மப் பாத்திட்டு வான்னுதான் சார் சொன்னன்'' என்று பொன்னம்பலம் சொன்னார்.
“சாக்லேட் கொடுத்தியா?'' தலைமை ஆசிரியர் கேட்டார். அதற்கு ஷாலினி வாயைத் திறக்கவில்லை. அவளுக்குப் பதிலாக அவளுடைய அம்மாதான் “புள்ளிவோ பேச்சக் கேட்டு ஆடுது. அப்பறம் மாட்டிக்கிட்டு நிக்குது'' என்று சொன்னாள்.
“சினிமா நடிகரோட பேர புக்குல ஒவ்வொரு பக்கத்திலயும் எழுதி வச்சியிருக்கியா?''
“-----''
“தமிழ்ச் சிங்கம்ங்கிற சினிமா நடிகரோட படத்த நோட்டுல ஒட்டி வச்சியிருக்கியா?''
ஷாலினி வாயைத் திறக்கவில்லை. திரும்பத்திரும்பக் கேட்டார். அப்போதும் வாயைத் திறக்கவில்லை. பள்ளிக்கூடத்திலேயே அவளை மாதிரி நல்ல பிள்ளை இல்லை என்பதுபோல் நின்றுகொண்டிருந்தாள்.
“ஓன்னோட பொறந்த நாளுக்குக் கொடுத்திருந்தா பரவாயில்ல. ஒங் கப்பா அம்மா, அக்கா தங்கச்சி பொறந்த நாளுக்குக் கொடுத்திருந்தாலும் பரவாயில்ல. சினிமா நடிகரோட பொறந்த நாளுக்குக் கொடுத்திருக்கியே அது நல்லதா?''
“இதத்தான் சார் நானும் கேட்டன்'' பொன்னம்பலம் சொன்னார்.
“சாக்லெட் கொடுத்தது ஒரு தப்பா? அவ காசிலதான வாங்கி கொடுத்திருக்கா? திருடிக் கொடுக்கல. அதுவும் கூட படிக்கிற புள்ளிவுளுக்குத்தான் கொடுத்திருக்கா. இதெக் குத்தமா எடுத்துக்கிட்டு எதுக்குத்தான் ரெண்டு நாளா பேசுறீங்களோ. ‘சீ போ நாய'ன்னு வுட்டுட்டுப் போறத வுட்டுட்டு'' என்று வள்ளி சொன்னதும் தலைமை ஆசிரியருக்கு சர்ரென்று கோபம் வந்தது. கோபத்தை வெளியே காட்டாமல் சிரித்தார். அதே நேரத்தில் கடுமையான குரலில் சொன்னார் “ஒங்க பொண்ணு தன் காச போட்டுத்தான் வாங்கிக் கொடுத்திருக்கு. அத இல்லங்கில. யாரோட பொறந்த நாளுக்குன்னாலும் வாங்கிக் கொடுங்க. நாங்க ஏன் தடுக்கப்போறம்? கொடுக்கிறதத் தெருவுல கொடுங்க. ஊருல கொடுங்க. எதுக்கு பள்ளிக்கூடத்துக்கு வந்து கொடுக்குறீங்க? அத நாங்க கேட்டுத்தான ஆவணும். அதுக்
குத்தான அரசாங்கம் சம்பளம் தருது? ‘எச்.எம்மப் பாத்திட்டு வா'ன்னது குத்தமா? எச்.எம்ங்கிறவன் போலீசா? பயப்படுறதுக்கு?''
“அதுக்குன்னு வயசுக்குவந்த புள்ளய ‘வெளிய போ, வெளிய போ'ன்னு சொல்றது நல்லதா?''
“ஒனக்கு எத்தன தடவ சொல்றது? ‘வெளிய போ'ன்னு சொல்ல லன்னு? எச்.எம்மப் பாத்திட்டு வா'ன்னுதான் சொன்னன்'' என்று பொன்னம்பலம் சொன்னார். அவர் சொன்னதைக் காதில் வாங்காத மாதிரி நின்று கொண்டிருந்தாள் வள்ளி. அவள் நிற்கிற விதமும் பேசுகிற தோரணையும் தலைமை ஆசிரியரை ஏறஇறங்கப் பார்க்க வைத்தது. லேசாக உதட்டைப் பிதுக்கினார். அலுத்துப்போய் “சினிமா நடிகரோட பொறந்த நாளக்கி ஏன் சாக்லேட் கொடுத்தன்னு கேக்கல. அப்பிடிக் கேட்டது தப்பும்மா. இனிமே ஒங்க பொண்ண என்னா, ஏதுன்னு கேக்கல, போதுமா?'' என்று சொன்ன தலைமை ஆசிரியர் பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடித்தார். திடீரென்று அவருக்கு என்ன தோன்றியதோ “முன்னெல்லாம் ‘கண்ண மட்டும் வுட்டுட்டுத் தோல உரிங்க'ன்னு சொல்லுவாங்க. இப்பலாம் ‘ஏன் எம் புள்ளய அடிச்ச'ன்னு கேக்குறாங்க. ‘புள்ளிவுள அடிச்சா ஜெயிலுக்குப் போவணு மின்னு சட்டம் இருக்குத் தெரியுமா? பழய காலம் மாரி ஆடு மாட்டெ அடிக்கிற மாரி இப்ப அடிக்க முடியாது தெரியுமா? தெரியலன்னா தெரிஞ்சிக்கன்'னு சொல்லி மிரட்டுறாங்க.வாயால கேட்டாலே போச்சி. அப்பறம் எங்க அடிக்கிறது?'' என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னார். அவர் சொன்னதைக் காதில் வாங்காத வள்ளி வெறுப்பும் கசப்புமாகச் சொன்னாள் “வெளிய போ, வெளிய போன்னு சொன்னதாலதான் ரெண்டு நாளா அவ பள்ளிக்கூடத்துக்கு வந்திட்டு வந்திட்டு ஊட்டுக்குத் திரும்பி வர்றா? அதனாலதான் நான் இன்னிக்கி வந்தன். வேலக்கிப் போறத வுட்டுட்டு.''
“பள்ளிக்கூடத்துக்கு வர்றதில என்னம்மா தப்பு இருக்கு?''
“இப்பியே அர நாளு ஓடிப்போச்சி. இனிமே வேலக்கிப் போவ முடி யுமா? இனிமே வேலக்கிப் போனா எவன் வச்சிக்குவான்? ஒம்போது மணிக்குப் போனாலே அந்த மேஸ்திரி பய கடாமுடாம்பான்'' என்று சொன்னாள் வள்ளி.
“என்னா ஊரும்மா?''
“கழுதூரு. காலயில ஏழு மணிக்கு பஸ் ஏறுனாத்தான் விருத்தாலத்துக்கு எட்டு மணிக்கு வர முடியும். பாலக்கரயிலிருந்து எந்த எடத்தில வேலயோ அங்க நடந்து போறதுக்குள்ளார ஒம்போது மணிக்கு மேலாயிடும். அதுக்கே லேட்டும்பானுவ. இன்னிக்கு இனிமே நான் வேலக்கிப் போவ முடியுமா? வேலக்கிப் போயிட்டு ராத்திரி ஊட்டுக்குப் போவ எட்டு, ஒம்போது ஆவும். அதுக்குப் பின்னாடிதான் சோறு ஆக்கித் தின்னுப்புட்டுப் படுக்கணும். கோழி கூப்புட எழுந்தாத்தான் காலயில விருத்தாலம் பாலக்கரக்கி எட்டு மணிக்கு வர முடியும். இதுல நீங்க பாட்டுக்கும் ‘அப்பாவ அழச்சிக்கிட்டு வா, அம்மாவ அழச்சிக்கிட்டு வா'ன்னா எப்பிடி வர முடியும்? இன்னிக்கி யாரு சார் கூலி கொடுப்பாங்க?'' என்று சொல்லும்போதே வள்ளியின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது. அவள் அழுததைப் பார்த்ததும் தலைமை ஆசிரியரின் முகமும் மாறிவிட்டது, குரலும் மாறிவிட்டது. வள்ளியின் கையிலிருந்த ஒயர்க் கூடையையும் அதிலிருந்த சோற்று டப்பா வையும் பார்த்தார். பார்ப்பதற்குச் சகிக்க முடியாத அளவுக்கு இருந்தது அந்த ஒயர்க் கூடை.
“நீ சொல்றது சரிதாம்மா. புள்ளங்களக் கேக்கவும் கூடாது, அடிக்கவும் கூடாதுங்கிறாங்க. அப்பா அம்மாவயும் கூப்பிடக் கூடாதுங்கிற. நாங்க என்னதான் செய்யுறது? நீ சொல்றதப் போயி டி.இ.ஓ, சி.இ.ஓகிட்டெ சொல்ல முடியுமா? தனியார் பள்ளிக்கூடத்தில லட்சம் லட்சமா கொடுத்துப் புட்டு கையக் கட்டிக்கிட்டு பெத்தவங்க வரிசயில நிக்குறாங்க. இதுக்கே அது டியூசன் சென்டர்தான். அரசாங்கப் பள்ளிக்கூடத்தல நீ சொல்ற மாரி சொல்றவங்கதான் எல்லாப் புள்ளிங்களோட பெத்தவங்களும். இதுல புள்ளங்கக்கிட்டயும் பேச முடியல, பெத்தவங்கக்கிட்டயும் பேச முடியல. மீறிக் கேட்டா பெட்டிசன் போட்டுடுவன்னு மிரட்டுறங்க'' என்று சொல்லும்போது தலைமை ஆசிரியரின் செல்போன் மணி அடித்தது. “இது ஒரு சனியன்'' என்று சொல்லிக்கொண்டே போனை எடுத்து “ஹலோ'' என்றார்.
“மீட்டிங்கா? சி.இ.ஓ ஆபிசிலியா? எத்தன மணிக்கு? வகுப்பு வாரியா, சாதி ரீதியா புள்ளங்களோட புள்ளிவிவரம் வேணுமா? அதெப் போன மீட்டிங்கில கொடுத்தமே. தொலஞ்சிபோச்சா? மூணு காப்பி வேணுமா? வேற புள்ளிவிவரம் ஒண்ணுமில்லியா? சரி சார், வந்துடுறன். நானும் ரெண்டு மூணு எச்.எம்.கிட்டெ சொல்லிடுறன் சார்'' என்று சொல்லிவிட்டுத் தலையில் அடித்துக்கொண்டார். நொந்துபோன குரலில் “ஒரே புள்ளி விவரத்த எத்தன தடவதான் கேப்பானுவ? மீட்டிங் மீட்டிங்கின்னு தெனம்தெனம் கூப்புட்டா பள்ளிக்கூடத்த எப்பிடி நடத்துறது? பாடத்த எப்பிடி முடிக்கிறது? ரிசல்ட்ட எப்பிடிக் கூட்டுறது? இன்னிக்கிப் பாத்து இந்த கிளார்க்கு பர்மிசன்னு போயிட்டான். இருந்தாலும் சொன்ன வேலய செய்ய மாட்டான். டிரஸரிக்கிப் போறன், பேங்குக்குப் போறன்னு போயி டீக்கடயில குந்திக்குவான். மீறிக் கேட்டா ‘நீ பணம் திருடுற, புள்ளங்கக்கிட்ட பணம் வாங்குற'ன்னு பெட்டிசன் போடுவான்'' என்று புலம்பிய தலைமை ஆசிரியர் பொன்னம்பலத்திடம் “வெளியில ஓ. ஏ. எங்கியாச்சும் நிப்பான். கொஞ்சம் கூப்புடுங்க'' என்று சொன்னார். பொன்னம்பலம் எழுந்து வெளியே போனார். அப்போது ஒரு டீச்சர் ஒரு பிள்ளையை அழைத்துக்கொண்டு தலைமை ஆசிரியரின் அறைக்குள் வந்தார். அந்தப் பிள்ளை அழுதுகொண்டு நின்றது. பதறிப்போய் “என்னா டீச்சர்?'' என்று கேட்டார்.
“இந்தப் பொண்ணு ஏஜ் அட்டன் பண்ணியிருக்கு சார். வீட்டுக்கு அனுப்பிடலாமா சார்?''
“இதுக்கெல்லாமா எங்கிட்ட வரணும்? போங்க. போயி புள்ளய மொதல்ல வீட்டுக்கு அனுப்புங்க'' என்று கத்தினார். மறுநொடியே என்ன தோன்றியதோ “அவுங்க அப்பா அம்மாவ வரச் சொல்லி அனுப்புங்க. ஏதாச்சும் பிரச்சன வந்துடப்போவுது. இந்த நெலமயில தனியா அனுப்ப வேண்டாம்.''
“அதுவரைக்கும் எங்க சார் ஒக்கார வைக்கிறது?''
“எந் தலயிலதான்'' என்று சொல்லிக் கத்தினார். ஒன்றும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்த டீச்சரிடம் “போங்க. போயி ஸ்டாப் ரூம்ல உட்கார வையிங்க. பசங்கக்கூட ஒக்கார வைக்காதீங்க. ஒரு மாதிரியா இருக்கும். அறியாப் புள்ள மிரண்டுடப்போவுது.''
டீச்சர் பிள்ளையை அழைத்துக்கொண்டு ஸ்டாப் ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
டீச்சர் மீது ஏற்பட்ட கோபத்தை ஷாலினியின் அம்மாவிடம் காட்டி னார். “பாத்தீங்கில்ல. பிரச்சன எப்பிடியெல்லாம் வருதுன்னு. ஒங்களுக்கு ஒங்க பிரச்சன. எங்களுக்கு எங்க பிரச்சன. பிரச்சனய எல்லாரும் மத்தவங்க தலயில கட்டத்தான் பாக்குறாங்க'' என்று சொல்லிவிட்டு டீச்சர்களையும் ஆசிரியர்களையும் திட்ட ஆரம்பித்தார். களைப்படைந்த மாதிரி பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தார்.
“சார்'' என்று வள்ளி சொன்னாள்.
“எச்.எம்மப் பாருன்னு சொன்னதுக்கே நீ சண்டக்கி வந்துட்ட. இருக்கிறதிலியே அந்த வாத்தியார்தான் ஒழுங்கா பாடம் நடத்துற ஆளு. இந்த மாரி நாலு பேரு வந்து மிரட்டுனா அவன் எப்பிடி பாடம் நடத்துவான்?''
“சண்டக்கி வல்ல சார். வெளிய போ, வெளிய போன்னு சொன்னதால ஏதாச்சும் பண்ணிக்கிட்டா நான் என்னா சார் செய்வன்?'' அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் இறங்கிற்று. “அன்னன்னிக்கு ஓடுனாத்தான் சோறு.''
“அப்பிடியிருக்கும்போது இதுக்கெல்லாம் காசு எங்கிருந்து வருது? இதெயே ஒரு பணக்காரன் ஊட்டுப் புள்ளய செய்யச் சொல்லு பாக்கலாம்?''
“ஆம்பளப் பசங்க. பொம்பள பசங்க எல்லாம் அப்பிடித்தான் சார் இருக்குதுவோ. இந்தக் காலத்துப் புள்ளிவோகிட்டெ அதிகமாகப் பேசவும் பயமா இருக்கு.''
“பெத்தவங்களுக்கே இப்பிடியிருந்தா, எங்களுக்கு எப்பிடி இருக்கும்? அதனாலதான் எல்லா டீச்சரும், எல்லா வாத்தியாரும் எச்.எம்மப் பாருன்னு சொல்லிடுறாங்க புரியுதா?''
வள்ளி வாயைத் திறக்கவில்லை.
“போன வாரம் காதலர் தினமாம். பிளஸ் டூ படிக்கிற புள்ளக்கி ஒரு பய பீர் வாங்கிக் கொடுத்திருக்கான். வேண்டாமின்னு சொல்லாத அந்தச் சனியன், பெப்சி பாட்டுலுல ஊத்தி எடுத்துக்கிட்டு வந்து கிளாசில டீச்சர் இல்லாத நேரமாப் பாத்து அஞ்சி பசங்களோட சேந்து குடிச்சியிருக்கு. அதப் பாத்திட்டு ஒரு புள்ள வந்து டீச்சர்கிட்டெ சொல்லியிருக்கு. அத கேட்டதுதான். பீரக் கொண்டாந்த புள்ள ஓடிப் போயி நாலாவது மாடியில ஏறி நின்னுக்கிட்டு கீழ குதிக்கப்போறன்னு சொல்லுது. மத்த நாலு புள்ளங்களும் கதவச் சாத்திக்கிட்டு லேபுல குந்தியிருக்கு. டி.சி.தர்ர மாட்டன், வீட்டுல சொல்ல மாட்டன்னு நான் சத்தியம் செய்யுறன். எம்பது வாத்தி யாரு சொல்றாங்க. மூவாயிரம் புள்ளங்க வேடிக்க பாக்குது. ரெண்டு மணியிலேருந்து நாலு மணிவர அந்தப் புள்ள கீழ எறங்குல. குதிச்சி உசுர வுட்டுதின்னா என் வேல போச்சி. ஆயிரம் சத்தியம் செஞ்சன். கால்ல விழாத கொறதான். அப்பறமாதான் அந்தப் புள்ள கீழ எறங்குச்சி. வீட்டுக்குத் தெரியக் கூடாது, வெளியில தெரியக் கூடாதின்னு நெனச்ச கழுத தானாவே மூவாயிரம் புள்ளங்ககிட்ட சொல்லிடிச்சி. அதனால பத்து இரு வது ஊருக்கு விசயம் தெரிஞ்சிபோச்சி. புள்ளங்க வாய் சும்மா இருக்குமா? அஞ்சி புள்ளிவுளயும் அழச்சிக்கிட்டுப் போயி அவுங்கஅவுங்க ஊட்டுல வுடுறதுக்குள்ளார எனக்கு தாவு தீந்துபோச்சி. மறுநாளு அந்தப் புள்ளங்க பள்ளிக்கூடத்துக்கு வந்த பெறவுதான் எனக்கு உசுரே வந்துச்சி. பாவம், அந்த டீச்சர் ‘தெரியாம கேட்டுட்டன். தெரியாம கேட்டுட்டன்னு' எம் மாம் அழுதாங்க தெரியுமா? தெனம் இந்த மாரி நூறு பிரச்சன. காலயில ஒம்போது மணிக்கு ஆரம்பிச்சா சாயங்காலம் நாலு மணி எப்ப வரும்னு இருக்கு. நெருப்புல குந்தியிருக்கிற மாரி இருக்கு'' என்று சொல்லிவிட்டு ஷாலினியையும் அவளுடைய அம்மாவையும் பார்த்தார். ஷாலினி எதுவுமே தெரியாத மாதிரி நின்றுகொண்டிருந்தாள். ஷாலினியைப் பார்த்துக் கேட்டார் “அந்தப் புள்ளெ மாடியில இருந்துகிட்டு கீழ குதிக்கப்போறன்னு சொல்லி அழுதத நீ பாத்தியா? இல்லியா?''
“ஆமாம்'' என்பது மாதிரி ஷாலினி தலையை மட்டும் ஆட்டினாள். பிள்ளைகளுக்கு வகுப்பு எடுப்பது மாதிரி தலைமை ஆசிரியர் சொன்னார். “இந்தப் பள்ளிக்கூடத்தில ஒரு நாளக்கிப் பத்து புள்ளகளாவது வந்து ‘எனக்கு பொறந்த நாளு'ன்னு சாக்லேட் கொடுக்குதுவோ. அப்பிடியா சந்தோசமின்னு சொல்லிட்டு சாக்லேட் எடுத்து திங்கிறன். அதயெல்லாமா கேக்குறம்? பணக்காரன் ஊட்டு புள்ளங்க காசுத் திமிருல, பணத் திமிருல இந்த மாரியெல்லாம் செய்யுதுவோ. அதெப் பாத்துட்டு இந்தப் பசங்களும் ஆடுதுவோ. புள்ளங்க மட்டுமா அப்பிடிச் செய்யுதுவோ. பெரியவங்களும் தான் பொறந்த நாளு, கல்யாண நாளுன்னு கொண்டாடுறாங்க. நேத்திக்கு டி.வி. பாத்தியா?''
“அதுக்கெல்லாம் நேரம் எங்க சார் இருக்கு? காலயில ஏழு மணிக்கு ஊட்ட வுட்டு வந்தா ஊட்டுக்குப் போவ ராத்திரி ஒம்போது ஆயிடும்'' என்று சொன்ன வள்ளி “வாத்திப் பசங்களுக்கு ஆளு கெடச்சா போதும். பேசியே பொழுதப் போக்குவானுங்க'' வாய்க்குள்ளாகவே முனகினாள்.
“கல்யாண நாளக்கி புதுப் பொடவ எடுத்துக்கொடுக்கிலன்னு ஒரு பொண்ணு தூக்குல தொங்கி செத்துப்போயிட்டா. மூணு மாசக் கைக்குழந்த இருக்கு. கல்யாணம் ஆயி ரெண்டு வருசம்தான் ஆவுதாம். ராத்திரி டி.வி.யில காட்டுனான். அந்த மாரிப் பழக்கம் நமக்கு எதுக்கு? தனியார் பள்ளிக்கூடம்ங்கிறது டியூசன் சென்டர்தான். அது பள்ளிக்கூடமில்லெ. டியூசன் சென்டர்ல மார்க் மட்டும்தான். அதுக்குத்தான் சனங்க லட்சம் லட்சமா கொட்டிக் கொடுத்துட்டுப் புள்ளய சேத்துக்கச் சொல்லி வரிசயில நிக்குதுவோ. அந்த மாரி நெலமயிலயா நீ இருக்குற?''
வள்ளி வாயைத் திறக்கவில்லை. ஷாலினியை அருகில் கூப்பிட்டு “நீ இன்னம் நாலு அஞ்சி மாசம்தான் இந்தப் பள்ளிக்கூடத்தில இருக்கப்போற? அப்பறம் எதுக்கு இந்த வாத்தியாரு மூஞ்சியில முழிக்கப்போற? இருக்கிறவரைக்கும் சொல்றதக் கேட்டுட்டுப் போயன். என்னா கெட்டுடப்போவுது?'' அப்போது பொன்னம்பலமும் பியூனும் அறைக்குள் வந்தனர்.
“போன வாரம் சி.இ.ஓ. ஆபிசுக்கு ஒரு புள்ளிவிவரம் எடுத்துக்கிட்டுப் போனனில்ல? அதோட ஓ.சி. காப்பி எங்க இருக்குன்னு தெரியுமா? இல்லன்னா கிளார்க்குக்கு போன் போட்டுக் கேளு.''
“கிளார்க் டேபில்மேல இருக்கான்னு பாக்குறன் சார்'' என்று சொல்லி விட்டு பியூன் பக்கத்து அறைக்குச் சென்றார்.
“நான் பெத்தது ஒழுங்க இருந்தா எதுக்கு வந்து இங்க நிக்குறன்? நான் என்னக்கி பொறந்தன்னு எனக்கும் தெரியாது, என்னெ பெத்தவங்களுக்கும் தெரியாது. இம்மாம் புள்ளங்க இருக்கும்போது இவ எதுக்கு முட்டாய் கொடுக்குறா?'' என்று சொல்லி வள்ளி அழுதாள். அவள் அழுவதைப் பொருட்படுத்தாத தலைமையாசிரியர் “சரிம்மா. நீ வீட்டுக்குப் போ. பாப்பா. நீ கிளாசுக்குப் போ'' என்று சொன்னார்.
“நீ ஒழுங்க மரியாதியா இல்லாததாலதான் நான் அலயுறன். இம்மாம் புள்ளங்க இருக்கயில ஒனக்கு மட்டும் என்ன?'' என்று ஷாலினியை கேட்டுவிட்டு “இன்னிய பொழப்பு போச்சு'' என்று சொல்லிக்கொண்டே கோபத் துடன் வள்ளி வெளியே போனாள்.
நின்றுகொண்டிருந்த பொன்னம்பலத்தை உட்காரச் சொன்னார். சிறு பிள்ளைக்குச் சொல்வது மாதிரி சொன்னார்: “அரசாங்கப் பள்ளிக்கூடத்துக்கு வர்றதெல்லாம் படிக்க வர்றதில்லெ. பொழுதுபோக்கத்தான் வருதுவோ. எல்லாத்தயும் இலவசமாகக் கொடுத்தா எந்தப் புள்ள படிக்கும்? பொறந்த நாளு கொண்டாடறது, கல்யாண நாளு கொண்டாடுறது எல்லாம் வெள்ளக்காரன் நம்ப நாட்ட வுட்டு இன்னும் போவலங்கிறதுக்கு அடயாளம். எல்லாத்துக்கும் மேல நம்ப நாட்டோட தலயெழுத்து சினிமாக்காரங்க கையில இருக்கும்போது சினிமாக்காரன் பொறந்த நாளுக்குத்தான சாக்லேட் கொடுப்பாங்க? எந்தக் கழுத எக்கேடு கெட்டா நமக்கென்ன? வந்தமா, பாடத்த நடத்தனமான்னு போங்க, பாடத்த நடத்தாட்டியும் போவுது. எனக்கு வம்ப கொண்டாந்து வுடாதீங்க. கொம்பு இருக்கிற மாடு தான் முட்டுமின்னு இல்லெ. கொம்பு இல்லாத மாடும் முட்டும் சார்'' என்று சொல்லிவிட்டுத் தலைமை ஆசிரியர் லேசாகச் சிரித்தார்.
“கிளாஸ் இருக்கு வர்றன் சார்'' என்று சொல்லிவிட்டு எழுந்தார் பொன்னம்பலம்.
“சரி'' என்று சொன்ன தலைமை ஆசிரியர் பியூனை அழைத்து “இண்டர் வல் பெல் அடிச்சாச்சா?'' என்று கேட்டார். அப்போது ஒரு பிள்ளை உள்ளே வந்தது.
“என்னா?'' என்று தலைமை ஆசிரியர் கேட்டார்.
“டீச்சர் ஒங்களப் பாத்திட்டு வரச் சொன்னாங்க சார்'' என்று சொன்னது.
* * * * *
இமயம்